அரசியல் தலைவர்கள் தொடங்கி சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரும் செய்த குற்றங்களை, கொலைகளை, ஊழல்களை, மோசடிகளைக் கண்டு பிடிப்பதற்கு நடுவண் அரசின் காவல் துறையின் புலன் விசாரணை தேவை என்ற கோரிக்கை வராத நாட்களே இல்லை எனலாம். மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிற இந்தக் காவல்துறை சிறப்பாகச் செயல்பட்டுள்ளதா, செயல்படுகிறதா என்ற அய்யம் பலருக்கும் தற்போது ஏற்பட்டு வருகிறது.

நடுவண் அரசின் காவல் புலனாய்வுத் துறை, இங்கிலாந்துப் பேரரசு இந்தியாவை அடிமைப்படுத்தி ஆண்ட போது, 1941ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட துறையாகும். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது, பல்வேறு அரசுத் துறைகளை, அமைப்பு களைக் கமுக்கமாகக் கண்காணிப்பதற்கு சிறப்பு காவல் அமைப்பு ஒன்று தேவை என்று பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சி முடிவு செய்தது.

டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு இந்தப் புலனாய்வுத் துறை இயங்கத் தொடங்கியது. போர்க்காலத்தில் டெல்லி அரசு பல கோடி ரூபாய் மதிப்பில் போர்ப்படைக்குத் தேவையான தளவாடங் களை வாங்கியது. இந்தத் தளவாடங்களை வாங்கும் போது பேரங்கள் நடைபெறுகிறதா, ஊழல் தலை தூக்குகிறதா என்பதைத் துல்லியமாக இந்தத் துறை கண்காணித்து வந்தது. போர் முடிவடைந்ததும் இத் துறையை மூடியிருக்கலாம். போர்க்காலத்தில் தொடங் கப்பட்ட பல இராணுவ, காவல் அமைப்புகள் நிர்வாகத் துறையில் பல நாடுகளிலும் தொடர்ந்தன; தொடர் கின்றன. இதனால் தேவையற்ற முறையில் இராணுவ-காவல் துறைகள் அமைப்பிற்கான பொதுச் செலவு பெருகி வருகிறது. இதைத் தடுத்து நிறுத்துவது ஜன நாயக நாட்டின் கடமையாகும் என்று இரு பொருளியல் அறிஞர்கள் பீக்காக்-வைஸ்மென் (Peacock-Wiseman) குறிப்பிட்டுள்ளார்கள்.

இவ்வகை விரயச் செலவுகளால் பொதுக்கடன் சுமையும் பெருகியது என்றார்கள். நடுவண் அரசு, நல அரசு நிலையிலிருந்து விலகிப் போர் செய்யும் அரசாக மாறியது (From Welfare State to warfare state) என்ற இங்கிலாந்து நாட்டுப் பொருளியல் அறிஞர் ஜேம்சு ஓ.கொன்னார் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்தியா விடுதலை பெறுவதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்பே நேரு-பட்டேல் கூட்டணி யினர் வலிமைமிக்க நடுவண் அரசு அமைய வேண்டும் என்று விரும்பினர்.

மேலும் புலனாய்வுத் துறையில் பணிபுரிந்த ஊழி யர்கள், காவலர்கள், தங்களை நிரந்தரப் பணியாளர் களாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தத னால், டெல்லி சிறப்புக் காவல் துறை அமைப்புச் சட்டத் தின் வழியாக இத்துறை வலிமைமிக்க அமைப்பாக மாறியது. அதிகார போதை, ஆணவம், மக்களை அடக்கி ஆள வேண்டும் என்ற துடிப்பு என்பன டெல்லி ஏகாதிபத்தியத்திற்கே உரித்தான கொள்கையாக, முகலாயப் பேரரசு காலத்தில் இருந்தே உருப்பெறத் தொடங்கியது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இயற்றப் பட்ட பல சட்டங்களோடு, ஒரு புதிய வடிவம் பெற்றது. எனவே நேருவின் தலைமையில் அமைந்த ஆட்சி யிலும் இது தொடர்கதையானது. புலனாய்வுக் காவல் துறையும் வல்லமை பெற்றது. நடுவண் அரசின் ஆளுகைக்கு உட்பட்ட எல்லைப் பகுதிகள், பிறகு மாநில அரசுகளின் துறைகள் என்று மெல்ல மெல்ல இந்தக் காவல் துறை அமைப்பு உறுதியாக உருப் பெறத் தொடங்கியது. மாநில அரசு விரும்பினால் அல்லது அழைத்தால் மாநில அரசின் எல்லைக்குள் நடை பெறும் குற்றச் செயல்களை விசாரிக்கும் அதிகாரத் தையும் இவ்வமைப்புப் பெற்றது. 1963ஆம் ஆண்டி லிருந்து நடுவண் அரசின் புலனாய்வுத் துறை (Central Bureau of Investigation -CBI) என்ற பெயரில் இயங்கி வருகிறது.

‘பொதுவாழ்வில் நெறியைப் பாதுகாக்கவும்’ ‘பொருளாதாரம் நல்ல நிலையில் இயங்குவதற்கும்’ இத்துறை உறுதுணையாக இயங்கும் என, இத் துறையின் செய்திக்குறிப்பில் அறிவித்துள்ளது. இன்றும் இச்செய்தி இணையதளத்தில் இடம் பெற்றுள்ளது. நிதி, வங்கி மோசடிகள், பன்னாட்டுச் செலாவணி மோசடி, கள்ளக்கடத்தல், போதைப் பொருள் தடுப்பு நடவடிக் கைகள் உட்பட அனைத்துப் பொருளாதாரக் குற்றங் களையும் கண்காணித்து விசாரணையை மேற் கொண்டு உரிய தண்டனையை நீதித்துறையின் வழியாக இத்துறை பெற்றுத் தருகிறது. மேலும் பயங்கரவாதச் செயல்கள், குண்டுவெடிப்புக் குற்றங் கள், கொலை, கடத்தல் ஆகிய குற்றங்களில் ஈடுபடு வோர் மீது உரிய நடவடிக்கைகளைப் புலனாய்வுத் துறை மேற்கொண்டு வருகிறது. 1963ஆம் ஆண்டில் தான் முதல் முறையாக இத்துறைக்கு இயக்குநர் யமிக்கப்பட்டார். இதுவரை 24 இயக்குநர்கள் பணிபுரிந்துள்ளனர். தமிழ்நாட்டில் உயர் காவல் அலுவலராகப் பணிபுரிந்த அருள், கார்த்திகேயன், இராகவன் ஆகியோர் இத்துறையின் இயக்குநர் களாகப் பணியாற்றியுள்ளனர்.

இத்துறை உழைப்பு, நடுநிலைமை, நேர்மை ஆகிய முதன்மையான இலக்குகளைக் கொண்டு இயங்கி வருவதாகக் குறிப்பிட்டாலும், இத்துறை அரசியல் காரணங்களுக்காகத் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்று பலர் குறிப்பிடுகின்றனர். தலைசிறந்த, நேர் மையான பல மாநிலங்களைச் சார்ந்த இந்தியக் காவல்துறையின் உயர் அலுவலர்கள் (IPS) இயக்கு நர்களாவும், இணை, துணை இயக்குநர்களாகவும் பணியாற்றிச் சிக்கல்கள் நிறைந்த வழக்குகளை நீதிமன்றத்தில் பதிவு செய்து, உரிய தண்டனையைக் குற்றவாளிகளுக்குப் பெற்றுத் தந்த பெருமையையும் பெற்றது இந்தப் புலனாய்வுத் துறையாகும். இதன் காரணமாக சி.பி.ஐ.-யை மையப்படுத்தி சில திரைப்படங்களும் வெளிவந்தன. இருப்பினும், காங்கிரசு, பா.ஜ.க. உட்பட தங்களது ஆட்சிக் காலங்களில் இத்துறையைச் சுயேச்சையாகச் செயல்படவிடாமல் தடுத்துள்ளார்கள் என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன.

இத்துறையின் நேர்மையற்ற செயல்பாடுகளைப் பற்றி ஓய்வு பெற்ற இணை இயக்குநர்களான ஜோகிந்தர் சிங்கும், பி.ஆர்.லாலும் கட்டுரைகளையும், நூல்களையும் எழுதியுள்ளனர். “சி.பி.ஐ. யார் கையில் உள்ளது? வெளிப்படையான உண்மை’ (Who Owns CBI? The Naked Truth, 2007) என்ற நூல், பல கசப்பான உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. தனது முன்னுரையில் நூலாசிரியர் (பக்கம்-II), ‘உயர் அதிகார அமைப்பில் ஊழல் புரையோடியுள்ளது. நிர்வாக அமைப்பின் ஒரு துணைப் பொருளாக ஊழல் வெடித்துக் கிளம்புகிறது. குருதியை உறிஞ்சும் உண்ணியைப் போன்று ஒரு வர்க்கம் ஊழலில் திளைத்து, எதையும் எப்படியாவது செய்து சாதித்து விடலாம் என்று நம்புகிறது’.

‘புலனாய்வுத் துறை’ ஊழலின் சக்தி வாய்ந்த தலைமைப் பீடத்தை உடைப்பதில் தோல்வியைத் தழுவியுள்ளது. காரணம், அதிகாரத்தில் உள்ள அந்த உயர் பிரிவினரைப் பாதுகாப்பதுதான் அவர்களின் (புலனாய்வுத் துறை) எண்ண ஓட்டமாக உள்ளது. இலக்கற்றதாகவும், உரிய உதவியைப் பெற முடியா மையாலும், முழுமையாகச் செயல்பட முடியாத தன்மையாலும், புலனாய்வு முகமைகள் செயல்பட்டுச் சுயநலச் சக்திகளைச் சந்திக்க முடியாமல் தடுமாறு கின்றன’ என்று லால் குறிப்பிடுகிறார்.

1000 கோடி ஹவாலா பண மோசடி வழக்கினை உரிய முறையில் விசாரிக்க முடியவில்லை. தமிழ் நாட்டுப் பார்ப்பனர் திரு.கிருஷ்ணமூர்த்தி நடுவண் அரசின் திட்டக்குழு உறுப்பினராக, பல பொதுத்துறை நிறுவனங்களின் தலைவராகப் பணியாற்றியவர். அவர் பல ஆயிரம் கோடியை வெளி நாட்டில் இலஞ்ச மாகப் பெற்றார் என்ற கடுமையான குற்றச்சாட்டு இருந்த போதிலும், அதற்குரிய ஆதாரங்கள் கிடைத்த போதும், உயர் அரசியல் அதிகாரத்தினரிடம் அவருக்குத் தொடர்பு இருந்ததால் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியவில்லை. “புலனாய்வுத் துறையின் உண்மைகள் சில மனிதர்களை அடையாளம் காட்டி னாலும், அவர்களை விசாரிக்கக் கூடாது. புலனாய்வு விசாரணையை நீர்த்துப் போகச் செய்யவேண்டும் அல்லது திசையை மாற்ற வேண்டும் அல்லது நடவடிக் கையைக் கைவிட வேண்டும். காலப்போக்கில் வழக்கி னைச் சாகடித்துவிட வேண்டும் என்பதுதான் புலனாய் வுத் துறையில் எழுதப்படாத சட்டமாக உள்ளது” என்கிறார் நூலாசிரியர் லால்.

சான்றாக, பிரதமாயிருந்த நரசிம்மராவ் மீது குற்றச்சாட்டை விசாரிப்பதற்கு முடியாமல் தடுக்கப்பட் டேன். ‘ஹவாலா’ பண மோசடியில் 115 பெயர்களை லெப்.கே.ஜெயின் தனது நாட்குறிப்பில் குறிப்பிட்டிருக் கிறார் “அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொதுத்துறை நிறுவனங்களைச் சார்ந்த உயர் அலு வலர்கள் ஆகியோர் இப்பட்டியலில் இருந்தனர். குறிப்பாக, சோனியாவின் குடும்ப நண்பர் குவத் ரோச்சி, பொதுத்துறை நிறுவனங்கள் சார்பில் தரகராகச் செயல்பட்டார். சத்தீஷ் சர்மா, சந்திராசாமி போன்றோர் எப்படி ஊழல் பணத்தைப் பெற்றார்கள் என்பதற்குப் பல தடயங்கள் சிக்கின. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி துர்காபூர் எஃகு ஆலைத் தொழிற்சாலையை நவீனப்படுத்தும் திட்டத்தில் பெற்ற ஊழல் பணமான 10.5 கோடி ரூபாயை எப்படிப் பெற்றார்” என்பதையும் ஜெயின் தனது நாட்குறிப்பில் குறிப்பிட்டிருந்தார். எவ்வித அச்சமுமின்றிச் செயல்படும் கடும் பொருளா தாரக் குற்றவாளிகளை சிபிஐ தொடக்கூட முடிய வில்லை என்பதையும் பல சான்றுகளோடு, திரு.லால் இந்நூலில் விளக்கியுள்ளார்.

இந்நூல் 2007ஆம் ஆண்டில் வெளியிடப்பட் டாலும், இந்தியாவில் இயங்கி வரும் கள்ளப்பணப் பாருளாதாரத்தின் ஆழத்தையும், அகலத்தையும் அதற்குப் பின்னால் உள்ள அரசியல் தலைவர்களின் பெயர்களையும் அஞ்சாமல் திரு.லால் இணைத் துள்ளார். புலனாய்வுத் துறையின் 66 ஆண்டுகளின் வளர்ச்சி பற்றியும், வழக்குகள் பற்றியும் இணைய தளத்தில் இத்துறை பதிவு செய்துள்ளது. இப்பதிவில் பல ஆண்டுகளாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போஃபர்சு பீரங்கி ஊழல் வழக்குப் பற்றிப் பதிவு செய்யப்படவில்லை. முயன்று. முயன்று டெல்லி ஏகாதிபத்தியத்தின் ஊழல்களை மூடி மறைக்கவே புலனாய்வுத் துறை செயல்பட்டு வருகிறதோ என்ற அச்சம் பலர் உள்ளத்தில் எழுந்துள்ளது.

2008ஆம் ஆண்டிற்குப் பிறகு நடுவண் அரசில் நடந்த பல லட்சம் கோடி ஊழல்கள் எப்படி எல்லாம் மறைக்கப்பட்டு வருகின்றன என்பதை, உச்சநீதிமன்றத்தின் நீதிபதி களின் கருத்துகள் வாயிலாக, இன்று நம்மால் அறிய முடிகிறது. இந்தியாவின் வளங்கள் பட்டப் பகலிலேயே தனியார்துறைக்கு அடிமாட்டு விலைக்குத் தாரை வார்க்கப்படுகின்றன. இந்திய அரசா? அல்லது அம்பானி போன்ற முதலாளிகளின் அரசா? என்று கேள்வி கேட்கும் அளவிற்குப், பல ஊழல்கள் நாள்தோறும் சமூக ஆர்வலர்களால் வெளிக்கொண்டு வரப்படு கின்றன. தன்னிடம் குவிந்து கிடக்கின்ற அதிகாரங் களைப் பயன்படுத்திக் குற்றவாளிகளைக் காப்பாற்று வதற்கு அமைச்சர்கள் தங்கள் திறன்களை வீணடித்து வருகிறார்கள்.

காங்கிரசுக் கட்சிக்கும், ஆட்சிக்கும் இரு வகையான வேறுபட்ட அளவுகோல்கள் உள்ளன என்பதை சிபிஐ பதிவு செய்யும் வழக்குகளைக் கொண்டே எளிதாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

சான்றாக, ஆந்திர மாநிலத்தின் முதல்வராக ராஜசேகர (ரெட்டி) பணியாற்றி, விமான விபத்தில் பலியானார். நேர்மையான அணுகுமுறையை இந்தப் புலனாய்வுத் துறை கடைப்பிடித்திருந்தால், ராஜசேகர (ரெட்டி) காலத்திலேயே பல ஊழல் வழக்குகளைப் பதிவு செய்து விசாரணயைத் தொடங்கி இருக்கலாம். ஆனால் அவரது மறைவிற்குப் பிறகு, அவரது மகன் ஜெகன்மோகன், காங்கிரசு தலைமையின் கட்டளை யை ஏற்கவில்லை என்றதும், சிபிஐயின் விசாரணை வேகப்படுத்தப்பட்டது. ஜெகன் மோகன் சிறையிலிருந்து வெளிவராத அளவிற்கு வழக்குகள் வழக்குகளை மேல் சி.பி.ஐ. பதிவு செய்தது.

2ஜி வழக்கில் நடுவண் அரசுப் பொறுப்பிலிருந்து விலகியதும், ஆ.இ.ராசா கைது செய்யப்பட்டார். கனிமொழி கைது செய்யப்பட்டார். ஆனால் இன்றோ சொக்கத்தங்கம் சோனியாவின் மருமகன் மீது பல ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுகளை கெஜ்ரிவால் வெளியிட்டுள்ளார். அரியானா மாநிலத்தின் பதிவுத் துறை உயர் அலுவலர் நேர்மையாக விசாரணையைத் தொடங்கியவுடன், நடு இரவில் மாறுதல் செய்யப்படு கிறார். குறிப்பிட்ட சில நபர்களுக்கு 2ஜி வழக்கில் சிபிஐ சலுகை காட்டுகிறது என்ற குற்றச்சாட்டினை, உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் எழுப்பியபோது, சி.பி.ஐ., மலேசியாவில் உள்ள ஒரு நபரை எங்களால் விசாரிக்க முடியவில்லை. அவர் அரசியல் செல்வாக்குப் பெற்றவராக உள்ளார். எனவேதான் வழக்கு தாமதமா கிறது என்று சி.பி.ஐ. ஒப்புதல் வாக்குமூலத்தை வழங்கியுள்ளது.

நடுவண் அரசின் முன்னாள் அமைச்சரவைச் செயலர் சுப்பிரமணியன், முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கோபால்சாமி, நடுவண் அரசின் முன்னாள் செயலர் ராமசாமி, கப்பற்படைத் தளபதிகள் த.கிலானி, ராமதாஸ் ஆகியோர் இணைந்து, அடி மாட்டு விலைக்கு ஏலம் விடப்பட்ட நிலக்கரி ஒதுக்கீட்டை 1993 ஆண்டிலிருந்தே திரும்பப் பெற வேண்டும் என்று 19.11.2012 அன்று உச்சநீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கினைப் பதிவு செய்துள்ளனர். பிரதம அமைச் சரும் அவரது அலுவலகமும் நேரடியாக இந்த முறைகேடான நிலக்கரி ஒதுக்கீட்டில் தொடர்பு உள்ளதால், பிரதமரின் கீழ் இயங்கி வரும் நடுவண் அரசின் துறையான சி.பி.ஐ. விசாரிக்கக் கூடாது என்று மனுவில் கோரியுள்ளனர். நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரியுள்ளனர். நடுவண் அரசின் உயர் பதவிகளில் பணியாற்றியவர்களே, சிபிஐயின் நம்பகத் தன்மையைக் கேள்விக்குறியாக ஆக்கியுள்ளனர். உச்சநீதிமன்ற அமர்வும், நடுவண் அரசிற்கும் சிபிஐக்கும் தாக்கீது அனுப்பியுள்ளது.

இவ்வாறு சிபிஐ பற்றிப் பல கண்டனக் கணைகள் பாய்ந்து வரும் நிலையில், மும்பை நகரில் உள்ள தகவல் அறியும் உரிமைச்சட்ட சமூக ஆர்வலர் ஆனந்து ஜோசி, நடுவண் அரசிற்கும் மராட்டிய அரசிற்கும் ஆகஸ்ட் திங்கள் 2012இல் ஒரு தகவலைக் கேட்டு விண்ணப்பித்தார். “நடுவண் அரசின் எந்த அதிகாரப் பிரிவின் கீழ் சி.பி.ஐ. உருவாக்கப்பட்டது” என்பதே அவரின் கேள்வியாகும். இந்தக் கேள்விக்கு நேரடி யாகப் பதில் தர முடியாமல், இவரின் கேள்வியை நடுவண் அரசின் உள் துறையும், மராட்டிய மாநில அரசும் சி.பி.ஐ.க்கு அனுப்பிவிட்டதாகத் தகவல் தெரிவித்துள்ளது. யாரிடம் எந்தச் சட்டத்தின்கீழ் இயக்கு கிறோம் என்று அறியாமலேயே, ஒரு புலனாய்வுத் துறை பல்லாயிரம் கோடி ரூபா செலவு செய்து, பெரிய ஊழல் வழக்குகளை மூடிமறைத்து வருகிறது என்பது தானே உண்மையாகிறது. அப்படியென்றால் சி.பி.ஐ. நடுவண் அரசின் அரசியல் அடியாள் என்று சிலர் குறிப்பிடுவது எவ்வாறு தவறாக முடியும்?

Pin It