தப்பான நீதி சொன்ன
 சாத்திரம், மனுஉ ரைத்த
அக்கால அழுக்கு மூட்டை
 அறமெலாம் மொக்கை என்றே
முப்பாலால் கட்டிப் போட்ட
 முதற்றமிழ்ப் புலவன் இந்நூற்(கு)
ஒப்பேது? குறள்ப டித்தால்
 ஒருதீங்கும் முன்நில் லாது!
ஆரியக் கூட்டம் இங்கே
 அவிழ்த்த பொய்ச் சரக்கே கீதை
காரிருள் நீக்கும் முப்பால்
 கருத்துதான் நமக்குக் கீதை
ஈரடிப் பாட்டி னாலே
 இவ்வையம் அளந்த மேதை
சீர்பெற மண்சி றக்க
 திருக்குறள் ஒன்றே பாதை
பிறப்பொக்கும் யார்க்கும் என்ற
 பெருமகன்; தமிழத் தாயின்
சிறப்புக்கு வைய மாண்பு
 சேர்த்திட்ட தனையன்; வாழ்வின்
இருப்புக்குத் தேவை யான
 எல்லாமும் குறளில் உண்டு
திருக்குறள் நாளும் போற்றிச்
 செய்வோமே மக்கள் தொண்டு!
செங்கதிர் விளைக்கும் நல்ஏர்
 உழவனே உலகிற் காணி
எங்குள மக்கள் தாமும்
 ஏற்கும்நூல் தந்த ஞானி
பொங்கலின் அடுத்தநாள் இப்
 புலவனின் நாளை வைத்தார்
திங்கள்,வான் வாழும் மட்டும்
 வள்ளுவன் புகழும் வாழும்.

Pin It