கடந்த நவம்பர் மாதம் 6ஆம் நாள் செவ்வாய்க் கிழமை அமெரிக்க அய்க்கிய நாடுகள் என்று அழைக்கப்படும் வடஅமெரிக்காவில் குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் நான்கு ஆண்டுகளாகும். குடியரசுத் தலைவர் தேர்தல் எப்போதும் நவம்பர் மாதத்தில் முதல் செவ்வாய்க்கிழமையன்று நடத்தப்படுவது வழக்கமாக்கப்பட்டுள்ளது. 6.11.12 அன்று நடந்த தேர்தல், 45ஆவது குடியரசுத் தலைவர் பதவிக்கான தாகும். தேர்தலில் வெற்றி பெறும் குடியரசுத் தலைவர் அடுத்த ஆண்டு சனவரி 20ஆம் நாள் பதவி ஏற்பது என்பது நடைமுறை வழக்கம்.

7.10.12 அன்று தென்அமெரிக்க நாடுகளுள் ஒன்றான வெனிசுலாவில் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில், ஹுகோ சாவேசு தொடர்ந்து நான்காவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் ஆறு ஆண்டுகள் அப்பதவியில் நீடிப்பார். இதேபோன்று கடந்த நவம்பர் மாதம் சீனாவில் அதிபர், பிரதமர் பதவிகளுக்கான தேர்தல் நடந்தது. சீனாவில் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய அதிபரையும் பிரதமரையும் பொதுவுடைமைக் கட்சி யின் பேரவைக் கூடி தேர்ந்தெடுக்கிறது. சீனாவில் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்படுபவர் தான் எல்லா அதிகாரங்களும் பெற்ற அதிபர் - ஆட்சித்தலைவர் பதவியில் இருப்பார்.

தென்அமெரிக்க நாடுகளில் வேரூன்றியிருந்த வடஅமெரிக்காவின் ஏகாதிபத்தியத்தின் முதுகெலும்பை முறியடித்ததிலும், சமூகத்திலும் பொருளாதாரத்திலும் உழைக்கும் மக்களின் வாழ்வில் மலர்ச்சியும் முன் னேற்றங்களும் ஏற்பட்டதிலும் பெரும் பாடாற்றிய சாவேசின் தேர்தல், ஊடகங்களில் ஒரு நாள் செய்தியாக மட்டுமே இடம்பெற்றது. அதைப்போலவே 135 கோடி மக்கள் தொகை கொண்ட - கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக உலகில் பொருளாதார வளர்ச்சியில் முதலிடத்தில் உள்ள சீனாவில் புதிய ஆட்சிப் பொறுப்பாளர்களின் தேர்தல் குறித்து, செய்தி ஏடுகளில் விரிவாக விவாதிக்கப்படவில்லை.

ஆனால் வடஅமெரிக்காவின் குடியரசுத் தலைவர் தேர்தல் மட்டும் பல மாதங்கள் பரபரப்பாகப் பேசப் படும் முதன்மையான அரசியல் செய்தியாகி விடுகிறது. உலக நாடுகளின் பொருளியல், அரசியல், சமூக நிலைகளைத் தீர்மானிக்கின்ற - ஆட்டிப்படைக்கின்ற வல்லமை வாய்ந்த, முற்றதிகாரம் பெற்ற, உலகின் ஒரே வல்லாதிக்க அரசாக வடஅமெரிக்கா திகழ்வதே இதற்கான காரணமாகும்.

இந்தியாவில் பாமரனுக்கும் தெரிந்த ஒரு செய்தி - அமெரிக்கா மிகப்பெரிய பணக்கார நாடு என்பதாகும். அதனால்தான் தன் மகனை ஆங்கில வழியில் படிக்க வைத்து அமெரிக்காவுக்கு வேலைக்கு அனுப்ப வேண்டும் என்பது ஒவ்வொருவரின் கனவாக இருக்கிறது.

வடஅமெரிக்கா உலகில் முதல் நிலையில் உள்ள பணக்கார நாடாக இருக்கிறது என்பது உண்மை தான். உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் வடஅமெரிக்கா முதலிடத்தில் இருக் கிறது. நாட்டின் மொத்த வருவாயை மொத்த மக்கள் தொகை எண்ணிக்கையால் வகுப்பதால் கணக்கிடப் படும் சராசரி குடிமகனின் வருவாய் என்பதிலும் அமெரிக்கா முதல் இடத்தில் இருப்பதில் வியப்பேதுமில்லை. இந்தச் சராசரி வருவாய்க் கணக்கு என்பது பணக்காரன் - ஏழை ஏற்றத்தாழ்வை மூடி மறைப்பதற்கான முகமூடியே ஆகும்.

“2007இல் அமெரிக்காவிலுள்ள பெருஞ்செல் வர்களான ஒரு விழுக்காட்டினர் நாட்டின் செல்வத்தில் 34.6 விழுக்காட்டையும்; அவர்களுக்கு அடுத்தபடியாக உள்ள 19 விழுக்காட்டினர் 50.5 விழுக்காட்டையும் உடைமையாகக் கொண்டிருந்தனர். அதாவது சமு தாயத்தின் உயர்நிலைகளிலுள்ள 20 விழுக்காட்டினரிடம் நாட்டின் செல்வத்தில் 85 விழுக்காடும், கீழ் நிலையிலுள்ள 85 விழுக்காட்டினரிடம் 15 விழுக்காடும் இருந்தன. ஒட்டுமொத்தச் செல்வத்திலுள்ள ஏற்றத் தாழ்வைவிடக் கூடுதலாக நிதி ஏற்றத்தாழ்வு (குiயேnஉயைட ஐநேளூரயடவைல) இருந்தது. நிதி உடைமையில் 42.7% சமுதாயத்தின் உச்சியிலுள்ள ஒரு விழுக்காட்டினரிடமும், 50.3% அவர்களுக்கு அடுத்தபடியாக உள்ள 19 விழுக்காட்டினரிடமும் இருந்தது; கீழ்நிலையிலுள்ள 80 விழுக்காடு மக்களிடம் இருந்ததோ 7% மட்டுமே” என்று மார்க்சிய - பெரியாரிய ஆய்வாளர் எசு.வி. இராசதுரை, 2012 ஆகசுட்டில் வெளிவந்த ‘சாட்சி சொல்ல ஒரு மரம்’ (விடியல் பதிப்பகம்) என்ற நூலில் எழுதியுள்ளார். இந்த நிதி ஆதிக்கக் கும்பல்தான் அமெரிக் காவை மட்டுமின்றி உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. எனவே இது சனநாயக ஆட்சி அன்று; பணநாயக ஆட்சியே ஆகும்.

நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடைபெற்ற தேர் தலில் மொத்தம் 600 கோடி டாலர் (ரூ.32,000 கோடி) செலவிடப்பட்டது. இப்பணத்தைக் கொண்டு இந்தியாவில் உள்ள 12 கோடிப் பள்ளிக் குழந்தை களுக்கு மூன்றாண்டுகளுக்குப் பகல் உணவு அளிக்க லாம் என்று பி. சாய்நாத் கூறுகிறார்.

தேர்தல் நடைமுறை : அமெரிக்காவில் குடியரசுத் தலைவருக்கான தேர்தல் நடக்கும்போது, பிரதிநிதிகள் அவை எனப்படும் மக்களவைக்கும் தேர்தல் நடைபெறுகிறது. மக்களவை யின் மொத்த உறுப்பினர்கள் 435 பேர். மக்களவை பொதுவாகக் ‘காங்கிரசு’ என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவில் தில்லியில் மாநிலங்கள் அவை இருப் பதுபோல், அமெரிக்காவின் மாநிலங்கள் அவைக்கு ‘செனட்’ என்று பெயர். 100 உறுப்பினர்கள் கொண்ட அவை இது. ஆனால் இவர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இவர்களின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை 33 செனட் உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறும்.

நவம்பர் 6 அன்று தேர்தல்நாளில், குடியரசுத் தலைவர், 435 மக்களவை உறுப்பினர்கள், 33 செனட் உறுப்பினர்கள் ஆகியவர்களைத் தேர்ந்தெடுப் பதற்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.

குடியரசுத் தலைவருக்காகப் போட்டியிட்ட சன நாயகக் கட்சியின் வேட்பாளர் பராக் ஒபாமா, குடியரசுக் கட்சியின் வேட்பாளர் ரோம் மிட்னி ஆகிய இருவரின் தேர்தல் செலவு 200 கோடி டாலர்; மக்களவை மற்றும் செனட் உறுப்பினர்களின் தேர்தல் செலவு 400 கோடி டாலர். ஆக மொத்தம் 600 கோடி டாலர் (ரூ.32,000 கோடி) பணத்தை அமெரிக்காவின் பெருமுதலாளியக் குழுமங்களும், பெரும் நிதி நிறுவன முதலாளிகளும் தேர்தல் - அரசியல் நன்கொடையாகக் கொடுத்தனர். இவர்கள் கொடுத்த பணத்தைப் போலப் பலமடங்கு இலாபம் இவர்களுக்குக் கிடைக்கின்ற வகையில் செயல்படுவதே தேர்ந்தெடுக்கப்பட்டப் பிரதிநிதிகளின் சனநாயகக் (பணநாயக) கடமையாகும்.

இந்தியாவிலோ நாடாளுமன்றம் - சட்டமன்றங்கள் - உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றுக்கான தேர்தல் களில் அமெரிக்காவைவிடப் பன்மடங்கு பணநாயகம் கோலோச்சுகிறது. அமெரிக்காவில் வாக்காளர்களுக்கு நேரடியாகப் பணம் தரப்படுவதில்லை. இந்தியாவிலோ பணமும், சாராயமும், பிரியாணியும் இலவசங்களும் வாக்காளர்களுக்கு வாரி வாரி வழங்கப்படுகின்றன.

அமெரிக்காவில் குடியரசுத் தலைவரை மக்கள் நேரடியாக வாக்களித்துத் தேர்ந்தெடுக்கின்றனர் என்று கூறப்படுகிறது. ஆனால் இது முழு உண்மை அன்று. மக்களின் அதிக வாக்குகளைப் பெறும் வேட்பாளர் உறுதியாக வெற்றி பெறுவார் என்று கூறிவிட முடியாது. 2000ஆம் ஆண்டுக் குடியரசுத் தலைவருக்கான தேர்தலில், சனநாயகக் கட்சியின் வேட்பாளர் அல்கோர் 5 கோடியே 10 இலட்சம் வாக்குகள் பெற்றார். ஆனால் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் புஷ் 5 கோடியே 5 இலட்சம் வாக்குகள் பெற்றார். 5 இலட்சம் வாக்குகள் குறைவாகப் பெற்ற புஷ் குடியரசுத் தலைவராக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு அமெரிக்காவின் பிரதிநிதித்துவத் தேர்தல் நடைமுறையே காரணமாகும்.

அமெரிக்காவில் 50 மாநிலங்கள் உள்ளன. ஒவ் வொரு மாநிலத்திற்கும் அம்மாநிலத்திலிருந்து பிரதி நிதிகள் (மக்கள்) அவைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் மற்றும் அம்மாநிலத்தின் மக்கள் தொகை ஆகியவற்றின் அடிப்படையில் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான - அம்மாநிலத்திற்கான வாக்குகளின் எண்ணிக்கை (Electoral College Votes) முடிவு செய்யப்பட்டுள்ளது. இவை ‘மாநிலத்தின் தேர்தல் அவை வாக்குகள்’ என்று கூறப்படுகின்றன. இதன்படி, கலிபோர்னியா மாநிலத்துக்கு 55 வாக்குகள் உள்ளன. இதுதான் அதிக வாக்குகள் உள்ள மாநிலமாகும். அடுத்து டெக்சாஸ் 38, ஃபுளோரிடா 29, நியூயார்க் 29 என வாக்குகள் எண்ணிக்கை இருக்கிறது. 7 மாநிலங் களுக்கு 3 வாக்குகள் மட்டும் உள்ளன. இவ்வாறு 50 மாநிலங்களுக்கும் சேர்த்து 540 தேர்தல் அவை வாக்குகள் உள்ளன. வெற்றி பெறுவதற்கு 271 தேர்தல் அவை வாக்குகள் தேவை.

கலிபோர்னியா மாநிலத்தில் ரோம்னியைவிட ஒபாமாவுக்கு மக்கள் கூடுதலாக வாக்களித்தனர். அதனால் தேர்தல் நடைமுறையின்படி, கலிபோர்னியா மாநிலத்துக்குரிய தேர்தல் அவை வாக்குகள் 55-ம் ஒபாமாவுக்கு முழுவதுமாகக் கிடைத்தன. இவ்வாறு ஒபாமா பெற்ற மொத்த தேர்தல் அவை வாக்குகள் 303 ஆகும். மிட் ரோம்னி 206 வாக்குகள் பெற்றார். ஆனால் ஒபாமா 26 மாநிலங்களிலும் ரோம்னி 24 மாநிலங்களிலும் அதிக வாக்குகள் பெற்றிருந்தனர். ஆயினும் அதிக எண்ணிக்கையில் தேர்தல் அவை வாக்குகள் உள்ள மாநிலங்களில், ஒபாமா அதிக வாக்குகள் பெற்றதால் ஒபாமாவுக்கும் (303), ரோம்னிக்கும் (206) இடையிலான வாக்குகள் எண்ணிக்கையில் வேறுபாடு ஏற்பட்டது. மொத்தம் பதிவான வாக்குகளில் ஒபாமாவுக்கு 50.3 விழுக்காடும், மிட்ரோம்னிக்கு 48.1 விழுக்காடும் கிடைத்தன. மிட்ரோம்னியைவிட ஒபாமா 30 இலட்சம் வாக்குகள் மட்டுமே அதிகமாகப் பெற்றார்.

ஆனால் மக்களவையின் 435 இடங்களுக்கு நடந்த தேர்தலில் குடியரசுக் கட்சி 232 இடங்களை ம், ஒபாமாவின் சனநாயகக் கட்சி 191 இடங்களையும் மட்டுமே பெற்றன. மீதி 12 இடங்களை மற்ற கட்சிகள் பெற்றன. எனவே மக்களவையில் பெரும்பான்மை பெற்றுள்ள குடியரசுக் கட்சியின் ஆதரவு இல்லாமல் ஒபாமா முதன்மையான முடிவுகளை எடுக்க முடியாது. செனட்டுக்கான தேர்தலுக்குப்பின், சனநாயகக் கட்சி 51 உறுப்பினர்களையும், குடியரசுக் கட்சி 45 உறுப்பி னர்களையும் கொண்டுள்ளன.

மக்கட் பிரிவினர் :

வடஅமெரிக்காவில் மொத்த மக்கள் தொகை 32 கோடி. இவர்களில் 64 விழுக்காட்டினர் வெள்ளை இனத்தவர். ஸ்பானிஷ் மொழி இனத்தவரான - தென்அமெரிக்க நாடுகளிலிருந்து வடஅமெரிக் காவில் குடியேறி வாழுகின்றவர்கள் ஹிஸ்பானிக் எனப்படுகின்றனர். இவர்கள் 16.6. விழுக் காடு உள்ளனர். ஆப்பிரிக்க - அமெரிக்கர் (கறுப்பின மக்கள்) 12.3 விழுக்காடு; ஆசிய-அமெரிக்கர் 5 விழுக் காடு; யூதர்கள் 2.1 விழுக்காடு என ஆக இவர்கள் மொத்தம் 36 விழுக்காட்டினர் அமெரிக்கக் குடிமக் களாக வாழ்கின்றனர்.

அமெரிக்காவில் 20 கோடி வாக்காளர்களில் 58 விழுக்காட்டினர் மட்டுமே வாக்களித்தனர். இந்தியாவில் வழக்கமாக ஏழைகளும் நடுத்தரப் பிரிவினரும் அதிக அளவில் வாக்களிக்கின்றனர். வசதி படைத்தவர்களில் பெரும்பாலோர் வாக்குச் சாவடிக்குச் செல்வதில்லை. ஆனால் அமெரிக்காவிலோ இதற்கு நேர் எதிரான நிலை இருக்கிறது.

அமெரிக்காவில் பணக்காரர்களில் 75 விழுக்காட்டி னர் வாக்களிக்கின்றனர். ஏழைகளில் 40 விழுக்காடு மட்டுமே வாக்களிக்கின்றனர் (ஃபிரண்ட் லைன், நவம்பர் 2, 2012). அமெரிக்கப் பணக்காரர்கள் தங்கள் பணநாயக ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் உறுதிப்பாட்டுடன் உள்ளனர். இத்தேர்தல் கூத்துகளால் தமக்கு நன்மை ஏதும் விளையாது என்கிற புரிதல் ஏழைகளிடம் மேலோங்கி நிற்கிறது.

இந்தியாவில் காங்கிரசுக் கட்சிக்கும், பாரதிய சனதாக் கட்சிக்கும் அடிப்படைக் கொள்கையில் வேறுபாடு எதுவும் இல்லை. இரண்டு கட்சிகளுமே பார்ப்பன-பனியா-பணக்கார ஆதிக்கத்திற்குக் கட்டுப்பட்டவை; இவர்களின் நலன்களைப் பேணுவதையே குறிக் கோளாகக் கொண்டவை. காங்கிரசுக் கட்சி போலியான மதச்சார்பின்மையை, சோசலிசத்தைப் பேசும். பா.ச.க. வெளிப்படையான இந்துத்துவக் கட்சி. இவ்விரு கட்சிகளைப் போலவே அமெரிக்காவில் சனநாயகக் கட்சியும் குடியரசுக் கட்சியும் செயல்படுகின்றன.

குடியரசுக் கட்சி கருக்கலைப்பு, பெண்ணுரிமை போன்றவற்றுக்கு எதிரான பழைமைவாதம் பேசும் பெரும் பணக்காரர்களை வெளிப்படையாக ஆதரிப்ப துடன், ஏழைகளாக இருப்பதற்கு ஏழைகளே காரணம் என்று விளக்கம் கூறும். சனநாயகக் கட்சியோ சமூக நிiலையில் - பெண்ணுரிமையில் ஓரளவு சீர்திருத்தப் போக்குக் கொண்டது. கறுப்பின மக்களின் ஆதரவாள னாகக் காட்டிக் கொள்ளும். ஆனால் இவ்விரு கட்சிகளும் பன்னாட்டு நிறுவனங்களின், பெருஞ்செல்வர்களின் நலனைப் பேணுவதிலும், இதற்காக உலக நாடுகளின் பொருளியல், அரசியல், சமூகம், இராணுவம், பண்பாடு ஆகிய தளங்களில் ஆதிக்கம் செலுத்துவதிலும் ஒரே கொள்கை கொண்டவை. உலகின் ‘போலீசாக’ அமெரிக்க வல்லரசு ஒன்றுமட்டுமே இருக்க வேண்டும் என்ற கொள்கையைக் கடந்த ஒரு நூற்றாண்டாக இரு கட்சிகளும் பின்பற்றி வருகின்றன.

இந்தப் பின்னணியில், இவ்விரு கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளர்களுக்கு மக்கள் எவ்வாறு வாக்களித்துள்ளனர் என்பதைக் காண்போம்.

america_election_365

நடைபெற்ற குடியரசுத் தேர்தலில் ஒபாமாவுக்கும் ரோம்னிக்கும் இடையே கடுமையான போட்டி - நூலிழையில் தான் வெற்றி தோல்வி அமையும் என்று ஊடகங்கள் கூறிக்கொண்டிருந்தன. ஆனால் வெள்ளையர் அல்லாத பிரிவினர்களில் 70 விழுக் காட்டுக்குமேல் ஒபாமாவுக்கு வாக்களித்ததாலும், ஒட்டு மொத்த பெண் வாக்காளர்களில் 55 விழுக்காட்டினர் ஒபாமாவுக்கு வாக்களித்ததாலும் ஒபாமா எளிதில் வெற்றி பெற்றுவிட்டார். 2008இல் கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் முதன்முதலாக அமெரிக்காவின் குடியரசுத் தலைவரானார். அது மாபெரும் வரலாற்றுப் பதிவாயிற்று. அதைப்போலவே இரண்டாவது தடவையும் அவர் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதும் வரலாற்றில் இடம்பெறும். இதுபற்றி, இந்தியாவில், வெளிவரும் “Times of India” நாளேடு, “அமெரிக்கா மண்டல் மயமாகிவிட்டது” என்றே தலைப்பிட்டுச் செய்தி வெளியிட்டது.

கடந்த நான்கு ஆண்டுகளில் ஒபாமா செய்த அரும்பெரும் சாதனைகளுக்காக மக்கள் மீண்டும் அவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்களா? இல்லை! இல்லை! ஒபாமாவுக்கு முன்பு ஆட்சியில் இருந்த புஷ்ஷைவிட மிட் ரோம்னி வெள்ளை இனவெறி, மதவெறி, போர் வெறி கொண்டவராக இருப்பார் என்று மக்கள் கருதினார்கள். பெருந்தீமையை விடச், சற்றுக்குறைவான தீமை பரவாயில்லை என்று எண்ணியே ஒபாமாவுக்கு வாக்களித்தனர். மேலும் 2008 தேர்தலில் ‘நம்மால் முடியும்’ என்று முழங்கிய ஒபாமாவுக்கு, மற்றொரு வாய்ப்பு கொடுத்துப் பார்க்கலாம் என்ற எதிர்பார்ப்பில் ஏழை - நடுத்தர - வெள்ளையர் அல்லாத மக்கள் ஒபாமாவுக்கு வாக்களித்தனர்.

2008 தேர்தலில் ஒபாமா அளித்த வாக்குறுதியின் படி, ஈராக்கிலிருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெற்றார். ஆனால் ஆப்கானிஸ்தானுக்குக் கூடுதலாக 30,000 படையினரை அனுப்பினார். ஒசாமா பின்லேடனைப் பிடித்து விசாரணை ஏதுமின்றிக் கொன்றார். இச்செயல் அமெரிக்க மக்களிடையே பராக் ஒபாமாவின் புகழைப் பரவச் செய்தது. ஆனால் 2002ஆம் ஆண்டு புஷ் உருவாக்கிய-கியூபாவை ஒட்டியுள்ள கவுந்தனாமா கொடுஞ்சிறையைத் தேர்தலில் வாக்களித்தவாறு ஒபாமா மூடவில்லை. ஈராக், ஆப்கான் ஆகிய இரண்டு போர்களில் அமெரிக்கா 2.5 முதல் 4 டிரில்லியன் டாலர் (ஒரு டிரில்லியன் என்பது ஒரு இலட்சம் கோடியாகும்) செலவிட்டுள்ளது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அமெரிக்காவின் கடன் 16 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. 2011ஆம் ஆண்டில் வரவு-செலவுத் திட்டத்தில் ஒரு டிரில்லியன் டாலர் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டது. ஆனாலும் இராணுவத்திற் கான செலவை அமெரிக்கா குறைக்க மறுக்கிறது.

உலகில் இராணுவத்திற்காகச் செலவிடப்படும் மொத்தத் தொகையில் அமெரிக்கா 41 விழுக்காடு செலவிடுகிறது. அமெரிக்காவை அடுத்து இராணுவத் திற்காக அதிக தொகை செலவிடும் ஆறு நாடுகளின் மொத்தத் தொகையைவிட அமெரிக்கா அதிகமாகச் செலவிடுகிறது. ஏனெனில் அமெரிக்க ஏகாதிபத்தியத் தின் வலிமைக்கும் பொருளாதார ஆதிக்கமும் இராணுவ ஆதிக்கமும் இரண்டு சக்கரங்களாகச் செயல்படுகின் கறன. உலகில் 200 இடங்களில் அமெரிக்கப் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. அதனால் எந்தவொரு நாட்டின் மீதும் நினைத்த அளவில் தன் படைகளை ஏவுகிறது. இவ்வாறு அண்மையில் லிபியா, சிரியா நாடுகள் மீது தன் படைகளை ஏவியது. ஒபாமா 2014க்குள் ஆப்கானிலிருந்து படைகளை விலக்கிக் கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார். ஆயினும் புவிசார் அரசியல் - பொருளியல் மேலாதிக்கத்திற்காகப் புவிப் பரப்பெங்கும் தன் படைகளை நிறுத்தி வைக்க வேண்டிய தேவை அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு இருக்கிறது.

2012 நவம்பர் மாதத்தின் பிற்பகுதியில் அமெரிக்காவின் செல்லப் பிள்ளையான இசுரேல், பாலஸ்தீனத்தில் காசா பகுதியில் தாக்குதல் நடத்திப் பேரழிவை உண்டாக்கியது. தன் தற்காப்புக்காகத் தாக்குதல்நடத்தும் உரிமை இசுரேலுக்கு உண்டு என்று ஒபாமா இதற்கு விளக்கமளித்தார். எனவே அமெரிக்காவில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், ‘உலக சமாதானப் புறா’ என்று போற்றப்பட்ட ஜான் கென்னடி போன்றவர்கள் ஆட்சிக்கு வந்தாலும் அமெரிக்காவின் போர் வெறி அப்படியே நீடிக்கும் (கென்னடியின் ஆட்சிக்காலத்தில் தான் வியத்நாம் போர் நடந்தது).

2008 தேர்தலின் போது அமெரிக்காவில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. பெரிய பெரிய வங்கிகளும், நிதி நிறுவனங்களும் திவாலாயின. நியூயார்க் நகரில் உள்ள வால் தெருவில்தான் (Wall street) பங்குச்சந்தை நிறுவனங்களின், பன்னாட்டு நிறுவனங்களின் தலைமையகங்கள் அமைந்துள்ளன. ‘இவற்றை புஷ் கட்டுப்படுத்தத் தவறியதால்தான், பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. 2008 தேர்தல் என்பது வால் தெருவுக்கும் மக்களுக்கும் இடையிலான தேர்தல்’ என்று ஒபாமா சொன்னார். ஒபாமா ஆட்சிப் பொறுப்பு ஏற்றபின் குறைந்த அளவில் வால் தெரு நிதியாதிக்க நிறுவனங்கள் மீது கட்டுப்பாடுகளைக் கொண்டுவர முயன்றார். ஆனால் அமெரிக்காவில் ஒரு விழுக்காடாக உள்ள பெருமுதலாளிகள் ஒபாமாவை மிரட்டி அடக்கிவிட்டனர். இதேபோன்று அமெரிக்கா வின் பன்னாட்டு நிறுவனங்கள் வெளிநாடுகளில் அமெரிக்கப் பணிகள் ஒப்படைப்பு செய்வதைத் தடுப்பதிலும் தோல்வியையே தழுவினார். ஏனெனில் அமெரிக்காவின் அரசியலைப் பொருளாதாரம் தான் ஆட்சி செய்கிறது.

மக்கள் நலனுக்கென ஒபாமாவால் ஒரே ஒரு திட்டத்தை மட்டும் ஓரளவு நிறைவேற்ற முடிந்தது. மருத்துவக் காப்பீட்டுப் பாதுகாப்பு செய்துகொள்ள பணம் இல்லாததால் 5 கோடி ஏழை அமெரிக்கர் களுக்கு மருத்துவ வசதியைப் பெற முடியாத அவலம் இருந்தது. மருத்துவக் காப்பீட்டிற்கான தொகையில் ஒரு பகுதியை அரசு அளிக்கும் திட்டத்தை ஒபாமா கொண்டு வந்தார். இதற்குக் குடியரசுக் கட்சிக் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மிட் ரோம்னி வெற்றி பெற்றிருந்தால் இத்திட்டத்தைக் குப்பைக் கூடையில் எறிந்து விட்டிருப்பார். ஆயினும் ஒபாமா கொண்டு வந்துள்ள மருத்துவக் காப்பீட்டு உதவித் திட்டம் பெருஞ்செலவு பிடிக்கும் மருத்துவம் செய்து கொள்ள உதவாது.

புஷ்ஷைப் போலவே 2008-2012 காலத்தில் ஒபாமா நெருக்கடிக்குள்ளான நிதி நிறுவனங்களுக்கும் வங்கிகளுக்கும் கோடிக்கணக்கில் பணம் அளித்தார். கடந்த 5 ஆண்டுகளில் 6,000 கோடிப் பணத்தை அரசு, முதலாளிய நிறுவனங்களுக்கு அளித்துள்ளது. பொருளாதார நெருக்கடி அமெரிக்காவை மட்டுமின்றி அய்ரோப்பிய நாடுகளிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி யிருக்கிறது. இச்சிக்கல் 2018ஆம் ஆண்டுவாக்கில் தான் சீரடையும் என்று பொருளியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்காவிலும், வளர்ச்சி பெற்ற அய்ரோப்பிய நாடுகளிலும் 2007-2008ஆம் ஆண்டு முதல் கடுமையான பொருளாதார நெருக்கடி நீடிப்பதற்கு முதன் மையான காரணம் 1980 முதல் ரீகன்-தாட்சர் கூட்டணி உருவாக்கிய தாராளமய சந்தைப் பொருளாதாரத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தியதே ஆகும். அந் நாடுகளின் அரசின் கொள்கைகள் பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக்குவதாகவும், ஏழைகளை மேலும் ஏழைகளாக ஆக்குவதாகவுமே இருந்தன.

உயர் வருவாய்ப் பிரிவினர் மீதான வரி 70 விழுக் காடாக இருந்ததை, ரீகன் 28 விழுக்காடாகக் குறைத் தார். கிளிண்டன் இதை 39.6 விழுக்காடாக உயர்த்தி னார். பிறகு புஷ் இதை 35 விழுக்காடாகக் குறைத் தார். 2007ஆம் ஆண்டு அமெரிக்காவில், வருவாய் மீதான சராசரி வரி விகிதம் 20.4 விழுக்காடாகும். ஆனால் 400 பெருஞ்செல்வக் குடும்பங்களின் மீதான சராசரி வரி 16.6 விழுக்காடாக இருந்தது. 1950களில் மத்திய அரசின் வருவாயில் கார்ப்பரேட் வரியின் பங்கு 50 விழுக்காடாக இருந்தது. இப்போது இது 9 விழுக்காடாக மட்டும் உள்ளது. 1980இல் அமெரிக்காவில் பொருள் உற்பத்தி சார்ந்த தொழில்களில் இருந்த தொழிலாளர்கள் 20.1 விழுக்காடு. 2010இல் இவர்கள் 11.9 விழுக்காடு அளவுக்கே உள்ளனர். எனவே அமெரிக்காவில் 6 பேரில் ஒருவர் வேலை இல்லாமல் இருக்கிறார். கடந்த 5 ஆண்டுகளில் 80 இலட்சம் ஏழைக் குடும்பங்கள் வீட்டுக்கடன்களைத் திருப்பிச் செயலுத்தமுடியாமல் சூழலில் சிக்கித் தம் வீடுகளை இழந்துள்ளனர். ஏழைகளுக்கு ஏற்பட்டுள்ள இத்துன் பங்களை நீக்குவதற்கான திட்டம் எதையும் ஒபாமா அறிவிக்கவில்லை.

மக்களுக்காக, மக்களால், மக்களே ஆளும் அரசே சனநாயக அரசு என்றார் ஆப்பிரகாம் லிங்கன். ஆனால் இன்று அமெரிக்காவில் ஒரு விழுக்காடு பெருஞ்செல்வர்களுக்காக, பெருஞ்செல்வர்களால், பெருஞ்செல்வர்களே ஆட்சிசெய்யும் அரசாக Decocacy for 1%, by 1%; of 1%) இருக்கிறது. அமெரிக்காவில் உயர்நிலையில் உள்ள 20 விழுக் காட்டினரிடம், நாட்டின் செல்வத்தில் 85 விழுக்காடும், நிதி உடைமையில் 93 விழுக்காடும் இருக்கிறது என்று இக்கட்டுரையில் முன்பு பார்த்தோம். 

இந்தியாவிலும் இதேபோன்று உயர்நிலையில் உள்ள 20 விழுக்காட்டினரிடமே நாட்டின் செல்வமும் நிதியும் குவிந்து கிடக்கின்றன. இந்த 20 விழுக்காட்டினர் அமெரிக்காவில் வெள்ளை இனத்தவராக உள்ளனர். இந்தியாவில் பார்ப்பன-பனியா மேல்சாதியினராக இருக்கின்றனர்.

கடந்த முப்பது ஆண்டுகளாகச் செயல்படுத்தப்பட்டு வரும் தாராளமயச் சந்தைப் பொருளாதாரத்தை அரசுகள் கட்டுப்படுத்தி, உழைப்பால் விளையும் செல்வம் அடித்தட்டு மக்களுக்கும் கிடைக்குமாறு செய் தால்தான் மலைக்கும் மடுவுக்குமான பொருளாதார ஏற்றத்தாழ்வைக் குறைக்க முடியும். எல்லோர்க்கும் அடிப்படையான வாழ்வாதார வசதிகளை வழங்க முடியும். சாதிக்கட்டுகள் உடையவும் இது தேவை.

2011ஆம் ஆண்டில் அமெரிக்காவில் மக்கள் தொகைக் கணக்கின்படி, ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 50.4 விழுக்காடு குழந்தைகள் வெள்ளையர் அல்லாத வர்களின் குழந்தைகளாகும். அடுத்த பத்து, இருபது ஆண்டுகளுக்குள் வெள்ளையர் அல்லாத - ஏழைகளாகவும் நடுத்தரப் பிரிவினராகவும் உள்ள பிரிவினர் வெள்ளையர் எண்ணிக்கையை மிஞ்சுவர். குறிப்பாக இப்பிரிவுகளில் இளைஞர்கள் அதிகம் இருப்பர். அந்நிலையில் அமெரிக்காவில் மக்கள் திரள் போராட்டங்கள் வெடித்து, மக்களுக்கான அரசாகச் செயல்படும் படியான நிலை ஏற்படக்கூடும்.

இந்தியாவில் உழைக்கும் வகுப்பு மக்கள் சாதியத் தடுப்புச் சுவர்களைத் தகர்த்து, ஒரு வர்க்கமாக அணி திரண்டு, மேல்சாதி - முதலாளிய - பணக்கார ஆதிக் கத்தை வீழ்த்தும் நாள் எந்நாளோ?

- க.முகிலன்

Pin It