ஒரு தேசமா, இரு தேசங்களா என்ற சிக்கலில் வியக்கத்தக்க வகையில் -எதிரெதிராக இருக்க வேண்டிய சாவர்க்கரும், ஜின்னாவும் முழுவதும் ஒத்துப்போகின்றனர். இருவரும் ஒப்புக்கொள்வதோடு மட்டு மின்றி, இந்தியாவில் இரு தேசங்கள் இருக்கின்றன என்றும் வலியுறுத்துகின்றனர். ஒன்று முஸ்லிம் தேசம்; மற்றொன்று இந்து தேசம். இந்த இரு தேசங்களும் என்ன வகையான நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதில் மட்டுமே இருவருக்கிடையிலும் வேறுபாடு உள்ளது. ஜின்னாவைப் பொறுத்த வரை, இந்தியா ‘பாகிஸ்தான்' மற்றும் ‘இந்துஸ்தான்' என இரண்டாகப் பிரிக்கப்பட்டு, முஸ்லிம் தேசத்தினர் பாகிஸ்தானில் குடியேற வேண்டும் எனவும், இந்து தேசத்தினர் இந்துஸ்தான் தேசத்தில் குடியேற வேண்டும் எனவும் கருதுகிறார்.

சாவர்க்கரைப் பொறுத்தவரையில், இந்தியாவில் இரு தேசங்கள் இருந்தபோதும், முஸ்லிம்களுக்கு ஒன்று, இந்துக்களுக்கு மற்றொன்று என்று அது இரண்டாக பிரிக்கப்படக்கூடாது. ஒரே நாட்டில் இரு தேசங்களும் வாழ வேண்டும். ஒரே அரசியல் சட்டத்தின் கீழ் இரு தேசங்களும் வாழ வேண்டும். அந்த அரசியல் சட்டம் இந்து தேசத்தை அதற்குரிய ஆதிக்க நிலையில் நிறுத்தக்கூடியதாக இருக்க வேண்டும். முஸ்லிம் தேசத்தினர் இந்து தேசத்தோடு ஒத்துழைப்போடு வாழக்கூடிய இரண்டாம் தர குடிமக்களாக வாழவைக்கப்பட வேண்டும் என கருதுகிறார்.

1920 முதல் 1937 வரை பல மாகாணங்களில் மான்டேகு செம்ஸ்போர்டு சீர்த்திருத்தங்களை செயல்படுத்துவதில் அனைவரும் இல்லை என்றாலும் முஸ்லிம்கள், பார்ப்பனர் அல்லாதவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் ஆகியோர் ஒரு குழுவினராக இணைந்து பணியாற்றவில்லையா? இந்து ராஜ்ஜியம் எனும் ஆபத்தை ஒழித்து, இந்து -முஸ்லிம்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த இதுவே நல்ல வழிமுறை. ஜின்னா மிக எளிதாக இந்த வழிமுறையை தேர்ந்தெடுத்திருக்கலாம். அவர் இதில் வெற்றி பெறுவதும் கடினமன்று.

-டாக்டர் அம்பேத்கர் ("பாகிஸ்தான் மீதான சிந்தனைகள்' நூலில்)
Pin It