இந்திய நாடு “புண்ணிய நா”டாம்!
“ஞான பூமி”யாம்!
வான் வழி திறக்கும் ஆன்மீக மேன்மையும்
திக்கெலாம் போற்றும் தெய்விக வெளிச்சமும்
உலகுக்கு வழங்கும் உயர்ந்தநா டிதுவாம்!
புளுகுகின்றார்கள்.
மாந்தனை மாந்தனாய் மதியா நாடிது
உழைக்கும் இனத்தை ஒடுக்கும் நாடிது
சழுக்கர் உண்டாக்கியசாதிப் பிரிவுகள்
கடவுள் படைப்பெனக் கதைக்கும் நாடிது.
ஆன்மீகம், ஆன்மீகம் என்கின் றார்களே
மாந்த நேயம் இன்றி இங்கோர்
ஆன்மீக வாழ்க்கை அமைய முடியுமா?
தீண்டாமைத் தீ பற்றி எரிகையில்
ஆன்மிகம் வந்து அதை அவித்தது உண்டா?
தொண்ணூறு பேரைத் தூர விலக்கிப்
பத்துப் பார்ப்பான் பசனை பாடினால்
தெய்விகம் அங்கே திகழ்ந்து நிற்குமா?
கீழ்த்தட்டு மாந்தன் தாழ்த்தப் பட்டும்
உறிஞ்சப்பட்டும் ஒடுக்கப் பட்டும்
தாழ்ந்து, குனிந்து தன்மானம் இழந்து
புண்பட்டு உள்ளம் புழுங்கிச் சாகையில்
அவனை நெஞ்சோடு அணைத்து நிமிர்த்தி
மாந்தன்நீ என்றவனை மகிழ்ந்து கொண்டாடும்
அன்பு நெஞ்சில் அணுவும் இல்லாமல்
என்னடா ஆன்மிகம்?
பிளவின்றி மாந்தப் பிறப்பினர் யாவரும்
ஒருநிகர் என்றே உவந்து கொண்டாடுதல்
இந்த நாட்டில் இல்லவே இல்லை.
நெஞ்சில் மாந்த நேயமற்றவர்கள்
உலகம் வாழ ‘ஓமம்’ வளர்ப்பராம்!
பார்ப்பான் தொப்பை பருப்பதற் காகவே!
கோயில் தோறும் குட முழுக்குகள்
வேத வேள்விகள்; விநாயகர் விழாக்கள்.
அய்ம்ப தடியில் ஆஞ்ச நேயர்கள்.
இவற்றைத் தானே ஆன்மிகம் என்று
கதைத்துக் காசு பறிக்கிறான் பார்ப்பான்.
பசியிலும் நோயிலும் பதைக்கும் மக்கள்மேல்
கடுகள வேனும் கவலைப் படாத
மேனி மினுக்கி மேல்தட்டுக் காரன்
உடை நலுங்காமல் உட்கார்ந்து கொண்டு
“வருணச்சிரமம் ஓர் வாழ் முறை” என்றும்,
மனுதரு மத்தின் மாண்புகள் கூறியும்,
ஆண்டவனே இவை அமைத்தான் என்கிறான்.
அத்து விதத்தின் ஆழம் கண்டதாய்த்
“தத்துவம்” பேசும் சங்கராச் சாரி
வழிபடச் செல்லும் மக்கள் தமையும்
இழிந்தவர், மேலோர் எனப் பிரிக்கின்றான்.
“ஞானம்” “ஞானம்” என்கின்றாயே,
எதடா ஞானம்?
தான் எனும் முனைப்புத் தவிர்ந்ததே ஞானம்
தான் எனும் முனைப்புத் தவிர்ந்தவன் உளனேல்
தன்னையே உயர்வாய்த் தனிநிறுத்தாமல்
உயிர்க்குலம் யாவையும் ஒன்றெனக் கொள்வான்
இந்த நாட்டில், எவன் இதைச் செய்கிறான்?
“புண்ணிய நாடாம்”! “ஞான பூமியாம்”
மண்ணாங் கட்டி!
Pin It