இந்தியாவுக்கும் இலங்கைக்கும் நடுவே கடலில் மணல் திட்டுக்கல் உள்ளன. இப்பகுதி ஆதம் பாலம் (Adam's Bridge) என்று அழைக்கப்படுகிறது. சேது சமுத்திரத் திட்டம் என்பது, இந்த மணல் திட்டுகளின் நடுவே ஊடறுத்து கடலின் ஆழத்தை அதிகப்படுத்தி, கப்பல் போக்குவரத்துக்கு வழி செய்வதுதான். இத்திட்டம் நிறைவேறினால் கப்பல்கள் இலங்கையைச் சுற்றிச் செல்ல வேண்டியது இல்லை. இது நிறைவேற்றப்பட்டால் போக்குவரத்துக்கான தொலைவு குறையும்; பயணம் செய்வதற்கான செலவும் குறையும். வாணிபம் செய்வதற்கு ஏற்ற நல்ல திட்டம். நமது பொருட்கள் வெளிநாடுகளுக்குச் செல்லவும் வெளிநாட்டுப் பொருட்கள் நம் நாட்டிற்கு வரவும் ஆன வாணிபத் தொடர்பு நன்கு இருக்கும்.

இந்தியாவில் இத்திட்டத்திற்கு மதவாதிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்கள் கூறுவது; இராமாயணத்தின்படி இராமனுக்கும் இலங்கையில் இருந்த இராவணனுக்கும் போர் மூண்டது; இலங்கைக்கும் இராமேசுவரம் பகுதிக்கும் இடையே இராமரால் ஒரு பாலம் கட்டப்பட்டது. இந்தப் பாலம் பராமரிக்கப்பட வேண்டும்; இடித்து அப்புறப்படுத்தக்கூடாது; இதனை அப்புறப்படுத்துவது என்பது கடவுளை அவமதிப்பது ஆகும். இந்துமத உணர்வுகளைப் புண்படுத்துவது ஆகும் என்று வாதிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த மணல் திட்டுகள் இராமரால் கட்டப்பட்ட பாலம் தானா இயற்கையாக அமைந்த மணல் திட்டுக்கள் தானா? என்பதை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. இராமாயணம் எந்த காலத்தில் நடைபெற்றது என்று யாரும் அறுதியிட்டுக் கூற இயலாது. மனிதர்களால் கட்டப்பட்ட பாலமாக இருந்தால் அப்பகுதியில் கருங்கற்கள் அல்லது செங்கற்கள், சுண்ணாம்புக்காரை போன்றவை இருக்க வேண்டும். இவை எதுவும் இல்லை என்பதால் இக்கடல்பகுதியில் இயற்கையாக அமைந்த மணல்மேடுகளே உள்ளன என்ற முடிவுக்கு வரவேண்டியுள்ளது.

மேலும் ஆதிகாலத்தில் இலங்கைத் தீவு இந்திய நிலப்பகுதியோடு இணைந்து காணப்பட்டது. பூமியில் கண்டங்களின் இடப்பெயர்வு காரணமாக இலங்கை இந்திய நிலப்பகுதியிலிருந்து விலகிச் சென்றது; அல்லது இலங்கைக்கும் இந்திய நிலப்பகுதிக்கும் தற்போது காணப்படும் கடல்பகுதி ஆதிகாலத்தில் மிகவும் தாழ்வான நிலப்பகுதியாக இருந்திருக்க வேண்டும். காலப்போக்கில் இந்த தாழ்வுப்பகுதி கடலால் மூழ்கடிக்கப்பட்டு தற்போதைய மணல் மேடுகள் தோன்றி இருக்க வேண்டும் என்பதே அறிவியல் கூறும் உண்மையாகும்.

மணல் திட்டுகள் இயற்கையானதே என்பதற்குச் சான்றுகள்

இதனை இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்ள நமது பூமியின் அமைப்பைத் தெரிந்து கொள்வது அவசியம்.

1. பூமி: பூமி எனும் கோள் சூரியக் குடும்பத்தைச் சார்ந்தது. 4500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாகக் கணக்கெடுத்துள்ளனர். இது கோள்வடிவமானது; தன்னைத்தானே சுற்றிக்கொண்டு, சூரியனை ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் சுற்றிக்கொண்டுள்ளது. இது சுமார் 5440 கிலோ மீட்டர் விட்டம் கொண்டது. நாம் வாழும் இப்பூமியில் முதல் உயிரினம் சுமார் 3500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது என அறியப்படுகிறது.

2. கண்டங்கள் தோன்றுதல் : பூமி தற்போது காணப்படுவது போன்று ஏழு கண்டங்களாக ஆதிகாலத்தில் பிரிக்கப்பட்டு இருக்கவில்லை. ஒரு உருண்டைப் பகுதியாக பேன்ஜியா (Pangea) என்று அழைக்கப்பட்டது (ஏகநிலம்). புவியியல் ஏற்படும் மாற்றங்களின் காரணமாக மேற்புர மண்ணுக்கு அடியில் உள்ள தட்டுகள் உடைகின்றன; பின்பு அவை பிரிந்து நகர்கின்றன. இவ்வாறு ஏக நிலப்பகுதி உடைந்து லாரேஷியா, கோண்டுவானா என்ற இரண்டு நிலப்பகுதிகள் தோன்றின. பிற்காலத்தில் இவ்விரு நிலப்பகுதிகளும் உடைந்து, தென் அமெரிக்க நிலப்பகுதி, ஆப்பிரிக்க நிலப்பகுதி, ஆஸ்திரேலியா நிலப்பகுதி, அண்டார்டிகா நிலப்பகுதி மற்றும் வடஅமெரிக்க நிலப்பகுதி, ஐரோப்பா நிலப்பகுதி, ஆசிய நிலப்பகுதி எனப்பிரிந்து நகர்ந்து தனித்தனி கண்டங்கள் உருவாயின. கண்டங்களைப் பிரித்து, இடையே பெரிய கடல்கள் அமைந்தன.

3. உயிரினப்பரிணாமம்: இக்கடல்கள், உயிரினங்கள் ஒரு கண்டத்திலிருந்து மற்றொரு கண்டத்திற்கு நகர்தலுக்கும் பரவுவதற்கும் தடையாய் அமைந்தன. வெவ்வேறு கண்டங்களில் வெவ்வேறு தட்ப வெப்ப சூழ்நிலைக்காரணிகள் நிலவுகின்றன. பல இலட்சக்கணக்கான ஆண்டுகளாக நிலவி வரும் வெவ்வேறு சூழ்நிலைகளில், வெவ்வேறு உயிரினச் சிற்றினங்கள் வளர்ந்து உயிரினப் பரிணாமம் நடைபெற்றது. (சார்லஸ் டார்வின - 1859).

உதாரணமாக :

கங்காரு இனமும், யூகலிப்டஸ் தாவரமும், ஆஸ்திரேலியா கண்டத்தில் மட்டுமே வளர்ந்தன.
மக்னோலியா, டூலிப் போன்ற தாவரங்கள் கிழக்கு அமெரிக்காவிலும் சீனாவிலும் தான் காணப்படுகின்றன.

பசிபிக் கடலில் உள்ள 14 கலபோகஸ் தீவுகளிலும் காணப்படும் தாவர விலங்கின வகைகள், தென் அமெரிக்காவின் நிலப்பகுதியில் காணப்படும் தாவர விலங்கின வகைகளை ஒத்துள்ளன. ஏனெனில் 14 தீவுகளும், தற்போதைய தென் அமெரிக்காவின் நிலப்பகுதியோடு ஆதிகாலத்தில் இணைந்து ஒரே நிலப்பரப்பாக இருந்தன. பின்பு நிலத்தட்டுகள் நகர்வின் காரணமாக இத்தீவுகள் தோன்றின என்பதால் அங்கு வாழும் உயிரினங்களில் ஒற்றுமைப்பண்புகள் காணப்படுகின்றன.

240 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இமயமலைப்பகுதியில் டெதிஸ் கடல் இருந்து வந்தது. இந்திய நிலத்தட்டும் மத்திய ஆசிய நிலத்தட்டும் நகர்ந்து மோதியதன் காரணமாக கடலின் அடிப் பகுதி உயர்ந்து இமயமலை தோன்றியது. இமயமலையின் உச்சிப்பகுதியில் கடல் வாழ் விலங்குகளின் தொல்லுயிர் படிவங்கள் (Fossils) காணப்படுவது இதற்கு சான்றாக அமைகிறது. தற்போதும் பூமி எனும் கோள் தொடர்ந்து மாற்றத்திற்கு உட்பட்டு இருந்து கொண்டே வருகின்றது.

தென்னிந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி

உலக வரலாற்றில் தென் இந்தியாவின் கடற்கரை புகழ்மிக்கது. நறுமணப் பொருட்களான மிளகு, ஏலக்காய், இஞ்சி போன்றவை வணிகத்திற்குப் புகழ்பெற்றது. கிரேக்கர்கள், அரேபியர்கள், ஐரோப்பியர்கள் இந்த நறுமணப் பொருட்களால் கவரப்பட்டு இங்கு வந்தனர். போர்ச்சுக்கீசியர்கள் கோவாவிற்கு வந்தனர். டச்சு நாட்டினர் மலபாரில் தங்கினர்.

தாவரங்கள் புவியில் பரவியிருந்ததைப் பற்றி அறியும் பிரிவு தாவரப் புவியியல் என்று பெயர் (Phytogeography) இந்தியா ஒரு தீபகற்பம் இங்கு அதிக அளவு வரையறை செய்யப்பட்ட உயிரின வகைகள் (Endemic Sp.) காணப்படுகின்றன. தென் இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி சிறப்புத் தன்மை வாய்ந்தது. இப்பகுதிக்கு அரணாக மேற்கே அரபிக் கடலும், வடக்கே அரணாக விந்திய சாத்புர மலைகளும், கிழக்கே தக்காண பூடபூமியும், தெற்கே இந்து மகாக்கடலும் அரணாக அமைந்துள்ளன. புவியியல் அமைப்பில் மேற்கு தொடர்ச்சி மலை ஒரு தீவு போன்று அமைந்து பல வரையரை செய்யப்பட்டச் சிற்றினங்கள் சிறப்பாகத் தனித்தன்மையுடன் வளர்ந்து காணப்படுகின்றன.

இந்திய இலங்கை மலைப்பகுதித் தாவரங்களின் ஆய்வுகள்

வான் ஸ்டீனிஸ் (Van steenis-1962) என்பவர் மலைகளின் உச்சிப்பகுதியில் வாழும் தாவர வகைகளை ஆய்வு செய்தார். அவற்றிடையே உள்ள ஒற்றுமைத் தன்மைகளின் அடிப்படையில் இந்திய நிலப்பகுதியும் இலங்கை நிலப்பகுதியும் ஆதிகாலத்தில் இணைந்து ஒன்றாகக் காணப்பட்ட நிலப்பகுதி எனும் கொள்கையை உருவாக்கினார்.

ஸ்டேப் (Stafp-1984) மற்றும் வான் ஸ்டீனிஸ் (1962) இருவரும் போர்னியாவில் உள்ள கினபலு மலை உச்சிப்பகுதியில் காணப்படும் தாவர வகைகளையும், மலேய பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் மலை உச்சிப்பகுதிகளில் காணப்படும் தாவர வகைகளையும் ஆய்வு செய்து, அவற்றிடையே காணப்படும் ஒற்றுமைப் பண்புகளை அறிந்தனர். அதன் அடிப்படையில் "இந்த நாடுகளின் நிலப்பகுதிகள் யாவும் சுமார் 38 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு (Early Pre - Tertiary Period) அகன்ற மிகப்பெரிய இந்தோ - மலேஷியன் ஆஸ்திரேலியன் - கண்டத்தின் பகுதியாக இருந்திருக்க வேண்டும்" என்ற முடிவுக்கு வந்தனர்.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் நான்காவது துணைப் பிரிவு ஆனைமலை, ஏலகிரி மற்றும் பழனி மலைகள் அடங்கிய ஒரு பிரிவு ஆகும். இப்பிரிவில் உள்ள மலை உச்சிப்பகுதிகளில் காணப்படும் தாவர வகைகள், (இலங்கை) நாட்டின் ஆதம் மலையின் (Adam's Peak) உச்சிப்பகுதியில் உள்ள தாவரஙகள் வகையினை ஒத்துள்ளன. இரு பகுதிகளிலும் பல பொதுவான தாவர வகைகளே காணப்படுகின்றன. அவற்றில் சில கென்ரிகாய வால்கேரி (Kendrickia Walkeri), ஃபிலிசியம் (Filicium), கைரினாப்ஸ் (Gyrinops), பாலியால்தியா (Polyalthia), கலாமஸ் (Calamus) போன்ற இன்றும் பல பேரினங்கள் காணப்படுகின்றன.

தாவரங்கள் பரவியிருக்கும் பண்பில், ஒரு சிறப்பான வியப்பான அம்சம் காணப்படுகின்றது. கென்ரிகியா என்ற பேரினம் ஒரே பேரினக் குடும்பமான மெலஸ்டமடேஸியே (Melastomataceae) என்ற குடும்பத்தைச் சார்ந்தது. கென்ரிகியா வால்கேரி என்ற சிற்றினம் தென் இந்தியாவின் ஆனைமலைப்பகுதியில் உள்ள ஆனைமுடி மலையிலும், இலங்கையில் ஆதம் மலையில் மட்டுமே காணப் படுகின்றது. இதில் உள்ள சிறப்பு என்னவெனில் ஆனைமுடி மலைதான் மேற்குத் தொடர்ச்சி மலையின் மிக உயரமான மலை உச்சி என்பதும் ஆதம் மலைதான் இலங்கையின் மிக உயரமான மலை உச்சி என்பதும் கவனமாக ஒப்புநோக்க வேண்டியுள்ளது. கென்ரிகியா என்ற தாவரம் தென் இந்தியாவின் ஆனைமலையிலும், இலங்கையின் ஆதம் மலையிலும் ஒரு பொதுவானத் தாவரமாகக் காணப்படுவது ஆதிகாலத்தில் இலங்கையும், தென் இந்தியாவின் நிலப்பகுதியும் ஒரே நிலப்பகுதியாக இணைந்து இருந்தன என்ற கோட்பாட்டிற்கு உரிய சான்றாக அமைந்து உள்ளது.

"இலங்கைத்தீவு" இந்திய நிலப் பகுதியோடு இணைந்த ஒரு பகுதியாக இருந்து பின்பு ஒரு தீவாகப் பிரிந்து சென்றது என்பது அறிவியல் உண்மை.

இலங்கையும், இந்தியாவின் இராமேசுவரம் நிலப்பகுதியும் பாலம் போன்ற குறுகிய ஒரு நிலப்பகுதியால் ஆதிகாலத்தில் இணைக்கப்பட்டு இருந்தன. குறுகிய இந்நிலப்பகுதி காலப்போக்கில் தாழ்வான நிலப்பகுதியாக மாறி இருக்கலாம். பின்பு கடல் நீரால் மூழ்கடிக்கப்பட்டு தற்போதைய மணல் திட்டுகள் அடங்கிய பகுதியாக மாறி இருக்கலாம். குமரிக்கண்டம், காவிரிப்பூம்பட்டினம், தனுஷ்கோடி ஆகிய நிலப்பகுதிகள் இயற்கைச் சீற்றங்களால் மூழ்கியது போன்று குறுகிய பாலம் போன்ற இந்நிலப்பகுதியும் மறைந்து தற்போதைய மணல் திட்டுக்களாகக் காட்சி அளிக்கலாம். டெதிஸ கடல்பகுதி மறைந்து இமயமலைப் பகுதி தோன்றியது போன்றும்; தனுஷ்கோடி நிலப்பகுதி மறைந்து கடல்பகுதியாக மாறியது போன்றும்; பூமியில் இயற்கையான மாற்றங்கள் கோடிக்கணக்கான ஆண்டுகளாக தொடர்ந்து இப்போதும் நடைபெற்று வருகின்றன; மாற்றங்களுக்கு உட்பட்டதே இயற்கை என்பதே அறிவியல் கூறும் உண்மையாகும்.

ஆலோசனைகளை யாரிடம் பெறுவது

இருநாடுகளுக்கும் இடையில் கடலில் போக்குவரத்துக்காக பாலம் எதுவும் தற்போது இல்லை. பேருந்துகள் மற்றும் மக்கள் சென்று வரும் பாலம் தற்போது இருப்பது போலவும், சேது சமுத்திரத் திட்டத்திற்காக இப்பாலத்தை இடித்துத் தள்ளி மக்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுத்துவது போலவும் மதவாதிகள் எதிர்த்து வருகின்றனர். மணல்திட்டுகளை இராமர் கட்டிய பாலம் என்று பகுத்தறிவுக்கு ஒவ்வாத ஒரு கருத்தினைக் கூறி இந்திய நாட்டில் குழப்பத்தினை ஏற்படுத்தி வருகின்றனர். சேது சமுத்திரத்திட்டத்தினை நிறைவேற்ற முடியாமல் தடை செய்து வருகின்றனர். வளர்ந்து வரும் இந்தியா போன்ற நாடுகளுக்கு மதநம்பிக்கை நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரும் தடையாய் இருந்து வருகின்றது.

மத நம்பிக்கைகளுக்கும், நீதிக்கதைகளுக்கும் மதவாதத் தத்துவங்களுக்கும் அறிவியலில் இடம் இல்லை. இயற்பியல், புவியியல், வேதியியல் போன்ற துறைகள் நாம் காணும் உலகத்தில் இயக்கங்கள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பதைப் பற்றி காரணங்ளுடன் நமக்கு விளக்கிக் கூறும் அறிவிய்ல துறைகள் ஆகும். இவை காட்டும் விதிகளின்படி தான் நாம் வாழ்ந்து வருகின்றோம். நமது உடல் நோயைப் போக்கிக்கொள்ள ஒரு மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுகின்றோம். ஒரு வானூர்தி அல்லது செயற்கைக்கோள் தயாரிப்பதற்கு விண்வெளி விஞ்ஞானிகளின் ஆலோசனைகளைப் பெறுகின்றோம். இக்காரியங்களுக்கு எந்த மதவாதிகளிடமும் சென்று நாம் ஆலோசனைகளைப் பெறுவதில்லை.

அதுபோலவே இலங்கைக்கும் இந்திய நிலப்பகுதிக்கும் இடையே இருப்பது செயற்கையாகக் கட்டப்பட்ட பாலமா? அல்லது இயற்கையாக அமைந்த மணல் திட்டுகளா? என்று அறிந்து கொள்ள புவியியல் தாவரவியல், விலங்கியல், கடல்வாழ் உயிரின அறிஞர்கள் என பல அறிஞர்கள் அறிஞர்களின் ஆய்வுக் கருத்துக்களைக் கேட்டு ஆலோசனைகளைப் பெற வேண்டும். அதன்படி நடந்து கொள்ள வேண்டும். இத்தகைய போக்கே இந்த அறிவியல் யுகத்தில் நாம் சிறப்பாக, தக்கவர்களாக வாழ்வதற்கு உரிய வழியாகும். நம்மையும் நாட்டினையும் முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வதற்கும் ஆன மிகச் சிறந்த வழியாகும்.

நன்றி: தென்செய்தி

Pin It