புவிவெப்பம் உயருகிறது என்றும், இது உலக அழிவிற்கு இட்டுச்செல்கிறது என்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற அரசியல்வாதிகளின் ஆணைக்கு இணங்க விஞ்ஞானிகளும், அதிகாரிகளும் பரப்புரைக்கு மேல் பரப்புரை செய்து வெற்றி அடைந்து இருக் கிறார்கள். இன்று எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் உட்பட அனைவரும் புவிவெப்பம் உயர்கிறது என்றும், இது உலக அழிவிற்கு இட்டுச் செல்கிறது என்றும் தெளிவாகச் சொல் கிறார்கள். வருகின்ற ஆபத்தைப் பற்றி மட்டும் சொல்லி விட்டு அதற்குச் சரியான தீர்வைச் சொல்லாமல் இருப்பது கோமாளித் தனமா அல்லது அயோக்கியத்தனமா என்று விளங்கவில்லை.

உலக ஆற்றல் முகமையின் (International Energy Agency - IEA) தலைமைப் பொருளாதார அறிஞர் 10.11.2011 அன்று, நம்முடைய பொருளாதார முறையினை மாற்றிக் கொள்ளாவிட்டால், இன்னும் 5 ஆண்டுகளில், மீளமுடியாத அளவிற்குச் சுற்றுச்சூழல் மோசமடைந்துவிடும் என்று கூறியிருக்கிறார். 5 ஆண்டுகளுக்குப்பின் பொருளாதார வளர்ச்சியின் மூலம் பெறப்படும் முழு ஆதாயத்தைவிடப் பலமடங்கு பணத்தைச் செலவிட்டால்தான், அழிவுப் பயணத் தை நிறுத்தமுடியும் என்றும் அவர் கூறியிருக்கிறார். தென் னாப்பிரிக்காவில் டர்பனில் இவ்வாண்டில் நடக்கவிருக்கும் தட்பவெப்பச் சூழ்நிலை மாற்றம் குறித்த மகாநாட்டில், உறுதி யான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், இவ்வுலகம் அடுத்த 5 ஆண்டில் மீள முடியாத அழிவுப் பாதையில் அடியெடுத்து வைத்துவிடும் என்றும் அவர் கடுமையாக எச்சரித்து இருக்கிறார்.

கடல் உயிரின அறிவியலுக்கான ஸ்காட்டிஷ் அமைப்பின் தலைவர் மைக் பர்ரோஸ், 1960ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டு வரை நிலத்திலும் கடலிலும் வாழும் உயிரினங் களின் இடப்பெயர்ச்சி குறித்து ஆராய்ந்து இருக்கிறார். இவ்வாராய்ச்சியின் முடிவுகளைப் பற்றி 9.11.2011 அன்று இலண்டன் நகரில் பத்திரிக்கையாளர்களுடன் பகிர்ந்துகொண்ட பொழுது, புவிவெப்பம் உயரும் பொழுது சில உயிரினங்கள், தங்களுக்கு உகந்த தட்ப வெப்பநிலை உள்ள வேறு இடங் களுக்கு இடம்பெயர்கின்றன என்று தெரிவித்துள்ளார். அதாவது நிலத்தில் ஒரு மட்டத்தில் வாழும் உயிரினங்கள் புவி வெப்பம் உயர்ந்த பிறகு, தங்களுக்கு உகந்த பழைய தட்ப வெப்ப நிலை தற்பொழுது உள்ள மலைப்பகுதிக்குச் சென்று விடுகின்றன. எடுத்துக்காட்டாக கொடை ரோட்டில் வாழும் உயிரினங்கள் தங்கள் வாழ்விடத்தை கொடைக்கானலுக்கு மாற்றிக் கொள்ளும். இதே போல் கடலின் மேல் மட்டத்தில் வாழும் உயிரினங்கள் இன்னும் ஆழமான பகுதிக்குச் சென்று விடுகின்றன. இப்போக்கில் புவியின் சில பகுதிகள் உயிரினங்கள் வாழத் தகுதியற்றவையாக ஆகிவிடும்; ஆகவே சில உயிரினங்கள் அழிந்துவிடும். மைக் பர்ரோஸின் கூட்டாளியும், வடக்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான ஜான் புருனோ என்பவர் பவளம் போன்ற விரைவாக இடம்பெயரும் வல்லமையற்ற கடல் உயிரினங்கள் அழிந்துவிடும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என்று எச்சரித்து இருக்கிறார்.

அறிவியல் அறிஞர்களின் எச்சரிக்கையை அரசு அதிகாரி கள் வழிமொழிந்து கொண்டு இருக்கிறார்கள். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 9.11.2011 அன்று நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பட்டமளிப்பு உரையை நிகழ்த்திய, இந்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலர் சைலேஷ் நாயக், தட்பவெப்ப நிலைச் சீர்கேடு மனித இனத்திற்கும், மனித நாகரிகத்திற்கும் பெரும் கேடு விளைவிக்க இருப்பதாகவும், மக்கள் தொகைப் பெருக்கம் கடுமையான குடிநீர்த் தட்டுப் பாட்டை ஏற்படுத்தும் என்றும் கூறினார். மேலும் வளர்ந்த நாடுகளுக்கும் வளரும் நாடுகளுக்கும் இடையிலான தொழில் நுட்ப இடைவெளி, தட்ப வெப்ப நிலைச் சீர்கேட்டைத் தடுப்ப தற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பெரும் தடையாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

மைக் பர்ரோஸ். ஜான் புருனோ ஆகிய அறிவியல் அறிஞர்கள், தட்பவெப்ப நிலைச் சீர்கேடு, உயிரினங்களின் இடப் பெயர்வுக்கு அடிகோலுகிறது என்றும், சில உயிரினங்கள் அழிவ தற்குக் காரணமாகிறது என்றும் தெரிவித்து உள்ளனர். இதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். ஆனால் என்ன நடவடிக் கைகள் என்று அவர்கள் கூறவில்லை.

நம்முடைய இந்திய அரசு அதிகாரி தட்பவெப்ப நிலைச் சீர்கேட்டைப் பற்றி எச்சரித்ததுடன், பணக்கார நாடுகளுக்கும் ஏழை நாடுகளுக்கும் இடையே உள்ள தொழில்நுட்ப இடை வெளி, தீர்வு காண்பதற்குத் தடையாக இருப்பதாகக் கூறியுள் ளார். ஆனால் தொழில் நுட்ப இடைவெளி ஏன் தடையாக இருக்கிறது என்பதைப் பற்றியோ, தீர்வு காண்பதற்கு அது எப்படித் தடையாக இருக்கிறது என்பதைப் பற்றியோ அவர் பேசவில்லை.

உலக ஆற்றல் முகமையின் தலைமைப் பொருளாதார அறிஞர் பைரல் கொஞ்சம் தெளிவாக, இன்றைய பொருளாதார முறையினை மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் எப்படி மாற்ற வேண்டும் என்று சொல்ல வில்லை.

இன்றைய மிகமிக... மிக முக்கியமான, மிகமிக... மிக ஆபத்தான பிரச்சினையாகத் திகழும் புவிவெப்ப / தட்பவெப்ப நிலைச் சீர்கேட்டைத் தவிர்ப்பதற்கான தீர்வைக் காண்பதற்கு மிகமிக... மிகக் கூர்மையான அறிவு தேவைப்படுகிறதா? நிச்சயமாக இல்லை. சராசரி அறிவுக்கும் குறைவான அறிவே போதுமானது.

உலகில் இன்று முதலாளித்துவப் பொருளாதார உற்பத்தி முறை நடைமுறையில் உள்ளது. இம் முறையில் மக்களுக்குத் தேவைப்படும் பொருட்களை உற்பத்தி செய் வதைவிட, அதிக இலாபத்தில் விற்கப்பட ஏற்ற பொருட்கள் தான் உற்பத்தி செய்வதற்கு ஊக்குவிக்கப்படுவார்கள். பஞ்சம், பட்டினியால் பல கோடி மக்கள் வாடிக்கொண்டு இருக்கும்பொழுது, விவசாயமும் மரம் வளர்ப்பும் மிகவும் அவசியமான தொழில்களாகும். ஆனால் அவற்றில் இலாபம் கிடைப்பதில்லை. கிடைத்தாலும் அது மிகவும் குறைவாக இருக்கிறது. ஆகவே மூலதனம் விவசாயத்தின் பக்கமும் மரம் வளர்த்தலின் பக்கமும் திருப்பிவிடப்படுவது இல்லை.

சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வு காரணமாக மகி ழுந்துகள், குளிர்பதனச் சாதனங்கள் போன்ற ஆடம்பரப் பொருட்களை இலாபகரமாக விற்க முடிகிறது. ஆகவே அவற் றின் உற்பத்தியில் மூலதனம் திருப்பி விடப்படுகிறது.

முன்னவை (அதாவது விவசாயமும், மரம் வளர்த்தலும்) புவியைச் சமநிலையில் வைத்துக் கொள்ள உதவுபவை. பின்னவை (மகிழுந்துகள், குளிர்பதனச் சாதனத் தொழில்கள்) புவியின் தட்பவெப்பச் சூழ் நிலைக்குக் கேடு விளைவிப்பவை.

அழிவுப் பாதையில் சென்று கொண்டிருக்கும் பூமியை, அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்றால், மகிழுந்துகள், குளிர்பதனச் சாதனத் தொழில்களில் முதலீடு செய்வதை முற்றிலும் நிறுத்திவிட்டு, விவசாயத்திலும் மரம் வளர்ப்பதிலும் -அதாவது இயற்கை வளங்களையும் மனித உழைப்பையும் ஈடுபடுத்தினால் நம் உலகத்தை அழிவிலிருந்து காப்பாற்ற முடியும். இதைப் புரிந்து கொள்வதற்குச் சராசரி அறிவிற்கும் குறைவான அறிவே போதுமானது.

தீர்வு இவ்வளவு எளிதாக இருக்கையில் அதிகாரப் பீடத்தில் அமர்ந்திருக்கும் அரசியல்வாதிகளுக்கு எப்படி விளங்காமல் போகிறது? அப்படியெல்லாம் விளங்காமல் போகவில்லை. ஆனால் இந்தத் தீர்வை ஏற்றுக் கொண்டால் முதலாளித்துவப் பொருளாதார முறையை அடியோடு ஒழித்துவிட்டு, சோசலிசப் பொருளாதார முறையைப் பின்பற்ற வேண்டும். அப்படிச் செய்யும் பொழுது உழைக்கும் மக்களை அடிமை கொள்ள முடியாது. உழைக்கும் மக்களை அடிமை கொள்ள முடியா விட்டால், அயோக்கியத்தனமான சுகங்களை அனுபவிக்க முடி யாமல் போய்விடும். முதலாளிகளும், முதலாளித்துவ அறிஞர் களும், முதலாளிகளின் அடி வருடிகளான அரசியல்வாதிகளும் அயோக்கியத்தனமான சுகங்களை இழக்கத் தயாராக இல்லை.

ஆகவே அறிவியல் அறிஞர்களின் எச்சரிக்கைகளை மதியாமல் அவர்களைக் கிள்ளுக் கீரையைவிடத் துச்சமாக எண்ணி உதாசீனம் செய்கிறார்கள்.

உழைக்கும் மக்களும், உழைக்கும் மக்களுக்கான அறி ஞர்களும், சுற்றுச்சூழல் கேட்டிலிருந்து உலகைக் காப்பதற்குச் சோசலிசப் பொருளாதார உற்பத்தி முறையினால்தான் முடியும் என்று பரப்புரை செய்து மக்களை ஒன்றுதிரட்ட வேண்டும். கால அவகாசம் இல்லை என்பதால் இச்செயலை அவசரமாகச் செய்ய வேண்டும்.

Pin It