annaimuthu--pon.dhanasekarபேரறிஞர் தோழர் ஐயா ஆனைமுத்து 90ஆம் அகவையில் கால்பதித்திருக்கும் இவ் வேளையில் அவர்கள் நோயற்ற பெருவாழ்வு வாழ்ந்து சிறக்க வேண்டும் என்ற சிந்தனையோடு, 19.6.2014 வியாழக்கிழமை முழுக்க தூத்துக்குடியில் அவரோடு செலவழித்த நேரத்தைப் பகிர்ந்து கொண்ட இனிய நினைவுகள் என் மனத்திரையில் நிழலாடுகின்றன.

19.6.2014 அன்று காலை 7.30 மணிக்கு முத்து நகர் விரை வுத் தொடர்வண்டி சரியான நேரத் தில் முகம் காட்டியது. எஸ்.10 பெட்டி யில் இருந்து ஐயா அவர்கள் கம்பீர மாகப் படியிறங்கினார்கள். என் கை யைப் பாசம் பொங்கப் பிடித்தபடி ஐயா நடந்துவர, 90 வயதுக்காரராயிற்றே என்று அவரது ஊன்றுகாலாக நான் மாற... அவருக்குப் புரிந்தது. தம்மை வயதானவன் என்று எண்ண இடம்தரலாகாது என்ற நோக்கத்தில் தம் கையை விடுவித்துக் கொண்டு விறுவிறு என நடையைத் தொடர்ந்தார்.

“தினகரன்! ஒரு உண்மையைச் சொல்லணும். நான் பார்த்த ரெயில் நிலையங்களில் டெல்லியும் தூத்துக்குடியும் தரமற்றவை.”

“விவரம் தெரியாதவங்க, எம்.பி.யா வந்திடுறாங்க. இதையெல்லாம் பார்லிமெண்ட்லே எங்கே எடுத்துப் பேசப்போறாங்க...” நான்.

“இதைப் பேசறதுக்கு என்ன தடை? பட்ஜெட் நேரத்திலே பேசலாம்; எழுதிக்கொடுக்கலாம். கட்டாயம் நிதி ஒதுக்கிடுவாங்க... ஒரு சில ஆண்டுகளுக்குள் வேலை முடிஞ்சிரும்.”

தூத்துக்குடி சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ந. தனசேகரன் அண்ணாச்சி ஐயாவுக்குக் கார் அனுப்பி யிருந்தார். விசாகா விடுதியில் ஐயா தங்குவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் அண்ணாச்சி செய்திருந்தார்.

“தனகரன்... 9 மணிக்கு நான் அண்ணாச்சி அலுவலகம் போயிட்டு, 10.15க்கு விசாகா விடுதிக்கு வந்திருவேன். நீங்களும் வீட்டுக்குப் போயிட்டு வேலை களை ஒழுங்கு செஞ்சிட்டு, விசாகாவுக்கு வந்திருங்க. இன்னைக்கு இரவு 7.50க்குத்தான் ரெயில். அது வரையில் நான் இங்கேதான் இருக்கப் போறேன்.”

“ஐயா, பகல் என் வீட்டுலதான் நீங்க சாப்பிடணும். மீன் பிடிக்குமா ஐயா, ஆட்டிறைச்சி வாங்கவா?”

“உங்க வீட்டுக்கு அழைச்சதுக்கு மகிழ்ச்சி. கட்டாயம் வர்றேன். ஆனா கறி, மீன் எல்லாம் வேண்டாம். அதைவிட்டு நாளாச்சி. கட்டித்தயிர், சோறு, காய்கறி கூட்டு அதுபோதும். சரி கிளம்புங்க.”

ஐயா விசாகா விடுதி செல்ல, நான் வீடு வந்து பார்க்க வேண்டிய வேலைகளைப் பார்த்துவிட்டுச் சரி யாக 10.15க்கு விசாகாவுக்கு வர, ஐயாவும் அண்ணாச்சி அலுவலகம் சென்று, துக்கம் விசாரித்துவிட்டுத் திரும்பியிருந்தார்.

விசாகாவின் ஏ.சி. அறையில் இதமான குளிரில் ஐயா ஒரு கட்டிலில் சுவரில் சாய்ந்தபடி அமர்ந்து கொண்டு என்னையும் பக்கத்துக் கட்டிலில் அமர்ந்து சுவரில் சாய்ந்து கொள்ளக் கேட்டுக் கொண்டார்.

தூத்துக்குடிக்குப் பல முறை ஐயா, சங்கமித்ரா, கவிஞர் தமிழேந்தி, பச்சமலை போன்ற தோழர்கள் வரும்பொழுது, அண்ணாச்சி தனசேகரன் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்துவிடுவார். பெரியாரின் பெருந்தொண்டு மீது அத்தனை ஈடுபாடு அவருக்கு.

ஐயாவின் பார்வை என்மீது நிலைத்தது. “பத்து பதினைஞ்சி நாள்களுக்கு முன்னால அண்ணாச்சி துணைவியார் தவறிப்போன செய்தி கிடைச்சுது. எவ்வளவு பெரிய இழப்பு. அண்ணாச்சிக்கிட்டே உடனே போன்ல பேசுனேன். தூத்துக்குடிக்கு நேர்ல வரு வேன்னு சொன்னேன்... வேணாம்... அது எதுக்கு சிரமம்னார். எனக்கு மனசு கேக்கலே. அதான் வந்தேன். அண்ணாச்சியைப் பார்த்தாச்சு... துணைவியார் பிரிவு அவரை ரொம்பவும் பாதிச்சிருச்சு. பெண்டாட்டிதான் ஒவ்வொருத்தரோட பலம். ஒண்ணா வாழும்போது நிறைய பேர் தெரிஞ்சிக்கிறதில்லே... அரசியலெல்லாம் எப்படி இருக்கு?”

“தி.மு.க. தோத்துப்போச்சு. மிகப் பெரிய ஊழல்கள். வாரிசுகளுக்குப் பதவிகளை வாரி வழங்கியது... நில அபகரிப்பு... ஈழத் தமிழர்களுக்குத் துரோகம்... தமிழைப் பயிற்றுமொழியாக்கத் தவறியது... மக்கள் தூக்கி எறிஞ்சிட்டாங்க... காங்கிரசுக்கு கல்லறை வெட்டி அதை அடக்கம் பண்ணியாச்சு. முள்ளிவாய்க்கால் கொத்துச்சாவுக்குக் காரணமே காங்கிரசு, தி.மு.க. கூட்டாட்சி தானே... இன்னொரு பக்கம் பிரதமர் பதவி தவறிப்போன கவலையிலே இந்த அம்மா...!

1 ரூபா இட்லி, தாலிக்குத் தங்கம், பசுமை வீடுகள், ஆயிரம் ரூபா முதியோர் பென்சன் மற்றும் இலவசங்கள்... அம்மையார் ஜெயிச்சிட்டாங்க... பாரதிய சனதா கூட்டணி இல்லாம இராமதாஸ், வைகோ நின்னிருப்பாங்கன்னா பாராட்டி இருக்கலாம். நாட்டுல வேளாண்மை, சுகா தாரம், கல்வி, குடிநீர், மின்சாரம், பாதுகாப்பு அனைத் துமே பின்தங்கி நொறுங்கிப் போய் கிடக்குது... மதுக் கடை மனுசனைக் கேடுகெட்டவனா மாத்தியிருச்சி... இதுல யாருக்கு ஓட்டுப்போடறதுங்கறது கேள்விக்குரிய விஷயம். நல்ல தலைவர்களும் இல்லை... மக்களும் எதையும் எண்ணிப் பார்க்கத் தயாரா இல்லே.” என்னுடைய மனக்குமுறல்களை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தவர்,

“தமிழ்நாட்டு மக்கள் நாட்டுக்கு எது நல்லது என்பதை எண்ணிப்பார்க்கத் தவறிடறாங்க. சினிமா வின் தோற்றம் நம்ம ஆட்களின் சிந்தனையை நொறுங்கப் பண்ணிருச்சு... வடக்கே சினிமாக்கார னுக்கு இந்த அளவுக்கு மவுசு இல்லே. ஆனாலும் அங்கேயும் விவரம் தெரிஞ்ச தலைவருங்க யாருமே இல்லே. வேளாண்மை, சுகாதாரம், குடிநீர், ஆற்று மணல் கொள்ளை இப்படி எல்லாம் சீரழிஞ்சு போயாச்சு. காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறுன்னு ஒரு பக்கம் சட்டத்தின் துணையோடு உரிமைகளுக்காகப் போராடினாலும், பெய்கின்ற மழை நீரைத் தேக்கி வைக்கவோ, ஏரி, குளங்களை ஆழப்படுத்தி கரைகளைப் பலப்படுத்தவோ நாற்பதாண்டு கழக ஆட்சிகள் ஏன் முயற்சிக்கவில்லை?

ஏன் குளங்கள் பட்டா போடப் பட்டன. தமிழைக் கலைஞர் ஆட்சியிலேயே பயிற்று மொழி ஆக்கி இருக்க வேண்டியதுதானே. பெரியார், காமராஜர், ஓமந்தூரார் இவங்களெல்லாம் ரொம்ப அக்கறையா மக்களுக்காகப் பாடுபட்டாங்க. அவங்க உழைப்பையெல்லாம் மக்கள் நினைச்சிப் பாப்பாங் களா என்ன? இரண்டாயிரம் வருடங்களா மக்களுக் குக் கிடைக்காத கல்வியை காமராஜர் எல்லாருக்கும் கிடைக்கப் பண்ணினார். பெரிய கல்விப் புரட்சியையே ஏற்படுத்தினார். நல்ல சமூகத் திட்டங்களைப் பெரியா ரோடு கலந்துபேசிக், கொண்டு வந்தார். பெரியாருக்குப் பிடிக்கலேன்னா அதை அவர் செய்யறது இல்லே. இப்ப அப்படி யார் இருக்காங்க...”

ஐயாவின் கருத்துகள் மடை திறந்த வெள்ளம் போல் பீறிட்டுக் கிளம்பின. பகல் ஒரு மணி வரை பெரியார் கொள்கையாளர்கள் ஐயாவை வந்து சந்தித்துச் செல்ல... 1.15க்கு ஸ்பிக்நகர் எதிர்ப்புறம் உள்ள எங்கள் இல்லம் வந்தோம். ஐயா எங்கள் இல்லம் வருவது இது இரண்டாம் முறை. என் துணைவியாரிடம் மிகக் குறைந்த அளவில் தட்டில் சோறு வைக்கச் சொன்னார். கட்டித்தயிரை அதிகமாக சோற்றில்விட்டு உப்பிட்டுப் பிசைந்தார். மூன்று வகை யான கூட்டுகள் தனித்தனித் தட்டில் வைக்கப்பட்டி ருந்தன. ஊறுகாய், அப்பளம் தொடவில்லை.

சோறு சாப்பிடும்பொழுது காய்கறிக் கூட்டுகளை அதில் ஒன்றும் இதில் ஒன்றும் தொட்டுக் கொள்ளாமல் ஒன்றை முழுமையாக எடுத்துக் கொண்டு அப்புறம் அடுத்தது; அதுவும் மிச்சமில்லாமல் வீணாக்காமல் பார்த்துக் கொண்டார். அவர் சாப்பிட்ட சாப்பாடு எங்களுக்கும் பாடமாகியது. கையலம்பியதும் “கொஞ்சம் ஓய் வெடுத்துக் கொள்ளுங்கள் ஐயா...” என்றேன். தேவை யில்லை. திருச்செந்தூர் பக்கம் குலசேகரன்பட்டணம் வரை போய்வரவேண்டும் என்று விருப்பப்பட்டார். புறப்பட்டோம். கார் விரைந்து கொண்டிருந்தது. ஐயாவிடம் கேட்டேன்.

“தமிழகத்தில் வேளாண் நிலங்கள் குடியிருப்பு களுக்காக அளக்கப்பட்டுக் கல்போடப்படுகிறதே... வருங்கால சமுதாயம் வேளாண் பொருள்களுக்குத் தவிக்க வேண்டியது வராதா? வேளாண் நிலங்கள் பிளாட்டுகளாக மாற்றப்பட அரசு சட்டம் இயற்றலாகாதா?”

“ஏன் இயற்றக்கூடாது. உடனடியாகச் செய்ய வேண்டும். இல்லையென்றால் விளைபொருள்களுக்கு நம்முடைய பின் சந்ததியினர் வெளிநாட்டினரிடம் மண்டியிடும் நிலைமை வரும்.”

குலசேகரன் பட்டணம். முற்காலத்தில் புகழ்வாய்ந்த துறைமுகப் பட்டணமாக இருந்திருக்க வேண்டும். தந்தை பெரியாரின் நம்பிக்கைக்குரியவராகத் திகழ்ந்த செ.தெ. நாயகம் ஐயா அவர்களின் சொந்த ஊர். 1904இலேயே பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களின் பெண் பிள்ளைகள் கல்வி பெற ஆரம்பப் பாடசாலை, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி, ஆசிரியர் பயிற்சிப் பள்ளி என செ.தெ. நாயகம் ஐயா முற்போக்குச் சிந்தனையாளராகத் திகழ்ந்தவர். அவர் தொடங்கிய பள்ளிகளை இன்றும் அதன் தொன்மை மாறாமல் அவரது வாரிசுகள் பேணிப் பாதுகாத்துப் பெருந்தொண்டு ஆற்றி வருகின்றனர். செ.தெ. நாயகம் ஐயாவின் பெயரன் மருத்துவர் தெய்வநாயகம் சித்த மருத்துவத் துறைக்கு ஆற்றிய பெரும் சேவையை இந்நேரத்தில் நினைவில் கொள்ள வேண்டும்.

குலசேகரன் பட்டணத்தில் நாங்கள் சந்தித்த வயது முதிர்ந்த பெரியவர்களிடம் ஐயா தன்னை யார் என்று காண்பித்துக் கொள்ளாமல், செ.தெ. நாயகம் ஐயா அவர்களின் நூறாண்டு சரித்திர வாழ்வைக் கேட்டு வியப்பில் ஆழ்ந்து போனது அற்புதமான செய்தி.

பெரியார் மணியம்மை திருமணம் வீட்டில், சென்னையில் நடந்தது. செ.தெ. நாயகம் ஐயா என்பதை ஒரு தகவலாக எனக்குச் சொன்னார்கள்.

“இந்தப் பகுதியில் கிறிஸ்தவர்கள் அதிகமாக இருக்கிறார்களா?”

“கடற்கரை மீனவ மக்கள் முழுக்கக் கிறிஸ்தவர்கள் தான். நாடார்களில் பதினைந்து சதவீதம் பேர் கிறிஸ்தவ மதத்தைத் தழுவியிருக்கலாம். ஆதித் திராவிடர் களிலும் அதுபோல் இருக்கலாம்.”

ஐயாவிடம் இருந்து பதில் வந்தது :

“கேரளாவில் முற்பட்ட வகுப்பினர், பிராமணர் உட்பட பலர் ஆங்கிலேயர் காலத்தில் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினர். அதற்கு நோக்கம் வேறு. நாடார் கள் சமுதாயத்தில் தீண்டத்தகாதவர்களாய் எல்லோ ராலும் புறந்தள்ளப்பட்ட காலம். அவர்களைப் பாது காத்துக் கொள்ள கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார்கள். ஆங்கிலேய மிஷினரி அவர்களுக்குக் கிராமம் கிராம மாகப் பாடசாலை தோற்றுவிக்க அனுமதி அளித்தது. அவர்கள் நிர்வாகத்தில் அனைத்துச் சமுதாய மக்களும் கல்வி கற்கும் பேறு கிடைத்தது. அவர்கள் வாழ்ந்த நகரங்களில் மகமை அமைத்துத் தங்களைப் பாது காத்துக் கொண்டார்கள். 1918இல் நடந்த சிவகாசிக் கலவரம் நாடார்களுக்கு எதிரானது. அவற்றையெல்லாம் ஒற்று மையால் எதிர்கொண்டார்கள். தந்தை பெரியார் நடத்திய வைக்கம் போராட்டம் நாடார், ஈழவர், புலையர் என்ற இனங்களின் தீண்டாமை நீங்கத்தான்.

“தீண்டாமைக் கொடுமை தாங்காமல் தங்களைச் சாணார் என்று” அழைக்கலாகாது... நாடார் என்றே அழைக்கச் சட்டம் இயற்ற ஆங்கில அரசைக் கேட்டுக் கொண்டு, தங்களை முற்பட்ட சாதி என்று அறிவிக்க வும் கேட்டுக் கொண்டார்கள். அப்படி அறிவிப்பும் செய் யப்பட்டது. பெருந்தலைவர் காமராஜர்தான்... “சுயமரி யாதை கருதி நாடார்கள் முற்பட்ட வகுப்பினர் என்று ஆக்கிக் கொண்டது உண்மை... ஆனால் அவர்கள் வளர்ச்சியை இந்நிலை பாதிக்கும் என்று எடுத்து ரைத்து, நாடார்களைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டிய லுக்குக் கொண்டு வந்தார். இது ஒன்றுதான் நாடார் களுக்கு என்று அவர் செய்தது” என்றார்.

நாங்கள் விடுதி அறைக்கு வந்த பொழுது மாலை 6.30. 7 மணிக்கு ரெயில் நிலையம் செல்ல வேண் டும். எங்கள் உரையாடல் அந்த இளைப்பாறும் நேரத்திலும் தொடர்ந்தது.

“தாம்பரத்திலே இருந்து சேப்பாக்கம் அலுவலகத் திற்கு கார்லேதானே போவீங்க...”

“காரெல்லாம் ஏது? பேருந்து... மின்சார ரெயில்னு ஏறிப் போயிருவேன்.”

“உங்க செலவுக்கு என்ன பண்ணறீங்க...”

“வீட்டுக்கு முன்னால 2 கடை கட்டியிருந்தேன். வாடகை ரூ.6000/-ம் வரும். கட்சி என் செலவுக்கு மாதம் ரூ.3500/- தரும். இப்படித்தான் சமாளிச்சிக் கிட்டு வந்தேன். பையன்க, பொண்ணுங்க சொந்தக் கால்ல நிக்கறாங்க. நானும் அவங்ககிட்டே கேக்கற தில்லே. அவங்களும் என்கிட்டே எதிர்பார்க்கிறது இல்லே. இப்ப 8 செண்ட் வீடு இருக்கிற இடத்லே 5ஙூ செண்ட் இடம் நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்கு எடுத்துக்கிட்டு நட்ட ஈடு கொடுத்திட்டாங்க. இருக்கிற 2ஙூ செண்ட் இடத்திலே வீடு கட்டிக்கணும். வந்த பணத் திலே பிள்ளைகளுக்கு முடிஞ்சதை கொடுத்திட்டேன்.”

“விலை மலிவா இருந்த நேரத்துல அஞ்சாறு பிளாட் வாங்கிப் போட்டிருக்கலாமே ஐயா...”

“பணத்திற்கு எங்கே போறது?”

ஐயா எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரை எப்படி வாழ வைத்துக் கொண்டிருக்கிறோம் என்ற சிந்தனை என்னைச் சூழ்ந்து கொண்டது.

ஐயாவின் மனதிலோ, முகத்திலோ எந்தக் குழப்பமும் இல்லை.

“2015-லே இலண்டன் போறேன் தெரியுமா,,,”

“சுற்றுப்பயணமா ஐயா...”

“அங்குள்ள நூலகங்களில் படிக்கப் போறேன்.”

ரெயில் பெட்டியில் ஏறி அமர்ந்தோம். மூன்று விசிறிகளில் ஒன்று சுழலவில்லை. திடீரென அவர் இரண்டு பக்க லோயர் பர்த்களிலும் கால்களை ஊன்றிக் கூரையில் உள்ள விசிறியை பேனாவினால் சுழல வைக்க முயன்றார்.

“ஐயா பத்திரம்...”

“நாட்டு மக்களுக்கு அம்பேத்கர், பெரியார் போராடிய விகிதாச்சார இடஒதுக்கீடு பெற்றே ஆகணும்... அது வரையிலும் நான் பத்திரமாகவே இருப்பேன்.”

ஐயாவுக்குக் கையசைத்தபொழுது இந்தச் சமு தாயம் சீர்படத் தங்களையே பலியாக்கிக் கொண்ட வ.உ.சி., மகாகவி பாரதி, ஜீவா போன்றோரின் நினைவு வந்தது. நமக்காகவே வாழும்-வழிகாட்டும் பெற்ற தந்தையைப் பிரிவது போல இருந்தது எனக்கு. தொண்ணூறில் அடியெடுத்து வைக்கும் எங்கள் சமூகச் சிற்பியே நீவிர் வாழ்வீர் பல நூறு ஆண்டு!

என் நெஞ்சில் வாழ்த்தியபடியே அவருக்கு விடை கொடுத்து, ஒரு பகல் முழுவதும் அவருடன் இருந்த மனநிறைவோடு இல்லம் சேர்ந்தேன்.

Pin It