தொல்காப்பியர் காலத்திலேயே தமிழ் நிலத்தில் ஆரியப் பார்ப்பனக் கொள்கைகள் வேரூன்றிவிட்டிருந்தன. திருவள்ளுவர் காலத்தில் பார்ப்பானும் பசுவும் மேன்மக்களாக-போற்றிப் பேணிக் காக்கப்பட வேண்டிய உயர்பிறப்பினராக மதிக்கப்படும் நிலை சமூகத்தில் வளர்ந்துவிட்டிருந்தது.

ஆவிற்கு நீர்என்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளி வந்தது இல் - குறள் 1066

பசுவிற்கு நீர் வேண்டும் என்று அறம் நோக்கி இரந்து கேட்டாலும் அந்த இரத்தலைவிட நாவிற்கு இழிவானது மற்றொன்று இல்லை-மு.வ. உரை. பசுவின் நீர்வேட்கையைத் தணிப்பது சிறந்த அறம் என்று கருதப்பட்டது. பசுவுக்குத் தண்ணீர் தருவதற் காகப் பிச்சையும் எடுக்கலாம்!

அதனால் திருவள்ளுவர் பார்ப்பானையும் பசுவையும் உயர்வாகப் போற்றினார் என்று பொருள் கொள் ளக்கூடாது. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பது போன்ற எண்ணிறந்த பார்ப்பனிய எதிர்ப்புக் கருத்து கள் திருக்குறள் முழுவதும் விரவிக் கிடப்பதைக் காண லாம். திருவள்ளுவர் அவர் காலத்தின் சமூக வாழ்க் கையைப் படம் பிடித்துக் காட்டி உள்ளார் என்ற தன் மையில் இதுபோன்ற குறள்பாக்களை நோக்க வேண்டும்.

சிலப்பதிகாரத்தில் கண்ணகி மதுரையை எரித்த போது, பார்ப்பனர், பசு. முதியோர், குழந்தைகள் தவிர்த்து மற்றவர்களை எரிக்குமாறு ‘தீ’க்கு ஆணையிட்டார். இதன் தொடர்ச்சியாக, பிற்காலத்தில் பார்ப்பனர் ‘பூதேவராக’ (பூமியில் உள்ள கடவுளராக)வும், பசு வழிபாட்டுக்குக் குரியதாகவும் பார்ப்பனர்களால் கற்பிக்கப்பட்டது. எல்லா தேவர்களும் தெய்வங்களும், புனித நதிகளும் பசுவின் உடம்பில் குடிகொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. அதனால்தான் புதுமனை புகுவிழாவின் முதல் நிகழ் வாகப் பசுவைப் புதிய வீட்டிற்குள் நுழையச் செய்கின் றனர். காந்தியார் பசுவைப் புனிதமானதாகக் கருதிய தால் பசுவின் பாலைக் குடிக்காமல், ஆட்டுப்பால் குடித்தார். ஆனால் பார்ப்பனர்களோ ‘தானத்தில் சிறந்தது கோ தானம்’ என்று புளுகி, எண்ணற்ற பசுக்களைத் தானமாகப் பெற்று, பாலும் தயிரும் நெய்யும் என நெடுங்காலம் உண்டுக்கொழுத்தனர்.

2500 ஆண்டுகளுக்கு முன், புத்தர் வருணாசிர மத்தை-வேள்வியை-பார்ப்பனர்களை எதிர்த்தார். பல ஆண்டுகள் மக்களிடம் பரப்புரை செய்தார். ஆயினும் பார்ப்பனர்கள் வரலாறு நெடுகிலும் மன்னர்களைப் பலவழிகளிலும் தம் வயப்படுத்தி, தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டி வந்தனர். பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பிக்கும் சாதி அமைப்பு வலிமையாகக் கட்டமைக்கப்பட்டது. அரசியலை ஆட்டிப்படைப்பதற்கு மதத்தைப் பார்ப்பனர்கள் தம் கைமுதலாகக் கொண்ட னர். இன்றுள்ள முதலாளிய-சனநாயக நாடாளுமன்ற அரசமைப்பிலும் மதவழிப்பட்ட அரசியலை முன்னெ டுப்பதன் மூலம் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட முயன்று வருகின்றனர். இவர்கள் காங்கிரசு, பா.ச.க., பொதுவுடைமைக் கட்சிகள், திராவிடக் கட்சிகள் என எல்லாக் கட்சிகளிலும் இருந்துகொண்டு ஒரே நோக் கத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

பா.ச.க. ஆட்சி செய்யும் மத்தியப்பிரதேச மாநில அரசு, 2004 ஆம் ஆண்டின் பசுவதைத்தடுப்பு சட்டத் தில் கடுமையான திருத்தங்களைச் செய்தது. இதற்கு, குடியரசுத் தலைவரும் ஒப்புதல் வழங்கிவிட்டார். மத்தியப்பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், பசுப்பாதுகாப்புப் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

2012 சனவரி முதல் கிழமையில், முதலமைச்சர் சவுகான், “போதிய பராமரிப்பு இல்லாமையால்தான் 95ரூ பசுக்கள் இறக்கின்றன. பசுக்களை எவ்வாறு சிறப்பாகப் பேணுவது என்பதற்கு ரூ.500 கோடிக்கு அரசு ஒரு திட்டத்தைச் செயல்படுத்த உள்ளது. இது இந்தியாவுக்கே சிறந்த எடுத்துக்காட்டான திட்டமாகத் திகழும்” என்று பெருமையுடன் கூறி உள்ளார். பொதுப் பணித்துறை அமைச்சர் நரேந்திரசிங், “மக்களின் மத உணர்வு மதிக்கப்படவேண்டும். எனவேதான் அரசின் முதன்மையான செயல் திட்டமாகப் பசுப்பாதுகாப்புத் திட்டம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. உண்பதற்காகப் பசுவைக் கொல்வது ம.பி.யில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் தடுத்து நிறுத்தப்படவேண்டும்” என்று கூறி உள்ளார்.

சனவரி முதல் வாரத்தில், பஜ்ரங்தள் எனும் குரங்கு-குண்டர்கள், மாட்டு வணிகம் செய்து வரும் அனிஷ் குரோஷி என்ற முசுலீமை, பசுக்களை வெட்டுவதற்காக ஓட்டிச் சென்றார் என்று குற்றஞ்சாட்டி, அவரது தலையை மொட்டை அடித்தனர். மேலும் அவரது மீசையையும் புருவங்களையும் மழித்து அவமானப்படுத்தினர்.

பசுக்களைப் பேணுவதில் பா.ச.க. அரசு காட்டும் அக்கறையை, அம்மாநிலத்தின் குழந்தைகளைப் பேணுவதில் காட்டவில்லை. இந்தியாவிலேயே குழந்தை இறப்பு விகிதம் ம.பி.யில்தான் அதிகம். பிறக்கின்ற 1000 குழந்தைகளில் 62 குழந்தைகள் இறக்கின்றன. இந்தியாவில் குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகமாக உள்ள 100 மாவட்டங்களில் 30 மாவட்டங்கள் மத்தியப் பிரதேசத்தில் உள்ளன. இந்தியாவிலேயே எழுத்தறிவற்றவர் அதிகமாக (63%) உள்ள மாவட்டம் ம.பி.யில் தான் இருக்கிறது. மகப்பேறு மருத்துவர் பணியிடங் களில் 53.6%, குழந்தைகள் நல மருத்துவர் பணி யிடங்களில் 43.7% இடங்கள் காலியாக உள்ளன. ஆனால் பா.ச.க. அரசு பசுப்பாதுகாப்பில் முனைப்பு காட்டுகிறது.

அதனால்தான் காரல் மார்க்சு இந்தியாவைப் பற்றி பின்வருமாறு கூறி உள்ளார்: “இந்தியாவில் தெருவில் ஒரு மனிதனும் ஒரு பசுவும் சாகும் நிலையில் இருப் பதை ஓர் இந்து பார்க்க நேரிட்டால், அவன் அந்த மனிதனைக் காப்பாற்றாமல், பசுவைத்தான் காப்பாற்று வான். ஏனெனில் அவனுக்கு பசு புனிதமானது.”

இத்தயை இந்து தர்மத்தை நிலைநாட்ட வேண்டும் என்பதுதான் பா.ச.க.வின் கொள்கை. எனவேதான் 2007 ஆம் ஆண்டு ம.பி.யில் பா.ச.க. அரசு பள்ளி களில் ‘சூரிய நமஸ்காரத்தை’க் கட்டாயம் என்று ஆக்கியது. ம.பி. உயர்நீதிமன்றம் கட்டாயம் என்பது கூடாது என்று கூறியது. அதனால் இப்போது அரசே முன்நின்று ‘சூரிய நமஸ்கார’ முகாம்களை நடத்துகிறது. சூரியனை வழிபடுதல் இந்துமதச் சடங்காகும். முசுலீம்கள், கிறித்தவர் போன்ற சிறுபான்மை மதத்தினர் இதை எப்படி ஏற்க முடியும்? “இசுலாமியர்கள் இந்தியாவில் இந்துக்கலாச்சாரத்தை மனமுவந்து ஏற்றுக்கொண்டால் மட்டுமே இந்தியாவில் வாழ்வதற்கு அனுமதிக்கப்படு வார்கள்” என்று இந்துத்துவக் கோட்பாட்டுக்கு இலக் கணம் வகுத்த சாவர்கர் கூயிருப்பதைத்தான் சங்பரி வாரங்கள் செயல்படுத்த முயல்கின்றன. இதற்கான செயல்திட்டங்களில் ஒன்றுதான் உண்பதற்காகப் பசுவைக் கொல்வதைத் தடுக்கும் சட்டம் (Phrohibition of Cow Slaughter Act).

திருத்தப்பட்டன் சட்டத்தின்படி, பசுவையோ, பசுவின் கன்றையோ தின்பதற்காகக் கொன்றால் ஓராண்டு முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் ரூ.5000 தண்டமும் விதிக்கப்படும். மாட்டுக்கறியை வைத்திருப்பதும் கொண்டு செல்வதும்கூடக் குற்ற மாகும். இதற்கு 6 மாதங்கள் முதல் 3 ஆண்டுகள் வரை தண்டனை உண்டு. இச்சட்டத்தின் செயல்பாட்டைக் கண்காணிக்கும் அதிகாரி, இச்சட்டம் மீறப்பட்டதாகவோ அல்லது மீறப்படக்கூடும் என்று கருதினாலோ எந்த இடத்திலும் நுழையலாம், ஆய்வு செய்யலாம்; நட வடிக்கை எடுக்கலாம்.

பா.ச.க. ஆட்சி செய்யும் கர்நாடக மாநிலத்தில் 2010 ஆண்டு, கால்நடைகள் கொல்லப்படுவதைத் தடுக்கின்ற மற்றும் பேணிக்காக்கிற சட்டவரைவு முன்மொழியப்பட்டுள்ளது. 1964ஆம் ஆண்டு கர்நாட கத்தில், பசுக்கள் வெட்டிக் கொல்லப்படுவதைத் தடுப்பது மற்றும் கால்நடைகளைப் பராமரிப்பது என்கிற சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டத்தின்படி சில சூழ்நிலைகளில் கன்றுகள் (எறுமைக் கன்றுகள் உட்பட) பசுக்களை உண்பதற்காக வெட்டிட அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. மேலும் 12 ஆண்டுகளுக்குமேல் வயதான அல்லது வேலை செய்ய முடியாத, இனி பால் கறக்காது என்ற நிலையை எட்டிவிட்ட, மாடுகளை, எருதுகளை, எருமைகளை வெட்டிக் கொல்வதற்கு அனுமதிக்கப்பட்டி ருந்தது. புதிய சட்டவரைவில் இந்த விதிவிலக்குகள் நீக்கப்பட்டுள்ளன.

கர்நாடகத்தில் இப்புதிய சட்டவரைவுக்குக் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தலித் அமைப்புகள் இதில் முன்னணியில் உள்ளன. குசராத், ஜார்கண்ட், இமாசலப் பிரதேசம் போன்ற சில மாநிலங்களில் பசுக்கள் உணவுக் காகக் கொல்லப்படுவதைத் தடுக்கக் சட்டங்கள் உள்ளன. ஆந்திரத்திலும் ஒரிசாவிலும் பசுக்களைத் தவிர்த்த எருது, எருமை போன்றவற்றை அவை மேற்கொண்டு உழைப்புக்குப் பயன்படமாட்டா என்ற நிலையில் உணவுக்காகக் கொல்வதற்குச் சட்டம் அனுமதிக்கிறது. தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் குறைந்த அளவிலான கட்டுப்பாடுகள் உள்ளன. கேரளத்திலும் மேற்கு வங்காளத்திலும் உணவுக்காகப் பசுவை வெட்டு வதற்கு எத்தயை தடையும் இல்லை. காங்கிரசுக் கட்சி நேரடியாகவும் மறைமுகமாகவும் உணவுக்காகப் பசு கொல்லப்படுவதை எதிர்த்தே வந்துள்ளது.

ஒரு குடிமகன் தனக்குத் தேவைப்படுகின்ற-தான் விரும்புகின்ற எந்த உணவையும் உண்ணுகின்ற உரிமையை மத அடிப்படையிலான சட்டத்தின் பெயரால் பறிப்பது-குடிமகனின் உயிர்வாழும் அடிப்படை உரிமை யையே பறிக்கின்ற செயலாகும். இது சனநாயகக் கோட்பாட்டுக்கு முற்றிலும் எதிரானதாகும். தாழ்த்தப் பட்ட வகுப்பினர், காலங்காலமாக மாட்டுக்கறி உண்கின்றனர். உழைக்கும் மக்களுக்கு மலிவான விலையில் ஊட்டமான புரத உணவாக விளங்குவது மாட்டுக்கறியே ஆகும். இந்தியாவில் 5 அகவைக்குட் பட்ட குழந்தைகளில் 42 விழுக்காடு குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் குறைந்த எடையுடன் வளர்ச்சி குன்றி இருப்பது ‘ஒரு தேசிய அவமானம்’ என்ற பிரதமர் மன்மோகன்சிங் ஒருபுறம் புலம்பியிருக்கிறார். ஆனால் மறுபுறம் மாட்டுக்கறி மக்களுக்குத் கிடைப்பதைத் தடுப்பதற்கு ஈட்டியாய்ப் பாயும் சட்டங்கள் கூர்தீட்டப்படுகின்றன.

பசுவானாலும், எருதானாலும் அவை ஒரு குறிப்பிட்ட வயதைத் தாண்டியதும், அவற்றை வெட்டித் தின்பதற்காக விற்றுவிடுவதும், அப்பணத்தைக் கொண்டு புதிய பசுவை-எருதை வாங்குவதும் உழவர் களிடம் நெடுங்காலமாக இருந்து வரும் பொருளாதார நடைமுறையாகும். மாட்டுக்கறி தடுப்புச் சட்டங்களால் உழவர்களின் பொருளியல் நிலை பாதிக்கப்படும். மாடுகளின் தோல் தொழில்சாலைகளுக்குச் செல்கிறது. உழைக்க முடியாத எருதையும், பால்கறக்காத பசுவையும் அரை வயிற்றுக் கஞ்சிக்கே குடும்பத்துடன் அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் உழவர்களால் தீனிபோட்டுப் பராமரிக்க முடியுமா? இவை செத்தால் புதைப்பதற்குக்கூட இடமில்லையே!

‘மாட்டுக்கறி தின்பது இழிவு; தின்பவன் தீண்டத்தகாவன்’ என்ற கருத்தியலை மக்கள் மனங்களில் ஆழப் பதியச் செய்த ஆரியப் பார்ப்பனக் கூட்டம், வேத காலத்தில் பலவகையான யாகங்கள் நடத்தி, யாகத் தீயில் பசு, குதிரை என்று பல விலங்குகளைக் போட்டு அவற்றின் கறியைத் தின்றவர்கள் என்பதை ஆர்.எஸ். சர்மா போன்ற பல வரலாற்று ஆய்வாளர்கள் ஆதாரங் களுடன் நிறுவி இருக்கிறார்கள். பவுத்த சமயநெறிகளால் பிராமணிய மதம் வீழ்த்தப்படுட்டுவிடுமோ என்ற அச்சத்தால், பார்ப்பனர் புத்தரின் கொள்கைகள் கோட் பாட்டை பார்ப்பனர்கள் தமதாக்கிக் கொண்டனர். தமிழ்நாட்டில் இன்று பார்ப்பனர்களில் பெரும்பாலான ஆண்கள் புலால் உணவை விரும்பி உண்கின்றனர் என்பது வெள்ளிடைமலை! பார்ப்பனர்களில் பெரிய அறிவாளி என்று போற்றப்பட்ட சி.பி.இராமசாமி அய் யருக்கு இலண்டனில் மாட்டின் நாக்கு மிகவும் பிடித்தமான உணவாக இருந்தது.

மதச்சார்பின்மை

அய்ரோப்பிய நாடுகளில் 15, 16, 17 ஆம் நூற்றாண்டுகளில் மறுமலர்ச்சி-அறிவொளிக் காலத்தில், ஏன்? எப்படி? எதற்கு? என்கிற வினாக்கள் மூலம், வெறும் நம்பிக்கையின் அடிப்படையிலான அனைத் தின் மீதும் தாக்குதல் தொடுக்கப்பட்டன. காரண காரியத்தின் அடிப்படையிலான அறிவு வெள்ளம் பாய்ந்தோடியது. அதில் கண்மூடித்தனமான குருட்டு நம்பிக்கைகளும், மரபுகளும், பழக்க வழக்கங்களும் அடித்துச் செல்லப்பட்டன. இந்தச் சூழலில்தான் முத லாளிய உற்பத்திமுறை முகிழ்த்து வளர்ந்தது.

முதலாளிய உற்பத்தி முறைக்கு, நிலவுடைமை உற்பத்திச் சமூக அமைப்புத் தடையாக இருந்தது. மக்களைச் சுரண்டுவதில், ஒடுக்குவதில் நிலப்பிரபுக்களும் கிறித்துவப் பாதிரிகளும் கூட்டாளிகளாக இருந்தனர். அரசியலில்-ஆட்சி அதிகாரத்தில் இக்கூட்டணியே ஆதிக்கம் பெற்றிருந்தது. இவர்களின் அரவணைப்பில் தான் அரசனும் ஆட்சி செய்ய முடியும் என்ற நிலை இருந்தது. யார் மன்னராவது என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் போப்பிடம் இருந்தது. எனவே முதலாளிய வர்க்கத்துக்கு, தன் நலனுக்கு இயைந்ததன்மை யிலான ஆட்சிமுறையை, சமூக அமைப்பை, கருத்தி யலை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை இன்றியமையததாயிற்று.

எனவே, அரசியலிலிருந்து, கல்வியிலிருந்து, சமூக ஒழுக்கத்திலிருந்து மதம் பிரிக்கப்பட வேண்டும் என்கிற மதச்சார்ப்பற்ற கோட்பாடு உருவாக்கப்பட்டது. மதநம்பிக்கை, தனி ஒருவரின் விருப்பம் சார்ந்தது என்கிற வட்டத்துக்குள் வரம்பிடப்பட்டது. தனிமனித உரிமைகளை மதிப்பது-பாதுகாப்பது; மனிதர்களி டையே எல்லா நிலைகளிலும் சமத்தவத்தைப் பேணுவது என்பதே சமூக ஒழுக்க நெறியாக்கப்பட்டது. இதன் அடிப்படையிலான அரசியலும் அரசமைப்பும் கட்டியமைக்கப்பட்டன. இதுவே முதலாளித்துவ நாடாளுமன்ற சனநாயகமாகும். ஆனால் அது முதலாளிகளுக்கும் பணக்காரர்களுக்குமான சனநாயகமாகவே இருந்து வருகிறது என்பது தனிச் செய்தியாகும்.

ஆனால் இந்தியாவிலோ, சுயராஜ்ஜியம் என் பிறப்புரிமை என்று முழங்கிய திலகர், பிறப்பின் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வு கொண்ட சாதி அமைப்பு அப்படியே நிடிக்க வேண்டும் என்றார். இந்து மத உணர்வை அரசியலுக்காகத் திட்டமிட்டுப் பயன்படுத் தினார். அரசியலையும் மதத்தையும் பிரிக்க முடியாத படி ஒன்றிணைத்தப் பெருங்கேட்டைச் செய்தவர் காந்தியே ஆவார். அவருடைய அரசியலின் ஆன்மாவாக மதம் விளங்கியது. “அரசிலிருந்து மதத்தைப் பரிக்க வேண்டும் என்று கூறுகிறவர்கள், மதம் என்பதன் உண்மையான பொருளை அறியாதவர்கள்” என்று அவருக்கே உரித்தான புரியாத-புதிரான முறை யில் சத்தியசோதனை நூலில் குறிப்பிட்டுள்ளார். வருணாசிரமத்தின் தலைசிறந்த வழக்குரைஞராக வாழ்நாள் முழுவதும் செயல்பட்டார். மதச்சார்பின்மை என்பது அரசியல்-கல்வி-சமக ஒழுக்கம் ஆகியவற்றி லிருந்து மதத்தைப் பிரிப்பது என்கிற கருத்தியலை முளையிலே கிள்ளி எறிந்தவர் காந்தி, எல்லா மதங்களையும் சமமாகக் கருதுவது-நடத்துவதே மதச்சார் பின்மை என்கிற மிகவும் கேடான கருத்தியலை உருவாக்கிப் பரப்பியவர் காந்தி. மத அடிப்படையிலான அரசியல் எவ்வளவு கேடானது என்பதை இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை உணர்த்தியது. ஆனால் காந்தியார் அதிலிருந்தும் பாடம் கற்க மறுத்துவிட்டார்.

எனவே பார்ப்பனர்கள், இந்திய அரசமைப்புச் சட்டம் எழுதப்பட்டபோது, வருணாசிரம-சாதி அமைப் புக்கும், பார்ப்பனியக் கருத்தியலுக்கும் பழக்கச் சட்டம் வழக்கச் சட்டம் என்கிற பெயரால் நடப்பில் நீடித்து இருப்பதற்கான சட்டப்பாதுகாப்புகளை ஏற்படுத்திக் கெர்ணடனர். இதன் அடிப்படையில்தான் பார்ப்பான் மட்டுமே கோயில் கருவறைக்குள் அர்ச்சனை செய்யும் இழிநிலை நீடிக்கிறது. பார்ப்பான் பிறப்பினால் எல் லோரையும்விட உயர்ந்தவன் என்று பார்ப்பனர் அல்லாத மக்கள் நம்புவதால்தான் பார்ப்பானின் மேன்மை நிலையும் ஆதிக்கமும் கோயிலுக்கு அப்பாலும் எல்லாத் துறைகளிலும் நீடிக்கிறது. எனவேதான் பெரியார், “பார்ப்பனர் பிறப்பால் மேன்மக்கள் என்கிற நிலையை ஒழித்தாலே பாதி பொதுவுடைமை வந்துவிடும்” என்று கூறினார்.

1977 இல் மொரார்ஜி தேசாய் தலைமையிலான சனதா கட்சி ஆட்சியில் வாஜ்பாயும் அத்வானியும் அமைச்சரானார்கள். அந்த அனுபவத்தின் அடிப்படை யில், சங்பரிவாரங்கள் தாமே தனித்து தில்லி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பதற்காக இந்துத்துவ வெறியை-இசுலாமியர் எதிர்ப்பைத் திட்டமிட்டு வளர்த்தன. இதற்கு ஈடுகொடுப்பதற்காக இந்திராகாந்தியும், இராசிவ் காந்தியும் இந்துத்துவக் கோட்பாட்டை ஆதரித்தனர். அதன் விளைவாக 1992 திசம்பர் 6 அன்று அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்துத்துவப் பயங்கரவாதம் இசுலாமிய தீவிரவாதத்திற்கு விசையூட்டியது. கடந்த 30 ஆண்டு களில், உண்மையான மதச்சார்ப்பின் மைக்கும், தனி மனித உரிமைகளுக்கும், சனநாயக நெறிமுறை களுக்கும் எதிரான வகையில் இந்துத்துவ வெறி உணர்வு பரந்துபட்ட மக்களிடம் வேர்விட்டுப்படர்ந்துள்ளது. வெகுமக்களின் சிந்தனைகளில், செயல்பாடுகளில் இது வெளிப்படுகிறது.

300 இராமாயணங்கள்

ஒரே தேசம், ஒரே மொழி,. ஒரே பண்பாடு என்கிற இந்துத்துவ ஆதிக்கக் கருத்தியல் படித்த கூட்டத்தாரின் மனங்களைக் கவ்வியுள்ளது. எனவேதான், கடந்த அக்டோபர் மாதம் தில்லிப் பல்கலைக்கழகத்தின் கல்விக் குழு (Academic Council) வரலாற்று ஆய்வாளர் ஏ.கே.இராமனுசன் எழுதிய, “முந்நூறு இராமாய ணங்கள்; அய்ந்து எடுத்துகாட்டுகள் மற்றும் மொழி யாக்கம் குறித்த மூன்று சிந்தனைகள்” (Three hundred Ramayanas : Five Examples and Three thoughts on Tanslation) என்ற கட்டுரையை இளங்கலை வரலாறு மாணவர்களுக்குக்கான பாடத் திட்டத்திலிருந்து நீக்கி விட்டது. வரலாற்றுத் துறைத் தலைவரின் கருத்தைக் கேட்காமேலே இவ்வாறு செய்தது. ‘பண்டைய இந்தியா வின் பண்பாடு’ என்கிற பாடப்பிரிவில் இக்கட்டுரை இடம் பெற்றிருந்தது.

ஏ.கே.இராமானுசன் கன்னடம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் புலமை மிக்கவர். நம்மாழ்வாரின் பாரசுங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர். வால்மீகி இராமாயணம், கம்பராமாயணம், தாய்லாந்தில் வழங்கப்படும் இராமாயணம், விமலசூரி ஜைன இராமாயணம், சாந்தால் பழங்குடியினரி டையே செவி வழியாகக் கூறப்பட்டு வரும் இராமா யணம் முதலான இராமாயணங்களிலிருந்து மேற் கோள்கள் காட்டி, வேறுபட்ட கதைக் கூறுகளும், நிகழ்ச்சிகளும் இருப்பதை இந்நூலில் ஏ.கே. இராமானுசன் விளக்கி இருக்கின்றார். அந்தந்தக் காலத்திற்கும், நிலப்பகுதிக்கும், மக்களின் வாழ்முறைக்கும், கற்பனை ஆற்றலுக்கும் ஏற்ப இராமாயணக் கதைகள் எழுதப் பட்டன. இராமாயணம், இந்துமதம் இந்திய நிலப்பரப்பு என்கிற எல்லைகளைத் தாண்டிப் பரவியது. இண்டா யிரம் ஆண்டுகளுக்கு மேலாக இராமாயணம் நீடித் திருப்பதற்கு அதன் பன்முகப்பட்ட கூறுகளே பெருங் காரணம் என்று ஏ.கே.இராமானுசன் கூறியிருக்கிறார்.

பா.ச.க.வின் மாணவர் அiப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தைச் சேர்ந்தவர்கள் 2008 ஆம் ஆண்டு தில்லிப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறை தலைவரிடம் ஏ.கே.இராமானுசன் கட்டுரை இந்துக்களின் உணர்வைப் புண்படுத்துகிறது; எனவே அக்கட்டுரையைப் பாடத்திலிருது நீக்க வேண்டும் என்று விண்ணப்பம் கொடுத்தனர். அப்போது துறைத் தலைவரின் அலுவலகத்தைச் சூறையாடினர். இக்கட்டு ரையை நீக்குவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் 2011 சூலையில் வழக்குத் தொடுக்கப்பட்டது. தில்லிப் பல்கலைக்கழகம், ஒரு வல்லுநர் குழுவை அமைக்க வேண்டும்; அக்குழுவின் அறிக்கை மீது பல்கலைக் கழகக் கல்விக்குழு முடிவு எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியது.

அதன்படி நால்வர் கொண்ட குழு அமைக்கப் பட்டது. இதில் மூவர், ஏ.கே.இராமானுசன் கட்டுரையில் சிக்கலுக்குரிய கருத்து எதுவும் இல்லை; எனவே இக் கட்டுரை, பாடத்திட்டத்தில் நீடிக்கலாம் என்று கூறினர். ஆனால் நான்காமவர், இக்கட்டுரையை இளங்கலை மாணவர்களால் எளிதில் விளங்கிக் கொள்ள முடியாது. இந்து அல்லாத ஆசிரியர் இக்கட்டுரையை விளக்கிக் கூறுவது கடினம் என்று கூறியிருந்தார். இந்த நான்கு வல்லுநர்களின் பெயர்கள்கூட வெளியிடப்படவில்லை. அந்த அளவுக்கு இந்துத்துவ குண்டர்கள் குறித்த அச்சம் நிலவுகிறது. மூன்று வல்லுநர்கள் இக்கட்டுரையை முழுவதுமாக ஆதரித்த போதிலும், தில்லி பல்கலைக் கழகத் துணைவேந்தர் தினேஷ்சிங்கின் அதிகாரத்தால், இக்கட்டுரை நீக்கப்பட்டது.

இராமனை வால்மீகி கூட கடவுளாகக் காட்டவில்லை. ஆனால் சங்பரிவாரங்கள் இராமனை இந்தியாவின் அவதாரப்புருஷனாக முசுலீம்களும், கிறித்துவர்களும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று மிரட்டுகின்றன. இந்துவாகப் பிறந்த எந்த அறிவுள்ள மனிதனாவது 1,70,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்ததாகக் கூறப்படும் இராமனை அவதாரப் புருஷனாக ஏற்றுக் கொள்ளமுடியுமா? பார்ப்பன மேன்மையைப் போற்றுகின்ற-வருணாசிரமத்தைக் கட்டிக் காக்கின்ற-அறிவுக்குப் பொருந்தாத மூடநம்பிக் கைகளையும், ஆபாசங்களையும், பெண்ணடிமைத் தனத்தையும் கொண்டுள்ள இந்துமதச் சாத்திரங் களையும் இதிகாச-புராணங்களையும் விமர்சனம் செய்வதையும் கண்டிப்பதையும் ‘எங்கள் மத உணர்வு புண்படுகிறது’ என்று இந்துத்துவவாதிகள் ஒப்பாரி வைக்கின்றனர். சோதிராவ் புலேவும், பெரியாரும், மேதை அம்பேத்கரும் இவ்வாறு கண்டிப்பதைத் தானே தங்கள் வாழ்நாள் முழுவதும் செய்தனர். பார்பன ஆதிக்கத்தைத் தகர்ப்பதற்கும், சாதி அமைப்பை ஒழிப்பதற்கும், ஒடுக்கப்பட்ட மக்கள் இழிவுகளிலிருந் தும் சுரண்டலிலிருந்தும் விடுதலை பெறுவதற்கும் இதுவே வழி என்று கூறினர்.

சல்மான் ருஷ்டி

2012 சனவரி 20 முதல் 24 வரை 5 நாள்கள் இராஜஸ்தான் தலைநகர் ஜெய்பூரில் இலக்கிய விழா நடைபெற்றது. இதில் உலகின் பல நாடுகளிலிருந்தும் எழுத்தாளர்கள் பங்கேற்றனர். இந்த விழாவில் சல்மான் ருஷ்டி கலந்து கொள்வதாக இருந்தது. இவர் இந்தியாவில் பிறந்து வளர்ந்தவர். இங்கிலாந்தில் குடியுரிமை பெற்று வாழ்பவர். புக்கர் பரிசு பெற்ற உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர். 1988 செப்டம்பரில் இவர் எழுதிய ‘சாத்தானின் கவிதைகள்’ என்று நாவல் வெளியிடப்பட்டது. அதில் இசுலாமியர்களின் மத உணர்வு புண்படும்படியாக எழுதி இருக்கிறார் என்று இசுலாமியரிடையே எதிர்ப்பு எழுந்தது. அந்நூல் வெளியிடப்பட்ட ஒன்பதாவது நாளே பிரமதராக இருந்த இராசிவ்காந்தி அந்நூலைத் தடை செய்தார். அந்நூலுக்குத் தடை விதித்த முதலாவது நாடு இந்தியா தான். ஏனெனில் இந்தியாவில் அரசியலும் மதமும் அந்த அளவுக்கு ஒன்று கலந்துள்ளன. ஈரான் அதிபர் ஆயத்துல்லா கொமேனி 1989 பிப்ரவரி 14 அன்று சல்மான் ருஷ்டி மீது ‘பட்வா’-அவரைக் கொல்தற்கான மதக்கட்டளைகளைப் பிறப்பித்தார். அதனால் சல்மான் ருஷ்டி இங்கிலாந்து அரசின் காதுகாப்புடன் பல ஆண்டு கள் தலைமறைவாக வாழ நேரிட்டது.

2007 ஆம் ஆண்டு சல்மான் ருஷ்டி ஜெய்பூரில் நடைபெற்ற இலக்கிய விழாவில் கலந்து கொண்டார். அதன்பிறகு சிலமுறை இந்தியாவுக்கு வந்து சென் றுள்ளார். ஆனால் இந்த ஆண்டு ஜெய்பூரில் இலக்கிய விழாவிற்கு சல்மான்ருஷ்டி வருவதற்கு எதிர்ப்பு தெரி வித்து, தரூல்உலூம் தியோபந்த் என்கிற இசுலாமிய அமைப்பு கொலை மிரட்டல் விடுத்திருப்பதைக் காரணம் காட்டியும், மும்பையிலிருந்து ருஷ்டியைக் கொலை செய்ய மூன்று பேர் கொண்ட கூலிப்படை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கதை கட்டியும் இராஜஸ்தான் மாநில அரசு சல்மான்ருஷ்டி ஜெய்ப்பூருக்கு வருவ தைத் தடுத்துவிட்டது. அதேபோல் இலக்கியவிழாவின் இறுதி நாளன்று இலண்டலிருந்து இiணையதளம் மூலம் சல்மான்ருஷ்டி உரையாற்றுவதற்காக இருந்ததை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களையும், நிகழ்ச்சி அரங்கின் உரிமையாளரையும் இராஜஸ்தான் அரசு மிரட்டித் தடுத்துவிட்டது. பிப்ரவரி-மார்ச்சு மாதங்களில் உ.பி.யிலும் மற்ற நான்கு மாநிலங்களிலும் தேர்தல் நடைபெறுகிறது. சல்மான் ருஷ்டியை ஜெய்பூர் நிகழ்ச்சி யில் கலந்துகொள்ள அனுமதித்தால், உ.பி.யில் பெரும் எண்ணிக்கையில் வாழும் முசுலீம்களின் வாக்குகள் கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தால் காங்கிரசுக் கட்சி, புகழ்பெற்ற எழுத்தாளரின் பேச்சு சுதந்திரத்தைப் பலியிட்டது. இந்த இழிநிலை குறித்து எந்தவொரு வாக்குவேட்டை அரசியல் கட்சியும் தம் எதிர்ப்பைத் தெரிவிக்கவில்லை.

இராசிவ் காந்தி பிரதமரானதும் ஷாபானு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு, இசுலாமியரின் ஷரியத் சட்டத்திற்கு எதிரானது என அடிப்படைவாத முசுலீம்கள் கண்டனம் செய்தனர். உடனே இராசிவ் காந்தி உச்சநீதிமன்றத் தீர்ப்பு செல்லாததாகும் வகையில் அரசியல் சட்டத்தைத் திருத்தினார். முசுலீம்களின் வாக்குகளைக் கவர்வதற்காக இராசிவ் காந்தி இவ்வாறு செய்தார் என்று சங்பரிவாரங்கள் எதிர்த்தன. இந்துத்து வக் கும்பலைச் சரிகட்டுவதற்காக இராசிவ் காந்தி இமாலயத் தவறு செய்தார். 1949 திசம்பரில் பாபர் மசூதியில் இந்துத்துவக் கும்பலால் திருட்டுத்தனமாக இராமன் சிலையை வைத்தபின் ஏற்பட்ட கிளர்ச்சியால் பூட்டப்பட்ட பாபர் மசூதியின் பூட்டை, 1986 பிப்ரவரி முதல் நாளன்று திறக்கச் செய்தார். இதன் தொடர் விளைவாக பாபர் மசூதி இடிக்கப்பட்டது. பாபர் மசூதி-இராமஜென்மபூமி சிக்கலில் காங்கிரசும் பா.ச.க.வும் மட்டுமின்றி நீதிமன்றங்களும் இந்துத்துவக் கோட்பாட் டைத் தூக்கிப்பிடித்தன.

மதத்சார்ப்பின்மை (Secularism) எனும் சொல்லுக்கு அரசமைப்புச் சட்டத்தில் எவ்விடத்திலும் விளக்கம் தரப்படவில்லை. 1976 இல் இந்திராகாந்தி இந்தியாவை மதச்சார்ப்பற்ற அரசு என்று அரசமைப்புச் சட்டத்தில் சேர்ந்தபோதுகூட. மதச்சார்பின்மை என்பதற்கு விளக்கம் அளிக்க வில்லை. ஆனால் நடப்பில் இந்துத்துவ ஆதரவு அரசாகவே செயல்படுகிறது.

அரசு, எல்லா மதங்களையும் சமமாகக் கருதுவதும், நடத்துவதும் மதச்சார்பற்றதன்மை என்று இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது அளித்த விளக்கமே சரியானது என்கிற கருத்து நிலைநாட்டப்பட்டுள்ளது. படித்தவர்கள், வழக்குரைஞர்கள், அறிவாளிகள் இந்த விளக்கத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர். மேலும் இந்தியப் பண்பாட்டின் உயிர்நாடியே மதச் சகிப்புத் தன்மை தான் என்று கூறுகிறார்கள். ஆனால் வரலாற்று உண் மைகள், நிகழ்வுகள் இதற்கு நேர் எதிராக உள்ளன.

எனவே இந்தியாவில் மனித உரிமைகளையும், விழுமியங்களையும் முதன்மைப்படுத்துகின்ற-சன நாயக நெறிமுறைகளின் படி செயல்படுகின்ற சமுதா யத்தை உருவாக்க வேண்டுமானால், மதங்களை அரசியல், கல்வி, ஒழுக்கம் ஆகியவற்றிலிருந்து தனி மைப்படுத்தவேண்டும்.

இதற்கான முதல் செயல்திட்டமாகப் புலேவும், பெரியாரும், அம்பேத்கரும், வலியுறுத்திய, பிறப்பின் அடிப்படையிலான பார்ப்பனரின் சிறப்புரிமைகளை, உயர்வுத் தன்மையை ஒழிக்க வேண்டும். பார்ப்பனப் புரோகியத்தைப் புறக்கணிக்க வேண்டும்.

பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பிக்கும் சாதி அமைப்பைக் கட்டிக் காக்கின்ற இந்துமதம் நீடிக்கும் வரையில் இந்தியாவில் உண்மையான சனநாயகம் மலராது என்று மேதை அம்பேத்கர் அறுதியிட்டுச் சொன்னார். “குரங்கையும் பசுவையும் மண்டியிட்டு வணங்குகின்ற மூடர்கள் இருக்கும் வரையில், இந்தியாவிலும் தெற்காசியாவிலும் உண்மையான தொரு பண்பாட்டுப் புரட்சி வருமா என்பது அய்யமே” - காரல் மார்க்சு.

எனவே மதத்தின்-சாதியின்-பொருளற்ற நம்பிக் கைகளின் அடிப்படையிலான சிந்தனைப் போக்கை விட்டொழித்து, மனித விழுமியங்கள், சனநாயக நெறிகள் அடிப்படையிலான அறிவுக் கும் ஆராய்ச்சிக்கும் முதன்மை தருகின்ற சிந்தனையை-செயல் பாட்டை வளர்த்தெடுக்க வேண்டும். இதற்கான வழி காட்டி உண்மையான மதச்சார்பற்ற தன்மையைப் பரப்புவதும், கடைப்பிடிப்பதுமேயாகும்.

Pin It