படிநிலைச் சமூக அமைப்பாகக் கட்டப்பட்டுள்ள இந்தியச் சமூகத்தில் உடல் உழைப்பு சார்ந்த மக்கள் இழிமக்களாகவும், உடைமை அற்றவர்களாகவும் ஆக்கப்பட்டு அந்நிலையிலிருந்து மீளாதவாறு பார்ப் பனிய மதமும் அதன் வழி நடைபெற்றுவரும் சன நாயகம் என்ற பெயரால் உள்ள அரசுகளும் ஆவன வெல்லாம் செய்து வருகின்றன. அமைப்பு சார்ந்த அரசுப் பணியானாலும், தனியார்ப் பணியானாலும் இது உள்ளீடாக இழையோடுவதின் விழைவால், உடல் உழைப்புக்கு ஈன ஊதியம் மட்டுமே அளிக்கப் பட்டு வருகின்றது. பின் அமைப்பு சாராத் தொழிலாளி களின் நிலையைப் பற்றிச் சொல்ல வேண்டுமா? கொடுமையிலும் கொடுமை. காட்டாக ஒரு நிகழ்வு.

2013இல் ஒரு நாள் மாலை பொதுக்கூட்டம். கட்சித் தோழர்கள் கூட்டத்திற்கான பணிகளைப் பகிர்ந்து கொண்டு மும்முரமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த னர். இடையில் நாங்கள் இரவு உணவுக்கு அருகி லுள்ள ஒரு சின்ன உணவகத்தில் ஏற்பாடு செய்தோம். 15-20 தோழர்களுக்கு மொத்தம் 80 இட்லி மட்டும் போதும் என்று கூறினோம். அங்கிருந்த பெண்மணி இட்லி ஒன்றுக்கு ரூ.3/- எனவும், மொத்தம் ரூ.240/- ஆகும் என்றார். தோழர் முன்பணமாக ரூ.200/-ஐக் கொடுத்தார். மீதி ரூ.40/-ஐயும் எதிர்பார்த்த அவரிடம் இறுதியில் தருகிறோம் என்றோம். இதை ஏன் முன்பே எதிர்பார்க்கின்றார் என எண்ணிக் கொண்டேன்.

இரவு 9.30-9.45 அளவில் கூட்டம் நிறைவுற்று உணவுக்குச் சென்றோம். இட்லி அளவு சற்று பெரி தாகவே இருந்தது. சூடாகவும் மென்மையாகவும் இருந்தது. இணையாகச் சாம்பார், தேங்காய்ச் சட்டினி இரண்டுமே மிகவும் எளிமையாகவும், சுவை மிகுந்த தாகவும் இருந்தன. அனைவரும் இரவு உணவை மகிழ்ச்சியாக முடித்தோம். பாக்கிப் பணம் ரூ.40/-ஐயும் அந்தப் பெண்மணியிடம் கொடுத்துவிட்டு நன்றி தெரிவித்துவிட்டு அறைக்கு நடந்தோம். நடையோடு என் மனம் இரவு உணவைப் பற்றியும் உணவளித்த பெண்களைப் பற்றியும் அவர்கள் அதற்காகப் பெற்றுக்கொண்ட தொகை பற்றியும் அசைபோட்டது.

குறிப்பாக அவர்கள் பரிவுடன் பரிமாறிய பாங்கு, அவர்கள் அளித்த உணவின் சுவை மனத்தில் நிரம்பி மகிழ்ச்சி அளித்தது. ஆனால் அவர்களுக்கு அதற்காகக் கொடுத்த (விலை) தொகை அவர்கள் பயன்படுத்திய பொருள்களுக்கும் அவர்களின் உடல் உழைப்புக்கும் சற்றும் ஈடாக அமையுமா? என எண்ணிக் கணக்கிட்ட போது மனம் கனத்தது; நெருடலாக இருந்தது.

அந்த இரவுச் சிற்றுண்டியை அளிக்க எவ்வளவு பணம் செலவு செய்திருப்பார் என முதலில் கணக்கிட லாமே.

பொருள் அளவு விலை (ரூ)
இட்லி அரிசி 1 ½ கி. 45
உளுத்தம்பருப்பு 1 ½ கி. 40
தேங்காய் இரண்டு 20
துவரம் பருப்பு ½ கி 40
தக்காளி, காய்கறி   20

உணவு எண்ணெய்,

எரிபொருள்

  20
உணவக வசதிகள், குடிதண்ணீர்,   20
சாப்பாட்டு இலை வகையில்   20
மொத்தம்   205 @ 200

இந்தச் சமையலுக்கு அவர்கள் இருவரும் தந்த உழைப்பு நேரம் :

 

வகை                             நேரம் (மணி)
இட்லிக்கு அரிசி பருப்பு அரவை                              ½ -1
இட்லியை அவிக்க, சாம்பார், சட்னி செய்ய              1 – 1 ¼
இருவரும் சிற்றுண்டி பரிமாற                                1 – 1 ¼
உணவு செய்ய பயன்படுத்திய பண்டம், பாத்திரங்களைச் துலக்கிச் சுத்தப்படுத்த     

½ - ¾

மொத்தம்                    4 மணிநேரம்

இருவரும் ஈந்த உழைப்பின் அளவு மிகவும் குறைவாகவே கணக்கிடப்பட்டுள்ளது. இதுபோன்றே அவர்கள் செய்த செலவும் மிகவும் குறைவாகவே மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் அளித்த உழைப்புக் கான ஊதியத்தைக் (கூலியை) கீழே கணக்கிடுவோம்.

இருவரின் நான்கு மணிநேர உழைப்பை (8 மணிநேர) ஒரு நாள் மனித உழைப்பாகக் கணக்கிட லாம். இவர்கள் இந்தச் சிற்றுண்டிக்குப் பெற்றுக் கொண்ட தொகை ரூ.240/-. பொருள்கள் வாங்கிய வகையில் அவர்கள் செய்த செலவு ரூ.200/- செலவு போக அவர்களுக்குக் கிடைத்த தொகை (ரூ.240-ரூ.200 = 40) ரூபாய் 40. ஆக ஒரு நாள் மனித உழைப்பிற்குத் தரப்பட்ட/பெறப்பட்ட ஊதியம் (கூலி) ரூ.40/- மட்டுமே. ஒருவருக்கு ரூ.20/- மட்டுமே கூலியாகக் கிடைத்திருக்கிறது. இதையும் மிஞ்சி அவர்கள் இருவரும் இரவுச் சிற்றுண்டியை முடித் திருப்பர். அதையும் விலையிட்டுக் கணக்கிற் கொண் டால் ஒருவருக்கு ரூ.10/- எனக் கொள்ளலாம். மொத்த மாக ஒருவருக்குக் கூலி ரூ.30/- கிட்டியது எனக் கருதலாம்.

ஒரு பெண்ணின் நாலுமணிநேரச் சமையலுக் கான உடல் உழைப்புக்குக் கிட்டிய கூலி ரூபாய் 30 மட்டுமே. இந்த உடல் உழைப்பைக் குடும்பப் பெண் கள் மேற்கொள்வதற்கு இச்சமூகம் எவ்வித மதிப்பும் அளிப்பதில்லை என்ற பின்னணியில்தான் இவர்கள் ஆளுக்குப் பெற்ற ரூ.30/- கூலியை அவர்களின் உழைப்புக்குத் தரப்பட்ட மதிப்பாகக் கொள்ள வேண் டும்.

இதுபோன்றுதான் இந்தியச் சூழலில் இந்தியப் பெண் உழைப்பாளிகள் பல்வேறு பணிகளுக்காகத் தங்கள் உழைப்பை ஈந்து, அதற்கு ஈன அளவிலே கூலியாகப் பெற்று வருகின்றனர். இதைக் கொண்டே அவர்கள் நிறைவு பெற்றவர்களாகக் கருதப்படுகின்ற சமூக எதிர்பார்ப்பு வன்கொடுமையானது என்று யாராலும் எந்த நிலையிலும் வழியிலும் சற்றேனும் உணரப்படுவதற்கான எவ்வித அறிகுறியும் தெரிய வில்லை என்பதுதான் உழைக்கும் பெண் மக்களுக்கு இழைக்கப்படும் பெரும் அவமானம். இதே தன்மை யில் தான் உழவுத்தொழில், நெசவுத்தொழில், துப்புர வுத் தொழில் என இன்றியமையாப் பணிகளில் உடல் உழைப்பைத் தருபவர்கள் இருக்கின்றனர்.

இந்நாட்டில் அனைத்திந்தியப் பணியிலுள்ளோர், மற்ற அரசுப் பணியில், நீதிமன்றப் பணியில், தனி யார் நிறுவன அலுவலர் நிலைப் பணிகளில் உள் ளோரின் ஊதியம் ஒரு நாளுக்கு ரூ.3000/-, 4000/-க்கும் மேல் எனத் திங்களுக்குச் சம்பளம் ரூபாய் ஓர் இலக்கத்திற்கும் மேலே.

இரண்டிற்கும் இடையிலான ஒப்பீடு நெஞ்சை உலுக்குவதாக உள்ளது. பின் எப்படி 100 மடங்கு வருவாய் வேறுபாட்டு இடைவெளியை நிரப்புவது; நீக்குவது. ருசியாவின் சார் காலத்துக் கொடுமையிலும் கொடுமை இது. தீர்வு, உழைக்கும் மக்கள் கைகளில் மட்டுமே உள்ளது என உணர்ந்து ஒன்றுபடுவோம்; ஒருங்கிணை வோம்; களம் காண்போம்; செயல்படுவோம்; உருவாக்கு வோம் சமஉரிமை சமஉடைமைச் சமூகத்தை!

Pin It