காங்கிரசில் மனக்கசப்பு

ஈ.வெ.ராவுக்குக் காங்கிரசில் மனக்கசப்பு ஏற்பட்ட நிகழ்ச்சியை 13.8.1950இல் சென்னை பெரம்பூரில் அவரே கூறுகிறார்.

“1924ஆம் ஆண்டில் திருவண்ணாமலையில் என்னுடைய தலைமையின்கீழ்க் காங்கிரசு மாகாண மாநாடு கூடியது. அந்த மாநாட்டில் ரெங்கசாமி அய்யங்கார், சீனிவாச அய்யங்கார் ஆகியவர்களின் ஆள்கள் தியாகராயச் செட்டியார் அவர்களையும், ஜஸ்டிஸ் கட்சியையும் மோசமாக, அளவுக்கு மீறித் தாக்கிப் பேசினார்கள். இது எனக்கு ஆத்திரத்தை மூட்டியது. எனவே, அவர்கள் பேசியதற்கு எதிராக நானும் இராமநாதனும் பேச முயன்றோம். மாநாட்டின் தலைவர் என்றதால் நான் பேச முடியாமல் போகவே, இராமநாதன் அவர்கள் பேச ஆரம்பித்தார். அப்போது நமது ஷாபி அவர்கள் இராமநாதனை எதிர்த்து வாய்க்கு வந்தபடிக் கேவலமாகப் பேசினார். அப்போது நமது ஆள்களாக இருந்த அண்ணாமலைப் பிள்ளையும் தஞ்சாவூர் வெங்கிடகிருஷ்ண பிள்ளையும் - ரெங்கசாமி அய்யங்காரையும், சீனிவாச அய்யங்காரையும் எதிர்த்து, அவர்கள் தியாகராயரைத் தாக்கியதற்கு வட்டியும் முதலுமாகச் சேர்த்துக் கொடுத்தார்கள். அந்த மாநாட்டிலேயே எனக்கு மனக்கசப்பு ஏற்பட்டுவிட்டது” என்று கூறியுள்ளார் (ஈ.வெ.ரா. சிந்தனைகள், 2ஆம் பதிப்பு, தொகுதி 2, பக்கம் 603).

பார்ப்பனர்களின் செயல்பாட்டில் வெறுப்புற்ற ஈ.வெ.ரா. அவர்கள் பார்ப்பனர்களின் கட்டுக்கதையே இந்தியத் தேசியம் என்பதைப் புரிந்து கொண்டார்.

“பார்ப்பனர்கள் என்ன நோக்கத்துடன் தேசியம், தேசியம் என்று கூப்பாடு போடுகிறார்கள் என்பதைப் பற்றிப் பல தடவைகளில் நாம் வெளியிட்டிருக்கிறோம். ‘தேசியம்’ என்ற சூழ்ச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டதற்குக் காரணமே பார்ப்பனியமான சனாதன தர்மங்களைப் பலப்படுத்தவே ஒழிய வேறில்லை. தேசியம் என்கிற வார்த்தைக்கு அநேகமாய் மக்கள் மனதில் இத்தேசத்தின் பழைய நாகரிகம், சனாதன தர்மம், பழைய பழக்க வழக்கம் என்பவைகளையே பிரதானமாகக் கொள்ளும்படிப் பிரச்சாரம் செய்து வந்ததும் அதற்காக இந்தியப் புராண இதிகாசங்களை ஆதாரமாக எடுத்துக்காட்டிப் பிரச்சாரம் செய்து வந்ததும் வாசகர்கள் அறிந்ததே. இந்தக் கருத்தைக் கொண்டே தான் கராச்சி காங்கிரசு சுயராஜ்யத் திட்டம் ஏற்பாடு செய்திருக்கிறது. மற்றும் இந்திய நாட்டைப் பாரத மாதா (பூமி தேவி) என்று அழைப்பதும், பாரத தேசம் என்று சொல்லுவதும் எல்லாம் இக்கருத்தை ஆதாரமாகக் கொண்டதே ஒழிய வேறில்லை”. இந்தியத் தேசியம் என்பதே பார்ப்பனர்களின் சுயநலத்திற்காக ஏற்படுத்தப்பட்டதே ஆகும். (சித்திரபுத்திரன் கட்டுரை, குடிஅரசு 19.3.1933).

பெரியார் ஈ.வெ.ரா. அவர் கள் 1919 முதல் 1925 வரை இந்திய தேசியக் காங்கிரசில் தீவிரமாகப் பணியாற்றி வந்தார். அந்த ஆறு ஆண்டுகள் அனுபவத்தில் அவர் காங்கிரசில் உணர்ந்தது- காங்கிரசு என்பது முழுக்கப் பார்ப்பனர்களின் நலனுக்கான அமைப்பு என்பதுதான்.

சேரன்மாதேவி போராட்டத்தின்போது எல்லாச் சாதியினரும் ஒன்றாக உணவருந்த வேண்டும் என்ற தீர்மானத்தைக் காங்கிரசில் நிறைவேற்றியபோது, மதுரை வைத்தியநாத அய்யர், சி.இராசகோபாலாச் சாரி, டி.எஸ்.எஸ்.இராசன் போன்ற பார்ப்பனர்கள் காங்கிரசைவிட்டே விலகுவதாக விலகல் கடிதம் கொடுத்தனர்.

பனகல் அரசர் இந்து அறநிலையப் பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றிய போதும் எல்லாப் பார்ப்பனர்களும் கட்டுப்பாடாய் அதை எதிர்த்தனர். வகுப்புரிமைக் கோரிக்கையின் போதும் பார்ப்பனர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து எதிர்த்தனர். இதனால் காங்கிரசின் மீது பெரியாருக்கு வெறுப்பு ஏற்பட்டது. பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டுமானால், இந்திய தேசியக் காங்கிரசை ஒழிக்க வேண்டும் என்ற பெரியாரின் அனுபவ வாயிலான முடிவுதான் - அவர் காங்கிரசை விட்டு வெளியேறக் காரணமாக இருந்தது. பெரியார் 1925 நவம்பரில் காஞ்சிபுரம் காங்கிரசு மாநாட்டில் இருந்து வெளியேறியபோதிலும், காந்தியின் மீது மட்டும் அவருக்கு ஈடுபாடு இருந்தது. 1927 சூலை மத்தியில் பெங்களூரில் எஸ்.இராமநாதனும், பெரியாரும் காந்தியைச் சந்தித்து வருணாசிரமம் தொடர் பான அவருடையக் கருத்தை அறிய நேரில் விவாதித்தனர். பிறப்பின் அடிப்படையில்தான் வருணம், அவரவர் வருணத் தொழிலைச் செய்வதே உயர்வுக்கு வழி என்று காந்தி கூறினார். இனிமேல் காந்தியைத் திருத்த முடியாது என்ற முடிவுக்கு வந்தார் பெரியார். ஆனால் 1927 வரை அவருடைய குடிஅரசு இதழில் ‘இராட்டை’ இடம் பெற்றிருந்தது.

மதுரையில் 12.12.1926இல் நடைபெற்ற பார்ப்பனர் அல்லாத மாநாட்டில்தான் சுயமரியாதை இயக்கத்திற்கான கொள்கைத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவையாவன:

1. (அ) மக்கள் பிறவியில் உயர்வு தாழ்வு இல்லை என்றும், சமூக வாழ்வில் எல்லோரையும் சமமாய்ப் பாவிக்க வேண்டும் என்றும் இந்த மாநாடு தீர்மானிக்கிறது.

ஆ.தீண்டாமை என்னும் கொடிய வழக்கமானது, மனிதருக்குள் மனிதரைப் பிரித்து வைக்கவும், நிரந்தரமாய் ஒற்றுமை இல்லாமல் செய்யவும், மனிதனின் பிறப்புரிமையான சுயமரியாதையைக் கெடுப்பதுமாய் இருப்பதால் இதை அடியுடன் ஒழிக்க வேண்டுமென்று இந்த மாநாடு வற்புறுத்துகிறது.

2.            பார்ப்பனரல்லாத இந்துக்கள் என்போர் தங்களது மதசம்பந்தமான சுப-அசுப சடங்குகளுக்குத் தங்களைவிட உயர்ந்த வகுப்பார் என்கிற எண்ணத்தின்பேரில் வேறு வகுப்பாரைக் கொண்டு செய்து கொள்வது நாமே நம்மைத் தாழ்ந்த வகுப்பார் என்று ஒப்புக் கொள்வதாயிருப்பதாலும், இவ்வித மனப்பான்மையே நமது சுயமரியாதையை அழிப்பதற்கு ஆதாராமாயிருப்பதாலும், இனி இவ்வழக்கத்தை அடியோடு ஒழிக்க வேண்டுமென்று இம் மாநாடு தீர்மானிக்கிறது.

3.            இந்துக் கோவில்களில் இந்துக்கள் என்று சொல்லப்படும் எல்லா வகுப்பாருக்கும் பிரவேசத்திலும், பூசை யிலும், தொழுகையிலும் சமஉரிமை உண்டென்று இம்மகாநாடு தீர்மானிக்கிறது. (வே.ஆனைமுத்து பெரியாரியல் தொகுதி-1, பக்கங்கள் 129, 130)

அதே மாநாட்டில்தான் பெரியாரின் முயற்சியால் கதர் பற்றிய தீர்மானமும் மதுவிலக்கு பற்றிய தீர்மான மும் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் : 2

“நாட்டின் ஜீவாதாரமான கைத்தொழிலை விருத்தி செய்யவும், நிரந்தரமாக வறுமையைப் போக்கவும், ஏழை மக்களைக் காப்பாற்றவும், கைராட்டினத்தால் நூல் நூற்றுக் கைத்தறியினால் நெய்யப்பட்ட கதர் வஸ்திரத்தை ஒவ்வொருவரும் அணிவதே முக்கியமான மார்க்கமானதால் எல்லோரும் கதரையே உடுத்த வேண்டுமென்று இம்மாநாடு வற்புறுத்துகிறது. (1927 சூலையில் பெரியார் காந்தியை நேரில் சந்தித்து விவாதித்த பிறகு, காந்தியத்தை எதிர்த்தது போலவே கதரையும் எதிர்த்தார்).

தீர்மானம் : 6

நாட்டின் ஒழுக்கத்திற்குக் கேடானதும் வறுமைக்கும் குற்றங்களுக்கும் காரணமானதுமான மதுபானத்தை அடியோடு ஒழிக்க வேண்டுமென்று இம்மாநாடு தீர்மானிக்கிறது. (குடிஅரசு 2-1-1927)

பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் 26.12.1926இல் நீதிகட்சியினர் மதுரையில் நடத்திய 10ஆவது பார்ப்பனரல்லாதார் மாநாட்டையே, சுயமரியாதை இயக்கக் கொள்கைகளை ஏற்கும்படியும், காந்தியின் நிர்மாணத் திட்டங்களில் முதன்மையான, கதர், மதுவிலக்குத் தீர்மானங்களையும் ஏற்க வைத்துள்ளார்.

பெரியார் காங்கிரசில் இருந்து வெளியேறிவந்த காலந்தொட்டே பார்ப்பனர்களின் சூழ்ச்சியான இந்தியத் தேசியத்தையும், இந்திமொழியையும் கண்டித்து வந்துள்ளார்.

பெரியார் ‘தமிழிற்குத் துரோகமும் இந்தி மொழியின் இரகசியமும்’ என்ற கட்டுரையை 7-3-1926 குடிஅரசு இதழிலேயே எழுதியுள்ளார். அதில் அவர்

“இதுவரை இந்திக்காகச் செலவாயிருக்கும் பணத்தில் பெரும்பாகம் பிராமணரல்லாதாருடையது என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது. இந்தி படித்தவர்களில் 100க்கு 97 பேர் பிராமணர்களாகவே இருக்கிறார்கள். தமிழ்நாட்டின் மொத்தத் தொகையில் 100க்கு 97 பேர் பிராமண ரல்லாதாராய் இருந்தும் 100க்கு 3 வீதம் உள்ள பிராமணர்கள்தான் இந்தி படித்தவர்களில் 100க்கு 97 பேர்களாயிருக்கிறார்கள். பிராமணரல்லாதார் 100க்கு 3 பேராவது இந்தி படித்திருப்பார்களா என்பது சந்தேகம். இந்தப் படிப்பின் எண்ணிக்கை எப்படி இருந்தாலும் நமக்கு அதைப் பற்றிக் கவலை ஒன்றுமில்லை. ஆனால் இதில் 100க்கு ஒரு பங்கு கவலைகூட தமிழ்பாஷைக்கு எடுத்துக் கொள்ளுவதில்லை. இந்தி படித்த பிராமணர்கள் நமக்குச் செய்துள்ள கெடுதியை நினைக்கும் போது இதைப்பற்றி வருந்தாமலும், இம்மாதிரி பலன் தரத்தக்க ஹிந்திக்கு நாம் பாடுபட்ட முட்டாள்தனத்திற்கும் நாம் பணம் கொடுத்த பைத்தியக்காரனத்திற்கும் வெட்கப்படாமலிருக்க முடியவில்லை.”

மோதிலால் நேரு ஈரோட்டுக்கு வந்தபோது பெரியார் வீட்டில் இந்திப் பள்ளிக்கூடம் தொடங்கப்பட்டது. பாதிப் பணம் பெரியாரின் சொந்தப்பணம், மீதம் பாதி காங்கிரஸ் கட்சிப் பணம் என்பது குறிப்பிடத்தக்கது. இச்செயலுக்காகத்தான் பெரியார் வருத்தம் தெரிவித்துள்ளார்.

“இந்த இந்தி பாஷையானது நம் பணத்தில், நம் பிரயத்தனத்தில்-நமது நாட்டில் பல பிராமணர்கள் படித்து வெளி மாகாணங்களுக்குபோய், ஆங்காங்கு நமக்கு விரோதமாய் பிரச்சாரம் செய்வதும், நம்மைச் சூத்திரர்கள், புத்தி இல்லாதவர்கள், முட்டாள்கள் என்றும், தென்னாட்டுப் பிராமணரல்லாதாருக்கு மூளை இல்லை என்று சொல்வதும், வெளி மாகாணங்களில் உள்ள வர்த்தமான பத்திரிகைகளில் போய் அமர்ந்து கொண்டு, பிராமணர் ஆதிக்கத்தைத் தேசமெல்லாம் நிலை நிறுத்தவும், பிரமணரல்லாதாரை அழுத்தப் பிரச்சாரம் செய்யவும், வெளி மாகாண காங்கிரஸ் முதலிய பொது ஸ்தாபனங்களிலும் இவர்களே தலைவர்களாகவும், அவற்றில் மாதம் ரூ.100, 200, 300 வீதம் சம்பளம் பெற்றுப் பிழைப்பதுமான காரியத்திற்கல்லாமால் வேறு வழியில் நமக்கு ஒரு பலனையும் அளிப்பதில்லை.” (பெரியார் 1926 இல் சொன்னது இன்றுவரையில் மாற்றமில்லாமல் உள்ளது)

அதே கட்டுரையில் மேலும் பெரியார் எழுதுகிறார்.

“நமது நாட்டில் சமஸ்கிருத பாஷைக்காக எவ்வளவு லட்சம் ரூபாய் செலவாகிறது’ அது அவ்வளவும் யாருடைய பணம்? சமஸ்கிருத்திற்கென்று தனியாக எவ்வளவோ பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன. இதில் படிக்கிறவர்கள் எல்லாம் யார்? இதன் உபாதியாயர்கள் எல்லாம் யார்? பிராமணரல்லாத உபாத்தியாயரை யாவது, பிராமணரல்லாத பிள்ளைகளையாவது இதில் சேர்த்துக் கொள்கிறார்களா? அரசாங்கத்திலாவது சமஸ்கிருத்திற்கு இருக்கிற யோக்கியதை தமிழுக்கு இருக்கிறதா?...”

“இந்தியும் சமஸ்கிருதமும் இப்படியிருக்கத் தமிழைப் பற்றியோவென்றால், தமிழ்நாட்டில் தமிழுக்கென்று தனித்தனியாய் எத்தனைப் பள்ளிக்கூடம் இருக்கிறது. சமஸ்கிருத்திற்கு இருக்கும் பள்ளிக்கூடம் அளவில் நாலில் ஒரு பங்காவது இருக்கிறதா? பிராமணரல்லாத தமிழ் வித்துவான்கள் பேராவது பொது ஜெனங்களுக்குத் தெரியக்கூடியதாய் இருக்கிறதா?...”

“தமிழ்த் புத்தகம் என்பது சுத்தத் தமிழில் எழுத வேண்டாமா? அவற்றிற்கு ஏற்ற தமிழ்வார்தைகள் இல்லையா? நமது தமிழ்நாட்டின் பழக்கம் வழக்கம் அதில் இருக்க வேண்டாமா? என்று கேட்டால் நம்மவர்களுக்குள்ளாகவே பாஷபிமானம். பாஷாபிமானம் என்று பேசி நம்மை ஏமாற்றுபவரும் பிராமணசிஷ்யருமான சிலர் உடனே பிராமணர்களுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு சமஸ்கிருத வார்த்தைகள் தமிழில் கலந்தால் தமிழுக்கு யோக்கியதை குறைந்து போகாது, அப்படிக் கலப்பதுதான் பாஷையின் முன்னேற்றம் என்கிறார்கள்.”

“பழையன கழிந்து புதியன புகுவதாயிருந்தால் நமக்குக் கவலையில்லை. புதியவை வந்து பலாத்காரத்தில் புகுந்துகொண்டு பழையவைகளைக் கழுத்தைப் பிடித்து தள்ளுவதானால் அதையும் சகித்துக் கொண்டு அதற்கு வக்காலத்து பேசுவது என்பது பாஷைத் துரோகமும் சமூகத் துரோகமும் ஆவதோடல்லாமல், தமிழ்த்தாயின் கற்பை, தமிழ்த் துரோகிகளுக்குச் சுய நலத்திற்காக விற்றவர்கள் என்றுதான் சொல்லவேண்டும்.”

1926 இல் பெரியார், தமிழ்மொழி பார்ப்பனர்களிடமும், அவர்களின் அடிமைப் புத்தி கொண்ட புலவர்களிடமும் அகப்பட்டுச் சீரழிவதைக் கண்டித்து எழுதியுள்ளார்.

தமிழ்ப் பல்கலைக்கழகம் ஏற்படுத்துவதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழுவில் தமிழ் அறிஞர்கள் இடம் பெறவில்லை என்பதைப் பெரியார் 1926 இல் கண்டித்து எழுதியுள்ளார். இது குறித்துத் தமிழ் சர்வகலா சாலைக் கமிட்டி என்ற தலைப்பில் 1-8-1926 இல் பெரியார் எழுதியது:

“தமிழ் நாட்டிற்கென ஒரு சர்வகலாசாலை ஏற்படுத்துவான் வேண்டி சில நாட்களாகத் தமிழர் பலர் கிளர்ச்சி செய்து வருகிறார்கள். இக்கிளர்ச்சியை ஒடுக்குவான் வேண்டியும், தமிழ்க் கலாசாலையே ஏற்படாதிருக்கப் பார்ப்பனர்கள் செய்துவரும் சூழ்ச்சி முறைகளையும் அனேகர் அறிந்திருக்கலாம். கடைசியில் இக்கிளர்ச்சியை ஒடுக்குவதற்கு வழியில்லாது போய் தமிழ் சர்வகலாசாலை (பல்கலைக்கழகம்) ஏற்படுத்த வேண்டுமென்று ஏற்பட்டுவிட்டது. இதற்கென ஒரு கமிட்டியும் நியமிக்கப்படலாயிற்று.

இக்கமிட்டியும் பெருங்கபடத்துடனேயே நியமிக்கப்பட்டுள்ளதெனக் கூறவேண்டும் ஏனெனில் தமிழ் மொழியில் ஆணிவேர் முதல் நுனிவரை நுணுகி ஆராய்ந்து தமிழ்மொழியே உயர் தனிச் செம்மொழியெனக் கொண்டு தமிழையே உயிரினும் பெரியதாய் ஓம்பி வளர்த்து, அதற்காகவே அருந்தொண்டாற்றி வரும் திருவாளர்கள் சுவாமி வேதாச்சலனார் (மறைமலையடிகள்) ந.மு.வேங்கடசாமி நாட்டார், த.வே.உமா மகேசுவரம்பிள்ளை, பா.வெ.மாணிக்க நாயக்கர், கா.சுப்பிரமணியப்பிள்ளை, மு.சா. பூரணலிங்கம் பிள்ளை முதலியோரை நியமிக்காது, ஆரியத்திற்கும் தமிழுக்கும் உள்ள பதத்தை ஒரு சிறிதும் உணராத பலரையும் தமிழில் பற்றுடைய மிகச் சிலரையும் நியமித்திருக்கிறார்கள். இவ்வாறு அடிப்படையிலேயே கையை வைத்து நியமிக்கப்பட்ட கமிட்டியால் தமிழ்த் தாய்க்கு எவ்வித ஆக்கமும் அளிக்கப் பெறாதென்பதே நமது கருத்து.”

பெரியார் ஆரம்பத்தில் சொன்னவாறே அது தமிழ் மொழியின் வளர்ச்சிக்கான பல்கலைக்கழகமாக அமையாமல் போயிற்று.

1928 இல் சென்னை மாகாண அரசு அளித்த 27 இலட்சம் உருபாயையும் அண்ணாமலைச் செட்டியார் அளித்த 20 இலட்சம் உருபாயையும் சேர்த்து அண் ணாமலைப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. ஆண்டுதோறும் ஒன்றரை இலட்சம் உருபாய் பணத்தைத் தொடர் மானியமாக அரசு அளித்து வந்தது.

1925இல் கரந்தை தமிழ்ச் சங்கத்திலிருந்து வெளியிடப்பட்ட தமிழ்ப் பொழில் திங்கள் ஏட்டின் நற்பயனைப் பாராட்டி அதனைத் தமிழ் மக்கள் ஆதரிக்க வேண்டுமென்று 24.10.1926 குடிஅரசு ஏட்டில் வேண்டுகோள் விடப்பட்டது.

“தஞ்சாவூர் “கரந்தை தமிழ்ச்சங்க”த்தினின்றும் “தமிழ்பொழில்” என்னும் பெயரிய ஒரு திங்கள் வெளியீடு தமிழறிஞர் திருவாளர் ஆர்.வேங்கடாசலம் பிள்ளை அவர்களைக் ஆசிரியராகக் கொண்டு ஓராண்டு வெளிப்போந்து நற்பயன் அளித்தமை நேயர்கள் அறிந்திருக்கலாம்...

செந்தமிழ்ச் செல்வர்கள் ஊதியம் கருதாது தமிழில் தொண்டொன்றே கருதித் தனித்தீந்தமிழில் வெளிவரும் பொழிலைப் புரந்து தமிழ்த்தாயைப் போற்றி வருமாறு வேண்டுகிறோம்.

தமிழ்ப்பொழில் ஏட்டினை சுயமரியாதை இயக்கத் தோழர்களிடையே குடிஅரசு இதழ் வாயிலாக நல்ல வண்ணம் விளம்பரம் செய்வித்தார்.

- தொடரும்

Pin It