துதி தோழரே
எவ்வளவு அமைதியானவர்
நீங்கள்
இவ்வளவு விரைவாய்
விடை பெற்றீரே...

முகமோ
முறுவல் பூத்த
முல்லைவனம்
எல்லையற்ற பேரன்பால்
இயக்கத் தோழர்களை ஈர்த்த
தில்லைவனம்

ஒருசிறு
பனித்துளிக்குள்
பனைமரத்தின் ‘உரு’அடக்கம்
அனைத்து உயர்குணங்களும்
உங்கள்
அகத்திய உருவுக்குள்
அடக்கம்

பண்பான
மனை, மக்கள்
பயன்தந்த
ஆசிரியப்பணி
பகுத்தறிவு சான்ற
பொதுத்தொண்டு
எல்லாவற்றிலுமே
மனநிறைவு

உங்கள் வாழ்க்கைக்கும்
வார்த்தைக்குமான
இடைவெளிதான்
மிகக்குறைவு

வேளாண் ஆசானாய்
விரும்பி ஏற்ற பணி; உங்கள்
தாளாண்மைப் பண்புக்குச்
சான்றாக யார் இனி?

நீங்கள்
எளிமையை உடுத்தியதில்
எப்போதும் காந்தியார்
எஃகனைய உறுதியில்
ஈரோட்டுப் பெரியார்
புலிக்கறியும் தின்னப்
போட்டியிடும் தோழரிடை
புலாலை மறுத்திட்ட
‘பொறை’ ஆடைவள்ளலார்

மார்க்சியப் பெரியாரியப்
பொதுவுடைமைக் கட்சிக்கு
உம் போலும்
மாசுமருவற்ற
தொண்டர்களால் மதிப்பு
மற்றபடி
தோழர்ஆனை முத்துக்குத்
தோதாய்க் கிடைத்திட்ட
தொகைமதிப்பு இல்லாத
கையடக்கப் பதிப்பு

சேப்பாக்கம் முருகப்பா
தெருவுக்கும்
திருவல்லிக்கேணியின்
சிவஇளங்கோ மாளிகைக்கும்
நடந்தஉம் கால்களுக்கு
நன்றிப் படையலாய்
எதைத் தந்து நாங்கள்
ஈடேற்றம் காண்போம்?

உடலையும் கொடையாய்
ஈந்தீர்கள்
உண்மையின் குடைநிழலில்
வாழ்ந்தீர்கள்
இனி
ஒவ்வொரு நொடியும்எம்
உள்ளத்தில் வாழ்வீர்கள்
உங்களுக்கு எங்கள்
வீரவணக்கம்

Pin It