சங்கமித்ரா யார்?

சங்கமித்ரா என்ற எழுத்தாளரைப் பார்ப்பனர் நன்கறிவர்; பார்ப்பன ஏடுகளும் நன்கறியும். பதவி யிலிருந்த மேலடுக்குப் பார்ப்பனர்களால் கொடுமைப் படுத்தப்பட்டுப், பதவியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று விலகியவர்.

பாவாடை-தெய்வானை என்ற படிப்பறிவில்லா இணையருக்குத் திருவாரூர் மாவட்டம், சன்னாநல் லூரில் 21.9.1940இல் பிறந்தவர். பெற்றோரிட்ட பெயர் இராமமூர்த்தி. அக்கால வழக்கப்படி ஆசிரியர் பள்ளியில் இவர் பிறந்த தேதியை 20.5.1939 எனப் பதிந்து கொண்டார். இராமமூர்த்தியே, சங்கமித்ராவாக படைப்புகளின் வழிவலம் வந்தவர்.

கல்வி

பதினொன்றாம் வகுப்பில் முதல் மாணவனாகத் தேறினார். ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் எழுத்தர் பணி - அய்தராபாத்தில் கிடைத்தது. அங்கு உசுமானியாப் பல்கலைக்கழகத்தில் மாலை நேரக் கல்லூரியில் சேர்ந்து புகுமுக வகுப்பு, பி.காம்., எம்.காம். ஆகிய வைகளில் பல்கலைக்கழகத்தின் முதல் மாணவ னாகத் தேர்ச்சி பெற்றார். மைசூர் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியில் சட்டத்துறையில் பட்டம் பெற்றார்.

வங்கித் தேர்வு எழுதி வெற்றி பெற்று 1964இல் பாரத அரசு வங்கியில் எழுத்தர் பணியில் சேர்ந்தார். வங்கிப் பணியில் தனிப் பயிற்சி பெற்று அதற்குரிய சான்றிதழும் பெற்றார். தம் உழைப்பின் காரணமாக வங்கியின் கிளை மேலாளராகவும், வங்கிக் கிளை யின் ஆய்வாளராகவும் வடமாநிலங்களிலும் பணி யாற்றினார். இங்கும் தொடர்ந்த தொல்லைகளை, “ஒரு எருதும் சில ஓநாய்களும்” என்ற படைப்பாக்கி உலவவிட்டுள்ளார்.

பார்ப்பனர்களால் தமிழருக்கு நேர்ந்த கொடுமை களை ‘விடுதலை’ நாளிதழில் தொடர்ந்து எழுதிய போதுதான் சங்கமித்ரா என்ற புனைபெயரை ஏற்றார். 31.3.1990 அன்று வங்கிப் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று சமுதாயத் தொண்டரானார்.

மேம்பாட்டுப் பணி

வங்கிப் பணியின்போது இந்திய மாநிலங்கள் பல வற்றிற்கும் வங்கிக் கிளைகளின் கணக்குத் தணிக் கைக்குச் சென்றிருக்கிறார். அதனால் இந்தியில் பேச வும் கற்றுக் கொண்டார். அந்தந்த மாநில மொழிகளி லும் ஓரளவு பேச வல்லவர். இவ்வாறு பெற்ற பட்டறிவு ஒடுக்கப்பட்டோர் மேம் பாட்டுக்கு உழைக்க வேண்டும் என்ற உந்துதலில் செயல்பட்டார்.

தந்தை பெரியாரின் உண்மைத் தொண்டராக இன்றும் தளராது பணியாற்றும் சிந்தனையாளன் ஆசிரியர் ஆனைமுத்து அவர்களுடன் இணைந்து தொண்டாற்றத் தொடங்கினார். ஆனைமுத்துவின் வடநாட்டுப் பயணங்களில் சங்கமித்ராவும் கலந்து கொண்டு, இந்தியில் உரையாற்றும் பணியைத் திறம்படச் செய்தார். 

மைய அரசு மண்டல்குழு அறிக்கையை வெளி யிட்டுப் பிற்பட்டவர்க்குரிய இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்ற பரப்புரைப் பயணத்தின் போது புதுடில்லி, அலிகர், கான்பூர், இலக்னோ, பாட்னா, கல்கத்தா ஆகிய இடங்களில் எல்லாம் மொழிபெயர்ப் பாளராகத் திறம்படச் செயல்பட்டு பேசுவோருக்கும் கேட்போருக்கும் நல்ல இணக்கத்தை ஏற்படுத்தினார்.

மேனாள் குடியரசுத் தலைவர் கியானி செயில் சிங் புதுடில்லி மாவ்லங்கர் அரங்கில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்டுட இந்தியில் பேசியதை சங்கமித்ரா தமிழில் மொழிபெயர்த்த சிறப்பு இன்றும் காதுகளில் ஒலிக்கிறது.

இதழ்ப்பணி

பணி ஓய்வுக்குப்பின் பெற்ற தொகையைக் கொண்டு ‘தன் முன்னேற்றம்’, ‘ஒடுக்கப்பட்டோர் குரல்’, ‘சங்கமித்ரா விடையளிக்கிறார்’ என்ற பெயர்களில் இதழ்களைத் தொடங்கினார். சாதனை ஆர்வத்தில் தூண்டல் இதுவாகும்.

பெரியார் தமிழ்ப் பேரவை

‘பெரியார் தமிழ்ப் பேரவை’ என்ற அமைப்பைத் தொடங்கி, ஆர்வலர்களின் உதவியுடனும், தம் ஓய்வூதியத்தைச் செலவிட்டும் பெரியார் கொள்கையா ளர்களில் முதிர்ந்தோருக்கு மாதந்தோறும் ஒருவருக்கு அவருடைய வீட்டுக்குச் சென்று ஆயிரம் 2 ரூபா அன்பளிப்பாகக் கொடுப்பதை மேற்கொண்டார். இது பெரியார் தமிழ்ப் பேரவையின் குறிக்கோள்.

வெளியீட்டுப் பணி

களப்பணியில் திரட்டிய தகவல்களைக் கொண்டு ‘உழைக்கிறார்கள், வெற்றி பெறுகிறார்கள், ‘வெற்றி யடைந்த வியாபாரக் கனவுகள்’, ‘மிதிபட்ட ரோஜாக்கள்’, ‘உண்மையின் ஊர்வலங்கள் போன்ற வாழ்வியல் படைப்புகளையும், 420 பக்கங்கள் கொண்ட ‘செண்பக வல்லி’ என்ற புதினத்தையும் உருவாக்கியுள்ளார். ‘செண்பகவல்லி’ அருமையான வட்டாரப் புதினம்.

தம் அறுபத்தைந்தாம் அகவையில் தம்மைப் பற்றித் தொகுப்பு நூல் வெளியிட வேண்டுமென்று திட்டத்தில் நண்பர்கள் பலரிடமும் கட்டுரைகளைப் பெற்றுத் தொகுத்து “சங்கமித்ரா-65” என்ற தலைப் பில் நூலை வெளியிட்டார். வெளியீட்டு ஆர்வத்தால் முன்குறிப்பிட்ட மூன்று இதழ்களையும் அன்றி ஆங் கிலத்தில் ‘சங்கமித்ரா’ என்ற காலாண்டிதழையும் தொடங்கினார். மனித மேம்பாட்டிற்கான குறிக்கோளு டன் தொடங்கப் பெற்றதாகும். முன்னரே தாம் எழுதிய சுரண்டலுக்கெதிரான ஆங்கிலக் கட்டுரைகளைத் தொகுத்து இந்தியாவில் நடைபெறும் பார்ப்பனக் கொடுமைகளை வெளிப்படுத்தியுள்ளார்.

சிந்தனையாளன் ஆசிரியர் வே.ஆனைமுத்து கட்டுரைகளையெல்லாம் தொகுத்து வெளியிட வேண் டிய நூறாயிரம் திரட்டித் தர வேண்டும் என்ற நோக்கில் பலரிடமும் பெற்ற நன்கொடைகளைத் திரட்டி இரு நூறாயிரமாகத் தந்து சாதனை படைத்தவர் சங்க மித்ரா.

இருவரின் தொடர்பு

1992இல் ஆனைமுத்து அவர்களுடன் வடஇந்தியப் பயணத்தில் கலந்துகொண்ட போது எங்கள் இரு வருக்கும் தொடர்பு ஏற்பட்டது. அவர் தம் இதழ்களுக்கு மாதம் இருநூறு உரூபா நன்கொடையாக அனுப்பி வந்தேன். இதழேற்புத் தொகையாக ஒவ்வோ ராண்டும் தாருங்கள் என்று கேட்டவுடன் அவ்வாறே ஆண்டுக்கு மூவாயிரத்து ஐந்நூறு கொடுத்து வந் தேன். ‘தன் முன்னேற்றம்’ இதழில் ஆசிரியர் குழுவில் என் பெயரையும் இணைத்துக் கொண்டு என் படைப்பு களையும் பெற்று “இளந்தென்றல்”, “திருமழபாடி” என்ற பெயரை அவரே கொடுத்து வெளியிட்டு வந்தார்.

சிந்தனையாளன், பெரியார் ஊழி ஆங்கில இதழ் இரண்டிலும் ஆசிரியர் குழுவில் இடம்பெற்று அவ்வப் போது தொடர் கட்டுரைகள் எழுதி வந்துள்ளார். அவ் வாறு சிந்தனையாளனில் அவர் எழுதிய கட்டுரைத் தொடர்களுள் ஒன்று ‘முதுமை, வறுமை, கொடுமை, தனிமை’ என்ற தலைப்பில் அமைந்ததாகும். இதைப் படித்த பின் இத்தலைப்புக்கு, இன்னொரு பக்கப் பார்வை உண்டு. நான் எழுதிய கடிதத்தை அப் படியே சிந்தனையாளனில் வெளியிடச் செய்தார். இத்தூண்டல் தான் “முந்துமா முதுமை” என்ற தலைப்பில் ஒரு நூலை என்னை வெளியிட வைத்தது.

காரைக்கால் வருகை

நான் காரைக்காலில் இருந்தபோது “சங்கமித்ரா-65” நூலுக்கான கட்டுரைத் தொகுப்பின் அச்சுப் படிகளை திருத்தத்துக்காகக் கொண்டு வந்தார். ஒரு நாள் முழுவதும் தங்கியிருந்து அவர் புறப்படும் போது அவரிடம் ‘ஆனைமுத்து அவர்களின் தொண்டுக்கும் இவ்வாறு ஒரு தொகுப்பு வெளியிட வேண்டும்’ என்ற கருத்தினைக் கூறினேன். ‘இதற்கெல்லாம் ஆனைமுத்து ஒப்பமாட்டார். இருந்தாலும் வற்புறுத்துவோம் எனக் கூறிச் சென்று அவர்தம் இசைவைப் பெற்று, ஒரு பெரு நூலை விட்டார்.

பெரியார் கண்ட பேரறிஞர்

மோகனூரில் நடைபெற்ற இலக்கியக் கருத்தரங்கு ஒன்றில் ‘பெரியார் கண்ட பேரறிஞர் வே. ஆனைமுத்து’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை படித்தேன். கருத்தரங்கை நடத்திய முன்னைத் துணைவேந்தர் க.ப. அறவாணனும் பாராட்டினார். இதே தலைப்பில் தொகுப்பை வெளியிட வண்டலூரில் சங்கமித்ராவுடன் பேசி இருவரும் திட்டங்களை உருவாக்கினோம்.

இதற்கான அறிக்கை உருவாக்கம், வேண்டு கோள், தொகுப்புக் குழு அமைப்பு, கட்டுரை பெறுதல் ஆகிய பணிகள் அனைத்தும் சங்கமித்ராவுடைய னவே. நான் துணை நிற்கிறேன்; நீங்கள் வெளி யிடுங்கள் என்று சொன்னபோது பாவேந்தர் பதிப்பகம் சார்பில் வெளியிடலாம் என்ற கருத்தை அவரே முன்வைத்தார்.

நூறு கட்டுரை கவிதைகளுடன், ஐம்பத்தாறு பக்க அரிய நிழற்படங்களையும் இணைத்து 496 பக்கங் களில் இருநூறு உரூபா விலையில் வெளியிடும் பொறுப்பை சங்கமித்ராவே ஏற்றுச் செய்தார். இந் நூலின் பதிப்புரிமை சிந்தனையாளன் ஆசிரியர் அவர்களிடமே உள்ளது. இப்பணிக்குப் பெரிதும் உழைத்தவர் கவிஞர் தமிழேந்தி, ந. கருணாகரன், ஆறு. இளங்கோவன் ஆகியோராவர்.

படைப்புத் தொடர்பு

1997இல் ‘என்னையே நான்’ என்ற தன் வரலாற்று நூலை சங்கமித்ராவுக்கு அனுப்பி வைத் தேன். நூலை முழுமையாகப் படித்து நிறை குறை களை ஆறு பக்கங்களில் எழுதி அனுப்பியவர் சங்க மித்ரா அவர்களே.

2010இல் ‘தாய்தந்த வாழ்க்கைத்தேன்’ என்ற தலைப்பில் நான் வெளியிட்ட விரிவான தன் வரலாற்று நூலைப் படித்து சங்கமித்ரா மார்ச்சு 2011 இதழின் பின் அட்டையில் தன் வரலாற்று நூலுடன், முந்துமா முதுமை நூலின் அட்டையையும் வெளியிட்டு விளம்பரம் தந்துள்ளார். என் படைப்புகளுக்குச் சங்கமித்ரா தந்த கடைசி விளம்பரம் இதுவாகும்.

தன் வரலாற்று நூல் பற்றி “நூலை அகம் புறமாக்கி அனைத்தையும் தேனாக்கியது ஒரு புதுமை. உங்களுடைய ‘என்னையே நான்’ படித்து என்னை யே இழந்தவன் நான். கறந்த பால் போல தூய்மை யும், புதுமையும் அதில் இருந்தன. அதன் விரிவாக்கம், பிற்சேர்க்கை என்றில்லாமல் இந்நூல் தனி நூலாகத் திகழ்கிறது. இரண்டு நூல்களும் இணைந்து வலம் வரலாம்” எனக் குறிப்பிட்டுள்ளார். “முந்துமா முதுமை” யைப் படித்து, “என் கட்டுரையும் நூலாக்கத்துக்குத் தூண்டலாய் இருந்துள்ளதே” என மகிழ்வடைந்தார்.

உயிர் தமிழ் மக்களுக்கு

இத்தகு ஓய்வில்லா உழைப்பாளர் சங்கமித்ரா இதயநோயால் தாக்கப்பெற்று மருத்துவமனையில் சேர்ந்து இதய அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டிய நிலைக்கு ஆளானார். அறுவை சிகிச்சை முடிந்து நலம் பெற்றபின் ‘மருத்துவர்கள் இருபதாண்டு உறுதி கொடுத்திருக்கிறார்கள். அதுவரை உழைப்பேன்’ எனக் குறிப்பிட்டு, மருத்துவமனை நிகழ்வுகளை ‘உயிர்தமிழ் மக்களுக்கு’ என்ற தலைப்பில் தொகுப் பாக வெளியிட்டார். இதய அறுவை சிகிச்சை எவ்வளவு கொடுமையானது என்பதை இத்தொகுப்பு விளக்குகிறது.

இத்தகு மன உறுதியுடன் இருந்தவர் ஆறாண்டு களில் மீண்டும் உடல்நலங்குன்றி புகழுடம்படைவார் என்பது யாரும் எதிர்பாராதது. இவருக்கு உறவு வட்டத்தை விட நட்பு வட்டமே பெரியது. நட்பு வட்டம் அறிய இயலாமல், உறவு வட்டமே அவர்தம் உடலை திருச்சி மின் சுடுகாட்டில் எரியூட்ட ஆவன செய்து விட்டது.

உயிர் தமிழ் மக்களுக்கு என்ற தொகுப்பின் நிறைவில் :

“மரணம் ஒரு நாள் வரும். என் உடல் உறுப்பு களைக் கொடையாக அளிக்கலாம். உடல் ஒரு அரசு மருத்துவக் கல்லூரிக்கு வழங்கப் பெற வேண்டும். என் மரணத்தில் என் உயிர் நண்பர்கள் ஆனைமுத்து, சோம. முத்தய்யன், தமிழேந்தி, தில்லைவனம், இராம. கலியமூர்த்தி, கோவை ஞானி, செயங்கொண்டம் ந. மாசிலாமணி (பட்டியல் முழுமையானது அல்ல) பொறுப்பேற்று உடலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்க வேண்டியது.

எனது அனைத்து நூல்களுக்குமான பதிப்புரிமை, வெளியீட்டுரிமை என்மீது பேரன்பு கொண்டவர்களாக இருக்கின்ற நெய்வேலி சாந்தி. கணேசன் இணை யருக்கு வழங்குகின்றேன். அனைத்து எழுத்துகளை யும் தொகுதிகளாக வெளியிட முடிந்தால் அது தமிழ் மக்களுக்குப் பயன்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

7.4.2012 புகழுடம்பெய்தினார். 8.4.2012 காலை எட்டரை மணிக்கு உடல் எரியூட்டப் பெற்றது. ஆனால், அவர் நினைத்தபடி எதுவும் நடைபெறவில்லை.

சங்கமித்ரா குறிப்பிட்டவாறு நெய்வேலி சாந்தி-கணேசன் இணையர் அவர்தம் படைப்புகளைத் தொகுத்து சங்கமித்ரா படைப்புகள் தொகுதி 1, 2 என வெளியிட்டால் பெரியார் தமிழ்ப் பேரவை நண்பர்களும் உறுதுணையாய் இருப்பர்.

சாதனைச் செம்மல் சங்கமித்ரா புகழ் என்றென் றும் இருக்கும். 

Pin It