விதிவிலக்குகளே பெருவழக்காகிவிட்டன. எனவே பெரும் எண்ணிக்கையில் நடக்கும் நிதிமுறைகேடுகளை - ஊழல்களை, ‘சட்ட ஆட்சியில்’ நடைபெறும் சில விதிவிலக்குகள் என்று கூறி ஆளும்வர்க்கத்தினர் மக்களை ஏமாற்ற முயல்கின்றனர். பெருமளவில் சட்டப்படியே எல்லாம் நடக்கின்றன என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி ஏய்க்கப் பார்க்கின்றனர்.

முடைநாற்றமடிக்கும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், இரண்டாம் அலைக்கற்றையின் பகற்கொள்ளை, நீரா ராடியாவின் ஒலிப்பதிவுகளில் வெளிப்பட்ட அதிர்வேட்டுகள், மும்பையில் ஆதர்ஷ் வீட்டுவசதி சங்கத்தில் அடுக்குமாடி வீடுகள் ஒதுக்கீடு செய்வதில் நடந்த முறைகேடுகள், ஆயுள் காப்பீட்டுக் கழகம் மனை வணிக நிறுவனங்களுக்குச் சட்ட விதிகளுக்குப் புறம்பாகப் பெருந்தொகையாக அளித்த கடன்கள், கருநாடகத்தில் பெல்லாரி மாவட்டத்தில் ரெட்டி சகோதரர்கள் சுரங்க ஒப்பந்தம் என்கிற பெயரில் அடித்துவரும் பெருங்கொள்ளை, முதலமைச்சர் எடியூரப்பா அரசு நிலத்தைத் தன் குடும்ப உறுப்பினர்களுக்கு அளித்த அட்டூழியம், இராணுவத்தில் உயர் அதிகாரிகள் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள், அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் தம் குருதி உறவினருக்காகத் தம் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தல், இவற்றுக்கெல்லாம் மணிமுடியாக, உச்சநீதி மன்றத்தின் புகழ்பெற்ற வழக்குரைஞர் பிரசாந் பூஷன், அண்மையில் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதிகளாக இருந்த 16 பேரில் பாதிப்பேர் ஊழல் பேர்வழிகள் என்று சாற்றியுள்ள குற்றச்சாட்டு - ஆனால் ஆளும்வர்க்கம் இவ்வளவு ஊழல் குற்றச்சாட்டுகளையும் அங்கொன்றும் இங்கொன்றுமாக, தப்பித்தவறி நடந்த முறைகேடுகள் என்று விளக்கமளித்து உண்மைகளை மறைக்கப் பார்க்கிறது.

சாற்றப்படுகின்ற குற்றச்சாட்டுகளில் பெரும்பாலானவை உண்மை என்று மெய்ப்பிக்கப்படுகின்றன. ஊழல் செய்த அமைச்சர்களை, நாடாளுமன்ற உறுப்பினர்களை, உச்சநீதிமன்ற - உயர்நீதிமன்ற நீதிபதிகளை, உயர் அதிகாரிகளை, இராணுவத் தளபதிகளை, பத்திரிகையாளர் அல்லது தொலைக்காட்சி செய்தியாளர்களை, ஆட்டு மந்தையில் - ஆட்டின் தோலைப் போர்த்துக் கொண்டுள்ள ஓநாய் - ‘கறுப்பு ஆடு’ என்று ஆளும்வர்க்கத்தினர் கூறி ஒதுக்கிவிடப் பார்க்கின்றனர்.

இந்தக் ‘கறுப்பு ஆடுகளின்’ எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. ஆனால் இவர்கள் எண்ணிக்கையில் சிறுபான்மையினராக உள்ளபோதிலும், ஆட்சி அமைப்பில் அதிகாரம் வாய்ந்த நிறுவனங்களைக் கைப்பற்றி, மக்கள் நாயகத்திற்கு மாற்றாக முதலாளியப் பெருங்குழுமங்களின் கார்ப்பரேட் நாயகத்தை நிலைநாட்டுவதற்கு ஏற்ற வகையில் இவற்றை மாற்றியமைத்து வருகின்றனர். அரசியல் கட்சிகள், உயர் அதிகாரவர்க்கம், நிதி நிறுவனங்கள், பெருமுதலாளியக் குழுமங்கள் ஆகியவற்றில் செல்வாக்கும் சிறப்புரிமைகளும் பெற்றுள்ள சிறுகும்பலே ஒன்றுசேர்ந்து நாட்டை ஆளுகிறது.

தனிமனிதர்களின் பேராசையால் செய்யப்படும் தவறுகளே ‘கறுப்பு ஆடு’களாகின்றன என்கிற கூற்றுப் பொய்யானது! தடையற்ற தாராளமயச் சந்தை, உலகளாவிய புதிய பொருளாதார நடைமுறை ஆகியவை தமக்கான முகவர்களாக இந்தக் ‘கறுப்பு ஆடு’களை உருவாக்குகின்றன். தரகு முதலாளியத் தொழில் நுட்பத்தில் கைதேர்ந்தவர்களாக - அரசியல் சூதாட்டத்தில் காய்நகர்த்துபவர்களாக இவர்கள் பயிற்றுவிக்கப்படுகிறார்கள்.

திரைமறைவில் தில்லுமுல்லுகள் செய்வதில் காங்கிரசுக் கட்சியும், பா.ச.க.வும், கம்யூனிஸ்ட் கட்சிகளும்கூட தம் வேற்றுமைகளைத் துறந்து ஒரே மாதிரி காட்சியளிக்கின்றன. காங்கிரசுக் கட்சியின் ஊழல்கள் குறித்து வாய்கிழியக் கூச்சலிடும் பா.ச.க. தில்லியில் ஆட்சியில் இருந்தபோது அதன் தலைவர்கள் கையூட்டு வாங்குவதை ‘தெகல்கா’ இதழ் படம் பிடித்துக் காட்டியது. இப்போது கருநாடகத்தின் முதலமைச்சர் எடியூரப்பா தன் உறவினர்களுக்கு அரசின் நிலத்தை முறைகேடாக வழங்கியது குறித்து வாயை மூடிக் கொண்டிருக்கிறது.

மேற்கு வங்காளத்தை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தரகர் நீரா ராடியாவுக்கும் இடையே உள்ள உறவு இப்போது அம்பலமாகி உள்ளது. மேற்கு வங்காளத்தின் அமைச்சர் நிருபம் சென் தலைவராகவுள்ள, மேற்கு வங்கத் தொழில் வளர்ச்சிக் கழகம் 2007 ஆகசுட்டு முதல் 2010 சூலை வரை நீராராடியாவின் வைஷ்ணவி தகவல் தொடர்பு நிறுவனத்தைத் தன் முகவராக (தரகராக) அமர்த்தியிருந்தது. இதற்கு முன்பே, நீராராடியாவின் வைஷ்ணவி நிறுவனம் டாடா நிறுவனத்தின் முகவராகச் செயல்பட்டுக் கொண்டிருந்தது. அப்போதுதான் சிங்கூரில் டாடாவின் ‘நானோ’ சிறிய மகிழுந்து தயாரிப்பதற்கான நில ஒதுக்கீடு ஒப்பந்தம் ஏற்பட்டது. டாடா நிறுவனத்தின் கட்டாயத்தின் பேரில்தான் நீராராடியாவின் நிறுவனம் மேற்கு வங்க அரசின் முகவராக அமர்த்தப்பட்டதா? இதன்பின் மேற்குவங்க அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் வெபல் (Webel) நிறுவனம் தொழில்நுட்பம், மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றின் வளர்ச்சிக்காக மக்கள் தொடர்பு நிறுவனமாக நீராராடியாவின் வைஷ்ணவி நிறுவனத்தை 2009 நவம்பர் முதல் 2010 சூலை வரை அமர்த்தியிருந்தது (Asian Age, 29 நவம்பர் 2010).

இன்று, இந்தியக் ‘கறுப்பு ஆடுகளின்’ பைகள் கோடிக் கணக்கான பணத்தால் நிரம்பி வழிந்து கொண்டிருக்கின்றன. கொள்ளை இலாபம் தரும் தன்மையில் - மற்றவர்களால் எளிதில் புரிந்துகொள்ள முடியாத வகையில் நிதி மூலதனத்தைக் கையாள்வதில் இவர்கள் வல்லவர்கள். தங்கள் திறமையின் பெருமையைப் பறை சாற்றிட நவீன தொழில்நுட்ப உத்திகளைப் பயன்படுத்துவதில் இவர்கள் ‘பெரும் கலைஞர்கள்’. சனநாயகத்தின் புனிதமான - வலிமையான தூண்கள் என்று போற்றப்படும் நிருவாக அமைப்பு, நாடாளுமன்றம், நீதித்துறை ஆகிய பெருங்கட்டமைப்பை அரித்துத்தின்னும் கரையான்களாக இவர்கள் செயல்படுகின்றனர். இதற்காக, தம் கையாள்களை இம்மூன்று துறைகளிலும் கரவான திறமையுடன் அமர்த்தி உள்ளனர். எனவே குடிமக்களின் உரிமைகளைப் பேணுவதற்காக இயற்றப்பட்டதாகக் கூறப்பட்ட அரசமைப்புச் சட்டத்தின் மீது உருவாக்கப்பட்ட சனநாயகக் கட்டமைப்பு சீரழிந்து கொண்டிருக்கிறது. கரையான் அரித்த பாழடைந்த வீடு இடிந்து விழுவது போல், ஊழல்களாலும், குற்றச் செயல்களாலும், சனநாயகத் தூண்கள் என்று போற்றப்படும் அமைப்புகள் இற்று வீழ்ந்து கொண்டிருக்கின்றன. சனநாயகத்தின் நான்காவது தூண் எனப்படும் செய்தி ஊடகத்துறை இந்த வீழ்ச்சியை விரைவுபடுத்திக் கொண்டிருக்கிறது. நீராராடியாவின் உரையாடல் ஒலிப்பதிவு இதற்கு ஒரு சிறந்த சான்றாகும்.

இப்போது வெளிப்பட்டு வரும் ஊழல்களும், முறைகேடுகளும் முதலாளிய - சனநயாகம் உருவாக்கிய பழைய கட்டமைப்பு, இன்றைய உலகமய - புதிய தாராளமய நடைமுறையால் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது என்பதைப் புலப்படுத்துகின்றன். முதலாளிய - சனநாயகத்தின் பழைய கட்டமைப்பின் நோக்கம் காலாவதியாகிவிட்டதாகக் கார்ப்பரேட் நாயகம் (Corporatocracy) கருதுகிறது. எனவே தற்போதைய ஆளும்வர்க்கத்தின் தேவைகளுக்கு ஏற்ப, கார்ப்பரேட்டுகள், இப்போதுள்ள முதலாளியக் கட்டமைப்பைத் தமக்கு ஊழியம் செய்யுமாறு ஆக்கிட முயல்கின்றன. அல்லது இவற்றை மாற்றியமைக்க விரும்புகின்றன.

இந்த ஆளும் அதிகார வர்க்கம், இந்தியாவின் புதிய தலைமுறையினருள், தம் தேவைக்கு இயைந்த தன்மையில் விரும்பிப் பணிபுரியக் கூடியவர்களைத் தேர்வு செய்கிறது. இவர்கள் இந்தியா சுதந்தரமடைந்தபின், நேருவின் ஆட்சிக்காலத்தில் பிறந்து வளர்ந்தவர்கள். 1990களில் நரசிம்மராவ் - மன்மோகன் சிங் ஆட்சியில் ‘தனியார்மயம் - தாராளமயம்’ என்கிற சூழலில் இளைஞர்களானவர்கள் எந்தத் தவறையும் செய்வதற்கு அணியமாக உள்ள மனநிலை கொண்ட எண்ணற்ற இளைஞர்கள் தாராளமயத்தின் கீழ் கடந்த இருபது ஆண்டுகளில் உருவாயினர். இதனால் ‘கறுப்பு ஆடுகளின்’ கும்பல் அதிகமாயிற்று. இக்கொடிய கும்பல் புத்தம் புதிய முறைகளில் தன் நச்சுப் பற்களைக் கூர்தீட்டி வருகிறது.

60 ஆண்டுகளுக்குமுன் இக்கும்பலில், அரிதாஸ் முந்தராக்கள், கிருஷ்ணமாச்சாரிகள், பிரதாப் சிங் கெய்ரோன்கள் மட்டுமே இருந்தனர். ஆனால் இவர்கள் செய்த ஊழல்கள் இவர்களின் வழித்தோன்றல்கள் இன்று செய்யும் ஊழல்களுடன் ஒப்பிடுகையில், ஊழலில் மழலையர் பள்ளி நிலையினதாகவே உள்ளன. இன்று, ‘இக்கறுப்பு ஆட்டுப் பேர்வழிகளின்’ எண்ணிக்கை சிறிய தொழில் முதலாளி முதல் பெருமுதலாளியக் குழுமம் வரையிலும், கீழமை நீதிமன்ற நீதிபதி முதல் உச்சநீதிமன்ற நீதிபதி வரை, உள்ளாட்சித் தலைவர் முதல் நடுவண் அரசின் அமைச்சர்கள் வரை, காவல் துறையில் கீழ்நிலைக் காவலர் முதல் காவல்துறை ஆணையர் வரை, என எல்லா நிலைகளிலும் பெருகியுள்ளது. அதனால்தான் எளிதில் விலைகொடுத்து வாங்கக் கூடியவர்கள், உயர் அதிகாரிகளாக, இராணுவத்தில் தளபதிகளாக, உயர் காவல் துறை அதிகாரிகளாக, நீதிபதிகளாக நியமிக்கப்படுகின்றனர்.

இப்போது பிரதமராக உள்ள மன்மோகன் சிங்கும் இவருக்கு முன் இப்பதவியில் இருந்த வாஜ்பாயும் தூய்மையின் அவதாரங்கள் என்று பொய்யாக விளம்பரப்படுத்தப்பட்டனர். இவர்களின் ஆட்சியில் இவர்களின் கட்சியினரும், கூட்டணிக் கட்சியினரும் செய்த முறைகேடுகளை மூடிமறைக்கவே இவர்களின் ‘தூய்மை’ வேடம் பயன்படுத்தப்பட்டது. அம்மணக்கோலத்தை ஆலை இலையால் மூடி மறைக்க முயல்வது போன்றது இது! வாஜ்பாய் - மன்மோகன்சிங் ஆட்சிக்காலத்தில் உலக அரசியலில் ஊழல் மலிந்த கடைநிலை நாடுகளில் ஒன்றாக இந்தியா இழிந்தது. மனிதவள மேம்பாட்டு அறிக்கையின்படி, கல்வி, நலவாழ்வு, வீட்டுவசதி, தூய்மையான சுற்றுச்சூழல், மனித உரிமை ஆகியவற்றில் மற்ற நாடுகளைவிட இந்தியா மிகவும் பின்தங்கிய நிலைக்குத் தாழ்ந்தது. ஊழலையும், குற்றங்களையும் எப்படி மூடி மறைப்பது - அந்நிலையிலும் தம்மை உயர்ந்தவராக எப்படிக் காட்டிக் கொள்வது என்ற கலையைத் திறமையாகக் கற்பதற்கான இடமாக ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டுமானால், அதற்கு இந்தியா சிறந்த இடமாகும்.

ஆளும்வர்க்கத்தினர் அடுத்தடுத்து ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ளனர். இந்த ஊழல்களால் ஆளும் வர்க்கம் மட்டுமின்றி, இந்திய சனநாயகக் கட்டமைப்பே ஆட்டங்கண்டுள்ளது. எனவே இந்நிலையிலிருந்து மீள்வதற்காக - அரசின் ஆதரவு பெற்ற ‘கறுப்பு ஆடுகளை’க் காப்பாற்றுவதற்காக ஆளும்வர்க்கத்தினரிடமிருந்து பல தரப்பட்ட விளக்கங்கள் - மன்னிப்புக் குரல்கள் ஒலிக்கின்றன.

மனை வணிக (ரியல் எஸ்டேட்) நிறுவனங்களுக்கு முறைகேடாகக் கடன் வழங்கியதில் ரூ.1000 கோடி இழப்பு ஏற்பட்டதற்காக ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் உயர் அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, ‘ஆயுள் காப்பீட்டுக் கழகம் போன்ற வலிமையான பெரிய நிறுவனத்தில் ஓரிரு அதிகாரிகள் தவறு செய்வதால், அதன் செயல்பாடுகள் எந்தவகையிலும் பாதிக்காது’ என்று கூறினார். ஆயிரம் கோடி உருபாய், அரசுக்கு இழப்பு ஏற்பட்டது குறித்தோ அத்தொகையை எப்படி மீட்பது என்பது பற்றியோ பிரணாப் முகர்ஜி எதுவும் கூறவில்லை.

பொதுவாக மனதிற்பட்டதை வெளிப்படையாகக் கூறும் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் அண்மையில், நீதித்துறையில் சில கறுப்பு ஆடுகள் இருப்பதாலேயே, நீதித்துறையின் மாண்பைக் வினாவுக்குட்படுத்தக் கூடாது என்று கருத்து ரைத்துள்ளார். கிருஷ்ணய்யரின் தாய் வீடான நீதித்துறையில் உச்சநீதிமன்ற - உயர்நீதிமன்ற - மாவட்ட நீதிமன்ற நீதிபதிகளில் பலர், தங்கள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியது, கையூட்டுப் பெற்றது, நிலங்களைக் கொள்ளையடித்தது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்குண்டுள்ளனர்.

ஒரு புதுமையான எடுத்துக்காட்டைக் காண்போம். நரேந்திர குமார் ஜெயின் என்பவர் மீதான குற்றவியல் வழக்கு ஒன்றில், 1985-86ஆம் ஆண்டு, இந்தூர் மாவட்ட நீதிமன்றம் அவரைத் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது. ஆனால் பின்னாளில் அதே இந்தூரில், கூடுதல் மாவட்ட நீதிபதியாகவும், மாவட்ட நீதிபதியாகவும் நரேந்திர குமார் ஜெயின் பல ஆண்டுகள் பணிபுரிந்தார். இவரின் தில்லுமுல்லு சில மாதங்களுக்கு முன் அம்பலமானது. அதன்பின் அவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டார் (இந்தியன் எக்ஸ்பிரஸ், 21 மே, 2010). நரேந்திர ஜெயின் போன்ற எத்தனை தில்லுமுல்லுப் பேர்வழிகள் இந்தியாவில் நீதிபதிகளாக உள்ளனரோ? அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளின் குருதி உறவினர்கள் வழக்குரைஞர்களாக இருப்பது குறித்து உச்சநீதிமன்றம் கண்டித்தது. ஆனால் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் இதற்கு ஒரே குரலில் எதிர்ப்புத் தெரிவித்தனர். இவ்வாறு சீரழிந்து கிடக்கும் நீதித்துறையை சனநாயகத்தின் மூன்று தூண்களில் மிகவும் புகழ்வாய்ந்தது - புனிதமானது என்று நாம் போற்ற வேண்டும் என்று கிருஷ்ணய்யர் எதிர்பார்க்கிறாரா?

சனநாயகத்தின் மற்றொரு தூண் எனப்படுகின்ற நாடாளுமன்ற - சட்டமன்றங்களின் உறுப்பினர்களும் தங்கள் நலன்களையும் உரிமைகளையும் காப்பதில் மந்தைபோல் ஒன்று கூடிவிடுகின்றனர். சாதாரண மக்கள் கடும் விலை உயர்வால் நசுங்கிக் கொண்டிருக்க - கடன் சுமையால் உழவர்கள் தற்கொலை தொடரும் நிலையில் கூட, நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தைப் பல மடங்கு உயர்த்துவதில் இவர்கள் கட்சி வேறுபாடு இல்லாமல் ஓரணியில் திரண்டனர். நாடாளுமன்ற உறுப்பினர்களின் வெட்கங்கெட்டப் பேராசை குறித்து நாம் வியப்பதற்கில்லை. ஏனெனில், இவர்களில் பெரும்பாலோர் பெரும் பணக்காரர்களாகவும், குண்டர் கும்பலின் தலைவர்களாகவும் இருக்கிறார்கள். ஆகவே இவர்களிடம் உயர்ந்த கொள்கை என்பது ஏதுமில்லை. தவறான வழிகளில் பணத்தையும் அதிகாரத்தையும் கைப்பற்ற வேண்டுமென்ற வெறியும் பேராசையுமே இவர்களின் உள்ளங்களில் தாண்டவ மாடுகின்றன.

இவர்களுக்குள் அவ்வப்போது தோன்றும் முரண்பாடுகளும், நடக்கும் மோதல்களும், யார் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்பதற்கான போட்டியாக இருக்கும். நாடாளுமன்றத்தில் 2ஜி அலைக் கற்றை ஊழல் தொடர்பாகக் காங்கிரசுக்கும் பா.ச.க. வுக்கும் இடையில் நடக்கும் மோதல், ‘அரசியலில் தன் இனந்தின்னி’ (Political Cannibalism) போன்றதாகும். கறுப்பு ஆடுகளுள் ஒரு பிரிவு இன்னொரு பிரிவைத் தின்ன முயல்கிறது.

கடந்த முப்பது நாற்பது ஆண்டுகளில், செய்தி ஏடுகளின் உரிமையாளர்களான முதலாளியக் குழுமங் கள், செய்தித்தாள்களின் ஆசிரியர்களுக்கு, செய்திகளைத் தேர்வு செய்தல், தலையங்கம் எழுதுதல் ஆகியவற்றில் அளிக்கப்பட்டிருந்த சுதந்தரப் போக்கையும் உரிமைகளையும் பறித்துவிட்டன. மேலாண்மை ஆசிரியர் என்கிற புதிய பதவியை உருவாக்கியதன் மூலம் இதைச் செய்தனர். இந்த மேலாண்மை ஆசிரியர்களிடம் செய்தித் தேர்வு, தலையங்கம், விற்பனை விளம்பரம் என எல்லாப் பொறுப்புகளையும் முதலாளிகள் ஒப்படைத்தனர். மேலும் தலையங்கம் எழுதுவதற்கென ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்கள் அமர்த்தப்பட்டனர். இவர்கள் தம் முதலாளிகளின் நலன்களுக்கு ஏற்பத் தலையங்கம் எழுதுகின்றனர். ‘விலை பெற்றுக் கொண்டு செய்திகளை வெளியிடுவது’ (paid news) என்கிற முறை வேகமாக வளர்ந்து வருகிறது. தருகின்ற பணத்திற்கு ஏற்பச் செய்திகளை வெளியிடும் வாய்ப்பை அரசியல்வாதிகள் திறம்படப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

நீராராடியாவின் உரையாடல் பதிவுகள், புகழ்பெற்ற ஊடகத்துறையினரும், இதழாளர்களும், முதலாளியக் குழுமங்களுக்கும் ஆளும் வர்க்கத்தினருக்கும் இடையே எந்த அளவுக்கு இடைத்தரகர்களாகச் செயல்படுகின்றனர் என்பதை அம்பலப்படுத்தியுள்ளன. ஆனால் 2010 நவம்பர் 30 அன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டின் தலையங்கத்தில், ‘ஒரு அரை டசன் இதழாளர்கள் தவறு செய்துவிட்டதாலேயே, இதழியல் துறை முழுவதுமே சீரழிந்துவிட்டது என்று கூற முடியாது’ என்று எழுதப்பட்டுள்ளது. ஆனால் இந்த அரை டசன் இதழாளர்கள் தாம் முதலாளியக் குழுமங்களுக்கும் அமைச்சர்களுக்கும் இரகசியப் பேரங்கள் நடத்தும் இடைத்தரகர்களாக இருக்கின்றனர் என்கிற உண்மையை இந்தியன் எக்ஸ்பிரஸ் புறக்கணித்து விட்டது.

1990களுக்குப்பின், ‘இக்கறுப்பு ஆடுகளின்’ எண்ணிக்கை பெருகியிருப்பதுடன், இவர்களின் வஞ்சகத் திறமைகளும் வளர்ந்துள்ளன. இவர்களின் செயல்பாடுகள் எல்லாத் தளங்களிலும் ஊடுருவி ஆதிக்கம் செலுத்துகின்றன. இவர்களின் வஞ்சகச் செயல்களை நியாயப்படுத்துவதற்கான சமூகச் சூழலை உருவாக்குகின்றனர். இதில் முதன்மையாகக் குறிப்பிடத்தக்கது வெறிபிடித்த நுகர்வியக் கலாச்சாரமாகும். இதனால் ஊழல்களை எதிர்க்க வேண்டும் என்ற மனப்போக்கு மக்களிடம் மங்கிவிட்டது. சமுகத்தில் பல்வேறு தளங்களில் உள்ள பிரிவினர் தம் தன்னல மேம்பாட்டிற்காகத் தவறான செயற்பாடுகளை விரும்பி மேற் கொள்வது என்பது படர்ந்து பரவியுள்ளது.

1991ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் தனியார்மய - தாராளமயக் கொள்கைகளின் விளைவாக உருவாகியுள்ள நுகர்வியக் கலாச்சாரத்தை, நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் உயர்வான குறியீடு என்று பொருளாதார வல்லுநர்களும், இதழாளர்களும் கூறி ஊக்குவிக்கின்றனர். இவர்களும் ‘கறுப்பு ஆடுகள்’ கூட்டத்தால் பயனடைபவர்கள் என்பதால் பெரும்பான்மையினராகவுள்ள அடித்தட்டு மக்களின் கொடிய வாழ்நிலையை வெளியிடாமல் புறக்கணிக்கின்றனர். கிராமப்புற மக்கள் பட்டினியிலும் ஊட்டச்சத்துக் குறைபாட்டு நோய்களாலும் வாடுகின்றனர். தலித்துகள், மேல்சாதியினரால் ஒடுக்கப்படுகின்றனர். கனிம வளங்களுக்காக, பெரிய அணைகள் கட்டுவதற்காக என்று கூறிப் பழங்குடியினர் அவர்களின் வாழ் விடங்களிலிருந்து விரட்டியடிக்கப்படுகின்றனர். பெரும் அடுக்குமாடி வணிக வளாகங்களையும், தொழிற்சாலைகளையும் அமைப்பதன் பேரால் நகரங்களில் ஏழைகளின் வாழ்வு குழிதோண்டிப் புதைக்கப்படுகிறது. இத்தனை அட்டூழியங்களையும் புதிய பொருளாதாரக் கொள்கையின் பேரால், அரசும், முதலாளியக் குழுமங்களும் இணைந்து செய்கின்றன. உழைக்கும் ஏழை மக்களின் இத்தகைய துன்பங்களைப் புகழ்பெற்ற பொருளியல் வல்லுநர் செகதீஷ் பகவத் போன்றவர்கள்கூடப் புறக்கணித்துவிட்டுத் தாராளமயத்தின் புகழ்பாடுகின்றனர்.

செய்தி ஏடுகளும், தொலைக்காட்சி அலைவரிசைகளும் வெளியிடுகின்ற செய்திகளும், கருத்துகளும், காட்சிகளும், பொது மக்களை மேலும் மேலும் தன்னலக்காரர்களாகவும், நுகர்விய வெறிகொண்டவர்களா கவும் ஆக்குகின்றன. எத்தகைய குறுக்கு வழியைக் கையாண்டேனும் புதிய பணக்காரர்களுள் ஒருவராகத் தானும் ஆவதே சனநாயக உரிமை என்று இந்த ஊடகங்கள் உசுப்பேற்றி விடுகின்றன. பெரும்பான்மையான மக்கள் வறுமையிலும் பல்வேறு வகையான ஒடுக்குமுறைகளுக்கும் ஆளாகியிருப்பது பற்றி இவர்கள் நினைத்தும் பார்ப்பதில்லை.

ஒரு சனநாயக சமூகம் ஏகாதிபத்திய சமூகமாகப் படிப்படியாக மாறிவிட்டதற்கு இந்தியா ஒரு ஆபத்தான எடுத்துக்காட்டாக உள்ளது. இச்சமுகத்தில் புதிய பொருளாதாரச் சந்தை என்னும் சிறையில் பொதுமக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். ஒரே தன்மையில் சிந்திக்கின்ற - செல்வாக்கும் அதிகாரமும் கொண்ட - சிறுகும்பல் நாட்டின் உழைப்பையும் செல்வத்தையும் கொள்ளையடித்துக் கொழுக்கின்றது.

கறுப்பு ஆடுகளின் இனப்பெருக்கத்தை (breeding black sheep) மேலும் மேலும் ஊக்குவிப்பதன் மூலமே, சீரழிந்துவிட்ட - தன்னலத்தையே குறிக்கோளாக வரித்துக் கொண்டுள்ள இந்திய சனநாயகத்தின் ஊழல் ஆட்சி தொடர முடியும். 

(Economic and Political Weekly 2011 2011 சனவரி 8 இதழில் சுமந்தா பானர்ஜி ‘breeding black sheep’ எனும் தலைப்பில் எழுதிய கட்டுரையின் சற்றுச் சுருக்கப்பட்ட தமிழாக்கம்)

-       க.முகிலன்