தமிழ்நாட்டின் வரலாற்றைப் பெரியாருக்கு முன்,பெரியாருக்குப் பின் எனப் பிரிப்பதுதான் சரி.இந்தியாவின் வரலாற்றை அம்பேத்கருக்கு முன்,அம்பேத்கருக்குப் பின் எனப் பிரிப்பதுதான் சரி. அதேபோல் உலக வரலாற்றையும் மார்க்சுக்கு முன், மார்க்சுக்குப் பின் எனப் பிரிப்பதுதான் சரியாகவும் இருக்கும்; முறையாகவும் இருக்கும்.

இலண்டனிலுள்ள கார்ல் மார்க்சின் கல்லறையில், பொதுவுடைமை அறிக்கையின் இறுதி வரிகளான  Workers of all countries unite !(அனைத்து நாடுகளின் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்!) என்பதும் The Philosophers have only interpreted the world in various ways. The point however is to change it   - உலகைத் தத்துவவாதிகள் பல வழிகளில் விளக்கிக் கொண்டிருந்தார்கள்.ஆனால் நமது நோக்கம் அதை மாற்றுவதே என்றும் பொறிக்கப்பட்டிருக்கும்.

மார்க்சு என்றால் எங்கெல்சு, ஜென்னி, மூலதனம், பொதுவுடைமை அறிக்கை, பாட்டாளி வர்க்க விடுதலை என்ற நேர்கோட்டில்தான் நாம் பார்க்க வேண்டும்.இதில் எந்த ஒன்றையும் தவிர்த்துவிட்டு மார்க்சையும், மார்க்சியத்தையும் நாம் காண முடியாது.

அறிவின் ஊற்று,கடின உழைப்பின் பிறப்பிடம்,உலகப் பாட்டாளியின் பால் பற்று, வறுமையிலும் நிலைகுலையாக் குன்று. தனியுடைமையைத் தகர்த்துப் பொதுவுடைமைக்குத் தீர்வு சொன்ன தலைமகன்,பல்துறை வித்தகர்.அறிவியல் சார்ந்த பொதுவுடைமை வகுத்தவர்களுள் முதன்மையானவர். தத்துவ அறிஞராக மட்டுமல்லாமல்,அரசியல், பொருளாதார, வரலாற்றியல் வல்லுநராக, தலைசிறந்த ஆய்வறிஞராக, எழுத்தாளராக, சிந்தனையாளராக, புரட்சியாளராக மார்க்சு அறியப்படுகிறார்.

தலைவருக்கு எப்போது பிறந்த நாள் வரும்?கொடி,தோரணங்கள் கட்டிக்கொண்டாட, ஒருநாள் மயக்கத்திற்காக ஏங்கிக்கொண்டிருக்கும் பாமரத் தொண்டன் போலவும்,அதே நாளில் தன்னை அவதாரப் புருஷனாக அலங்கரித்து, வாழும் கடவுளாக வலம் வர, காத்துக் கொண்டிருக்கும் அரைவேக்காட்டுத் திடீர் தலைவர்களைப் போலவும் கொண்டாடுவதல்ல மார்க்சு பிறந்தநாள்.

அது ஒரு வர்க்கப் போராட்டத்தின் வாசல் திறந்த நாள்.சுரண்டல்வாதிகள் தமது சவக் குழியைத் தாமே தோண்டிக்கொள்ளும் நாள்.சுரண் டப்படுவோரின் கைகளில் பூட்டப்பட்ட விலங்குகள் உடையத் தொடங்கிய நாள்.பாட்டாளி வர்க்கத்தின் எண்ணங்களில் நூறு பூக்கள் மலரத் தொடங்கிய நாள். அதுதான் அவரது பிறந்தநாள் 15.5.1818.அவரது பிறந்த நாளில் அவர் வாழ்ந்த முறையைத் திரும்பிப் பார்ப்பதும்,அவரது சிந்தனைகளை இன்றையச் சூழலோடுப் பொருத்தி ஆராய்வதும்,அடிமைப்பட்டுக் கிடக்கும் நமக்கு விடுதலைச் சிந்தனைத் துளிர்விடும்.

இந்தியாவில் குறுக்கு நெடுக்காகப் பிரிக்கப்பட்டு ஒரு சமூகம் மற்றொரு சமூகத்தினரிடம் தொடர்பற்று பிரிந்து கிடக்கிறோம்.பல அடுக்குப் பாதுகாப்புப் போட்டு தலைவர்களின் உயிர்களை, உடமைகளைப் பாதுகாப்பதுபோல், பார்ப்பன அக்கிரகாரத்தை நடுவில் வைத்து அவர்களுக்கு அடுத்தடுத்து வருணாசிரம வரி சைப்படி வீதிகள் அமைத்து,உழைக்கும் மக்களைச் சாதி வரிசையில்கூட சேர்க்காமல்,உடமையற்றவர்களாகி ஊருக்கு வெளியே ஒதுக்கி வைத்துவிட்டார்கள் மனுநீதியாளர்கள்.இன்று நேற்று நடந்ததல்ல இந்த அமைப்பு முறை.மூவாயிரம் ஆண்டுகள் முந்தையது தான்.இன்று வரை தீர்வு கிடைத்ததா? கிடைக்கவில் லையே ஏன்? காரணம், நாம் ஒன்று சேர்ந்துவிடக் கூடாது என்பதுதான் சாதிய அமைப்பு முறையின் வேலைத்திட்டம்.நாம் வர்க்கரீதியில் ஒன்றுபட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான் தலைவிதி தத்துவம்.நாம் சமத்துவம் பெற்றுவிடக்கூடாது என்பதற்காகத்தான் திட்டமிட்ட கல்வி மறுப்பு.

இந்தியாவைப் பற்றி, இந்தியர்களைப் பற்றி ஜெர்மனியிலிருந்த மார்க்சுக்கு என்ன தெரியும்? நமக்கு பெரியார் போதும், அம்பேத்கர் போதும் என்று தனித்தனி வளையம் அமைத்து, நமது சிந்தனைக்கு எல்லைக்கோடு போட்டு, வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

மார்க்சைப் பற்றி தோழர் வே.ஆனைமுத்து எல்லாக் கூட்டங்களிலும் ஒரு தகவல் சொல்வார். “தெற்காசியாவில், இந்தியாவில் குரங்கையும், பசுமாட்டையும் வணங்குகிறவர் இருக்கின்றவரை அங்கே ஒரு பண்பாட்டுப் புரட்சி வருமா?என்பது எனக்குச் சந்தேகமாக இருக்கிறது”என்று பெரியார் பிறப்பதற்கு முன்னால் 1858இலேயே மார்க்சு குறிப்பிட்டிருக்கிறார். இதை இதுவரை எந்த மார்க்சியவாதியாவது சொல்லி யிருக்கின்றாரா? எந்தப் பெரியார் கட்சிக்காரராவது இதில் கவனம் செலுத்தியது உண்டா?என்று கேட்பார்.

அப்படி என்றால் என்ன பொருள்?இந்தியாவில் இந்து மதம் இருக்கின்றவரை மூடர்கள், முட்டாள்கள் இருந்து கொண்டிருப்பார்கள்.சாதிகள் இருந்து கொண்டிருக்கும்.சாதியின் பேரால் சுரண்டல்கள் நடந்துகொண்டிருக்கும்.சாதியின் பேரால் சுரண்டப்படுபவன் நாதியற்று, கேள்வியற்று அடிமைப்பட்டே வாழ்ந்து கொண்டிருப்பான்.

இலண்டன் அருங்காட்சியக நூலகம் ( London Museum Library) இரண்டு மேதைகளை உருவாக்கி இவ்வுலகிற்குக் கொடுத்திருக்கிறது.ஒருவர் கார்ல் மார்க்சு.அவரால் உலகப் பாட்டாளி வர்க்கம் விழிப்புணர்வு பெற்று விடுதலைக்குத் தயாரானது.இன்னொருவர் அம்பேத்கர்.அவரால் இந்திய ஒடுக்கப்பட்ட மக்களும்,மகளிரும் உரிமை பெற்றனர்.சமூகம் ஒழுங்கு பெற மதம் அவசியம் என்று அம்பேத்கர் சொன்னார்.பாட்டாளிச் சமூகம் அடிமைப்பட்டுக் கிடப்பதற்கு மதம் ஒரு காரணம்.எனவே மதம் ஒரு “அபின்”என்றார் மார்க்சு. இரண்டையும் வேறு வேறு கண் ணோட்டத்தில் நாம் பார்க்க வேண்டும்.

இவர்கள் இருவரும் எதிரெதிர் கருத்து சொன்னதனால் எதி ரெதிர்த் திசையை நோக்கி சிந்தித்தவர்கள் அல்லர்.காலத்தால் வேறுபட்டாலும்,கருத்தால் வேறுபட்டாலும், சிந்தனையில், நோக்கத்தில் ருவரும் ஒன்றுபட்டவர்கள். இருவரும் உழைக்கும் மக்களின் விடுதலைக் காக தம் வாழ்நாள் முழுவதும் உழைத்தவர்கள்.

வர்க்கப் போர் தொடங்குவதற்கான எல்லாச் சாத்தியக் கூறுகளும் இந்தியாவில் இருக்கும்போது,ஏன் அதற்கான அறிகுறியே தென்படவில்லை? நிலவுடைமையற்று, சொத்துடைமையற்று, கல்வியுரிமையற்று, அடிப்படை உரிமைகளற்றுக் கிடக்கும் தலித்துகளில் 95சதவிகிதம் பேர் பாட்டாளிகள், மிகவும் பிற்படுத்தப்பட்டோரில் பாதிப் பேருக்கு மேல் பாட்டாளிகள். இந்த இரு சமூகப் பாட்டாளிகள் ஒன்று சேர்ந்தால் தான் பாட்டாளி வர்க்கப் போருக்கு, சாத்தியக் கூறுகள் உண்டு. அம்பேத்கரும் இவ்விரு ஒடுக்கப்பட்ட சமூகங் களும் ஒன்றிணைவதையே முதன்மையாகக் கருதினார், வலியுறுத்தினார். இவர்கள் ஒன்று சேர்வார்களா? வர்க்கப் போர் சாத்தியப்படுமா? பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் மலருமா? காலச் சுழற்சியால் கைகூடும் எனத் திடத்துடன் செயல்படுவோம்?

அன்பைப் போதிப்பதும்,அறம் போதிப்பதும் நமக்கு வேண்டாம்.நமக்கு தேவை உரிமை. நம்மை மலடாக்கும் பாராளுமன்ற ஓட்டு அரசியல் வேண்டாம். நமக்குத் தேவை பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம். நமக்குத் தேவை ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை. நமக்குத் தேவை தலித் மக்களின் விடுதலை.மதப் பண்டிகைகள், மூடத்தனமான கலாச்சார விழாக்களில் ஒன்றிணைவதைத் தவிர்த்துவிட்டுப் பகுத்தறிவு பகல வன் தந்தை பெரியார்,புரட்சியாளர் மேதை அம்பேத்கர், சமூக விஞ்ஞானி மேதை மார்க்சு போன்றோரின் பிறந்த நாள் விழாக்களிலும், மே தின விழாக்களிலும் ஒன்றிணைவோம். நம்மை நாம் புதுப்பித்துக் கொள் வோம். புதிய சமூகம் படைப்பதற்குத் தயாராவோம்.

Pin It