(22.07.1957-07.05.2018) சிந்தனையாளன் இதழின் வாழ்நாள் உறுப்பினரும், தமிழ் ஆர்வலரும், பகுத்தறிவுவாதியும், தில்லிப் பல்கலைக்கழக அரசியல் அறிவியல்துறைப் பேராசிரியருமான டாக்டர்.ச.ப. தங்கவேலு அவர்கள் 07.05.2018 திங்களன்று காலை 7.30 மணியளவில் தமது 61-வது அகவையில் இயற்கை எய்தினார். அன்னாரது பூத உடல் அவர் பணியாற்றிய ஸ்ரீ வெங் கடேஸ்வரா கல்லூரி வளாகத்திலுள்ள அவரது குடியிருப்பில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அவருடன் பணியாற்றிய பேராசிரியர்கள், நண்பர்கள், மாணவர்கள் மற்றும் கல்லூரி முதல்வர் ஆகியோர் திரளாக வந்து அன்னாரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அவரது சொந்த ஊரான கோவை சிங்கா நல்லூர் கொண்டு செல்லப்பட்டு 08.05.2018 செவ்வாய் அன்று மதியம் 1.30 மணியளவில் தகனம் செய்யப் பட்டது. உடன்பிறந்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள், பகுத்தறிவுவாதிகள்,தமிழ் எழுத்தாளர்கள் பலர் கலந்து கொண்டு அன்னாருக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.
உடல்நலக் குறைவு காரணமாகத் திரு. ஆனைமுத்து அய்யாஅவர்கள் சென்னையிலிருந்து கோவை வரைப் பிரயாணம் செய்ய முடியாத நிலையில் அவரது சார்பில் பலர்கோவை சென்று இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர். மறுநாள் அதாவது 08.05.2018 செவ்வாய் அன்று பேராசிரியர் தங்கவேலு பணியாற்றிய ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லூரியில் மதியம் 12.30 மணி யளவில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இதில், கால்லூரி முதல்வர் (பொறுப்பு) டாக்டர். ஆர்.பி. சிங் உட்படப் பல பேராசிரியர்கள், நண்பர்கள் மற்றும் மாண வர்கள் பலர் இரங்கல் உரை ஆற்றினர்.
09.05.2018 புதன் அன்று புது தில்லி லோதி சாலை யிலுள்ள இந்திய சமூக நிறுவனத்தில் நடைபெற்ற பெரியார் அம்பேத்கர் சேவை மைய மே மாதக் கூட்டத்திலும் நினை வேந்தல் கூட்டம் நடைபெற்றது. திரு. பி.ராமமூர்த்தி, திரு. ச. சீனிவாசன் ஆகியோர் இரங்கல் உரை நிகழ்த்திய பின்னர், ஒருநிமிட மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
பேராசிரியர் தங்கவேலுவைப் பற்றிய சில நினைவுகள்....
வாழ்க்கைப் பயணம் : எதிர்நீச்சல் கோயமுத்தூர் மாவட்டம் சவுரிபாளையம் பழனிச்சாமி-பாப்பம்மாள் தம்பதியினருக்கு 22.07.1957-இல் மூத்த மகனாகத் தங்கவேலு பிறந்தார். பள்ளி மற்றும் கல்லூரிக் கல்வி யைக் கோவையிலும், முதுகலைப் படிப்பை சென்னை மாநிலக் கல்லூரியிலும் பயின்றார். உயர்கல்வியைப் புது தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்: (1966-1979) என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.
17 ஜூலை, 1995 முதல் புது தில்லியிலுள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லூரி யில் அரசியல் அறிவியல் துறையில் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார். இருபத்து மூன்று ஆண்டுகள் கல்விப் பணி ஆற்றியிருக்கின்ற டாக்டர் தங்கவேலு, இரண்டுமுறை துறைத் தலைவர் பொறுப்பையும் செவ்வனே செய்து தனது பங்களிப்பை நிறைவேற்றிருக் கிறார். ஆசிரியப் பணியில் சேர்வதற்கு முன் சில காலம் பேரா. பாரிக் அவர்களின் ஆராய்ச்சித் திட்ட உதவி யாளராகப் பணியாற்றினார். ஆராய்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக நேபாள நாட்டிற்குச் சென்று வந்த அனுபவமும் பெற்றவர். முனைவர் பட்ட ஆய்வுக்கு முன்னும் பின்னும் காலை முதல் மாலை வரை புது தில்லியிலுள்ள தான் அவரது புகலிடம். அர்ப்பணிப்புடனான இந்த முழுநேர நூலக வாசமே அவருக்குக் கல்லூரியில் நிரந்தர வேலை கிடைக்க உதவியாக அமைந்தது என்றால் அது மிகை யாகாது.
டாக்டர் தங்கவேலு அவர்களின் கல்வித் தகுதியையும் புலமையையும் அங்கீகரித்து நிரந்தர வேலை வாய்ப்பு வழங்கிய ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லூரி ஆட்சிக் குழுவிற்கும், அதற்கு உறுதுணையாக இருந்த அப்போ தைய கல்லூரி முதல்வர் டாக்டர் ஏ. சங்கர ரெட்டி அவர் களுக்கும் மனம் நிறைந்த நன்றிகள், பாராட்டுக்கள்.
நூலகமே கதி என்று கிடந்த தங்கவேலுவை அடை யாளம் கண்டு அழைத்துவந்து கல்லூரி முதல்வருக்கு அறிமுகப்படுத்தி வேலைவாய்ப்புக் கிடைக்க சிபாரிசு செய்து உதவிய அப்போதைய துறைத்தலைவர் டாக்டர் சி. சிவசங்கர ரெட்டி அவர்கள் என்றும் நன்றிக்குரியவர். பதின்ம வயதில் பேராசிரியர் தங்கவேலு அவர்கள் போலியோ தாக்கத்திற்கு ஆட்பட்ட நிலையில் அவரது வாழ்க்கைப் பயணம் பெரும் சவாலானதாக மாறியது. தான் ஒரு மாற்றுத் திறனாளியாகிவிட்டதை ஒரு பெரிய குறையாகக் கருதாமல் மன உறுதியுடன் சென்னைக்கும் பின்னர் பல்லாயிரம் கிலோமீட்டர் தூரம் கடந்து தில்லி வரைப் பிரயாணித்து முயன்று படித்து முதுகலை மற்றும் முனைவர் பட்டங்கள் பெற்று வெற்றியும் கண்டார். சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த ஒருவரின் மிகப்பெரிய சாதனை என்றே இதனைக் கூறலாம். சுயநலம் கருதாமல் உடன்பிறந்தவர்களின் பொதுநலன் கருதியும் அவர்களது எதிர்கால வாழ்க்கைத்தர மேம்பாடு கருதியும் தொலைநோக்குச் சிந்தனைகளுடனும் திருமணம் எனும் பந்தத்திற்குள் தங்கவேலு தன்னை இணைத்துக்கொள்ளவில்லை. வாழ்வின் இறுதிக்காலம் வரை தனிமையாகவே வாழ்ந்து கழித்தார். அதை ஈடு செய்யும் விதமாக சமூக சேவை செய்வதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார். தமது நடுத்தர வயதில் பெற்றோரை இழந்த தங்கவேலுவுக்குத் தன் ஒற்றை வருமானத்தில் தம்பி-தங்கைகள் கொண்ட பெரிய குடும்பப் பாரத்தைச் சுமக்கும் பொறுப்பு ஏற்பட்டது. எதை யும் மன உறுதியுடன் எதிர்கொண்டதுதான் அவரது மிகப்பெரிய பலம்.
நீங்கள் கற்றதெல்லாம் கருத்தியல் மார்க்சியம், நான் அனுபவித்ததோ செயல்முறை மார்க்சிசம் என்றெல்லாம் தான் கடந்து வந்த கரடுமுரடான அனுபவங்களை மனம் திறந்து முரளீதர ராவிடம் பேசியிருக்கிறார். மக்கள் மீதும் மாக்கள் மீதும் கூர்ந்த கவனம் உடையவராக இருந்தார். நேருவைப் போலக் குழந்தைகள் என்றாலே அவருக்குக் கொள்ளைப் பிரியம். அவர்கள் மீது அலாதியான அன்பும் பாசமும் காட்டுவார். கல்லூரி வளாகத்திலிலுள்ள பல ஏழைக் குழந்தைகளுக்கு மாலை நேரங்களில் இலவசமாகப் பயிற்சி வகுப்புகள் நடத்தி அவர்களின் அறிவுக் குறை களை நீக்கிமனநிறைவு அடைவார். பல ஏழைக் கல்லூரி மாணவர்களுக்குக் கல்விக் கட்டணம் செலுத்திக் கரை சேர்த்தவர். உதவி கேட்டு வருபவர்களுக்கு இரக்கக் குணத்தோடு எந்தச் சூழ்நிலையிலும் முன்னின்று உதவக்கூடியவர். ஆபத்து நேர்ந்தவர்களுக்காகத் தனது பங்களிப்போடு நண்பர்களிடமும் பணம், பொருள் வசூல் செய்து ஒருங்கிணைத்து உதவுவதில் முன்னின்று செயல்படுவார். சிறு வயதிலிருந்தே சிறுபத்திரிகைகள் வாசிக்கும் பழக்கம் கொண்டவர். வாசிப்பை நேசிப்ப தற்குத் திரு. கோவை மடங்கன் அவர்கள்தான் அடித்தள மிட்டார் என்று அடிக்கடி சொல்லி மகிழ்வார். தங்கவேலு அரசியல் அறிவியல் துறையில் பட்ட மேற்படிப்பு முடித் திருந்தாலும் அவரது ஆழ்ந்த தமிழ்ப் புலமையும், ஓயாத வாசிப்புத் திறனும் அவரைப் பல்துறை அறிஞராக்கியது எனலாம். புத்தகங்கள் தான் அவரது உலகம். அபரிமித மான நினைவாற்றலும், கூர்மையான சிந்தனைத்திறனும் கொண்டவர். அடிப்படையில் நல்ல மனிதர். ரவுத்திரம் பழகியிருந்தாலும், அவரது ரவுத்திரம் இதுவரை நன்மை யையே விளைவித்திருக்கிறது.
பேராசிரியர் தங்கவேலு தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியங்கள் மீது ஆழ்ந்த பற்றும்,புலமையும் உடையவர். தமிழ்ச் சிறுகதைகள் அவருக்கு ரொம்பப் பிடிக்கும், ஏராளமான சிறுகதைகளை வாசித்து முடித் திருப்பதோடு அவற்றின் சாராம்சங்களைத் தமது வாழ்க் கையிலும் பயன்படுத்தி மனநிறைவு கண்டுள்ளார். இலக்கியப் படிப்பின் வழி வாழ்க்கையைச் செப்பனிட முடியும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார்.
மாணவர்களுக்குப் பயிற்றுவித்தல் என்பது அவருக்கு உயிர் போன்றது. உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவ விடுப்பில் இருந்த காலங்களில் கூட மாணவர் களுக்குப் பயிற்றுவிக்க இயலாத சூழலை எண்ணி அடிக்கடி வருந்தியிருக்கிறார். கொடும் வெயில், கடுங் குளிர், கொட்டும் மழை என எந்தச் சூழ்நிலையிலும் வகுப் பறைகளுக்குச் செல்லத் தவறியதில்லை. அதே சமயம் வகுப்பறைக்கு வராத மாணவர்களிடம் கடுமையாக நடந்துகொள்வார். பின்னர் சமாதானமாகி, உங்களுடைய நன்மைக்காகவே என்று அவர்களுக்கு ஆறுதலும் கூறுவார். வகுப்பறைகளுக்குவருவதற்கு முன் அதற்கான தயாரிப்பில் அதிகம் கவனம் செலுத்திக் கூடுதல் தகவல்களுடன் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டு வருவார்.அனைத்துலகத் தத்துவ அறிஞர்கள், அரசியல் தலைவர்கள் குறித்த அறிய தகவல்களை மாணவர் களுக்கு அறிமுகப்படுத்துவதில் தங்கவேலு சார் வல்லவர். எந்தக் கருத்தையும் எளிமையான எடுத்துக் காட்டு களுடன் மாணவர்களுக்குப் புரியவைப்பார். மாணவர்கள் எழுப்பும் ஐயங்களைத் தெளிவுபடுத்து வதற்காகத் தகவல்களைத் திரட்டுவதில் அதீத சிரத்தை எடுத்துக் கொள்வார். மாணவர்கள் மனதில் நீங்காத இடம்பிடித் தவர் என அவரது மாணவிசரஸ்வதி தனது வகுப்பறை அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார்.
மாணவர்களின் உரிமைகளுக்காகப் போராடுபவர், அவர்களுக்காகக் குரல் கொடுப்பதில் முதன்மையானவர். இவரது உதவும் மனப்பானமை,அறிவாற்றல் மற்றும் பயிற்றுவித்தல் திறனைப் பயன்படுத்திக்கொள்ள மாணவர்கள் எப்போதும் இவரைப் புடைசூழ்ந்திருப்பர். கடந்த 23 ஆண்டுகளில் மாணவர்களுக்கு ஒரு ஆசிரிய ராக மட்டுமல்லாமல் பலருக்குக் குருவாக, வழிகாட்டியாக, நெறியாளராகத் திகழ்ந்திருக்கிறார். முன்னாள் மாண வர்கள் உட்பட நடப்பு மாணவர்களும் திரளாக வந்து வரிசையில் நின்று இறுதி அஞ்சலி செலுத்தியமையே அதற்கு சாட்சி. மார்க்சிய அறிவையும், அறிஞர்களையும் குறித்து அத்துபடியானவர். ட்ராட்ஸ் கியால் கவரப்பட்ட பேராசிரியர் தங்கவேலு அவரது எழுத்துக்கள் மீதும் தீராத காதல் கொண்டவராகவும் வழித்தோன்றலாகவும் விளங்கினார். சமகால மார்க்சியம் குறித்த கூர்நோக்கும் தெளிந்த சிந்தனையும் உடையவர். அவரது அமைதி, அனுசரிப்பு மற்றும் பல்துறை அறிவுத் திறனுக்காகவே பலர் இவரிடம் நட்பு பாராட்டினர்.
திரு. ஆனைமுத்து அய்யாவுடன் பெரியார்-அம்பேத்கர் கருத்து ரீதியிலான நீண்டகால உறவும், நெருக்கமும் கொண்டவர் டாக்டர் தங்கவேலு. விகிதாச்சார அடிப் படையில் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி போராட்டங்களும், பொதுக்கூட்டங்களும் நடத்துவதற்காக ஆனைமுத்து அய்யா அவர்கள் புது தில்லி வரும்போதெல்லாம் பேராசிரியர் தங்கவேலு வீட்டில் தங்குவது வழக்கம். அப்போது, இட ஒதுக்கீடு, தமிழர் உரிமை குறித்து அய்யாவுடன் ஆரோக்கியமான நீண்ட கலந்துரையாடல் நிகழ்த்துவார். சிந்தனையாளன் இதழைக் கூடுதல் பிரதிகள் பெற்று நண்பர்கள் மற்றும் மாணவர்களுக்குக் கொடுத்துப் படிக்கச் செய்து அம்பேத்கர்-பெரியாரியக் கொள்கைகளைத் தில்லி மக்களிடையே பரவிடச் செய்தார். (தங்கவேலு தனது வீட்டில் திரு. ஆனைமுத்து அய்யாவுடன் எடுத்துக் கொண்ட படம். உடன் அவருடைய ஆத்ம நண்பரும் அவர் பெயர் சூட்டிய காவேரியும்)
வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்பது போல போட்டித் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் அலுவல் நிமித்தம் தமிழகத்திலிருந்து தில்லிக்கு வரும் தமிழர் பலருக்குத் தங்கவேலு தமது வீட்டில் உணவும் உறைவிடமும் கொடுத்து அடைக்கலப்படுத்துவதைக் கடைசிவரை ஒரு சேவையாகவே செய்து வந்தார். தங்கவேலு அவர்கள், தான் குடியிருந்த வீட்டின் கதவை ஒருநாளும் உட்பக்கம் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டதே இல்லை. எனக்கும் திறந்துவிட வேண்டும் என்ற தொந்தர வில்லை, உள்ளே வருபவர்களுக்கும் தொந்தரவில்லை என்று நியாயப்படுத்துவார்.
அறிவுச் செல்வத்தை நாடிச் செல்வதில் எப்போதும் மிகுந்த ஆர்வம் கொண்டவர் தங்கவேலு, மறைவிற்கு நான்கைந்து மாதங்களுக்கு முன்னர் கூட 4-6 ஜனவரி, 2018-இல் புது தில்லியிலுள்ள நடைபெற்ற, 100 என்ற பொருளிலான மூன்று நாள் தேசியக் கருத்தரங்கில் ஜனவரி மாதக் கடுங் குளிரையும் பொருட்படுத்தாமல் கலந்து கொண்டார். அறிவைத் தேடிச் சென்ற அதே நேரம் குளிரின் தாக்கத்தை எதிர்கொண்ட அதுநாள் முதலே உடல்நலக் குறைவும் தொற்றிக்கொண்டது. தங்கவேலு வின் அருமைத் தம்பி திரு. பாலன் கூடுதல் சிரத்தையுடன் ஒரு குழந்தையைக் கையாள்வது போல் ஊண், உறக்கமின்றி எப்போதும் உடனிருந்து அண்ண னைக் கவனித்துக்கொண்டார். கிட்டத்தட்ட ஒரு மருத்து வராகவே மாறிவிட்டார் பாலன்.
தங்கவேலுவின் தங்கைகளான மரகதம், மற்றும் வாசுகி இருவரும் கோவையிலிருந்து ஒருவர் மாற்றி ஒருவர் தில்லிக்கு வந்து அண்ணனுக்கு அருகிலிருந்து வாய்க்கு ருசியானதைச் சமைத்துக் கொடுத்துப் பணி விடைகளும் செய்தனர்.
நீண்ட காலம் நீரிழிவு நோயுடன் வாழ்ந்தாலும் கடந்த ஜனவரி, 2018-லிருந்து திடீரென நோயின் தாக்கம் அதிகரித்துவிட்டது. நாட்பட்ட நீரிழிவு நோய் மருந்து மாத்திரைகளுக்கு மட்டுப்படாததால் சிகிச்சை பலனின்றி புது டில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது. தங்கவேலுவுக்குப் பல்வேறு நிலைகளில் உதவிகள் செய்ததில், திரு. செல்வக்குமார், திரு. விஸ்வம், திரு.மூர்த்தி, ஆகியோருக்குப் பெரும் பங்குண்டு தில்லிக்கு அருகிலுள்ள குருகிராமில் மளிகைக்கடை நடத்திவரும் திரு. செல்வகுமார் எந்த நேரத்திலும் பிரதிபலன் பாராமல் ஒரு சாரதி போல் ஓடிவந்து வந்து உதவிகள் செய்த அவர் என்றும் நினைக்கப்பட வேண்டியவர். தில்லியிலிருந்து கோவை வரை தங்கவேலுவின் பூத உடலோடு விமானத் தில் பயணித்து நல்லடக்கம் செய்து திரும்பிய செல்வ குமாரின் சேவைக்கு ஈடு இணை இல்லை!.
மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் அவசரம் உடனே வாருங்கள்!, அவசரமாகப் பணம் தேவை கொண்டு வாருங்கள்! என்று எந்த நேரத்தில் கூப்பிட்டாலும் ஓடோடி வந்து உதவிய விஸ்வம் அவர்களின் மனிதாபிமான சேவை விஸ்வரூப சேவை என்றே சொல்லலாம்.
மருத்துவமனையில் இறந்த தங்கவேலுவின் உடலைப் பெற்று உடற்கூறு அறுவை செய்ய ஏற்பாடு செய்வதிலி ருந்து உடலை விமானத்தில் ஏற்றிக் கோவை அனுப் பியது வரை அத்தனை வேலைகளையும் நானே செய்வேன் என்று எல்லா வேலைகளையும் தலைமேல் போட்டுக்கொண்டு பம்பரமாகச் சுழன்று இயங்கிய மூர்த்தி அவர்களை எத்தனை பாராட்டினாலும் தகும். எல்லா வற்றிற்கும் மேலாக இருபது வருடங்களாகத் தங்க வேலுவுக்கு சமையல் செய்து கொடுத்து, துணிகள் துவைத்து,வீட்டு வேலைகள் செய்து கடைசிவரைக் கவனித்துக் கொண்ட நேபாள நாட்டுப் பார்வதி அம்மா வின் தாய்மை உள்ளம் போற்றுதலுக்குரியது.
இன்னும் அவர்பால் அன்புகொண்டு உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனப்பூர்வமான நன்றிகளைப் பதிவு செய்கிறோம். மதச்சார்பின்மையில் ஆழ்ந்த பற்றும், மனித உரிமை குறித்து அதிகம் சிந்திதும் பேசியும் வாழ்ந்த பேரா. ச.ப. தங்கவேலுவின் இழப்பு அவர் சார்ந்த அரசியல் அறிவியல் துறைக்கும், பணி யாற்றிய கல்லூரிக்கும், அவரது மாணவர்களுக்கும், தமிழ்ச் சமூகத்துக்கும் பேரிழப்பாகும். குறிப்பாகப் பயிற்றுவித்தல் துறைக்கு மாபெரும் இழப்பாகும்.
பேரா. ச.ப. தங்கவேலு அவர்களை இழந்து வாடும் அவரது சகோதர-சகோதரிகளுக்கும், உறவினர்களுக் கும், உற்ற நண்பர்களுக்கும் அவர் பணியாற்றிய கல்லூரி சார்பாகவும் மற்றும் அவரது மாணவர்கள், சக ஆசிரியர் கள், நண்பர்கள் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் பதிவு செய்கிறோம்.
வாழ்க பேராசிரியர் ச.ப.தங்கவேலுவின் புகழ்.
முனைவர் ச.சீனிவாசன்,
தமிழ் இணைப்பேராசிரியர்
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லூரி, புது தில்லி.
கைபேசி : +91-9911223484