திராவிடர் சங்கம் தோன்றிச்

                செழித்ததோர் நூற்றாண் டின்முன்

இராவினைச் சூழ்ந்து கவ்வும்

                இருள்போலத் தமிழர் வாழ்வை

பிராம ணீயம் சூழ்ந்து

                பெருங்கேடு செய்த நாளில்

வராதே வந்து வாய்த்த

                மாமணித் தலைவர் மூவர்

நடுங்காத நெஞ்சர் நாயர்

                நடேசர் தியாக ராயர்

கடும்பாடு பட்டார்; நம்மைக்

                கல்வியில் சமுதா யத்தில்

நெடுங்காலம் அழுத்தி வைத்த

                நிலைதனை மாற்றிப் போட்டார்

கொடுந்தேளாம் பார்ப்ப னீயக்

                கொடுக்கினை அடக்கி வைத்தார்

எத்தனை பெரிய ஈகம்?

                இந்நாட்டின் ஒடுக்கப் பட்ட

முத்தனை முனியன்தன்னை

                முன்னேற வைக்கத் தத்தம்

சொத்தினைச் சுகத்தை விற்றார்

                சும்மாஇன்(று) அவர்பேர் சொல்லும்

அத்தனை தலைவர் கும்இவ்

                அருகதை உண்டா? இல்லை!

ஆரியப் பகைஎ திர்ப்பின்

                அடையாளம் திராவி டத்தை

வீரியத் தோடெ திர்த்தோர்

                விலையாய்ப்பின் பதவி பெற்றார்

போரிலே இன்று தோற்றார்

                போலியாய் ஆனார்; முற்றாய்ச்

சோரம்போய் அட்டைக் கத்தி

                சுழற்றிஏ மாற்று கின்றார்

நதிநீரை மறுத்தும் முல்லை

                அணைநீரைத் தடுத்தும் உள்ளம்

கொதியேறிச் செய்வோன் எல்லாம்

                திராவிடத் தானா இன்னும்?

எதற்காய்இனி உறவு ஒட்டு?

                இழந்தோமே எல்லாம் கெட்டு!

உதைவாங்கிக் கொண்டும் திராவிட

                உளறலா, ஏறக்கட்டு!

- தமிழேந்தி
Pin It