ஒடுக்கப்பட்டோர் வாழப் பொறுக்காத உச்சநீதிமன்றம்

ஒடுக்கப்பட்டோரை ஏமாற்றும் சமுதாயத் தலைவர்கள்

இவைதாம் நாம் எதிர்கொள்ளும் சிக்கல்கள்

இந்தியத் துணைக் கண்டத்தில் இந்துச் சமூகத்தில் பிராமண, சத்திரிய, வைசிய, உயர்சாதி வருணத்தினரின் மக்கள் தொகை எந்தக் காலத்திலும் 100-க்கு 18-க்கு மேல் இல்லை.

உழைப்பாளிச் சாதிகளான இந்து மதச் சூத்திரர்களின் எண்ணிக்கை மக்கள் தொகையில் வடநாட்டில் 88 விழுக்காடு; தென்னாட்டில் 97 விழுக்காடு.

இசுலாமிய மதத்தைச் சேர்ந்தவர்களில் இந்து மேல் சாதிகளிலிருந்து இசுலாமாக மாறியவர்கள் வடநாட்டில் அதிகம் பேர். தென்னாட்டில் சாதிக் கொடுமை தாங்காமல் இசுலாமாக மாறியவர்களில் அதிகம்பேர் சூத்திரச் சாதிகளையும் தீண்டப்படாத சாதிகளையும் சேர்ந்தவர்கள். அதேபோல் வெள்ளையனிடம் நன்மை அடையக் கருதிக் கிறித்தவர்களாக மாறிய மேல்சாதிக்காரர்கள் தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் மற்ற தென் மாநிலங்களிலும் அதிகம் பேர். அதேபோல் ஏறக்குறைய இன்றுள்ள கிறித்தவர்களில் 100-க்கு 80 பேர் தீண்டப்படாத வகுப்புகளிலிருந்தும், பிற்படுத்தப்பட்ட வகுப்புகளிலிருந்தும் மதம் மாறியவர்களே ஆவார்கள். அதேபோல் இந்துக்களாக இருந்து சீக்கியர்களாக மாறியவர்களில் அதிகம் பேர் மேல் சாதிக்காரர்கள் ஆவர்; கொஞ்சம் பேர் கீழ்ச்சாதிக்காரர்களும் தீண்டப்படா தவர்களும் ஆவர்.

வட இந்தியாவிலும் தென்னிந்தியாவிலும், 1835இல் வெள்ளைக்காரன் பொதுப் பள்ளிக்கூடம் திறந்த பிறகும், கல்வி கற்க வசதியற்றவர்கள் சூத்திரர்கள்; கல்வி கற்கும் உரிமை மறுக்கப்பட்டவர்கள் தீண்டப்படாதவர்கள்.

சுதேச மன்னர்கள் 600 பேர் ஆண்ட சுதேசி இந்தியப் பகுதியில், 1900-க்கும் 1920-க்கும் இடையில், சூத்திரர்களுக்கும் தீண்டப்படாதவர்களுக்கும் கல்வி பெற உரிமையும் அரசாங்க வேலை பெற உரிமையும் அளித்த மேதைகள் கோல்காப்பூர் சிற்றரசர் சாகுமகாராசாவும்; மைசூர் சிற்றரசர் நான்காவது கிருட்டிணராச உடையாரும், பரோடா மன்னரும் ஆவார்கள்.

1873-க்கும் 1916-க்கும் இடைப்பட்ட காலத்தில் பிரிட்டிஷ் இந்தியாவில் இந்து, இசுலாம், கிறித்தவர், தீண்டப்படாதவர் என்கிற எல்லா வகுப்பினருக்கும் கல்வி உரிமையும் வேலை உரிமையும் வர வேண்டும் என நினைத்தவர்கள் மகாத்மா ஜோதிராவ் புலே, ஸ்ரீ நாராயணகுரு, பண்டித அயோத்திதாசர், டாக்டர் சி. நடேச முதலியார், சர் பி. தியாகராயச் செட்டியார், டாக்டர் தர்வார்டு மாதவன் நாயர் (டி.எம். நாயர்) ஆகிய பெருமக்கள் ஆவர். இவர்கள் சூத்திர வகுப்பினருக்கும் தீண்டப்படாத வகுப்பினருக்கும் சமூகச் சமத்துவ உரிமையும் மதச் சமத்துவ உரிமையும், கல்வி பெறும் உரிமையும், அரசு நிர்வாகப் பதவிகளைப் பெறும் உரிமையும் பெறவேண்டும் என்பதற்காக 1873-க்கும் 1916-க்கும் இடையில் இயக்கம் கண்டவர்கள். அறிவிலும் செல்வத்திலும் சிறந்தவர்களான அம்மேதைகள் தங்களின் அறிவு நுட்பத்தையும், உழைப்பையும், நேரத்தையும், செல்வத்தையும் அந்தக் குறிக்கோளை அடைவதற் காகவே செலவிட்டவர்கள்.

மேற்கண்ட மேதைகளின் குறிக்கோளை ஏற்று, சூத்திர மக்களுக்கும் ஆதிச் சூத்திர மக்களுக்கும் எல்லா உரிமைகளும் வரவேண்டும் என்று தங்களை முழுவதும் ஈடுபடுத்திக் கொண்டு தங்களை அழித்துக் கொண்ட முதலமைச்சர்கள் பனகல் அரசரும் பொப்பிலி அரசரும் மற்றும் அமைச்சர்கள் எஸ். முத்தைய முதலியாரும், பி.டி. இராசனும், ஈ.வெ.ரா.வும் டாக்டர் அம்பேத்கரும் ஆவர்.

பிற்படுத்தப்பட்டவர்கள், பட்டியல் வகுப்பினர், பட்டியல் பழங்குடியினர் ஆகியோருக்கு இடஒதுக்கீடு என்று பேசும் எல்லாச் சமூகங்களைச் சேர்ந்த தலைவர்களும் 1927-க்கும் 1954-க்கும் இடையில் சென்னை மாகாணம் என்கிற பகுதியில் 1937 வரையில் ஆட்சிசெய்த நீதிக்கட்சி என்கிற திராவிடக் கட்சிக்காரர்களும், 1937 முதல் 1954 வரையில் ஆண்ட காங்கிரசுக் கட்சிக்காரர்களும் கல்வியிலும் அரசின் வேலையிலும் 100 இடங்களையும் பங்கிட்டுக் கொடுத்தார்கள் என்கிற பெரிய உண்மையை முதலில் நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.

பொது வாழ்வில் நாணயம் உள்ளவர்களாகவும் கறைபடாதவர்களாகவும் விளங்கிய அவர்கள் தென் னாட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்கள், ஆதித் திராவி டர்கள், இசுலாமியர்கள், கிறித்தவர்கள் ஆகியோருக்குப் போதிய உரிமைகளைப் பெற்றுத்தரப் பாடுபட்டார்கள்.

இந்த நீண்ட இடைவெளியில் 1929 முதல் ஈ.வெ.ரா. வும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரும் நேரடியாகத் தலை யிட்டு வகுப்புவாரி உரிமையைப் பெற்றுத் தந்தார்கள்.

ஈ.வெ.ரா.வும் பொப்பிலி அரசரும் இணைந்து, ஏ. இராமசாமி முதலியாரை இந்திய அரசிடம் தூது அனுப்பி, இந்திய மத்திய அரசின் வேலைகளில் - சென்னை மாகாணத்தின் எல்லைக்குள்ளிருந்த எல்லா அலு வலகங்களிலும் 1. பார்ப்பனர், 2. பார்ப்பனரல்லாத இந்துக்கள் 3. ஆதித் திராவிடர்கள் ஆகியோருக்கு 1935இல் விகிதாச்சார இட ஒதுக்கீடு பெற்றுத் தந்தனர். (வெள்ளையன் வெளியேறியவுடன் 1947 அக்டோபரில் இந்திய அரசின் உயர் பதவிகளில் இருந்த பார்ப்பனர்கள் மேற்கண்ட ஆணையை இரத்து செய்தனர்)

11.8.1943இல் மேதை அம்பேத்கர் மத்திய அரசின் வேலையில் மட்டும் இந்தியா முழுவதும் உள்ள தீண்டப்படாதவர்களுக்கு, 8.33 விழுக்காடு இடஒதுக்கீடு பெற்றுத் தந்தார். அவரே முயன்று, 1946 சூன் மாதத்தில், அதை 12.5 விழுக்காடாக உயர்த்திப் பெற்றார்.

பெரியார் ஈ.வெ.ரா. சென்னை மாகாணத்தில் முதன் முதலாகப் பார்ப்பனரல்லாத பிற்படுத்தப்பட்ட இந்துக் களுக்கு 14 விழுக்காடு இடஒதுக்கீடு பெற்றுத் தந்தார்.

9.12.1946 முதல் 25.11.1949 வரையில் - பணக் காரர்களும், மேல்சாதிக்காரர்களும், மேல்தட்டு இசுலா மியர்களும், மேல்தட்டு கிறித்தவர்களும், பார்ப்பனர் களும் நிரம்பிய அரசமைப்புச் சட்ட உருவாக்க அவை செய்த இந்திய அரசமைப்புச் சட்டம் 1. வருணாசிரமத் தையும் தீண்டாமையையும் கெட்டியாகப் பாதுகாப்பதை யும்; 2. எல்லா மதங்களுக்கான மடங்களும், கோயில் களும், மற்ற நிறுவனங்களும் மாதா கோயில்களும், மசூதிகளும் அப்படியே பாதுகாக்கப்பட உறுதியளிப்ப தையும்; 3. எல்லோருக்கும் குறிப்பிட்ட காலத்தில் எழுத் தறிவு அளிப்பதை வகை செய்யாததாகவும் அமைந்தது.

இவ்வளவு கேடுகள் நிரம்பிய இந்த அரசமைப்புச் சட்டத்தில் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களான 1. பிற்படுத் தப்பட்டவர்கள் 2. பட்டியல் வகுப்பினர் 3. பட்டியல் பழங் குடியினர் ஆகியோருக்கு அரசியல் நிர்வாகப் பதவிகளில் உரிமை பெறுவதற்கு என விதிகள் 16(4), 338(3), (இப்போது 338 (10), என்கின்ற இரண்டு விதிகளை, அரும்பாடுபட்டு அம்பேத்கர் நிறைவேற்றினார் என் றாலும் இவ்வகுப்பினர் கல்வியில் உரிமை பெறுவதற் கான விதி அந்தச் சட்டத்தில் இடம்பெறவில்லை.

இந்தக் குறையை 1950 ஆகஸ்டு முதல் 1950 திசம்பர் வரையில் மாபெரும் மக்கள் இயக்கத்தைத் தமிழகத்தில் நடத்தி அன்றைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய்ப்பட்டேலுக்கும் பண்டித நேருவுக்கும் புரிய வைத்தவர் பெரியார் ஈ.வெ.ரா. ஆவார். அதன் விளைவாகவே இந்த மூன்று வகுப்புகளுக்கும் கல்வியில் இடஒதுக்கீடு அளிக்கும் விதி 15(4) 2.6.1951இல் அரசமைப்புச் சட்டத்தில் புதிராகச் சேர்ப்பதற்கு நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த உரிமைகளைப் பெறுவதற்கான இயக்கம் மேதை அம்பேத்கர் 1956இல் மறையும் வரையில் - டாக்டர் இராம் மனோகர் லோகியா 1967இல் மறையும் வரையில் வட இந்தியாவில் உயிரோட்டத்துடன் செயல் பட்டது; பின்னர் மங்கியது.

நீண்ட நெடிய வாழ்வுபெற்று 1973 வரையில் வாழ்ந்த பெரியார் ஈ.வெ.ரா. அவர் வாழ்ந்த காலத்திலேயே தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கும் 31 விழுக்காடும் ஆதித் திராவிடர்களுக்கு 16 விழுக்காடும் முதலமைச்சர் மு. கருணாநிதி ஆட்சியில் பெற்றுத் தந்தார்.

பெரியாரின் வழிவந்த வே. ஆனைமுத்து, சேலம் அ. சித்தய்யன் இருவரும் முயன்று, 19.8.1979க்கும் 7.10.1979க்கும் இடைப்பட்ட காலத்தில் செய்த முயற்சியினால் அமைச்சர் பண்ணுருட்டி ச. இராமச் சந்திரன் மூலமாக முதலமைச்சர் எம்.ஜி.இராமச்சந்திர னுக்குப் புரிய வைத்தனர். அதன் பயனாகப் பிற்பட்டோ ருக்குத் தரப்பட்ட 31 விழுக்காட்டை 50 விழுக்காடாக உயர்த்தி, 1979 திசம்பர் இறுதியில் எம்.ஜி.ஆர் ஆணை யிட்டார்.

ஆனால் இந்திய மத்திய அரசில் கல்வியிலும் வேலையிலும் இடஒதுக்கீடு வர வேண்டும் என்பதற்காக வே.ஆனைமுத்து தலைமையில் இயங்கும் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியும்; வே. ஆனைமுத்து, இராம் அவதேஷ்சிங் ஆகிய இருவரின் தலைமையில் இயங்கும் அனைத்திந்தியப் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர் மதச் சிறுபான்மையினர் பேரவையும் மட்டுமே 8.5.1978இல் இந்தியச் குடியரசுத் தலைவரிடம் இதற்கான கோரிக்கையை வைத்தது; அன்றைய இந்திய உள்துறை இணை அமைச்சர் தனிக் லால் மண்டலுக்குப் (D.L.Mandal) புரிய வைத்தது; பல கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் புரிய வைத்தது. அத்துடன் 17.9.1978 முதல் 31.10.1978 முடிய, பீகார் மாநிலம் முழுவதும் எழுச்சி மிக்க பரப்புரை செய்தது; 10 ஆயிரம் பேர் பாட்னாவில் சிறைப்பட்ட போராட்டத்தினை நடத்தியது. அந்தப் போராட்டத்தை அடக்குவதற்காகப் பிரதமர் மொரார்ஜி தேசாய் 1978 அக்டோபரில் பீகாரில் பயணம் செய்தார். ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் அவரை எந்த ஊரிலும் பேசவிடாமல் திருப்பி அனுப்பினர். அதில் பாடம் கற்ற பிரதமர் மெரார்ஜி தேசாய் இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் குழு அமைக்கப்படும் என்று 29.12.1978இல், நாடாளு மன்றத்தின் மக்களவையில் அறிவித்தார். 1.1.1979இல் பிந்தேசுவரி பிரசாத் மண்டல் (B.P.Mandal) தலைமையில் அக்குழு அமைக்கப்பட்டது. அக்குழு, 31.12.1980இல் தம் பரிந்துரை அறிக்கையைப் பிரதமர் இந்திரா காந்தியிடம் அளித்தது.

31.12.1980 வரையில் திராவிடர் கழகமோ, தி.மு.க.வோ, அ.தி.மு.க.வோ வேறு எந்த ஒரு சாதிச் சங்கமோ இது பற்றிச் சிந்திக்கவே இல்லை. இது ஒரு வரலாற்று உண்மை. 1981 முதல் இவர்களும் இதில் அக்கறை கொண்டார்கள் என்பது உண்மை.

ஆயினும் 26.1.1982இல் குடியரசு நாளைத் துக்கநாளாக மா.பெ.பொ.க. கொண்டாடி, கருப்புக் கொடி உயர்த்திய நிலையில், அன்றைய இந்திய உள்துறை அமைச்சர் கியானி ஜெயில்சிங் வே.ஆனைமுத்துவை அதிகாரப்பூர்வமாக அழைத்து, புது தில்லியில் 25.1.1982 இல் பேசினார். அவர் இக் கோரிக்கையில் உள்ள நியாயத்தை மனதார உணர்ந்தார். மா.பெ.பொ.க 29.4.1981இல் புது தில்லியில் நடத்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், 15 உறுப்பினர்கள் பங்கேற்ற னர். அவர்களுள் முதன்மையாக அலகாபாத் ஜெய்பால் சிங் கஷ்யாப், நாள்தோறும் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியதன் விளைவாகவும், 4.4.1982இல் ஜெயில்சிங் அவர்களை வே.ஆனைமுத்து சந்தித்து வற்புறுத்தியதன் காரணமாகவும் 30.4.1982இல் கியானிஜெய்சிங் நாடாளுமன்றத்தில் மண்டல் அறிக்கையை வெளியிட் டார். அதில் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறபடி 27 விழுக்காடு இடஒதுக்கீட்டினை அமல்படுத்த உறுதி கூறினார்.

ஆனால் 1984 அக்டோபர் வரையில் பிரதமராக இருந்த இந்திராகாந்தியோ பின் 1989 வரையில் பிரதமாக இருந்த இராஜிவ் காந்தியோ இதில் அக்கறை கொள்ளவில்லை. 1989, 1990இல் பிரதமராக இருந்த பிரதமர் விசுவநாத பிரதாப் சிங் 6.8.1990 இல், அரசின் வேலையிலும் பொதுத் துறைகளின் வேலையிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடு இடங்கள் ஒதுக்கீடு செய்து அறிவித்தார்; அவர் பிறப்பித்த ஆணையில் கல்வியில் இடஒதுக்கீடு தரப் படவில்லை. இந்த ஆணையை எதிர்த்து இந்திரா சஹானி என்பவர் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், 16.11.1992இல் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

9 நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதி களின் அமர்வு 16.11.1992இல் அளித்த அத்தீர்ப்பு மிகவும் கொடுமையானது. ஏன்?

1. 1963இல் பாலாஜிக்கு எதிராக மைசூர் அரசு தொடுத்த (Balaji Vs Mysore) வழக்கில்தான், உச்சநீதி மன்றம் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர் ஆகிய மூவருக்குமான இடஒதுக்கீடு, எந்தக் காரணத்தைக் கொண்டும் 50 விழுக்காட்டுக்குக் குறைவாகவே எப்போதும் இருக்க வேண்டும் என்று தீர்ப்பளித்ததை 16.11.1992 தீர்ப்பு மீண்டும் உறுதி செய்தது.

2. பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை, இடஒதுக்கீட்டை அமல்படுத்தும்போது, மத்திய அரசிலும் மாநில அரசிலும் அவர்களை நீக்கி விட்டுத்தான் அமல்படுத்த வேண்டும் என்று தீர்ப் பளித்தது.

3. அரசின் வேலையில் பதவி உயர்வில் இடஒதுக்கீடு அளிக்கப்படுவது. 16.11.1997க்குப் பிறகு செல்லாது என்று தீர்ப்பளித்தது. இதனால் விளைந்த பெருங்கேடுகளைப் பற்றி பட்டியல் வகுப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களோ, சமுதாயத் தலைவர்களோ ஆழ்ந்த அறிவைக் கொண்டும் உண்மையான அக்கறை கொண்டும் சிந்திக்கவோ செயல்படவோ இல்லை என்பது உறுதி.

இந்துக்களிலும் இசுலாமியர்களிலும் கிறித்தவர் களிலும், சீக்கியர்களிலும் சேர்ந்து 52 பேர் பிற் படுத்தப்பட்ட வகுப்பினர் என்று அடையாளம் காணப்பட்ட நிலையில், அவர்களுக்கான இடஒதுக்கீடு மட்டும் ஏன் 27 விழுக்காட்டுடன் நிறுத்தப்பட வேண்டும் என்று எவரும் இன்றுவரை சிந்திக்கவில்லை. அவர்களுக்கு 52 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் - அதற்கேற்ப அரசமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்கின்ற உணர்ச்சி எவருக்கும் வரவில்லை.

மேல்சாதிகளைச் சேர்ந்த குடும்பங்களில் 100-க்கு 90 குடும்பங்களில் - தந்தை ஆசிரியர், தாய் எழுத்தர், மூத்த மகன் பொறியாளர், இளையமகன் வழக்குரைஞர், மூத்தமகள் பேராசிரியர், இளையமகள் இடைநிலை ஆசிரியர்; பேரன் பொறியியற் கல்லூரி, மாணவர், பேத்தி மருத்துவக், கல்லூரி மாணவி என்று படிப்பிலும் உயர்ந்து பதவியிலும் உயர்ந்து பொருளாதாரத்திலும் வளர்ந்து இருக்கிற மேல்சாதிக்கார மாணவன் 51 விழுக்காடு பொது இடங்கள் என உள்ளதில் என்றைக்கும் போட்டியிடலாம், இடம் பெறலாம்; வேலைக்குத் தெரிவு செய்யப்படலாம் என்றிருக்கிறபோது - பிற்படுத்தப்பட்ட வகுப்பில் முதலாவது தலைமுறையைச் சேர்ந்தவனா கவும், இரண்டாவது தலைமுறையைச் சேர்ந்தவனா கவும் உள்ள மாணவனும் மாணவியும் ஏன் தெரிவு செய்யப்படக்கூடாது என்கின்ற அறிவு மேல்சாதிக்கார அறிவுத் திருடனுக்கு வரவில்லை; பிற்படுத்தப்பட்ட சாதிமூடனுக்கும் வரவில்லை.

3. பதவி உயர்வில் இடஒதுக்கீடு என்பது பட்டியல் வகுப்பாருக்கும் பழங்குடிகளுக்கும் - மத்திய அரசின் வேலையில் மட்டும் - 1955இல் நடப்புக்கு வந்தது.

தமிழ்நாட்டிலும் பீகாரிலும் மட்டும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர் ஆகிய மூன்று வகுப்பினருக்கும் வருவாய்த் துறை, ஆவணப் பதிவுத்துறை, வணிகவரித்துறை, நெடுஞ்சாலைத்துறை போன்ற துறைகளில் பதவி உயர்விலும் இடஒதுக்கீடு நடப்பில் இருந்தது. 16.11.1992இன் தீர்ப்பின் விளைவாக மேலே கண்ட எந்த ஆணையும் அமலுக்கு வராது என்கின்ற பெரிய கேடு நேரிட்டது.

அந்தக் கேட்டை நீக்க வேண்டும் என்கிற அறிவு எந்தப் பிற்படுத்தப்பட்டவருக்கும் இன்றுவரை வரவில்லை.

ஆனால் பட்டியல் வகுப்பினருக்கும் பழங்குடியினருக் கும் அந்த உணர்வு உடனடியாக வந்தது. அந்த இரண்டு வகுப்புகளையும் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 119 பேர் அன்றைய குடிஅரசுத் தலைவர் ஆர். வெங்கட்டராமனைச் சந்திக்கச் சென்றனர். அவர் சந்திக்க முடியாது என்று மறுத்துவிட்டார். பிரதமர் நரசிம்மராவ் அவர்களுடைய கோரிக்கையை ஏற்றுக் கொண்டார். பிரதமரிடமோ, குடி அரசுத் தலைவரிடமோ, நாடாளுமன்ற உறுப்பினர்களிடமோ, பிற்படுத்தப்பட்ட வர்களின் நலனுக்காகப் பாடுபடுவதாகச் சொல்லும் சமாஜ்வாடி கட்சி, ராஜ்ய ஜனதா தளம், தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க. முதலான எந்தக் கட்சியும் நாடாளுமன்றத்தில் இந்தக் கோரிக்கையை முன்வைக்கவில்லை.

இது நிற்க. பட்டியல் வகுப்பாருக்கும் பழங்குடி வகுப்புகளுக்கும் பாடுபட்ட கட்சியினர் அரசமைப்புச் சட்டம் பற்றித் தெரியாத மூடர்களாக இருந்த காரணத்தால் அரசமைப்புச் சட்டத்தில் விதி 16 (4A) என்கிற மூடத்தனமான விதியை 1995 சூன் மாதம் நிறைவேற்றினர். “இது சட்டம் தெரியாத நாடாளுமன்றத் தால் செய்யப்பட்ட சட்டம்” என்று 1995 சூலை, ஆகஸ்டு மாதங்களிலேயே நாம் குறிப்பிட்டோம் நாம் குறிப்பிட்டபடியே, பிரிவு 16 (4A) செல்லாது என்று, 1999 இறுதியில் உச்சநீதிமன்றம் தெளிவாகக் கூறியது. அதை எதிர்கொள்ள பட்டியல் வகுப்பினரும் பழங்குடியினரும் தீவிரமாக முயன்றனர். உண்மையில் பதவி உயர்வில் பட்டியல் வகுப்பினருக்கும் பழங்குடிகளுக்கும் இடஒதுக்கீடு அளிப்பதற்கு எப்படிச் சட்டம் செய்ய வேண்டும் என்று 2.1.2000இல் வேதாரண்யத்தில் நடைபெற்ற மா.பெ.பொ.க. மாநாட்டில் பின்கண்டவாறு தீர்மானத்தை நிறைவேற்றியது.

“....... பட்டியல் குலத்தினர், பழங்குடியினர் ஆகிய இரு பிரிவினருக்கும் பதவி உயர்வில் தொடர்ந்து இடஒதுக்கீடு தருவதற்கு, 1995இல் வழிசெய்யப்பட்டது. இதற்குப் பிறகும் உச்சநீதிமன்றம் அரசியல் சட்டவிதி 335 என்பதில் “இவர்களுக்குத் தகுதி திறமை பார்த்துத்தான் பதவி தரவேண்டும்” என்று இருக்கிற ஏற்பாட்டைக்காட்டிப் பதவி உயர்வில் இவர்களுக்கு ஒரு தடவைக்கு மேல் இடஒதுக்கீடு தரக்கூடாது என்று 1999இல் தீர்ப்புக் கூறிவிட்டது. இது இவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும். இதை இன்றைய பாரதிய சனதா அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டாலும் கூட, விதி 335 என்பதைச் சட்டத்திலிருந்து அடியோடு நீக்க வேண்டும் என்று கருதவில்லை.

“எனவே பட்டியல் குலத்தினர், பழங்குடியினர் இவர்களை மட்டுமே குறிவைத்துக் கீழே தள்ளுகிற விதி 335 என்பதை அரசியல் சட்டத்திலிருந்து அடியோடு நீக்குவதற்கு இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்தி வேண்டிக்கொள் கிறது”

மேலே கண்ட தீர்மானத்தைத் தமிழ்நாட்டைச் சேர்ந்த 57 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அப்போதே மா.பெ.பொக.க. அனுப்பிவைத்தது.

சட்டம் தெரியாத நாடாளுமன்ற உறுப்பினர்கள், இதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, அடுத்த 6 மாதங் களிலேயே, 9.6.2000 அன்று 16 (4B) என்கிற முட்டாள் தனமான ஒரு விதியை அரசமைப்புச் சட்டத்தில் சேர்த்தனர். விதி “335 நீக்கப்படாத வரையில் இப்படிப் பட்ட சட்டம் எதுவும் செல்லுபடியாகாது” என்று நெற்றியில் அடித்தாற் போல அடுத்த மாதமே உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அப்படிக் கூறிய பிறகும் நாடாளு மன்றத்துக்கு அறிவுத் தெளிவு ஏற்படவில்லை. ஏன்?

விதி 335 என்பது மேதை அம்பேத்கர் காலத்திலேயே செய்யப்பட்டதுதான். அது பட்டியல் வகுப்பாருக்கும் பழங்குடியினருக்கும் எதிரானதுதான். ஆனால் அவர் காலத்தில் செய்யப்பட்ட சட்டமாயிற்றே என்ற மூடநம்பிக் கைக்கு எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆளாகிவிட்டனர்.

மேதை அம்பேத்கர் அறிவு நாணயத்துக்கு இலக்கண மாகத் திகழ்ந்தவர். அவர், “நான் ஒரு வாடகைக்காரன் போலச் செயல்பட்டேன். என் விருப்பத்துக்கு மாறாக, எதையெல்லாம் எழுதச் சொன்னார்களோ, அதையெல்லாம் நான் எழுதினேன்” - என்று 2.9.1953 அன்று நாடாளுமன்ற மேலவையில் தயங்காமல் தன்னிலை விளக்கம் அளித்துவிட்டார். இந்தச் சூழலில், விதி 335அய் நீக்குவதற்கு மாறாக, 2003, 2004இல் விதி 335இல் பகுதித்திருத்தம் மட்டுமே செய்தனர். இந்த உண்மைகளை எல்லாம் இன்றையப் பிரதமர், உள்துறை அமைச்சர், சட்ட அமைச்சர், இன்று பதவி உயர்வில் இட ஒதுக்கீடு தர சட்டத்திருத்த வரைவை முன்மொழிந்த பணியமர்த்தம் மற்றும் பயிற்சித் துறைக் கான இணை அமைச்சர், எல்லாச் சமூகங்களையும் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிற்படுத்தப்பட்ட பட்டியல் வகுப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் தெளிவாகப் புரிந்து கொண்டு, முதலில் விதி 335ஐ நீக்க வேண்டும்.

நீக்கிவிட்ட அடுத்த கட்டத்தில் - “பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர் ஆகிய 3 பிரிவினருக்கும் மத்திய அரசிலும் மாநில அரசுகளிலும் அந்தந்த வகுப்பினரின் மக்கள் தொகை விழுக்காட்டிற்குச் சமமாகப் பதவி உயர்வில் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும். அதை இந்தச் சட்டத்திலுள்ள எந்த விதியும் தடுக்காது” என்று மட்டுமே சட்டம் செய்ய வேண்டும்.

இந்தக் கோரிக்கையை முன்வைத்து மட்டுமே முலாயம் சிங், லல்லு பிரசாத் யாதவ், சரத் யாதவ், மாயாவதி, இராம் விலாஸ் பஸ்வான் முதலான பிற்படுத்தப்பட்ட, பட்டியல் வகுப்புகளின் பதவி வெறியர்கள் - பணக் கொள்ளையர்கள் கோரிக்கைகளை, முன் வைக்க வேண்டும்; போராட வேண்டும். தென்னாட்டில் உள்ள கலைஞர் மு. கருணாநிதி, செல்வி ஜெயலலிதா, மருத்துவர் ச. இராமதாசு, தொல் திருமாவளவன் முதலான பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் பட்டியல் வகுப்புகளின் தலைவர்கள் தாங்களாக முன்வந்து இப்படிக் கோரிக்கை வைக்க வேண்டும்; போராட வேண்டும்.

இதற்கு மாறாக, இன்று நாடாளுமன்றத்தில் நடந்த காட்டுமிராண்டித்தனமான செயல்கள் எதற்காக நடக்கின்றன? பகுசன் சமாஜ் கட்சித் தலைவி மாயாவதி அவருடைய சென்ற பருவ ஆட்சிக் காலத்தில் உத்தரப் பிரதேச மாநில அரசின் வேலைகளில் எல்லாத் துறை களிலும் பட்டியல் வகுப்பாருக்கும் பழங்குடிகளுக்கும் இடஒதுக்கீடு தந்து ஆணை பிறப்பித்துவிட்டார். அதன்பேரில் எழுந்த வழக்கில் அந்த ஆணை தள்ளுபடி செய்யப்பட்டது. எனவே அந்தத் தீர்ப்பை எதிர்த்து மாயாவதி போர்க்கொடி தூக்கினார். இன்று ஒட்டுமொத்த மாகவே மத்திய அரசிலும் மாநில அரசுகளிலும் பட்டியல் வகுப்பாருக்கும் பழங்குடிகளுக்கும் பதவி உயர்வில் இடஒதுக்கீடு செல்லாது என்கிற ஈன நிலைமை உருவாகிவிட்டது.

இதற்கான சட்டத் திருத்தத்தை பிரதமர் அலுவலகத் தைச் சேர்ந்த பணியமர்த்தம் மற்றும் பயிற்சித் துறையின் இணை அமைச்சர் நாராயணசாமி முன் மொழிந்தார்.

அவர் 18.11.2008இல் மாநிலங்களவையில், நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே. அரங்கராசன் கேட்ட கேள்விக்கு அளித்த விடையில் உள்ள விவரங்களை ஆய்வு செய்யாமலே ஒரு மசோதாவை முன்மொழிந்தார்.

அவர் தந்த விவரம் என்ன? இந்திய அரசில் 1.11.2008இல் உள்ள நிலவரப்படி, முதல்நிலைப் பதவிகளின் மொத்த எண்ணிக்கை 97,951 ஆகும். இது வரை பெரிய எண்ணிக்கையில் - பட்டியல் வகுப்பாருக்கு 12281 இடங்கள்; பழங்குடியினருக்கு 4754 இடங்கள்; பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 5331 இடங்கள் ஆக 22,366 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. மீதம் உள்ள 75,585 இடங்கள் இந்து, கிறித்துவ, இசுலாமிய உயர்சாதி, மேல்தட்டு மக்களுக்கே கிடைத்துள்ளன என்பது அமைச்சருக்குப் புரிந்திருக்க வேண்டும்.

அதாவது 82.5 விழுக்காடு உள்ள ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களுக்கு 1943 முதலும், 1994 முதலும் வேலை அமர்த்தத்தில் இடஒதுக்கீடுதரப்பட்டும் - கடந்த 62 ஆண்டுக் காலத்தில், 22,366 முதல்நிலைப் பதவிகளே கிடைத்துள்ளன. ஆனால் வெறும் 17.5 விழுக்காடு மக்கள் தொகை உள்ள இந்து, இசுலாமிய, கிறித்துவ, சீக்கிய முற்பட்ட சாதியினரால் 75,585 பதவிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. வெகு மக்களுக்கு எதிரான - அவலமான நிலை இது.

நிர்வாகத்தில் உரிய பங்கு வரவேண்டும் என்பதுதான் இடஒதுக்கீட்டின் நோக்கமாகும். அப்படி வராதது சட்டத்துக்கு எதிரானது; மக்கள் நாயகத்துக்கு எதிரானது; வெகுமக்களுக்கு எதிரானது என்கிற புரிதல் பிரதமர் மன்மோகன் சிங், இந்தியச் சட்ட அமைச்சர், இந்திய உள்துறை அமைச்சர், இந்திய சமூக நீதி மற்றும் அதிகாரப் பகிர்வு அமைச்சர், ஆளும் அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி முதலான மரமண்டைகளுக்கு வர வேண்டும். அப்படி யெல்லாம் வராததால்தான் 2012 திசம்பரில் நாடாளு மன்ற நடவடிக்கைகள் சிரிப்பாய்ச் சிரித்துப்போய் விட்டன.

“முசுலீம்களுக்குத் தனி இடஒதுக்கீடு கொடுங்கள்” என்று கோருகிற முலாயம்சிங் வெறும் 18 விழுக்காடு முசுலீம் வாக்குகளைக் குறிவைக்கிற முலாயம்சிங் உத்தரப்பிரதேசத்தையும் வீணாக்குகிறார்; இந்திய ஒடுக்கப்பட்டோர் இயக்கத்துக்கு எதிராகச் செயல்படுகிறார்; பட்டியல் வகுப்பினருக்கும் பழங்குடிகளுக்கும் பதவி உயர்வில் இடஒதுக்கீடு கொடுக்கக்கூடாது என்று ஒற்றைக் காலில் நிற்கிறார்.

உத்தரப்பிரதேசத்தில் ஏறக்குறைய 20 விழுக்காடு உள்ள பார்ப்பனர், சத்திரியர், வைசியர், பூமிகார் ஆகியோரின் வாக்கு வங்கியைக் குறிவைத்து உத்தரப்பிர தேசத்தின் பிற்படுத்தப்பட்டோரை வன்மையாக எதிர்கிறார் மாயாவதி. அவர் இப்போது, “பிற்படுத்தப்பட்டோருக்கும் பதவி உயர்வில் இடஒதுக்கீடு தாருங்கள்” என்கிறார். இந்த இரண்டு பெரும் ஊழல் பெருச்சாளிகளான - பணம் கொள்ளையர்களான இரண்டு தலைவர்களும் இந்திய அரசு கையில் வைத்திருக்கிற சி.பி.ஐ. நடவடிக்கை என்கிற சாட்டைக்கு அஞ்சி, இன்றைய மக்கள் விரோத அரசான மன்மோகன் அரசுக்கு முட்டுக்கொடுக்கிறார்கள்.

இந்தியாவில் 20 கோடி மக்களைக் கொண்டு, பெரிய மாநிலமாக விளங்குகிற உத்தரப்பிரதேசம் எல்லா நிலைகளிலும் இவர்களால் பாழடிக்கப்பட்டு வருகிறது. கருநாடகத்திலும், ஆந்திராவிலும், தமிழகத்திலும், பீகாரிலும் உள்ள பிற்படுத்தப்பட்ட - பட்டியல் வகுப்புத் தலைவர்கள் உத்தரப்பிரதேசத்தைப் போலவே, வெகு மக்களுக்கு விரோதமாக உள்ள இந்திய அரசுக்கு நல்ல அடிமைகளாகவே நடந்துகொள்கிறார்கள். இவை கடும் கண்டனத்துக்கு உரியவை.

இது பற்றி நாம் எல்லோரும் மேற்கொள்ள வேண்டிய நிலைப்பாடு என்ன?

அரசுக் கல்வியிலும் அரசு வேலையிலும் 100 விழுக்காடு இடங்களையும் பங்கிட்டுத் தாருங்கள்! எல்லா வகுப்புகளுக்கும் விகிதாசாரப் பங்கீடு தாருங்கள்!

இந்திய அரசில்:

இந்து, இசுலாமிய, சீக்கிய கிறித்துவப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 57%

இந்து, இசுலாமிய, சீக்கிய, கிறித்துவ முற்பட்ட வகுப்பினருக்கு    17.5%

பட்டியல் வகுப்பினருக்கு    17%

பட்டியல் பழங்குடி வகுப்பினருக்கு 8.5%

மொத்தம்  100%

தமிழ்நாட்டு அரசில்

இந்து, இசுலாமிய, கிறித்துவப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு   25%

இந்து, இசுலாமிய, கிறித்துவ மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு    45%

இந்து, கிறித்துவ முற்பட்ட வகுப்பினருக்கு     10%

பட்டியல் வகுப்பினருக்கு    19%

பட்டியல் பழங்குடி வகுப்பினருக்கு 1%

மொத்தம்  100%

இந்திய அரசினரே! இவற்றை நிறைவேற்றிட ஏற்றபடி, இந்திய அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துங்கள்!

தமிழக அரசினரே! இந்திய அரசமைப்புச் சட்டத்தைத் திருத்திட வழி காணுங்கள்!

ஒடுக்கப்பட்ட வகுப்பினரே! ஒன்று திரண்டு போராடுவோம் வாருங்கள்!

வே.ஆனைமுத்து

Pin It