மாண்புமிகு தமிழக முதலமைச்சருக்கும், முன்னாள் முதலமைச்சருக்கும் வேண்டுகோள்

மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி ஓர் அரசியல் கட்சி.

பெரியாரின் கொள்கைகள் வெற்றி பெற ஏற்ற - தன்னுரிமைத் தமிழகத்தை நிறுவவேண்டும் என்பது அதன் அரசியல் குறிக்கோள்.

எனவே இதற்கு எதிராக உள்ள இந்திய அரச மைப்பை அடியோடு மாற்ற வேண்டும் என்பதில் அது குறியாக இருக்கிறது. அதற்கென 1991 முதல் இந்திய அளவில் ஒரு களத்தை அமைக்க முயற்சிக்கிறது.

இங்கு, இன்று உள்ள வாக்குவேட்டைக் கட்சிகளுள் திராவிட முன்னேற்றக் கழகம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டுமே 1967 முதல் மாறி மாறி கடந்த 45 ஆண்டுகளாகத் தமிழகத்தை ஆட்சி புரிகின்றன.

இவை 16.8.1968 முதற்கொண்டும், 1977க்குப் பிறகும் மாறி, மாறித் தமிழகத்தை ஆட்சி செய்கின்றன.

இவ்விரண்டு கட்சிகளும் காங்கிரசு ஆண்ட போதும் பாரதிய சனதாக் கட்சி ஆண்டபோதும் - இந்தியக் கூட்டணி ஆட்சியில் பங்கேற்றன.

காவிரி ஆற்று நீர்ப் பங்கீடு 1974இல் ஒரு சிக்கலாக மாறியது.

1976க்கு முன்னர், கருநாடக அரசு, வழக்கமாகத் தமிழ்நாட்டுக்கு உள்ள 500 + கோடி கன அடி நீர்ப்பங்கில் 100 கோடி கன அடி நீரைக் குறைத்துத் தரத் தமிழ்நாட்டு அரசுடன் ஒப்பந்தம் போட முன் வந்தது.

அப்படிக் குறைந்த அளவுக்கு ஒப்புக்கொண்டால், 1976இல் செல்வாக்குப் பெற்றுவிட்ட எம்.ஜி.ஆர். அவர்கள், “தி.மு.க. தமிழர்க்குத் துரோகம் செய்து விட்டதாகப் பரப்புரை செய்வார்” என்று, தி.மு.க. அரசு அஞ்சியது. அங்கேதான் முதலாவது வீழ்ச்சி தொடக்கம்.

1977இல் ஆட்சியைப் பிடித்தது அ.இ.அ.தி.மு.க. அந்த ஆட்சிக்காலத்தில், பழைய நீர் அளவில் 200 கோடி கன அடி நீரைக் குறைத்துத்தர, ஒப்பந்தம் போட கருநாடக அரசு ஒப்புக்கொண்டது.

அப்படி ஒப்புக்கொண்டால், “அ.இ.அ.தி.மு.க. அரசு தமிழ்நாட்டு நலனுக்குக் கேடு செய்துவிட்டது எனத் தி.மு.க. மக்களிடம் பரப்புரை செய்யும்” என, அ.தி.மு.க. அரசு அஞ்சியது. இது இரண்டாவதான வீழ்ச்சி.

(1) 1990இல் அமைக்கப்பட்ட காவிரி பற்றிய நடுவர் மன்றத்தின் முன்னரோ, இந்தியத் தலைமை அமைச்சர், நடுவண் நீர்வளத் துறை அமைச்சர் முன்னரோ கலைஞர் மு. கருணாநிதி அவர்களும், எம்.ஜி.ஆர். அவர்களும் இணைந்து சென்று, காவிரி நீர்ப் பங்கீடு பற்றித் தமிழகத்தின் உரிமைக் கோரிக்கையை ஒருபோதும் முன்வைக்கவில்லை.

(2) எம்.ஜி.ஆர். அவர்களின் மறைவுக்குப் பிறகு, தமிழக முதலமைச்சராக செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களே தொடர்ந்து பொறுப்பேற்றுள்ளார்.

நேற்றோ, இன்றோ செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்ளும், கலைஞர் மு. கருணாநிதி அவர்களும் ஒன்றாகச் சென்று இந்தியத் தலைமை அமைச் சருக்கோ, மற்ற அமைச்சர்களுக்கோ தமிழ்நாட்டுக்குக் காவிரி நீரில் உள்ள உரிமை பற்றி ஒரே கருத்தை முன்வைத்து வாதாடவில்லை. ஆனால் கருநாடகக் கட்சிகள் எப்போதும் ஒன்றுபட்டுச் சென்றே இந்திய அரசுக்கு அழுத்தம் தந்தன.

(3) கடந்த 45 ஆண்டுக்கால தி.மு.க. - அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக்காலங்களில் - ஒருபோதும் தமிழக மக்களவை உறுப்பினர்கள் 39 பேரும், மாநிலங்கள் அவை உறுப்பினர்கள் 18 பேரும் ஆக 57 பேரும் - இந்நாள், முன்னாள் முதல்வர்கள் தலை மையில் ஒரே குழுவாகச் சென்று காவிரி நீர்ச் சிக்கல் பற்றி ஒரே நிலைப்பாட்டை இந்திய அரசின் முன் வைக்கவில்லை.

புதுவை மாநில நாடாளுமன்ற உறுப்பினர்கள் 2 பேர்களுக்கும் - புதுவை இந்நாள் - முன்னாள் முதல் வர்களுக்கும் இத்தகைய பொறுப்பு உண்டு.

இன்று - நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பின் படித் தமிழகத்துக்கான பங்கு, ஆண்டுக்கு 205 கோடி கன அடி நீர் வரவேண்டும். இது 185 கோடி கன அடி நீராகக் குறைக்கப்பட்டுள்ளது அநீதி.

21 முதல் 26.4.2012 முடிய காவிரி - கொள்ளிடப் பாசனப் பகுதியான புதுவை, நாகை, கடலூர், அரிய லூர், திருச்சி முதலான மாவட்டங்களில் கட்சிக் களப் பணிக்குச் சென்ற நான் - இவ்வெல்லா மாவட்டங் களிலும் காலைக் கடன் முடித்துக் கால் கழுவக் கூடத் தண்ணீர் இல்லாத அவல நிலையை நேரில் கண்டேன். நிற்க.

27.4.2012இல் முல்லைப் பெரியாறு அணை பற்றிய - நீதிபதி ஆனந்த் தலைமையிலான ஆய்வுக் குழு அறிக்கையின் பரிந்துரைகளில் உள்ள செய்திகள் சில கசிந்தன.

அச்செய்திகளோ, “தலைவலி போய் - திருகுவலி வந்த” கதையாகக் கூட இல்லை. ஏன்?

கேரள அரசு புதிய அணை கட்டிக்கொள்ள அக்குழு பரிந்துரைத்துள்ளதாக அறிய முடிகிறது.

எதனால் இப்படி?

நடுவண் அரசில் உள்ள பார்ப்பன - மலையாளி ஆதிக்கம் என்று தமிழ்நாட்டுத் தலைவர்கள் - தமிழ்ப் பெருமக்கள் கருதினால் - சொன்னால் - அது பொய் யாகும். ஏன்? பார்ப்பன - மலையாளி அதிகாரிகள் ஆதிக்கம் கருநாடகத்தாருக்கும் ஆகாதே! வங்கத் துக்கும் ஆகாதே!

இம்மாநிலங்களிலும் மாறி மாறி ஆட்சிபுரியும் கட்சிகள் உள்ளன; இந்நாள் முதல்வர்களும், முன் னாள் முதல்வர்களும் இருக்கிறார்கள்; அவரவர்க்கான கட்சிகளும் இருக்கின்றன. அவை எதிரும் புதிருமா கவும் இருக்கின்றன.

ஆனால் தமிழ் நாட்டைப் போல் சொந்தப் பகை - கட்சிப் பகை பாராட்டாமல் - ஆளும் கட்சியும், தலை யான எதிர்க்கட்சியும் அவரவர் நாட்டின் மக்கள் நலச் சிக்கலுக்குத் தீர்வு காண - ஒற்றுமையாகச் சென்ற நடுவண் அரசுக்கு அழுத்தம் தருகிறார்கள்; அரசுக்கு உண்மையைப் புரிய வைக்கிறார்கள்; போராட்டம் நடத்துகிறார்கள்.

இன்று தமிழ்நாட்டுக்கு 59 நாடாளுமன்ற உறுப்பி னர்களும்; புதுவைக்கு 2 உறுப்பினர்களும் உள்ளனர்.

தமிழர் நலன் காக்க வேண்டி, இன்றைய மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் - முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களையும் இணைத்துக் கொண்டோ, அல்லது அது கூடிவரவில்லையென்றால், தாம் மட்டுமோ தம் ஆட்சி அதிகாரத்துடன் - தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 59 பேர்களையும் ஒரு சேர அழைத்துக் கொண்டு தில்லிக்குச் சென்று, உடனடியாக இந்தியத் தலைமை அமைச்சரையும், பாசனநீர் தொடர்பான அமைச்சர்களையும் நடுவண் அரசு அதிகாரிகளையும் பார்த்துப் பேசி, தமிழகத்திற்கு ஆறுகள் நீர்ப்பங்கீடு ஞாயமான அளவில் கிடைக்க வழிகாண வேண்டுகிறோம்.

59 நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளு மன்றத்தில் ஒரே குரலில் பேச வேண்டும்; நாடாளு மன்றத்துக்கு வெளியேயும் இவர்கள் போராட்டம் நடத்த வேண்டும் என்று தமிழ்ப் பெருமக்கள் கோரிக்கை வைத்துப் போராடுங்கள் என அன்புடன் வேண்டுகிறோம்.

Pin It