கீற்றில் தேட...

 

சத்தீஸ்கர் மாநில அரசின் பா.ஜ.க. முதல்வர் இராமன் சிங் ஒரு ஆயுர்வேத மருத்துவர் மட்டுமல்ல. இந்துத்துவா கொள்கையின் அடிப்படைவாதி. முற் போக்குச் சிந்தனையாளர்கள் மீது அடக்குமுறையை ஏவுவதில் ‘இராம ஜென்ம பூமியின் தலையாய சீடர்’. இவர்தான் மருத்துவ மேதையான பினாயக் சென் மீது பொய் வழக்குத் தொடர்வதற்குக் காரணமாக அமைந்தவர். பினாயக் சென்னின் மருத்துவப் பணியும், தொண்டும் அளப்பரியன. தமிழ்நாட்டின் வேலூரில் அமைந்துள்ள கிறித்தவ மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவப் பட்டத்தைப் பெற்றவர். ஊட்டச்சத்துக் குறைவால் குழந்தைகள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்ற ஒரு சிறந்த ஆய்வினை மேற்கொண்டு மருத்துவப் படிப்பில் முது நிலைப் பட்டம் பெற்றவர். தன் வாழ்வு, தன் குடும்பம் என்று இல்லாமல், பழங்குடியின மக்களுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களிடையேயும் மருத்துவத் தொண் டையும், சமூகத் தொண்டையும் ஆற்றியவர். மக்கள் உரிமைப் போராளி. பொறுத்துக் கொள்வாரா இந்துத் துவா ஆயுர்வேத மருத்துவர்?

மாவோயிஸ்டுகளுக்கு உதவினார் என்று சத்தீஸ்கர் மாநில அரசு சென் மீது பொய் வழக்கைப் புனைந்தது. நாட்டிற்கு எதிராக மக்களைத் தூண்டி னார், நாட்டு விரோதச் செயலில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்தி இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 121, 124(ஏ) பிரிவுகளின் கீழ் எட்டு வழக்குகள் பினாயக் மீதும் மற்ற இரு மக்கள் உரிமை இயக்கத்தினர் மீதும் மாநில அரசு நீதிமன்றத்தில் பதிவு செய்தது. அவர் செய்த குற்றம்தான் என்ன? நாராயண சன்யால் என்பவரிடமிருந்து மாவோயிஸ்ட் தலைவர்களுக்கு மடல்கள் எடுத்துச் சென் றார். கணினியில் தட்டச்சு செய்யப்பட்ட ஒரு ஆவணத்தை மாவோ கட்சியினரி டமிருந்து பெற்றிருந்தார் என்பதாகும். இதற்கான ஆதாரங்கள் என்ன? நீதி மன்றத்தில் குறிப்பிட்டதுதான் என்ன? காவல் துறையினர் மருத்துவர் சென் வீட்டிற்குச் சென்றதாகவும் அங்கு மேற் கூறிய தண்டனைச் சட்டங்களின் பிரிவு களின்படி குற்ற நடவடிக்கைகளை மேற் கொண்டதாகவும், அதற்கான ஆதாரங்கள் அவர் வீட்டில் சிக்கியதாகவும் வழக்குப் புனைந்துரைக்கப்பட்டது. காவல் துறை ஒருவர் மீது குற்ற நடவடிக்கையை மேற் கொள்ளும் போது சட்டப்படி கடைப்பிடிக்க வேண்டிய எந்த நெறிமுறைகளும் கடை பிடிக்கப்படவில்லை. குறிப்பிட்டுச் சொல்லும் படியான சாட்சிகளும் ஆதாரங்களும் இல்லை.

வழக்கு விசாரணையின் போது சென்னின் வழக்கறிஞர் மேற்கொண்ட குறுக்கு விசாரணையில் இவ்வழக்கு எவ்வாறு முன்னுக்குபின் முரணாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதைச் சுட்டி வாதாடிய போதுகூட, மாவட்ட நீதிபதி வர்மா, எதையுமே கண்டு கொள்ளவில்லை. விரைந்து தீர்ப்பை வழங்குவதி லேயே முனைப்போடு இருந்தார். பினாயக் சென், பிஜுஷ் குகா, நாராயண் சன்யால் ஆகிய மூவர்க்கும் ஆயுள் தண்டனை வழங்கி ராய்பூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மொழி, இனம், நிறம் கடந்து உலகின் பல நாடுகளில் உள்ள மனித உரிமை அமைப்பினரும், நோபல் பரிசு பெற்ற அறிஞர்களும், மருத்துவ மேதைகளும் இந்தத் தீர்ப்பைக் கண்டு கொதித்துப் போயினர். தொடர்ந்து கண்டனங்களை எழுப்பி வருகின்றனர்.

உயர்நீதிமன்றம் நல்ல தீர்ப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கின்றனர். ஆனால் பா.ஜ.க. போட்ட பொய் வழக்கைக் கண்டித்தோ, தீர்ப்பை விமர்சனம் செய்தோ இன்றுவரை நடுவண் அரசு வாய் திறக்கவில்லை. ஏனென்றால், இந்திய அரசிற்கு இராஜபக்சே போன்றவர்களைத்தான் நிரம்பப் பிடிக்கும். அவர் செய்தது போல் குறைந்தது இருபதாயிரம் அப்பாவி மக்களைக் கொன்றிருந்தால்தான், அதுவும் தமிழர்களைக் கொத்துக் கொத்தாகக் குவித்து ஒரே இடத்தில் குண்டு மழை பெய்து கொன்றிருந்தால்தான் நடுவண் அரசு காமன்வெல்த் விளையாட்டு நிறைவு விழாவிற்கு அப்படிப்பட்டவரைச் சிறப்பு விருந்தினராக அழைத்துப் போற்றும். மனித உரிமை மீறல் மீது காந்திய காங்கிரசிற்கு அவ்வளவுப் பற்று.

உலகமே இராஜபக்சேவைக் கண்டிக்கும் போது, ஐக்கிய நாடுகள் மன்றமே மனித உரிமைகளை மீறினார் என்று விசாரணை செய்யும் போதுகூட வாய் திறக்காத நடுவண் அரசா, சொந்த நாட்டில் மனித உரிமை மீறல்களைக் கண்டுகொள்ளப் போகிறது? பினாயக் சென் மீது அளிக்கப்பட்ட தீர்ப்பிற்குக் கண்டனமா தெரிவிக்கப்போகிறது.

கடந்த நூற்றாண்டின் இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றைத் திருப்பிப் பார்த்தால் 121, 124(ஏ) சட்டப் பிரிவுகள் எவ்வாறு வடிவமைக்கப் பட்டன. எப்படி எல்லாம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் பொய் வழக்குகளை விடுதலைப் போராளிகள் மீது பதிவு செய்தது, தண்டனை அளித்தது என்பதை உணர முடியும். 1908ஆம் ஆண்டு அன்றைய காங்கிரசு தீவிரவாதத் தலைவர் பாலகங்காதர திலகர், கேசரி என்ற இதழில் ‘நாட்டின் அவலநிலை’ என்ற கட்டுரை யை எழுதி, பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசை விமர்சனம் செய்தார் என்பதற்காக, இராஜதுரோக வழக்கில் 121 (ஏ) பதிவு செய்தது. அவருக்குக் கடும் தண்டனையை வழங்கியது. விடுதலை வேள்வியில் மாபெரும் வீரனாகக், கப்பலோட்டிய தமிழனாகப், புரட்சியாளனாகப் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகக் கப்பலோட்டிப் பொருளா தாரச் சுரண்டலைத் தடுக்க முற்பட்ட வ.உ.சி. மீது இதே பிரிவுகளின் கீழ்தான் வழக்குப் பதிவு செய்து 40 ஆண்டுகள் இரட்டை ஆயுள் தண்டனையை வழங்கியது.

1929ஆம் ஆண்டு இந்தியத் தொடர்வண்டித் துறை வேலை நிறுத்தத்தை முன்னின்று தொடங்கிய டாங்கே, காட்டே போன்ற பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்தவர்கள் மீதும், தொழிற்சங்கத் தலைவர்கள் மீதும் மீரட் சதி வழக்கு என்று பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் பதிவு செய்து 12 ஆண்டுகள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று கொடுமையான தீர்ப்பை வழங்கியது. 1930ஆம் ஆண்டு பகத்சிங், இராஜகுரு, தத் ஆகிய மூவரையும் பொய்யான முறையில் குற்றஞ்சாட்டி வழக்கை முறையாக விசாரிக்காமல் சாவுத் தண்ட னையை அளித்தது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கீழ்ப் பணியாற்றிய நீதிமன்றம்.

 இன்று இந்துத்துவா, ஜஸ்வந்த் சிங்கால் போற்றப் படுகிற முகமது அலி ஜின்னா அன்றே பிரிட்டிஷ் அரசின் அடக்குமுறைக்கு எதிராகத் தனது கடும் கண்டனத் தைத் தெரிவித்தார். பகத்சிங், குண்டு வீசினார் என்று பொய்யான குற்றத்தைச் சுமத்திய போது நடுவண் சட்டமன்ற வளாகத்தில் ஜின்னா இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. வெறும் புகைதான் வந்தது; யாரும் இறக்கவில்லை; யாரும் பாதிக்கப்படவில்லை என்ற கருத்தையும் ஜின்னா பதிவு செய்தார். பழிவாங்கும் நோக்கோடு இந்த வழக்கை பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசு, நீதிமன்றம் வழியாக பகத் சிங், இராஜகுரு, தத் ஆகியோருக்குச் சாவுத் தண்டனை வழங்கியது. பகத் சிங்கின் அணுகுமுறையில் தனக்கு உடன்பாடு இல்லை என்றாலும், அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனை மிகவும் கொடுமையானது என்று ஜின்னா முழக்கமிட்டார்.

தீர்ப்பு வெளிவந்த போது ஜின்னா கூறிய பின்வரும் கருத்து என்றும் நினைவுகூரத்தக்கதாகும். “நீதியின் உணர்வையும், நீதியை மதிக்கின்ற மனப்பான்மை யையும் துளி அளவாவது நீதிபதி பெற்றிருந்தால், இதுபோன்று விசாரணையை மனசாட்சியில்லாமல், பதற்றமே இல்லாமல் மேற்கொண்டு இத்தகைய தீர்ப் பினை அளித்திருக்கமாட்டார்” The death sentence was pronounced by the court to Bhagat Singh, Rajguru and Dutt. Jinnah had condemned the court verdict by stating that “I say that no Judge who has got an iota of a judicial mind or a sense of justice can ever be a party to a trial of that character and pass sentence of death without a shudder and a pang of conscience) என்று கூறித் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்தார் ஜின்னா.

இவ்வகை நிகழ்வுகளோடு இன்றைய பினாயக் சென் தீர்ப்பை ஒப்பிட்டுப் பார்த்தால் ஓர் உண்மை புலப்படும். பிரிட்டிஷ் ஆட்சி மாறினாலும், காட்சி மட்டும் மாறவில்லை என்பதே ஆகும். இந்திய விடுதலை வீரர்களையும், புரட்சியாளர்களையும் கொடுமையான முறையில் நசுக்கித் தண்டனை அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு 1860ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் கொண்டு வந்ததே இந்தியத் தண்டனைச் சட்டமும் அதன் 121, 124 (ஏ) பிரிவுகளும் இந்தியா விடுதலை பெற்ற பிறகு இந்தத் தண்டனைச் சட்டப் பிரிவுகளில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டது. அது என்னவென்றால், பிரிட்டிஷ் இந்தியா என்ற எழுத்துகள் நீக்கப்பட்டு, அரசு என்ற ஒரு திருத்தத்தை மேற்கொண்டார்கள். இந்தச் சட்டத்தின் அடிப்படையில் தான் இன்றைக்கு மனித உரிமைப் போராளிகளும், பினாயக் சென் போன்ற மருத்துவ அறிஞர்களும் தண்டிக்கப்படுகிறார்கள். இத்தகைய கொடுந்தண்டனையை அளிக்க வேண்டும் என்று துடியாய்த் துடிக்கும் சத்தீஸ்கர் மாநில அரசு கையாண்ட சனநாயக முறை தான் என்ன?

மாவோயிஸ்டுகள் எழுப்பி வருகிற அடிப்படை மக்கள் சிக்கல்களைப் புறந்தள்ளிவிட்டு “சல்வா ஜுடும்” என்ற தனியார் கூலிப்படையை மாநில அரசே ஏற்படுத்தியது. ஏழைகளை, வேளாண் தொழிலாளர்களை, ஒடுக்கப்பட்டவர்களை, பெண் களைக் கொடுமைப்படுத்திய நிலவுடைமையாளர் களுக்கு ஆதரவாகவும், அவர்கள் செய்த பொருளா தாரச் சுரண்டலுக்கு உடந்தையாகவும் இருப்பதற்காக இந்த வன்முறைக் கும்பலை ஆயுதம் கொடுத்து ஆதரித்தது சத்தீஸ்கர் அரசு. ஒரு மனித உரிமை அமைப்பு இந்தக் கொடுமைக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அவ்வழக்கில் 2008ஆம் ஆண்டு சத்தீஸ்கர் அரசிற்கு இவ்வகை அமைப்பை உருவாக்கியதற்கும், ஆயுதங்களை அளித்துத் துணைபோவதற்கும் தனது கண்டனத்தை உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. “இது ஒரு சட்ட ஒழுங்குச் சிக்கலாகும். இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 302ஆம் பிரிவின்படி, ஆயுதங்களை அரசு மற்றவர்களுக்கு அளிப்பதும் அதன் வழியாகப் பொதுமக்களைக் கொல்வதும் தண்டனைக்குரிய குற்றமாகும். இதுபோன்ற செயல் களுக்குத் துணை போவது குற்ற நடவடிக்கையாகும்” என்று தனது தீர்ப்பில் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது (In April 2008, a Supreme Court bench directed the State Government to refrain from allegedly supporting and encouraging the Salwa Judum : “It is a question of law and order. You cannot give arms to somebody (a civilian) and allow him to kill. You will be an abettor of the offence under Section 302 of the Indian Penal Code).

இந்தத் தீர்ப்பிற்குப் பிறகும் மருத்துவர் பினாயக் சென் மீதும் மற்ற இருவர்கள் மீதும் வழங்கப்பட்டுள்ள தண்டனை இந்திய அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளைப் பறிப்பதாகும். சனநாயகத்தைப் புதைகுழிக்கு அனுப்பும் முயற்சியாகும். இந்திய விடுதலைப் போராட்டத்தில் பல மருத் துவர்கள் அளப்பரிய பணிகளைச் செய்துள்ளனர். டாக்டர் பி.சி. ராய், விடுதலைப் போராட்ட வீரராகப் பல ஆண்டுகள் சிறையில் இருந்தவர். மேற்கு வங்கத்தின் முதல்வராக 1948ஆம் ஆண்டு முதல் 1962ஆம் ஆண்டு வரை 14 ஆண்டுகளாகப் பணியாற்றியவர். முதல்வராகப் பொறுப்பேற்ற பின்பும் மாலை நேரங் களில் மருத்துவப் பணியைத் தொடர்ந்தவர். தன் வாழ்நாளின் இறுதி நாளன்று கூட தலைமைச் செயலகத்திற்குச் சென்று முதல்வர் பணியாற்றி மாலையில் மருத்துவக் கடமையைச் செய்து உயிர்நீத்தவர். அவர் நினைவாகத்தான் சிறந்த மருத்துவப் பணியைப் புரிவோர்க்கு பி.சி.ராய் விருது வழங்கப்படுகிறது.

பி.சி. ராய் விருதிற்கு முற்றிலும் தகுதியான பினாயக் சென் அவர்களுக்கு ஆயுள் தண்டனை என்ற பரிசினைச் சத்தீஸ்கர் நீதிமன்றம் வழங்கியுள்ளது. இது கொடுமையானது. அதைவிடக் கொடுமையானது சத்தீஸ்கர் மாநிலப் பா.ச.க. அரசின் ஊதுகுழலாக மாவட்ட நீதிமன்றம் செயல்பட்டு சென்னுக்கு வாழ்நாள் தண்டனை அளித்தது கண்டனத்திற்குரிய தீர்ப்பாகும். இந்திய நீதித்துறையின் வரலாற்றில் கறை படிந்த கறுப்புப் பக்கம்தான் இந்த ஒரு சார்பான தீர்ப்பாகும். நீதி தோற்றது, நீதிக்கே தண்டனை வழங்கப்பட்டுள்ளது.