இருபதாம் நூற்றாண்டைப் ‘புரட்சியின் நூற்றாண்டு’ என வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். 1917இல் லெனின் தலைமையில் இரஷ்யாவில் புரட்சி வெற்றி பெற்றது. சோசலிச அரசு அமைக்கப்பட்டது. சோசலிச சோவியத் நாட்டின் எழுச்சி அய்ரோப்பிய முதலாளித்துவ நாடுகளிலும், வடஅமெரிக்காவிலும் அதிர் வலைகளை உண்டாக்கியது.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆசியா மற்றும் ஆப்பிரிக்கக் கண்டங்களின் பெரும்பாலான நாடுகள் அய்ரோப்பிய முதலாளித்துவ - ஏகாதிபத்திய நாடுகளின் நேரடி ஆட்சியில் அல்லது அவற்றின் கட்டுப் பாட்டில் இருந்தன. எனவே காலனிய ஆதிக்கத்திலிருந்து விடுதலை - தேசிய இனங்களின் விடுதலை என்ற பெயர்களில் பல நாடுகளில் சுதந்தரப் போராட்டங்கள் வீறுடன் நடந்தன. முதல் அரை நூற்றாண்டில் இரண்டு உலகப் போர்கள் நடந்தன. இரண்டாம் உலகப் போருக்குப் (1939-1945) பின் படிப்படியாக இந்தியா உள்ளிட்ட நாடுகள் காலனிய ஆட்சியிலிருந்து விடுதலை யாயின. 1949இல் சீனத்தில் மாவோ தலைமையில் சோசலிச அரசு அமைக்கப்பட்டது. உலக நாடுகளின் எல்லைகளும், அரசியலும், ஆட்சிமுறைகளும் மாற்றிய மைக்கப்பட்டன.

இந்தப் பின்னணியில் உலகில் பல நாடுகளில் மாபெரும் தலைவர்கள் உருவானார்கள். இரண்டாம் உலகப் போரின் போது இட்லர், முசோலினி, வின்சன்ட் சர்ச்சில், ஸ்டாலின், அய்சநோவர் ஆகியோர் உலகம் முழுவதும் பேசப்பட்டார்கள்.

ஆனால் என்றென்றும் பேசப்படக்கூடிய, மதிக்கப்படக் கூடிய தன்மையிலான தலைவர்கள் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்தார்கள். அப்பட்டியலில் லெனின், காந்தியார், மாசேதுங், நெல்சன் மண்டேலா ஆகியோர் முதன்மையானவர்கள். தன் மக்களின் விடுதலைக்காக - சுதந்தரத்திற்காக - நாட்டின் சனநாயகத்திற்காக 27 ஆண்டுகள் - பத்தாயிரம் நாள்கள் சிறையில் இருந்த-ஒப்பரிய போராளி நெல்சன் மண்டேலா 2013 திசம்பர் 5 அன்று தன் 95ஆம் அகவையில் மறைந்தார். இருபதாம் நூற்றாண்டின் வரலாற்றில் பெருமிதமான இறுதி அத்தியாயம் முடிந்துவிட்டது.

நெல்சன் மண்டேலா 1918 சூலை 18 அன்று எம்வெசோ எனும் சிற்றூரில் பிறந்தார். அவருடைய இயற்பெயர் ரோலிலாலா மண்டேலா என்பதாகும். ரோலிலாலா என்ற சொல்லுக்குக் கலகக்காரன் என்று பொருள். மண்டேலா என்ற சொல் அவருடைய தாயின் குடும்பப் பெயராகும். குனு என்ற ஊரில் ஏழாம் அக வையில் மண்டேலா தொடக்கப் பள்ளியில் சேர்ந்த போது, அவருடைய ஆசிரியர் நெல்சன் என்ற பெயரைச் சேர்த்தார். மேலும் அப்போது பள்ளியில் சேரும் கருப் பினச் சிறுவர்களுக்கு அவர்களின் இயற்பெயருடன் ஆங்கிலேயர்களிடையே வழக்கில் உள்ள ஒரு பெயரை இணைப்பது வழக்கமாக இருந்தது.

மண்டேலாவின் தந்தை 19ஆம் நூற்றாண்டின் அரச குடும்பத்தின் வழிவந்த தெம்பு இனக்குழுவுக்கு ஆலோசகராக இருந்தார். மண்டேலா ஒன்பது அகவை யினராக இருந்தபோது அவரது தந்தை இறந்துவிட்டார். அதனால் அந்த அரச குடும்பம் மண்டேலாவைத் தத் தெடுத்துக் கொண்டது. 1934இல் எங்கோபோவில் இருந்த கிளர்க்பரி உண்டு உறைவிடப் பள்ளியில் சேர்ந்தார். 1939இல் போர்ட் ஹாரே பல்கலைக்கழகக் கல்லூரியில் சேர்ந்தார். குத்துச்சண்டை, பளுதூக்கு தல் ஆகிய விளையாட்டுகளில் ஆர்வமுடன் பங்கேற்றார். உணவு சரியில்லை என்று மாணவர்கள் போராட்டம் நடத்தினர். மாணவர் பிரதிநிதிகளில் ஒருவராக மண்டேலா இருந்ததால் 1940ஆம் ஆண்டு கல்லூரியிலிருந்து ஓராண்டுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டார்.

அதனால் குனுவில் தன் தாய்வீட்டிற்குத் திரும்பினார். ஆனால் அங்கு அரச குடும்பத்தினர் மண்டேலாவுக்குக் கட்டாயப்படுத்தித் திருமணம் செய்ய முனைந்தனர்.

அதனால் குனுவிலிருந்து வெளியேறி ஜோகன்ஸ் பர்க் நகரத்துக்குச் சென்றார். அங்கு ஒரு தங்கச் சுரங் கத்தின் நுழைவாயில் இரவு காவலாளியாகச் சிறிது காலம் பணியாற்றினார். பிறகு வழக்குரைஞர் ஒரு வரிடம் எழுத்தராக வேலை செய்தார். 1942 இறுதி யில் பி.ஏ. பட்டம் பெற்றார்.

மண்டேலா 1943இல் விட்ஸ் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பில் சேர்ந்தார். தென்னாப்பிரிக்காவின் கருப்பின மக்களின் விடுதலைக்காக உழைக்க வேண் டும் என்ற மண்டேலாவின் எண்ணத்திற்கு வால்டர் சிசுலுவினுடனான தொடர்பு மேலும் உரமூட்டியது. இக்கருத்துடைய பலர் அடிக்கடி வால்டர் சிசுலு வீட் டிற்கு வந்தார்கள். நீண்ட கருத்துரையாடல்கள் நடக் கும். வால்டர் சிசுலு இல்லத்தில் அன்டோன் லெம் பெடேவை மண்டேலா முதன்முதலாகச் சந்தித்தார். அவர் முதுகலைப் பட்டமும் சட்டத்தில் பட்டமும் பெற்றி ருந்ததுடன் சிறந்த அறிவாளியாகவும், தீரமான செயல் வீரராகவும் இருந்தார். மண்டேலா அவர்பால் ஈர்க்கப் பட்டார்.

ஆப்பிரிக்கத் தேசியக் காங்கிரசுக் கட்சியின் தலை வராக இருந்த மருத்துவர் எக்ஸ்யுமாவை சிசுலு, லெம்பெடே, மண்டேலா மற்றும் சில தோழர்கள் ஒரு குழுவாகச் சென்று அவருடைய இல்லத்தில் சந்தித் தனர். கட்சியின் அரசியல் செயற்பாடுகளை முடுக்கி விட இளைஞர் அணியை அமைக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினார்கள். அரசுக்கு விண்ணப் பங்கள் அளித்தல், விவாதிப்பதன் மூலம் உரிமை களைப் பெறுதல் என்ற அளவில் மட்டுமே கட்சியின் செயல்பாடுகள் இருக்கவேண்டும் என்று கட்சித் தலைவர் கருதினார். எனவே இளைஞர் அணி அமைத்தல் என்ற கோரிக்கையை ஏற்க மறுத்தார்.

அதனால் 1944 ஈஸ்டர் ஞாயிறு நாளில் லெம்பெ டேவைத் தலைவராகக் கொண்ட இளைஞர் அணியை அமைத்தனர். சிசுலு பொருளாளரானார். மண்டேலா செயற்குழு உறுப்பினராக இருந்தார். இளைஞர் அணி யின் குறிக்கோள்களை விளக்கி ஓர் அறிக்கையை வெளியிட்டனர். வெள்ளை இன ஆட்சியின் ‘தர்மகர்த்தா’ கோட்பாட்டை ஏற்க மறுப்பதாகக் கூறினர். கடந்த நாற்பது ஆண்டுகளில் கருப்பின மக்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட சட்டநடவடிக்கைகளைப் பட்டியலிட்டிருந் தனர். 1913ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நிலச்சட்டம், நாட்டின் மக்கள் தொகையில் பத்து விழுக்காடாக உள்ள வெள்ளையரிடம் 87 விழுக்காடு நில உரிமை கொடுத் தது. 1923இல் கொண்டுவரப்பட்ட சட்டம் கருப்பினத் தவர் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே வாழ வேண்டும் என்று வரம்பிட்டது. 1926இல் அறிவுநுட்பம் சார்ந்த பணிகள் கருப்பினத்தவர்க்கு மறுக்கப்பட்டன.

1944ஆம் ஆண்டில் வால்டர் சிசுலு வீட்டில், எவெலின் மசோ என்ற இளம்பெண்ணைக் கண்டார் மண்டேலா. அவர் செவிலியர் படிப்புப் படித்திருந்தார். விரைவில் மண்டேலாவும் எவெலினும் காதலர் களாயினர். அதே ஆண்டில் ஜோகன்ஸ் பர்க்கில் திரு மணம் செய்துகொண்டனர். இரண்டு ஆண் குழந்தைகள், இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தனர். ஆனால் மண்டேலா தன் அரசியல் நடவடிக்கைகள் காரணமாக இரவில் நேரம் கழித்து வருவதும், விடியற்காலையி லேயே வீட்டை விட்டுச் செல்வதுமாக இருந்தார். வாழ்நாள் முழுவதும் மண்டேலா விடியற்காலை மூன்று மணிக்கே விழித்தெழும் பழக்கத்தைக் கொண்டிருந்தார்.

குடும்பத்துக்குரிய நேரத்தை ஒதுக்காமல் மண்டேலா அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டமை அவருடைய மனைவிக்குப் பெரும் மனஉளைச்சலைக் கொடுத்தது. அதேசமயம் மண்டேலாவால் அவரை அமைதிப்படுத் தவும் முடியவில்லை. “நான் வேண்டுமா? அல்லது கட்சி வேண்டுமா? என்று முடிவு செய்” என்று மண்டே லாவின் மனைவி திட்டவட்டமாகக் கூறிவிட்டார். கருப்பின மக்களின் விடுதலைக்கே முதன்மை என மண்டேலா முடிவு செய்ததால், 1955இல் மணவிலக்கு ஏற்பட்டது. அதனால் குழந்தைகள் மிகவும் பாதிக்கப் பட்டனரே என்று ஒரு அன்பான தந்தையாக மண்டேலா மிகவும் மனம் வருந்தினார்.

கருப்பின மக்களின் விடுதலைப் போராளியாக இருந்த வின்னியை 1958 சூன் 11 அன்று மண்டேலா திருமணம் செய்து கொண்டார். “ஒரு சிறைப் பறவை யைத் திருமணம் செய்து கொள்கிறாயே” என்று வின்னி யின் தந்தையார் அப்போது கூறினார். அதன்பிறகு தான் மண்டேலா 27 ஆண்டுகள் சிறையில் இருந்தார். வின்னிக்கு இரண்டு பெண் மக்கள் பிறந்தனர். வின் னிக்குக் காவல் துறையும் அரசும் திட்டமிட்டுப் பலவகை யான தொல்லைகளையும் துன்பங்களையும் கொடுத்தன. ஒரு பெண் புலி போல் அவற்றையெல்லாம் வின்னி எதிர்கொண்டார்.

1994இல் வெளியிடப்பட்ட “சுதந்தரத்திற்கான நீண்ட நடைப்பயணம்” என்ற தன்வரலாறு நூலில் மண்டேலா, “ஒரு சுதந்தரப் போராட்ட வீரரின் மனைவி, தன் கணவர் சிறையில் இல்லாத நிலையில்கூட, கணவனை இழந்த கைம்பெண் போன்ற வாழ்நிலை யில் இருக்க வேண்டியுள்ளது. நான் இழந்ததைவிட என் குடும்பம் அதிகமாக இழந்தது. 27 ஆண்டுகள் சிறை வாழ்க்கையில் நான் ஏற்ற துன்பங்களைவிட, என் மனைவியரும், குழந்தைகளும் அதிக அளவில் துன்பங்களை ஏற்றனர்” என்று பல இடங்களில் நெஞ்சு நெகிழப் பதிவு செய்துள்ளார்.

வின்னியின் இரண்டாவது மகள் தன் திருமணத் தின் போது, “எங்கள் தந்தை எப்போது சிறையிலிருந்து விடுதலையாகி வந்து எங்களுடன் இருப்பார் என்று ஏங்கி எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். ஆனால் அவர் எங்கள் தந்தையாக மட்டுமின்றி, தேசத்தின் தந்தையாகவும் வந்ததால், எம்முடன் இருக்க இயலாமல் எம்மை விட்டுச் சென்றுவிட்டார்” என்று கூறினார். மண்டேலாவும், “ஒரு நாட்டின் தந்தை என்ற நிலை பெருமைக்குரியதுதான். அதேசமயம் குடும்பத்தின் தந்தை என்பது மகிழ்ச்சிக்குரியது. ஆனால் இந்த இரண்டாவது மகிழ்ச்சி எனக்கு மிகச் சிறளிதளவே கிடைத்தது” என்று தன்வரலாறு நூலில் குறிப்பிட் டுள்ளார். எப்போதும் தன் நாட்டின், மக்களின் நலனை யே முன்னிறுத்தி வாழ்ந்த மண்டேலா, ஒப்பரிய போராளியாக வாழ்ந்த தன் வாழ்க்கைத் துணைவி யான வின்னியை, நாட்டின் நலனை முன்னிறுத்தி, 1992 ஏப்பிரல் 13 அன்று மணவிலக்குச் செய்தார்.

1946ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் அதிபராக இருந்த ஸ்மட்ஸ், ஆசிய மக்களின் நில உரிமைச் சட்டம் என்பதை அறிவித்தார். அச்சட்டம், இந்தியர்கள் சுதந்தரமாக நடமாடுவதைக் கட்டுப்படுத்தியது. இந்தி யர்கள் எந்த இடத்தில் வாழ வேண்டும்; வணிகம் செய்ய வேண்டும் என்கிற வரம்புகளை விதித்தது. மேலும் இந்தியர்கள் சொத்துகளை வாங்குவதற்குக் கடுமையான நிபந்தனைகளை விதித்தது. இச்சட்டத்தை எதிர்த்து நேட்டால் இந்திய காங்கிரசின் தலைவரான மருத்துவர் ஜி.எம். நாயக்கர், மருத்துவர் யூசுப் தாதே தலைமையில், இந்திய வம்சாவளி மக்கள் இரண்டு ஆண்டுகள் மிகவும் கட்டுக்கோப்பான முறையில் போராட்டங்களை நடத்தினர். மாணவர்கள், இளை ஞர்கள், வீட்டில் இருந்த பெண்கள், வழக்குரைஞர்கள், மருத்துவர்கள், தொழிலாளர்கள் என எல்லாத் தரப்பு இந்திய வம்சாவளியினரும் மாபெரும் பேரணிகளை - பொதுக்கூட்டங்களை நடத்தினர். சத்தியாக்கிரக முறை யில் மறியல்கள் செய்தனர். யூசுப் தாதோவுக்கும், நாயக்கருக்கும் ஆறு மாதங்கள் கடுங்காவல் தண்ட னை விதிக்கப்பட்டது.

இந்தியர்கள் கட்டுப்பாடான இயக்க உணர்வுடனும் போர்க்குணத்துடனும் நடத்திய போராட்டம் மண்டே லாவை மிகவும் ஈர்த்தது. காந்தியார், தென்னாப் பிரிக்காவில் நடத்திய சத்தியாக்கிரகப் போராட்டத்தைக் கேள்விப்பட்டிருந்த மண்டேலா, அதை அப்போது தன் கண்முன்னே கண்டு வியந்தார்.

காந்தியார் 1891இல் இலண்டனில் வழக்குரைஞர் படிப்பை முடித்து இந்தியாவுக்குத் திரும்பினார். தென்னாப்பிரிக்காவில் இந்திய வம்சாவளியினரான ஒரு முசுலீம் வணிகரின் வழக்கில் வாதாடுவதற்காக ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் 1893 மே மாதம் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்றார். இனவெறி அரசின் கொள்கைகளால் காந்தியார் பலவகையிலும் அவமா னப்படுத்தப்பட்டார்; துன்பங்களுக்கு ஆளானார். அதனால் தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த இந்திய வம்சாவளியினரின் உரிமைகளுக்காக 1907 முதல் பலவகையான சத்தியாக்கிரகப் போராட்டங்களை நடத்தினார். சிறை ஏகினார். இப்போராட்டங்களில் தமிழர்கள் முன்னிலை வகித்தனர். 1914 திசம்பரில் தென்னாப்பிரிக்காவிலிருந்து நிலையாக விடைபெற்றுத் திரும்பிய காந்தியார் 1915 சனவரி 9 அன்று இந்தி யாவில் மும்பை வந்தடைந்தார். மொத்தம் 21 ஆண்டுகள் காந்தியார் தென்னாப்பிரிக்காவில் வாழ்ந் தார். “மோகன்தாசு கரம்சந் காந்தியாக, தென்னாப் பிரிக்காவுக்கு வந்த காந்தி, மகாத்மா காந்தியாக இந்தியாவுக்குத் திரும்பினார்” என்று நெல்சன் மண்டேலா அழகாகப் பதிவு செய்துள்ளார்.

1949இல் வெள்ளை இனவெறி அரசு, ஒரு இனத்தவர், இன்னொரு இனத்தவரைத் திருமணம் செய்துகொள்ளக் கூடாது என்று சட்டம் இயற்றியது. அதேபோன்று ஒவ்வொரு இனத்தவரும் தனித்தனி யான பகுதிகளில் இன அடிப்படையில்தான் குடியிருக்க வேண்டும். கருப்பினத்தவர் அடையாள அட்டையுடன் தான் எப்போதும் இருக்க வேண்டும். இதுவே இன ஒதுக்கல் ((Apartheid - இச்சொல்லுக்கு apartness என்று பொருள்) கொள்கையாகும்.

இனவெறிக் கொள்கையை எதிர்த்துக் கடுமை யாகப் போராட வேண்டும் என்று இளைஞர் அணி யினர் தென்னாப்பிரிக்கத் தேசிய காங்கிரசின் தலைவர் மருத்துவர் எக்ஸ்யுமாவிடம் வலியுறுத்தினர். வருமானம் கொழிக்கும் மருத்துவத் தொழிலைத் துறந்துவிட்டுச் சிறைக்குப்போக முடியாது என்று அவர் கூறினார். எனவே இளைஞர் அணியினர் 1949 திசம்பரில் அவரைக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து நீக்கி விட்டு, மருத்துவர் மொராக்கா என்பவரைப் புதிய தலைவராக்கினர்.

1950 சூன் 26 அன்று அளவில் அரசின் அடக்கு முறையை எதிர்த்து நாடு தழுவிய தென்னாப்பிரிக்கத் தேசிய காங்கிரசுக் கட்சி எதிர்ப்பு நாளைக் கடைப் பிடித்தது. நாடு தழுவிய அளவில் கட்சி நடத்திய முதல் போராட்டம் அதுவேயாகும். அதன்பின் ஆண்டுதோறும் சூன் 26ஆம் நாளை, சுதந்தர நாளாகக் கொண்டாடினர்.

1952இல் மண்டேலா இளைஞர் அணியின் தலைவரானார். தெ.ஆ.தே.காங்கிரசுக் கட்சி, 1952 பிப்பிரவரி 29க்குள், அரசு, தன் அடக்குமுறைச் சட்டங் களை நீக்க வேண்டும்; இல்லையேல் போராட்டம் நடத்துவோம் என்று அரசுக்குக் காலக்கெடு விதித்தது. ஆனால் அரசு செவிசாய்க்கவில்லை. அதனால் அய்ந்து மாதங்கள் சட்ட மறுப்புப் போராட்டம் நடத்தினார். “அகிம்சை வழியிலான போராட்டமே தத்துவ அடிப்படையில் எப்போதும் சரி என்ற தன்மையில் நான் சட்டமறுப்புப் போராட்டத்தை ஏற்றுக்கொள்ள வில்லை. அப்போதிருந்த சூழ்நிலையில், வன்முறை யிலான போராட்டம் என்பதை அரசு எளிதில் ஒடுக்கி விடும் என்பதால், ஒரு போராட்ட உத்தியாக அகிம்சை முறையை நான் ஆதரித்தேன்” என்று மண்டேலா தன்வரலாறு நூலில் குறிப்பிட்டுள்ளார்.

தெ.ஆ.தே. காங்கிரசுக் கட்சி சட்டமறுப்புப் போராட் டத்தை நடத்திக் கொண்டிருந்தபோது வெள்ளை இனவெறி அரசு, வெள்ளை இன ஆதிக்கத்தின் 300 ஆவது ஆண்டு விழாவை 1952 ஏப்பிரல் 6 அன்று கொண்டாடியது. 1652 ஏப்பிரல் 6 அன்று கேப் பகுதி யில் ஜான் வ்hன் ரெய்வீக் என்கிற வெள்ளையன் தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாகக் கால்பதித்தான்.

1955 சூன் மாதம் தெ.ஆ.தே.காங்கிரசுக் கட்சி மக்கள் விடுதலைக்கான ஆவணத்தை வெளியிட்டது. நாட்டில் உள்ள எல்லா இன மக்களுக்கும் சமமான உரிமைகள் இருக்க வேண்டும்; நாட்டின் செல்வத்தில் எல்லா மக்களுக்கும் பங்கு இருக்க வேண்டும்; நிலத்தில் உழைப்பவர்களுக்கு நிலம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது. அந்த ஆவணத்தில் வர்க்கம், தனிச்சொத்துரிமை ஒழித்தல் பற்றியோ, உற்பத்திச் சாதனங்கள் மக்களின் பொதுவு டைமையாக ஆக்கப்படுதல் பற்றியோ, சோசலிச அரசு அமைத்தல் பற்றியோ எதுவும் கூறப்படவில்லை.

கம்யூனிஸ்டுக் கட்சியை அரசு தடைசெய்தது போல்,தெ.ஆ.தே. காங்கிரசுக் கட்சியையும் தடை செய்ய அரசு திட்டமிட்டது. அதனால் தலைமறைவு வாழ்க்கையைத் தலைவர்கள் மேற்கொள்ள வேண் டும் என்கிற மண்டேலாவின் திட்டத்தைக் கட்சி ஏற்றுக் கொண்டது. மண்டேலா பத்து மாதங்கள் தென்னாப்பிரிக் காவிலேயே தலைமறைவாகச் செயல்பட்டார். அகிம்சை முறையிலான போராட்டங்கள் இனி பயன்தராது; ஆயுதப் போராட்டம் மூலமே - வெள்ளை இனவெறி ஆட்சியை எதிர்க்கவும், தூக்கியெறியவும் முடியும் என்று மண்டேலா கருதினார். 1961இல் கட்சியும் மண்டேலாவின் கருத் தை ஏற்றுக்கொண்டது. வெளிநாடுகளில் மண்டேலா ஆயுதப் பயிற்சி பெற்றார். இளைஞர் அணியினர் சிலரும் இவ்வாறு ஆயுதப் பயிற்சி பெற்றனர்.

மண்டேலா தென்னாப்பிரிக்கா திரும்பியதும் கைது செய்யப்பட்டார். வேலைநிறுத்தம் செய்யத் தூண்டியது; அரசின் அனுமதி இல்லாமல் நாட்டை விட்டு வெளி யேறியது என்று அவர்மீது குற்றவழக்குத் தொடுக்கப் பட்டது. அந்த வழக்கில் தனக்குத்தானே வழக்குரை ஞராகி மண்டேலா வாதிட்டார். நீதிமன்றத்தில் ஒரு மணிநேரம் உரையாற்றினார். அந்த வாய்ப்பை அரசியல் கொள்கை விளக்கம் அளிப்பதற்காகப் பயன் படுத்திக் கொண்டார். “சிறையில் நான் அனுபவிக்கப் போகும் கொடுமைகளை நான் நன்கறிவேன்.

ஆனால் அதைவிட, என் மக்கள் இந்த அரசின் அடக்குமுறை களால் அனுபவித்துவரும் இன்னல்களும் துன்பங் களும் மேலும் கொடுமையானவை என்று கருது கிறேன். எனவே எனக்கு விதிக்கப்படும் தண்டனை முடிந்து சிறையிலிருந்து நான் வெளியே வந்த பிறகும், என் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைக் களைய வும் அவர்கள் முழுவிடுதலை பெறவும் நான் தொடர்ந்து போராடுவேன்” என்று முழங்கினார். அய்ந்து ஆண்டு கள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் இருந்த போது தான், அய்க்கிய நாடுகள் மன்றம் தென்னாப்பிரிக்கா மீது பொருளாதாரத் தடை விதித்தது.

1957இல் ஆப்பிரிக்கக் கண்டத்தில் கானா சுதந்தர நாடானது. 1960களில் 17 ஆப்பிரிக்க நாடுகள் காலனிய ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றன. எனவே தென்னாப் பிரிக்க வெள்ளை இன அரசு, மக்கள் விடுதலைப் போராட்டத்தைக் கடுமையாக ஒடுக்க முனைந்தது. தெ.ஆ.தே. காங்கரசுக் கட்சியையும், மற்ற அரசியல் கட்சிகளையும் தடைசெய்தது. தொழிற்சங்க நடவடிக் கைகளுக்குத் தடைபோட்டது. கட்சியின் முதன்மை யான தலைவர்களைக் கைது செய்து நாசவேலை, தேசத்துரோகம் என்ற குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடுத்தது. அப்போது சிறையில் இருந்த மண்டே லாவும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டார்.

மண்டேலா உள்ளிட்ட தலைவர்களை விடுதலை செய்யக்கோரி தென்னாப்பிரிக்காவில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் கண்டனக் குரல்கள் ஒலித்தன. ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. பல நாடுகள் தென்னாப் பிரிக்காவின் இனவெறி அரசின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தன. அய்க்கிய நாடுகள் மன்றத்தின் பாதுகாப்பு அவையில் கண்டனத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. பிரிட்டனும் அமெரிக்காவும் அதை எதிர்த் ததால் அது நிறைவேறவில்லை.

இந்த வழக்கில் மண்டேலா முதல் குற்றவாளி. வால்டர் சிசுலு இரண்டாவது குற்றவாளி. 1964 ஏப்பி ரல் 30 அன்று நீதிமன்றத்தில் மண்டேலா தன் சார்பாக, நீண்ட அறிக்கையை - நான்கு மணிநேரம் படித்தார். அந்த அறிக்கையில், “நான் மார்க்சிய நூல்களைப் படித்ததிலிருந்தும், மார்க்சிய தோழர்களுடன் கலந்து ரையாடியதிலிருந்தும், மேலை நாடுகளில் உள்ள நாடாளுமன்ற முறையை, சனநாயகத்துக்கு எதிரானது என்றும் பிற்போக்கானது என்றும் கருதுகிறார்கள் என்று நான் புரிந்து கொண்டேன். ஆனால் அதற்கு மாறாக, நான் நாடாளுமன்றச் சனநாயக அரசமைப்பு முறையை விரும்புகிறேன்....

என் வாழ்நாள் முழு வதும் ஆப்பிரிக்க மக்களின் போராட்டத்துக்காகவே என்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டிருக் கிறேன். வெள்ளை ஆதிக்கத்துக்கு எதிராக நான் போராடியிருக்கிறேன். கருப்பர் ஆதிக்கத்துக்கு எதிராக நான் போராடியிருக்கிறேன். எல்லாரும் ஒற்றுமையாக வாழக்கூடிய, எல்லாருக்கும் சமமாக வாய்ப்புகள் கிடைக் கக்கூடிய, சனநாயகபூர்வமான, சுதந்தரமான சமூகம் என்ற இலட்சியத்தையே நான் போற்றி வந்திருக்கிறேன். நான் அடைய நினைப்பது இந்தக் குறிக்கோளைத் தான். நான் வாழ நினைப்பது இந்த இலட்சியத்துக் காகத்தான். தேவையெனில், என் உயிரையும் துறக்க நினைப்பதும் இந்த இலட்சியத்திற்காகத்தான்” என்று மண்டேலா முழங்கினார். இந்த அறிக்கை புகழ்மிக்க வரலாற்று ஆவணமாகத் திகழ்கிறது.

இந்த வழக்கில் கட்டாயம் மரணதண்டனை விதிக் கப்படும் என்று மண்டேலா கருதினார். சிறையில் இதுகுறித்துத் தன் தோழர்களிடம் பேசினார். மரண தண்டனை விதிக்கப்பட்டால் மேல்முறையீடு செய்யக் கூடாது. அதை மகிழ்ச்சியுடன் ஏற்போம். எந்த இலட்சியத் திற்காக உயிர் விடுகிறோமோ, அப்போதுதான் அந்த இலட்சியத்தை நிறைவேற்ற மக்கள் தொடர்ந்து போராடுவார்கள் என்று முடிவு செய்தனர்.

ஆனால், 1964 சூன் 12 அன்று அவர்களுக்கு வாழ் நாள் தண்டனை விதித்துத் தீர்ப்பு வழங்கப்பட்டது. உள்நாட்டிலும் அயல்நாடுகளிலும் அவர்களுக்கு ஆதர வாக எழுந்த பேரெழுச்சி காரணமாக மரணதண்ட னை விதிக்கவில்லை என்று மண்டேலா கருதினார். ஆனால் அரசு வழக்குரைஞர், நீதிபதியிடம் கடைசி நேரத்தில் வலியுறுத்தியதால் மரணதண்டனை வாழ் நாள் தண்டனையாக மாற்றப்பட்டது என்று பின் னாளில் அரசு வழக்குரைஞர் கூறியுள்ளார்.

மண்டேலா உள்ளிட்ட ஏழுபேர் வாழ்நாள் சிறைத் தண்டனைக்காகக் கேப்டவுன் அருகில் உள்ள - உலகி லேயே மிகவும் கொடிய சிறைச்சாலை என்று கருதப் பட்ட ராபென் தீவுச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட னர். ராபென் சிறையில் 18 ஆண்டுகள் இருந்தனர். இதில் 13 ஆண்டுகள் சுண்ணாம்புப் பாறைகளை உடைக்கும் கடுமையான வேலைகளைச் செய்தனர். அதனால் கண்பார்வை மங்கியது. கண்களில் உள்ள கண்ணீர் சுரப்பிகள்கூட வற்றிவிட்டன. எவ்வளவு துக்கத்தினால் அழுதாலும் கண்களில் நீர் வராது. போராட்டத்தின் மூலம் கருப்புக் கண்ணாடி அணிந்து சுண்ணாம்புப் பாறைகளை உடைத்தனர்.

மண்டேலா சிறையிலிருந்தவாறும், கட்சித் தலை வர்கள் அயல்நாடுகளில் இருந்தவாறும், 1980 முதல் கட்சியை மீண்டும் வீறுடன் செயல்பட வைத்தனர். இளைஞர் படையினர், உயிருக்கும் உடைமைக்கும் சேதம் ஏற்படாத வகையில் குண்டுகளை வெடிக்கச் செய்தனர். இராணுவத்தின் வாகனங்களை தகர்த் தனர். 1983இல் தெ.ஆ.தே. காங்கிரசுக் கட்சியினர், இந்திய வம்சாவளியினர், கம்யூனிஸ்டுகள் இணைந்து சனநாயகக் கூட்டணி என்பதை அமைத்து இனவெறி அரசுக்கு எதிரான தீவிரமான போராட்டங்களை நடத்தினர்.

இவற்றின் விளைவாக, மண்டேலாவும் மற்ற மூவரும் 1982 மார்ச்சு மாதம் ராபென் தீவு சிறை யிலிருந்து போல்ஸ்மூர் சிறைக்கு மாற்றப்பட்டனர். 1986இல் சிறை அதிகாரிகள் மண்டேலாவை அவ்வப் போது உணவு விடுதிகள், பொழுதுபோக்கு இடங் களுக்கு அழைத்துச் சென்றனர். மக்களில் எவருக்கும் மண்டேலாவை அடையாளம் தெரியவில்லை. ஏனெனில் 1964க்குப் பிறகு அவருடைய புகைப்படத்தை செய்தி ஏடுகளில் வெளியிடத் தடைவிதிக்கப்பட்டிருந்தது.

1987இல் அமெரிக்காவும் தென்னாப்பிரிக்கா மீது பொருளாதாரத் தடைவிதித்தது. அரசுக்குப் பலவகை யிலும் நெருக்கடி முற்றியது. எனவே அரசு மண்டேலா வுடன் சமரசம் பேசத் தொடங்கியது. மண்டேலாவும் அவருடைய கட்சியும் ஆயுதப் போராட்டத்தைக் கைவிடுவதாக அறிவிக்க வேண்டும் என்ற நிபந்தனை விதித்தது. மண்டேலா மறுத்துவிட்டார். கட்சியின் ஆவ ணத்தில் சனநாயக அடிப்படையிலான பெரும்பான்மை மக்களின் அரசு அமைக்கப்பட வேண்டும் என்பதே குறிக்கோள் என்று தெளிவுபடுத்தப்பட்டிருப்பதைச் சுட்டிக் காட்டினார்.

மேலும் வெள்ளையர்களும் இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக இந்நாட்டில் வாழ்வதால், அவர்களும் ஆப்பிரிக்க நாட்டின் குடிமக்களே ஆவர். சனநாயக அடிப்படையில் அனைவருக்கும் வாக்கு அளிப்பதன் பேரில் அமைக்கப்படும் வெகுமக்கள் ஆட்சி வெள்ளை இனத்தவரைப் பழிவாங்கும் நடவடிக்கை யில் ஈடுபடாது என்று உறுதியளித்தார். மேலும் பெரும் பான்மை மக்களாகிய கருப்பின மக்களின் ஆட்சியை ஏற்காத வரையில் நாட்டில் அமைதியோ, நிலைத்தன் மையோ ஏற்படாது என்றும் எச்சரித்தார்.

1989 அக்டோபர் பத்து அன்று மண்டேலாவையும், வால்டர் சிசுலுவையும் மற்ற அய்வரையும் (ராபென் தீவில் வாழ்நாள் தண்டனைக்காகச் சிறை வைக்கப் பட்டவர்கள்) விடுதலை செய்வதாக, தென்னாப்பிரிக்க அரசின் அதிபர் டி-கிளார்க் அறிவித்தார். ஆட்சி மாற்றம் குறித்த பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள, ஆயுதப் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்பதை நிபந் தனையாக அரசு விதித்தால் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று 1989 திசம்பரில் அதிபர் டி-கிளார்க்கு எழுதிய மடலில் மண்டேலா வலியுறுத்தியிருந்தார்.

1990 பிப்பிரவரி 2 அன்று அதிபர் டி-கிளார்க் நாடாளுமன்றத்தில் அரசியல் கட்சிகள் மீதான தடையை நீக்குவதாகவும், மண்டேலா உள்ளிட்ட அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்வதாகவும் அறி வித்தார். முப்பது ஆண்டுகளுக்குப் பின், அடுத்த நாள் செய்தி ஏடுகளில் மண்டேலா உள்ளிட்ட தலைவர் களின் படங்கள் இடம்பெற்றன. நெல்சன் மண்டேலா 1990 பிப்பிரவரி 11 அன்று சிறையிலிருந்து வெளி வந்தார். மாபெரும் மக்கள் வெள்ளம் ஆடிப்பாடி அவரை வர வேற்றது.

அதன்பின் நடந்த பேச்சுவார்த்தைகளில் வெள்ளை இன ஆதிக்க அரசு, சூதான முறைகளில் வெள்ளை யரின் அரசியல் ஆதிக்கம் தொடர்வதற்கான தன்மை யில் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிட முயன்றது. அவற்றையெல்லாம் பொறுமையுடன் மண்டேலா முறியடித்தார். அப்போது அரசு வேண்டுமென்றே பல இடங்களில் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டது. அரசின் கூலிப்படையினரான வன்முறையாளர்களை அரசு அடக்காவிட்டால், தன்கட்சி மீண்டும் ஆயுதப் போராட்டத்தைத் தொடங்க நேரிடும் என்று மண்டேலா எச்சரித்தார். எனவேதான் தொலைநோக்கோடு, ஆயுதப் போராட்டம் என்ற ஆயுதத்தை மண்டேலா கைவிடு வதற்கு இணங்கவில்லை.

இனம், மதம் என்கிற பாகுபாடுகளற்ற, ஒவ்வொரு வருக்கும் ஒரு வாக்கு; ஒவ்வொரு வாக்கும் சமம் என்ற அடிப்படையிலான தென்னாப்பிரிக்கக் குடியர சின் தலைவராக நெல்சன் மண்டேலா 1994 மே 9 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாவது தடவை இப்பதவிக்குப் போட்டியிட மறுத்துவிட்டார். 2004 சூன் முதல் பொது வாழ்க்கையிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார். 2013 திசம்பர் 5 அன்று வரலாறாகி விட்டார்.

ஆயுதப் போராட்டத்தை முன்னிறுத்திய மண்டேலா, பிறகு காந்தியின் அகிம்சை வழியை ஏற்றுக்கொண் டார் என்று மண்டேலா சிறையிலிருந்து விடுதலை யானது முதல் இந்திய ஊடகங்கள் எழுதிக் கொண்டி ருக்கின்றன. இது முற்றிலும் தவறான கருத்தாகும். காந்தியின் அகிம்சை என்பது ஒரு மத நம்பிக்கை போன்றது. நீக்குப்போக்குக்கு இடம்தர மறுப்பது. இட்லரின் படுகொலையை யூதர்கள் எப்படி எதிர்கொள்வது என்று கேட்டபோது, “யூதர்கள் அனைவரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டும். அதுவே இட்லரின், செருமானிய மக்களின் மனசாட்சியை உலுக்குவதாக அமையும்” என்று கூறினார். ஆனால் மண்டேலாவோ வன்முறை யை-ஆயுதப் போராட்டத்தை மக்களின் விடுதலைக்கான போரில் ஓர் உத்தியாகப் பயன்படுத்திட எண்ணினார்.

1980களில் அமெரிக்காவின் செய்தியாளர் சிறையில் மண்டேலாவைச் சந்தித்தார். அப்போது அவர், “காந்தி யின் அகிம்சைக் கொள்கையை ஏற்று அமெரிக்காவில் கருப்பின மக்களின் உரிமைகளுக்காகக் கருப்பினத்த வரான மார்டின் லூதர் கிங் போராடும் போது, நீங்கள் ஏன் ஆயுதப் போராட்டத்தைக் கைவிட மறுக்கிறீர்கள்” என்று கேட்டார். அதற்கு, மண்டேலா, “அமெரிக்கா ஒரு சனநாயக நாடு; அதனால் அங்கே அமைதியான வழியில் போராட்டங்களை முன்னெடுக்க முடியும். எதிராளிதான் நாம் எந்த வழியிலான போராட்டத்தை மேற்கொள்வது என்பதற்கு மூலகாரணமாக இருக்கிறார்” என்றார்.

நாட்டு விடுதலை மட்டுமல்லாது, மக்களின் சமூக, அரசியல், பொருளியல் சுரண்டல்களையும், ஒடுக்கு முறைகளையும், ஆதிக்கத்தையும் எதிர்த்துப் போராடு வதற்கு அகிம்சை வழியா? ஆயுதப் போராட்டமா? எதை எந்த அளவில் மேற்கொள்வது என்பது அந்தந்த நாட்டின் சூழலையும், உலக அளவிலான சூழலையும் பொறுத்ததாகும். உலக அளவில் தரப்பட்ட நெருக்குத லும் மண்டேலாவின் விடுதலையில் தென்னாப்பிரிக் காவில் இனவெறி அரசு ஒழிக்கப்பட்டு, சனநாயக ஆட்சி அமைக்கப்பட்டதில் ஆற்றிய பங்களிப்பை ஒதுக்கி விட முடியாது.

பெரும்பான்மையினரின் சனநாயக ஆட்சி தென்னாப் பிரிக்காவில் அமைந்த பிறகும், நிலமும், பெருந்தொழில் களும், வணிகமும் பத்து விழுக்காட்டினராக உள்ள வெள்ளை இனத்தவரின் ஆதிக்கத்திலேயே இன்னும் நீடிக்கின்றன. இதை மண்டேலா அப்படியே விட்டு விட்டுச் சென்றுவிட்டாரே என்ற குறை சொல்லப்படுகிறது. ஆப்பிரிக்க கண்டத்தில் காலனிய ஆதிக்கத்திலிருந்து விடுதலையான பெரும்பாலான நாடுகளில் இனக் குழுப் பகைமை, ஆட்சி அதிகாரப் போட்டி காரணமாக ஏற்பட்ட ஆயுதமேந்திய மோதல்களில் பல இலட்சம் கருப்பினத்தவர் மாண்டனர். அந்நிலை தென்னாப் பிரிக்காவில் ஏற்படக்கூடாது என்று மண்டேலா கருதி யதால், வெள்ளையரிடம் பகை பாராட்டாமல், உடன் பாடு கண்டார். இனவெறி அரசை வீழ்த்துவது, சன நாயக அரசமைப்பை நிறுவுவது என்பதில் மட்டுமே தன் ஆற்றல் முழுவதையும் செலுத்தி, அதில் வெற்றியும் பெற்றார்.

1865இல் வடஅமெரிக்காவில் ஆபிரகாம்லிங்கன் அடிமைமுறையை ஒழித்தார். அமெரிக்காவில் வாழும் ஆப்பிரிக்க இனமக்கள் வாழ்வில் பல முன்னேற்றங் கள் ஏற்பட்டுள்ள போதிலும், வெள்ளையருக்கும் கருப் பினத்தவருக்குமான இடைவெளி பெரிய அளவில் எல்லா நிலைகளிலும் நீடிக்கிறது. இந்தியா 1947இல் சுதந்தரம் பெற்றது. 1950இல் குடியரசானது. ஆனால் இன்றளவும் பதினைந்து விழுக்காட்டினராக உள்ள மேல்சாதியினரிடமே பெருமளவில் நிலமும், தொழில் களும், வணிகமும், ஆட்சி அதிகாரமும் இருக்கின்றன.

வரலாற்றில் எந்தவொரு தலைவருக்கும் அவர் வாழ்ந்த காலத்தின் சூழ்நிலையின் வரம்புகளால் மக்களுக்கான முழுமையான உரிமைகளையும் விடு தலையையும் பெற்றுத்தர முடியாது. எனவே அடுத்த தலைமுறையினர் மக்கள்திரள் போராட்டங்கள் மூலம் உழைக்கும் மக்களுக்கான விடுதலையைப் பெற்றுத் தர, தொடர்ந்து, போர்க்குணத்துடன் போராட வேண்டும். அதற்கு மண்டேலாவின் போர்க்குணம் மிக்க ஒப்பரிய பெருவாழ்வு ஒரு கலங்கரை விளக்கமாகத் திகழும்.

Pin It