நூல் எல்லாம் நூல் அல்ல பூணூல் என்ற
நூல் ஒன்றே இந்நாட்டு மெய்ந்நூல் என்று
நாளெல்லாம் கூறியநம் பெரியார் கூற்றை
நடைமுறையில் மெய் எனும் அயோத்தித் தீர்ப்பு
வாள்வாள் என்றே குரைத்துப் பயனு மில்லை
வழுக்கையிலே மயிர்முளைக்க வாய்ப்பு மில்லை
ஆள்வதற்குப் பிறந்தவன்தான் பார்ப்பான் என்றே
அச்சடித்துக் கொடுத்துவிட்டான்; பேச்சே இல்லை
வெற்றான புனைகதையா பாபர் ஆட்சி?
வில்ராமன் இருந்ததற்கு எங்கே சாட்சி?
கற்றிருந்த மூடரெலாம் பார்ப்ப னீயக்
கால்நக்கும் அடிமைகளாய் மாறிப் போனார்!
ஒற்றைச்சாண் வயிற்றுக்கும் ஓடாய்த் தேயும்
உழைப்பாளர்க்காய் இனியும் விடியல் எங்கே?
முற்றான முசுலீமின் சொத்தை யெல்லாம்
மூன்றாகப் பிரித்ததிலே நீதி எங்கே?
சிலை உள்ளே போதற்கு வழியும், பூட்டைத்
திறந்து ‘வெறி’ உள்நுழைத்த பழியும் செய்த
கொலைகாரக் காங்கிரசுடன் நீதி மன்றக்
கூட்டுசதி, மசூதிக்கு வைத்த வேட்டு!
தலைகொழுத்துத் திரிகின்ற மதவெ றிக்குத்
தலைவாழை இலைபோடும் சட்டத் துக்குத்
தலைவணங்கிப் போவதுவோ வீணர் வேலை
தரைமட்ட மாக்குவதே வீரர் வேலை!
விழியாத மக்கள் மேலும் மேலும்
வெட்டிக் கொண்டே சாக வேண்டாம்; அங்கே
அழியாத அறிவகமோ, ஆய்வுக் கூட
ஆராய்ச்சி வளமனையோ வைப்போம்; இல்லை
கழிவறையே னுங்கட்டி மக்க ளுக்குக்
கடுகளவு பயனேனும் காண்போம்; மாற்று
வழிபற்றிச் சிந்திக்க முனைந்தால் மாறா
வரலாற்றுப் பழிவந்து நம்மைச் சேரும்!
Pin It