அன்று கேதை எறும்பு கிராமமே அல்லோகல்லோ லப்பட்டுக் கொண்டு இருந்தது. சரவணனை மானங் கெட்டவன் என்று திட்டாதவர்கள் அந்தக் கிராமத்தில் மட்டுமல்ல, சுற்றுவட்டாரத்தில் உள்ள எந்தக் கிராமத் திலும் இல்லை. தான் மணந்து கொள்ள வேண்டிய முறைப் பெண்ணை ஓர் நீக்ரோ பையனுடன் யாராவது அனுப்பி வைப்பார்களா? அப்பகுதியில் உள்ள ஒரு வராலும் இந் நிகழ்வைச் செரிக்க முடியவில்லை.

கேதைஎறும்பு கிராமம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரத்தில் இருந்து கரூர்-வேடசெந்தூர் செல்லும் வழியில் உள்ளது. அக்கிராமத்தில் ஓரளவு நிலபுலன்களை வைத்துக் கொண்டு செல்வந்தர்கள் குடும்பம் என்ற பெயரில் வாழ்ந்து கொண்டு இருக்கும் குடும்பம்தான் மாயாண்டியின் குடும்பம். மாயாண்டியின் ஒரே மகன்தான் சரவணன். சரவணன் குழந்தைப் பருவத்தில் இருந்தே நன்றாகப் படித்துக் கொண்டு இருந்தான். கல்வியில் அவனுக்கு உள்ள ஆர் வத்தையும், சக மாணவர்களை அன்புடனும் கண்டிப்புடனும் நடத்தி பள்ளிக்கு அழைத்து வருவதையும் கண்ட ஆசிரியர்கள் அவனை மதுரைக்கு அனுப்பி மேல் படிப்புப் படிக்க வைக்க வேண்டும் என்றும், அவனுடைய ஆளுமைத் திறனைப் பயன்படுத்திக் கொள்ளும்படி யாக அவன் இந்திய ஆட்சிப் பணித்தேர்வு (ஐ.ஹ.ளு.) எழுத வேண்டும் என்றும் அவனுடைய ஆசிரியர்கள் விரும்பினர். விரும்பினர் என்பதைவிட அவனுடைய பெற்றோர்களை நச்சரித்தனர் என்பது இன்னும் பொருத்தமான சொற்களாக இருக்கும். ஆசிரியர்களின் விருப்பப்படி சரவணன் பள்ளிப் படிப்பு முடித்த பிறகு, மதுரையில் அமெரிக்கன் கல்லூரியில் கணிதத்தை முக்கியப் பாடமாகக் கொண்டு பட்ட வகுப்பில் சேர்க்கப் பட்டான். அங்கும் நன்றாகப் படித்துக் கொண்டு இருப்பதாகக் கேள்விப்பட்ட ஆசிரியர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள். சரவணனுடைய பெற்றோர்களும் மகிழ்ச்சி அடைந்தார்கள் என்றாலும் கிராமத்தில் விவசாயத்தைக் கவனிப்பதை விட்டுவிட்டு வேறு ஏதோ செய்து கொண்டிருக்கிறானே! இதைப்போய் ஆசிரியர்கள் இப்படிப் பாராட்டுகிறார்களே என்று சிறு குழப்பத்திலும் இருந்தனர்.

சரவணன் பட்ட வகுப்பில் மூன்றாவது ஆண்டை முடித்துக் கொண்டு இருந்தபொழுது, அவனுடைய அத்தை மகள் பூங்கொடி பள்ளிப் படிப்பை முடித்து விட்டிருந்தாள். அவளுடைய மதிப்பெண் பட்டியலைப் பார்த்த பொழுது அவள் தன்னையும் விஞ்சிவிட்டாள் என்று அறிய ஒருபுறம் மகிழ்ச்சியும், ஒருபுறம் பொறாமையும் கொண்டான். தான் நன்றாகப் படிப்பதாகக் கூறி மேல்படிப்பிற்குப் பரிந்துரைத்த ஆசிரியர்கள் பூங்கொடி விஷயத்தில் அவ்வாறு செய்யாதது குறித்தும் யோசித்தான். அவள் பெண் என்பதால் அவளு டைய மேற்படிப்புப் பற்றி யாரும் அக்கறை கொள்ளவில்லை என்று அறிந்த உடன் அவனுடைய பொறாமை உணர்ச்சி இரக்க உணர்ச்சியாக மாறியது. பூங்கொடியிடம், அவளுக்கு மேற் படிப்பு தொடர விருப்பம் இருக்கிறதா என்று கேட்டுப் பார்த் தான். பூங்கொடியும் தான் வேளாண் மையில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்புப் படிக்க ஆவல் கொண்டுள்ளதாகவும், முடிந்தால் முனைவர் பட்டத்தைப் பெறும் ஆர்வமும் உண்டு என்று கூறினாள்.

சரவணன் உடனே தன் பெற்றோரிடமும், அத்தை மற்றும் மாமாவிடமும் பூங்கொடியின் மேற்படிப்புப் பற்றிப் பேசினான். ஆனால் அவர்களோ சரவணனுக்கு இந்த ஆண்டு படிப்பு முடிந்தவுடன் அவளைத் திருமணம் செய்து கொடுக்க உத்தேசித்து இருப்பதாகவும் பெண்களுக்கு இதற்குமேல் படிப்பு தேவை இல்லை என்றும் ஒரே குரலில் கூறினார்கள். ஆனால் சரவணன் நான் மேலும் இரண்டு வருடம் பட்ட மேற்படிப்புப் படிக்கப் போவதாகவும், அதன்பின் இந்திய ஆட்சிப் பணித்தேர்வு எழுதவிருப்பதாகவும் கூறினான். இதைக்கேட்டு அவனுடைய பெற்றோர்களும், அத்தையும், மாமாவும் முகம் சுளித்தனர். ஆனால் சரவணன் படிப்பைத் தொடருவதில் உறுதியாக இருந்தான். பூங்கொடியையும் அவள் விருப்பப்படி விவசாயக் கல்லூரியில் சேர்த்துப் படிக்க வைக்க வேண்டும் என்றும் அழுத்தமாகக் கூறினான்.

சிறிது நேர விவாதங்களுக்குப்பின் சரவணனின் தாயார் இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக நினைத்து ஒரு யோசனையைக் கூறினார். இரண்டு பேரும் மதுரை யிலேயே படிக்க இருப்பதால் இப்பொழுதேயே இருவருக்கும் திருமணத்தை முடித்துவிடலாம். மதுரையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொண்டு தங்கிப் படிக்கட்டும் என்பது தான் அந்த யோசனை. இது பெரியவர்களின் ஒப்புதலை உடனடியாகப் பெற்றுவிட்டது. ஆனால் விவசாயக் கல்லூரி யில் படிப்பவர்கள் கல்லூரி விடுதியில் தங்கிப்படிப்பது கட்டாயம் என்று சரவணன் விளக்கிக் கூறினான். பின் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியாகப் பேச, இறுதியில் சரவணன் வெற்றி பெற்றுவிட்டான்.

பூங்கொடி விவசாயக் கல்லூரியில் சேர்ந்து படிக்கத் தொடங்கினாள். அத்துறையில் அவளுக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. நன்றாகப் படித்துக் கொண்டு இருந்தாள். ஆனால் அவளுடைய தம்பிக்கும், பெற்றோர்களுக்கும் சரவணனு டைய பெற்றோர்களுக்கும் இருப்புக் கொள்ளவில்லை. ஒரு பெண் வெளியூரில் தனியாகத் தங்கிப் படிப்பது என்பதை நினைக்கவே அவர்களுக்குக் கஷ்டமாக இருந்தது. அவர்கள் அடிக்கடி மதுரைக்குச் சென்று அவளைப் பார்த்துவிட்டு வந்தனர். அதிலும் பூங்கொடியின் தம்பி பாண்டியன் வாரம் ஒரு முறையாவது தன் தமக்கையைப் பார்க்காமல் இருக்க மாட்டான். இப்படியே மூன்று ஆண்டுகள் கழிந்து விட்டன.

சரவணனும் பட்ட மேற்படிப்பு முடித்துவிட்டு இந்திய ஆட்சிப் பணித்தேர்வு எழுதுவதற்காகப் பயிற்சி பெற்றுக் கொண்டு இருந்தான். பூங்கொடி விவசாயப் பட்டப் படிப்பில் இறுதி ஆண்டான நான்காம் ஆண்டில் படித்துக் கொண்டு இருந்தாள். மூன்று ஆண்டு நகர வாழ்க்கையில் பூங்கொடி யின் பழக்கவழக்கங்களில் பெரிய மாற்றம் இருந்தது. அவள் சக மாணவர்களுடனும் மாணவிகளுடனும் கள்ளங் கபடமின்றிப் பழகிக் கொண்டு இருந்தாள். அவள் அறிவுக் கூர்மை மிக்கவளாகவும் நல்ல பண்பாடு உடையவளாகவும் இருந்ததால் கல்லூரியில் அவளுக்கு நல்ல பெயர் இருந்தது. அவளுடன் படிக்கும் மாணவர்களில் பலர் மனதார அவளைக் காதலித்தனர். ஆனால் தன்னை விட அறிவுக்கூர்மை மிகுந்த பெண்ணை மணந்தால் அவளுக்கு அடங்கி நடக்க நேரிடும் என்ற ஆண் ஆதிக்க அச்சமும், அவளுடைய முறைப் பையன் (சரவணன்) பக்கத்திலேயே இருப்பதும், அவர்கள் தங்கள் காதலை வெளியிடத் தயங்க வைத்தன.

அப்படித் தயங்கிக் கொண்டு இருந்தவர்களுள் சந்தானம் என்று ஒருவன் இருந்தான். அவனுடைய தந்தை விவசாயம், கால்நடை மருத்துவம், நீர்ப்பாசனம் ஆகிய துறைகளில் தொழில்நுட்பத்தை வழங்கும் நிறுவனம் (Consultants Firm) ஒன்றை நடத்திக் கொண்டு இருந்தார். மேலும் அவர் தமிழ் நாடு பிராமணர் சங்கத்தின் முக்கிய உறுப்பினராகவும் இருந்தார். சந்தானம் தன் படிப்பை முடித்த பின் அந்நிறு வனத்தில் தான் இணையலாம் என்று கருதியதுடன் போகி றான். அந் நிறுவனத்தில் அறிவுக்கூர்மை மிக்க பூங்கொடி யை இணைத்துக் கொண்டால் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு நல்லது என்று நினைத்தான். அதைப் பூங்கொடியிடம் கூறினான். ஆனால் பூங்கொடியோ தான் நகர வாழ்க் கைக்கு ஏற்றது போன்ற தொழிலைச் செய்யப் போவதில்லை என்றும் கிராமப்புறங்களில் இருந்து கொண்டு விவசாய வளர்ச்சிக்குப் பாடுபடுவதே தனது நோக்கம் என்றும் கூறி விட்டாள்.

ஒருமுறை சந்தானம் தன் தந்தையிடம் பேசிக் கொண்டு இருந்தபொழுது பூங்கொடியைப் பற்றியும், அவளுடைய அறிவுக்கூர்மையைப் பற்றியும், தங்களது நிறுவனத்தில் பணிபுரிய வர மறுத்தது பற்றியும் கூறினான். பேச்சுவாக்கில் அவளுடைய முறை மாப்பிளை இந்திய ஆட்சிப் பணித்தேர்வு எழுத இருப்பதைப் பற்றியும் கூறினான். எல்லாவற்றையும் விவரமாகக் கேட்டுக்கொண்ட அவனது தந்தை, பூங்கொடி நினைப்பது போல் கிராமத்தில் கட்டுண்டு கிடக்கமாட்டாள் என்றும், தன் முறைமாப்பிளையை மணந்துகொண்டால் நகர வாழ்வு வாழ்ந்தே தீர வேண்டிய அவசியம் ஏற்பட்டு விடும் என்றும் அப்படி நடந்தால், அவளேகூட தங்களுக்குப் போட்டியாக ஒரு நிறுவனத்தைத் தொடங்கலாம் என்றும் கூறினார். அப்படி நடந்தாலும் தங்களுக்குப் பாதகமில்லை என்றாலும் அனாவசியமாக ஒரு போட்டியை உருவாக்காமல் இருப்பது நல்லது என்றும் கூறினார்.

சந்தானத்திற்குத் தன் தந்தை என்ன கூற வரு கிறார் என்று புரியவில்லை. “நீங்க என்ன டாடி சொல்ல வர்ரீங்க?” குழப்பத்துடன் வினவினான்.

“நீ அவளை மேரேஜ் பண்ண ப்ரபோஸ் பண்ணிப் பாரேண்டா”.

“அம்மாடி!” சந்தானம் சிறிது அதிர்ச்சி அடைந்தான். தன் தந்தையிடம் இருந்து இந்த யோசனையைச் சற்றும் அவன் எதிர்பார்க்கவில்லை. அவனுடைய உள்ளத்தில் பலவித சிந்தனைகள் ஓடின.

“அவள் ஒரு சூத்திரச்சி. அவளை எப்படி கல்யாணம் செய்து கொள்வது?” மனதிற்குள் சைட் அடிப்பவர்களை எல்லாம் மணந்துகொள்ள முடியுமா? போதாக்குறைக்கு அவளுடைய முறை மாப்பிள்ளை வேறு பக்கத்திலேயே இருக்கிறான். மேலும் கிராமத்துக்காரர்கள் கொஞ்சம் முரட்டுச் சுபாவம் படைத்தவர்கள். ஏதாவது அடிதடி என்று வந்து விட்டால் என்ன செய்வது?”

“என்னடா? ஷாக் ஆயிட்டியா?” என்று தன் தந்தை கேட்ட பின்தான் சந்தானம் புற நினைவிற்கு வந்தான்.

சந்தானத்தின் தந்தை தொடர்ந்தார் “இதப்பாருடா! நாம எதைச் செஞ்சாலும் பிராம்மணாள் அதிகாரத்தைக் கெட்டியாப் பிடிக்கிற மாதிரி செய்யணும். பழைய காலத்திலே பிராம்மணப் பொண்ணு மத்த சாதியானைக் கட்டிக்கக் கூடாதுன்னு இருந்துச்சி. இந்த நாயக்கனும் (பெரியார்) காமராஜரும் பண் ணின கூத்திலே, கொஞ்சம் சூத்திராளும், சூத்திராதி சூத்திராளும் ((SC & ST) கொஞ்சம் பேர் மேலே வந்துட்டாங்க. அவாளுக் குள்ளே உணர்ச்சி உள்ளவாளாப் பார்த்து நம்ம பொண் ணுங்க இழுத்துப் போட்டுக்கலியா? அப்படிப் பண்ணாம இருந்திருந்தா சூத்திராளோட கூட்டம் மேலே இன்னும் ஜாஸ்தியா இருந்திருக்கும்” என்று கூறிச் சற்று நிறுத்தினார். சந்தானம் பேந்தப் பேந்த விழித்துக் கொண்டு தான் இருந்தான்.

சந்தானத்தின் தந்தை மீண்டும் தொடர்ந்தார் “என்னடா நீ! ஒரு விஷயத்தைச் சொன்னா, கப்ன்னு பிடிச்சுக்க மாட்டேங்கிறியே! இந்த சூத்திராளெல்லாம் சாதி அடிப் படையிலே ரிசர்வேஷன் வேணும்னு கேக்குறா இல்லே? இன்டர்கேஸ்ட் மேரேஜ் நிறைய நடந் திட்டா சாதி ஒழிஞ்சி போச்சின்னு சொல்லி ரிசர்வேஷனையே ஒழிச்சிடலாம். இல்லேன்னா பொருளாதார அடிப்படையிலே இடஒதுக்கீடு அப்படீன்னு கொண்டாந்துட்டு அதையெல்லாம் நம்மவாளே எடுத்துக்கலாம்” என்று கூறிய தன் தந்தையைப் பார்த்து “இன்டர் கேஸ்ட் மேரேஜ் நடந்தா சாதி இல்லாமல் போயிடுமே டாடி?” சந்தானம் கேட்டான்.

“போடா ஃபூல். இன்டர்கேஸ்ட் மேரேஜ் நடக்கிறது கொஞ்சம்தான். அதை நாம ஊதி ஊதிப் பெரிசாக் காட்டுவோம். சூத்திராளுக்குள்ளே நடக்கிற கலப்புத் திருமணத்தாவே கலப்புத் திருமண சாதிதான் உருவாகும். அவாளும் ஒரு ஜெனரேஷன்லே ஏதாவது ஒரு சாதியிலே ஐக்கியமாயிடு வாங்க” என்று சொல்லிக் கொண்டு இருக்கும்போதே சந்தானம் குறுக்கிட்டான். “அப்ப பிராம்மணாள் சூத்திராள மேரேஜ் பண்றப்போ நாம் சூத்திராளாப் போயிடுவோமா?”

“ஏண்டா டென்சன் ஆகுறே? நாம பண்ற இன்டர் கேஸ்ட் மேரேஜ் எல்லாமே சூத்திராள்லே மேலே வந்த வங்களெ இழுத்துப் போட்டுக்கிறதாத்தான் இருக்கும். இது பட்டவர்த்தனமாத் தெரியக் கூடாதுன்னு சாதாரண சூத்திராளையும் நம்மவா இழுத்துப் போடுவா” சந்தானத்தின் தந்தை சற்று நிறுத்தினார்.

“சரி! டாடி! நான் பூங்கொடி கிட்ட மேரேஜ் புரபோஸ் பண்ணினா அவளோட ஆளுங்க வெட்டிட்டா....? சந்தானம் தன் அச்சத்தை வெளியிட்டான்.

“நீ சிவிலைஸ்டு மேனர்ஸ்லே கேளுடா?”

தன் தந்தையின் ஆலோசனையின்படி சந்தானம் ஒரு நாள் பூங்கொடியிடம் மெதுவாக அவளது திரு மணத்தைப் பற்றிக் கேட்டான். அவளும் விவசாயத் துறையை மேம்படுத்த விரும்பும் ஒருவனைத் தான் திருமணம் செய்துகொள்ள நினைத்திருப்பதாகக் கூறினாள். உடனே முறை மாப்பிள்ளை போட்டியில் இல்லை என்ற நிம்மதியும், தனது தொழில் முறை அதற்கு உகந்ததுதான் என்ற எண்ணமும் உண்டாக, சற்று தைரியம் அடைந்தான். தானும் இதுபோன்று விவசாயத் துறையை வளப்படுத்தும் எண்ணம் கொண்ட படித்த பெண்ணையே மணக்க விரும்புவ தாகக் கூறினான். அப்படிக் கூறிக்கொண்டு இருக்கும் போதே பூங்கொடியின் தம்பி பாண்டியன் அங்கு வந்து சேர்ந்தான். உடனே சந்தானம் அப்புறம் பேசிக் கொள்ளலாம் என்று அவ்விடத்தைவிட்டு அகன்றான். திருமணம் என்ற சொல்லைக் கேட்டதும், தான் வந்ததும் சந்தானம் உடனே அவ்விடத்தைவிட்டு அகன்றதும் பாண்டியன் மனதில் சந்தேகத்தைக் கிளப்பிவிட்டது. பூங்கொடியிடம் அதைப்பற்றி ஒன்றும் பேசாமல், சரவணன் தங்கி இருந்த இடத்திற்குச் சென்று அவனிடம் தன் சந்தேகத்தை வெளியிட்டான். சரவணன் இதையெல்லாம் பெரிதுபடுத்த வேண்டாம் என்று சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தான்.

ஆனால் பாண்டியன் சமாதானம் அடையவில்லை. ஊருக்குச் சென்று, தன் பெற்றோர்களிடமும், சரவணனின் பெற்றோர்களிட மும் தெரிவித்தான்.

சரவணனின் தந்தை மாயாண்டி கோபத்தில் பொங்கிவிட்டார். தன் மகனுக்காகவே இருக்க வேண்டிய ஒருத்தி இன்னொருவனுடன் அதுவும் வேற்று சாதியானுடன் இணைவதைப் பற்றிக் கற்பனையும் செய்ய முடியாத மாயாண்டி தன் தங்கையை மிகவும் கடிந்துகொண்டார். அவருடைய தங்கையின் கணவர் முழு விவரம் தெரியாமல் ஆத்திரப்பட வேண்டாம் என்று அப் பிரச்சினைக்கு அப்போதைக்கு ஒரு தற்காலிகமான முற்றுப் புள்ளியை வைத்தார்.

பின் பூங்கொடியையும் தங்கள் யூகத்திற்கு ஒத்து ழைக்காத சரவணனையும் கலக்காமல், அவர்களுடைய விசாரணை நடந்தது. பையன் பிராம்மணன் என்றும், பெரிய பணக்காரன் என்றும் தெரிய வந்த போது பூங்கொடியின் பெற்றோர்கள் இந்த சம்பந்தம் நடந்தால் தங்களின் கௌரவமும் பொருளாதார நிலை யும் உயருமே என நினைக்க ஆரம்பித்துவிட்டனர். அந்தக் கிராமத்தில் உள்ள மற்றவர்களும் சாதிகெட்ட சம்பந்தம் என்று கூறாமல் கலப்புத் திருமணம் என்று மென்மையாகக் கூறுவார்கள் என்று நினைத்தனர். மேற்கொண்டு என்ன நடக்கிறது என்பதைக் கண்காணிக் கும் பொறுப்பு பாண்டியனிடம் விடப்பட்டது.

பாண்டியனும் அடிக்கடி மதுரைக்கு வந்து போகலா னான். இதுவரைக்கும் பூங்கொடியின் நண்பர்களுடன் அதிகமாகப் பேசாத அவன் இப்பொழுது அதிகமாகப் பேசினான்; தன்னுடைய கிராமத்துப் பாணியில் அவர்கள் பேசியதைப் பலவிதமாகப் பொருள் எடுத்துக் கொண்டான். ஒருமுறை பூங்கொடியின் சிநேகிதி ஒருத்தி தங்களுடைய நண்பன் ஒருவன் விபத்தில் சிக்கிய போது அவனுக்குத் தேவைப்பட்ட இரத்தத்தைப் பூங்கொடி கொடுத்தாக அறிந்துகொண்டான். உடனே தன் தமக்கையிடம் அதைப்பற்றி விசாரித்தான். அவளும் இருவருடைய இரத்த வகையும் ஒன்றாக இருந்ததால் கொடுத்ததாகவும் பெற்றோர்கள் தேவை இல்லாமல் கலவரப்படுவார்கள் என்பதால் வெளியில் சொல்லவில்லை என்றும் கூறினாள்.

ஆனால் பாண்டியன் இத்துடன் விடவில்லை. கல்லூரி யில் பணிபுரியும் கடைநிலை ஊழியர்களிடம் தேவையற்ற விதங்களில் எல்லாம் விசாரித்துப் பார்த்தான். அவன் விசாரித்த வரையில் அந்தப் பையனும் பூங்கொடியும் ஒரே குழுவில் (Group) இருப்பதாகவும், சோதனைச் சாலைகளில் இணைந்து படிப்பதாகவும் அறிந்துகொண்டான். அதன்பின் மிகவும் சிரமப்பட்டு அந்தப் பையன் வேறு சாதி என்றும், ஆனால் தங்கள் சாதிக்குச் சமமான சாதி தான் என்றும் தெரிந்து கொண்டான்.

தான் தெரிந்து கொண்டவற்றை எல்லாம் தன்னுடைய பாணியில் பூங்கொடிக்கும் அந்தப் பையனுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று கிராமத்தில் தன் பெற்றோர்களிடமும், சரவணனின் பெற்றோர்களிடமும் கூறினான். சரவணனின் தந்தை மாயாண்டி மன மொடிந்து போயிருந்தார். பார்ப்பனப் பையனுடன் தொடர்பு இருப்பதாகக் கேள்விப்பட்ட உடனேயே பூங்கொடியின் படிப்பை நிறுத்திவிட்டு கிராமத்திற்கு அழைத்து வரவேண்டும் என்று கூறியிருந்தார். ஆனால் சரவணன் அனைவரையும் கடிந்து கொண்டு இந்த மாதிரி அபத்தங்கள் ஏதும் நேராமல் பார்த்துக் கொண்டான்.

இப்பொழுது பாண்டியன் போட்ட இன்னொரு குண்டு, மீண்டும் அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்தது. ஆனால் இதைப்பற்றிப் பேசினால் சரவணன் கடிந்து கொள்வானோ என்ற அச்சத்தில் அனைவரும் அமைதி காத்தனர். அந்தப் பையன் வேறு சாதியாக இருந்தாலும் தங்களுக்குச் சமமான சாதிதான் என் பதும் ஒருவேளை அந்த மாதிரி தொடர்பு எதுவும் இருக்காது என்ற நினைப்பும் அவர்கள் அமைதி அடைவதற்குக் காரணமாக இருந்தது.

ஆனால் பாண்டியன் மட்டும் அமைதி அடைய வில்லை. அவன் தன் துப்பறியும் வேலையைத் தொடர்ந்தான்.

அவனுக்குத் தன் மாமன் மகன் சரவணன் தன்னைப் போல் சிந்திக்கமாட்டாதது குறித்து கவலையும் கோபமும் இருந்தது. ஒரு தடவை அவன் மதுரைக்குச் சென்று சரவணனுடன் தங்கி இருந்தான். அப்பொழுது சரவணனைப் போலவே இந்திய ஆட்சிப் பணித் தேர்வு எழுதப் பயிற்சி பெற்றுக் கொண்டு இருக்கும் அவனுடைய நண்பன் அன்பழகன் வந்தான். இருவரும் பேசிக் கொண்டு இருந்த பொழுது அதிகாரம் மிகுந்த பதவிகளைத் திறமை இல்லாவிட்டாலும் பார்ப்பனர் கள் பெற்றுவிடுவதைப் பற்றியும் தன்னைப் போன்ற தாழ்த் தப்பட்டவர்களும், சரவணனைப் போன்ற பிற்படுத்தப்பட்டவர் களும் திறமை மிகுந்திருந்தாலும் பெற முடிவதில்லை என்றும் அன்பழகன் கூறினான்.

பாண்டியனுக்கு அன்பழகனுடைய பேச்சு புதிராக இருந்தது. தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் தானே இடஒதுக்கீடு இருக்கிறது? பொதுப் போட்டியில் வெல்பவர்கள் எடுக்கும் மதிப்பெண்களை விடக் குறைவான மதிப்பெண்களைப் பெற்றாலும் தாழ்த்தப்பட்டவர் களும், பிற்படுத்தப்பட்டவர்களும் தேர்வு செய்யப்பட்டு விடுகிறார்களே. அப்படி இருக்க இந்த அன்பழகன் பேசுவது புதிராக இருக்கிறதே என்று நினைத்தான். அதை அவர் களிடம் கேட்டும் விட்டான். அந்த நேரத்தில் “அதிகமாகப் படிச்சுப் படிச்சு மூளை கலங்கிப் போச்சு” என்று பாடிக் கொண்டே சந்தானம் அந்த அறையில் நுழைந்தான். குறைவான படிப்புப் படித்த பாண்டியனுக்குப் புரிவது கூட இந்திய ஆட்சிப் பணித் தேர்வு எழுதக் காத்திருக்கும் சரவணனுக்கும் அன்பழகனுக்கும் புரியாமல் போனது குறித்துக் கிண்டல் செய்துவிட்டும் மீண்டும் அந்தப் பாடல் வரியைப் பாடினான்.

“அப்படீன்னா பிராமின்சுக்குத்தான் மூளை கலங்கிப் போயிருக்கு. ஏன்னா அவாள்தான் அதிகமாப் படிச்சிருங் காங்க” என்று அன்பழகன் பதிலடி கொடுத்தான். ஆனால் சந்தானமோ குறைந்த மதிப்பெண்கள் எடுத்தாலும் இட ஒதுக்கீடு மூலமாக வெற்றி பெறும் வழி இருக்கும் போது திறமையற்ற பார்ப்பனர்கள் அதிகாரப் பதவிகளைப் பெற முடிவதாகவும், திறமை இருந்தாலும் தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும் அவற்றைப் பெற முடிவதில்லை என்றும் அபத்தமாக அன்பழகன் தான் கூறியதாகவும் கூறினான்.

உடனே அன்பழகனும் “சரி சந்தானம், பிராமின்சுலே எல்லாமே அறிவாளிகளா?” என்று கேட்டான்.

“நான் அப்படிச் சொல்லவே இல்லையே?” என்று சந்தானம் பதலளித்தான்.

“அதேபோல் எஸ்.சி.யிலேயும், பி.சி.யிலேயும் இருக்கிற வங்கள்லே புத்திசாலிகளே இல்லையா?” என அன்பழகன் கேட்டான்.

“அப்படியும் நான் சொல்லவே இல்லையே?” என்று சந்தானம் கூறியவுடன் “அப்படீன்னா புத்தி சாலிகளும், புத்திக் குறைவானவர்களும் எல்லா வகுப்பு மக்கள் கிட்டேயும் இருக்காங்க இல்லே?” என்று அன்பழகன் கேட்டவுடன், சந்தானம் அது சரி என்று ஒப்புக்கொண்டான்.

அப்படி ஒப்புக்கொண்ட உடன் “அப்படீன்னா பொதுப் போட்டியிலே எல்லா வகுப்பு மக்களும் இல்லே செலக்ட் ஆகணும். அப்படி ஆகாம பிராமின்ஸ் மட்டும் எப்படி செலக்ட் ஆறாங்க?” என்று அன்பழகன் கேட்டவுடன் சந்தானம் பதிலளிக்க முடியாமல் திணறினான்.

“பொதுப் போட்டி எல்லாருக்கும் பொதுவாத்தானே நடக்குது? இதுலே யாருக்குத் திறமை இருக்கோ அவங்க செலக்ட் ஆறாங்க, அவ்வளவுதான்” என்று சந்தானம் சர்வ சாதாரணமாகக் கூறினான்.

“அப்படீன்னா பிராமின்ஸ்லே தான் திறமை சாலிங்க இருக்காங்களா? எஸ்.சி.யிலேயும், பி.சி.யிலேயும் இல்லையா?” என்று அன்பழகன் மீண்டும் கேட்டவுடன் “நான் அப்படிச் சொல்லலையே?” என்று சந்தானம் திணறித் திணறிக் கூறினான்.

“அப்படீன்னா எஸ்.சி., பி.சி. கேண்டிடேட்ஸ் ஏன் செலக்ட் ஆக மாட்டேங்கிறாங்க?” அன்பழகன் கிடுக்குப்பிடி வினாவிற்கு சந்தானம் விடையளிக்க முடியாமல் திணறி னான்.

அப்படித் திணறிக் கொண்டிருந்த சந்தானத்தைப் பார்த்து சரவணன் “பிராமின்ஸ்லேயும் திறமைக் குறைவானவங்க இருக்காங்கன்னு ஒத்துகிறியா?” என்று கேட்டான். சந்தானம் வாய் வார்த்தையாகப் பேசாமல் தலையை மட்டும் ஆட்டி ஒப்புக்கொண்டான்.

“திறமை இல்லாதவங்க அதிகாரம் இல்லாத, கொறைஞ்ச சம்பளம் உள்ள, பிசிகல் லேபர் (உடல் உழைப்பு) உள்ள வேலையைச் செய்யணும்னு ஒத்துக்கிறியா?” என்று சரவணன் மேற்கொண்டு கேட்டதற்கும் சந்தானம் மௌனமாகத் தலையாட்டி ஒப்புக்கொண்டான்.

“அப்படீன்னா திறமையில்லாத பிராமின்ஸ் அந்த மாதிரி வேலையைப் பார்க்குறாங்களா?” என்று சரவணன் கேட்டவுடன் “சமையல் வேலை செய்றவங்க இருக் காங்க, புரோகிதருங்க வருமானம் ரொம்ப கம்பி - அப்படீன்னு பதில் சொல்லுவாங் களே” என்று அன்பழகன் குறுக்கிட்டுக் கூறியபோது சந்தானம் எதுவும் கூற முடியாமல் தத்தளித்தான்.

பின் தாழ்த்தப்பட்ட மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும் செய்யும் சிரமம் மிகுந்த பல வேலைகளைச் சுட்டிக்காட்டி, அவ்வேலைகளைச் செய்பவர்களின் அறிவுத்திறனுக்கு இணையான அறிவுத்திறன் கொண்ட, இன்னும் சொல்லப் போனால் அவர்களை விடக் குறைவான அறிவுத் திறன் கொண்ட பார்ப்பனர்கள் அப்படிப்பட்ட கடுமையான வேலை களைச் செய்வதில் இருந்து தப்பிவிடுவது எப்படி என்று அன்பழகன் கேட்டதும் சந்தானத்தின் நாக்கு முற்றிலுமாக உலர்ந்து விட்டது.

இந்நிலையில் சந்தானத்தின் கைப்பேசியில் அழைப்பு மணி ஒலித்தது. அதில் பேசிய உடன், தான் உடனே கல்லூரிக்குத் திரும்புவதாகக் கூறி சந்தானம் புறப்பட்டான். இவர்களுடைய விவாதம் எதையும் அரைகுறையான புரிதலுடன் கேட்டுக் கொண்டு இருந்த பாண்டியன் தன் தமக்கையைப் பார்க்கப் போவதாகக் கூறி சந்தானத்துடன் புறப்பட்டான்.

விவாதத்தில் தன்னைப் பேசக் கூட விடாதபடி கிடுக்குப் பிடி போட்ட அன்பழகன் மீது சந்தானத்திற்கு கோபம் கோபமாக வந்தது. அவன் மீது ஏதாவது கோள்மூட்டிச் சிக்கலில் மாட்ட வைக்க வேண்டும் என்று மனதில் கறுவிக் கொண்டான். அப்பொழுது அவனுடன் வந்துகொண்டிருந்த பாண்டியன் அம்மூவருடைய விவாதம் தனக்குச் சரியாகப் புரியவில்லை என்று கூறினான்.

உடனே சந்தானத்திற்குப் பளீரென்று ஒரு யோசனை தோன்றியது. தன்னைத் திருமணம் செய்து கொள்ள மறுத்த பூங்கொடியையும், அன்பழகனையும் இணைத்து, பாண்டி யனிடம் ஏதாவது கூறினால் இருவரும் மன உளைச்சலுக்கு உள்ளாவார்கள் என்று நினைத்தான்.

உடனே “எனக்கு செல்லுலே கால் வராம இருந் திருந் தான்னா இரண்டு பேரையும் லெஃப்ட் ரைட் வாங்கி யிருப்பேன்” என்று கூறிவிட்டு அன்பழகனைப் பற்றிய பாண்டியனின் கருத்தைக் கேட்டான். சரவணனின் நண்பன் என்று மட்டுமே தெரியும் என்றும், ஆனால் அவனைப் புத்திசாலி என்று சரவணன் கூறி இருப்பதாகவும் பாண்டியன் பதிலளித்தான். சிறிது நேர மௌனத்திற்குப் பின் பூங்கொடியின் எதிர்கால வாழ்க்கையைப் பற்றிப் பாண்டியனிடம் சந்தானம் விசாரித்தான். தன் தமக்கையும் சரவணனும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று பாண்டியன் கூறியவுடன் “உன் அக்காவும் புத்திசாலி, அன்பழகனும் புத்திசாலின்னு சரவணனே சொல்றார். ஒரு வேளை இரண்டு புத்திசாலிகளும் கல்யாணம் செஞ்சுக்கலாம் இல்லே?” என்று சந்தானம் ஒரு நச்சுச் செடிக்கு மெதுவாக வித்திட்டான். “எங்க சரவணன் மாமாவும் புத்திசாலிதான்” என்று பாண்டியன் திமிறிக் கொண்டு பதிலளித்தான். “சரி! சரி! நான் ஒண்ணும் சொல்லலே. நாங்க என்.எஸ்.எஸ்.-லேயிருந்து செய்ற வேலைக்கெல்லாம் உங்க அக்கா அன்பழகனைத் தான் கூப்பிடுவா. எது எது, எப்படி எப்படி நடக்குமோ அப்படித் தானே நடக்கும்” என்று சொல்லிவிட்டு அமைதியாகிவிட்டான்.

ஆனால் சந்தானத்தின் பேச்சு, பாண்டியனின் மனதில் பெரும் புயலைக் கிளப்பிவிட்டது. அவன் கிராமத்திற்குத் திரும்பி, பூங்கொடி ஒரு வேளை தாழ்த்தப்பட்ட பையனைத் திருமணம் செய்து கொள்ளக் கூடும் என்று பெரும் புரளியைக் கிளப்பிவிட்டான். உடனே கேதைஎறும்பு கிராமமே அல்லோ லகல்லோ லப்பட்டது. பூங்கொடியின் பெற்றோர்களும், சரவண னின் பெற்றோர்களும் உடனே மதுரைக்குக் கிளம்பி னார்கள்.

இருவருடைய பெற்றோர்களின் திடீர் வரவும் அவர்களின் முகத்தில் இருந்த கோபக்குறியும் சரவண னை அதிர்ச்சியில் ஆழ்த்தின. என்னவென்று விசாரித்தான். “உனக்குப் பூங்கொடியைக் கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்லேன்னா சொல்லிடு. அதுக்காகக் கீழ்சாதிப் பயலுக்கு அவளைக் கூட்டி வைக்கப் பார்க்காதே” என்று இருவருடைய பெற்றோர்களும் பொரிந்து தள்ளினார்கள்.

சரவணன் மேலும் அதிர்ச்சி அடைந்தான். ஒன்றுமே நடக்காமல் ஏதோ நடந்துவிட்டதாக இவர்களால் எப்படி நினைக்க முடிகிறது என்று வியந்தான். முன்பொரு தடவை பிராமணப் பையனாகி தொடர்புபடுத்திப் பொங்கினார்கள். பின்பு தங்களுக்குச் சமமான வேறு சாதிப் பையனோடு தொடர்புபடுத்திப் பொங்கினார்கள். ஆனால் அவற்றைவிட இப்பொழுது தாழ்த்தப்பட்ட பையனோடு தொடர்புபடுத்திப் பொங்கும்போது அளவுகடந்து பொங்கி இருப்பதையும் உணர்ந்தான். சென்ற முறைகளில் சரவணன் தான் கிராமத்திற்குச் சென்று சமாதானப்படுத்திவிட்டு வந்தான். இம்முறை அவர்கள் மதுரைக்கே வந்துவிட்டனர். அப்படிப்பட்ட தொடர்பு இல்லை என்று சரவணன் படித்துப் படித்துச் சொன்ன போதும் அவர்கள் சமாதானம் அடைய வில்லை. பூங்கொடி படித்தது போதும் என்றும் உடனே கிராமத்திற்கு அழைத்துக் கொண்டு போவதாகவும் கூறியபோது சரவணன் அரண்டு போய்விட்டான். இன்னும் மூன்று மாதங்கள் முடிந்தால் படிப்பு முடிந்து விடும் என்றும் அதுவரை பொறுமையாக இருக்கும்படி கூறியும் அவர்கள் கேட்பதாகத் தெரியவில்லை.

உடனே சரவணன் துணிந்து ஒரு பொய்யைக் கூறினான். அன்பழகன் பூங்கொடியைப் போன்று கீழ்சாதிப் பெண்ணை மணக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவனை ஒரு பார்ப்பனப் பெண் மிகவும் விரும்புவதாகவும், அவளையே அவன் திருமணம் செய்து கொள்ள இருப்ப தாகவும் கூறிய வுடன் அனைவரும் வாயடைத்து நின்றனர். பின் பூங்கொடியைப் பார்த்துவிட்டுக் கிராமத்திற்குத் திரும்பி னார்கள். விவரங்களைத் தெரிந்துகொண்ட பூங்கொடி மிகவும் வருத்தப்பட்டாள். முறைப்பையனாக இருந் தாலும் அந்த முறையைக் கொண்டாடாமல் தன் கல்வி முன் னேற்றத்தைக் குறித்து அக்கறை கொண்டு, தனக்கு நேரு கின்ற இடர்களையெல்லாம் களையும் சரவணன் மேல் அவளுக்கு மரியாதை கூடியது.

ஒரு நாள் சரவணன் பூங்கொடியைப் பார்க்கச் சென் றிருந்த போது அவள் தயங்கித் தயங்கிப் பேசுவதைக் கவனித்தான்.

“என்ன பூங்கொடி! ஏதோ சொல்ல வர்றாப்போல இருக்கு. ஆனா மென்னு முழுங்குறியே!”

“இல்லை சரவணா! எனக்கு வர்ற எத்தனையோ பிரச்சினையை நீ தீர்த்து வச்சுருக்கே. நான் சொல்லப் போறதைக் கேட்டு நீ ஷாக் ஆயிடக் கூடாது” என்று பீடிகையுடன் அவள் ஆரம்பித்தாள்.

“சரி! விஷயத்தைச் சொல்லு” என்றான் சரவணன்.

“நான் கோர்ஸ் முடிஞ்சு ரிசல்ட் வந்ததுக்கப்புறம் சொல் லலாம்னு இருந்தேன்” என்று அவள் இழுக்க... “அப்படீன் னா சரி! அப்புறமே சொல்லு” என்று அவன் முடித்தான்.

“இல்லே சரவணா இப்ப எனக்குப் பயமா இருக்கு. அதுக்குள்ளே நமக்குக் கல்யாணம் பண்ணி வச்சிடு வாங்க போலே இருக்கே.”

“இல்லே! நான் ஐ.ஏ.எஸ். முடிச்சு போஸ்டிங் வாங்கு னதுக்கு அப்புறம்தான் கல்யாணம்னு சொல் லிடப் போறேன்.”

“ரொம்ப நன்றி சரவணா! நான் இப்போ சொல்லப் போறதைக் கேட்டு ஷாக் ஆகக் கூடாது; கோபப்படக் கூடாது.”

“சரி! டென்ஷன் பண்ணாம சீக்கிரம் சொல்லு.”

“உனக்கு மட்ஜிமோயோ ஒஜும்பாவைத் (MadzimoyoOzumbo) தொரியுமில்லே?”

“ஆமா! அதுக்கென்ன இப்போ?”

“அவனைப் பத்தி என்ன நெனைக்கிறே?”

“நல்ல பையன். புத்திசாலி, மனிதநேயம் ஹூமானிடி உள்ளவன். அவனுக்கென்ன?”

“நீ கோபப்படக்கூடாது. நாங்க ரெண்டு பேரும் லவ் பண்றோம்; கல்யாணம் பண்ணிக்கலாம்னு நெனைக்கி றோம்.

சரவணன் உண்மையிலேயே அதிர்ச்சி அடைந் தான். மட்ஜிமோயோ ஒஜும்பா ஆப்பிரிக்கக் கண்டத் தில் உள்ள மாளாவி (Malawi) நாட்டைச் சேர்ந்தவன். பூங்கொடியின் வகுப்பறை நண்பன். சரவணனுக்கும் நன்கு தெரியும். இருவரும் உலக நடப்புகளைப் பற்றிப் பலமுறை விவாதித்து உள்ளனர். ஆனால் பூங்கொடி அவனிடம் மனதைப் பறி கொடுத்து இருப்பாள் என்று சரவணன் சிறிதும் நினைக்க வில்iலை. பூங்கொடியின் அறிவுக்கூர்மையையும், நல்ல பண்பையும் பார்த்து அவளைத் திருமணம் செய்து கொள்ளும் ஆசையில் தான் அவன் இருந்தான். முறைப்பெண் என்ப தால் பிரச்சினை ஏதும் இராது என்று நினைத்திருந்தான். ஆனால் இப்படி ஒரு பிரச்சினை வரும் என்று எதிர்பார்க்கவே இல்லை.

சரவணன் அதிர்ச்சியில் அமைதியாய் இருப்பதைப் பார்த்த பூங்கொடி, சற்றுத் திகில் அடைந்தாள். சரவணன் அவர்களுடைய காதலை வரவேற்றால் கூட நிறைவேறுவது சிரமம். அப்படி இருக்க அவன் ஒப்புக்கொள்ளவில்லை என்றால்..... பூங்கொடி கலவரத்துடன் சரவணனையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.

சிறிது நேரம் சென்ற பின் சரவணன் சமாளித்துக் கொண்டு “இதைப் பத்தி இப்போ யார் கிட்டேயும் பேசாதே. டிகிரி செர்டிஃபிகேட் வாங்குன பெறகு பேசலாம்” என்று கூறி னான்.

“நீ கோவிச்சுக்கிட்டியா?”

“எனக்கு ஷாக்காத்தான் இருக்கு. ஆனா இன்டிவிஜு வல் ஃப்ரீடத்தை நான் ரொம்ப மதிக்கிறேன்.”

“உன்னைவிட்டா எனக்கு யாரும் ஹெல்ப் பண்ண மாட்டாங்க.”

“எதையும் போட்டு மனசெக் கொழப்பிக்காதே, பரீட்சை நேரம். நல்லாப் படி. எல்லா விஷயத்தையும் அப்புறம் பார்த் துக்கலாம்” என்று சொல்லிவிட்டு, சரவணன் கிளம்பினான்.

பூங்கொடியின் காதல் விவகாரத்தைக் கேட்டது முதல் சரவணனின் மனம் நிம்மதி இல்லாமல் அலைந்தது. யாரிடம் விவாதித்தாலும் இவ்விஷயம் வெளியே தெரிந்து பூங்கொடி யின் படிப்புக்கு இடையூறு ஏற்பட்டுவிடும். அதுமட்டுமல்ல. மட்ஜிமோயோ ஒஜும்பா தேவையில்லாமல் தாக்கப்படலாம். யாரிடமும் சொல்லாமல் மனதில் குமைந்து கொண்டு இருந்தால் மன அழுத்தம் ஏற்பட்டுவிடுமோ என்றும் அஞ்சி னான். அப்பொழுது அவனுக்கு அன்பழகனின் நினைவு வந்தது. நம்பகமான நண்பன். யாரிடமும் வெளியிட மாட்டான் என்பது மட்டுமல்ல; நல்ல ஆலோசனையும் கூறுவான். உடனே அவனைக் காணச் சென்றான்.

விவரங்களைக் கேட்டுக் கொண்ட அன்பழகன் “நீ அவளைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு நெனக் கிறியா?” என்று கேட்ட உடன் “எனக்கு அந்த ஆசை இருந்தது... இருக்கு... ஆனா ஒருத்தியோட விருப்பத் துக்கு மாறா எதுவுஞ் செய்யமாட்டேன்” என்று சரவணன் பதில் சொன்னான்.

“அப்படீன்னா குழம்புறதுக்கு என்ன இருக்கு?” அன்பழகன் கேட்டான்.

“நான் கலப்புத் திருமணத்தை எதிர்க்கலே. ஆனா இப்படிப்பட்ட கலப்பு என்ன மாதிரியா முடியும்னு விளங்கலே” சரவணன் குழப்பத்துடனேயே பேசினான்.

“வேறே மாதிரிக் கலப்பு என்ன மாதிரியா முடியும்னு தெரியுமா?” அன்பழகன் கூர்ந்த பார்வையுடன் கேட்டான்.

“இங்கெ சாதிக் கலப்புத் திருமணம் சாதியெ ஒழிச் சுடும்” என்று சரவணன் கூறியவுடன் அன்பழகன் கலகல வெனச் சிரிக்க ஆரம்பித்துவிட்டான். அவனது சிரிப்பின் பொருளை விளங்கிக் கொள்ள முடியாத சரவணன் அவனை யே வெறித்துப் பார்த்தான். அன்பழகன் தெளிவாக விளக்கம் கொடுத்தான்.

இதுவரைக்கும் நடந்த சாதிக் கலப்புத் திருமணங் கள் சாதியை இம்மியளவும் ஒழிக்கவில்லை. கலப்புத் திருமண இணையர்கள் சிறிது காலம் ஒதுக்கப்பட்டு, பின் ஆணின் சாதியிலோ அல்லது பெண்ணின் சாதியிலோ கரைகின்றனர். பெரும்பாலும் ஆணின் சாதியிலேயே கரைகின்றனர். இரு பக்கமும் கலக்க முடியாத சிலர் கலப்புத் திருமண சாதியாக உலவிக் கொண்டு இருக்கின்றனர். இதில் சம அந்தஸ்திலுள்ள சாதியினரிடையே கலப்பு ஏற்படும் போது சிறிதளவு சலசலப்பு ஏற்படுகிறது. அதிலும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பையன் ஒருவன் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண் ஒருத்தியைத் திருமணம் செய்து கொண்டால் வெட்டுக் குத்து என்றே முடிகிறது.ஆனால் சாதிக் கலப்பில் தாழ்த்தப்பட்டவர்களும் பிற்படுத்தப் பட்டவர்களும் ஈடுபடும் போது பெரும் சலசலப்பு ஏற்படுகிறது.. ஆனால் எது நடந்தாலும் சாதிக் கொடுமை கள் மட்டும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

அன்பழகனின் விளக்கம் சரவணனின் பொறு மையைச் சோதித்தது. “நீ என்ன சொல்ல வருகிறாய்?” என்று அவன் இடைமறித்தான்.

“கலப்புத் திருமணம் சாதியை ஒழிக்காது” என்று அன்பழகன் அழுத்தம் திருத்தமாகக் கூறினான்.

“அப்படீன்னா சாதிக் கொடுமையை எப்படி ஒழிக் கிறது?” சரவணன் கேட்டான்.

“இங்கிலீஷ்காரங்க, பிரெஞ்சுக்காரங்க, ஜெர்மன் காரங்க இன்னும் எத்தனையோ பிரிவுங்க இருக்கிறதுக்கும் சாதி இருக்கிறதுக்கும் முக்கியமான வேறுபாடு என்ன தெரியுமா?” என்று அன்பழகன் கேட்டான்.

“சாதி இந்தியாவிலே மட்டுந்தான் இருக்கு” சரவணன் பதிலளித்தான்.

“அது அடிப்படை வேறுபாடு இல்லே சரவணா! மத்த எல்லா பிரிவுலேயும், எல்லா வேலையும் செய்ற ஆளுங்க இருப்பாங்க. ஆனால் சாதிப் பிரிவு அப்படி இல்லே. பார்ப்பா னாய் பொறந்தவங்க அதிகாரம் இல்லாத, ஊதியம் குறைந்த, உடலுழைப்பு தேவைப்படும் வேலையிலே இருக்கமாட் டாங்க. அவாளுக்குள்ளே இருக்கிற திறமை இல்லாதவங்க கூட அப் படிப்பட்ட வேலையைச் செய்யறதிலே இருந்து தப்பி சொகுசான வேலையைத்தான் செய்வாங்க. எஸ்.சி. சாதிக்காரங்க அடிமட்ட வேலையை எல்லாம் செய்யணும். பி.சி. சாதிக்காரங்க ரெண்டுக்கும் நடுவிலே இருப்பாங்க” என்று அன்பழகன் கூறிக்கொண்டு இருக்கும்போது சரவணன் இடைமறித்து “அது எனக்குத் தெரியும்; நீ என்ன சொல்ல வர்றே? அதைச் சொல்லு” என்றான்.

அன்பழகனும், திறமையில்லாத பார்ப்பனர்கள் உயர் நிலைக்குச் செல்வதைத் தடுப்பதன் மூலம் தாழ்த் தப்பட்ட வர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும் அந்நிலை களில் அமர முடியும் என்றும், அப்படி நிகழும் போது உயர்சாதிக் கும்பலினர் மட்டுமே அனுபவிக்க முடிகின்ற திட்டங்களை இரகசியமாகத் தீட்டப்படுவதைத் தடுக்க முடியும் என்றும், அனைத்து மக்களுக்கும் பயன்படும் படியாக அரசின் திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்த முடியும் என்றும் கூறினான். அவ்வாறு நிகழும் போது ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களுக்குச் சேர வேண்டிய பங்கு கிடைக்கும் என்றும் அதனால் பிற்படுத்தப் பட்ட மக்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் இடையே உள்ள முரண்பாடுகளின் கூர்மை மழுங்கத் தொடங்கி இறுதியில் மறைந்துவிடும் என்றும் கூறினான். இதைச் செய்து முடிக்க அரசுத்துறை, தனியார்துறை உட்பட பொருளாதார நடவடிக்கைகள் அனைத்திலும் அனைத்து நிலைகளிலும் உயர்சாதிக் கும்பலுக்கும், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடிகள், மதச் சிறுபான்மையினர் ஆகியோருக்கும் அவரவர் மக்கள் தொகையின் விகிதாசாரத் தில் பங்கீடு செய்து கொடுக்க வேண்டும் என்றும் கூறினான். அப்படி நடந்தால்... எல்லா நிலை வேலைகளையும் செய் பவர்கள் எல்லாச் சாதியினரிலும் இருந்தால், ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள், ஜெர்மானியர்கள் இருப்பது போல் bவ்வேறு சாதியினர் இருப்பார்கள். ஆங்கிலேயராகவோ பிரெஞ்சுக்காரராகவோ, ஜெர்மானியராகவோ இருப்பது எப்படி உயர்வு, தாழ்வு என்று சொல்ல முடியாதோ அதேபோன்று பார்ப்பானாகவோ வேறு சாதியினராகவோ இருப்பது உயர்வு, தாழ்வு இல்லை என்றும் ஆகிவிடும்.

அன்பழகனின் விளக்கத்தைக் கேட்ட சரவணன் “நான் ஏதோ கேட்க வந்தேன். ஆனா நீ எதையோ பேசுறியே?” என்று சொல்ல அன்பழகனும் “இல்லே! நீ கேட்டதுக்குத்தான் பதில் சொன்னேன். கலப்புத் திருமணத்திலே சாதிக் கொடுமை ஒழியும்னு நீ சொன்னே. இல்லே, விகிதாசாரப்பங்கீட்லெ தான் சாதிக் கொடுமை ஒழியும்னு நான் சொல்றேன்” என்று பதிலளித்தான்.

இப்பொழுது சரவணனுக்குப் பூங்கொடி விஷயம் நினைவிற்கு வந்தது. அதைப்பற்றி ஆலோசனை கேட்ட போது, பூங்கொடிக்குத் தேர்வு முடிந்த பின் பெரியவர்களிடம் சொல்லிப் பார்க்கும்படி அன்பழகன் கூறினான். ஆனால் சரவணன் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. தேர்வு முடிந்த பின் நண்பர்கள் இணைந்து சுயமரியாதைத் திருமணம் செய்துவிட லாம் என்றும், பின் திருமணத்தைப் பதிவு செய்து விட்டு மற்றவர்களுக்குத் தெரிவிக்கலாம் என்றும் கூறினான். அதன்பின் பெற்றோர்களின் எதிர்ப்பு எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்து மேல் நடவடிக்கை களை எடுக்கலாம் என்றும் கூறினான். பெற்றோர்களின் ஒப்புதல் கிடைத்தால் அனைவரும் அறிய இன்னொரு முறை திருமண விழாவிற்கு ஏற்பாடு செய்யவும் திட்டமிட்டான்.

சரவணனின் திட்டப்படி பூங்கொடிக்கும் மட்ஜிமோயோ ஒஜும்பாவிற்கும் திருமணம் நடந்தது. பூங்கொடி மாளாவி நாட்டிற்குச் செல்வதற்கான விசாவிற்கும் ஏற்பாடு செய்தான். எல்லாம் முடிந்த பிறகு பெற்றோர்களிடம் தெரிவித்த போது கேதைஎறும்பு கிராமமே பூகம்பம் ஏற்பட்டது போல் ஆகி விட்டது. பெண்ணைப் படிக்க வைத்தது தவறாகிவிட்டது என்றும், சரவணன் தன் முறைப் பெண்ணை இன்னொரு வனுக்கு விட்டுக் கொடுக்க முன்வரும் கேவலத்தைத் திட்டியும் ஊரே அல்லோகல்லோலப்பட்டது.

சரவணன் எதற்கும் கலங்காமல் பாறை போல் இருந்தான். பெற்றோர்களின் ஒப்புதல் நிச்சயமாக கிடைக்காது என்று தெளிவாகத் தெரிந்த பின் பூங்கொடியையும், மட்ஜிமோயோ ஒஜும்பாவையும் விமானத்தில் ஏற்றிவிட்டு வந்தான். கேதைஎறும்பு கிராமத்தினர் அவனை ஏளனமாகப் பார்த்தனர்.

சரவணன் இந்திய ஆட்சிப் பணித் தேர்வுக்கான முடி விற்காக நம்பிக்கையுடன் காத்திருந்தான்.

Pin It