அது ஒரு பெரிய தனியார் நிறுவனம். இந்தியாவில் ஏழெட்டு மாநிலங்களில் இருபதுக்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டது. ஏற்றுமதி இறக்குமதிப் பணிகளைச் செய்து கொண்டிருக்கும் அந்நிறுவனத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து கொண்டு இருக்கின்றனர். அதன் தலைமை அலுவலகம் புது தில்லியில் இருக்கிறது. ஆறுமுகம் தனது பதவி உயர்வுக் கடிதத்துடன் சென்னையில் இருந்து புதுதில்லி தலைமை அலுவலகத்திற்கு வந்து இருந்தார். கருத்த நிறமுள்ள அவரைக் கண்டவுடன் அவ்வலுவலகத்தின் மூத்த அதிகாரிகள் சற்று முகம் சுளித்தனர். ஆனால் நிறுவனத் தலைமை அளித்து இருக்கும் ஆணையின் படி அவர்தன் பணியை ஏற்றுக்கொள்ள அனைத்து வழிவகைகளையும் செய்தனர். அவரும் பொறுப்பேற்றுக் கொண்டு தன் வேலையைச் செய்யத் தொடங்கினார்.

பல மாநிலத்தவரும் பணியாற்றும் அந்நிறுவனத்தில் பார்ப்பனர்களே பெரும்பாலும் உயரதிகாரிகளாக இருந்தனர். மற்ற உயர்சாதிக்காரர்களும் ஓரளவு உயர் பதவிகளில் இருந்தனர். வழக்கம் போல கீழ்மட்ட வேலைகளைச் செய்வதற்குப் பிற்படுத்தப்பட்ட மக்களையும், தாழ்த்தப்பட்ட மக்களையும் வேலைக்கு அமர்த்தி இருந்தனர். உயரதிகாரிகளாக இருந்த தமிழ் நாட்டுப் பார்ப்பனர்கள் ஆறுமுகம் இவ்வளவு பெரிய பதவிக்கு அமர்த்தப்பட்டது குறித்து மிகவும் வியப் படைந்து அவரைப் பற்றிய மற்ற விவரங்களைக் கமுக்கமாகச் சேகரித்தனர். அப்படிச் சேகரித்துப் பார்த்த போது அவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

ஆறுமுகம் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். அவர் எப்படி ஒரு தனியார் நிறுவனத்தில் இவ்வளவு பெரிய பதவிக்கு வர முடிந்தது? அதுகூட முக்கியமல்ல; அவர் மூப்பு (seniority) வரிசையில் தன்னைவிட உயர்நிலையில் உள்ள சுமார் பத்துப் பதினைந்து பேர்களை (அதுவும் பார்ப்பனர்களை) புறந்தள்ளி விட்டுப் பதவி உயர்வு பெற்று வந்துள்ளார் என்பதை அறிந்த போது, அவர்களால் அதிர்ச்சியைத் தாங்க முடியவில்லை. அப்படிப் புறந்தள்ளப்பட்டவர்களுள் அங்குப் பணியாற்றிக் கொண்டு அரசுத் துறைகளிலேயே பதவி உயர்வில் இடஒதுக்கீடு அளித்து ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களை மீறி போகவிடக்கூடாது என்று போராடுபவர்கள், முழுவதும் உயர்சாதி ஆதிக்கத்தில் உள்ள தனியார் துறையில், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர் பார்ப்பனர்களை மீறிப் பதவி உயர்வு பெற்றது எப்படி என்று அவர்களால் கற்பனை செய்யவும் முடியவில்லை. அப்படிப் புறந்தள்ளப்பட்டவர்களுள் அங்குப் பணியாற்றிக் கொண்டு இருந்த பாலச்சந்திரன் என்பவரும் ஒருவர். அதோடு அல்லாமல் பாலச்சந்திரன் ஆறுமுகத்தைவிட ஒரு சில ஆண்டுகள் வயதில் மூத்தவர்.  அவரால் இந்த அவமதிப்பைத் தாங்கிக் கொள்ள முடிய வில்லை. உடனே தலைமை அதிகாரிகளிடம் போய் முறையிட்டார். தலைமை அதிகாரியோ தனக்கே இது புதிராக இருக்கிறது என்றும், மேலிடத்து உத்தரவு என் பதால்தான் மௌனமாக இருப்பதாகவும் கூறினார். அதன்பின் இதன் சூட்சுமத்தை அறிந்துகொள்ள தானும் ஆவலாக இருப்பதாகவும், பாலச்சந்திரன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருப்பதால் அங்குள்ள அவருடைய நண்பர்கள் மூலமும், உறவினர்கள் மூலமும் அல்லது சென்னை அலுவலகத்தில் உள்ளோர்கள் மூலமும் விவரத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் அதைத்  தன்னிடமும் கூறவேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

உடனே பாலச்சந்திரன் சென்னை அலுவலகத்தில் உள்ள தன்னுடைய நண்பர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி விவரங்களைச் சேரிக்க ஆரம்பித்தார். முதலில் அவருக்குக் கிடைத்த விவரங்களின்படி, ஆறுமுகத்துக் கும் சென்னை மேலதிகாரிகளுக்கும் சுமுகமான உறவில்லை என்று தெரிந்துகொண்டார். இது அவரை மேலும் வியப்பில் ஆழ்த்தியது. வேறுவிதங்களில் விசாரித்ததிலும் திருப்தியான விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இப்படியாகவே ஆறுமாத காலம் ஓடிவிட்டது.

ஒருநாள் பாலச்சந்திரன் மைத்துனரின் மகன் மோகன் ஒரு நேர்முகத் தேர்வுக்காக மதுரையில் இருந்து புதுதில்லிக்கு வந்திருந்தான். நேர்முகத் தேர்வு முடித்துவிட்டு ஊரைச் சுற்றிப்பார்க்க வேண்டும் என்பதற்காக ஒரு சில நாள்கள் அங்கே தங்கி இருந் தான். அப்படிச் சுற்றிப் பார்ப்பதற்காகத் தன் அத்திம் பேரைப் பாலிகா பஜாருக்கு அழைத்தான். “டேய்! அதுமிடில் கிளாஸ் ஆளுங்க போற இடம். நம்ம லெவலுக்கு அங்கே எல்லாம் போயி எதுவும் வாங்கக் கூடாதுடா. பெரிய கடைகள்லேதான் வாங்கணும்” என்று பாலச்சந்திரன் கூற, “அப்படி இல்லீங்க அத்திம் பேர்! டெல்லிக்கும் போயி, பாலிகா பஜார் பார்க்கலியான்னு யாரும் கேட்கக்கூடாது இல்லே? அதுக்காகத்தான் அங்கே போகணும்னு சொல்றேன். அதுவுமில்லாம சில மிடில் கிளா ஃபிரெண்ட்சுகளுக்கு மிடில் கிளா° பஜாருல வாங்குன பொருளைத்தான் பிரசென்ட் பண்ணனும்” என்று மோகன் கூற, வேண்டா வெறுப் பாக அவனுடன் கிளம்பினார்.

அவர்கள் இருவரும் பாலிகா பஜாரைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த போது, அங்கே வந்திருந்த ஆறுமுகத்தை மோகன் கண்டதும் “சார்! குட் ஈவினிங் சார்” என்று கூறிவிட்டு, தான் அவரிடம் ட்யூஷன் படித்த மாணவன் என்று நினைவுபடுத்தி, “நீங்க எங்கே சார் இவ்வளவு தூரம்?” என்று ஆச்சரியத்துடன் கேட்டான். ஆறுமுகம் மோகனையும் அவருடன் வந்திருந்த பாலச்சந்திரனையும் பார்த்து “நான் இப்போ இங்கே தான் வேலை பார்க்குறேன். பாலச்சந்திரன் என்னோட கொலீக்தான். ஆமா நீ எங்கே இங்கே வந்தே? பாலச்சந்திரனை உனக்கு எப்படித் தெரியும்?” என்று கூறவும், மோகன், தான் அவருடைய மைத்துனரின் மகன் என்பதையும், ஒரு நேர்முகத் தேர்விற்காகப் புதுதில்லிக்கு வந்திருப்பதாகவும் தெரிவித்தான். பின் சிறிது நேரம் பேசிவிட்டு ஆறுமுகம் விடைபெற்றுக் கொண்டார்.

அவர் அகன்ற உடன் பாலச்சந்திரன் மோகனிடம் “அந்த ஆளை உனக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டார். “அவர்கிட்டே தான் நான் ட்யூஷன் படிச்சேன். அவர்கிட்டே ட்யூஷன் படிச்ச பிறகுதான் எனக்குப் படிப் பிலேயே இன்ட்ரெ°ட் வந்திச்சு. ஆனா சில ரௌடிங்க அவரை அடிச்சிப் போட்டாங்க. அப்புறம் அவரை மதுரையிலே பார்க்க முடியலே. இப்பத்தான் இங்கே பார்க்குறேன்” என்று மோகன் கூற, “அந்த ஆளெ ரௌடிங்க ஏன் அடிச்சாங்க?” என்று பாலச்சந்திரன் கேட்டார். அதைப்பற்றிய விவரம் முழுமையாகத் தனக்குத் தெரியாது என்றும், ஆனால் அவர் இந்துமதத்தை விமர்சித்துப் பேசினார் என்று கேள்விப்பட்டதாகவும் அதுகாரணமாக இருக்கலாம் என்றும் மோகன் கூறினான்.

மோகன் கூறிய விவரங்கள் பாலச்சந்திரனை மேலும் அதிர்ச்சி அடையச் செய்தன. இந்துமதத்தை விமர்சித்த ஒருவர் பல பார்ப்பனர்களைப் புறந்தள்ளி விட்டுப் பதவி உயர்வு பெற்றது பற்றி அவர் செரிக்க முடியாமல் திணறினார். இந்த ஆறு மாதங்களில் ஆறுமுகம் மிகவும் திறமைசாலி என்று மெய்ப்பித்துத் தான் இருந்தார். ஆனால் இந்தியாவில் திறமைக்கா மதிப்பு அளிக்கப்படுகிறது? திறமை இல்லாவிட்டாலும் பார்ப்பனன்தானே உயர்நிலையில் இருக்க வேண்டும்? எவ்வளவு தான் திறமை இருந்தாலும் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் கீழ்நிலையில் தானே பணிபுரிய வேண்டும்? எங்கு கோளாறு நடந்து இருக்கிறது? ஒடுக் கப்பட்ட மக்கள் எவ்வளவு தான் திறமைசாலிகளாக இருந்தாலும் நல்ல வருவாய் தரக்கூடிய தனியார் நிறுவனத்தில் உள்ளே நுழைவதே முடியாது என்ற நிலை இருக்கும்போது இந்த ஆள் உள்ளே நுழைந்தது மட்டுமல்லாமல் பத்துப் பதினைந்து பார்ப்பனர்களைப் புறந்தள்ளிவிட்டுப் பதவி உயர்வு பெற்றிருக்கிறார் என்பதை எப்படிச் செரிப்பது? திணறிக்கொண்டே இருந்த பாலச்சந்திரனிடம் “அவர் நல்ல வாத்தியார் அத்திம் பேர்” என்று மோகன் கூற, “என்னது வாத்தியாரா?” என்று பாலச்சந்திரன் வியப்பின் உச்சக்கட்டத்திற்கே போய்விட்டார். பாலச்சந்திரனால் வேறு எதையும் யோசிக்க முடியவில்லை. ஒரு இயந்திரம் போல் மோகன் அழைத்த வழிக்கெல்லாம் சென்று இரவு இருவரும் வீடு திரும்பினார்கள்.

மறுநாள் பாலச்சந்திரன் தலைமை அதிகாரியிடம் ஆறுமுகத்தைப் பற்றித் தான் தெரிந்துகொண்ட விவ ரங்களை எல்லாம் கூறினார். அமைதியாகக் கேட்ட அந்தத் தலைமை அதிகாரி, பாலச்சந்திரன் சென்னை அலுவலக நண்பர்களை விசாரித்துப் பெறமுடியாத விவரங்களை மதுரை அலுவலக நண்பர்களிடம் விசாரித்துத் தெரிந்துகொள்ளலாம் என்று கூறினார். நேரிடையாக அறிமுகமான நண்பர்கள் மதுரை அலுவலகத்தில் இல்லையே என்று பாலச்சந்திரன் கூற, அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்றும், மதுரை அலுவலகத்தில் சில வேலைகளை வைத்து அவரை அனுப்புவதாகவும், அவற்றை முடித்துவிட்டு ஆறுமுகம் பற்றிய விவரங்களைத் துப்பறிந்து கொண்டு வரலாம் என்று கூறினார்.

தலைமை அலுவலகத்திலிருந்து ஓர் உயர் அதிகாரி நேராய்வு (ஐளேயீநஉவiடிn) செய்ய வருகிறார் என்ற உடன் மதுரை அலுவலகம் சுறுசுறுப்பு அடைந்தது. சென்னை அலுவலகத்தினர் இடையே புகுந்து ஏதாவது கலாட்டா செய்துவிடக்கூடாது என்பதற்காக, அந்தத் தலைமை அதிகாரி சென்னை அதிகாரியிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சமாதானப்படுத்தி வைத்தார். மதுரை அவருடைய மாமனார் ஊர் என்பதால் ஓரளவுக்கு ஊரை அறிந்து வைத்துக்கொண்டு இருந்தார். குழந்தை களின் படிப்பு காரணமாக மனைவியை அழைத்துவர முடியவில்லை. ஆனால் பின்னொருநாள் அழைத்துப் போவதாக மனைவிக்கு வாக்குறுதி அளித்தார்.

மதுரைக்கு வந்து சேர்ந்ததும் நன்றாகச் சிரித்துப் பேசியதில் வந்தவர் ‘சிடுமூஞ்சி’ இல்லை என்று அலுவலக நண்பர்கள் நிம்மதி அடைந்தனர். மேலும் அலுவலக வேலை பற்றியும் அதிகமாகக் குறை காணாமல் இருந்ததால் அனைவரும் அச்சம் நீங்கி மகிழ்ச்சி அடைந்தனர். இரண்டு நாள்கள் சென்ற பின் மதுரை அலுவலகத் தலைமை அதிகாரி சுந்தரத்திடம் ஆறுமுகத்தைப் பற்றி மெதுவாக விசாரித்தார்.

“ஆறுமுகமா? அந்த ஆள் எமகாதகனாச்சே?” என்று சுந்தரம் கூறவும், பாலச்சந்திரன் ஆறுமுகம் புதுதில்லியில் தன்னைவிட உயரதிகாரியாக வந்து சேர்ந்து இருப்பதையும், அது எப்படி முடிந்தது என்று தெரியாமல் புதுதில்லியில் இருப்பவர்கள் குழம்பி இருப்பதையும் தெரிவித்துவிட்டு, அந்த விபரங்களைத் தெரிந்துகொள்ளும் முயற்சியாகவே தான் மதுரைக்கு வந்திருப்பதையும் கூறினார்.

ஆறுமுகம் மதுரை கிழக்குத் தொடர்வண்டி நிலையத்திற்கு அருகே உள்ள ஒரு குடிசைப் பகுதியில் பிறந்து வளர்ந்தவர். கணிதத்தில் பட்டமேற்படிப்புப் படித்திருந்தாலும், அரசியல், பொருளாதாரம், வரலாறு முதலிய துறைகளிலும் நல்ல புலமை கொண்டவர். எவ்வளவு நன்றாகப் படித்திருந்தும், எவ்வளவு திற மைகள் பொதிந்திருந்தும் ஒரு நல்ல வேலை கிடைக் காமல் தவித்துக் கொண்டு இருந்தார். இந்தச் சூழ் நிலையில் மதுரை மாநகராட்சிப் பள்ளி ஒன்றில் ஆசிரி யராகப் பணியாற்ற ஒரு தற்காலிக வேலை கிடைத்தது. தனது தகுதிக்கும் திறமைக்கும் இது சிறிய வேலை தான் என்றாலும் தனது விதவைத் தமக்கையும் அவருடைய இரு குழந்தைகளையும், குடிகாரத் தந்தை யையும், மணமாகாத இரு தங்கைகளையும், இவர்களை எல்லாம் சமாளித்துக் குடும்பம் நடத்தத் தெரியாத தாயையும் எல்லாவற்றையும்விட காலங்காலமாகக் கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கும் வறுமையையும் எண்ணி, கிடைத்த வேலையை உடனடியாக ஏற்றுக் கொண்டார். வேலையை ஏற்றுக்கொண்ட பிறகு பிஞ்சு உள்ளங்களில் நல்ல கருத்துக்களை விதைக்க முடி வதைக் கண்ட அவர், சிறிது காலத்திலேயே ஆசிரியர் வேலையைக் காதலிக்க ஆரம்பித்துவிட்டார். ஆனால் அவர் எந்தக் காரணத்திற்காக ஆசிரியர் வேலையைக் காதலித்தாரோ அதே காரணம் அவர்வேலைக்கே உலைவைத்துவிட்டது.

மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் பொழுது மதம் மக்கள் மீது சுமத்தும் மூடநம்பிக்கை களையும், அறிவியல் அதற்கு எதிராக மனிதனின் பகுப்பாய்வுத்திறனை வளர்ப்பதையும் எளிமையாக விளக்கினார். இதற்கு முன் மதம், குறிப்பாக இந்துமதம் -அறிவியல் சார்புடையது என்று பல எடுத்துக்காட்டுகளுடன் பல ஆசிரியர்கள் கூறி இருப்பதைக் கேட்டிருந்த மாணவர்களுக்கு, ஆறுமுகத்தின் நேர்எதிரான விளக் கங்கள் புதிதாகவும், புதிராகவும் இருந்தன. ஆனால் அப் புதிர்களை எல்லாம் தன்னுடைய எளிமையான விளக்கங்கள் மூலம் தெளிவித்து மதமும் அறிவியலும் ஒன்றுக் கொன்று எதிரணியாக இல்லாமல் இருக்க முடியாது என்று எளிமையாகப் புரிய வைத்தார். இதனால் மதமும் அறிவியலும் இணையானவை என்றும் துணையா னவை என்றும் கற்றுக்கொடுத்துக் கொண்டு இருந்த மற்ற ஆசிரியர்களுக்குத் தர்மசங்கடம் உண்டாயிற்று. ஆறுமுகத்துடன் பேசித் தங்கள் கருத்தை நிலைநாட்டி, அவரையும் தங்கள் பக்கம் இழுக்க முயன்றவர்கள், அவருடைய எளிமையான வாதங்களுக்கு விடை யளிக்க முடியாமல் திணறினர். அவரிடம் அதிகமாகப் பேசினால் தாங்களும் அவர்போலவே மாறிவிட நேரிடும் என்ற அச்சம் உண்டாயிற்று.

இப்படிப்பட்ட சமயங்களில் அகில இந்திய அளவில் இந்துக்களிடையே ஒற்றுமையை உண்டாக்கும் அமைப் பின் உள்ளூர்க்கிளை அமைப்பாளர்களைக் கலந்து ஆலோசிப்பது வழக்கம். இப்பொழுதும் அப்படியே செய்தனர். அவ்வமைப்பின் தலைவர் இரகுபதி எல்லா வற்றையும் முழுமையாகக் கேட்டுக் கொண்டார். ஆறுமுகத்தின் விளக்கங்கள் மிகவும் எளிமையாகவும் அதேசமயம் கூர்மையாகவும் இருந்ததால் மற்றவர் களுக்கும் அவை நன்றாகப் புரிந்து அவர்கள் மூலம் இரகுபதியும் புரிந்துகொண்டார். உடனே ஆறுமுகம் மிகவும் ஆபத்தானவர் என்று நினைத்துக்கொண்டார். ஆனால் அவரை எப்படிக் கையாள்வது என்று புரியாமல் திணறினார். சற்றுநேரம் யோசித்துவிட்டு, ஆறுமுகம் சாதிப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுகிறாரா என்று விசாரித்தார். இதுவரைக்கும் அப்படி இல்லை என்று அவர்கள் கூறியவுடன், ஒரே நிம்மதிப் பெருமூச்சை விட்டார். பின் சிறிது காலம் பொறுத்திருக்கும்படியும் உரிய காலத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் கூறி அனுப்பினார்.

ஆறுமுகத்தின் சேவையால் பள்ளிக் குழந்தைகளில்  பலருடைய அறிவியல் பகுப்பாய்வுத்திறன் வலிமை பெற்றது. மாணவர்கள்  அவரிடம் கணிதப் பாடம் மட்டு மல்லாமல் தமிழ், ஆங்கிலம், வரலாறு போன்ற பாடங் களில் இருந்தும் விளக்கம் கேட்க ஆரம்பித்துவிட்டனர். இவற்றைப் பற்றி எல்லாம் விளக்கம் தரும் பொழுது மக்களை அடிமைத்தனத்தில் ஆழ்த்தி வைத்திருக்கும் சாதிக் கொடுமைகளைப் பற்றிப் பேச வேண்டி வந்தது. கண்ணுக்கு எதிரே பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கும், தாழ்த்தப்பட்ட சாதியினருக்கும் இடையே மோதல் இருப்பது தெரிந்தாலும், பார்ப்பன மேலாதிக்கம் தான் இக்கொடுமைகளுக்கு வேர் என்றும் விளக்கினார். திறமைசாலிகளும் திறமைக்குறைவானவர்களும் எல்லா வகுப்பு மக்களிடையேயும் இருக்கும்போது பொதுப் போட்டி முறையில் எல்லா வகுப்பு மக்களும் தெரிந் தெடுக்கப்படாமல் பார்ப்பனர்கள் அதிகப் பெரும்பான் மையாகத் தெரிந்தெடுக்கப்படுவதில் இருந்தே அம் முறையில் சூழ்ச்சி மறைந்திருப்பதை உணரலாம் என்று அவர் கூறிய விளக்கம், மாணவர்களுக்கு மெது வாகப் புரிய ஆரம்பித்தது. அதனால்தான் மிகப்பெரிய அறிவாளியான தங்கள் ஆசிரியருக்கு உயர்ந்த அதிகார  வேலை கிடைக்கவில்லையோ என்று சிந்திக்கும் அளவிற்கு மாணவர்களின் பகுப்பாய்வுத் திறன் வளர்ந்தது. இந்நிலையை மாற்ற என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்கவும் அதைப்பற்றி அவரிடமே கேட் கவும் ஆரம்பித்தனர்.

ஆறுமுகமும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும், தாழ்த்தப்பட்ட வகுப்பினரும் ஒற்றுமையாக இருந்து பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிராகப் போராட வேண்டும் என்றும், ஒடுக்கப்பட்ட மக்களில் இன்னொரு பிரிவின ரான மதசிறுபான்மையினரும் இப்போராட்டத்தில் இணைய வேண்டும் என்றும் அவ்வாறு போராடி அனைத்துத் துறையிலும், அனைத்து நிலையிலும் அவரவர் மக்கள் தொகைக்கு ஏற்ப விகிதாசாரப் பங்கீடு பெற்றுவிட்டால் சாதிக் கொடுமைகள் குறைந்துவிடும் என்றும் விளக்கினார். அப்படிச் செய்யும் போது பிற்படுத்தப்பட்ட மக்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் மதச்சிறுபான்மையினரும் இப்பொழுது பெற்றுக்கொண்டு இருப்பதைவிட மிகமிக அதிக அளவில் வேலை வாய்ப்புகளைப் பெறலாம் என்றும் அவர் கூறிய விளக்கம் அனைவருக்கும் எளிமையாகப் புரிந்தது.

இவ்விளக்கங்களைக் கேட்ட பிற்படுத்தப்பட்ட, தாழ்த் தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மற்ற ஆசிரியர்களும் ஆறுமுகம் கூறுவதில் உள்ள நியாயத்தை மெதுமெது வாகப் புரிந்துகொள்ள ஆரம்பித்தனர். ஒருநாள் ஞாயிறுக் கிழமையன்று அவர்கள் இரகுபதியைக் கண்டு சாவ காசமாகப் பேசிக் கொண்டு இருந்தனர். அப்பொழுது பேச்சுவாக்கில் ஆறுமுகம் விளக்கிக் கூறும் விகிதா சாரப் பங்கீடு பற்றிப் பேசினார்கள். இந்து மதத்திற்கு (அதன் வழியாகப் பார்ப்பனர்களுக்கு) அடிமைகளாக இருக்கும் இவர்கள் விகிதாசாரப் பங்கீடு பற்றிப் பேசிய தைக் கேட்டவுடன் இரகுபதி திடுக்கிட்டார். மேற்கொண்டு அவர்கள் பேசியதில் இருந்து ஆறுமுகம் தான் அதற்கு மூலகாரணம் என்றும் தெரிந்து கொண்டார். உடனே ஆறுமுகம் இந்துமதத்தைத் தாக்கிப் பேசியவற்றை எல்லாம் அவர்களுக்கு நினைவுபடுத்தினார். இந்துமதத்தை விமர்சித்துப் பேசியதைக் கேட்டபோது வராத பரபரப்பு விகிதாசாரப் பங்கீடு பற்றிப் பேசிய உடன் அவருக்கு வந்தது. ஆனால் அவர் ஆறுமுகம் இந்து மதத்தை விமர்சனம் செய்தது பற்றிப் பேசினார். ஏதாவது செய்தாக வேண்டும் என்று கூறினார்.

சில நாட்கள் கழித்து ஆறுமுகம் நூலகத்தில் அமர்ந்து படித்துக் கொண்டு இருந்தபோது, சில போக்கிலிகள் (ரௌடிகள்) உள்ளே நுழைந்து அவரை வெளியே இழுத்துப்போட்டு அடித்து உதைத்து விட்டுப் போனார்கள். போகும்போது அவர் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் பிற்படுத்தப்பட்ட சாதியின ருடன் ஒற்றுமை என்ற பெயரில் அவர்களுக்கு இணை யாகக் கருதிக்கொள்ளக் கூடாது என்றும் கூறிவிட்டுப் போனார்கள்.

(மும்பையில் 31.1.2013 அன்று இராமரைப் பற்றி இழிவாகப் பேசியதாகத் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பேராசிரியர் பிரமோத் பூம்பே (Promod Bhumbe) கல்லூரி நூலகத்தில் படித்துக் கொண்டு இருந்த போது போக்கிலிகளால் தாக்கப்பட்ட நிகழ்வை வாசகர்கள் நினைவுகூரவும்).

இந்நிகழ்ச்சி அப்பள்ளியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. இதுவரைக்கும் அவருடைய வகுப்பில் படிக்கும் மாணவர்கள் மட்டுமே அவரிடம் பாடம் கேட்பது போய், மற்ற மாணவர்களும் ஓய்வு நேரங்களில் பாடம் கேட்க ஆரம்பித்துவிட்டனர். போக்கிலிகள் மூலம் ஆறுமுகத்திற்குப் பாடம் கற்பிக்க நினைத்த இரகுபதி, அது எதிர்மறையான விளைவு ஏற்படுத்தியது பற்றி ஆத்திரம் அடைந்தார். அதன்பின் அரசு அதிகாரி களிடம் தனக்கு உள்ள செல்வாக்கை உபயோகித்து ஆறுமுகத்தை வேலையிலிருந்து நீக்க வைத்தார். ஆறுமுகம் கல்வியியல் பட்டம் (B.Ed.) பெறவில்லை என்பதும், அவர் தற்காலிக வேலையில் இருந்தார் என்பதும் இரகுபதிக்குச் சாதகமான காரணங்களா யின. அதுமட்டுமல்லாமல் கல்வியியல் பட்டம் பெற்ற இன்னொரு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரை அவ்வேலையில் அமர்த்தக் கண்டுபிடித்ததானது அவருடைய வேலையை எளிதாக்கியது.

வேலைநீக்கம் செய்யப்பட்ட ஆறுமுகம் உண்மை யாகவே வெகுவாகப் பாதிக்கப்பட்டார். அவர் பெற்றுவந்த மாதச் சம்பளம் ஏதோ ஒரு வகையில் குடும்பத்தை நடத்த உதவிக்கொண்டு இருந்தது. இப்பொழுது சம்பளம் நின்றுபோனதானது அவரை இக்கட்டான நிலைக்குத் தள்ளிவிட்டது. ஆனால் அவரது மாணவர்கள் அவர் தனிப்பயிற்சி (ட்யூஷன்) வகுப்புகள் எடுக்க வேண்டும் என்றும், அவருடைய பயிற்சி இல்லாமல் படிப்பது சிரமமாக இருப்பதாகவும், தாங்கள் பயிற்சிக் கட்டணம் கொடுத்துப் படிக்க விரும்புவதாகவும் கூறினர். ஆறுமுகமும் அதற்கு ஒப்புக்கொண்டு ஒரு தனிப் பயிற்சிப் பள்ளியை ஆரம்பித்தார். அதற்கு அண்ணல் அம்பேத்கர் தனிப் பயிற்சிப் பள்ளி என்று பெயர் வைத் தார். சிறிது காலத்தில் இப்பள்ளி நல்ல பெயர் பெற்று விட்டது. அவரிடம் கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் கூடியது. பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து கொண்டு இருந்த பொழுதைவிட, இப்பொழுது அதிக எண்ணிக்கையிலான மாணவர்களிடம் தன் கருத்தை விதைக்க முடிந்தது. ஆனால் அவரிடம் படிப் பவர்கள் பெரும்பாலும் ஏழை மாணவர்களாதலால் அவருடைய வருவாயில் போதுமான வசதி ஏற்பட வில்லை. இருந்தாலும் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் தம்மிடம் கற்க வருவது குறித்து மகிழ்வு டனேயே இருந்தார்.

இந்த நிகழ்ச்சிப் போக்கு இரகுபதிக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும், தாழ்த் தப்பட்ட வகுப்பினரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற கருத்து பரவுவது மிகவும் ஆபத்தாயிற்றே! விகிதாசாரப் பங்கீட்டுக் கொள்கையும் மிகவும் ஆபத் தாயிற்றே! இவ்விரண்டு கருத்துகளையும் பரப்பும் இவரை எப்படி ஒடுக்குவது என்று பலவாறாக யோசித்துக் கொண்டு இருந்தார். அப்படி யோசித்துக் கொண்டிருந்த வேளையில் அவரது அமைப்பைச் சார்ந்த, அகில இந்திய அளவில் மேற்பார்வை செய்யும் விஷ்ணுஜி என்பவர் மதுரை வந்தார். அமைப்புகளின் பணிகளைப் பற்றி ஆய்ந்து தன் மனநிறைவை வெளியிட்ட விஷ்ணுஜி, இரகுபதியைப் பாராட்டினார். இச்சமயத் தைப் பயன்படுத்தி ஆறுமுகம் பிரச்சினையை விளக்கி அதைக் கையாள முடியாமல் தவிர்ப்பது பற்றிக் கூறினார். விவரமாகக் கேட்டுக் கொண்ட விஷ்ணுஜி சிரித்தார்.

விஷ்ணுஜி : இரகுபதி! நீ ஒரு பிராம்மணன் மாதிரி நடந்துக்கலியே? தடாலடி நடவடிக்கைகள், உணர்ச்சி வசப்படுதல் தோல்விக்கே இட்டுச் செல்லும்.

இரகுபதி : ஜீ! அவன் ரொம்பப் புத்திசாலியா இருக்கான். வாதம் செஞ்சு அவனெ ஜெயிக்க முடியவே இல்லே.

விஷ்ணுஜி : உன்னை யாரு அவன்கிட்டே போயி வாதம் செய்யச் சொன்னா? அவனோட வீக் பாயிண்ட் என்னன்னு புரிஞ்சிகிட்டியா?

இரகுபதி பேந்தப்பேந்த விழித்தார். உடனே விஷ்ணுஜியும் ஆறுமுகத்தின் குடும்பம் வறுமையில் வாடுவதைச் சுட்டிக்காட்டி, அறிவுக்கூர்மையுள்ள அவர் முதலில் வறுமையில் இருந்து விடுபட வேண்டும் என்றும், அதன்பின் இதுபோன்ற சமுதாய வேலைகள் பார்ப்பதற்கு நேரம் இல்லாதபடி அதிகப் பொறுப்புள்ள உயர்ந்த நிலை வேலையைக் கொடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

“உயர்நிலை வேலைகளில் பார்ப்பனர்கள் தானே இருக்க வேண்டும்? இவர் என்ன இப்படிச் சொல்கிறாரே?” என்று திகைத்துக் கொண்டிருந்த இரகுபதியிடம், விஷ்ணுஜி அவர் நினைப்பதைப் பற்றித் தான் புரிந்து கொண்டதாகக் கூறி, சில விதிவிலக்குகள் தங்கள் நோக்கத்திற்கு வலிமை சேர்க்கும் என்றும், அவ்விதி விலக்குகளைப் புரிந்து கொள்ளாமல் இருப்பது மிகவும் ஆபத்தானது என்றும் கூறினார். அதைக் கேட்ட இரகுபதி மேற்கொண்டு தான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார். ஆறுமுகத்தை எப்படி யாவது அணுகி அவருக்கு ஒரு நல்ல நிறுவனத்தில் உயர்ந்த வேலை வாங்கித்தர வேண்டும் என்றும் அவ்வேலையில் இருந்து அவர் வெளியே போகா தவாறு ஊக்கப் பரிசுகளை அளித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

இரகுபதி  செயலில் இறங்கினார். ஆறுமுகத்திடம் தனிப்பயிற்சி பெறுபவர்களில் பார்ப்பன மாணவர் களும் இருப்பதைத் தெரிந்துகொண்டார். அம்மாணவர்கள் மூலமும் அவர்களுடைய பெற்றோர்கள் மூலமும், அவருக்கு நல்ல வருமானம் உள்ள வேலையைப் பெற்றுத்தர மறைவில் இருந்து நடவடிக்கைகளை எடுத்தார்.

வருமானம் குறைவாக இருந்தாலும் தனிப் பயிற்சிப் பள்ளி நடத்துவதில் நல்ல ஆர்வமும் ஈடு பாடும் பெற்றுவிட்ட ஆறுமுகம், தன்னைத் தேடிவந்த உயர்நிலை வேலைகளை ஏற்றுக்கொள்ள மறுத்தார். ஆனால் அவர்கள் ஆறுமுகத்தின் சகோதரிகளிடமும், பெற்றோர்களிடமும் கூறி, ஆறுமுகம் அவ்வேலையை ஏற்றுக்கொள்வதால் அனைவரும் நலம்பெற முடியும் என்று கூறி வற்புறுத்தினர். அவர்களுடைய சகோதரி களும் அவருடைய வருமானம் இப்பொழுதே போத வில்லை என்பதைச் சுட்டிக்காட்டி, அவர் திருமணம் செய்துகொண்டு பிள்ளைக்குட்டிகளைப் பெற்றால் குடும்பம் நடத்தவது எப்படி என்று கேட்டு நச்சரித்தனர். அவர்களுடைய நச்சரிப்பைத் தாங்காத ஆறுமுகம், வேலைக்குப் போனாலும், இரவு நேரங்களில் தன் கல்விப் பணியைத் தொடரலாம் என்ற நம்பிக்கையில் அவ்வேலையை ஏற்றுக்கொண்டார்.  அவருடைய எண் ணப்படி இரவு நேரங்களில் தன் கல்விப் பணியைத் தொடர்ந்தார்.

ஆறுமுகத்தின் இச்செயலை இரகுபதி விஷ்ணுஜிக்குத் தெரியப்படுத்தினார். விஷ்ணுஜியும் எதற்கும் அவசரப் படக் கூடாது என்றும், சிறிது காலம் கழித்து அவருடைய திறமையைப் பாராட்டி அவருக்குப் பதவி உயர்வு அளித்து வேறு ஊருக்கு மாற்ற வேண்டும் என்றும், இப்படியே தொடர்ந்து செய்வதன் மூலம் அவருடைய கல்விப் பணியின் வீச்சைக் குறைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். அப்படிப்பட்ட தொடர் நிகழ்வுகளினால் ஆறுமுகம் இப்பொழுது புதுதில்லிக்கு வந்திருக்கிறார்.

மேற்கண்ட விவரங்களை முழுவதுமாகத் தெரிந்து கொண்ட பாலச்சந்திரன் பெருமூச்சுவிட்டார். பார்ப்பன மேலாதிக்கத்தைக் காப்பாற்றத்தான் பார்ப்பனர்களை மீறி ஆறுமுகத்திற்குப் பதவி உயர்வு அளிக்கப்பட்டு இருக்கிறது என்பதை அறிந்து மெய்சிலிர்த்துப் போனார். சுந்தரம் தந்த தகவல்களுக்காக நன்றி கூறிவிட்டு அவர் புதுதில்லிக்குக் கிளம்பினார். புதுதில்லித் தலைமை அதிகாரியும் முழு விவரத்தைக் கேட்டுப் பெருமூச்சு விட்டார்.    

Pin It