விமர்சனம் எழுதுவதற்குத் தகுதியான திரைப்படங்கள் வருவது மிகவும் குறைந்து விட்டது. பட உருவாக்குநர்களும், இயக்குநர்களும் “ஏற்கெனவே மனம் நொந்து போயிருக்கும் மக்களை மேலும் துன்பத்தில் ஆழ்த்தாமல் ஒரு இரண்டு மணி நேரமாவது கவலைகளை மறந்து சிரிக்க வைக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தான் மக்கள் விருப்பப்படிப் படங்களை எடுக்கிறோம்” என்று கூறுகிறார்கள். ஆனால், அது உண்மை அல்ல என்றும், மக்கள் தங்கள் உரிமைகளின்பால் சிந்திக்க விடாமல் தடுத்து என்றுமே மயக்கத்தில் வைத்திருப்பதற்காகத்தான் என்பதையும் டாக்டர். பாபா சாகேப் அம்பேத்கர் படத்தைப் பார்க்க முனைந்தபோது தெரிந்தது. இது போன்ற படத்தை மக்கள் வரவேற்கவே செய்கிறார்கள். ஆனால், திரைப்படத் துறையினர்தான் இதில் தயக்கம் காட்டுகிறார்கள்.

இப்படம் 2000ஆவது ஆண்டில் மகாராட்டிர மாநில அரசின் உதவியோடு எடுக்கப்பட்டு இருக்கிறது. அதைத் தமிழில் தமிழ்நாட்டில் திரையிடப் பத்து ஆண்டுக் காலம் தேவைப்பட்டு இருக்கிறது. அதுவும் மிகமிகக் குறைந்த விளம்பரத்துடன். திசம்பர் 3ஆம் நாள் திரையிடப்பட்டது என அறிந்து எப்பொழுது பார்க்கலாம் என்று நினைப்பதற்குள் ஒரு திரையரங்கில் நாளைக்கு ஒரு காட்சி வீதமாக மூன்று நாட்கள் போட்டுவிட்டு அப்புறம் முடியாது என்று கூறிவிட்டார்கள். இன்னொரு அரங்கில் அதேபோல் மூன்று நாட்களில் முடித்துவிட்டு மீண்டும் பெரிய மனது பண்ணி 11, 12 தேதிகளில், காலை 9.15 மணிக் காட்சியில் திரையிட்டார்கள். 9.15 மணிக்காட்சி என்பது பழக்கத்தில் இல்லாத ஒன்று. ஒரு படத்தைப் பார்த்த உடனேயே புரட்சி பிய்த்துக் கொண்டு வந்துவிடும் என்பது போல் ஏன் தான் இப்படி அஞ்சுகிறார்களோ தெரியவில்லை.

சரி! படத்திற்குக் கூட்டம் வராததால் நடத்த முடியவில்லை என்று கூறலாம் என்று பார்த்தால், அப்படியும் முடியவில்லை. இப்படத்திற்கு வந்த கூட்டத்தில் பத்தில் ஒரு பங்கு கூட்டம் வருவதைக் கொண்டே பல படங்களைப் பல நாட்களுக்கு ஓட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆதிக்கச் சாதியினரை இவ்வளவு அச்சுறுத்திய இப்படத்தின் திறனாய்வு எழுதப்படுவது சிறப்பான ஒன்றே.

இப்படம் மூன்று மணி நேரம் ஓடுகிறது. அம்பேத்கர் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை மிகவும் அடர்த்தியாகக் காண்பித்து இருக்கிறார்கள். மூன்று மணிநேரத்தில் இவ்வளவு நிகழ்வுகளை உள்ளடக்கி எடுத்து இருப்பது ஒரு பெரிய சாதனை. ஒவ்வொரு நிகழ்வையும் ஆர்வம் குன்றாமல் பார்க்கும்படியாக அமைத்திருப்பது இரட்டிப்புச் சாதனை.

அம்பேத்கர் வாழ்வில பணம் இல்லாமல், மனைவியைப் பிரிந்து வாழ்தல், மகன்களைச் சாவில் பறிகொடுத்தல் முதலியவற்றால் படும் துன்பங்களைக் காட்டும் காட்சிகள் நெஞ்சை உருக வைக்கின்றன. அவர் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவர் என்பதனால் அவருடைய மேதைமையை ஏற்க மறுக்கும் காட்சிகளைக் காட்டும் பொழுது இன்னும் நிலைமை அப்படித்தானே இருக்கிறது என்று மன வருத்தம் தான் மிஞ்சுகிறது.

ஒரு கட்டத்தில் தனக்குக் கிடைக்க வேண்டிய உணவு அம்பேத்கருக்குச் சென்றுவிட்டது என்பதை அறிந்த வெள்ளைக்காரர் ஒருவர் கொதித்து எழுந்து அம்பேத்கரை அவமானப்படுத்துகிறார். அம்பேத்கர் எதிர்த்துச்சீறி மன்னிப்பு கேட்கச் சொன்னவுடன் அவர் மன்னிப்புக் கேட்கிறார். தாங்கள் ஆளும் வர்க்கம் - அடிமை இந்தியர்களில் ஒருவர்தான் அம்பேத்கர் என்றாலும் பொது நாகரிகம் கருதியும், சுற்றிலும் இருந்த வெள்ளைக்காரர்களே தங்கள் நண்பரின் நடத்தையை ஏற்காகாததைக் கண்டும் அந்த வெள்ளையர் மன்னிப்புக் கேட்கிறார். ஆனால் இந்தியாவில் அவ்வாறு முடியாது. அந்த வெள்ளைக்கார இளைஞன் செய்த சாதாரண தவறு போன்றது அல்ல; மிகப் பெரிய குற்றமே இழைத்திருந்தாலும் ஆதிக்கச் சாதியினர் பணிவதே இல்லை என்பது காட்சிகளில் காட்டப்பட்டு இருக்கிறது.

காந்தியை விமர்சித்துக் காட்சிகள் இருப்பது, பொதுவாக இருக்கவே இருக்காது. ஆனால் இப் படத்தில் சில உண்மைகளைத் துணிந்து காட்டி இருக்கிறார்கள். வட்டமேசை மாநாட்டில் காந்தியார் அம்பேத்கரைத் தனிமைப்படுத்த முயன்று தோற்றது, அம்பேத்கரின் வினாக்களுக்கு விடையளிக்க முடியாமல் தவிப்பது, அம்பேத்கரை அழைத்து விட்டு, அவரிடம் பேசாமல் வேறு வேலைகளைப் பார்ப்பது, பின் தான் அழைத்ததையே நினைவின்றி ஏன் வந்தீர்கள் என்று கேட்பது என்பன போன்ற காட்சிகளைக் காட்டியிருப்பது இப்படத்தில்தான்.

அரசமைப்புச் சட்டத்தை ஏற்கும் பொழுது, அம்பேத்கரை மிகவும் புகழ்ந்து அவர் எழுதிய சட்டம் ஆதலால் சிக்கல்கள் எல்லாம் முடிந்துவிட்டன என்பது போன்ற தோற்றத்தை உருவாக்க ஆதிக்கச் சக்திகள் முயலும் போது, “சட்டம் நன்றாயிருப்பது முக்கியமல்ல; அதை நடத்துபவர்கள் நன்றாக இருக்க வேண்டும்” என்றும்; நல்ல சட்டத்தை மோசமானவர்கள் கையாளும்போது தீமையே ஏற்படும் என்றும், சட்டம் மோசமாக இருந்தாலும் அதை நடைமுறைப்படுத்துபவர்கள் நல்லவர்களாக இருந்தால் நன்மை ஏற்படும் என்றும் கூறிச் சட்டத்தைவிட நடைமுறைப்படுத்துபவர்களே முக்கியம் என்று அம்பேத்கர் கூறும் காட்சி மிகவும் அருமை.

இப்படத்தில் ஒரு குறை என்று சொல்ல வேண்டும் என்றால், அது பெரியார் - அம்பேத்கர் தொடர்பு பற்றி ஒரு காட்சியும் இல்லாததுதான்.

மொத்தத்தில் “டாக்டர். பாபா சாகேப் அம்பேத்கர்” படம் ஒரு நல்ல திரைப்படம். எல்லோரும் பார்க்க வேண்டிய சிறந்த திரைப்படம்.

Pin It