முற்பட்ட வகுப்பினர் எனப்படும் மேல்சாதியினருள் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் அரசமைப்புச் சட்டத்தின் 124ஆவது திருத்தம் 2019 சனவரியில் முடிவடைந்த 16ஆவது நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தடாலடியாக நிறைவேற்றப்பட்டது.

தி.மு.க., அ.தி.மு.க. தவிர்த்த - காங்கிரசு உள்ளிட்ட மற்ற எதிர்க்கட்சிகளும் மேல்சாதியினருக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்கிற கொள்கை கொண்டவை என்பதால், இச்சட்டத்திருத்தம் பெரிய எதிர்ப்பு இன்றி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியது. “கொக்கு ஒக்கக் கூம்பும் பருவத்து; மற்று அதன் குத்து ஒக்க சீர்த்த இடத்து” எனும் குறளுக்கு ஏற்ப, நரேந்திர மோடி தலைமை யிலான பா.ச.க. ஆட்சி இதில் செயல்பட்டது.

மேல்சாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை நிறைவேற்ற வேண்டிய நெருக்கடியான நிலை பா.ச.க.வுக்கு ஏற்பட்டிருந்தது. 2018 திசம்பரில் மத்தியப்பிரதேசம், இராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பா.ச.க. தன் ஆட்சி அதிகாரத்தைக் காங்கிரசிடம் பறி கொடுத்தது. பா.ச.க.வின் அடித்தளமாக விளங்கிவரும் மேல்சாதியினரின் வாக்குகள் அதற்கு எதிராகத் திரும்பியது கண்டு அதிர்ச்சி அடைந்தது. இழந்த செல்வாக்கை மீட்பதற்கான ஒரு வழிமுறையாக மேல்சாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை நிறை வேற்றியது.

பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் மீதான வன் கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் பா.ச.க. ஆட்சியில் ஒரு திருத்தம் செய்யப்பட்டது. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் குற்றம் சாட்டப்பட்டவர் முன் பிணை பெறமுடியாது என்று இருந்ததை, முன்பிணை பெறலாம் என்று மோடி ஆட்சி மாற்றியது. இம்மாற்றத்தைப் பட்டியல் இனத்தவரும், பழங்குடியினரும் கடுமையாக எதிர்த்து இந்தியா முழுவதும் போராட்டங்களை நடத்தினர். இதனால் மோடி ஆட்சி அத்திருத்தத்தைத் திரும்பப் பெற்றது. வலிமையான-துணிவான தலைவர் என்று மேல்சாதி யினரால் முன்னிறுத்தப்பட்ட மோடி இவ்வாறு பின் வாங்கியதை வெறுத்தனர். இவர்களின் சினத்தைத் தணித்து மீண்டும் பா.ச.க. பக்கம் ஈர்க்க வேண்டும் என்பதும் மேல்சாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக் கீடு வழங்கியதன் நோக்கங்களில் ஒன்றாகும்.

2019 ஏப்பிரல்-மே மாதங்களில் நடைபெறவிருந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய அளவில் மேல் சாதியினரின் வாக்குகளை முழுமையாகப் பெறவேண்டும் என்கிற நோக்கத்திலும், இச்சமயத்தில் கொண்டுவந் தால் வாக்கு வங்கி அரசியலுக்காக எதிர்க்கட்சிகள் எதிர்க்கமாட்டா என்கிற புரிதலினாலும் அவசர அவசர மாக மூன்றே நாள்களில் மேல்சாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை பா.ச.க. ஆட்சி நிறைவேற்றியது. இடஒதுக்கீட்டின் மூலம் அரசு வேலையிலும், கல்வியிலும் இடம்பெறுவோர் தகுதி-திறமை அற்றவர்கள் என்று காலமெல்லாம் இழிவு படுத்திவந்த மேல்சாதியினர் ஒரே நாளில் இடஒதுக் கீட்டுக் கொள்கைக்குப் புனிதப் போர்வை போர்த்தி விட்டனர்.

மேதை அம்பேத்கரின் பெரியாரின் அரும்பெரும் முயற்சியால் அரசமைப்புச் சட்டத்தில் பட்டியல் இனத்தவர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு விதி 16(4) மூலம் அரசு வேலையிலும், விதி 15(4) மூலம் கல்வியிலும் இடஒதுக்கீடு உரிமை உறுதி செய்யப் பட்டது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு அளிப்பதற்காக ஆணையம் அமைக்க வேண்டும் என்பதற்கும் அரசமைப்புச் சட்டத்தில் அம்பேத்கர் வழி வகை செய்திருந்தார்.

இதன்படி, காகா கலேல்கர் தலைமையில் அமைக் கப்பட்ட முதலாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் 1955-இல் அளித்த அறிக்கையின் பரிந்துரைகளை ஏற்று பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு நடுவண் அரசில் இடஒதுக்கீடு அளிக்க பிரதமர் நேரு மறுத்துவிட்டார்.

1978-இல் தில்லியிலும் வடஇந்திய மாநிலங்களிலும் வே. ஆனைமுத்து தலைமையில் மா.பெ.பொ.க.வும், பீகாரின் இராம் அவதேஷ் போன்றவர்களும் இணைந்து நடத்திய போராட்டங்களின் விளைவாக பி.பி. மண்டல் தலைமையில் இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் நடுவண் அரசால் அமைக்கப்பட்டது. பிற் படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடு இடஒதுக் கீடு அளிக்க வேண்டும் என்று மண்டல்குழு 1980-இல் பரிந்துரைத்த போதிலும் 1990-இல் வி.பி. சிங் இதை நடைமுறைப்படுத்துவதற்கான ஆணை பிறப்பிக் கப்படும் வரையில் அது கிடப்பில் போடப்பட்டிருந்தது.

இந்த வரலாற்றைக் குறிப்பிடுவதன் நோக்கம், அரசமைப்புச் சட்டத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டுக்கு உரிமை 1950 முதலே நடைமுறைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பார்ப்பன - மேல்சாதி ஆளும் வர்க்கத்தின் சூழ்ச்சியால் நாற்பது ஆண்டுகள் கழித்தே அந்த உரிமை கிடைத்தது. ஆனால் அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்படாத மேல் சாதியினருக்கான இடஒதுக்கீட்டைப் பார்ப்பன- மேல் சாதி ஆளும் வர்க்கம் மூன்றே நாள்களில் சட்ட உரிமை யாக்கிக் கொண்டது. பெரியாரும் அம்பேத்கரும் சுட்டிக் காட்டியதைப் போல், இந்திய அரசு என்பது பார்ப்பன - பனியா - மேல்சாதி ஆதிக்க அரசாகவே இருக்கிறது.

மேல்சாதியினருள் பொருளாதாரத்தில் நலிவடைந் தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான ஆணையம் என்பதை அமைக்காமல், தடாலடியாகச் சட்டத்திருத்தம் செய்தது மாபெரும் அரசமைப்புச் சட்ட மோசடியாகும். மண்டல் குழுவின் அறிக்கையின்படி பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 52 விழுக்காடாக இருந்த போதிலும், எல்லா வகுப்பினருக்குமான மொத்த விழுக்காடு 50 விழுக்காட்டிற்குள் இருக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்புக்கு இணங்க, மண்டல் குழு 27 விழுக்காடு மட்டுமே பரிந்துரைத்தது. ஆனால் மேல் சாதியினருக்கான 10 விழுக்காடு இடஒதுக்கீடு என்பது எந்த அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது என்பது தெளிவுபடுத்தப்படவில்லை.

இரண்டாயிரம் ஆண்டுகளாக மனுநீதியின் பெயரால், சூத்திரர்களும், பஞ்சமர்களும் சமுதாய உரிமை, கல்வி உரிமை மறுக்கப்பட்டு பலவகையான ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். இவ்வாறு எண்ணற்ற இயலாமைகளுக்கு இலக்கான இவர்கள் அரசு வேலை யிலும் கல்வியிலும் போதிய பிரதிநிதித்துவம் பெறு வதற்கான வாய்ப்பை அளிக்க வேண்டும் என்பதே இடஒதுக்கீட்டுக் கொள்கையின் குறிக்கோளாகும். இடஒதுக்கீடு குறித்த அரசமைப்புச் சட்ட விதிகளில் இக்கோட்பாடு தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ளது.

பட்டியல் இனத்தவர், பழங்குடியினர், பிற்படுத் தப்பட்ட வகுப்பினர்க்கு இடஒதுக்கீடு உரிமை வழங்கி எழுபது ஆண்டுகளுக்குப் பின்னும் இவர்கள் நடுவண் அரசின் அதிகாரம் வாய்ந்த முதல்நிலைப் பணிகளில் 25 விழுக்காட்டைக்கூட எட்டவிடல்லை, 75 விழுக்காடு பதவிகளை மேல்சாதியினரே கைப்பற்றியுள்ளனர். சாதி ஆதிக்க ஒடுக்குமுறைக்கு உள்ளான சாதிப்பிரிவி னருக்கு இடஒதுக்கீடு என்கிற அடிப்படைக் கோட்பாட் டைத் தகர்த்து, உயர்ந்த சாதியினர் என்கிற பெயரால் ஒடுக்குமுறைகளை ஏவியவர்களுக்கு மோடி ஆட்சியில் 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

தற்போது நடுவண் அரசில் பட்டியல் இனத்தவர்க்கு 15 விழுக்காடு; பழங்குடியினர்க்கு 7.5 விழுக்காடு; பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்க்கு 27 விழுக்காடு என மொத்தம் 49.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மீதியுள்ள 50.5 விழுக்காடு இடங்கள் பொதுப்பிரிவு (ழுநநேசயட ஊயவநபடிசல) எனப்படுகிறது. பொதுப் பிரிவில் பட்டியல் இனத்தவர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோரும் அதிக மதிப்பெண் பெறுவதன் மூலம் இடம்பெறலாம். பொதுப்பிரிவில் மேல்சாதியி னருள் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பது, பட்டியல் இனத்தவர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை பொதுப் பிரிவில் நுழைய விடாமல் தடுத்து, 50.5 விழுக் காட்டையும் மேல்சாதியினரே அனுபவிப்பதற்கான சூழ்ச்சித் திட்டமாகும்.

நடுவண் அரசு 1990இல் பிற்படுத்தப்பட்டவர் களுக்கு வேலையில் 27 விழுக்காடு இடஒதுக்கீடு அளித்த போதிலும், கல்வியில் 2006ஆம் ஆண்டில் தான் அளித்தது. ஆனால் தற்போது மேல்சாதியின ருக்கு ஒரே சமயத்தில் வேலையிலும் கல்வியிலும் 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளித்துள்ளது. மேலும் தனியார் கல்வி நிறுவனங்களிலும் இந்த இடஒதுக்கீட்டைச் செயல்படுத்த வேண்டும் என்று இச்சட்டம் கூறுகிறது. இந்தியாவில் உயர் கல்வியில் 80 விழுக்காடு தனியாரிடம் இருக்கிறது. எனவேதான் தனியார் நிறுவனங்களில் மேல்சாதியினருக்கு இடஒதுக்கீடு தரவேண்டும் என்கிறது நடுவண் அரசு.

இதேபோல், பட்டியல் இனத்தவர்க்கும், பழங்குடியினருக்கும், பிற்படுத்தப் பட்ட வகுப்பினருக்கும் தனியார் உயர் கல்வி நிறு வனங்களில் இடஒதுக்கீடு அளிக்கப்படுமா? என்பதை இதுவரை நடுவண் அரசு தெளிவுபடுத்தவில்லை. உச்சநீதிமன்றத்தின் மூலம் இதைப் பெறமுடியும் என்று இடஒதுக்கீட்டுப் பிரிவினர் நம்புகின்றனர். தனியார் உயர்கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கை, கல்விக் கட்டணம் முதலானவற்றில் அரசு தலையிட முடியாது என்று இதுவரை கூறிவந்த உச்சநீதிமன்றம் இப்போது என்ன சொல்லும் என்பதும் கேள்விக் குறியாக நிற்கிறது.

இந்தியாவில் மொத்தம் 600 பல்கலைக்கழகங் களும் 45,000 கல்லூரிகளும் இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை தனியாரிடம் உள்ளன. நடுவண் அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், 2016ஆம் ஆண்டு முதல் உயர்கல்வி நிறுவனங்களை அய்ந்து வகையான செயல்திறன் அலகுகளின் அடிப்படையில் தரவரிசைப்படுத்துகிறது.

தேசிய நிறுவனங்களின் தரவரிசைக் கட்டமைப்பு (National Institutional Ranking Framework - NIRF) என்பதை ஏற்படுத்தியுள்ளது. அய்ந்து செயல்திறன் அலகுகளை நிறைவு செய்யும் உயர்கல்வி நிறுவனங் கள் மட்டுமே தரவரிசைப்படுத்துகின்றன. இவை எட்டுப் பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன.

2016-17ஆம் ஆண்டில் இவ்வாறு 445 உயர் கல்வி நிறுவனங்கள் முதன்மை நிலை நிறுவனங் களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றுள் அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன. மற்ற உயர்கல்வி நிறுவனங்களைவிட இவற்றில் கல்விக் கட்டணம் அதிகம். இந்த 445 முதல்நிலை உயர்கல்வி நிறுவனங்களில் 2016-17ஆம் கல்வி ஆண்டில் மொத்தம் 16.09 இலக்கம் மாணவர்கள் சேர்ந்தனர். இவர்களில் 4.55 இலக்கம் மாணவர்கள் - அதாவது 28 விழுக்காட்டினர் பொருளாதாரத்தில் நலிவடைந்த மேல்சாதியினர்.

அதிகக் கல்விக் கட்டணம் பெறும் முதல்நிலை உயர்நிலைக் கல்வி நிறுவனங்களில்-மேல்சாதியினருக்கான 10 விழுக்காடு இடஒதுக் கீடு வழங்கப்படுவதற்கு முன்பே - மேல்சாதியினர் கிட்டத்தட்ட மூன்று மடங்கு இடங்களைப் பெற்றுள்ள னர் என்பதைப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் போதிய பிரதிநிதித்துவம் பெறுவதற் காகத்தான் இடஒதுக்கீடு என்கிற கோட்பாடு மேல் சாதியினருக்கு எப்படிப் பொருந்தும்? எல்லா வகையிலும் அரசமைப்புச் சட்டத்திற்கும் இயற்கை நீதிக்கும் எதிராகவே மோடி ஆட்சியின் 10 விழுக்காடு இட ஒதுக்கீடு இருக்கிறது.

எட்டுவகைப் பாடப் பிரிவுகளில் மேல்சாதியினருள் பொருளாதாரத்தில் நலிந்த மாணவர் எண்ணிக்கை - விழுக்காடு

  1. கட்டடக்கலை 12.9
  2. மருத்துவம் 14.1
  3. சட்டம் 19.2
  4. மேலாண்மையியல் 23.8
  5. பொறியியல் 26.7
  6. பல்கலைக்கழகங்கள் 27.8
  7. மருந்தியல் 30.8
  8. கல்லூரிகள் 33.5
  9. மொத்தச் சராசரி         28.3

கட்டடக் கலை, மருத்துவம், சட்டம் முதலான பிரிவுகளில் பொருளதாரத்தில் நலிந்த மேல்சாதி மாண வர்கள் 20 விழுக்காட்டுக்கும் குறைவாக இருப்பதற்குக் காரணம், இவற்றில் கல்விக் கட்டணம் அதிகம் என் பதும், மிகக்குறைவான கல்லூரிகளே உள்ளன என் பதும் ஆகும். 445 கல்வி நிறுவனங்களில் பத்து சட்டக் கல்லூரிகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. நடுவண் அரசின் தேசிய சட்டக் கல்லூரியில் இளநிலைப்படிப்பில் ஆண்டுக் கட்டணம் ரூ.2 இலக்கம். அகமதாபாத்தில் உள்ள இந்திய வேளாண்மையியல் நிறுவனத்தின் முதுநிலைப்படிப்புக்கு ஆண்டுக் கட்டணம் ரூ.10 இலக்கம் ஆகும். இந்தியாவில் உள்ள 4000-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் 100 பொறியியல் கல்லூரிகள் மட்டுமே இந்த 445 முதல்நிலை உயர் கல்வி நிறுவனங்களில் இடம்பெற்றுள்ளன. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள் எனப்படும் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் (IITs) தேசியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் (NITs) இப்பட்டியலில் உள்ளன.

முதல்நிலை உயர்கல்வி நிறுவனங்களாகப் பட்டிய லிடப்பட்டுள்ள - அதிகக் கல்விக் கட்டணம் செலுத்த வேண்டிய 445 கல்வி நிறுவனங்களில் மேல்சாதி யினருள் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவு மாண வர்கள் 28 விழுக்காடு உள்ளனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் என்பது, மேல்சாதியினருக்கான 10 விழுக்காடு சட்டத் தில் கூறப்பட்டுள்ள ஆண்டு வருவாய் ரூ.8 இலக்கத் திற்கும் குறைவான வருவாய் பெறுபவர்கள் என்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. அரசின் கல்வி நிறுவனங் களிலும், கல்விக் கட்டணம் இதைவிடக் குறைவாக உள்ள தனியார் கல்வி நிறுவனங்களிலும் மேல்சாதி மாணவர் எண்ணிக்கை 40-50 விழுக்காடு இருக்கும்.

இந்தப் பின்னணியில், மேல்சாதியினர் அரசு வேலையிலும், உயர் கல்வியிலும் அவர்களின் விகிதாசாரத்தைவிட பலமடங்கு இடம் பெற்றிருப்பதால் மேல்சாதியினருள் பொருளாதாரத்தில் நலிந்தவர் களுக்கு என்ற பெயரில் 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாததாகும். இது பொதுப்பிரிவில் பட்டியல் இனத் தவர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இடம்பெறுவதைத் தடுப்பதாகும்.

10 விழுக்காடு சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன் றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. எல்லா வகையிலும் அரசமைப்புச் சட்டத்திற்கு முரணான இச்சட்டத்துக்கு, உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துவிட்டு, வழக்கை மேற்கொண்டு விசார ணைக்கு ஏற்றிருக்க வேண்டும். இடைக்காலத் தடை விதிக்கப் படாததால், இந்தக் கல்வி ஆண்டு முதலே இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு நடுவண் அரசு மாநில அரசுகளுக்கு ஆணையிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு இந்த ஆண்டு பொது மருத்துவம், பல் மருத்துவம் ஆகிய படிப்புகளில் மேல்சாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த இயலாது என்று தெரிவித்துள்ளது.

15.6.2019 அன்று மோடி தலைமையில் நடை பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நடுவண் அரசின் கீழ் உள்ள 158 மத்திய கல்வி நிறுவனங்களின் 10 விழுக்காடு இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற் காக 2,14,766 கூடுதல் இடங்களை உருவாக்கவும் ரூ.4315 கோடி நிதி ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டது. இரண்டு கல்வி ஆண்டுகளில் இதை நிறைவேற்றிட ஆணையிட்டுள்ளது.

மேல்சாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீட்டைச் செயல்படுத்துவதில் தீவிரம் காட்டும் நடுவண் அரசு, மருத்துவப் படிப்பு இடங்களில் மாநிலங்களிலிருந்து நடுவண் அரசின் ஆணையின்படி அகில இந்தியத் தொகுப்புக்கு 15 விழுக்காடு இடங்கள் ஒதுக்கப்படு கின்றன. இவ்வாறு பெறப்படும் 4600 எம்.பி.பி.எஸ். மருத்துவ இடங்களில் நீண்ட போராட்டத்திற்குப் பிறகே பட்டியல் இனத்தவர்க்கும், பழங்குடியினருக்கும் இட ஒதுக்கீடு தரப்பட்டது. ஆனால் பிற்படுத்தப்பட்டவர் களுக்கு 27 விழுக்காடு தர நடுவண் அரசு மறுக்கிறது. இதனால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குக் கிடைக்க வேண்டிய 1242 இடங்களை மேல்சாதி மாணவர்கள் கைப்பற்றிக் கொள்கின்றனர். தமிழ்நாட்டில் அரசுக் கல்லூரிகளிலிருந்து 460 இடங்கள் மத்திய தொகுப் புக்குத் தரப்படுகிறது.

பொருளாதார அடிப்படையில் வழங்கப்படும் 10 விழுக்காடு இடஒதுக்கீடு நடைமுறைக்கு வந்துவிட்ட பிறகு, பட்டியல் குலத்தினர், பழங்குடியினர், பிற்படுத் தப்பட்ட வகுப்பினர் ஆகியோர்க்கும் பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்ற நிலையை மேல்சாதி ஆளும் வர்க்கம் உரு வாக்க முயலும். இந்த நிலை ஏற்பட்டால் இந்தியாவில் சாதிய ஏற்றத்தாழ்வும், தீண்டாமைக் கொடுமையும் ஒழிந்துவிட்டது போல ஆளும் வர்க்கம் நிலைநாட்ட முயலும். இந்தியாவில் இன்றும் ஒருவரின் சமூக, பொருளாதார, கல்வி, பண்பாட்டு நிலைகளைத் தீர் மானிப்பதில் சாதி முதன்மையான கூறாகச் செயல்பட்டு வருகிறது.

உச்சநீதிமன்றம் எத்தகைய தீர்ப்பை வழங்கும் என்று எதிர்பார்த்திருக்காமல், பட்டியல் இனத்தவர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகிய மூன்று பிரிவினரும் எல்லா வகையிலும் தமக்கு எதிரான-மேல்சாதியினருள் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு எனும் கேடான சட்டத்தை எதிர்த்து தொடர்ந்து பரப்புரையும் போராட்டங்களும் செய்ய வேண்டும்.

(குறிப்பு : முதல் நிலை உயர்கல்வி நிறுவனங்கள் 445 தொடர்பான புள்ளிவிவரங்கள் சூன் 8, 2019 நாளிட்ட எக்கனாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லி ஆங்கில ஏட்டிலிருந்து எடுக்கப்பட்டவையாகும்).