திரிபுராவில் லெனின் சிலை உடைப்பை நியாயப்படுத்தியும், அடுத்து தமிழ்நாட்டில் ஜாதி வெறியர் ஈ.வெ.ரா. சிலை உடைக்கப்படும் என்றும், பா.ஜ.க.வின் தேசியச் செயலாளராக உள்ள எச். ராஜாவின் முகநூல் பதிவு தமிழகத்தையே பெரியாருக்கு ஆதரவாக சிலிர்த்தெழச் செய்துவிட்டது. ‘அப்படி ஒரு பதிவை நான் போடவில்லை; என்னுடைய வலைதளப் பொறுப்பை ஏற்றுள்ள ஊழியர் (அட்மின்) தவறாகப் பதிவேற்றி விட்டார்.’ என்று பதுங்கினார் எச். ராஜா. அவர் கக்கிய நஞ்சை அவரையே திரும்ப விழுங்க வைத்தது இந்த எழுச்சி. பிரதமர் மோடியும் பா.ஜ.க. தலைவர் அமீத்ஷாவும் மத்திய அமைச்சர் பொன் இராதா கிருஷ்ணனும், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசையும் எச்.ராஜா வின் கருத்தை ஏற்க முடியாது என்று அறிவிக்கும் நிலையை உருவாக்கியது - தமிழ்நாட்டின் சிலிர்ப்பு.

பெரியாரை அவ்வப்போது விமர்சனத்துக்குள்ளாக்கி வந்த சில தமிழ்த் தேசிய அமைப்புகளும் கலைத் துறையினரும் தங்களின் உள்ளங்களில் ஆழமாகப் பதிந்து நின்ற ‘பெரியார்’ மீதான உணர்வுகளை வெளிப்படுத்தினர். கேரள முதல்வர் பினராயி விஜயனும், கருநாடக முதல்வர் சித்தராமையாவும் எழுச்சியில் தங்களை இணைத்துக் கொண்டு கண்டனங்களை வெளி யிட்டனர்.

1973ஆம் ஆண்டு அதாவது 45 ஆண்டுகளுக்குமுன் தனது ‘சுற்றுப் பயணத்தை’ முடித்துக் கொண்டு தமிழர்களிடமிருந்து விடைபெற்றார் பெரியார். ஆனால் தமிழர்களின் இதயங்களில் அவர் பயணித்துக் கொண்டே இருப்பதையும், குறிப்பாக பெரியாரையே பார்த்திடாத இளைய தலைமுறை பெரியார் சிந்தனைகளை அறிந்தும் படித்தும் அந்த உணர்வில் ஊன்றி நிற்பதைiயும் சமூக வலைதளங்கள் வழியாக பார்த்தபோது மெய்சிலிர்த்துப் போனது.

சமூகத்தின் விடுதலைக்கும் உரிமைக்குமான கொள்கைகளும் கோட்பாடுகளும் நேர்மையான ஒரு தலைவரால் விதைக்கப்படும்போது அதன் சமூகத் தாக்கம் தலைமுறைகளைக் கடந்தும் உயிர்த் துடிப்போடு இயங்கிக் கொண்டேயிருக்கும் என்பதை தமிழ்மண் நிரூபித்துக் காட்டியது.

“சுயமரியாதை இயக்கமானது பரந்த கொள்கைகளை உடையது. அது ஒருவரால் உண்டாக்கப் பட்டாலும் பரந்த மக்களிடையே பரவி விட்டபடியினால், அசைக்க முடியாத நிலைமைக்கு வந்துவிட்டது. மக்களே அதைக் கவனித்துக் கொள்வார்கள்” என்று 1930ஆம் ஆண்டிலேயே பெரியார் எழுதியது - கல்வெட்டு சாசனமாகவே பதிந்து நிற்கிறது.

பெரியார் ஊட்டிய கொள்கை உணர்வையும் உணர்ச்சியையும் எந்த அளவில் தமிழர்கள் பதிய வைத்திருக்கிறார்கள் என்பதை சோதித்துப் பார்க்க, எச்.ராஜாக்களின் ‘வசை’கள் பயன்பட்டு வருகின்றன என்ற நோக்கில் எச்.ராஜாக்களை நாம் பாராட்டலாம். பார்ப்பன இறுமாப்பு வெளிச்சத்துக்கு வரும்போது பெரியாரின் கைத்தடியை தமிழர்கள் தங்கள் கரங்களில் ஏந்திக் கொண்டு களம் காண வருவார்கள் என்பதை பார்ப்பனியம் இனிமேலாவது உணர வேண்டும்!

123 நாடுகளில் பெரியார் சிலை குறித்து தேடல்கள்

உலக அளவில் சிலை என்று தேடினால், இணையத் தேடலில் இடம்பெறும் முதன்மை வார்த்தையாகப் ‘பெரியார் சிலை' உள்ளது. 6 கண்டங்கள், 123 நாடுகளில் சிலை குறித்த தேடல் கடந்த 4 நாள்களில் அதிகம் இடம் பிடித்துள்ளது. தேடல் அதிகம் உள்ள இடங்கள் அனைத்துமே தமிழர்கள் அதிகமாக வாழும் பகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது. உலக அளவில் சிலை குறித்து அதிகம் தேடிய நாடுகளாகச் சீனா, நேபாளம், இரான் ஆகிய நாடுகள் உள்ளன.

சிலை குறித்த தேடலில், திரிபுரா லெனின் சிலை, பெரியார் சிலை, யார் லெனின் போன்றவை உலக அளவில் தேடப்பட்டுள்ளன. இந்திய அளவிலான தேடலிலும் இதே முடிவுகள்தான் பிரதிபலித்தன. இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் பெரியார் குறித்துத் தேடியுள்ளன.

Pin It