தமிழர் பெரும்படைக்கு ‘விழுப்புரத்தில்உற்சாகமான வரவேற்பு

ஆகத்து 22: நேற்று பகல் 1.30 மணிக்குத் தமிழர் பெரும்படை வளவனூரிலிருந்து விழுப்புரம் வந்து சேர்ந்தது. சுமார் 50 முஸ்லீம் லீக் வாலிப சங்கத் தொண்டர்களும், அன்னியூர் தமிழ்க் கழகத்தாரும் மற்றும் ஏராளமான இந்து முஸ்லிம் பெரியவர்கள் உள் ளிட்ட சுமார் 1000 பேர்கள் எதிர்கொண்டு வரவேற்று படைத்தலைவர்கட்கு மாலையிட்டு “வீழ்க இந்தி”, “வாழ்க தமிழ்” ஆகிய பேரொலியுடன் படையை அழைத்து வந்தனர். படை முன்னாள் நகர மன்றத் தலைவர் எம். கோவிந்தராசுலு நாயுடு பங்களாவில் தங்கியது.

பகல் 2 மணிக்கு எம். கோவிந்தராசலு நாயுடு, எம். சண்முக உடையார் (நகர மன்ற உறுப்பினர்) எம். முத்துத்தாண்டவப் படையாட்சியார் (நகர மன்ற உறுப்பினர்) ஆகிய மூன்று தமிழ்ப் பெரியார்களும் படைக்கு இடைவேளை உணவளித்து உபசரித்தனர்.

பின்னர் மாலை 4.30 மணிக்குத் தண்டை விட்டுப் படைப் புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து 6 மணிக்குப் பொதுக் கூட்டம் நடக்கும் இடமாகிய நகராட்சி உயர்நிலைப் பள்ளிக் கூடத்திற்கு முன்புள்ள நவாப் தோப்பு மைதானத்திற்கு வந்துசேர்ந்தது. வழியில் முஸ்லீம் லீக் வாலிபர் சங் கத்திற்கெதிரில் அச்சங்கத்தார் படையை நிறுத்தி, தலைவர்கட்கு மாலையிட்டு படை வீரர்கட்கு கற்கண்டு வழங்கினர்.

முஸ்லீம் லீக் வாலிப சங்கத் தொண்டர்கள், படையை தண்டிலிருந்தே அழைத்துச் சென்றதுடன் படைக்கு முன்னாடி அணிவகுத்துச் சென்றனர். ஊர்வலத்தில் சுமார் 3000 பேர்களுக்கு மேல் கலந்து கொண்டனர்.

பொதுக்கூட்டம் :

கூட்டத்திற்கு முத்துத்தாண்டவப் படையாட்சியார் தலைமை வகித்தார். 8000 பேர்களுக்கு மேல் கூட்டத்திற்கு வந்திருந்தனர்.

பின்னர் காஞ்சி கலியாணசுந்தரம், காஞ்சி பரவஸ்து இராசகோபாலாச்சாரியார் ஆகியோர் இந்திப் புரட்டை விளக்கிச் சொற்பொழிவாற்றினார்கள்.

கடைசியாக தோழர் எஸ்.ஏ. ரவூப் பேசினார். தலைவர் முடிவுரைக்குப் பிறகு தென்னார்க்காடு மாவட்ட முஸ்லீம் காரியதரிசி பண்ருட்டி கரீம் சாகிப் நன்றி கூறக் கூட்டம் இரவு 11 மணிக்கு முடிவுற்றது. இவ்வூர் பெரியார்கள் வேண்டிக் கொண்டதற்கிணங்க படை அன்று இரவும் விழுப்புரத் திலேயே தங்கியது (விடுதலை 25.8.1938).

தமிழர் பெரும்படை இந்தியை எதிர்த்துப் பரப் புரை செய்து சென்னையை நோக்கி வந்து கொண் டிருக்கும் அதேநேரத்தில் சென்னையிலும் மற்றும் மாகாணம் முழுவதும் இந்தியை எதிர்த்து ஊர்வலங் களும் பொதுக் கூட்டங்களும் நாள்தோறும் நடந்து கொண்டே இருந்தன. இந்து தியலாஜிகல் உயர் நிலைப்பள்ளி முன்பும், மாகாண முதல்வர் இராசாசி வீட்டின் முன்பும் அன்றாடம் மறியல்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.

சென்னையில் இந்தி எதிர்ப்புப் போர் : இந்து தியாலாஜிகல் பள்ளியின் முன் மறியல் செய்த தொண்டர்களுக்கு 4 மாதம் கடுங்காவல் தண்டனை

சென்னை, ஆகத்து 25 : இன்று காலையில் தங்கசாலையிலுள்ள இந்து தியாலாஜிகல் பள்ளியின் முன் ‘இந்தி ஒழிக! தமிழ் வாழ்க!’ என்று முழங்கி இராஜபாளையம் தொண்டர் வி. அழகனும் தூத்துக் குடி எம். கிருஷ்ணசாமியும் மறியல் செய்தனர். அவர் களைக் கைது செய்து காவல் துறையினர் ஜார்ஜ் டவுன் 2ஆவது நீதிபதி பி. மாதவராவ் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

மாலை 5 மணிக்குக் கைது செய்யப்பட்டு அழைத்து வரப்பட்டிருந்த தொண்டர்களைக் கூப்பிட்டு நீதியரசர் கள் இம்மாதிரி எல்லாம் செய்வது கூடாது என்றும்; விட்டுவிட்டால் ஊருக்குப் போய்விடுகிறீர்களா? என்றும் சார்ஜூம் தருகிறோம் என்று கூறினார்.

இந்தி கட்டாயப் பாடமாயிருப்பதை எடுத்துவிட்டால் போய்விடுவதாகத் தொண்டர்கள் சொன்னார்கள்.

நீங்கள் இம்மாதிரிச் செய்வதால் பள்ளிக்குப் பிள் ளைகள் போகாமல் இருக்கின்றார்களா? என்றும் உங் களை யார் இப்படியெல்லாம் பிடித்து அனுப்புகிறார்கள் என்றும் கேட்டார்.

தாங்களே பணம் செலவு செய்து கொண்டு வந்த தாகவும் இந்தி ஒழிந்தால் திரும்பிப் போய் விடுவ தாகவும் தொண்டர்கள் சொன்னார்கள்.

பின்னும் மாஜிஸ்ட்ரேட் தொண்டர்களை நோக்கி உங்களை ஈ.வி. ஆர். (ஈ.வெ.ரா.) அனுப்பினாரா அல்லது இதற்காக வேண்டி உங்கள் ஊரில்ல உள்ள பெரிய மனிதர்கள் பணம் கொடுத்து ஒன்றும் அறியாத சிறுவர்களாகிய உங்களைப் பிடித்து அனுப்பினார்களா என்றும் நீங்கள் வரலாமா என்றும் கேட்டார்.

நாங்களே தான் வந்தோம்; மற்றவர்கள் எங்களைச் சிறைக்கு போகும்படி பணம் கொடுக்கவும் இல்லை; மறியல் செய்யும்படி எங்களைத் தூண்டவும் இல்லை யென்று தொண்டர்கள் சொன்னார்கள்.

நீதிபதி தொண்டர்களைப் பார்த்து ஏன் உங்கள் ஊரில் மறியல் செய்யக்கூடாது என்றும், வீண் செலவு செய்து கொண்டு இங்கு வந்து ஏன் மறியல் செய்து வருகிறீர்கள் என்றும் கேட்டார்.

தொண்டர்கள் எங்கள் ஊரில் மறியல் செய்தால் சிறைக்கு அனுப்புவதும் கிடையாது; மறியல் செய்வ தைப் பார்க்க மந்திரிகளும் அங்கு இல்லையென்றனார்.

நீதிபதி “சிறை செல்ல வேண்டுமென்றே வரு கிறீர்களா?” என்று கேட்டார்.

“ஆம். இந்தி எதிர்ப்பின் கிளர்ச்சி எங்கும் தெரிய வேண்டும்” என்று தொண்டர்கள் பதில் கூறினார்கள்.

பின்னும் நீதிபதியவர்கள் தொண்டர்களை நோக்கி, “ஏன் உங்கள் ஊரிலிருந்து சட்டசபைக்கு மெம்பர் களாக வந்திருக்கும் அங்கத்தவர்களைக் கொண்டு இந்தியை ஒழிக்க ஏற்பாடுகள் செய்யக் கூடாது?” என்று கேட்டார்.

அவர்களுக்கு மாதம் 75 ரூபாய் கூலி கொடுத்து (அப்போதுதான் முதல்முறையாக சட்டமன்ற உறுப்பி னர்களுக்கு மாதம் 75 ரூபாய் சம்பளம் என்று ராஜாஜி அறிமுகப்படுத்தினார்) வாய்ப்பூட்டுப் போடப்பட்டு விட்டது. இந்தி ஒழிந்தால்தான் மறியல் நிற்கும் என்றதும் இரு தொண்டர்களுக்கும் தலா நாலு மாதம் சிறைத் தண்டனை (கடின காவல்) விதித்திருப்பதாகச் சொன்னார்.

தொண்டர்கள் முகமலர்ச்சியுடன் சிறை சென்றனர். (விடுதலை, 26.8.1938).

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கைதான தொண் டர்களை விசாரித்துத் தீர்ப்பளிக்கும் நீதிபதியே உங்களை ஈ.வி.ஆர். (ஈ.வெ.ரா.) அனுப்பி வைத்தாரா என்று கேட்கிறார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் முதுகெலும் பாகப் பெரியார்தான் இருக்கிறார் என்பது நீதிபதிக்கும் முதன் மந்திரி இராஜாஜிக்கும் தெரிகிறது. ஆனால் இம்மாதம் வெளிவந்த ‘தமிழர் எழுச்சி’ சூன் இதழில் அதன் ஆசிரியர் முருகு இராசாங்கம், கருவூர் ஈழத் தடிகளின் ஒரு பத்தியை மேற்கோள்காட்டி, இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கும் பெரியாருக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று எழுதுகிறார். முழு பூசணிக் காயைச் சோற்றில் மறைக்கும் செயல் அல்லவா இது?

ஆச்சாரியாருக்கு சர்தார் பட்டேல் ஆசி

கராச்சியில் பத்திரிகை நிருபர்கள் சர்தார் பட்டேலைப் பேட்டி கண்டபோது, சென்னை மாகாணத்தில் கிரிமி னல் திருத்தச் சட்டம் விநியோகம் செய்யப்படுவது பற்றிக் கேட்டார்களாம். அதற்கு சர்தார் பட்டேல் பதில் அளிக்கையில், அந்தச் சட்டத்தைக் காங்கிரஸ் வெறுத் தாலும், அந்தச் சட்டத்தில் ஆட்சேபகரமல்லாத பகுதி யைச் சென்னை சர்க்கார் பிரயோகம் செய்து வருவது குற்றமல்லவென்று திருவாய் மலர்ந்தருளினாராம். பாசிஸ்டு ஸ்தாபனமாக மாறிவரும் காங்கிரஸ் காரியக் கமிடடி மெம்பர்களில் ஒருவரான பட்டேலிடமிருந்து வேறுவிதமான பதிலை எதிர்பார்க்க முடியுமா? காந்தி யாரும் கனம் ஆச்சாரியாரின் ஹிட்லரிசத்தை ஆதரித்து “அரிஜன்” பத்திரிகையில் எழுதத்தான் போகிறார். அதை வரவேற்கத் தமிழ் மக்களே! தயாராக இருங்கள்! (விடுதலை, 26.8.1938).

விடுதலை ஏட்டில் எழுதியிருந்தவாறே காந்தி அவர்களும் இராசாசியின் இந்தக் கொடூரமான அடக்கு முறைச் சட்டத்தை ஆதரித்து அரிஜன் 10.9.1938 ஏட்டில் எழுதினார்.

Let me now say a word about the two main grievances against Rajaji.

There is nothing wrong in making a knowledge of Hindustani compulsory, if we are sincere in our declarations that Hindustani is or is to be the Rashtrabhasha or the common medium of expression. Latin was and probably still is compulsory in English schools. The study did not interfere with the study of English. On the contrary English was enriched by a knowledge of the noble language. The cry of “mother tongue in danger” is either ignorant or hypocritical. And where it is sincere it speaks little for the patriotism of those who will grudge our children an hour per day for Hindustani. We must break through the provincial crust if we are to reach the core of all-India nationalism.

Is India one country and one nation or many countries and many nations? Those who believe that it is one country must lend Rajaji their unstinted support. If he has not the people behind him, he will lose his job. But it is strange, if the people are not behind him, that he has his great majority with him. But what if he had not the majority behind him? He must give up office but not his deepest conviction. His majority is worth nothing if it does not represent the Congress will. The Congress is wedded not to a majority; it is wedded to all that which will make this nation great and independent in the least possible time.

Mahatma Gandhi Collected Work’s, Vol (5) இதுபற்றி ‘தமிழ்நாட்டில் காந்தி’ என்ற நூலை எழுதியுள்ள அ. இராமசாமி அவர்கள் கூறியுள்ளதைப் பார்ப்போம்.

பிற்காலத்தில் சென்னை மாநிலத்தில் இராஜாஜி தலைமையில் காங்கிரஸ் அமைச்சரவை பதவி ஏற்று இந்தியைக் கட்டாயப் பாடமாக்கிய போதுதான் தமிழ கத்தில் இந்திக்கு - கட்டாய இந்திக்கு - எவ்வளவு கடும் எதிர்ப்பு இருக்கிறது என்பது முதன்முதலாகத் தெரிந்தது. சுயமரியாதைக் கட்சி, ஜஸ்டிஸ் கட்சி, முஸ்லீம் லீக், தாழ்த்தப்பட்டோர் சம்மேளனம் ஆகிய கட்சிகளெல் லாம் இதை எதிர்த்தனவென்றாலும், இந்த எதிர்ப்புப் போராட்டத்திற்குத் தலைமைத் தளபதியாக விளங்கிய வர் பெரியார் ஈ.வெ. இராமசாமியே. அவரும் ஆயிரத் திற்கும் மேற்பட்ட தொண்டர்களும் இப்போராட்டத்தில் கைதானார்கள். ஆனாலும் போராட்டம் தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டுதானிருந்தது. 1939இல் காங்கிரஸ் அமைச்சரவை பதவியிலிருந்து இறங்கிய போதுதான் இந்தப் போராட்டம் நின்றது.

இந்தி எதிர்ப்பு

இந்தி எதிர்ப்புப் போராட்டம் குறித்துத் திரு.வி.க. “மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்” என்னும் நூலில் கீழ்க்கண்டவாறு எழுதியிருக்கிறார். அவரைக் காட்டிலும் இதைச் சிறந்த முறையில் கூறக் கூடியவர் கள் யார்?

அவர் கூறுகிறார்:“காங்கிரஸ் ஆட்சியிலே ஹிந்தியைப் பொது மொழியாக்கும் முயற்சி விரைந்தெழுந்தது. ஒவ்வொரு மாகாணத்தில் ஒவ்வொருவிதமுறை கொள்ளப்பட்டது. நம் மாகாணத்தில் முதன் மூன்று பாரம் வரை ஹிந்தி கட்டாயப் பாடமாகச் செய்யப் பட்டது. அதுபற்றித் தமிழ்நாட்டில் பெருங் கிளர்ச்சி எழுந்தது. ஹிந்தி விருப்பப் பாடமாக்கப்பட வேண்டு மென்பதும், கட்டாயப் பாடமாக்கப்படலாகாதென்பதும் கிளர்ச்சிக்காரர் வேண்டுதல். அவ்வேண்டுகோளுக்கு அக்காலக் காங்கிரஸ் மந்திரி சபை செவிசாய்க்க வில்லை. கிளர்ச்சிக்காரருள் ஏறக்குறைய ஆயிரம் பேர் சிறைக்கு அனுப்பப்பட்டனர். ஹிந்தி பொதுமொழி என்று பேசப்பட்ட போது, அதுகுறித்து எவ்விதக் கிளர்ச்சியும் எழவே இல்லை. காங்கிரஸ் ஆட்சியில் ஹிந்தியைப் பொது மொழியாக்கும் முயற்சி அரும்பிய போதே அதற்கு மாறுபட்ட கிளர்ச்சி எழுந்தது. இனி இந்தியாவின் பொது மொழி எது ஆகும் என்று அறுதி யிட்டுக் கூறுதல் இயலவில்லை. இந்திய இயற்கை எதை ஏற்கிறதோ அஃதாகும்.”

காந்திஜி ஆதரவு

அப்போது இந்தியை எதிர்த்தவர்களுக்கு இந்தியை விருப்பப் பாடமாக்குவதில் எதிர்ப்பு இல்லை. ஆனால் காங்கிரஸ் அரசாங்கம் இந்தியைப் பரப்புவதற்குக் கட் டாயப் பாடமாக்குவதே சிறந்த வழி என்று கருதியது. காந்திஜியும் இதை ஆசீர்வதித்தார். அப்போது சென்னை மாநில அரசாங்கம் பத்திரிகைகளுக்கு விடுத்த ஓர் அறிக்கையில், “இந்திய தேசிய வாழ்வில் நம் மாநிலத்திற்கு உரிய இடம் கிடைக்க வேண்டுமானால், இந்தியாவில் மிக அதிகமான பேர் எந்த மொழியைப் பேசுகிறார்களோ அந்த மொழியில் ஓரளவு நடைமுறை ஞானம் பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும். அதனால்தான் நம் மாநில உயர்நிலைக் கல்விப் பாடத்திட்டத்தில், இந்துஸ்தானியைப் புகுத்துவதென்று அரசாங்கம் முடிவு செய்திருக்கிறது” என்று கூறியது.

அந்தச் சமயத்தில், “காங்கிரஸ்காரர்களே, எச்சரிக் கை!” என்று மகுடமிட்டு (10-9-1938) காந்திஜி ‘ஹரிஜ னில்’ ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அக்கட்டுரையில், இரண்டு சிக்கல்களை அவர் தெளிவுபடுத்தியிருந்தார். “இந்துஸ்தானியைக் கட்டாயப் பாடமாக்கலாமா?” என்ற கேள்விக்கு, “இந்துஸ்தானி பொது மொழி அல்லது ராஷ்டிர பாஷை ஆக வேண்டும் என்று நாம் கூறியது உண்மையாக இருந்தால், இந்துஸ்தானியில் ஓரளவு ஞானம் பெறுவதைக் கட்டாயமாக்குவதில் தவறு எதுவும் இல்லை.

ஆங்கிலப் பள்ளிகளில் இலத்தீன் கட்டாயப் பாடமாக இருந்தது; இன்றுகூட இருக்கிறது என்று எண்ணுகிறேன். அந்தப் படிப்பு ஆங்கிலப் படிப்பைப் பாதிக்கவில்லை. அதற்கு மாறாக, அந்தப் புகழ்பெற்ற மொழியின் ஞானத்தால் ஆங்கிலத் தின் அறிவு வளம் பெற்றது” என்று கூறியிருந்தார். “தாய்மொழிக்கு ஆபத்து” என்று கூறியவர்களைக் குறித்து எழுதுகையில், “இவ்வாறு கூக்குரலிடுவது ஒன்று அறியாமையினால் ஏற்பட்டதாய் இருக்க வேண்டும் அல்லது பாசாங்காக இருக்க வேண்டும்... இந்தியா ஒரே நாடு என்று நம்புவோரெல்லோரும் ராஜாஜிக்குத் தங்களுடைய முழு ஆதரவைத் தெரி விக்க வேண்டும்” என்று அழுத்தந்திருத்தமாகக் கூறியிருந்தார்.

ஆயினும் இந்தத் தகராறு நீண்டகாலம் நீடித்துக் கொண்டு போக வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. இரண்டாவது உலகப்போர் தொடங்கிய போது இராஜகோபாலாச்சாரி அமைச்சரவை கீழே இறங்கிவிட்டதால், ஆலோசகர்கள் உதவியுடன் நிருவா கத்தை ஏற்ற கவர்னர், முதல் நடவடிக்கைகயாகக் கட்டாயப் பாடமாய் இந்தி இருந்ததை அகற்றிவிட்டு அதை விருப்பப் பாடமாக வைத்தார்.

அ. இராமசாமி

தமிழ்நாட்டில் காந்தி’, பக்கம் 854-856

- தொடரும்...

Pin It