தடை I : 1950க்குப் பிறகு 7ஆவது பத்தாண்டில் இடஒதுக்கீடு தரப்படுவது சரியா?
விடை : ஒன்று : காலங்காலமாக உயர் கல்வி யிலும் அரசு வேலைகளிலும் ஆதிக்கம் செலுத்தி வந்த மேல்சாதி - மேல்தட்டுப் பிரிவினர் முதலில் பொச் சாப்புக் காரணமாக இப்படிக் கேட்கிறார்கள். தங்கள் ஆதிக்கம் தகர்ப்படுவதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
இரண்டு : வேலையில் இடஒதுக்கீடு தரப்பட விதி 16(4)இல் வழி அமைத்தவர் மேதை அம்பேத்கர். அந்த விதியில் “10 ஆண்டுக்காலம்” என்ற கட்டுப்பாடு இல்லை. “ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு” என்ப தால், மேல்சாதியினர் மூடத்தனமாக இல்லாத ஒன் றை இருப்பதாகக் கூறுகிறார்கள்.
மூன்று : வேறு இரண்டு விதிகளில் - விதி 330, விதி 332-இல் “பத்தாண்டுக்காலம்” என்கிற கட்டுப் பாடு இருக்கிறது. ஏறக்குறைய “விகிதாசாரம்” என்கிற கோட்பாடும் இருக்கிறது. அது பட்டியல் வகுப்பாருக்கும், பழங்குடிகளுக்கும் மட்டும் பொருந்துவது. நாடாளு மன்ற மக்கள் அவையில் போட்டியிட, பட்டியல் வகுப் புக்கும், பழங்குடிகளுக்கும் இடஒதுக்கீடு தருவது விதி 330. சட்டமன்றங்களுக்கு இவ்இருவகுப்பினரும் போட்டியிட இடஒதுக்கீடு தருவது விதி 332.
இதுபற்றி மேல்சாதி அறிவாளி அயோக்கியர் கள் எல்லோருக்கும் தெரியும். பொத்தாம் பொது வாக, அரசு வேலையில், ஏழாவது பத்தாண்டில் இடஒதுக்கீடு தரப்படுவதாக அவர்கள் பொய் சொல்லுகிறார்கள்.
மேலும் விதி 16(4) என்பது பட்டியல் வகுப்பு, பழங்குடி வகுப்பு, பிற்படுத்தப்பட்ட வகுப்பு ஆகிய “மூன்று பிற்படுத்தப்பட்ட வகுப்புக் குடிமக்களுக்கும்” இடஒதுக்கீடு தருவது.
இவர்கள் மூன்று வகுப்பினருமே ஆட்சி அதிகாரப் பதவிகளில் இடஒதுக்கீடு பெற உரிமை உள்ளவர்கள்.
எனவே அரசு வேலையில் இடஒதுக்கீடு தர, ‘10 ஆண்டுக்காலம்’ என்கிற கட்டுப்பாடு இல்லவே இல்லை என்பதை எல்லோரும் அறிதல் வேண்டும்.
தடை II : உயர்கல்வியில் இடஒதுக்கீடு தருவதை எத்தனைப் பத்தாண்டுகளுக்கு நீடிப்பது?
1950இல் நடப்புக்கு வந்த அரசமைப்புச் சட்டத் தில், எந்த ஒரு பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கும், “உயர் கல்வியில் இடஒதுக்கீடு தரப்பட” விதி எதுவும் இல்லை. அப்படி ஒரு விதி இல்லாத போதே, தந்தை பெரியாரின் முயற்சியால், 1947 நவம்பரில், சென்னை மாகாண அரசில் மட்டும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 14 விழுக்காடு தனி இடஒதுக்கீடு அளிக்கப்பட்டிருந்தது. அதுவரையில் மருத்துவம், பொறியியல் மற்றும் வேளாண் உயர்படிப்புகளில் 90 விழுக்காடு இடங்களை அநியாயமாக ஆக்கிரமித்த மேல்சாதியினர் எல்லோ ரும் முழுமூச்சோடு அதை எதிர்த்தார்கள். ‘கல்வியில், எந்த வகுப்புக்கும் அரசமைப்புச் சட்டத்தில் இடஒதுக்கீடு இல்லை’ என்பதை சென்னை உயர்நீதிமன்றம் 1950 சூனில் சுட்டிக்காட்டியது. அதையே உச்சநீதிமன்றமும் சுட்டிக்காட்டியது.
அரசமைப்பில், கல்வியில், பிற்படுத்தப்பட்ட வகுப்பு களுக்கு இடஒதுக்கீடு தருகிற வகையில் உருவாக்கப் படாத - ‘அரசமைப்புச் சட்டம் ஒழிக!’ ‘அரசமைப்புச் சட்டத்தைத் திருத்து!’ என்று கோரி, தந்தை பெரி யாரும் அவர்தம் தொண்டர்களும் 1950 சூலை முதல் 1951 மே வரையில் போராடினார்கள். “மத்திய அரசு அமைச்சர்களில் எவர் சென்னைக்கு வந்தாலும் ‘கருப் புக் கொடி’ காட்டி அவமதிப்புச் செய்யுங்கள்” என்று பெரியார் கட்டளையிட்டார். அது அப்படியே நடந்தது.
அந்த எதிர்ப்பைக் கண்டு பிரதமர் பண்டித நேரு அஞ்சினார். உடனே, விதி 15(4) என்பதை நாடாளு மன்றத்தில் முன்மொழிந்து 2-6-1951இல் நிறை வேற்றினார்.
அந்த விதியில், “1. சமுதாயத்திலும் கல்வியிலும் பிற்படுத்தப்பட்ட எந்த வகுப்புக் குடிமக்களுக்கும், 2. பட்டியல் வகுப்பினருக்கும், 3. பட்டியல் பழங்குடிகளுக் கும் அவ்வகுப்புகளின் முன்னேற்றங் கருதி எந்தச் சிறப்பு ஏற்பாட்டையும் அரசு செய்யலாம். அதற்கு எந்தத் தடையும் இல்லை” என்று துலாம்பரமாகக் கூறப்பட்டுள்ளது.
இதிலும், “பத்தாண்டுக்காலம்” என்கிற கட்டுப்பாடு இல்லை என்பதை எல்லோரும் உணர வேண்டும்.
தடை III : விதி 15(4), விதி 16(4) என்பவற்றில் இப்படியெல்லாம் இடஒதுக்கீட்டுக்கு இடம் தரப்பட்டிருப்ப தால் சமுதாயத்தில் இந்த மூன்று வகுப்பினரின் நிலை உயர்ந்துவிட்டதா?
விடை : ஒன்று : சமுதாயத்தில் பிற்படுத்தப்பட்டவர் கள் அனைவரும் 2015லும், இந்தியாமுழுவதிலும் ‘சூத்திரர்களாகவே’ வைக்கப்பட்டிருக்கிறார்கள். பட்டியல் வகுப்பினர் ‘வருணப்பிரிவில்’ வரத் தகுதி அற்றவர் கள். சூத்திரர்களுக்கும் கீழான வகுப்பினர்; இதுமாற வில்லை. பட்டியல் பழங்குடிகள் இதில் எந்தப் பிரிவிலும் வராதவர்கள் - தீண்டாமைக்கு ஆட்படாதவர்கள்.
இரண்டு : உயர் கல்வியில் தமிழ்நாட்டில் காமராசர் காலத்து ஆட்சிக்குப் பிறகு தத்துக் குத்தி, மூன்று பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் மேல்சாதிக்காரரின் தகுதியை எட்டிப்பிடிக்கும் அளவுக்கு உயர்கல்வியில் வளர்ந்து வருகிறார்கள். ஆனால் அரசு உயர் பதவி களில் இம்மூன்று வகுப்புகளும் விகிதாசாரப் பங்கைப் பெறவில்லை.
மூன்று : வெகுமக்களுக்கு கல்வி, வேலை களில் இடஒதுக்கீடு தர ஏற்ற சட்டப் பாதுகாப்பும் சட்ட ஏற்பும் இருக்கிறது. இதை வென்றெடுப்பது நம் தளரா முயற்சியைப் பொறுத்தது.
நான்கு : வருண ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, கூட்டாட்சி என்பவை அரசமைப்பை அடியோடு மாற்ற வேண்டிய செயல்கள்.
சட்டத்தில் இருப்பதை முழுமையாக வென் றெடுப்போம்!
சட்டத்தில் இல்லாததை வென்றெடுக்கப் போராடுவோம்!
தடை IV : ஏன், இவ்வகுப்பினர், 2015லும் விகிதாசாரப் பங்கைப் பெறவில்லை?
விடை : ஒன்று : இந்தியாவில் வெள்ளையர் காலத்தில், முந்தைய திராவிடக் கட்சி ஆட்சியில், பழைய சென்னை மாகாணத்தில் மட்டும் - அம் பேத்கர் முயற்சியால் பழைய பம்பாய் மாகாணத் தில் மட்டும் 1927லேயே பட்டியல் வகுப்பினருக்கு, மாகாணப் படிப்பிலும் மாகாண வேலையிலும் இடஒதுக்கீடு தரப்பட்டுவிட்டது.
தந்தை பெரியாரும், பொப்பிலி அரசரும், ஏ. இராமசாமி முதலியாரும் முயன்று - சென்னை மாகாண எல்லைக்குள் மட்டும், மத்திய அரசுத் துறைகள் எல்லாவற்றிலும், வேலையில் பட்டியல் வகுப்பினருக்கு 1935இல் 16 விழுக்காடு இட ஒதுக்கீடு பெற்றுத் தந்தனர்.
மேதை அம்பேத்கர், 1943 ஆகத்து 11இல், அனைத்திந்திய அளவில், பட்டியல் வகுப்பின ருக்கு, மத்திய அரசு வேலையில் மட்டும் 8 விழுக் காடு இடஒதுக்கீடு பெற்றுத் தந்தார்.
இரண்டு : எந்த வடமாநிலத்திலும், பட்டியல் வகுப்பினருக்கு, கல்வியிலோ வேலையிலோ 1950 வரையில் இடஒதுக்கீடு தரப்படவில்லை. மாநில அரசு வேலையிலும், கல்வியிலும் எந்த வட மாநிலத்திலும் 1978 நவம்பர் 10 வரையில் பிற் படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு தரப்படவில்லை.
மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சித் தொண்டர்கள் வே. ஆனைமுத்து, இராம் அவதேஷ் சிங் ஆகியோர் தலைமையில் பீகார் முழுவதிலும் 17-9-1978 முதல் 18-10-1978 முடிய 31 நாள்கள் விழிப் புணர்வுப் பரப்புரையும்; 1978 அக்டோபர் 19 முதல் 31 வரையில் சிறை நிரப்பும் போராட்டமும் நடத்திய பிறகுதான், முதன்முதலாக, பீகாரில், 10-11-1978இல் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 விழுக்காடு இடஒதுக் கீட்டை, வேலையில் மட்டும் முதலமைச்சர் கர்ப்பூரி தாக்கூர் வழங்கினார். அதன் பிறகுதான் மற்ற வட மாநில அரசுகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக் கீடு தரப்பட்டது.
ஆனால் மத்திய அரசில் பிற்படுத்தப்பட்டோருக்குக் கல்வியிலும் வேலையிலும் இடஒதுக்கீடு தரப்பட வில்லை.
தடை V : பிற்படுத்தப்பட்டோருக்கு ஏன் மத்திய அரசில் ஒதுக்கீடு தரப்படவில்லை?
விடை : ஒன்று : பிற்படுத்தப்பட்டோர் எந்தெந்த உள்சாதியினர் என்கிற பட்டியல் இருந்தால்தான், மத்திய அரசில் அவர்களுக்கு இடஒதுக்கீடு தரமுடியும்.
அப்படி ஒரு பட்டியலை உருவாக்கிட, மேதை அம்பேத்கர், அரசமைப்பு விதி 340(1)இல், 1950 லேயே வழிசெய்திருந்தார். ஆனால் நேரு, அதை உடனே நடைமுறைப்படுத்தவில்லை. அம்பேத்கர் 1951-இல் அமைச்சர் பொறுப்பை விட்டு விலகினார்.
அதன்பிறகு 1953-இல், நேரு, முதலாவது பிற்படுத் தப்பட்டோர் குழுவை, காகா கலேல்கர் தலைமையில் அமைத்தார். கலேல்கர் அறிக்கை 1955இல் நேருவி டம் தரப்பட்டது.
அதில், “2999 உள்சாதிகள் பிற்படுத்தப்பட்ட வகுப் பினர்” என்று ஒரு பட்டியல் இருந்தது. பரிந்துரை களும் இருந்தன.
தடை VI : நேரு, என்ன செய்தார்?
விடை : ஒன்று : நேரு, 1961 மே மாதம் மத்திய அரசு அமைச்சரவையைக் கூட்டி, “கலேல்கர் பரிந் துரை செய்த பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை இந்திய அரசு ஏற்க விரும்பவில்லை. பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசில் சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு தர விரும்பவில்லை” என்றே முடிவு செய்தார். அத்துடன் அவர் நின்றாரா? இல்லை.
இரண்டு : 1961 ஆகத்தில் மாநில முதலமைச் சர்கள் எல்லோருக்கும் கமுக்கமான மடல்கள் (Demi- Official Letters) எழுதினார். அதில், “மாநில அரசு, பிற்படுத்தப்பட்டோருக்கு சாதி அடிப்படையில் இடஒதுக் கீடு தரக்கூடாது. அவர்களுக்கு ஏதேனும் உதவி செய்ய வேண்டுமென்றால், பண உதவி (Cash Scholarship ) தரலாம்” என்று எழுதிவிட்டார்.
ஒட்டுமொத்தப் பிற்படுத்தப்பட்டோரின் வாழ்வுக்கு உலை வைத்த முதலாவது மாமனிதர் பண்டித நேருதான். இந்திராகாந்தி, இராஜீவ்காந்தி என்கிற நேருவின் பிறங்கடைகளும் அதையே செய்தனர். பி.வி. நரசிம்மராவும் அதையே பின்பற்றினார்.
பிற்படுத்தப்பட்டோருக்கு மான உணர்வு இருந்
தால், இதற்காகவே, காங்கிரசைக் குழிதோண்டிப் புதைத்திருக்க வேண்டும்.
தடை VII : பிற்படுத்தப்பட்டோரின் நிலை என்ன ஆயிற்று?
பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசுக் கல்வி யிலும் வேலையிலும் விகிதாசார இடஒதுக்கீடு தரக் கோரி, 1975, 1976-இல் வே. ஆனைமுத்து, பிரதமர் இந்திராகாந்திக்கு மடல்கள் எழுதினார். 10-5-1978 இல், பதவியில் இல்லாத இந்திராகாந்தியை நேரில் பார்த்துப் பேசினார்.
அதற்கு முன்னர் 7-5-1978இல், “உ.பி. பிற்படுத் தப்பட்டோர் மாநில மாநாட்டில்” கலேல்கர் குழுவில் ஓர் உறுப்பினராக இருந்த சிவ் தயாள் சிங் சௌரா சியா தலைமையில், முசாபர் நகரில் வே. ஆனைமுத்து தொடக்க உரையாற்றினார். அடுத்த நாள் 8-5-1978 இல், அன்றையக் குடிஅரசுத் தலைவர் என். சஞ்சீவ ரெட்டியிடம் கோரிக்கை விண்ணப்பம் அளித்தார். பயன் இல்லை.
அதேசமயம், அன்றைய சனதாக் கட்சி ஆட்சியில், உள்துறை இணை அமைச்சராக இருந்த - லோகியா வாதியான தனிக் லால் மண்டல் (D.L. Mandal), வே. ஆனைமுத்துவின் கோரிக்கையை அப்படியே ஏற்றுக் கொண்டார்.
24-6-1978-இல் சென்னையில் மா.பெ.பொ.க. வே.ஆனைமுத்து தலைமையில் நடத்திய “முதலாவது அனைத்திந்திய இடஒதுக்கீடு மாநாட்டை” மத்திய இணை அமைச்சர் தனிக் லால் மண்டல் தொடங்கி வைத்தார். அது அனைத்துக் கட்சியினரும் பங்கேற்ற மாநாடு. அதில் இராம் அவதேஷ் சிங்கும் பங்கேற்றார். அவர் வே. ஆனைமுத்து குழுவினரை பீகாருக்கு அழைத்தார். அவர் முழு மூச்சாக வே. ஆனைமுத்து குழுவினரின் தொண்டினைப் பயன்படுத்தினார்.
தடை VIII : இவ்வளவு முயற்சிகளாலும் விளைந்த பயன் என்ன?
வே. ஆனைமுத்து குழுவினர் இராம் அவதேஷ் சிங்குடன் இணைந்து பீகாரில் போராடிய போது, அன்றையப் பிரதமர் மொரார்ஜி தேசாய் 1978 அக்டோபரில் பீகாருக்குப் பயணம் வந்தார். எதிர்ப் பரப்புரை செய்ய அவர் முயன்றார். கல்லையும் செருப்பையும் மேடை தோறும் வீசினர், பீகார் மக்கள். அதனால் உண்மையான களநிலையை அறிந்தார். அதன் உடனடி விளைவாகத்தான், 20-12-1978இல் “இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் குழுவை அரசு அமைக்கும்” என்று அறிவித்தார். பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல் தலைமையில் 1-1-1979இல் மண்டல் குழு அமைக்கப்பட்டது.
இது எம் கட்சி எடுத்த முயற்சிக்குக் கிடைத்த இரண்டாவது பயன். மண்டல் குழு அறிக்கை 31-12-1980இல் இந்திராகாந்தியிடம் தரப்பட்டது.
“மண்டல் அறிக்கையை 1981 திசம்பருக்குள் அரசு வெளியிடாவிட்டால், 1982 சனவரி 26 குடிஅரசு நாளில், எங்கள் எங்கள் வீடுகளில் கருப்புக் கொடி உயர்த்தித் துக்கம் கொண்டாடுவோம்” என்று பிரதமர் இந்திரா காந்திக்கும், உள்துறை அமைச்சர் கியானி ஜெயில் சிங்குக்கும் எழுதினோம். “25-1-1982 மாலை 4 மணிக்கு என்னை நேரில் சந்திக்க வாருங்கள்” என்று ஜெயில் சிங் அழைத்தார். நேரில் சந்தித்தோம். நீண்ட விவாதம் நடந்தது. ஜெயில் சிங் உண்மையை உணர்ந்தார்.
மீண்டும் 4-3-1982இல் தனிமையில் அவருடன் நான் பேசினேன். அப்போது உறுதி கூறியபடி,
30-4-1982இல் மண்டல் குழு அறிக்கையை நாடாளு மன்றத்தில் அவர் வெளியிட்டார்.
தடை IX : இடஒதுக்கீட்டின் இன்றைய நிலை என்ன?
1990இல் விசுவநாத் பிரசாத் சிங் (V.P. Singh) பிரதமராக வந்தார். தேவிலால் துணைப் பிரதமர் ஆனார். அவர் பட்டியல் வகுப்பினரின் இடஒதுக்கீட்டுக்கு எதிராகப் பேசினார். அது கருதி, தேவிலால் படத்தை சென்னை அண்ணாசாலையில் வே. ஆனைமுத்து, இராம் அவதேஷ் சிங் உள்ளிட்டோர் எரித்துச் சிறைப்பட்டோம்.
அப்போது இராம் அவதேஷ் சிங் மாநிலங் கள் அவையின் உறுப்பினர். அவர் அன்றாடம் கேள்வி நேரத்தின் போது, மண்டல் பரிந்துரை நடப்புக்கு வரவேண்டும் என்று பேசினார். அப் பேச்சை உள்வாங்கிக் கொண்டார் வி.பி. சிங்.
அப்போது குடிஅரசுத் தலைவராக இருந்த ஆர். வெங்கட்டராமன் நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார். அதில் மண்டல் பரிந்துரை அமலாக்கம் பற்றி எதுவும் இல்லாததால், அவரை மேற்கொண்டு பேசவிடாமல் இராம் அவதேஷ் சிங் தடுத்துவிட்டார். இது அரசை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி யது.
வி.பி. சிங் ஆட்சியில் இடஒதுக்கீடு பொறுப்பை ராம் விலாஸ் பஸ்வான் ஏற்றிருந்தார். வி.பி. சிங்குடன் சந்திப்புக்கு நேரம் கிடைக்காததால், பஸ்வானிடம் வே. ஆனைமுத்து, இராம் அவதேஷ் சிங் இருவரும் 1990 மார்ச்சில் கோரிக்கை விண்ணப்பத்தை அளித்தோம். அவர் சரிவர நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை, 1992-இல் வி.பி. சிங் அவர்களை நான் நேரில் சந்தித்த போது அறிந்தேன்.
தேவிலாலின் நெருக்கடிக்கு வி.பி.சிங் ஆளானார்.
இந்நிலையில், 6-8-1990 அன்று முதன்முதலாக மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் வேலையில் மட்டும் 27 விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பதாக, வி.பி. சிங் அறிவித்தார். அம் மகிழ்ச்சி யைப் பகிர்ந்து கொள்ள வேண்டி, நேரே, அன்றே இராம் அவதேஷ் சிங் வீட்டுக்குப் பிரதமர் வி.பி.சிங் சென்றார். அப்போது அவதேஷ் சிங் இடஒதுக்கீடு போராட்டத்தில் ஈடுபட்டுக் கைது செய்யப்பட்டிருந்தார்.
வி.பி.சிங் பாராட்டுக் கூட்டத்துக்கு என்னை அழைத்தார், இராம் அவதேஷ் சிங். நான் இல்லாமலே கூட்டத்தை நடத்தி விடுங்கள் எனக் கூறிவிட்டேன்.
தடை X : மத்திய அரசு வேலைகளில் இன்றைய பிற்படுத்தப்பட்டோரின் நிலை என்ன? மற்ற வகுப்பி னரின் நிலை என்ன?
விடை : ஒன்று : பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு 1994இல் தான் முதன்முதலாக நடப்புக்கு வந்தது.
1994 முதல் 2008 நவம்பர் 18 வரையில், முதல்நிலைப் பதவிகளில், 52 விழுக்காடு உள்ள பிற்படுத்தப்பட்டோரின் பங்கு வெறும் 5.44 விழுக்காடு மட்டுமே; இது பேரவலம்; பேரவ மானம். ஒருகணம் கூடப் பொறுக்கக் கூடாதது.
பட்டியல் வகுப்பினர் 17 விழுக்காடு; பழங்குடி யினர் 8.5 விழுக்காடு. இந்த 25.5 விழுக்காடு உள்ள இருவகுப்புகளும் பெற்றிருப்பது 17 விழுக் காடு மட்டுமே.
இரண்டு : விதி 15(4), விதி 16(4) இரண்டி லும் “விகிதாசாரப் பங்கீடு” என்கிற கோட்பாடு இடம் தரப்பட்டு, இந்த விதிகள் உடனே திருத் தப்பட வேண்டும்.
மூன்று : பிற்படுத்தப்பட்டோருக்குப் பதவி உயர்விலும், இடஒதுக்கீடு வேண்டும்.
நான்கு : பிற்படுத்தப்பட்டோருக்கு மட்டும் “கிரீமி லேயர்” என்ற வளர்ந்த பிரிவினர் என்ற தண்டனை இருப்பது உடனே நீக்கப்பட வேண்டும்.
தடை XI : பட்டியல் வகுப்பாருக்கும், பழங் குடியினருக்கும் பல பத்தாண்டுகளாக - விகிதா சாரமாக நாடாளுமன்ற மக்களவையிலும், சட்டமன்றங்களிலும் இடஒதுக்கீடு தருவது நீடிக்க வேண்டுமா?
விடை : ஒன்று : இன்னும் பல பத்தாண்டுகளுக்கு இப்படிப்பட்ட இடஒதுக்கீடு நீடிக்கப்பட வேண்டும். ஏன்? - பிராமணர், சத்திரியர், வைசி யர், சூத்திரர் என்கிற மேல்சாதி ஆணவக்காரர் கள் 2015லும் தீண்டாமையை அப்படியே சுமத்து வதும், தீண்டப்படாதவராக எண்ணித் தனியே ஒதுக்கி வைப்பதும், சமுதாய சமத்துவத்தை மறுப்பதுமே இந்த அளவு கால நீட்டிப்பு வேண் டும் என்பதற்குக் காரணங்கள்.
இரண்டு : இது இப்படி நீடிக்காவிட்டால், 79 பட்டியல் வகுப்பினர் மக்களவைக்குத் தேர்வுபெற முடியாது; 41 பழங்குடி வகுப்பினர் மக்களவைக் குத் தேர்வு பெற முடியாது. பட்டியல் வகுப்பி லிருந்தும், பழங்குடியிலிருந்தும் பல நூறு பேர் சட்டமன்ற உறுப்பினர்களாக வரமுடியாது; முடி யாது.
வெகுமக்களுக்கு அதிகபட்ச நன்மையைச் செய்கிற அரசே - மக்கள் நாயக அரசு. இன்றைய அரசு வெகுமக்களுக்கு எதிரானது.
இந்த 82 விழுக்காடு உள்ள மூன்று வகுப்பு களுக்கும் இன்னும் பல பத்தாண்டுகளுக்கு அவ ரவர் வகுப்பு விகிதாசாரப்படி இடப்பங்கீடு தரப்பட வேண்டும்; கட்டாயம் இது வேண்டும்.