மருத்துவர் வாசுதேவன் தன் சொந்த ஊரான மயில்குடிக்கு எத்தனையோ முறை வந்திருக்கிறார். ஆனால் இப்பொழுது வந்திருப்பதோ அவ்வூரில் ஒரு மருத்துவமனை கட்டி, மீண்டும் தன் சொந்த ஊருக்கே குடிவந்துவிடலாம் என்ற எண்ணத்துடன் பார்க்க வந்திருக்கிறார். இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன் தொடக்கக் கல்வியை முடித்துவிட்டு, உயர்நிலைப் பள்ளியில் சேருவதற்காகத் தன் உறவினர்கள் வாழும் நகரத்திற்குச் சென்றார். அப்பொழுது மயில்குடி சுமார் ஓராயிரம் மக்கள் மட்டுமே வாழும் கிராமமாக இருந்தது.

இப்பொழுது ஒன்றரை இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் வாழும் நகரமாக மாறிவிட்டது. இதற்குக் காரணம் அப்பகுதியில் அமைந்த சபேசன் நூல் மற்றும் துணி ஆலைதான். அவ்வாலையில் மட்டுமே சுமார் பத்தாயிரம் பேர்கள் வேலை செய்து கொண்டு இருந்தார்கள். இவ் வாலையை நம்பி வளர்ந்த துணைத் தொழில்கள், வேறு கிராமங்களில் இருந்து வேலை தேடிவரும் மக்களை ஈர்த்து இப்பகுதியை ஒரு நகரமாக மாற்று வதில் தங்களது பங்கைச் செய்தன.

வாசுதேவன் தன் பழைய நினைவுகளை அசை போட்டுப் பார்த்தார்.தான் சிறுவயதில் பார்த்த மரஞ்செடி கொடிகள் நிறைந்த பகுதி வெகுவாகக் குறைந்து போயிருந்தது.ஏரி,குளம் முதலியவை எந்நேரமும் கபளீகரம் செய்துவிடப்படலாம் என்பது போல் ஆங்காங்கே சுகாதாரமற்ற குடிசைப் பகுதிகள்  தோன்றி இருந்தன. தான் மருத்துவமனை கட்டத் தேர்ந்து எடுத்திருக்கும் நிலத்தைச் சுற்றிப் பார்த்தார்.

அவருக்கு அதில் முழுமன நிறைவு கிடைத்தது.இவ்வூரில் முறையாகப் பயின்ற மருத்துவர்கள் யாரும் இல்லை.சித்த வைத்தியம் பார்க் கும் பரம்பரை வைத்தியர்கள் தான் இருந்தனர்.அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் நடக்கும் மருத்துவமனைகள் பேருக்குத்தான் மருத்துவமனைகளாக இருந்தனவே ஒழிய,அதனால் மக்களுக்கு எவ்விதத்திலும் பயன்படாத நிலையில் இருந்தன.

வாசுதேவன் எடுத்த எடுப்பிலேயே மிகப் பெரிய மருத்துவமனையைக் கட்டத் திட்டமிட்டு இருந்தார்.ஆனால் அவருடைய மனைவியோ முதலில் சிறிய அளவில் தொடங்கலாம் என்றும், பின் படிப்படியாக விரிவாக்கம் செய்து கொள்ளலாம் என்றும் கூறிய யோசனையின் பேரில் அவ்வாறே செயல்பட ஒப்புக் கொண்டார்.ஆனால் விரிவாக்கம் செய்ய நினைக்கும் போது நிலம் கிடைக்காமல் போய்விடக் கூடாது என்ற முன்யோசனையுடன் பெரிய அளவில் நிலத்தை வாங்கி விட்டார்.அந்நிலத்தில் முதலில் சிறிய அளவில் ஒரு மருத்துவமனையைக் கட்டி, மருத்துவச் சேவையை ஆரம்பித்தார்.

வாசுதேவன் திறமையான மருத்துவர் மட்டுமல்ல; கைராசியான மருத்துவர் என்றும் அவர் ஏற்கெனவே வேலை பார்த்துக் கொண்டிருக்கும் சென்னையில் பெயர் பெற்றவர். இயந்திரத்தனமான வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டிருக்கும் சென்னையைவிட,தனது சொந்த ஊரான மயில்குடியில் வாழ்வது மனதிற்கு மகிழ்வைத் தரும் என்ற எண்ணத்தில் தனது பணியைத் தொடங்கினார்.ஆரம்பத்தில் அவருடைய மருத்துவ மனையை நாடி மக்கள் பலர் வந்தனர்.

ஆனால் நாள் செல்லச் செல்ல அவரது மருத்துவமனைக்கு வரு வோரின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது.காரணத்தை விசாரித்த போது அவ்வூரில் மருத்துவக் கல்வியை முறையாகப் பயிலாத பலர் மருத்துவம் பார்த்துக் கொண்டு இருந்தது தெரியவந்தது. அவர்களிடம் கட்டணம் குறைவாக இருப்பதால்,மக்களில் பலர் அந்த போலி மருத்துவர்களிடமே சிகிச்சை பெற்றுக் கொண்டு இருப்பது தெரியவந்தது.அதுமட்டுமல்ல; பல நோயாளிகள் மருந்துக் கடைக்காரர்களிடம் இன்ன நோய்க்கு மருந்து வேண்டும் என்று கேட்டு வாங்கி, சுயசிகிச்சை செய்து கொள்பவர்களும் இருப்பது தெரிய வந்தது.

மக்களின் அறியாமையையும்,உடல்நலத்தின் மேல் அக்கறை இல்லாமல் இருப்பதைப் பற்றியும் மருத்துவர் வாசுதேவன் மிகவும் கவலைப்பட்டார்.உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகளிடம் எடுத்துரைத்து, மக்களின் இப்போக்கு தவறானது என்றும், உடல்நலத்தின் மீது அக்கறை கொண்டோர் மருத்துவக் கல்வியை முறையாகக் கற்ற மருத்துவர்களிடம் தான் சிகிச்சை பெறவேண்டும் என்று விளம்பரம் செய்ய வைத்தார்.ஆனால் அப்படிப்பட்ட விளம்பரத்தினால் மிகச் சிறி தளவே பயன் கிட்டியது;கால ஓட்டத்தில் அதுவும் கரைந்து போயிற்று.

தன் சொந்த ஊரில் பெரிய மருத்துவமனை கட்டி நிலைத்து விடவேண்டும் என்ற வாசுதேவனின் ஆசை இலேசாக ஆட்டம் கண்டது. சிறியதாக ஆரம் பிக்காமல் தன்னுடைய எண்ணம் போல மிகப் பெரிய தாக ஆரம்பித்து இருந்தால் என்னவாகி இருக்கும் என்று யோசித்த போது, தன் மனைவியின் முன்யோ சனையை மனதிற்குள் மிகவும் பாராட்டினார்.

மனந்தளராமல் தன் முயற்சியைத் தொடர வேண்டும் என்று நினைத்த அவர் தனதுத கட்டணத்தைக் குறைத்துக் கொள்ளலாமா என்று யோசித்தார். ஆனால் தான் மருத்துவமனை கட்டியதற்கும், கருவிகள் வாங்கு வதற்கும் ஈடுபடுத்தி உள்ள மூலதனத்தைக் கணக்கிட்டுப் பார்த்த போது,கட்டணத்தை ஓரளவிற்குத்தான் குறைத்துக் கொள்ள முடியும் என்று தெளிவாகத் தெரிந்தது.

ஆனால் அப்படிக் கட்டணத்தைக் குறைப்பதால்,போலி மருத்து வர்களிடம் சிகிச்சை பெறச் செல்லும் மக்களைத் தன் பக்கம் கவர முடியாது என்பதைத் தெரிந்து கொண்டார்.அப்படி என்றால் இதை அப்படியே விட்டுவிட்டு மீண்டும் சென்னைக்குச் சென்று விடுவதா? அவருடைய மனம் எளிதாக ஒப்பவில்லை. தன் வாழ்க்கையைத் தன் சொந்த ஊரிலேயே தொடருவதற்கு ஏதாவது வழி செய்ய முடியுமா என்று யோசித்தார்.

அவருக்குத் தோன்றிய யோசனையின்படி,அப் பகுதியில் இருந்த சபேசன் நூல் மற்றும் துணி ஆலை யின் முதலாளியைச் சந்தித்தார். அப்பகுதியில் உள்ள மக்கள், அதாவது அவரது ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்களும்,பிற பணியாளர்களும் உட்பட,மிகப் பெரும்பாலோர் தங்கள் உடல்நலத்தின் மேல் அக்கறை இல்லாமல் இருக்கும் நிலையை விவரித்தார்.முதலாளி வாசுதேவனின் பேச்சை வேண்டா வெறுப்பாகக் கேட்டுக் கொண்டு இருந்தார்.முதலாளியின் முகத்தில் எந்தவிதப் பிரதிபலிப்பும் இல்லாததைப் பார்த்த வாசுதேவன்,இந்நிலை தொடர்ந்தால் தொற்று நோய்கள் பரவி அந்நகரமே வாழ்வதற்குத் தகுதியற்ற இடமாகிவிடும் என்று கூறவும்,முதலாளியின் முகத்தில் அப்படி எதுவும் நடக்காத போது நாமாக ஏன் ஏதாவது கற்பனை செய்துகொள்ள வேண்டும் என்று கேட்பது போன்று பிரதிபலிப்புத் தெரிந்தது.

இதனால் மனம் சங்கடப்பட்டுப் போன வாசுதேவன்,குரலைச் சற்றுத் தாழ்த்திக் கொண்டு, அவருடைய ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்களும், பிற பணி யாளர்களும் மருத்துவக் கல்வி பயிலாதவர்களிடம் செய்து கொள்ளும் சிகிச்சைக்கு, ஆலையின் நல நிதியில் இருந்து பணம் வழங்கலாகாது என்றும்,தன்னைப் போன்று மருத்துவக் கல்வி பயின்ற மருத்துவர்களிடம் பெறும் சிகிச்சைக்குத்தான் பணம் தரப்படும் என்று விதியை ஏற்படுத்தினால் நல்லது என்று கேட்டுக் கொண்டார்.இதற்கும் முதலாளியிடம் இருந்து நல்ல பதில் கிடைக்கவில்லை.தன்னிடம் வேலை பார்ப் பவர்களுக்கு மாதந்தோறும் மருத்துவச் செலவுப்படி அளித்துவிடுவதாகவும்,அவர்கள் யாரிடம் சிகிச்சை செய்து கொள்கிறார்கள் என்றோ,சிகிச்சையே செய்து கொள்ளாமல் இருப்பதைப் பற்றியோ தான் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை என்றும் கூறிவிட்டார்.இம் முறையை மாற்றினால் தனக்குக் கூடுதல் செலவாகும் என நினைப்பதால் அதை மாற்றும் உத்தேசம் இல்லை என்றும் கூறிவிட்டார்.

முதலாளியின் பதில் வாசுதேவனை ஏமாற்றத் திற்கு உள்ளாக்கியது.பேசாமல் விடைபெற்றுக் கொள்ளலாமா என்று நினைத்தபோது அவருக்கு ஒரு யோசனை தோன்றியது.ஆனால் அந்த யோசனை யால் தனக்கு ஆதாயம் இருப்பதும், அந்தமுதலாளிக்கு எந்தவிதமான ஆதாயமும் இல்லாமல் இருப்பதால் அதை ஏற்றுக்கொள்வாரா என்று சந்தேகம் ஏற்பட்ட தால் அதைச் சொல்லத் தயங்கினார். இருந்தாலும் சொல்வதைச் சொல்லி வைப்போம்;நடப்பது நடக் கட்டும் என்று முடிவு எடுத்து அதைக் கூறினார்.

அந்த யோசனை இதுதான்.அந்த ஆலை முதலாளி,தொழிலாளர்களுக்கும்,பிற பணியாளர்களுக்கும் அளிக்கும் மருத்துவச் செலவுப்படியை ஒரு மருத்துவக் காப்பீட்டு நிறுவனத்திற்கு அளித்து விடுவது.அத்தொழிலாளர்களும்,பிற பணியாளர்களும் நோய்வாய்ப்படும் போது இவர் சிகிச்சை அளித்துவிட்டு,அந்தக் காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து சிகிச்சைக்குரிய பணத்தைப் பெற்றுக் கொள்வது.இப்படிச் செய்வதால் முதலாளிக் குக் கூடுதலாக எந்தச் செலவும் ஆகப் போவதில்லை;கூடவே தரமான சிகிச்சை தர ஏற்பாடு செய்திருப்ப தாகக் கூறிக்கொள்ள முடியும்.

இந்த யோசனையைக் கூறிய உடன் வேண்டா வெறுப்பாகவே பேசிக்கொண்டு இருந்த முதலாளியின் முகத்தில் ‘பளிச்’என்று ஒரு ஒளி பிறந்தது.அதைப் பார்த்த வாசுதேவன் சிறிது நம்பிக்கையுடன் முதலாளியின் பதிலை எதிர்நோக்கினார். முதலாளி, தான் இந்த யோசனையை ஏற்றுக் கொள்வதாகவும், கூடிய விரைவில் அதைச் செயல் படுத்துவதாகவும் கூறி அனுப்பி வைத்தார்.இந்த யோசனையை ஆலை முதலாளி ஏற்றது குறித்து வாசுதேவன் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தார்.

முதலாளியின் மைத்துனர் காப்பீட்டு நிறுவனத்தை நடத்துவதையும்,இந்த யோசனையால்,தன்மைத் துனருக்கு உதவ முடிவதால் அதை அவர் ஏற்றுக் கொண்டார் என்பதையும் வாசுதேவன் அப்போது அறியவில்லை.

மருத்துவர் வாசுதேவனின் மருத்துவக் காப்பீட்டு யோசனை அவ்வாலையில் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்,அவருடைய மருத்துவமனையில்அவ்வாலைத் தொழிலாளிகள் சிகிச்சை பெற வரத் தொடங்கினார்கள்.ஆனால் சிகிச்சைச் செலவு அனைத்தையும் காப்பீட்டு நிறுவனம் ஏற்றுக்கொள்ள மறுத்தது.பலப்பல விதி களை மேற்கோள்காட்டி,சிகிச்சைச் செலவின் ஒரு பகுதியை மட்டுமே அளித்தது.மிகுதியை நோயாளி களே செலுத்த வேண்டி வந்தது.

வாசுதேவனைப் பொறுத்தமட்டில்,காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்தோ,நோயாளிகளிடம் இருந்தோ,எப்படியோ தனக்கு வர வேண்டிய பணம் வந்து கொண்டு இருக்கிறது என்ப தனால் சற்று மன அமைதியுடன் இருந்தார்.ஆனால் இம்மருத்துவமனையைப் பெரிதாக வளர்க்க வேண்டும் என்ற அவருடைய கனவு அவரை வாட்டிக் கொண்டே இருந்தது.

வாசுதேவன் இவ்வாறு வாடிக்கொண்டு இருந்த வேளையில்,சபேசன் ஆலையின் தொழிலாளர்கள் தங்களுக்கு மருத்துவக் காப்பீட்டு முறை வேண்டாம் என்றும்,பழையபடி மருத்துவச் செலவுப்படியே அளித்திடுமாறும் கோரிக்கை வைத்தனர்.ஆனால் முதலாளி அக்கோரிக்கையை நிராகரித்துவிட்டார்.

முதலாளியின் இம்முடிவை அறிந்து வாசுதேவன் மகிழ்ச்சி அடைந்தார்.ஆனால் அவருடைய மகிழ்ச்சி கால ஓட்டத்தில் கரைய ஆரம்பித்தது. மயில்குடியின் மொத்த மக்கட்தொகையில் பாதிப்பேர் சபேசன் ஆலை ஊழியர்களின் குடும்பத்தினர் ஆவர்.வாசுதேவன் மருத்துவமனையில் தான் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இல்லாதவர்களுள் மிகப் பெரும்பாலோர் முறையான கல்வி பெறாத போலி மருத்துவர்களிடமே சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தனர்.

அப்படிப்பட்ட நிர்ப்பந்தம் உள்ள மக்களும்,இங்கு சிகிச்சை பெறுவதில் எப்படியும் அதிக செலவு தான் ஆகிறது என்பதைத் தெரிந்துகொண்டு,மெது மெதுவாக முறையாகப் பயிலாத போலி மருத்துவர் களையே நோக்கி நகர ஆரம்பித்தனர்.சிறிது காலத் தில் பழைய நிலைமை அடைந்துவிட்டது.கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது வாசுதேவனின் காப்பீட்டு யோசனையால்,சபேசன் ஆலை முதலாளியின் மைத்துனர் தான் ஆதாயம் அடைந்து கொண்டிருந்தார்.தொழிலாளர்கள் எத்தனையோ இழப்புகளிடையில்,மருத்துவப்படி இழப்பையும் ஒன்றாக நினைத்துப் பழகிப் போயிருந்தனர்.

மருத்துவர் வாசுதேவன் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள மீண்டும் ஏதாவது செய்ய வேண்டியதா யிற்று. அப்படி யோசித்துக் கொண்டு இருக்கையில் போலி மருத்துவர்களைப் பற்றிக் காவல் துறையில் புகார் கொடுக்கலாம் என்று முடிவெடுத்து அவ்வூர்க் காவல்துறை ஆய்வாளரைக் கண்டார். வாசுதேவனின் புகாரைக் கேட்டவுடன் ஆய்வாளர் ஒரு வறட்டுச் சிரிப்பை உதிர்த்தார்.

“இதப் பாருங்க டாக்டர் சார். போலீ°காரங்களாலே கிரிமினல் கம்ப்ளெய்ன்டாய்த்தான் டீல் பண்ண முடியும். நீங்க சொல்றதுலே கிரிமினல் ஆக்ஷன் எதுவுமே இல்லியே?”

“என்ன சார்! அப்படிச் சொல்றீங்க? இந்தப் போலி டாக்டருங்க அரைகுறையா வைத்தியம் பார்க்குறது உயிருக்கே ஆபத்து இல்லியா? அது கிரிமினல் குற்றம் ஆகாதா?”

“டாக்டர் சார்! அப்படி யாராச்சும் செத்துப் போயி ருக்காங்களா?”

“அது... அது தெரியலே. ஆனா அரைகுறையா வைத்தியம் பார்க்குறது தப்பு தானே?”

“டாக்டர் சார்! அவங்க வைத்தியம் பார்த்து யாரும் செத்துப்போனதா உங்களுக்கே தெரியலே. அப்படியே செத்துப் போயிருந்தாலும் அதுக்கான மோடிவ் இருந் தாத்தான் கிரிமினல் குற்றம்னு ஆக்ஷன் எடுக்க முடியும்.நீங்க சொல்ற மாதிரி அரைகுறை வைத்தியம் செய்தார்னு அவங்ககிட்டே வைத்தியம் பார்த்துக்கிட்ட வங்க கம்ப்ளெய்ன்ட் செஞ்சா ஆக்ஷன் எடுக்குறதைப் பத்திப் பார்க்கலாம்.”

தனக்கும் காவல்துறை ஆய்வாளருக்கும் நடந்த இந்த உரையாடலில் மருத்துவர் வாசுதேவன் ஏமாற்றமே அடைந்தார்.

“அப்படீன்னா நல்ல டாக்டர்களுக்கு மரியாதையே இல்லியா?” என்று வாசுதேவன் பரிதாபமாகக் கேட்ட வுடன், ஆய்வாளருக்குச் சிரிப்பு வந்தது. ஆனால் அடக்கிக் கொண்டார். “சார் நான் இன்ஸ்பெக்டரா இல்லாம, நீங்க டாக்டரா இல்லாம ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸா கொஞ்சம் பேசுவோமா?” என்று கேட்டதற்கு வாசுதேவன் ஒப்புக் கொண்டார்.

“சார்! நீங்க ஹெவியா சார்ஜ் பண்றதால தானே ஜனங்க உங்ககிட்ட வராம, கம்மியா பணம் கேக்குற போலி டாக்டருங்க கிட்ட போறாங்க?நீங்க கொஞ்சம் கம்மியா சார்ஜ் பண்ண முடியாதா?”

“நம்ம நல்ல எக்யூப்மெண்ட்° வச்சிருக்கோம். அதுகள்ளே இன்வெஸ்ட் பண்ணி இருக்கிற பணம் இதுகளை எல்லாம் பாத்தா நம்ம கம்மியாத்தான் சார்ஜ் பண்றோம்.”

“ஆனா நோயாளிங்களுக்கு குணம் ஆகுதான்னு தான் பிரச்சினையே தவிர, பெரிய பெரிய எக்யூப் மெண்ட்ஸ்லே டெஸ்ட் பண்றதப் பத்தி அவங்க ஏன் கவலைப்படப் போறாங்க?”

“அப்படிச் செய்றதுதான் சரியா இருக்கும். காசு செலவாகக் கூடாதுன்னு அரைகுறையா டெஸ்ட் பண்ணி மருந்து சாப்பிட்டா பின்னாலே பெரிய பிரச்சினையிலே போயி முடியும் இன்°பெக்டர் சார்.”

“டாக்டர் சார்! நீங்க பின்னாலே வர்ர பிரச்சினையைப் பத்திப் பேசறீங்க. அவங்க உடனடிப் பிரச்சினை கையிலே பணம் இல்லேங்குறதுதான்.அது சால்வ் ஆயிடுச்சுன்னா,அவங்க பின்னாலே வரப்போற பிரச்சி னையைப் பத்தி யோசிப்பாங்க.இந்தப் போலி டாக்ட ருங்களுக்கு மவுசு கொறஞ்சிடும்.உங்களைப் போல நல்ல டாக்டருங்களத் தேடி அவங்களாவே வருவாங்க.”

“அதுக்காக அவங்களுக்கெல்லாம் சம்பள உயர்வு கொடுக்கணும்னு நான் கேக்க முடியுமா?”
“இதுதான் டாக்டர் இதுலே உள்ள சிக்கல்”

“ஆனா சென்னையில் எல்லாம் இப்படி இல்லியே?”

“எப்படி இல்லே?”

“அங்கே எல்லாம் நிறைய பேர் எங்கள மாதிரி படிச்ச டாக்டருங்க கிட்டே வைத்தியம் பார்த்துக்கிறாங்களே?”

“அப்படீன்னா சென்னையிலே போலி டாக்டருங்களே இல்லேன்னு சொல்றீங்களா?”

“ம்..ம்..ம்.. அப்படி இல்லே இன்ஸ்பெக்டர். அங் கேயும் போலி டாக்டருங்க இருக்காங்க. ஆனா எங்கள மாதிரி படிச்சவங்க கிட்டே நெறைய ஜனங்க வர்ராங்க”

“அதுதான் டாக்டர்! அங்கே பலதரப்பட்ட ஜனங்க இருக்காங்க. இங்கே அப்படி இல்லே. இன்னும் பாப்புலேஷன் பெருத்துப் போச்சுன்னா இங்கேயும் பலதரப்பட்ட ஜனங்க வந்துடுவாங்க”

“இன்°பெக்டர்! அப்படீன்னா எல்லா மக்களும் நல்ல ஆரோக்கியமா இருக்கிற மாதிரி பண்ணவே முடியாதா?”

“ஏன் முடியாது? ஹெல்த் செர்வீஸ் முழுக்க முழுக்க இலவசமா ஆக்கிட்டா எல்லோருக்கும் ஹைடெக் ட்ரீட்மெண்ட் பண்ண முடியுமே!”

“அது எப்படி இன்ஸ்பெக்டர் முடியும்? ஒரு கேபிட் டலிஸ்ட் கன்ட்ரியிலே எப்படி இதையெல்லாம் இலவச மாகக் கொடுக்க முடியும்?”

“அதுதான் பாயின்ட் டாக்டர். கேபிட்டலிச்ட் சொஸைட்டியிலே இதெல்லாம் முடியாது தான். ஆனா ஜனங்க நெனச்சா முடியும்.”

“அது எப்படி முடியும்?”

“பிரிட்டன் கேபிட்டலிஸ்ட் கன்ட்ரி தானே?”

“ஆமாம் இன்ஸ்பெக்டர்”

“அங்கே ஹெல்த் செர்வீஸ்-அதுவும் ஹைடெக் ட்ரீட்மென்ட் ஃபிரீயா இருக்கே?”

“ஆமா, கேள்விப்பட்டிருக்கேன். ஆனா...”

“அதுதான் டாக்டர்... அந்த ஆனாதான் நம்மளை எதுவும் செய்ய முடியாம தடுக்குது?”

“அதில்லே இன்ஸ்பெக்டர். அப்படி எல்லாமே இல வசமாப் பண்ணிட்டா டாக்டர்கள் எல்லாம் வேலைக்குத் தான் போகணும்.ஒரு பெரிய ஹாஸ்பிடல் கட்டி பெரிய அளவில் முன்னேற முடியாதே?”

“நீங்க மக்களுக்கு நல்ல செர்வீஸ் கெடைக்கணும்னு நெனைக்கிறீங்களா? அல்லது நீங்க பெரிய அளவில் முன்னேறணும்னு நெனைக்கிறீங்களா?”

ஆய்வாளரின் கிடுக்குப்பிடியில் சிக்கிக் கொண்ட வாசுதேவன் பதில் கூற முடியாமல் தத்தளித்தார். சிறிது நேரத்திற்குப்பின் “இரண்டிற்கும் தான்” என்று மெதுவாகப் பதிலளித்தார்.

“அது இலவச மருத்துவத்தில் தான் முடியும். அட்மினிஸ்ட்ரேஷன் பத்திய கவலை இல்லாம உங்க சப்ஜெக்ட்லெ கவனம் செலுத்தணும்னா அது இலவச மருத்துவத்திலேதான் முடியும். இப்ப இருக்கிற பெரிய பெரிய ஹாஸ்பிடல்லே பாருங்க.அதை ஆரம்பிச்ச டாக்டருங்க அட்மினிஸ்ட்ரேஷன மட்டும் தான் பார்க்குறாங்க”என்று கூறிய ஆய்வாளரை வாசுதேவன் பரிதாபமாகப் பார்த்தார்.

இந்த உரையாடலிலிருந்து வாசுதேவன் ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொண்டார். மருத்துவம் மருத்துவ மாகச் செயல்பட வேண்டும் என்றால், அது இலவச மாக இருந்தால் மட்டுமே முடியும்.மருத்துவம் இலவச மாக இல்லாவிட்டால் போலி மருத்துவர்களைத் தடுக்க முடியாது என்பதையும்,படித்த மருத்துவர்கள் மருத்துவ வேலை பார்ப்பதற்கு ஊக்கம் இருக்காது என்பதையும் புரிந்து கொண்டார்.

இப்போது இலவச மருத்துவத்திற்கு நாட்டில் வாய்ப் பில்லை என்பதால் தான் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி யோசித்தார்.தன்னால் ஏற்கெனவே தொழில் செய்ய முடிந்த சென்னைப் பெருநகருக்கே போய்விடலாம் என்று முடிவெடுத்தார்.   

Pin It