அதே 1926 ஆம் ஆண்டில் செந்தமிழ்ச் செல்வி மாத இதழுக்கும் மிகச் சிறந்த மதிப்புரையை 10.10.1926 குடிஅரசு ஏட்டில் எழுதி தமிழ் மக்கள் அந்த இதழை வாங்கி ஆதரிக்கும்படி பெரியார் எழுதியுள்ளார்.

“நாகரிகத்தில் சிறந்து விளங்கும் நாடுகளில் பத்திரிகைகள் தலைசிறந்து நிற்கும் மேனாடுகளை நோக்க, நமது நாட்டில் பத்திரிகைகளின் தொகையும் செல் வாக்கும் குறைவுதான். பல அறிஞர்களின் உள்ளக் கருத்துகளை ஒருங்கு திரட்டி உணர்த்தலால், மக்கள் அறிவைப் பண்படுத்துவதால், பத்திரிக்கைகள் வல்லன வாகத் திகழ்கின்றன. நமது நாட்டில் தினசரி, வாரப் பத்திரிகைகள் ‘அரசியல் கிளர்ச்சியில்’ பாய்ந்து செல்லும் வேகத்தில் சீர்திருத்த விஷயத்தில் அசிரத்தை காட்ட வேண்டிய நிலையில் இருக்கின்றன. கல்வி, சமயம், தத்துவம், சமத்துவ உணர்ச்சி ஆகிய விஷயங்களில் எல்லோருக்கும் பயன்படத்தக்க ஒரு ஸ்திரமான திருத்தம் ஏற்பட்டால்தான் நமது சமூகத் தைப் பிணித்திருக்கும் குருட்டு நம்பிக்கைகள் ஒழியும். இத்துறையில் வேலை செய்ய வல்லன மாத வெளியீடு களேயாகும். ஏனெனில் அறிஞர்கள் சாவதானமாக ஆராய்ந்து கண்ட முடிவுகளே அவற்றில் வெளிவர இயலும். தமிழ்நாட்டில் அத்தகைய திங்கள் வெளியீடு களிற் சிறந்தது நமது “செந்தமிழ் செல்வி” எனத் துணிந்து கூறலாம். இதில் பெரும்பாலும் ஆங்கிலத்திலும் தமிழிலும் வல்லவர்களான பேரறிஞர்களின் ஆராய்ச்சி உரைகளே வெளிவருகின்றன. பார்ப்பனியத்தின் மாயப் புரட்டுகள் வெளியாக்கப்படுகின்றன. தமிழர் நாகரிகம் தெள்ளத்தெளிய விளக்கப்படுகிறது.

பண்டைய இலக்கிய, இலக்கண ஆராய்ச்சிக்கும் புதிய மேனாட்டுச் சாஸ்திர முறைக்கும் ஆராய்ச்சி வல்லுநரால் பொருத்தமாய் எழுதப்படுகின்றன. மதுரையிலிருந்து வெளிவரும் ‘செந்தமிழ்’ வெளியீடு பார்ப்பன கோஷ்டியிலகப்பட்டு பார்ப்பனமயமாகிக் கொண்டிருக்கிறது. அதைத் தோற்று வித்த ஸ்ரீமான் பாண்டித்துரை தேவரவர்களின் உத் தேசம் அடியோடு புறக்கணிக்கப்படுகிறது. பார்ப்ப னரல்லாதார் பொருள் ஏராளமாய் இருந்தும், சேதுபதி மகாராஜா தலைவராயிருந்தும், தமிழ்ச் சங்கத் தையும், அதைச் சார்ந்த கலாசாலையையும் ‘செந்தமிழ்’ மாதச் சஞ்சிகையையும் பார்ப்பனராதிக்கத்தில் ஒப்ப டைக்கப்பட்டிருப்பது பரிதபிக்கத்தக்கது. இக்குறைகளைக் கண்டே பல தமிழபிமானிகள் தென்இந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் என்னும் பெயரால் மற்றொரு உண்மைத் தமிழ்க் கழகம் கண்டனர்... செந்தமிழ்ச் செல்வி யும் இக்கழகத்தினின்று வெளி வருவதுதான். உயர் திருவாளர் கள் கா.சுப்பிரமணியப் பிள்ளைய வர்கள், பா.வெ.மாணிக்க நாயக்கர் போன்ற இரு மொழிப் புலவர் களின் பேராதரவைப் பெற்ற “செந்தமிழ்ச் செல்வி யின்” மாட்சியை விரிக்கவும் வேண்டுமோ? தமிழ் மக்களின் முன்னேற்றங் கருதி உழைக்கும் சென்னை பச்சையப்பன் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் மணி திருநாவுக்கரசு முதலியாரவர்களே நமது ‘செல்வி’யின் ஆசிரியராவர்கள். வடமொழிக் கலப்பில்லாத ‘தனிச் செந்தமிழ் நடை’ படிக்கப் படிக்க இனிக்கும். ஒவ்வொரு தமிழ் மகனும் தமிழ் மகளும் அன்புடன் வரவேற்று ஆதரிப்பாராக”.

10.10.1926 குடிஅரசு ஏட்டில் மிகச்சிறந்த முறையில் செந்தமிழ் செல்வியைத் தமிழ் மக்களிடம் அறிமுகம் செய்து வைத்தது - தந்தை பெரியாரின் குடிஅரசு ஏடேயாகும்.

மறைமலைஅடிகளாரின் மகள் நீலாம்பிகை அம்மையார் 1926இல் ‘தனித்தமிழ்க் கட்டுரைகள்’ என்ற நூலைக் குடிஅரசு இதழுக்கு அனுப்பி இருந்தார். அந்நூலுக்கு மிகச்சிறந்த மதிப்புரையைக் குடிஅரசு ஏட்டில் எழுதியது மட்டுமல்லாமல், அந்நூலில் இருந்த கட்டுரைகளின் முதன்மையான கட்டுரையான “தமிழில் வடமொழி கலத்தல் ஆகாது” என்ற கட்டுரையை 31.01.1926 குடிஅரசு இதழில் வெளியிட்டார்.

தனித்தமிழ்க் கட்டுரைகள் :

இப்பெயர் கொண்ட புத்தகமொன்று வரப்பெற் றோம். இஃது பல்லாவரம் வித்யோதயா மகளிர் கல்லூரியின் தமிழாசிரியர் திருமதி. நாகை. நீலாம் பிகை அம்மையாரால் எழுதப்பட்டது. தமிழ் பாஷையின் வளர்ச்சி தானே குறைந்துகொண்டுவரும் இக்காலத்தில், வடமொழி கலவாது, தனித்தமிழில் கட்டுரைகள் வரையப்பட்டு, அதுவும் ஓர் புத்தக ரூபமாக வெளிவந்திருப்பது தமிழுலகுக்கு ஓர் நல் விருந்தென்றே கூறுவோம். இத்தகைய புத்தகங்களே தமிழ் வளர்ச்சிக்கு, உற்ற சாதனங்களாகும். நமக்கு அனுப்பப்பட்டுள்ள இப்புத்தகத்தின்கண், வடமொழி சொற்கள் எங்கணும் கண்டோமில்லை. அதன் அருமை பெருமையை நன்கு விளக்குவான் வேண்டி “தமிழில் வடமொழி கலத்தல் ஆகாது” என்னும் கட்டுரையை இதனடியில் பிரசுரித்திருக்கின்றோம்.

“தமிழ் மொழியில் வடசொற்களைக் கொண்டு வந்து கட்டாயம் சேர்த்தல் வேண்டுமென்றும், தமிழையும், வடமொழியையும் நாம், நம் இரண்டு கண்களைப் போல் நினைத்தல் வேண்டுமென்றும், உயிரோடிருக்கும் மொழியாகிய தமிழிற் பிறமொழிகள் கலப்பது இயற்கையென்றும் சிலர் தத்தமக்குத் தோன்றியவாரெல்லாம் ஏதுவின்றிக் கூறுகிறார்கள். இவைகளை ஆராய்வோம். தமிழ் மொழிக்கு வட மொழிக் கலப்பு எதற்காகக் கட்டாயம் வேண்டும்? தமிழ் ஏதேனும் குறைபாடுடைய மொழியா? தமிழிலே போதுமான சொற்கள் நிறைந்து கிடக்கின்றன.

வடமொழிக் கலப்பின்றி முற்காலத்தில் எழுதப்பட்ட தமிழ் நூல்களின் தூய செந்தமிழ் நடைப்போக்கின் இன்சுவையினையும், பொருள் ஆழத்தினையும் உற்று நோக்கி மகிழாத அறிஞர் யார்? திருக்குறள் ஒன்றை நோக்கினும் யாம் கூறும் உண்மை விளங்கும். திருக் குறளில் உணர்த்தப்படாத பொருள்கள் இல்லை. அப் பொருட்கட்கெல்லாம் தூய தமிழ்ச் சொற்கள் இருக்கின்றன.

சமஸ்கிருதத்தைக் கண்போல் காப்பதற்கும் மேலாகப் பார்ப்பனர்கள் தம் உயிர் போல் அதைக் காக்கின்றனர். ஆனால் தமிழ்மொழியைக் காப்பதற்கு ஒரு சிலரே உள்ளனர்.

‘தமிழரும் நாகரிகமும்’ என்ற தலைப்பில் எஸ்.ஜே. கோவிந்தராசர் எழுதிய மிகச்சிறந்த கட்டுரையைக் குடிஅரசு ஏடு வெளியிட்டது. அக்கட்டுரையில், பழந்தமிழ்க் குடிகளாகிய நாம் ஆரியர்களிடம் அல்லலுறுவதற்கு முகாந்திரங்கள் யாவை என்பதைப் பற்றிச் சற்று எண்ணுவோம்.

முதலில் தமிழர்களாகிய நாம் ஆரியப் பாடையின் பித்துக்கொண்டு, நமது இல்லங்களில் நடக்கும் இனியவை, இன்னாதவை எல்லாவற்றிற்கும் பார்ப்ப னரால் கூறப்படும் உலக வழக்குகளில் பேச்சற்ற புரோகிதத் தன்மைக்கும் தர்ப்பைக்கும் பெருமை கொடுக்கும் ஆரியாப்பாடையை ஒரே வழக்கில் நடக்கச் செய்து ஆரியன் காலில் அருந்தமிழன் வீழ்ந்து பெருமை கொடுப்பதினாலேயே நமது தமிழன்னை யானவள் தலைசிறந்த நாகரிகத்தை விட்டுத் தட்டுத் தடுமாறி நிற்கின்றாள்.

தமிழர் நாகரிகம் தலைசிறக்க வேண்டுமானால் புரோகிதத் தன்மையையும், பார்ப்பனக் கொடுமை யையும், பேச்சளவிலும், ஏட்டளவிலும் மாத்திரம் அன்றி கருமத்திலும் ஒழிக்கத் தமிழர்கள் உலகமானது முன்னணியில் வரவேண்டும்.

தமிழர் நாகரிகம் அரியணை ஏற ஆரியக் கலப்பற்ற தமிழ்க் கல்வியே சாலச் சிறப்புடைத்து. தமிழன்னையானவள் தங்கத் தகட்டில் - தனியரசில் வீற்றிருப்பாளானால் தமிழர் நாகரிகம் தானே சிறந்து ஆரியம், ஆங்கிலம் முதலிய நாகரிக வழக்கப் பழக்கங்களை உதறி, புரோகிதத் தன்மை, சாஸ்திரம், அடிமை முதலிய இழி துறைகளினின்றும் விலகி இன்னலை நீக்கி இன்பமடையும்.

13.2.1927 குடிஅரசு ஏட்டில் கா. சுப்பிரமணியப் பிள்ளை அவர்களின் ‘தமிழர் முன்னேற்றம்’ என்ற தலைப்பிலமைந்த சொற்பொழிவின் சுருக்கத்தை இரண்டு பக்கம் வெளியிட்டார்கள். அதில் அவர் ‘தமிழ ரென்பார், தமிழைத் தாய்மொழியாக உடையவர் யாவரும் ஆவர். ஆயினும், தமிழ்மொழி தனி மொழி யென்ற கொள்கையும், தமிழர் பண்டைக் காலத்தி லேயே உயர்ந்த நாகரிகமுள்ள மரபினருள் ஒரு மரபினரென்ற கொள்கையும் இல்லாதவர்களைத் தமிழரென்று கூறுதல் தக்கதன்று.

சுயராஜ்யம் வேண்டாமென்று ஜஸ்டிஸ் கட்சியா ளர்கள் சொல்வதில்லை. அரசாங்கத்தில் ஜஸ்டிஸ் கட்சியார் கொள்கையும், காங்கிரசார் கொள்கையும் ஒத்தனவே.

காங்கிரஸ் என்ற லேபிபினால் பிராமணரையே காட்டுவாரை நன்கறிதல் வேண்டும். பிராமணருள்ளும் பெரும்பாலார் உத்தியோக வேட்டையை மேற்கொண்ட வர்களே! பிராமணரல்லாதாருள் உத்தியோகமில்லா தார்கள் பலர் உள்ளனர். இதனைப் பிராமணரல் லாதார் உணர வேண்டும். உணர்வாராயின், காங்கிரஸ் கட்சி, ஜஸ்டிஸ் கட்சியென்பது சமுதாயம் பற்றி எழுந்தனவேயன்றி அரசாங்கம் பற்றி எழுந்தன அல்ல என்பதை இனி அறிந்து அரசாங்கக் காரணமாக காங்கிரஸ் கட்சியோடு கூடமாட்டார்கள்.

செல்வமிக்க சைவ மடத்தார் பெரும்பான்மையும் தற்காலத்திலும் பிராமணர்க்கே பெரும் பயன் விளைத்தற் பொருட்டு இலவசப் பள்ளிக்கூடங்களும் ஆஸ்டல்களும் ஏற்படுத்திச் சைவ சமய மக்களைச் சிறிதுங் கவனியாது இருப்பதற்குக் காரணமென்ன? பிராமணரல்லாதாருள் செல்வவான்களுடைய பொருள் கள் பிராமணரது நாடகங்களுக்கும், சங்கீதக் கச்சேரி களுக்கும் சாப்பாட்டு விடுதிகளுக்கும், பிராமண வக்கீல் களுக்கும் இன்னும் பிராமணருக்கே பயன்படும் மணச்சடங்கு, பிணச்சடங்கு முதலிய பல சடங்கு களுக்கும் ஏராளமாகச் செலவாகிக் கொண்டிருக்க பிராமணரல்லாதாருடைய பிள்ளைகள் கல்வியின்றிப் பிழைக்கும் வழியறியாது மயங்கித் தயங்கித் தெருவில் நின்று திகைப்பானேன்? இவற்றையெல் லாம் பிராமணரல்லாதாருட் செல்வவான்கள் கவனிப் பார்களாயின் பிராமணரல்லாதார் நிலை இற்றைக்கு இருக்கிறவிதம் இராது.

இதைப் பெரியார் அல்ல தமிழ்ப் பெரும்புலவர் கா.த.பிள்ளை ஆவார். 14.8.1927 குடிஅரசு ஏட்டில் “தமிழ்த்தாய்” என்ற தலைப்பில் அருமையான கட்டுரை ஒன்று “அன்பு” என்ற பெயரில் எழுதப்பட்டுள்ளது.

“தமிழ்நாட்டில், தமிழ் மக்களிடையில் யாம் தமிழைப் பற்றி எழுதும் நிலையில் நமது தமிழ்த்தாய் இருக்கின்றாள். தமிழ்த்தாய் வயிற்றில் பிறந்த பிள்ளைகள் தமிழ்மொழியைப் போற்றாது, மேனாட்டு மொழியில் மோகங்கொண்டும், அதனைப் பேசுவ தாலும், எழுதுவதாலும் பெரும்புகழ் உண்டாகிறதென்றும் வீணே அருமைத் தமிழ்த்தாயை மறந்திருக் கின்றனர். மேனாட்டு மொழியைப் படிப்பது வயிற்றை வளர்ப்பதற்காக என்பதை அறவே மறந்துவிட்டனர்.

தமிழ்மொழியாலே எந்த நாட்டுப் பொருள்களை யும் ஒலித்திட முடியும். எழுதுவதும் தமிழ் எழுத்தா லேயே எழுதிடவும் முடியும். பிறநாட்டுப் பொருள் களைப் பற்றி ஒலிக்குமிடத்து ஒலித்திறம் அறிந்து ஒலித்திடின் ஒரு சிறிதும் குற்றமில்லாது ஒலிக்கலாம். தமிழில் திருவன், திருவாளர், திருமிகு, திருவாட்டி என்று வழங்குவது சாலச் சிறந்ததாகாதோ? தமிழ் மொழியில் இயன்றவரை வடமொழிகளையும் கல வாமல் வருவதே சாலச்சிறந்ததாகும். வடமொழி எழுத்துக்களையேனும், மேனாட்டு மொழி எழுத்துக் களையேனும் கண்டிப்பாய் அகற்றித் தொலைக்க வேண்டும்.

தமிழ்க்கொடி வாடிக் கிடந்தது. இப்போது வணிக நாட்டிற் சிறிது தலைதூக்கி நிமிரப் பார்க்கிறது. பிற ஒவ்வொரு ஊரார்களும் தமிழ்த்தாயைப் போற்ற எழுங்கள்! விடிந்துவிட்டது, இன்னும் தூங்கா தேயுங்கள்! உங்கள் பொருளையெல்லாம் தமிழுக்காகச் செலவு செய்யுங்கள்! உங்கள் முயற்சி எல்லாம் தமிழுக்கே கொடுங்கள்! உங்கள் இளமையைத் தமிழுக்காகப் பயன்படுத்துங்கள்! உங்கள் மொழிக்காகப் பாடுபடுங் கள்! அப்போதுதான் நாடு உரிமை பெறும்.” தனித்தமிழ் இயக்கமே சுயமரியாதை இயக்கத்தின் ஆதரவுடன்தான் வளர்ந்தது. கரந்தை தமிழ்ச் சங்கத்தை தொடங்கிய உமாமகேசுவரனார் நீதிக்கட்சியைச் சார்ந்தவரே ஆவார்.

தமிழ்மொழியைச் சிறந்த முறையில் பாராட்டி எழுதி வந்த அதே வேளையில் அவ்வப்போது இந்தியைக் கண்டித்தும் வந்திருக்கிறது. 1929இல் சென்னையில் இந்திப் பிரச்சார சபைக்குக் கட்டடம் கட்ட ஒரு இலட்சம் நிதி திரட்டப், பார்ப்பனர்களும் காங்கிரசுகாரர்களும் முயற்சி செய்து வந்தனர். அந்த முயற்சியை அப்போதே வன்மை யாகக் கண்டித்து எழுதியது தந்தை பெரியாரின் குடிஅரசு ஏடு. இந்திப் புரட்டு என்றத் தலைப்பில் 20.1.1929 குடிஅரசு ஏட்டில் தலையங்கம் எழுதப் பட்டது. அத்தலையங்கத்தின் ஒரு பகுதி வருமாறு :

“சமீபத்தில் சென்னை மாகாணத்திற்கு, சென்னைப் பார்ப்பனர்கள் வடநாட்டுத் தலைவர்கள் என்பவர் களை இந்திப் பிரச்சாரம் என்னும் பேரால் பார்ப்பனப் பிரச்சாரம் செய்ய அழைத்து வரப்போகின்றதாகத் தெரியவருகின்றது. இந்த வழியில் பார்ப்பனப் பிரச்சாரம் செய்வதோடு மாத்திரமல்லாமல், பார்ப்பனரல் லாத மூடர்களிடமிருந்து சுமார் ஒரு லட்சம் ரூபாயாவது கொள்ளை அடிக்கக் கருதியிருக்கின்றார்கள்.

கதரின் பேரால் அடித்த கொள்ளையாகிய அய்ந்து லட்சம் ரூபாய் இன்னும் ஜீரணம் ஆகாமல் அப்படியே கல்லுப் போல் பார்ப்பனர்கள் வயிற்றில் கிடக்க, சென்ற வருடம் காங்கிரசின் பேரால் கொள்ளை அடித்த சுமார் 20, 30 ஆயிரம் ரூபாயும் அப்படியே கிடக்க, இப்போது இன்னும் ஒரு லட்சம் ரூபாய்க்குத் திட்டம் போட்டுச் சில பார்ப்பனர்கள் வெளிக்கிளம்பி இருப்பது பார்ப்பனர் களின் சமார்த்தியமா, பார்ப்பனரல்லாதார் களின் முட்டாள்தனமா என்பது நமக்குப் பூரணமாய் விளங்க வில்லையானாலும் ஒருவாறு இது பார்ப்பன ரல்லா தர்களின் முட்டாள்தனமான இளிச்சவாய்த் தன்மை என்றே சொல்ல வேண்டும். பார்ப்பனர்கள் வந்து எதற்காகப் பணம் வேண்டுமென்று கேட்டாலும் நம்மவர் கள் கொடுக்கத் தயாராயிருக்கிறார்கள். வருணாசிரம மாநாடு நடத்தப் பார்ப்பனர்களுக்குப் பணம் கொடுக்கும் பார்ப்பனல்லாதவர்கள், இந்திக்குப் பணம் கொடுப்பது ஒரு அதிசயமல்ல. எனவே பணம் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும், இந்தியினுடை யவும், இந்தி பிரச்சாரத்தினுடையவும் ஆன புரட்டையாவது பொது ஜனங்கள் அறியட்டுமென்றே இதை எழுது கின்றோம்.

முதலாவது இந்திபாஷை என்றால் என்ன? அதற்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் என்ன சம்பந்தம்? அதைப் படித்ததினால் தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்படும் பயன் என்ன?...

இந்தி பாஷை என்பது தமிழ் மக்களுக்கு விரோத மான ஆரிய பாஷையாகும். அதிலுள்ள வாசகங்கள் முழுவதும் புராணங்களும் மூடப்பழக்க வழக்கங்கள் கொண்டதும், பார்ப்பனர்களின் உயர்வுக்கு ஏற்படுத் தப்பட்டதுமாகும்.

“இப்போது தமிழ்நாட்டில் இந்தி பாஷை பரப்ப வந்திருப்பதுதென்பது தற்காலம் தமிழ்நாட்டில் உள்ள உணர்ச்சியை ஒழிக்கச் செய்யும் சூழ்ச்சியாகும். ஆதலால் இதற்கு எந்தப் பார்ப்பனல்லாதாராவது பணம் கொடுத்தால் அது பெரிய சமூகத் துரோகமாகும்.”

ஆக சுயமரியாதை இயக்கம் தொடங்கியது முதலே தமிழை ஆதரித்தும் இந்தியை எதிர்த்தும் வந்திருப் பதை அறியலாம்.

- தொடரும்

Pin It