இந்தியா தேசிய இனங்களின் சிறைக்கூடமாக இருக்கிறது என்று நாம் சொல்லி வருகின்றோம். அதனால் இந்த இந்தியச் சிறைக்கூடத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் - சிறைக் கைதிகளுக்கு அடை யாள எண் தருவது போல் - 12 இலக்க அடையாள எண் நடுவண் அரசால் தற்போது வழங்கப்பட்டு வரு கிறது. இந்தத் தனித்த அடையாள எண் (Unique Identification Number - UID) ‘ஆதார்’ (Aadhaar) என்ற இந்தி மொழிச் சொல்லால் ‘செல்லமாக’ அழைக்கப்படு கிறது. மொழிவழித் தேசிய இன அடையாளத்தைத் துடைத்தெறிய வேண்டும் என்பது இந்த அடையாள எண் அளிக்கப்படுவதன் நோக்கங்களில் ஒன்றாகும்.

அடையாள எண் அட்டை எல்லாக் குடிமக்களுக் கும் வழங்கப்பட வேண்டும் என்கிற முடிவு 2001இல் வாஜ்பாய் பிரதமராக இருந்த போது எடுக்கப்பட்டதாகும். இந்த அடையாள எண் அட்டை மக்களுக்குப் பலவகை யிலும் பயன்படும் என்று அரசு கூறியது. ஆனால் இந்துத்துவ பா.ச.க. தலைமையிலான ஆட்சியின் நோக்கம், வங்க தேசத்திலிருந்து முசுலீம்கள் இந்தியா வுக்குள் வருவதைத் தடுப்பதேயாகும்.

இதற்காக 1955ஆம் ஆண்டின் குடியுரிமைச் சட்டம் 2003ஆம் ஆண்டு திருத்தப்பட்டது. இச்சட்டம், ஒவ்வொரு குடிமகனும் உள்ளூரில் உள்ள குடிமைப் பதிவாளரிடம் தன்னைப் பற்றிய சரியான விவரங் களை அளித்துப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறது. 2003ஆம் ஆண்டுச் சட்டத்தில் உடற்கூறு அடையாள விவரங்கள் (Biometric Data) இடம் பெறவேண்டும் என்று கூறப்படவில்லை. ஆனால் இப்போது ஒவ்வொருவரின் கைரேகை, கருவிழி அடையாளம் இவை முதன்மையானவை யாக வலியுறுத்தப்படுகின்றன.

கார்கில் போரின் விளைவாக, 2001ஆம் ஆண்டு தேசிய மக்கள் தொகைப் பதிவேடு என ஒன்றைப் பராமரிப்பது என்று நடுவண் அரசு முடிவு செய்தது. பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகின்ற, மக்கள் தொகைக் கணக் கெடுப்பின் போது திரட்டப்படுகின்ற விவரங்களே, மக்கள் தொகைப் பதிவேட்டைப் பராமரிப்பதற்குப் போதுமானவையாகும். 2006ஆம் ஆண்டில் மன்மோகன் சிங் தலைமையிலான (UPA-I) ஆட்சியில் ஒவ்வொரு குடிமகனின் உடற்கூறு அடையாளங்களையும் இப்பதி வேட்டில் சேர்க்க வேண்டும் என்று முடிவு செய்யப் பட்டது. கைரேகை, கருவிழிப்படலம் ஆகியவற்றை உயர் தொழில்நுட்பம் வாய்ந்த ஊடுகதிர் படக்கருவி (Scan) மூலமே பதிவு செய்ய முடியும். எனவே இப் பணியைச் செய்வதற்கென, தனித்த இந்திய அடையாள எண் ஆணையம் (Unique Identification Authority of India) என்கிற தனி அமைப்பை 2008ஆம் ஆண்டு நடுவண் அரசு ஏற்படுத்தியது.

குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, வங்கிக் கணக்கு, ஓட்டுநர் உரிமம், வருமானவரி அட்டை, கடவுச்சீட்டு முதலான 15 வகையான அடையாள ஆவணங்களை மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்த ஆவணங்கள் நடைமுறை வாழ்வின் தேவைகளுக்குப் போதுமான வைகளாக உள்ளன. புதியதாக அடையாள எண் - ஆதார் என்பது ஏன்? ரூ.70,000 கோடிக்குமேல் செலவு செய்து எடுத்து அளிக்கப்படும் அடையாள எண் ணால் மக்களுக்குக் கூடுதலாகக் கிடைக்கப் போகும் பயன் என்ன?

இங்கிலாந்தில் அடையாள அட்டைச் சட்டம் இயற்றியபோது அங்கும் மக்கள் இதே வினாக்களைத் தொடுத்தனர். 2006ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டின் பிரதமர் பிளேர், “அடையாள அட்டை என்பது உரிமை பற்றியது அன்று; அது நவீன உலகத்தைச் சார்ந்தது. நாம் எந்த அளவுக்கு நவீன உயர் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துகிறோம் என்பதன் அடையாளம் இது” என்று கூறினார். 2010 செப்டம்பர் மாதம் பிரதமர் மன் மோகன் சிங், முதலாவது அடையாள எண்ணை (ஆதார்) வழங்கிய விழாவில், “ஆதார், புதிய நவீன இந்தியா வின் அடையாளம்; ஆதார் திட்டம் இன்றைய நவீன உயர் தொழில் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது” என்று பிளேரின் குரலையே எதிரொலித்தார்.

அடையாள அட்டை தனிமனித கமுக்க உரிமைகளில் (Privacy) தலையிடுகிறது என்று கூறி இங்கி லாந்தில் கடும் எதிர்ப்பு எழுந்ததால், 2010ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன் அடையாள அட்டைச் சட்டத்தை இரத்து செய்துவிட்டார். இதேபோன்று செருமனி, அங்கேரி போன்ற பல நாடுகளில் இத்திட்டம் பாதியி லேயே கைவிடப்பட்டது. ஆனால் இந்திய அரசு அடையாள எண் திட்டத்தைத் தீவிரமாகச் செயல் படுத்த முனைந்து நிற்கிறது.

2009 பிப்பிரவரியில் நந்தன் நிலகேனி என்பவர் இந்தியரின் தனித்த அடையாள எண் ஆணையத்தின் தலைவராக அமர்த்தப்பட்டார். இவர் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன் போசிஸ் நிறுவனர்களுள் ஒருவர். முதல்கட்டமாக 10 கோடிப் பேருக்கு, அவர்களின் விவரங்களைத் திரட்டி அடையாள எண் வழங்குவதற்காக ரூ.3170 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. 2010 செப்டம்பரில் பிரதமர் மன் மோகன் சிங் முதலாவது அடையாள எண்ணை வழங்கினார்.

இந்த ஆணையம், அடையாள விவரங்களைத் திரட்டுதல், அடையாள எண்ணை உரியவரிடம் வழங்குதல் ஆகிய பணிகளை அஞ்சல் துறையிடம் ஒப்படைத்துள்ளது. இதற்காக ஆணையமும் அஞ்சல் துறையும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. அஞ்சல கங்கள் நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் இருப்பதால் இத்திட்டத்தைச் செம்மையாகச் செயல்படுத்த வாய்ப் பாக இருக்கும் என்று கருதப்படுகிறது. ஆயினும் மேலும் சில முகமைகளிடமும் (Agency) இப்பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நாடு தழுவிய அளவில் ஒரு திட்டத்தைச் செயல் படுத்த வேண்டுமானால், முதலில் அதற்கு நாடாளு மன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும். ‘இந்தியத் தேசிய அடையாள ஆணையச் சட்ட வரைவு’ 2010 திசம்பரில் நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டது. அது நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் இந்த ஆணையம் 2009 செப்டம்பர் முதலே நந்தன் நிலகேணி தலைமையில் செயல்படத் தொடங்கிவிட்டது. இதற்கான சட்டம் நாடாளுமன்றத்தில் முன்மொழியப்படுவதற்கு முன்பே 6 கோடிப் பேருக்கு அடையாள அட்டை வழங்கப் பட்டுவிட்டது.

அடையாள எண் பெற முதலில் அதற்குரிய அஞ்ச லகத்திற்குச் சென்று விண்ணப்பம் பெறவேண்டும். விண்ணப்பம் பெறுவதற்கு அடையாள ஆவணச் சான்று காட்ட வேண்டும். விண்ணப்பத்தில் பெயர், பாலினம், பிறந்த நாள், முகவரி, பணி முதலான விவரங்களை நிரப்பி அஞ்சலகத்தில் கொடுக்க வேண் டும். அப்போது அஞ்சலகத்தில், உடற்கூறு அடையா ளங்களைப் பதிவெடுக்க எந்த நாளில் வரவேண்டும் என்று தெரிவிப்பார்கள். கிட்டத்தட்ட இரண்டு மாத காலம் கழித்துச் செல்ல வேண்டியுள்ளது. அஞ்சலகத் தில் வரச் சொன்ன நாளில் ஒருவரின் முகம், கை விரல்கள், உள்ளங்கை, கருவிழிப் படலம் ஆகியவை ஊடுகதிர் படக்கருவி (Scan) மூலம் பதிவு செய்யப் படுகின்றன. இந்த விவரங்கள் அடையாள எண் ஆணை யத்துக்கு அனுப்பப்படுகின்றன. இந்த ஆணையத்தின் கீழ் இயங்கும் மத்திய தனித்த அடையாளப் பதிவகம் (Central ID Repository - CIDR) ஒவ்வொருவரின் உடற்கூறு விவரங்களும் மற்றவர்களுடைய உடற்கூறு விவரங்களிலிருந்து தனித்தன்மையானதாக இருக்கிறதா என்று ஆராய்ந்து அறிவிக்கும். அதன்பிறகு அடையாள எண் அளிக்கப்படும்.

நாடாளுமன்ற நிலைக்குழு, “2010ஆம் ஆண் டைய இந்திய தேசிய அடையாள எண் ஆணையச் சட்டவரைவை ஏற்க முடியாது. எனவே அடையாள எண் வழங்கும் திட்டத்தை நடுவண் அரசு தீவிரமாக மறு ஆய்வு செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளது.

மேலும் நாடாளுமன்ற நிலைக்குழு இத்திட்டத்தின் முதன்மையான குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி யுள்ளது. 1. நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறாமல் ஆதார் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது ஏன்? 2. திட்டத்தின் தேவைகுறித்தோ, நோக்கம் பற்றியோ தெளிவான வரையறை இல்லை. 3. பெருந்தொகை செலவிடப்படவுள்ள இத்திட்டம் குறித்து ஒருங்கி ணைந்த கள ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை. முதல் இரண்டு கட்டங்களில் 10 கோடிப் பேருக்கு மட்டும் அடையாள எண் வழங்க ரூ.3,170 கோடி நிதி அளிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது கட்டத்தில் 10 கோடி பேருக்கு ரூ.8,861 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படிக் கணக்கிட்டால் 121 கோடி மக்களுக்கு அடையாள எண் வழங்க ரூ.72,000 கோடி செல வாகக் கூடும் என்று தெரிகிறது. எவ்வளவு செலவாகும் என்றும் மதிப்பிடப்படவில்லையே, ஏன்? 4. பொது மக்கள் அளிக்கும் தகவல்களைக் கமுக்கமாக வைத்திருப்பதற்கான தனிச்சட்டம் இயற்றப்படவில்லை. 5. உடற்கூறு அடையாளங்களைப் பதிவு செய்யும்போது பல குறைபாடுகளும் தவறுகளும் ஏற்பட வாய்ப்பு உண்டு. 6. இங்கிலாந்தில் இடையிலேயே கைவிடப்பட்ட இத்திட்டத்தை இந்தியாவில் ஏன் நடைமுறைப்படுத்த வேண்டும்? முதலான வினாக்களை நாடாளுமன்ற நிலைக்குழு தொடுத்துள்ளது.

நடுவண் அரசின் நிதி அமைச்சகம் மூலம் “ஏற்கெனவே பல்லாயிரம் கோடி உருபா செலவில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடைபெற்றுள்ளது. இந்நிலையில், மீண்டும் ஒருமுறை இதே தன்மை யில் அடையாள எண் வழங்குவதற்காகத் தகவல் களைப் பதிவு செய்வதும் அதற்காகப் பெருந் தொகை யைச் செலவிடுவதும் தேவைதானா?” என்று வினா எழுப்பியுள்ளது. உள்துறை அமைச்சகமும், அடையாள எண் திட்டம் நாட்டின் பாதுகாப்புக்கு அசுறுத்தலாக இருக்கும் என்று கூறியுள்ளது. ஏனெனில், தேசிய அடையாள எண் பெறுவதற்காகப் பதிவு செய்து கொள் வதற்கு முகவரிச் சான்று எதுவும் இல்லாவிட்டாலும், ஏற்கெனவே அடையாள எண் பெற்றுள்ள ஒருவர், அறிமுகப்படுத்தினாலே போதும் என்ற விதி உள்ளது. இதனால் சட்டத்திற்குப் புறம்பாக இந்தியாவுக்குள் ஊடுருவி உள்ள எவரும் எளிதில் அடையாள எண்ணைப் பெற முடியும்.

உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அடையாள எண் வழங்கும் அதிகாரம் குறித்து உள்ள குழப்ப நிலையைத் தெளிவு படுத்துமாறு கேட்டு 19-01-2012 அன்று ஒரு மடல் எழுதியிருக்கிறார். “அடையாள எண் ஆணையத்தின் திட்டவட்டமான பணிகள் குறித்து, திட்டக்குழு, அமைச் சரவைக்கு ஓர் அறிக்கையை அனுப்புமாறு பிரதமர் அறிவுறுத்த வேண்டும். குடிமக்களின் உடற்கூறு அடையாளங்களைப் பதிவு செய்யும் அதிகாரம் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தும் இந்தியத் தலைமைப் பதிவு ஆணையரிடம் (Registrar – General of India) உள்ளதா? அல்லது தேசிய அடையாள எண் ஆணையரிடம் உள்ளதா? என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். ஏனெனில் தேசிய அடையாள எண் ஆணையம் மேலும் காலநீட்டிப்புக் கேட்டுள்ளது” என்று ப. சிதம்பரம் பிரதமரிடம் விளக்கம் கேட்டுள்ளார்.

அடையாள எண் திட்டத்தைச் செயல்படுத்தும் அதிகாரம் யாரிடம் இருக்கிறது என்பது உள்துறை அமைச்சருக்கே புரியாமல் இருக்கும் அளவுக்கு இத் திட்டத்தில் குழப்பங்களும், குளறுபடிகளும் இருக் கின்றன. இந்தியத் தலைமைப் பதிவு ஆணையம் உள்துறை அமைச்சகத்தின் கீழ் வருகிறது. இந்த ஆணையமும் அடையாள எண் வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. வீடுவீடாகச் சென்று விவரங்களைப் பதிவு செய்கிறது. ஆனால் அடையாள எண் ஆணை யமோ அஞ்சலகத்திற்கோ அல்லது வேறோர் முகமை யின் இடத்திற்கோ குடிமக்களை வரச்செய்து பதிவு செய்கிறது. எனவே தலைமைப் பதிவு ஆணையர், அரசு ஊழியர்களைக் கொண்டு, வீடுவீடாகச் சென்று பதிவு செய்யப்படும் தகவல்கள் மட்டுமே சரியானவை களாக இருக்கும் என்று பிரதமருக்கு எழுதிய மடலில் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.

சோனியா காந்தியைத் தலைவராகக் கொண்டுள்ள தேசிய ஆலோசனைக் குழுவின் முதன்மையான உறுப்பினர்களான ஜீன்டிரீசும், அருணா ராயும் அடை யாள எண் திட்டத்தைக் கண்டித்துள்ளனர். தேசிய ஊரக வேலையளிப்பு உறுதித் திட்டத்தை (100 நாள் வேலைத் திட்டம்) உருவாக்கியதில் பெரும் பங்காற்றிய ஜீன்டிரீஸ், “அடையாள எண் திட்டத்தைப் பயன்படுத்தி, காவல்துறையும், உளவுத் துறையும் சாதாரண மக்க ளைப் பலவகையிலும் துன்புறுத்தவும், கொடுமைப் படுத்தவும் அதிக வாய்ப்பு உண்டு. பெரு முதலாளியக் குழுமங்களின் வணிகப் பெருக்கத்துக்கும் கொள்ளை இலாபத்துக்கும் அடையாள எண் உதவும். மக்களை வேவு பார்ப்பதற்கு இது சிறந்த கருவியாகப் பயன் படும்” என்று கூறியுள்ளார். இங்கிலாந்திலும் மற்ற நாடுகளிலும், தனிமனித கமுக்க உரிமைகளை மீறு கிறது, மக்களை உளவுபார்க்க வழிகோலுகிறது என்கிற காரணங்களை முன்னிறுத்தியே மக்கள் இத்தகைய சட்டத்தை எதிர்த்து, அத்திட்டத்தை அரசு கைவிடுமாறு செய்தனர்.

உலகில் முதன்முதலாக, 1936ஆம் ஆண்டு அமெரிக்காவில் அடையாள எண் வழங்கப்பட்டது. சமூகப் பாதுகாப்பு எண் (Social Security Number - SSN) என்ற பெயரில் அது அளிக்கப்பட்டது. அரசின் சமூகப் பாதுகாப்பு நலத்திட்டங்களின் பயன்களை மக்கள் பெறுவதற்கான உரிமை ஆவணமாக இந்த எண் இருந்தது. ஆயினும் 1974ஆம் ஆண்டு, சமூக நலத் திட்டங்களை மக்கள் பெறுவதற்கு சமூகப் பாது காப்பு எண் தேவை என்று கட்டாயப்படுத்தக் கூடாது எனச் சட்டம் திருத்தப்பட்டது.

இப்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் அடையாள எண், சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் பயன்களைப் பெறுவதற்கான உரிமை ஆவணமாக உள்ளதா? இல்லை! தேசிய அடையாள எண் ஆணையச் சட்ட வரைவில், இந்த அடையாள எண் ஒரு குடி மகனின் அடையாளத்தை - இருப்பை மட்டுமே உறுதி செய்கிறது. எந்தவொரு உரிமையையோ, நலன் களையோ, பயன்களையோ ஒரு குடிமகன் பெறு வதற்கு இது உத்தரவாதமளிக்காது என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. வெறும் அடையாளக் குறியீடாக மட்டுமே உள்ள அடையாள எண்ணை வழங்க ரூ.70,000 கோடிக்கு மேல் ஏன் செலவு செய்ய வேண்டும்? தற்போது பயன்பாட்டில் உள்ள 15 வகையான அடையாள ஆவணங்கள் போதுமே!

அடையாள எண் ஆணையத்தின் தலைவர் நந்தன் நிலகேணி, நடுவண் அரசின் திட்டக் குழுவின் துணைத் தலைவர் மான்டேக்சிங் அலுவாலியா, பிரதமர் மன்மோகன் சிங் ஆகிய மூவரும் அடையாள எண் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்பதில் விடாப்பிடியாக உள்ளனர். இவர்களும், இவர்களின் தாராளமயக் கொள்கையின் ஆதரவாளர்களும் அடையாள எண், கள்ள வாக்களிப்பதைத் தடுக்கும்; அரசு மானியத்துடன் கூடிய திட்டங்கள் மற்றும் வறுமை ஒழிப்புத் திட்டங்களைப் பலர் முறைகேடாக அனுபவித்து வருவதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்; உரியவர்களுக்கு இவற்றின் பயன்களைக் கிடைக்கச் செய்யும் என்றெல்லாம் கூறுகிறார்கள்.

புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அட்டை நடைமுறைக்கு வந்த பிறகு கள்ள வ்hக்குப் போடுவது பெரும்பாலும் ஒழிந்துவிட்டது. கள்ள வாக்குப் போடப் படும் இடங்களில் அது, அரசியல் கட்சிகள் அதிகாரி களின் ஒத்துழைப்புடன் தான் நடக்கிறது. அடையாள எண் நடப்புக்கு வந்தாலும் இந்த நிலை மாறாது.

அடையாள எண் தவிர வேறு அடையாள ஆவ ணங்கள் தேவை இல்லை என்று அரசு அறிவிக்குமா? 2010 நவம்பரில் அடையாள எண் என்பதும் அடையாள ஆவணப் பட்டியலில் ஓர் ஆதாரமாகச் சேர்க்கப்பட்டது. ஆனால் 2011 செப்டம்பரில் ரிசர்வ் வங்கி, அடையாள எண் அடிப்படையில் வங்கிகளில் கணக்குத் தொடங்கினாலும், கணக்குத் தொடங்குப வரின் தற்போதைய முகவரியை அறிய வங்கிகள் வேறு ஆவணச் சான்றுகளையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்ற சுற்றறிக்கை அனுப்பியது. அடையாள எண்ணுக்கு உள்ள மதிப்பு அவ்வளவுதான்!

அடையாள எண் வைத்திருப்பவர் இந்தியாவில் எந்தவொரு ஊரிலும் உள்ள நியாய விலைக் கடை யில் உணவுப் பொருள்களை வாங்கலாம் என்று கூறப்படுவது ஒரு ஏமாற்றுப் பேச்சு! நியாய விலைக் கடைகளுக்கு அதன் எல்லைக்குட்பட்ட குடும்ப அட்டை களுக்குத் தேவைப்படும் அளவு மட்டுமே உணவுப் பொருள்கள் வழங்கல் துறையினால் அளிக்கப்படு கின்றன. பட்டியலில் இல்லாத ஒருவர் அடையாள எண்ணை ஆதாரமாகக் காட்டி உணவுப் பொருள் கேட் டால் அது கிடைப்பது முயற்கொம்பே! வட இந்தியாவில் பொது வழங்கல் முறை திட்டமிட்டு வளர்த்தெடுக்கப்பட வில்லை. அங்கு பெரும்பாலான நியாயவிலைக் கடைகள் தனியாரிடம் உள்ளன. அதனால் ஊழல் தாண்டவமாடுகிறது. இந்த இழிநிலையை மாற்றாமல் அடையாள எண் அளிப்பதால் ஒரு பயனும் விளையாது.

தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் இருப்பது போன்று வறுமைக்கோட்டுக்குமேல் - கீழ் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் பொதுவான முறையில் அரசு நியாயவிலைக் கடைகளில் பொருள்களை வழங்கு வதே சரியான தீர்வு என்று சமூக ஆர்வலர்கள் அனைவரும் கூறுகின்றனர். ஆனால் நடுவண் அரசு கொண்டுவந்துள்ள உணவுப் பாதுகாப்புச் சட்டவரை வில், ஊர்ப்புறங்களில் 75 விழுக்காட்டினருக்கும், நகர்ப்புறங்களில் 50 விழுக்காட்டினருக்கு மட்டும் பொது வழங்கல் முறையில் உணவுப் பொருள் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் 5 அகவைக்குட்பட்ட சிறுவர்களில் 42 விழுக்காட்டுப் பேர் ஊட்டச்சத்துக் குறைவால் வளர்ச்சி குன்றியிருப்பது தேசிய அவமானம் என்று அண்மையில் பிரதமர் மன்மோகன் சிங் சொன்னார். ஆனால் அவரே அனை வருக்குமான பொது வழங்கல் முறையை ஏற்படுத்த முடியாது என்கிறார். எவ்வளவு பெரிய ஏமாற்றுப் பேர்வழி இவர்!

அடையாள எண் திட்டத்தின் நோக்கத்தை மன்மோகன் சிங் வெளிப்படையாக அறிவித்திருக் கிறார். “இனி வருங்காலங்களில் நம் நாட்டின் நிதிப் பற்றாக்குறையைக் குறைக்க ஓரளவு வசதி படைத் தவர்களுக்கு மானியங்கள் அளிப்பதை நிறுத்த வேண்டும். தனித்த அடையாள எண் வழங்கும் திட்டம் இவ்வாறு மானியச் செலவைக் குறைப்பதற்கான நல்ல வாய்ப்பாக இருக்கும்” என்று கூறி இருக்கிறார் (பிரண்ட்லைன் 2011, திசம்பர் 2) நாட்டின் நிதிப்பற்றாக் குறையைக் குறைக்க, பெரும் பணக்காரர்கள் - முதலாளிகள் மீதான வரியை உயர்த்தி, நிதி ஆதாரத் தைப் பெருக்க வேண்டியது உண்மையான மக்கள் அரசின் கடமையாகும். இந்தியாவில் இருப்பதோ முதலாளிகளுக்கான-பணக்காரர்களுக்கான அரசாகும். அதனால்தான் முதலாளிகளுக்கு உற்பத்தி வரி, விற்பனை வரி, ஏற்றுமதி-இறக்குமதி வரிகள் ஆகியவற்றில் விலக்குகள் தள்ளுபடிகள் என்கிற பெயரில் ஆண்டிற்கு 5 இலட்சம் கோடி உருபா அளிக்கப்படுகிறது. ஆனால் உணவுப் பொருள்கள், இரசாயன உரங்கள், மின்சாரம் முதலானவற்றுக்கு அளிக்கப்பட்டுவரும் மானியங்களை விரைவில் அடியோடு ஒழித்துவிட வேண்டும் என்பதைக் குறிக் கோளாகக் கொண்டு செயல்படுகிறது. இவற்றின் மீதான அரசின் குறைந்த அளவிலான கட்டுப்பாடு களை நீக்கி, தாராளமயச் சந்தை என்ற பெயரில் தனியார்மயமாக்கிட முனைந்து செயல்படுகிறது. இதற்கான வழிவகைகளை ஏற்படுத்தும் செயல்பாடு களில் ஒன்றுதான் அடையாள எண் திட்டம்.

நியாய விலைக் கடைகளில் மானிய விலையில், அரிசி, கோதுமை, சர்க்கரை, மண்ணெண்ணெய் முதலானவற்றை வழங்குவதற்குப் பதிலாக, ஒரு குறிப்பிட்ட அளவு மானியத் தொகையைப் பணமாகக் கொடுப்பது என்கிற திட்டத்தை நடுவண் அரசு விரை வில் நிறைவேற்ற உள்ளது. இதுகுறித்த விவாதங்கள் மூலம் மக்கள் இதை ஏற்பதற்கான மனநிலையை முதலாளிய ஊடகங்கள் வாயிலாக அரசு உருவாக்கி வருகிறது. கூப்பன் அல்லது உணவு அஞ்சல் தலை (Food stamp) என்ற பெயரில் பணம் தரப்படும். தனியார் கடைகளில் இந்தக் கூப்பனைக் கொடுத்து, மானியம் போக மீதியைப் பணமாகக் கொடுத்து நுகர்வோர் உணவுப் பொருள்களை விலைக்கு வாங்க வேண்டும். இது நடப்புக்கு வந்தால் பொது வழங்கல் முறையும் - நியாயவிலைக் கடைகளும் முற்றிலுமாக ஒழிக்கப்படும். அத்துடன் உணவு தானியங்களைக் கொள்முதல் செய்து, சேமித்து வைத்துப் பொது வழங்கலுக்காக அனுப்புதல் என்பதும் ஒழிக்கப்படும். குறைந்தபட்சக் கொள்முதல் விலை என்பதே இல்லாமல் போகும். விவசாயிகளின் விளைபொருள்களுக்கு அவற்றை வாங்கும் வணிகர்கள் நிர்ணயிப்பதே விலையாக இருக்கும். இந்த நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் மன்மோகன் சிங் - அலுவாலியா கும்பலின் இலட்சியக் கனவாகும். இவை யெல்லாம் அடையாள எண் திட்டத்தின் உள்நோக்கங் களாகும்.

12 அகவைக்கு உட்பட்ட மற்றும் 60 அகவைக்கு மேற்பட்டவர்களின் கைவிரல் ரேகை உறுதியற்றது - மாறுதலுக்குட்பட்டது - திட்டவட்டமான அடையாளமாக ஏற்க முடியாதது. உடல் உழைப்பில் ஈடுபட்டுள்ள கோடிக்கணக்கான மக்களின் கைவிரல் ரேகையும் கடின உழைப்பின் காரணமாக மாறும். இந்தியாவில் பார்வையற்றவர்கள் 80 இலட்சம் பேர் உள்ளனர். மேலும் கண்புரை, வேறுவகையான கண்குறைபாடு உடையவர்கள் சில கோடிப் பேர் இருக்கின்றனர். எனவே இத்தனை கோடிப் பேரின் உடற்கூறு அடையாளங்கள் சிக்கலுக்குரியனவாகவே இருக்கும். இவர்கள் அரசின் மானியத் திட்டங்கள், வறுமை ஒழிப்புத் திட்டங்கள் போன்றவற்றின் பயன்களைப் பெற முடியாத நிலை ஏற்படும். அடையாள எண் ஆணையமும் இக்குறைபாடுகள் ஏற்படும் என்பதை ஒத்துக்கொள்கிறது.

மேலும் ஒருவரின் கருவிழியும், கைவிரல் ரேகையும் நல்ல நிலையில் இருந்தால்கூட, ஊடுகதிர் படக்கருவி (Scan) மூலம் பதிவு செய்யும்போது பிழைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதேபோன்று இப்பதிவு விவரங்களை இணையதளத்தின் மூலம், தில்லியில் உள்ள மையத்திற்கு அனுப்புவதிலும் தவறு ஏற்படும். 15 விழுக்காடு அளவுக்குத் தவறுகள் நேரிடும் என்று மதிப்பிடப்படுகிறது. எவ்வளவுதான் தொழில்நுட்பம் வளர்ந்திருப்பதாகப் பீற்றிக் கொண்டாலும், 121 கோடி மக்களின் உடற்கூறு அடையாளங்களை ஒப்பிட்டுப் பார்த்து உறுதி செய்வது முடியாத ஒன்றாகும்; பல குழப்பங்களுக்கும் தவறுகளுக்கும் இடம் அளிக்கும். எனவே இத்திட்டம் வேலையற்ற மாமி சோளம் குத்தும் கதை போன்றதுதான்.

இந்தியா சுதந்தரம் பெற்று 64 ஆண்டுகளுக்குப் பிறகும் மக்களின் அடிப்படைத் தேவைகளை அரசு நிறைவேற்றவில்லை. அய்க்கிய நாடுகள் மன்றத்தின் 2011ஆம் ஆண்டிற்கான மனிதவள மேம்பாட்டு அறிக்கையில், 187 நாடுகளில் இந்தியா 134ஆவது இடத்தில் மிகவும் பின்தங்கி நிற்கிறது. இந்த இழிநிலை யை மாற்றாமல், ஒருவரின் அடையாளத்தை உறுதி செய்யும் ஆவணங்களும் ஒன்று என்பதற்குமேல் எவ்வகையிலும் பயன்படாத வெள்ளை யானை திட்டமான ரூ.72.000 கோடி பணத்தை விழுங்குகிற அடையாள எண் திட்டத்தை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்.

அடையாள எண் அளித்தல் தொடர்பான பணி களை ஆறு கிழமைகளுக்கு நிறுத்தி வைக்குமாறு அடையாள எண் ஆணையம் அறிவித்துள்ளது. உழைக்கும் மக்களுக்கு எவ்வகையிலும் உதவாத - ஆனால் அதே சமயம் வெகுமக்களுக்கு எதிரான - தேசிய இனங்களின் தனித்த அடையாளங்களை அழிக்க வேண்டும் என்ற நோக்கம் கொண்ட - ஆதார் அடையாள எண் எனப்படும் வெள்ளை யானைத் திட்டத்தை நடுவண் அரசு அடியோடு கைவிட வேண் டும் என்று உழைக்கும் மக்கள் போராட வேண்டும். போராடுவோம் வாரீர்!

Pin It