மன்மோகன் சிங் ஆட்சி,பன்னாட்டு நிறுவனங்கள் எல்லாத் துறைகளிலும் தாராளமாக நுழைவதற்கு வழிவகை செய்வதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. அது வேளாண்மையில் மான் சாண்டோ,சில்லறை வணிகத்தில் வால்மார்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிப்பதற்குக் கடுமையான எதிர்ப்பு எழும்போதெல்லாம் தன் முடிவைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்.ஆனால் மீண்டும் புதிய வடிவில் பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்க முயலும்.

மான்சாண்டோ அமெரிக்காவைத் தலைமையிட மாகக் கொண்ட ஒரு பன்னாட்டு நிறுவனம். வேளாண் தொழில் -வணிகத்தில் இதன் ஆதிக்கம் உலக அளவில் படர்ந்துள்ளது. இந்தியாவில் இதன் கிளை மகாராட்டிரத்தில் இருக்கின்றது. மகாராட்டிர வீரிய ஒட்டு விதை நிறுவனம் (Maharashtra Hybrid Seeds Company -Mahyco) என்ற பெயரில் இது செயல்படுகிறது.கடந்த பத்து ஆண்டுகளாக இந்நிறுவனம் மரபீனி மாற்றப் பருத்தி விதைகளைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.பருத்திக் காய்களில் பெரும் சேதத்தை உண்டாக்கும் புழுக்களை அண்ட விடாமல் விரட்டும் வீரியம் கொண்ட இவ்விதைகளால் பருத்தி விளைச்சல் அதிகமாகிறது என்று கூறப்படுகிறது. இச்செய்தி, திட்ட மிட்டுப் பரப்பப்பட்டதால், மான்சாண்டோவின் மரபீனி மாற்றுப் பருத்தியே தற்போது பெரும் பரப்பில் பயிரிடப் படுகிறது.

மரபீனி மாற்றுப் பருத்தி மலட்டு விதைகளைக் கொண்டதாகும்.அதனால் ஒவ்வொரு தடவையும் மான்சாண்டோ நிறுவனத்திடம் தான் உழவர்கள் பருத்தி விதையை வாங்க வேண்டும்.இந்த மரபீனி மாற்றுப் பருத்தியால் மற்ற பயிர்களிலும் மலட்டு விதைகள் உண்டாகும்; மரபீனி மாற்றுப் பருத்தி விதைகளால் கால்நடைகளுக்கும், மனிதர்களுக்கும் கேடுகள் உண்டாகும்; காலங்காலமாக அந்தந்தப் பகுதியின் சூழலுக்கு ஏற்பப் பயிரிடப்பட்டு வந்த நாட்டுப் பருத்தி இரகங்கள் அழியும்;வேளாண்மை பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தின்கீழ் செல்லும்.

அதனால் இயற்கையின் -உயிர்களின் சமநிலை சீர்குலையும் என்று கூறி சமூகச் செயற்பாட்டாளர்களும்,அறிவியல் அறிஞர்களும் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர்.கடந்த பதினைந்து ஆண்டுகளில் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட உழவர்கள் கடன் சுமையால் தற்கொலை செய்து கொண்டனர். இப்பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர்கள் பி.ட்டி. பருத்தி பயிரிட்ட உழவர்களே ஆவர்.

மரபீனி மாற்றப்பட்ட கத்தரிப் பயிருக்கு நடுவண் அரசு அனுமதி அளித்த பிறகு,பி.ட்டி. பயிர்களுக்குக் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. அதனால் பி.ட்டி. கத்தரிக்கான ஏற்பிசைவு நிறுத்தி வைக்கப்பட்டது. இதன் விளைவாக, “மரபீனி மாற்ற உயிரிகள் - வாய்ப்புகளும் சிக்கல் களும்” என்ற பொருள் குறித்து ஆராய,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் வாசுதேவ் ஆச்சாரியா தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழு 2012 ஆகசுட்டு மாதம் தன் அறிக்கையை நடுவண் அரசிடம் அளித்தது.

அக்குழுவின் அறிக்கையில்,“இப்போதையத் தேவை உயிரித் தொழில்நுட்பட ஒழுங்காற்று ஆணையமல்ல. பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதுகாக்கும் ஆணையம் தான். விரிவான ஆய்வு ஏதுமின்றி பிறப்பிக்கப்படும் உயிரித் தொழில்நுட்ப ஆணையச் சட்டம் நிறுத்தி வைக்கப்பட வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

இதுவரை, மரபீனி மாற்ற உயிர்கள் தொடர்பான வெளிக்கள ஆய்வுகளுக்கும், வணிக வகைப் பயன்பாட்டுக்கும் அனுமதியளிக்கும் அதிகாரம் “மரபீனிப் பொறியியல் ஏற்பிசைவுக் குழு”  (Genetic Engineering Approval Committee - GEAC)) என்ற அமைப்பிடம் இருந்தது.இந்த அமைப்பு சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கட்டுப் பாட்டில் இருக்கிறது.

முதன்மையாக வேளாண்மைத் துறையிலும்,மருத்துவத் துறையிலும் மரபீனித் தொழில் நுட்பத்தை உருவாக்கும் முயற்சியில் பன்னாட்டு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.எனவே மரபீனித் தொழில்நுட்பத்திற்கு ஏற்பிசைவு வழங்கும் போது,அது சார்ந்த துறையின் அனுமதியையும் சுற்றுச்சூழல் துறையின் ஒப்புதலையும் பெற வேண்டியுள்ளது.இந்த நடைமுறைகளைப் பன்னாட்டு நிறுவனங்கள் தடைகளாகக் கருதுகின்றன. எனவே நடுவண் அரசு,உயிரித் தொழில்நுட்ப ஒழுக்காற்று ஆணையம் என்பதை ஏற்படுத்தி,பன்னாட்டு நிறுவனங்களின் மரபீனி மாற்றுத் தொழில் நுட்பங்களுக்கும்,உயிரிகளுக்கும் விரைவில் ஏற்பிசைவு அளித்திட முயல்கிறது.

எனவே நாடாளுமன்ற நிலைக்குழு இதற்கு எதிரான கருத்தைத் தெரிவித்த நிலையிலும், நடந்து முடிந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் 22.4.2013அன்று ‘இந்திய உயிரித் தொழில்நுட்ப ஒழுங்காற்று ஆணையச் சட்டம் 2013’(Bio Technology Regulatory Authority of India Act 2013) என்ற சட்ட வரைவை முன்மொழிந்துள்ளது. நாடாளுமன்றத்தில் ஆளும்கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே தொடர்ந்து நடக்கும் அரசியல் கலாட்டா கூத்தினிடையே திடீரென்று ஒரு மணித்துளிக்குள் இது சட்டமாக நிறைவேறிவிடக்கூடும்!

இதைத் தொடர்ந்து,காங்கிரசு ஆளும் மகாராட்டிர மாநில அரசு 2012ஆகசுட்டு மாதம் மான்சாண்டோவின் 12 வகையான பி.ட்டி. பருத்தி விதைகளின் விற்பனைக்கு விதித்திருந்த தடையை நீக்குவதாக 6.5.2013 அன்று அறிவித்துள்ளது. மாநில அரசு விதித்த நிபந்தனைகளை மகிகோ (மான்சாண்டோ)ஏற்றுக்கொண்டதால் தடையை நீக்கியதாக அரசு கூறுகிறது.

 2012ஆம் ஆண்டு மான்சாண்டோ வாக்குறுதி அளித்ததை விடக் குறைவான அளவில் பருத்தி விதைகளை - குறிப்பாக உழவர்களால் அதிக  அளவில் வாங்கப்படும் எம்.ஆர்.சி.7351 இரக விதைகளைச் சந்தையில் கிடைக்கச் செய்து,கள்ளச் சந்தையில் மீதி விதைகள் விற்றுக் கொள்ளை இலாபம் ஈட்டியது.

மாநில அரசுக்கு அளித்த அறிக்கையில் பருத்தி விதை உற்பத்தி செய்த அளவு,சந்தையில் விற்பனைக்கு அளித்த அளவு குறித்துத் தவறான -பொய்யான தகவல்களை அளித்தது. இதன் அடிப் படையில் தான் மான்சாண்டோவின் 12வகையான பி.ட்டி.விதைகளை விற்பனை செய்யத் தடைவிதிக்கப் பட்டது.

இந்த ஆண்டு எம்.ஆர்.சி.7351 இரகப் பருத்தியின் 10 இலட்சம் விதைப் பொட்டலங்களை விற்பனைக்கு அளிப்பதாக அரசுக்கு வாக்குறுதி அளித்திருக்கிறதாம். 2012ஆம் ஆண்டு காரிப் பருவத்தில் 10.56 இலட்சம் பருத்தி விதைப் பொட்டலங்கள் தருவதாகக் கூறியது. ஆனால் 6.50 இலட்சம் விதைப் பொட்டலங்களை மட்டுமே அளித்தது. இந்த ஆண்டும் இதுபோல் மான்சாண்டோ நடந்து கொள்வதைத் தடுக்க முடியுமா?மான்சாண்டோவின் ஏகபோகக் கொள்ளை தொடரும் என்பது உறுதி!

தாராளமய, தனியார் மயக் கொள்கையை நடுவண் அரசும் மாநில அரசுகளும் தடையின்றிச் செயல்படுத்து வதற்கு ஏற்றவகையில் உயர் நீதித்துறையின் கருத்துகளும்,தீர்ப்புகளும் இருக்கின்றன.நீதிபதிகளின் வர்க்கச் சார்பே இதற்குக் காரணமாகும்.1.5.2013அன்று- உழைக்கும் மக்களின் விடுதலைக்கான மே நாளில் ‘மேதைமைமிகு’உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வு,நடுவண் அரசு பல வணிக முத்திரை சில்லறை வணிகத்தில் (Multi-brandRetail Trade)நூறு விழுக்காடு அந்நிய முதலீட்டிற்கு அனுமதி அளித்திட முடிவு செய்திருப்பது,அரசமைப்புச் சட்ட அடிப்படைக்கோ,சட்டநெறிமுறைகளுக்கோ, அறிவார்ந்த நடைமுறைக்கோ எதிரானது அல்ல என்று கருத்துரைத்துள்ளது.

இந்த உச்சநீதிமன்ற அமர்வில் உள்ள ஆர்.எம். லோதா, பி. லோகுர், குரியன் ஜோசப் ஆகிய மூன்று நீதிபதிகள் “அந்நிய முதலீட்டை அனுமதிப்பதால்,தரமான,சிறந்த பொருள்கள் சந்தையில் மலிவாகக் கிடைக்கும்.அதனால் எந்தப் பொருளை வாங்குவது என்கிற நுகர்வோரின் உரிமை அதிகமாகும்.

இந்தியப் பொருளாதாரத்தின் ஒட்டுண்ணியாக இருக்கும் இடைத் தரகர்கள் ஒழிக்கப்படுவார்கள். உழவர்கள் நேரடியாக - இடைத்தரகர் இல்லாமல் - கொள்முதல் செய்வோருக்கு தன் விளைபொருளை விற்பதால் அதிக இலாபம் கிடைக்கும். அதனால்நுகர்வோருக்கு மலிவான விலையில் பொருள்கள் கிடைக்கும்”என்று கூறியுள்ளனர்.

மன்மோகன்சிங் எழுதிக் கொடுத்ததை நீதிபதிகள் அப்படியே படித்ததுபோல் இருக்கிறது. மன்மோகன் ஆட்சியும் உச்சநீதிமன்ற நீதிபதிகளும் தெரிவித்துள்ள கருத்துகள் உண்மைக்கு முற்றிலும் எதிரானவை என்றும், இதனால் சில்லறை வணிகத்தில் ஈடுபட்டுள்ள பலகோடி குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழப்பார்கள் என்றும் “சிந்தனையாளன்”இதழில் இதற்கு முன் விரிவாக பல கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. மற்றும் பிற நாளேடுகளிலும் பருவ ஏடுகளிலும் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதன் கேடுகள் குறித்து எழுதப்பட்டன.

எனவே, மக்கள் நலனுக்கு எதிராக, மக்களின் எதிர்ப்பை மதிக்காமல், பன்னாட்டு - உள்நாட்டுப் பெருமுதலாளிய நிறுவனங்கள் நிலம்,நீர்,கனிம வளங்கள்,மக்களின் உழைப்பு ஆகியவற்றைத் தங்குதடையின்றிச் சுரண்டுவதற்கும் கொள்ளையடிப் பதற்கும் அச்சாணியாக இருக்கும் இந்த அரசமைப்பை -ஆட்சி முறையைத் தகர்த்தெறிவதே உழைக்கும் மக்களுக்கான விடுதலையாகும்.

Pin It