பெரியாருக்கு தமிழ்மொழி, தமிழர் என்றாலே பிடிக்காது என்று சிலர் எழுதுகிறார்கள் அது உண்மையல்ல.

‘தமிழர் சங்கம்’ என்ற அமைப்பை மணி திருநாவுக்கரசு முதலியார் தொடங்கியபோது அதை வரவேற்றுக் குடிஅரசு ஏட்டில் எழுதியதோடு இதே போன்ற அமைப்புகளைத் தமிழகம் முழுவதும் தொடங்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் வைத்தார்.

சென்னையில் சீர்திருத்தத்திற்காகத் தமிழர் சங்கம் என்பதைத் திருத்தி அமைக்கப்பட்டு இருக்கின்றது. இச்சங்கத்தை ஆதியில் தோற்றுவித்தவர் பச்சை யப்பன் கலாசாலைத் தமிழ் பண்டிதர். திரு. மணி திருநாவுக்கரசு முதலியார் ஆவார். இவர் சைவ சமயப் பற்றுடையவர். தமிழ்ப் பாஷை, கலை இலக்கிய, இலக்கணம் ஆகியவைகளில் வல்லவர் எனினும் சமயமும், கலையும், பாஷையும் நாட்டிற்கும் பொது மக்களுக்கும் பயன்படாமல் ஒரு சிறு துறையாகிய அதுவும் ஜாதி மத சமயத் துறையையே முக்கியமாய் பற்றிக் கொண்டிருப்பதால் நாட்டில் அவர்களின் வளர்ச்சி குன்றி வருவதை அறிந்து, அவைகள் உண்மையில் வளர்ச்சி பெறவும் நாட்டின் பொது நலத்திற்கும் பயன் படவும் ஏற்றவாறு செய்ய எண்ணி அச்சங்கத்தை முன்குறிப்பிட்டபடி சமூகச் சீர்திருத்தத் துறைக்குத் திருத்தி அமைத்து அதற்குத் தற்கால தேவைக்கேற்ற படி கொள்கைகளையும் வகுத்து அக்கொள்கைகளைப் பரப்புவதற்கேற்ற நிர்வாக சபையையும் அமைக்கப்பட்டி ருக்கின்றதாக அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகின்றோம்.

சங்கத்தின் முக்கியக் கொள்கைகள் தீண்டாமை ஒழிப்பது, மதுபானத்தை விலக்கச் செய்வது, சுகா தாரத்தை ஏற்படுத்துவது, தமிழ்மொழியை வளர்ப் பது, வாழ்க்கை சுப, அசுப காரியங்களில் போலிச் சடங்குகளை ஒழித்துச் சிக்கன முறையில் நடத்தச் செய்வது, கலப்பு மணம், மறுமணம் ஆகியவைகளை ஆதரிப்பது முதலிய சமூகச் சீர்திருத்தக் காரியங் களைச் செய்வதே முக்கியமாகக் கொண்டது.

நிர்வாகஸ்தர்கள் :

திரு. டாக்டர் எம். மாசிலாமணி முதலியார் போஷ கராகவும், திரு. மணி திருநாவுக்கரசு முதலியார் தலைவராகவும், பண்டிதர் எஸ்.எஸ். ஆனந்தம் உபதலைவராகவும், திருவாளர்கள் ஜகந்நாதப்பிள்ளை, பக்கிரிசாமி செட்டியார் காரியதரிசிகளாகவும் மற்றும் பத்து கனவான்கள் நிர்வாக அங் கத்தினராகவும் தெரிந்தெடுக்கப் பட்டிருக்கின்றனர்.

“சமய”ப் பற்றில் மூழ்கி, “பரலோகத்திற்கும்” “பரலோகக் கடவுளுக்கும்” பாடுபட்ட பெரியார் கள் பிரத்தியட்ச லோகத்திற்கும் பிரத்தியட்ச கடவுள்களுக்கும் பாடுபட முன்வந்ததை நாம் மனதாரப் போற்றி வரவேற்கின் றோம். மற்றும் ஆங்காங்கு சமயத்தின் பேராலும், ஜாதி வகுப்புகளின் பேராலும் அமைக்கப்பட்டிருக்கும் சங்கங்கள் தமிழர் சங்கத்தைப் பின்பற்றி நாட்டிற்குப் பயன்படத்தக்கவண்ணம் திருத்தியமைத்தால் அது மிகவும் போற்றத்தக்கதாகும் என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

“குடிஅரசு - துணைத் தலையங்கம் -7.7.1929”

பெரியார் சுயமரியாதை இயக்கம் தொடங்கிய காலம் முதலே இந்தியைக் கண்டித்து வந்துள்ளார் 1931இல் குடிஅரசு இதழில் கதரும் இந்தியும் என்ற துணைத் தலையங்கத்தில் இந்தியைக் கடுமையாகக் கண்டித்துத் துணைத் தலையங்கம் எழுதியுள்ளார்.

"ஹிந்தியென்பது பார்ப்பன ஆதிக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்ட புரட்டு என்பதைத்தவிர அதில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லை என்பதை அறிவுள்ள எவரும் ஆnக்ஷபிக்கமாட்டார்கள் என்றே கருதுகின் றோம். இந்திய நாட்டில் முப்பத்தைந்தரை கோடி மக்கள் இருந்தாலும் பல பாஷை, பல மதம், பல நாகரீகம், பல நடை, உடை பாவனைகளாக இருந்து வருவதை யாவரும் மறுக்கமுடியாது. அப்படி இருந்தாலும் மக் களுக்குள் மதத்தின் பேராலும் ஜாதியின் பேராலும் பாஷையின் பேராலும், போட்டிகள் நடந்து வருவதும் மறுக்கக் கூடியவை அல்லவென்றே சொல்லுவோம்.

இந்த நிலைமையிலுள்ள சமூகங்களைப் பிரிவினைக்கு ஆதாரமாய் இருப்பதை கண்டுபிடித்து அவைகளை ஒழிக்க முயற்சிக்காமல் கண்மூடித்தன மாய் எல்லோரையும் ஹிந்தி கற்றுக்கொள்ள வேண்டு மென்று அரசியலின் பேரால் நிர்ப்பந்திப்பது எப்படி ஒழுங்காகும் என்று கேட்கின்றோம். ஹிந்தி என்பது அநேகமாக வடமொழியின் சார்போ அல்லது திரிபோ ஆகும். இந்த நாட்டில் ஆரியர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட வடமொழிக்கு உயர்வு கொடுக்கப் பல வழிகளிலும் சூக்ஷி செய்து உலக வாழ்க்கையில் ஒரு ஒடிந்துபோன குண்டூசிக்கும் பயன்படாத பாஷையாகிய அவ்வடமொழிக்கு எவ்வளவு பணம் செலவழிக்கப்பட்டு வருகின்றது என்பது வெகுநாளாகத் தமிழ்மக்கள் கவனித்துவரும் சங்கதியாகும். இப்போது மறைமுக மாய் வடமொழியை ஆதரிக்கவும் ஆரிய நாகரீகம் சமயக் கொள்கை ஆகியவைகளை நிலைநிறுத்தவும் ஹிந்தியை அரசியல் விஷயமாக ஆக்கி அதைக் கதரைப் போல் ஏன் கதரைவிட அதிகமாக ஒவ்வொருவருக் குள்ளும் புகுத்தப் பார்ப்பது எவ்வளவு வஞ்சமான காரியம் என்பதை நமது சோணகிரிகள் அநேகர் இன் னும் உணரவே இல்லை. தமிழ்ப் பண்டிதர்கள் சாம்பலையும் மண்ணையும் குழைத்து சூடுபோட்டது போல் மேலெல்லாம் தீட்டிக்கொண்டு சிவ, சிவ, சிவ என்பதற்கும் ராம, ராம, ராம என்பதற்கும் உதவு வார்களே தவிர மற்றபடி நமது மக்கள் மீது அனா வசியமான ஒரு பாஷை சூக்ஷித்திறத்தில் சுமத்தப்படு கின்றதே என்கின்ற அறிவும், கவலையும் சிறிதும் கிடையாது என்றே சொல்ல வேண்டியிருக்கின்றது. இன்றைய தினம் இந்திய மக்களுக்கு அவரவர்கள் சொந்த பாஷை தவிர வேறுபாஷை தெரிய வேண்டுமானால் அது இங்லீஷ் பாஷை என்றே நாம் தைரியமாய்ச் சொல்லுவோம்.

உலகமே உங்கள் கிராமம்தான் என்று எண்ணிக் கொண்டிருந்த காலம் மலையேறி இப்போது நிலப் பரப்பு, நீர்பரப்பு முழுதும் தெரிந்து 200 கோடி மக்களை யும் சகோதரர்களாகப் பாவித்து வாழவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்போது உலக செலாவணி பாஷை ஏதோ அதை மனிதன் அறியாமல் கபீர்தா° இராமாய ணத்தைப் படிக்க வேண்டிய ஹிந்தி பாஷை எதற்குப் படிக்க வேண்டும் என்று கேட்கின்றோம்.

தமிழ் மக்களுக்குச் சுயமரியாதை என்பது பல துறைகளிலும் வரவேண்டியிருப்பதை ஹிந்தியின் ஆதிக்கம் இனியும் அதிகமாய் வலியுறத்துகின்றது என்றே சொல்லுவோம்.

தமிழ்பாஷையின் பாண்டித்தியம் என்பது இப்போதே அநேகமாய் பார்ப்பனர்களிடமேயிருக்கின்றது. தமிழ் பாஷையின் சங்கத் தலைவர்கள் பார்ப்பனர் களாய் இருக்கின்றார்கள் என்பதோடு இந்தப் பார்ப்ப னர்கள் தமிழர்களை ஹிந்தி படிக்கக் கட்டாயப்படுத்து கின்றார்கள் என்றால் தமிழ் பாஷைக்காரர்களின் சுய மரியாதை எவ்வளவு என்பதை தமிழர்களே உணர் வார்களாக.

அரசியல் தத்துவத்தின் பயனாய் தமிழ்நாட்டுப் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் பணத்தில் ஹிந்தி கற்று இந்தியத் தலைவர்களாகிய வடநாட்டுத் தலை வர்கள் இடமெல்லாம் பார்ப்பனர்களே போய் காரிய தரிசிகளாய் அமர்ந்து அவர்களே தென்னாட்டுப் பிரதி நிதிகளாகி அவர்களது ஆதிக்கத்திற்கே இந்திய அரசிய லைத் திருப்பிப் பயன்படுத்திக் கொண்டு வருகின்றார்கள்.

ஆகவே அரசியல் துறையில் இருக்கும் பார்ப்பன ரல்லாதாருக்கும் அறிவு இருந்தாலும் அதை பார்ப் பனர்களுக்குத் தக்கவிலைக்கு விற்றுவிட்டார்கள் என் றாலும் அரசியலில் இல்லாத பார்ப்பனரல்லாதார்கள் அறிவையாவது தக்கவழியில் உபயோகித்து தகுந்த ஏற்பாடு செய்ய வேண்டாமா என்று கேட்கின்றோம்.

“குடிஅரசு - துணைத் தலையங்கம், 10.5.1931”

இந்தியைக் கண்டித்து பெரியார் அவர்கள் 15.7.1931 இல் மாயவரத்திலும், 16.7.1931 பட்டுக்கோட்டையிலும் நடைபெற்ற சுயமரியாதை இயக்க கூட்டங்களில் பேசி யுள்ளார். அப்பேச்சின் சுருக்கம் இந்திப் புரட்டு என்ற தலைப்பில் குடிஅரசு ஏட்டில் வெளியிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் சென்னை மாகாணத்திற்குச் சென்னைப் பார்ப்பனர்கள் வடநாட்டுத் தலைவர்கள் என்பவர்களை ஹிந்திப் பிரசாரம் என்னும் பேரால் பார்ப்பனப் பிரசாரம் செய்ய அழைத்துவரப் போகின்றதாகத் தெரிய வரு கின்றது. இந்த வழியில் பார்ப்பனப் பிரசாரம் செய்வ தோடு மாத்திரமல்லாமல் பார்ப்பனரல்லாத மூடர்களிட மிருந்து சுமார் ஒரு லக்ஷம் ரூபாயாவது கொள்ளை அடிக்கக் கருதியிருக்கின்றார்கள் என்பதாகத் தெரிய வருகின்றது.

கதரின் பேரால் அடித்த கொள்ளையாகிய ஐந்து லக்ஷம் ரூபாய் இன்னும் ஜீரணம் ஆகாமல்  அப்படியே கல்லுப் போல் பார்ப்பார்கள் வயிற்றில் கிடக்க, சென்ற வருடக் காங்கிரசின் பேரால் கொள்ளை அடித்த சுமார் 20, 30 ஆயிரம் ரூபாயும் அப்படியே கிடக்க இப்போது இன்னும் ஒரு லக்ஷம் ரூபாய்க்குத் திட்டம் போட்டு சில பார்ப்பனர்வெளிக்கிளம்பியிருப்பது பார்ப்பனர்களின் சாமர்த்தியமா அல்லது பார்ப்பனரல்லாதார்களின் முட்டாள் தனமா என்பது நமக்கு பூரணமாய் விளங்கவில்லை யானாலும் ஒருவாறு இது பார்ப்பனரல்லாதார்களின் முட்டாள்தனமான இளிச்சவாய்த்தன்மை என்றே சொல்ல வேண்டும். பார்ப்பனர்கள் வந்து எதற்காகப் பணம் வேண்டுமென்று கேட்டாலும் நம்மவர்கள் கொடுக்கத் தயாராகியிருக்கின்றார்கள். வருணாசிரம மகாநாடு நடத்த பார்ப்பனர்களுக்குக் பணம் கொடுக் கும் பார்ப்பனரல்லாதவர்கள் இந்திக்கு பணம் கொடுப்பது ஒரு அதிசயமல்ல.

எனவே, பணம் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் இந்தியினுடையவும் இந்தி பிரச்சாரத்தினுடையவும் புரட்டையாவது பொது ஜனங்கள் அறியட்டுமென்றே இதை எழுதுகின்றோம்.

முதலாவது இந்தி பாஷை என்றால் என்ன? அதற்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் என்ன சம்மந்தம்? அதைப் படித்ததினால் தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்படும் பயன் என்ன? என்பது  போன்றவைகளை முதலில் கவனிப்போம். பிறகு இந்தி பாஷை என்பதை அகில இந்தியப் பாஷையாகக் கருதவேண்டும் என்பது பற்றிப் பின்னால் யோசிப்போம்.

இந்தி பாஷை படித்த தமிழ் மக்களுக்கு அதனால் ஏற்படும் பயன் என்ன? இதுவரை தமிழ்நாட்டில் காங் கிர° பணத்திலிருந்தும் மற்றும் பொது மக்களிட மிருந்தும் இந்திக்காகச் செலவு செய்யப்பட்ட பணத்தில் அவர்களது குறைகளைத்தான் உலகக் குறைகளாகக் கருதுகின்றார். ஆதலால் திரு. காந்தியவர்களின் திட்ட மெல்லாம் அவ்விருவருடைய அதாவது பணக்காரன் பார்ப்பான் ஆகிய இவர்களுடைய குறைகளைத் தீர்ப்ப தாகத்தான் இருக்குமே ஒழிய ஏழைகள், தாழ்த்தப் பட்டவர்கள் கஷ்டங்களையும், குறைகளையும் நீக்கு வதாக இருக்க முடியாது. ஏழைகள் பிழைக்கவும், தாழ்த்தப்பட்டவர்கள் உயரவும் அவருக்கு இரண்டு வழிதான் தெரியும். ஒன்று இராட்டினம் சுற்றுவது இரண்டாவது “தீண்டாமை பாராட்டுவது பாவம்” என்று வாயால் சொல்லுவது. இந்த இரண்டும்கூட மில்லுக் காரனையும், பார்ப்பானையும் கண்ட மாத்திரத்தில் தத்துவார்த்தம் சொல்ல வேண்டி வந்துவிடும். ஆகவே சகோதரர்களே! எனக்குக் கொடுத்த விஷயத்தை தலையாய்க் கொண்டு என் மனதில் உண்மையென்று பட்டதை நான் ஒளிக்காமல் சொல்லிவிட்டேன். இவை அவ்வளவையும் கலப்பற்ற உண்மையென்றோ முடிந்த முடிவு என்றோ கருதி கண் மூடித்தனமாய் ஒப்புக் கொள்ளாதீர்கள். நான் இந்தப்படி சொல்லுவதற்கு எனக்குப் பல காரணங்கள் இருக்கலாம். சுயநலமிருக் கலாம். பொறாமை இருக்கலாம். வெறுப்பு இருக்கலாம். ஆகையால் நீங்கள் இவற்றை ஒவ்வொன்றையும் வைத்து உங்கள் சொந்தப் பகுத்தறிவை நடுநிலை தன்மையையும் கொண்டு ஆராய்ந்து பார்த்து, பிறகு உங்களுக்குட்பட்டபடி முடீவு செய்து கொள்ளுங்கள்.

“குடிஅரசு - சொற்பொழிவு, 26.7.1931”

1929இல் செங்கல்பட்டில் நடைபெற்ற முதல் சுயமரியாதை மாநாட்டிலேயே தாய்மொழிவழி கல்வி, அரசு மொழி ஆங்கில மொழி ஆகியவற்றுக்கு மட்டுமே அரசின் பணம் செலவிடப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

14ஆவது தீர்மானம் கல்வி விஷயத்தில் தாய் பாஷை, அரசாங்க பாஷை ஆகிய இரண்டைத் தவிர மற்ற கல்விக்குப் பொதுப் பணத்தை செலவிடக்கூடாது. அதுவும், ஆரம்பக் கல்விக்கு மாத்திரம் பொது நிதியை செலவழித்துக் கட்டாயமாய்க் கற்பிக்க வேண்டும். உயர்தரக் கல்விக்குப் பொது நிதி சிறிதும் செலவழிக்கக் கூடாது. சர்க்கார் காரியத்திற்குத் தேவை இருந்தால் வகுப்புப் பிரிவுப்படி மாணாக்கர்களைத் தெரிந்தெடுத்துப் படிப்பிக்க வேண்டுமென்று தீர்மானிக்கப்படுகின்றது.

7.6.1931இல் நன்னிலத்தில் நடைபெற்ற சுயமரி யாதை இயக்க, தாலுக்கா மாநாட்டில் இந்தி மொழி யைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நன்னிலம் மாநாட்டுத் தீர்மானத்தின் ஒரு பகுதியை இங்கே காணலாம்.

இந்நாட்டில் பார்ப்பனீயம் தாண்டவமாடத் தொடங்கிய காலம் முதல் ஏதாவது ஒரு வகையில் புராணங்களை யும், பார்ப்பனீயங்களையும் பரப்பும் நோக்கத்துட னேயே எல்லாப் பாஷைகளும் ஆதிக்கம் பெற்று வந்திருக்கின்றன. உலக வழக்கில் ஒரு சின்னக்காசுக் கும் பயன்படாத சம°கிருதப் பாஷைக்கு இன்றைய தினம் இந்நாட்டில் இருக்கும் ஆதீக்கமும்,  அதற்கெ னவே பல ஏற்பாடும், செலவும், மெனக்கேடும் பார்ப் பனீயத்தைப் பரப்பவே செய்யப்பட்டு வருகின்றன. சமஸ்கிருதக் காலேஜ், சமஸ்கிருதப் பாடசாலை மற்றும் சமஸ்கிருத வளர்ச்சிக்கு ஏற்ற முயற்சிகள் முழுவதும் சம°கிருதம் வாழ்க்கைக்கு சிறிது பாகமும் வேண்டிய அவசியமில்லாத மக்களின் செலவிலேயே நடை பெற்று வருகின்றன. இது இந்த நாட்டு மக்களின் சுய மரியாதையற்ற தன்மைக்கு ஒரு பெரும் உதாரண மாகும். இதைத் தட்டிப் பேச இன்றைய சட்டசபை, மந்திரிசபை ஆகியவைகளில் ஒரு சிறு மூச்சுவிடவும் ஆள்கள் இல்லை. போதாக்குறைக்கு இன்று ஹிந்தி பாஷை ஒன்று புதிதாக முளைத்து இந்திய மக்கள் மீது ஆதிக்கம் செலுத்த முயற்சிகள் வெகு பலமாய் செய்யப் பட்டு வருகின்றது. இது இந்நாட்டு மக்களுக்குப் பாஷை விஷயத்திலும் சுயமரியாதையில்லையென்பதற்கு ஒரு உதாரணமாகும்.

தமிழ்நாட்டுக்கு ஹிந்தி என்ன அவசியத்திற்கு என்று கேட்க ஒரு தேசபக்தராவது இன்று தேசீய வாழ்வில் இல்லை. தேச பக்த குழாம் பெரிதும் கூலிக்கு மாரடிப்பவர்களாலேயே நிரப்பட்டுவிட்டதால் பார்ப்பனத் தலைவர்களுக்கும் பார்ப்பனர்களால் பிடித்து வைக் கப்பட்ட தலைவர்களுக்கும் அடிமைகளாய் இருந்து அவர்கள் உபதேசித்த தேசீய மந்திரத்தை உருப்போட்டு ஜெபித்து வயிறு வளர்ப்பதைவிட வேறு யோக்கியதை இல்லாமல் போய்விட்டது. 

“குடிஅரசு - சொற்பாழிவு, 14.6.1931”

பெரியார் 1938இல் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் திடீரென பாதியில் வந்துசேர்ந்து கொண்டார் என்று தமிழ்த்தேசியம் பேசுவோர் பொய்யான குற்றச்சாட்டுகளைப் பெரியார் மீது சுமத்துவதால் மேலேயுள்ள செய்திகள் எடுத்துக்காட்டப்படுகின்றன.

-  தொடரும்....

Pin It