நூலகம் என்றாலே

       நூலுக்குப் பகையா - நீண்ட

கால இனப்பகைக்

       களிப்பின் நகையா?     (நூலகம்)

ஆடிப் பெருக்கிலே

       அழிந்தவை பாதி - வெற்று

       அனல்வாதம் புனல்வாதம்

       அழித்தவை மீதி

தேடி அறிவினைத்

       தீக்கிரை யாக்குதல் - தன்னைத்

       தெய்வக் குலமென்னும்

       பார்ப்பன நீதி    (நூலகம்)

கோட்டூர் புரத்திலோர்

       அறிவு நற்கோயில் - இன்று

       கொள்ளிவாயின் பிடியில்

       அதனுடை வாயில்

கேட்டினுக்கும் இங்கோர்

       எல்லையே இல்லையா - இருவர்

       கீரியும் பாம்புமாய்க்

       கிடப்பதன் தொல்லையா?    (நூலகம்)

திருவள்ளுவ ராண்டில்

       தீயை வைப்பதும் - இங்குச்

       செம்மொழி நூலகம்

       காணாமற் போவதும்

ஒருவர்மேல் ஒருவர்

       கொண்ட பழிப்பா - இவர்

       உட்பகைக் கெல்லாம்

       தமிழின அழிப்பா?       (நூலகம்)

காழ்ப்பான அரசியல்

       கைவிட் டொழிக! - அடிமைக்

       கட்டுகள் பொடிப்பொடி

       யாகி உதிர்க!

யாழ்ப்பாணச் சாம்பலில்

       தமிழன் எலும்புகள் - இனி

       யார்க்குமே வேண்டாம்

       இனக்கொலைத் தழும்புகள்!  (நூலகம்)
Pin It