அன்று ஞானசேகரனின் வீட்டில் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருந்தார்கள். அவனுக்கு வணிகவரித் துறையில் வேலை நியமனம் செய்து அரசின் கடிதம் கிடைக்கப் பெற்று இருந்தது. ஞானசேகரன் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன். அவனு டைய பெற்றோர்கள் மிகவும் சிரமப்பட்டு அவனைப் படிக்க வைத்திருந்தனர். மாநில அளவில், மாவட்ட அளவில், பள்ளி அளவில் தரவரிசையில் இடம் பெறா விட்டாலும் நன்றாகப் படிப்பான். அவனுடைய குடும்பத் தினரும், உறவினர்களும், நண்பர்களும் கடவுள் நம்பிக்கையில் ஆழ்ந்தவர்கள். ஞானசேகரனும் அப் படித்தான். இருப்பினும் மூடநம்பிக்கைகளின் மீது ஒருவித வெறுப்பு அவனுக்கு இருந்தது. அவன் அடிக் கடி கோவில்களுக்குச் செல்வான். ஆனால் அங்கே பணத்தைச் செலவழிக்கமாட்டான். அவனிடம் பணம் இல்லை என்பதும் அதற்கு ஒரு காரணம். பணம் செலவழிப்பதன் மூலம் கடவுளின் கருணையைப் பெற்றுவிட முடியாது என்று உறுதியாக நம்பினான்.

ஞானசேகரன் தமிழ்நாடு அரசுத் துறைகளில் எழுத்தர் வேலைக்காகத் தேர்வு எழுதும் பொழுது, இலஞ்சம் கொடுப்பவர்களுக்குத்தான் வேலை கிடைக் கும் என்று பலர் பலவிதமாகக் கூறிக்கொண்டிருந் தனர். ஞானசேகரனால் இலஞ்சம் கொடுக்க முடியாது. அவன் மனதாரக் கடவுளை நம்பினான்; தேர்வை நன்றாக எழுதினான். உயர்ந்த மதிப்பெண்கள் பெறு பவர்களுக்கே கிடைக்கும் துறையான வணிகவரித் துறையில் வேலை கிடைத்ததில் அவனுக்கும், அவனு டைய பெற்றோர்களுக்கும் மிக்க மகிழ்ச்சி. அனை வரும் அதைக் கடவுளின் கருணை என்று மனம் பூரித்தனர். ஞானசேகரனும் தாமதிக்காமல் உடனே வேலையில் சேர்ந்தான். அலுவலக வேலைகளை விரைவாகக் கற்றுக்கொண்டு, திறமையான ஊழியர் என்ற பெயரையும் எடுத்துவிட்டான்.

வணிகவரித் துறையில் கணக்குச் சமர்ப்பிக்க வரும் வணிகர்கள், அலுவலக ஊழியர்களுக்கு, அவ்வப் பொழுது அன்பளிப்பு அளிப்பது வழக்கம். ஞானசேகரன் இப்படிப்பட்ட செயல்களை வெறுத்தான். யாரிடமும் அன்பளிப்பு என்ற பெயரில் எதையும் பெற்றுக் கொள்ள மறுத்தான். தீபாவளிக்கு இனிப்பு, புத்தாண்டில் நாட் குறிப்பு, நாட்காட்டிகளைப் பெற்றுக் கொள்ள மறுத்தான். அப்படி அன்பளிப்பு பெறுவது கடவுளுக்கு அடுக்காது என்று மனதார நம்பினான். அவனுடைய போக்கு மற்ற சக ஊழியர்களுக்கு விசித்திரமாக இருந்தது. சிறிது காலத்திற்குப் பிறகு இவன் இப்படித்தான் என்று பழகிவிட்டார்கள்.

காலம் சுழன்று கொண்டு இருந்தது. ஞானசேகரன் திருமணம் செய்து கொண்டான். அவனுக்கு ஓர் ஆண் குழந்தையும் பிறந்தது. குழந்தைக்குச் சந்திரன் என்று பெயரிட்டான். குழந்தையின் ஜாதகத்தைப் பார்த்த சோதிடர்கள் தகப்பனைப் போலவே மகனும் நன்றாகப் படித்தாலும், மிகச் சிறப்பாக ஒளிரமாட்டான் என்றும், ஆனால் எவ்விதப் பிரச்சனையும் இல்லாமல், வாழ் நாள் முழுவதும் நலமாகவே இருப்பான் என்றும் கூறினர். ஞானசேகரனுக்குத் தன் மகன் தன்னை விட, கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க வேண்டும் என்றும், மாநில அளவில், தேசிய அளவில் புகழ் பெற வேண்டும் என்றும் ஆசை இருந்தது. சோதிடர்களின் கூற்று அவனுடைய எதிர்பார்ப்பைத் தகர்த்தாலும், வாழ்நாள் முழுவதும் நலமாகவே இருப்பான் என்பதில் மனம் திருப்தி அடைந்தான். சந்திரன் வளர வளர உட்காருவதில் இருந்து, நடப்பது, பேசுவது முதலான செயல்களை எல்லாம் மிக விரைவாகக் கற்றுக்கொண் டான். உரிய வயதில் பள்ளிக்கு அனுப்பினார்கள். பள்ளியிலும் சந்திரன் எதையுமே மிக விரைவாகக் கற்றுக்கொண்டான். அய்ந்தாவது வகுப்பு படிக்கும் வரையிலும் அவனே முதல் மாணவனாக இருந்தான்.

ஞானசேகரன் சோதிடத்தைப் பைத்தியக்காரத்தனமாக நம்பாவிட்டாலும் ஓரளவுக்கு நம்பவே செய்தான். ஆனால் சாதாரணமாகத்தான் படிப்பான் என்று தன் மகனைப் பற்றிச் சோதிடர்கள் கூறியிருக்கும் போது, அவன் மிக நன்றாகப் படிப்பதைப் பார்த்து மகிழ்ச்சி அடையவே செய்தான். சோதிடம் பற்றிய நம்பிக்கை கொஞ்சம் தளரவே செய்தது. அவனுடைய சோதிட நம்பிக்கை மேலும் தளரும் விதமாக இன்னொரு நிகழ்வும் நடந்தது. வாழ்நாள் முழுவதும் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் நலமாகவே வாழ்வான் என்று சோதிடர்கள் கூறியதற்கு மாறாக, சந்திரன் ஆறாவது வகுப்பில் படித் துக் கொண்டிருந்த போது அவனுடைய இதயத்தில் ஆங்காங்கே அடைப்பு இருப்பதாகத் தெரிந்தது. பள்ளியில் மாணவர்களை உடல்நலப் பரிசோதனை செய்ய வந்த மருத்துவர்கள் இதைக் கண்டுபிடித்து, ஒரு பெரிய அறுவைச் சிகிச்சை செய்து அடைப்பை நீக்காவிட்டால் எப்பொழுது வேண்டுமானாலும் உயி ருக்கு ஆபத்து நேரலாம் என்று தெரிவித்தனர்.

விஷயத்தை அறிந்த போது ஞானசேகரன் துடி துடித்துப் போய்விட்டான். ஒரு பிரச்சனையும் இல் லாமல் நீண்ட ஆயுளுடன் வாழ்வான் என்று சோதிடம் கூறியிருப்பதை நம்ப ஆசை இருந்தாலும், ஏற்கனவே பொய் என்று மெய்ப்பிக்கப்பட்டுவிட்ட சோதிடத்தை நம்ப அவனால் முடியவில்லை. அவனை எப்போதும் (!?) காப்பாற்றி (!?) வரும் கடவுள் மீது நம்பிக்கை வைக்க ஆசைப்பட்டான். ஆனால் அவனுடைய அறிவு எதிர்த் திசையில் இழுத்துக் கொண்டு இருந்தது. கடைசியாக இன்னொரு மருத்துவரிடம் - இதய நிபு ணரிடம் - காட்டி இரண்டாவது கருத்தைப் பெறலாம் என முடிவு செய்தான். அதன்படி இதய நிபுணரிடம் கலந்தாலோசித்த போது அவரும் அதை உறுதி செய் தார். ஆனால் உடனடி ஆபத்து என்று இல்லாவிட் டாலும் நாட்களைக் கடத்துவது நல்லது அல்ல என்றும் பையனுக்கு முழு ஆண்டுத் தேர்வு முடிந்தவுடன் கோடை விடுமுறையில் அறுவைச் சிகிச்சை செய்ய லாம் என்றும், அதனால் படிப்பும் பாதிக்காமல் இருக் கும் என்றும் அவர் கூறினார். அதற்குள் மூன்று இலட்சம் வரை பணத்திற்கு ஏற்பாடு செய்யும்படியும் அவர் கூறினார்.

தன் மகனின் உடல் நிலையைப் பற்றித் தாங்க முடியாத வருத்தத்துடன் கேட்டுக் கொண்டிருந்த ஞான சேகரன் மூன்று இலட்சம் ரூபாய் வரை தேவைப்படும் என்பதைக் கேட்டவுடன், அதிர்ச்சியில் பேச முடியாத அளவிற்கு அவனுக்கு நாக்கு வறண்டு விட்டது. பின் சுதாரித்துக் கொண்டு “கவர்மெண்ட் ஆஸ்பத்திரியிலே சேத்தா அவ்வளவு செலவு ஆகாதுல்லே” என்று அவன் கேட்டான்.

மருத்துவருக்கு அழுவதா சிரிப்பதா என்று புரியாமல், “அவன் உன் பையன் தானே?” என்று கேட்டார். ஞானசேகரன் பதிலேதும் பேசாமல் வாயடைத்து நின் றான். மருத்துவர் தொடர்ந்தார் “கவர்மெண்ட் ஆஸ்பத்திரி எல்லாம் வேலைக்கு ஆகாது. உன் பையன் மீது அக்கறை இருந்தா பணத்தைச் சேர்க்க வழிபாரு. ட்ரீட்மெண்ட் ஆரம்பிக்கிறதுக்கு இன்னும் ஆறு மாசம் இருக்கு. அதுக்குள்ள பணத்தைப் புரட்டு.”

“டாக்டர்! நான் ரொம்ப ஏழை. என்னாலே அவ்வளவு பணம் புரட்ட முடியாது” என்று ஞானசேகரன் கூற, மருத்துவர் “அப்படின்னா சரி! நீ போய் வரலாம்” என்று கூறிவிட்டார். ஆனால் ஞானசேகரன் விடாமல் “டாக்டர் கொஞ்சம் இரக்கம் காட்டுங்க” என்று பரிதாப மாகக் கேட்டதும் மருத்துவரின் மனதில் இருந்த உணர்வுகள் புயலாய் வெளிவந்தன.

“இதோ பாரு. நான் பழைய காலத்து ஆளு. கவர் மெண்ட் ஆஸ்பத்திரியிலே வேலை பார்த்து ரிடையர் ஆனவன். பழைய காலத்துலே நீ சொல்ற மாதிரி கவர் மெண்ட் ஆஸ்பத்திரியிலே கவனிப்பு நல்லாத்தான் இருந்தது. ஆனா இப்ப அப்படி இல்லே. உலகமயம் ஆக ஆரம்பிச்சதிலே இருந்து கவர்மெண்ட் ஆஸ்பத் திரியக் கெடுத்திட்டாங்க. பணம் இருக்கிறவங்களுக்குத் தான் ட்ரீட்மெண்ட் கொடுக்கணும்கிறது தான் உலக மயக் கொள்கை” மருத்துவர் சற்று நிறுத்தினார். ஞானசேகரன் “டாக்டர்! இந்தக் காலத்திலேயும் சில நல்லவங்க இருப்பாங்க இல்லே?” என்று கேட்டவுடன் மருத்துவர் மீண்டும் தொடர்ந்தார்.

 “நீ சொல்ற மாதிரி நானும் நல்லவனாத்தான் இருந்தேன். உலகமயக் கொள்கை ஆரம்பமான போது நான் வீம்புக்குச் கொறஞ்ச ஃபீஸ் வாங்கி ட்ரீட்மெண்ட் செஞ்சேன். ஆனா அப்பல்லாம் தலைவலி, ஃபீவர், மாதிரி சாதாரண வியாதிக்குத்தான் ட்ரீட்மெண்ட் பண்ண முடிஞ்சது. ஹார்ட் டிசீஸ் மாதிரி பெரிய விஷயங்களுக் குப் பெரிய பெரிய எக்யூப்மெண்ட்ஸ் தேவைப்படுது. அதுக்கெல்லாம் ரொம்ப பணம் தேவைப்படுது. அப்படி நிறையப் பணத்தை இன்வெஸ்ட் பண்றதுக்கு யாராச்சும் சும்மா பணம் கொடுப்பாங்களா? போதாக்குறைக்கு அதுகளை மெய்ண்டெய்ன் பண்றதுக்கும் நிறைய செலவாகுது. இதுக்கெல்லாம் பணம் யாரு கொடுப்பா?” மீண்டும் அவர் சற்றுநேரம் நிறுத்தினார்.

ஞானசேகரன் என்ன பேசுவது என்று தெரியாமல் பரிதாபமாக மருத்துவரையே பார்த்துக் கொண்டு இருந்தான். மருத்துவருக்கும் ஞானசேகரனைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. அவர் மீண்டும் தன் பேச்சைத் தொடர்ந்தார். “நான் படிக்கிற காலத்திலே கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பிலே மெம்பரா இருந்தேன். இந்த சொஸைட்டியெ நல்லவிதமா மாத்தணும்னு ரொம்பத் தீவிரமாக இருந்தேன். ஆனா நாளாக நாளாக இந்தியாவிலே இருக்கிற கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கே சோசலிச சமூகம் வரணுங்கிற நோக்கம் இல்லேன்னு புரிஞ்சது. மேல்சாதி ஆதிக்கத்தைக் காப்பாத்துறதுக் குத்தான் அவங்க நெனைக்கிறாங்களே ஒழிய மத்த எதைப் பத்தியும் கவலைப்படறதில்லே. நான் தனியா நின்னு ஒண்ணுஞ் செய்ய முடியலே. வேலைக்குச் சேர்ந்ததிலே இருந்து என்னாலே முடிஞ்ச செர்வீசைப் பண்ணிட்டு இருக்கேன். இந்த உலகமயக் கொள்கை வந்ததிலேயிருந்து அதுவும் செய்ய முடியலே.”

மருத்துவர் கூறியது எதுவுமே ஞானசேகரனுக்குப் புரியவில்லை. அவன் பேந்தப் பேந்த விழித்தான். சமூகத்தைப் பற்றிய தன்னுடைய மனத்தாங்கல்களை அவனிடம் கூறுவதில் எந்தப் பயனும் இல்லை என்பதை மருத்துவர் உணர்ந்தார். பையனுடைய அறுவைச் சிகிச்சைக்காகப் பணத்தைப் புரட்டும்படி அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.

ஞானசேகரன் ஒன்றும் புரியாமல் குழம்பி நின் றான். அவனுடைய உறவினர்களில் யாரும் உதவு கின்ற நிலையில் இல்லை. உதவுகின்ற நிலையில் இருக்கும் நண்பர்கள் அவனுக்கு உதவத் தயாராக இருந்தனர். ஆனால் அவ்வளவு பணத்தை அவனால் திருப்பி அளிக்க முடியாதே என்பதுதான் உதவி செய்வ தற்குத் தடையாக இருந்தது.

இந்நிலையை அவனுடைய உயரதிகாரி ஒரு வரும் பெருவணிகர்கள் சிலரும் பயன்படுத்திக் கொள்ள நினைத்தனர். “ஞானசேகரன் நல்ல புத்திசாலி. அவன் கொஞ்சம் கோவாப்ரேட் பண்ணினா உங்க கணக்கு வழக்குங்க எல்லாம் ஈஸியா பாஸாயிடும். ஆனா அவன் முசுடு மாதிரி இருக்கிறதாலே அவனை நல்ல (?) சீட்டுல போட முடியறதில்லை” அந்த உயரதிகாரி பெருவணிகர்களிடம் கூறினார். “நானும் கவனிச்சுருக் கேன். பையன் நல்லவன்தான். அதுசரி! அவனைப் பத்தி இப்ப ஏன் சொல்றீங்க?” ஒரு பெரு வணிகர் உயரதி காரியிடம் கேட்டார். அந்த உயரதிகாரியும், ஞானசேகரனின் மகனுக்கு இதயத்தில் அடைப்பு இருப்பது பற்றியும், அறுவைச் சிகிச்சைக்காக மூன்று இலட்சம் ரூபாய் வரை பணம் தேவைப்படுவது பற்றியும் தெரிவித்தார். உடனே அந்தப் பெருவணிகர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டால் ஒரு திறமையான ஊழிய ரை, உயரதிகாரியாக வர வாய்ப்புள்ள ஒருவரைத் தங்கள் வலைக்குள் சிக்க வைக்க முடியும் என்று எண்ணமிடலானார்கள்.

ஒருவர் “நீங்க அவனைக் கூப்பிடுங்க. நான் அவனுக்கு நீண்டகாலக் கடனா வட்டி இல்லாம கொடுக் கிறதாச் சொல்றேன்” என்று கூறியதை இடைமறித்த உயரதிகாரி, “வேணாம்! என் முன்னாலே எதுவும் வேணாம், அவன் சீட்லெயே போயிப் பாருங்க. என்னை இன்வால்வ் பண்ண வேணாம்” என்று கூறினார். அதுவும் சரி என்று நினைத்த அந்தப் பெருவணிகர் ஞானசேகரனின் இடத்திற்கே வந்து அவனுடைய பிரச் சனையை உயரதிகாரி மூலம் அறிந்து கொண்டதாக வும், அவனுக்குத் தேவையான உதவியைத் தன் னிடம் கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறினார். இதுபோன்று யாராவது வணிகர்கள் அவனை அணுகும் போது முறைத்துப் பார்க்கும் ஞானசேகரன் இப் பொழுது முறைத்துப் பார்க்கவில்லை. மாறாகத் தான் கடவுளுக்குப் பயந்து நேர்மையாக வேலை செய்வ தாகவும், தன்னால் ஒரு பயனும் அந்த வணிகருக்குக் கிடைக்கப் போவதில்லை என்றும் அப்படி இருக் கையில் அவர் தனக்கு எப்படி உதவி செய்ய முடியும் என்றும் வினவினான்.

அதற்கு அந்த வணிகரும், தானும் கடவுளுக்கும் பயந்து நடப்பவர்தான் என்றும், ஞானசேகரனைப் போன்ற நல்லவர்களுக்கு உதவுவதற்கு என்றே ஓர் அறக்கட்டளையை நடத்துவதாகவும் அந்த அறக்கட்ட ளையின் மூலம் அவனுக்குத் தேவையான உதவி களைச் செய்வதாகவும் கூறினார். ஞானசேகரனால் நம்ப முடியவில்லை. அதேசமயத்தில் கடவுளே இப்படி ஒரு வாய்ப்பை அளிக்கிறாரோ என்றும் நினைத்துக் குழம்பி நின்றான். குழப்பத்தால் எதுவும் பேச முடியாமல் இருந்தவனைப் பார்த்து அந்தப் பெருவணிகர் “தம்பி! நல்லா யோசிங்க. கடவுளாக் குடுக்கிற இந்த உதவிய வேணாம்னு சொல்லாதீங்க. நான் உங்களை நாளைக்கு வந்து பார்க்கிறேன்” என்று கூறிவிட்டுப் போய்விட்டார்.

அன்று இரவு முழுவதும் ஞானசேகரனும் அவனு டைய மனைவியும் தூக்கம் இல்லாமல் அந்தப் பெரு வணிகரிடம் உதவியைப் பெற்றுக் கொள்வதா, வேண்டாமா என்பதைப் பற்றி விவாதித்துக் கொண்டு இருந்தனர். தனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் கடவுளுக்குப் பயந்து கடவுள் பக்தியுடன் வாழும் தனக்கு இந்த மாதிரி ஏன் சோதனை செய்ய வேண்டும் என்று புலம்பிக் கொண்டே இருந்தான். அந்த வணி கரிடம் உதவியைப் பெற்றுக் கொண்டால் அப்புறம் தன் கடமையில் இருந்து வளைய வேண்டி இருக்கும் என்று பெரிதும் அஞ்சினான். இப்படியே அவன் இடைவிடாமல் புலம்பிக் கொண்டு இருந்த போது, அவனுடைய மனைவி இடைமறித்து “என்னங்க! ஒரு வேளை இது கடவுள் சங்கல்பமோன்னு தோணுது” என்று கூறவும், அவன் “எப்படி? எப்படி?” என்று கேட்டான். “அந்த ட்ரஸ்ட்லே இருந்து நிறைய தர்ம காரியம் பண்றதாச் சொன்னார் இல்லையா? என்று அவன் கேட்கவும் “ஆமாம்! அதனாலே என்ன?” என்று அவன் கேட்டான். “எனக்கு என்ன தோணுதுண்ணா ட்ரஸ்ட்லே இருந்து செய்ற செலவெல்லாம் உண்மை யிலேயே நல்ல காரியத்துக்காக இருக்குமான்னு தெரியாதுல்லே” ஞானசேகரனின் மனைவி இப்படிப் பேசியதில் அர்த்தம் எதுவும் இருப்பதாக அவனுக்குத் தோன்றவில்லை. அவன் அவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தான். அவளும் தொடர்ந் தாள். “ஒரு நல்ல காரியம் பண்றதுக்காக ஆரம்பிச்ச ட்ரஸ்ட்லேயிருந்து உண்மையிலேயே ஒரு நல்ல காரியத்துக்குச் செலவாகணும்னு கடவுள் நெனைச்சு இருப்பாரு. அதனாலே தான் அந்த ஆள் நமக்கு உதவு றேன்னு சொல்றாரு” தன்னுடைய மனைவியின் இப்பேச்சில் எந்தவிதத் தர்க்க நியாயமும் இருப்பதாகத் தெரியாவிட்டாலும், அந்த உதவியைப் பெற்றுக் கொள்ள லாம் என்பதற்கான ஒரு உந்துவிசையாக இருந்தது. கடைசியாக அந்த அறக்கட்டளையிலிருந்து மகனின் மருத்துவச் செலவிற்காக உதவியைப் பெற்றுக் கொள்வது என்ற முடிவிற்கு வந்து சேர்ந்தான்.

அடுத்த நாள் அலுவலகத்தில் அந்தப் பெருவணிகரின் வேலையாள் வந்து பார்த்தான். அறக்கட்டளை அலு வலகத்திற்கு வந்து விண்ணப்பம் வாங்கிப் பூர்த்தி செய்து கொடுக்கும்படி முதலாளி கூறியதாகத் தெரிவித் தான். இதுவரைக்கும், தன் வாடிக்கையாளர்கள் யாரையும் பார்க்கச் செல்லாத ஞானசேகரன் முதல் முறையாக அந்த வணிகரின் அறக்கட்டளை அலுவல கத்திற்குச் சென்றான். “மூன்று இலட்சம் ரூபாய் இனா மாகக் கிடைக்குமா அல்லது கடனாகக் கிடைக்குமா? இனாமாகப் பெறுவது நல்லதல்ல; ஆனால் கடனாகப் பெற்றால் எப்படி திருப்பிக் கட்டுவது?” அவன் மனதில் சிந்தனைகள் நிழலாடிக் கொண்டு இருந்தன. விண் ணப்பத்தை வாங்கிப் பூர்த்தி செய்யும் போதுதான் அவனுக்கு அந்த உதவித் தொகை வட்டி இல்லாக் கடனாகக் கிடைக்கும் என்று தெரிந்தது. பேச்சு மூச் சின்றி விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கொடுத்து விட்டுத் திரும்பினான்.

தங்களுடன் கொஞ்சமும் ஒத்துழைக்காத ஒரு ஊழியனுக்கு மூன்று இலட்சம் ரூபாய் வட்டியில்லாக் கடனாகக் கொடுப்பதைக் கண்ட அந்தப் பெருவணி கரின் மகன் துள்ளிக் குதித்தான். தந்தையின் தாராளப் போக்கிற்கு எல்லையே இல்லையா என்று கோபித்துக் கொண்ட அவன் “ஏன் அவனுக்கு இனாமாகவே கொடுத் திருக்கலாம் இல்லே?” என்று கேட்டான். தந்தை நிதானமாகப் பேசினார், “டேய், கொஞ்ச நாள் பொறுடா, இவன்கிட்டே இருந்து நெறைய வேலையச் சாதிக்கலாம். இந்த வட்டியைவிட அதிகமாப் பணத்தைக் கொடுத்தாத் தான் ஆகிற வேலையெ எல்லாம், பணம் கொடுக்கா மலே சாதிக்கலாம்” என்று கூறி அனுபவம் இல்லாத தன் மகனை வணிகத்தின் தந்திர உத்திகளுக்கு ஆற்றுப் படுத்தினார்.

கோடை விடுமுறையில் அறுவைச் சிகிச்சை வெற்றி கரமாக முடிந்தது. சந்திரன் முழுவதுமாக நலமடைந்து விட்டான். ஞானசேகரன் கடனாகப் பெற்ற பணத்தைத் திருப்பிக் கட்டும் போது, குடும்பச் செலவில் வெகுவாக இடித்தது.

ஞானசேகரனும் அந்தப் பெருவணிகரின் கணக்கு வழக்குகளைப் பார்க்கும் போது முன்பு போல் கண் டிப்பாக இருக்க முடியவில்லை. அவர் சிரித்துக் கொண்டே விவாதம் செய்யும் அது சரியென்றே ஞானசேகரனுக் குத் தோன்ற ஆரம்பித்தது. மற்ற கணக்கு வழக்கு களையும் அதே மனநிலையில் பார்க்க வேண்டியது தானே நியாயம். கடவுளுக்குப் பயந்து எல்லோரையும் ஒரே மாதிரி நடத்தினான். இதனால் பயனடைந்த மற்ற வணிகர்கள் அவனுக்கு உதவி (!?) செய்ய முன் வந்தனர். முன்பெல்லாம் இப்படிப்பட்ட உதவிகளுக்கு இடம் அளிக்காத ஞானசேகரன் குடும்பச் செலவில் ஏற்படும் பற்றாக்குறையை முன்னிட்டும், உலகமய மாக்கல் சூழலில் மகனின் எதிர்காலக் கல்வியை முன்னிட்டும், குடும்பத்தில் யாருக்காவது ஏதாவது நோய் வந்துவிட்டால் உண்டாகும் செலவினங்களை முன்னிட்டும், இப்பொழுது அந்த உதவிகளை (!?) ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டான்.

நாளடைவில், அவனது உயரதிகாரி எதிர்பார்த்தது போலவே, பல சிக்கலான கணக்கு வழக்குகளை எளிதாகத் தீர்த்துக் கொடுத்தான். அதனால் மனம் மகிழ்ந்த வணிகர்கள் தங்கள் உதவிகளை (!?) அதிக மாக்கினர். இப்பொழுது அவ்வலுவலகத்தில் ஞானசேகரன் அனைவருக்கும் பிடித்தவனாக (!?) ஆகிவிட்டான். தன் வாழ்நாள் முழுவதும் உழைத்தாலும் திருப்பிக் கட்ட முடியாது என்று நினைத்த கடன் தொகையை இப்பொழுது எளிதாகக் கட்டிவிட்டான்.

அதுசரி! கடவுளிடம் உள்ள அச்சம் என்னவாயிற்று என்று கேட்கிறீர்கள்? ஞானசேகரிடம் பயந்து கொண்டி ருந்த வணிகர்கள் இப்பொழுது அவருக்கு நண்பர்கள் ஆகிவிடவில்லையா? நண்பர்கள் ஆனபோதிலும் அவனை அதிகாரி என்ற முறையில் மரியாதையு டனும் பயத்துடனும் அணுகவில்லையா?

அதுபோல்தான் ஞானசேகரனுக்கும் கடவுளுக்கும் இருந்த உறவு பரிணாம வளர்ச்சி அடைந்துவிட்டது. தனக்குக் கிடைக்கும் உதவிகளில் (!?) ஒரு பங்கை அன்னதானம், கோயில் திருப்பணி முதலியவற்றிற்காகச் செலவழித்து, கடவுளையும் தன் வழிக்குக் கொண்டுவந்துவிட்டான். வணிகர்கள் தன்னிடம் மரியாதையுடனும், பயத்துடனும் நடந்து கொள்வது போல, ஞானசேகரனும் கடவுளிடம் மரியாதையுடனும் பயத் துடனும் நடந்து கொள்கிறான்.

ஞானசேகரன் எப்பொழுதுமே கடவுளுக்குப் பயந்தவன் தான்.

Pin It