விடுதலை அரசியல் நீயே - எம்
ஒவ்வொரு வீட்டுக்கும் நீதந்தை தாயே!
கெடுதலை யாய்இங்குச் சாதி - இந்தக்
கேட்டிலிருந் தேமக்கள் மீள்வதுஎத் தேதி?
குடியர சானது நாடு - நாங்கள்
கொடிஏற்றும் உரிமைக்கும் வந்ததே கேடு!
அட, தனி யேசுடு காடு - எவன்
ஆண்டாலும் மாறாது இந்நிலைப்பாடு!
கோயில் குளக்கரை வீதி - முற்றும்
கொடுநாக மாய்ச்சாதி தலைவிரித் தாடும்
வாயில் மலத்தைத் திணிக்கும் - கூர்
வாள்போலத் தமிழரை வெட்டிப் பிளக்கும்!
தமிழ்தமிழ் என்பத னாலோ - வீரத்
தமிழனென்றே மீசை முறுக்குவ தாலோ
உமியளவும் பயன் உண்டா? - நெஞ்சில்
உட்சாதிச் சாக்கடை தூர்ந்ததும் உண்டா?
பரமக் குடி, மேல வளவு - எங்கும்
பார்த்தோமே என்னதான் விளைவு?
வரிசையாய்ச் சேரிகள் எரியும் - அரசின்
வன்கொடுமைச் சட்டம் யார்க்கிங்கு உதவும்?
வாக்கு அரசிய லுக்கு - இங்கு
வாழ்க்கை பட்டுப்போன தலைவர்கள் உண்டு
நாக்கு வணிகமே நடக்கும் - ஆண்டை
நாட்டாமை பேரங்கள் பேசி முடிக்கும்!
கட்சித் தலைமையை மீறி - எந்தக்
கசுமாள மாவது பேசிய துண்டா?
உட்கார வைத்தது யாராம் - அண்ணல்
உள்ஒதுக் கீடின்றேல் நீமட்டை நாராம்!
எத்துணைக் காலங்கள் ஆகும் - இந்த
எதிரிகள் கொடுந்தீயில் எம்பிணம் வேகும்?
புத்தனைக் காட்டிய அண்ணலே - ஒரு
புத்தெழுச்சி மீண்டும் உன்னால்தான் அண்ணலே!
Pin It