தளிர்விடத் துடிக்குதோ
தர்ப்பைச் சருகுகள்
குளிர்விட்டுக் குதிக்குதோ
அனுமக் குரங்குகள்

அம்பேத்கர் பெரியார்
அடித்துத் துவைத்தும்
எம்மாம் பெரிய
இறுமாப்பு இன்னும்

திருவரங்கத்தில் -
‘அம்மா’வின் தொகுதியில்
‘பிராமணாள் கபே’
பெயர்ப் பலகை!
திருத்தவே முடியாதோ
அவாளின் உலகை?

எடுடா என்றால்
எகத்தாளம் செய்கிறான்
படுவா பல்வேறு
வக்கணை சொல்கிறான்

“நாடார் மளிகை
நாயுடு மகால்
தேவர் ஸ்டோர்
செட்டி நாடு மெஸ்
எல்லாம் எடுத்தபின்
இங்குவா” என்கிறான்
இழுத்துக் குடுமியை
இறுக்கி முடிகிறான்

‘பிராமணாள்’ என்பதே
பிறவிக் கொழுப்பை
அடையாளப் படுத்தும்
ஆணவச் சொல்லடா

பெருச்சாளிப் பயலே
நீமட்டும் பிராமணன்
நாங்கள் எல்லாம்
தேவடியா மக்களா?

சட்டமே எங்களைச்
செருப்பால் அடிக்குதே
அன்றைக்கே பெரியார்
அறைந்தது உறைக்குதே :

“ஒருவீடு மட்டும்
பத்தினி வீடென்றால்
மற்ற வீடெல்லாம்
குச்சிக்காரி வீடா?”

அய்யா உழைப்பு
இதற்காகத் தானா?
அம்பேத்கர் பாடு
வீண்போகலாமா?

ஓர்
அல்லக்கை பார்ப்பான் - திரு
வரங்கத்தில் முறைக்கிறான் - திரு
வல்லிக் கேணியில்
அந்தநாள் நடந்த
முரளி கபே
கதையை மறக்கிறான்

ஓட்டு வேட்டை
ஒப்பனைக் கட்சிகள்
சாயம் வெளுத்துச்
சாணி தின்னலாம்
எங்களின் வீட்டு
அப்பனின் ஆத்தாளின்
காயம் ஆற
என்ன பண்ணலாம்?

கடைப் பெயர்ப்
பலகையை
உடனே மாற்று
இல்லை
தடம் தெரியாமல்
தகர்த்துப் போடும்
சூத்திர - பஞ்சமச்
சூறைக் காற்று!

- தமிழேந்தி

Pin It