அய்யகோ இங்கு நடப்பதும் ஆட்சியா
அடிமை யாய்மனம் மகிழ்வதில் மாட்சியா
மெய்யைக் காட்டி வாயையும் பொத்தி
மேனி ஒடுங்கும் காட்சியும் காட்சியா?
பொம்மைக் கொலுவாய் நம்அமைச் சன்மார்
முழுப்புலன் நடுங்கக் கும்பிட்டுக் கிடப்பார்
அம்மையோ பொம்மை விளையாட்டுப் போல
அவர்கள் தலையை உருட்டி மகிழ்வார்
நின்றால் எழுந்தால் பின்னால் ஓடுவார்
நிழலைத் தொட்டும் கும்பிடு போடுவார்
அன்றைக்கு அவர் அமைச்சரா இல்லையா
அறியாது அச்சத்தில் கண்ணை மூடுவார்
இருளில் மூழ்கிக் கிடக்குது தமிழகம்
இதுவரை யில்நாம் காணாத ஒருமுகம்
பொருட்டாய்த் துளியும் மதியாத போக்கு
பூச்சியாய் மக்களைக் காணும் நோக்கு
வெயில் மழையில் மக்களின் வாழ்வு
வேளா வேளைக்கும் கொடநாட்டில் ஓய்வு
மெய்யைச் சொன்னால் பிறர்மேல் வழக்கு
குடிநாயகம் எனக் கூறுவது இழுக்கு
டெசோ மாநாடு நடத்த வும்தடை
தி.மு.க. மனிதச் சங்கிலிக் குத்தடை
கொசுவால் நசுக்கக் காவல் கொல்படை
கூடங்குளம் இதற்குத் தக்கதோர் விடை
பரமக் குடியில் துப்பாக்கிச் சூடும்
இராமர் பாலம் படுகிற பாடும்
எருமை மாட்டுத் தூக்கம் விரட்டுமா?
இனிமேலும் மக்களை ஒன்று திரட்டுமா?

- தமிழேந்தி

Pin It