மரங்களைச் சுமந்து நிற்கும்
 மழைமுகில் தவழ்ந்து ஓடும்
சரமலர் வாசத் தோடு
 சந்தனம் கமழ்ந்து வீசும்
விரல்களை விரித்த காந்தள்
 விளக்கென ஒளியைக் கூட்டும்
அரவென நெளிந்த ஓடை
 அருவியாய்த் தரையில் வீழும்!
கிளையதன் மேலி ருந்து
 கிளியொடு குயில்கள் பாடும்
வளைமுது கோடு மந்தி
 வான்கனிக் கடுவன் தேடும்
விளைமணி மலையில் ஊறி
 வியத்தகு ஓடை ஆகித்
திளைத்திடும் அருவி யேதான்
 தீம்பொழில் வயல்கள் சேரும்!
மலையதன் மீது எங்கோ
 மறைவினில் தோன்றி மெல்ல
அலையெது மின்றிச் சுற்றி
 அத்தனை மருந்தும் சேர்த்துத்
தலையது குளிர ஊற்றித்
 தளிருடல் நோயைத் தீர்க்கும்
விலையிலா அருவிப் பெண்ணே
 வியந்துனை வாழ்த்து கின்றேன்!
Pin It