1.2013 மார்ச்சு 1 முதல் 7 முடிய உள்ள ஏழுநாள்களில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கூடங்குளம் அணுமின் உலையை மூடவேண்டும் என்று கோரியும்; தமிழ்நாட்டு அரசினர் அறிவித்துள்ள கதிரொளி மின் மாற்றித் திட்டத்தை அனைத்துத் தமிழ் மக்களும் மனமார ஏற்றுப் பின்பற்றி வெற்றி பெற்றுத் தமிழ்மக்களின் வருங்காலச் சந்ததிகளுக்கு நல்ல பாதுகாப்புத் தேடிட முன்வரவேண்டுமென்று கோரியும் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியினர் ஒரு குழுவாகச் சென்று தெருமுனைப் பரப்புரை செய்வது எனவும், இது பற்றிய அறிக்கைகளைப் பரப்புவது எனவும் இம்மாநாடு ஒருமனதாக முடிவு செய்கிறது.

2.தமிழ்நாட்டு மாநிலமும் மற்றெல்லா மாநிலங்களும் 1976 வரையில் பொதுக்கல்வி, தொழிற்கல்வித்துறை அதிகாரங் களை முழுமையாகப் பெற்றிருந்தன. 3-1-1977இல், அரசமைப்பின் 42ஆவது திருத்தம் மூலம் இவ்வுரிமை அடியோடு பறிக்கப்பட்டது. இது மக்கள் நாயகத்துக்கு எதிரானது; அந்தந்த மாநில மக்களின் தாய்மொழி, பண்பாடு, தனி வரலாறு இவற்றை முற்றிலுமாக அழிக் கும் தீயஉள்நோக்கம் கொண்டது. எனவே பொதுக்கல்வி, தொழிற்கல்வி, யூனியன் அதிகாரப்பட்டியலிலுள்ள தேசிய உயர்தொழில் நுட்பக்கல்வி ஆகிய எல்லாக் கல்வித்துறை அதிகாரங்களையும் இந்திய அரசு, மாநிலங்களின் அதிகாரப்பட்டியலுக்கு உடனடியாக மாற்றி ஒப்படைத்திட வேண்டும் என்றும், இதற்கான அரசமைப்புச் சட்டத் திருத்தங்களை வரும் 2013 ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றவேண்டும் என்றும் இந்திய அரசினரை இம்மாநாடு வலியுறுத்தி வேண்டிக் கொள்கிறது. மேலும் பொறியியல், மருத்துவப் பட்ட மாணவர் சேர்க்கைக்கு, இந்தியா முழுமைக்குமான ஒரே நுழைவுத் தேர்வு நடத்திட மய்ய அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கை யைப் புறந்தள்ளிவிட்டு, இப்படிப்புகளுக்கான தமிழ்நாட்டி லுள்ள இடங்களைத் தமிழக அரசே சென்ற ஆண்டுகளில் கடைப்பிடித்து வந்த நடைமுறையைப் பின்பற்றி நிரப்பிட ஆவன செய்யுமாறு தமிழக அரசினரை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

                மொழிவழித் தேசியத்தை நிலைநாட்ட வேண்டும் எனப் பாடுபடும் நாடாளுமன்ற அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தல் சாராத மக்கள் அமைப்புகள் ஆகியோர் இக் கோரிக்கைகளுக்கு ஆதரவு நல்க வேண்டுமாய் அன்புடன் வேண்டிக் கொள்கிறது.

3.இந்தியாவிலுள்ள மத்திய - மாநில அரசுப்பணிகளில் போதிய இடப்பங்கீடு பெற்றிராத பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கு, விதிகள் 16(4), 338(3) (இப்போது 338 (10) மூலம் இடப்பங்கீடு பெற, 1950இல் மேதை டாக்டர் பி.ஆர்.அம் பேத்கர் வழி அமைத்தார்.

                இம்மூன்று வகுப்பினருக்கும் கல்வியில் இடப்பங்கீடு பெற்றுத்தர ஏதுவாக, விதி 15(4) என்பது அரசமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்படத், தந்தை பெரியார் 1951இல் ஆவன செய்தார்.

                அரசமைப்புச் சட்டம் 1950 லிருந்து நடைமுறைக்கு வந்து 62 ஆண்டுகள் ஆன பிறகும் வேலையிலும், கல்வியிலும் இம்மூன்று வகுப்பினரும் போதிய இடப்பங்கீடு பெற வில்லை என்பது உறுதி.

                எனவே, மய்ய-மாநில அரசுத்துறைப் பணிகள் எல்லா வற்றிலும் பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர், பிற் படுத்தப்பட்டோர் ஆகிய மூன்று வகுப்பினருக்கும் பதவி உயர்வில் இடஒதுக்கீடுதர ஏற்ற வகையில் அரசமைப்புச் சட்ட விதி 16(4)இல் உரிய திருத்தத்தைச் செய்ய வேண்டும் என்றும்; நாடாளுமன்றத்தின் சென்ற கூட்டத் தொடரில் இதற்காக முன்மொழியப்பட்டுள்ள சட்டத்திருத் தம் இதற்குப் பயன்படாது என்று நாம் கருதுவதுடன், இத்திருத்தம் தடங்கலின்றிச் செல்லுபடி ஆவதற்கு ஏதுவாகப் பட்டியல் வகுப்பினரையும் பட்டியல் பழங்குடி யினரையும் இழிவுக்குள்ளாக்கும் விதி 335 என்பதை அடியோடு அரசமைப்புச் சட்டத்திலிருந்து நீக்கவேண்டும் என்றும் அதன்பிறகு உரிய திருத்தத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் இந்திய அரசினரை இம்மாநாடு வேண்டிக் கொள்கிறது.

4.பாலியல் வன்கொடுமை என்பது, ஆணாதிக்கத்தின் கொடுமையின் கடைசி எல்லையாகும், இந்து, இஸ்லாம், கிறித்துவ மதங்கள் பெண் பிறவியை இழிவாகவே கற்பனை செய்தன; பெண்களை அனுபவிப்புப் பண்டங் களாகவும் பிள்ளைபெறும் தோல் பைகளாகவும் வேதங்கள் கற்பித்தன. கடவுளர்களும் கடவுளச்சி ளுமே காமக் களியாட்டக்காரர்களாகக் கற்பனை செய்யப்பட்டனர். அவரவர் குடும்பத்திலுள்ள பெரியவர் களும், பள்ளி - கல்லூரிப் பாடங்களை உருவாக்கும் அரசும் ஆசிரியர்களும் பிஞ்சு நெங்சங்களில் இவற்றையே படிப்பினைகளாகக் கற்றுக் கொடுத்தனர்.

1935 வரையில் தெருக்கூத்துகளும், அதன்பிறகு திரைப்படங்களும், 1950-70க்குள் தொலைக்காட்சி களும் பெண் மக்களை நுகர்ச்சிக்கான பண்டங் களைப் போலவே சித்திரித்தன.

சொத்து வாரிசு உரிமை ஆணுக்கே இருந்தபோது பெண் - சமத்துவ உரிமையைப் பிறந்த வீட்டிலும் இழந்தாள்; புகுந்த வீட்டிலும் இழந்தாள்.

அரசுப் பணிகளில் அமர்ந்தும், அரசியல் கட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டும் ஒரே இடத்தில் ஆணுடன் தனிமையாக இருக்கும்போதும் நெருங்கிப் பழகும் போதும் ஏற்கெனவே உள்ளத்தில் ஊறிப்போன ஆணாதிக்க உணர்ச்சி காரணமாகக் கண்மண் தெரியாமல் எந்தப் பெண்ணையும் துய்க்க முயலும் நிலைக்குச் சில ஆண்கள் ஆளாகின்றனர்.

இவ்வளவு சமத்துவமற்ற பின்னணிகளுடன் உள்ள சமூக அமைப்பில், 1950க்குப் பிறகு மதுக்குடிக்கு ஆண்களில் சிலர் அடிமைப்பட் டிருந்ததுடன், பெண்களுள் சிலரும் அண்மைக் காலமாக அடிமைப்பட்டனர். பகட்டுக்கும் ஆடம்பரத்துக்கும் சில ஆண்களும் பெண் களும் அடிமைப்பட்டனர். ஒருவரை ஒருவர் உண்மையில் காதலிக்கும்போது, இல்லாததும் பொய்யானதுமான சாதி - உள்சாதி உணர்ச்சி பெரிய கற்சுவராகக் குறுக்கே நின்று தடுக் கிறது. போலியான சாதிப் பெருமையைக் காக்கும் பெற்றோர்களுள், பருவம் அடைந்த தங்களின் ஆணும் பெண்ணும் ஒருவரை யொருவர் விரும்புவதாகத் தெரிந்தால், தொடர்புடைய பெற்றோர்களே முன்வந்து இருதரப்பாருடனும் கலந்துபேசி, காதலர் இருவரும் சம்மதித்தால் மதம் - சாதி - உள்சாதி பார்க்காமல் மற்ற தகுதிகளைப் பார்த் துத் திருமணம் செய்து வைத்திட எல்லாச் சமுகத்தினரும் முன்வரவேண்டும்.

அண்மையில், 16.12.2012 அன்று புதுதில்லியில் மருத்துவக் கல்லூரி மாணவியை நள்ளிரவில் ஓடும்பேருந்தில் அடித்தும் துவைத்தும் பலரால் கற்பழிக்கப்பட்டும் தூக்கியெறியப்பட்ட விலங்காண்டித் தனமான செயலுக்கு, மேலே சொல்லப்பட்ட இவ்வளவு சமூகம் - சட்டம் - அரசியல் - கல்வி - ஊடகங்கள் இருப்பு நிலைகளும் காரணங்களாகும்.

எனவே, இப்படிப்பட்ட இருப்பு நிலைமைகளை மாற்ற வேண்டும் என்று கவலைப்பட்டு அதற்கு ஏதும் செய்யாமலே, இப்படிப்பட்ட கொடூரமான கற்பழிப்பு அல்லது படுகொலை செய்ததற்காகவும் எந்த ஒரு குற்றவாளிக்கும் தூக்குத் தண்டனை அளிப்பதோ, இரட்டை வாழ்நாள் தண்டனை அளிப்பதோ, ஊசி போட்டு ஆண்மையை இழக்கச் செய்வதோ - உண் மையான தீர்வு ஆகாது என இம்மாநாடு கருதுகிறது. மேலே கண்ட துறைகளில் எல்லாத் தன்மையான மானிட உரிமைக்கும், ஆண் - பெண் சமத்துவ உரிமைக்கும் எதிராக உள்ள எதார்த்தமான - கண்கூடான நிலை மைகளை எல்லோரும் சேர்ந்து மூடி மறைக்கவே இப்போதைய நடவடிக்கைகள் பயன் படும். இது ஓர் ஏமாற்று - ஒரு சறுக்கல் திட்டமாகும். எனவே இந்திய அரசினரும், தமிழக அரசினரும்; இந்திய அரசினரால் அமைக்கப்பட்டுள்ள வர்மா குழுவினரும், மேற்கொண் டுள்ள நிலைபாட்டுக்குக் கண்டனம் தெரிவிப்பதுடன் மானிட உரிமைக் காவலர்கள் தூக்குத்தண்டனைக்கு எதிராகவும், ஆண்மை நீக்கத் தண்டனைக் கெதிரா கவும் வலிமையான எதிர்ப்பைக் காட்டுவதுடன், மேலே கண்ட சமூகச் சூழநிலைகள் விரைவில் மாற்றப்படவும்; மனிதரிடையே சமத்துவமும், ஆண் - பெண் இடையே சமத்துவமும் விரைந்து வந்து சேரவும் பாடுபட முன்வர வேண்டும் என, இம்மாநாடு அனைவரையும் வேண்டிக் கொள்கிறது.

5.தமிழ்நாடு, கர்நாடக அரசுகளிடையே உள்ள காவிரி நீர்ப்பங்கீட்டுச் சிக்கலில், 1974 முதல் கடந்த 38 ஆண்டுகளாக நேர்மையான, சட்டப்படியான நடவடிக் கையை மேற்கொள்ளத் தவறியவர்கள் முதலில் இந்திய அரசினரும்; இரண்டாவதாகத் தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியினரும்; மூன்றவதாக, அ.இ.அ.தி.மு.க. ஆட்சியினரும்; நான்காவதாகக் கர்நாடக அரசினரும்; அய்ந்தாவதாகத் தமிழ் நாட்டு மக்களுமே அவர்.

1977க்குப் பிறகு தமிழ்நாட்டு ஆட்சியிலிருந்தவர் களும், கர்நாடக மாநில ஆட்சியிலிருந்தவர்களும் மத்திய அரசில் காங்கிரசு ஆட்சி அமையவும், பாரதிய சனதா ஆட்சி அமையவும் மாறி மாறித் துணை நின்றனர்; நிற்கின்றனர்.

ஆனால் காவிரியிலிருந்து தமிழ்நாட்டுக்குச் சட்டப் படிக்கான பங்கு நீரை அளிக்கக் கூடாது என்பதில், இந்திய அரசுக்கு எதிர்ப்புக் காட்டுவதில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தங்களிடையே உள்ள கட்சி வேறுபாடுகளைத் தூக்கி எறிந்து விட்டு, எந்தக் கட்சி ஆட்சியிலிருந்தாலும் அந்தக் கால முதலமைச்சரின் தலைமையில் பழைய முதலமைச்சர்களும் மற்றும் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒரே குழுவாக தில்லிக்குச் சென்று இந்திய அரசுக்கு அழுத்தம் தருவதில் கர்நாடகத்தினர் தவறியதே இல்லை.

ஆனால் 1977க்கும் 1989க்கும் இடையில் முதல்வர் எம்.ஜி. இராமச்சந்திரனும், முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியும் ஒன்று சேர்ந்தோ - அல்லது 1989 க்குப் பிறகு 2012 வரையில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த செல்வி செயலலிதாவும், மு. கருணாநிதியும் இணைந்தோ ஒரு தடவை கூட, 57 தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்துக் கொண்டு தில்லிக்குச் சென்று, இந்திய அரசுக்கு அழுத்தம் தரவில்லை. இந்த நிலைமை - தமிழ்நாட்டு மக்களுக்கு இந்த இரண்டு திராவிட அரசியல் கட்சி களும்; 2011 வரையில் இந்த இரண்டு கட்சிகளோடும் இணைந்து செயல்பட்ட மற்றெல்லாக் கட்சியினரும் இழைத்துவிட்டது மன்னிக்க முடியாத குற்றமாகும். இச்சிக்கலில், தமிழ்நாட்டு மக்களும் இடையன் ஓட்டும் வழியில் ஓடும் செம்மறிகள் போல் நடந்து கொள்ளு வது, தங்களின் உரிமையை இழந்து விட்டுக் கட்சி வழிப் பிரிந்து நிற்கும் கேடு கெட்டத்தனமாகும்.

தமிழகத்தினரின் இந்த இழிந்த போக்கை உடனே இவர்கள் மாற்றிக் கொள்ள வேண் டும் என, மிக வேதனையோடு இம்மாநாடு சுட்டிக்காட்டி வேண்டிக்கொள்கிறது. அத்துடன் இந்திய அரசினர் காவிரி ஆற்றுநீர்ப் பங்கீடு ஆணையை உடனடியாக இந்திய அரசிதழில் வெளியிட வேண்டும் என்றும்; உடனடியாகத் தமிழ்நாட்டுக்கு உரிய பங்கு நீரை இராணு வத்தைக்கொண்டு திறந்துவிட வேண்டும் என்றும் இம் மாநாடு வற்புறுத்தி வேண்டிக் கொள்கிறது.

6.வடதமிழ்நாடு மக்களின் குடிநீர்த் தேவைக்காகவும் குறிப்பாக வேலூர் மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் விவசாயம் மற்றும் குடிதண்ணீர்த் தேவைக்காகவும் உள்ள பாலாற்று நீர் ஆதாரம் உருவாக்கவும், நிலத்தடி நீர் ஆதாரம் உருவாக்கவும், மற்றும் பெருக்கவும் தென்பெண்ணையாறு (கிருட்டிண கிரி அணை) பாலாறு (கல்லாறு) இணைப்புத் திட்டத் தைச் செயல்படுத்த சென்ற சட்டமன்றத் தொடரில் தமிழக முதல்வர் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். இத்திட்டத்திற்கு மய்ய அரசு நீதி கிடைக்கவில்லை யெனினும் மாநில நிதியைக் கொண்டே செயல் படுத்துவோம் என்றும் அறிவித்தார். மேலும் பொதுப் பணித்துறை வெளியிட்டுள்ள விளம்பரத்தில் தமிழக அரசு ஓராண்டுச் சாதனைப் பட்டியலில் இத்திட்டம் இந்த நிதியாண்டின் பணியாக அறிவித்துள்ளது.

வேலூர் மாவட்ட விவசாயிகள், பொதுமக்கள் வயிற்றில் பால் வார்க்கும் செய்தி, இது. தென்பெண்ணை பாலாறு இணைப்புக் கால்வாய்த் திட்டம் செயல்படுத்தி முடிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். ஆந்திரம், கர்நாடக மாநிலங்கள் பாலாற்றில் குறுக்கே கட்டி யுள்ள அணைகள் மற்றும் தடுப்பு அணைகளால் கடந்த 25 ஆண்டுகளில் இவ்வாறுகளில் வெள்ளமே வர வாய்ப்பில்லாது போய்விட்டது. பாலாற்றின் வளத்திற்கு முதன்மையாக அடிப்படையாக உள்ள மணல் வளம் பெருமளவு கொள்ளை போயுள்ளதால் பாலாறு பாழாறாக மாற்றப்பட்டுவிட்டது. நிலத்தடி நீர்வளத்தை இழந்த பாலாறு பாலைவனமாக மாறும் நிலையை எதிர் நோக்கியுள்ளது. சொற்ப நிலத்தடி நீரும், தோல் தொழிற்சாலைகள் மற்றும் இராசயன ஆலைகளின் கழிவுநீரால் மாசுக்குள்ளாகிக் கால் நடைகளும் குடிக்கத் தகுதியற்ற நிலையில் உள்ளது. தேசிய நீர்வள மேம்பாட்டு நிறுவனம் இந்தப் பகுதியில் புதிய கிணறுகள், ஆழ்குழாய்க் கிணறுகள் மற்றும் அவற்றை ஆழப்படுத்தவோ தடைசெய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தடையை மீறுவோர் மீது சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986 பிரிவு 15இன்படி தண்டனை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட் டுள்ளது. எனவே இச்சிக்கல் தீர, மக்களின் அவல நிலையைப் போக்க பாலாற்று நீர் ஆதாரத்தை மீட் டெடுக்க, தமிழக அரசு அறிவித்துள்ள தென்பெண் ணை பாலாறு கால்வாய்த் திட்டம் பெரும் பயனுடை யதாய் இருக்கும். இந்த அறிவிப்பைப் தொடர்ந்து இத்திட்டத்தைப் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றும்படி மய்ய மாநில அரசுகளை இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

7.இந்தியாவில் சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை நடுவண் அரசு அனுமதித்துள்ளது. வால்மார்ட், மெட்ரோ போன்ற பன்னாட்டு நிறுவனங்களும் இந்தியா வின் பெரு முதலாளிகளை மிட்டல், டாட்டா, பிர்லா போன்றவர்களும் கூட்டுச் சேர்ந்து இந்தியா முழுவதிலும் தலையில் சுமந்தும், தெருக்களில் கடைவிரித்தும், பெட்டிக் கடைகள் வைத்தும், பிற வகைகளிலும் சில்லறை வணிகம் செய்யும் 5 கோடி சில்லறை வணிகர்களையும் அவர்களின் குடும்பத்தினர் 20 கோடி மக்களின் வாழ்வையும் சீரழிக்கப் போகிறார்கள். சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் முடிவை நடுவண் அரசு கைவிடவேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

8.2013 ஏப்பிரல்-மே திங்களில் மா.பெ.பொ.க. - பு.க.இ.ம. தோழர்கள் ஒரு குழுவினராகச் சென்று, “சிந்தனையாளன்” வளர்ச்சிக்கான வகையில் ஆண்டு, மூன்றாண்டு, பத்தாண்டு உறுப்பினர்கள் சேர்த்தல்; மற்றும் 12 மாதங்களிலும் விளம்பரங்கள் வந்து சேருவதற்கான நல்ல ஏற்பாடுகளைச் செய்தல் ஆகிய பணிகளை ஏற்று நிறைவேற்றுவது என இம்மாநாட்டில் முடிவு செய்யப் பட்டது.

Pin It