‘தானே’ புயல் கடலூர் பகுதியில் 30-12-2011 இரவு கரையைக் கடக்கும் என, சென்னை வானிலை இயக்குநர் அலுவலகத்தார், முன்கூட்டியே அறிவித்தனர்.

அதனால் விளைந்த ஒரே பயன் மனிதர்கள் அதிகம் பேர் கொல்லப்படவில்லை என்பதுதான்.

‘தானே’ புயல் சரியாகக் கடலூருக்குத் தெற்கே உள்ள திருச்சோபுரம், கம்பளிமேடு வழியாகத்தான் கடந்தது. அப்படிக்கடந்த புயலின் விசை 135 முதல் 142 கிலோ மீட்டர் வேகத்தில் இருந்தது.

இதே பகுதியில் சில நூறு ஆண்டுகளுக்கு முன் கடல்கோள் அல்லது கடும்புயல் வீசியதற்கான அடை யாளங்கள் இன்றும் உள்ளன.

30-12-2011 புயலின் முதலாவது கேடு, தமிழ் நாட்டில் கடலூர் மாவட்டத்தில் 31 பேர்களும், மற்ற மாவட்டங்களில் 9 பேர்களும்; புதுச்சேரி மாநிலத்தில் 8 பேர்களும் ஆக 48 பேர்கள் கொல்லப்பட்டுவிட்டனர்.

கடலூர் மாவட்டத்தில் கடலூர், நெய்வேலி பகுதிகளில் 45,000 மின் கம்பங்கள், 4,500 மின்மாற்றி கள், 27 மின்கோபுரங்கள் பெருஞ்சேதம் அடைந்தன. 10.500 கிலோ மீட்டர் நீளத்துக்கு மின் கம்பிகள் பாழாயின. இவற்றின் மதிப்பு ஏறக்குறைய ரூ.1500 கோடியாகும். தென்னந்தோப்புகள், வாழைத் தோட் டங்கள், நெல்வயல்கள் சின்னாபின்னப்படுத்தப்பட்டன. இவற்றை 18-01-2012 அன்று நாம் நேரில் பார்க்க முடிந்தது. அன்றுவரையில் கூட, கடலூர் மாவட்டத் தின் தலைநகரை ஒட்டிய பகுதியில் மின்வசதி திரும்பத் தரப்படவில்லை. அடர்ந்த காடுபோல் இருந்த நெய்வேலி நகரியம் பெருமளவில் மரங்கள் வேரோடு சாய்ந்ததால், பொட்டல் வெளி போலாயிற்று. நெய் வேலியில் 5 இலட்சம் மரங்கள் சாய்ந்துவிட்டதாகப் பழுப்பு நிலக்கரி நிறுவனம் அறிவித்துள்ளது.

பண்ணுருட்டி பகுதியில் மட்டும் 50, 60 ஆண்டுக் கால பலா, முந்திரித் தோப்புகள் குறைந்தது இரண்டு இலட்சம் ஏக்கரில் அழிந்துவிட்டன. முந்திரி 15 ஆண்டு களுக்குப் பிறகுதான் நல்ல விளைச்சல் தரும், ஓர் ஏக்கரில் 3 மூட்டை முந்திரிக் கொட்டைக்குக் குறை யாமல் கிடைக்கும். முந்திரி புன்செய்க் காட்டில் தரைக்கு மேல் காய்க்கும் தங்கம் ஆகும்.

இத்தோப்புகளை நம்பிப் பலதலைமுறைக் கால மாக வாழ்கிற வேளாண் மக்கள் தலையெடுக்க இன்னும் 15 ஆண்டுகள் ஆகும். அதுவரையில் என்ன வேலைக்குப் போவது-எங்கே போவது என்பதே இவர்கள் முன் உள்ள ஒரு பெரிய கேள்வி. முந்திரித் தோப்பை இழந்தவர்களுக்கு, எக்டேர் (2.5 ஏக்கர்) ஒன்றுக்கு ரூபா 9 ஆயிரம் மட்டுமே இழப்பாக அரசி னால் தரப்படுகிறது. இது மிகக்குறைவு. இது ரூபா 25 ஆயிரமாக உயர்த்தித் தரப்படவேண்டும்.

கடலூர் மாவட்டத்தில் நெல், கரும்பு, வாழை, மா, பலா, முந்திரி ஆகிய பயிர்கள் 80 சதம் அளவுக்குப் பாழாகிவிட்டன. கேப்பர் குவாரி, இராமாபுரம் பகுதிகள் பெரிய அளவு அழிவுக்கு ஆகிவிட்டன.

வங்காளத்தில் சுந்தரவனத்துக்கு அடுத்தாற்போல், அடர்ந்த-வலைப் பின்னல் மரம் செடி கொடிகளைக் கொண்ட பிச்சாவரம் அலையாற்றி வனம் சீரழிக்கப் பட்டுவிட்டது.

தமிழ்நாட்டில் மொத்தம் 2.5 இலட்சம் எக்டேர் நிலங்களில் பயிர்கள், தோட்டப் பயிர்கள் அடியோடு அழிக்கப்பட்டுவிட்டன.

நெல்லுக்கு ஏக்கருக்கு ரூபா 20,000; வாழைக்கு ரூபா 30,000; கரும்புக்கு ரூ.30,000; தென்னந் தோப்புக்கு - மரம் ஒன்றுக்கு ரூ.3,000; பூந்தோட்டங் களுக்கு ஏக்கருக்கு ரூபா 5,000 என உடனடியாக அரசு இழப்பீடு வழங்கினாலொழிய கடலூர், பண்ணு ருட்டி, புதுச்சேரி, நாகை, திருவாரூர் வேளாண் மக்கள் கடைத்தேற முடியாது.

இறந்துபோன ஒவ்வொருவருக்கும் ரூபா 5 இலக்கம்; மாடு ஒவ்வொன்றுக்கும் ரூ.15,000; ஓர் ஆட்டுக்கு ரூ.3,000; பாழடிக்கப்பட்ட வீடுகளுக்கு ஓர் இலக்கம்; பழுதடைந்த வீடுகளுக்கு ரூ.50 ஆயிரம் என இழப்பீடு வழங்கினாலன்றித் ‘தானே’ புயலுக்கு இலக்கான மக்கள் கரையேற இயலாது.

புதுவை மாநிலத்தில் வில்லியனூரில் தொடங்கி, புதுச்சேரி கடற்கரை ஓரம் உள்ள பாரதியார் பூங்கா வரையில் உள்ள பகுதிகளை 3-1-2012, 4-1-2012, 17-1-2012 நாள்களில் நாம் பார்க்க முடிந்தது.

சிறிய ஓட்டுவில்லை வீடுகள், கூரை வீடுகள், புதியதாக வைக்கப்பட்ட சுவர்கள், வீடுகளின் பழைய சுற்றுச்சுவர்கள் சின்னாபின்னமாக்கப்பட்டுவிட்டன.

நூறாண்டு ஆன பெரிய மரங்கள், தென்னந் தோப்புகள், வாழைகள் மண்டை மண்டையாக ஒடிந்தும் வேரோடு வீழ்ந்தும் நாசமாகிக் கிடந்தன. புதுவை கடற்கரைக்கு அழகு சேர்க்கும் “பாரதி பூங்கா” அடையாளம் தெரியாத அளவுக்கு அழிக்கப்பட்டு விட்டது. குடிநீர் வசதி 3-1-2012 வரை பலவீடுகளுக்குக் கிடைக்கவில்லை; மின்வசதி 17-1-2012 வரையில் கூட வ.உ.சி. நகர் போன்ற பகுதிகளுக்கு மீண்டும் வரவில்லை.

புதுவை, மாநிலத்திலும் தமிழகத்திலும் ‘தானே’ புயலால் விளைந்த கேடுகளின் மதிப்பு ரூபா 10,000 கோடி அளவுக்கு உள்ளது.

நடுவண் அரசினர் ஆய்வுக்குழுவினர்-ஒன்பது பேர் 7-1-2012 சனி அன்று தலைமைச் செயலகத்தில் தமிழக அரசு அதிகாரிகளுடன் கலந்து பேசிவிட்டு, 8-1-2012, 9-1-2012 முதலான நாள்களில் புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், திருவாரூர், நாகை மாவட்டங்களுக்குச் சென்று, புயலால் பாழ்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.

தமிழ்நாட்டு அரசின், நடுவண் அரசினரிடமிருந்து ‘தானே புயல் அழிவு மீட்புக்காக, ரூ.5,250 கோடி நிதி வழங்கக் கேட்டுள்ளனர். “யானைப் பசிக்குச் சோளப் பொரி” போடுவது போல, இந்திய அரசு வெறும் 500 கோடியை மட்டும் வழங்கியுள்ளது.

இன்றைய தமிழக அரசினை, நடுவண் அரசு வேண்டா வெறுப்பாக-மாற்றாந்தாய் மனப்பான்மை யுடன் நோக்குகிறது என்பது ஒரு பெரிய உண்மை.

தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும், நடுவண் அரசில் உள்ள தமிழக அமைச்சர்களும் கட்சிக் கண்ணோட்டம் பாராமல் இந்தியத் தலைமை அமைச்சர், நிதி அமைச்சர், மற்றும் நடுவண் அதிகாரி களுக்கு அழுத்தம் தந்து-தமிழகத்துக்கும், புதுச்சேரிக்கும் ‘தானே’ புயலால் நேர்ந்துவிட்ட பேரழிவுகளுக்குப் போதிய நிதி உதவி கிடைக்க ஆவன செய்ய வேண்டும்.

தமிழக அரசினர் உடனடியாகச் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டனர். ரூ.800 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கிப் பணிகளை மேற்கொண்டனர். ஆனால் அதிகாரிகள் மட்டத்தில் பெரிய அளவில் காலத் தாழ்வும், மின்துறை, உள்ளாட்சித் துறைகளில் கையூட்டும் பெரிய அளவில் இருப்பதாக அறிய முடிகிறது.

 தமிழகச் செல்வந்தர்களும், தொழிலதிபர்களும், பொதுமக்களும் “முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு” இதுவரை ரூபா 55 கோடிக்குமேல் வழங்கியுள்ளனர். மக்களின் பங்கு இன்னும் அதிகமாகவே இருக்க வேண்டும் எனக் கோருகிறோம்.

- வே.ஆனைமுத்து

Pin It