இந்து சமுதாயத்தில் அடித்தட்டில் அமிழ்ந்து அல்லல்படுவோர் பட்டியல் வகுப்பினரும் பழங்குடியினரும் ஆவர்.

மகாத்மா புலே தோன்றிய மண் மகாராட்டிரம். அவருடைய முதலாவது முயற்சி தீண்டப்படாத வகுப்புப் பெண்குழந்தைகளுக்குக் கல்வி புகட்டுவதே ஆகும்.

மகாராட்டிரத்தில் பீட் மாவட்டத்தில் ஜியோரை வட்டத்தில் உள்ள சிற்றூர் சிஞ்சோலி சிந்த் பனா என்பது.

அங்கு 500 பேரைக் கொண்ட மராட்டிய நில உடைமைக்காரர்களும், சில குடும்பத்தினராக உள்ள பட்டியல் வகுப்பினரும் வாழ்கின்றனர்.

பட்டியல் வகுப்பினர் நிலம் அற்றவர்கள்; எழுத்தறிவு இல்லாதவர்கள் சகாதேவ் தயாத் 32 வயதுள்ள பட்டியல் குலத்தினர். அவர் அவ்வூரிலுள்ள வசிஷ்ட் தாகே என்கிற மேல்சாதி நில உடைமையாளரிடம் ரூபா 5000ம் கடனாகப் பெற்றுக் கொண்டு அதற்காக அவருடைய கரும்புத் தோட்டத்தில் கொத்தடிமையாக வேலை செய்து வந்தார். அவருடைய மனைவி வந்தனா சங்லி என்ற ஊரில் இன்னொரு மராட்டிய நில உடைமையாளரிடம் ரூபா 50,000 கடனாகப் பெற்றுக் கொண்டு கொத்தடிமை வேலை செய்யப் போயிருந்தார். அவர் இல்லாத நேரத்தில் அவருடைய கணவரைப் பிடித்து, 8-1-2012 ஞாயிறு இரவு அடித்து, அவர் பேரில் மண்ணெண்ணெயை ஊற்றித் தீ வைத்து எரித்திருக்கிறார் நிலஉடைமைக்காரர். ஊரார் அதை வேடிக்கை பார்த்தனரே அன்றி, அவரைத் தடுத்து, சகாதேவை மீட்க முயற்சிக்கவில்லை. சகாதேவின் தந்தை மகசா தயாதி மட்டும் ஒரு விரிப்பை எடுத்துக் கொண்டு ஓடித் தன் மகன் உடம்பை மூடித் தீயை அணைத்தார். ஆனால் சகாதேவ் உடம்பு 93 பங்கு அளவு நீரை இழந்துவிட்டது. சகாதேவ் 9-1-2012 பிற்பகல் செத்துப் போனார்.

சகாதேவை எரித்த வசிஷ்ட் தாகேவை காவல் துறையினர் 9-1-2012 திங்கள்கிழமை இரவு கைது செய்தனர். அவர் பேரில் 1989 ஆம் ஆண்டைய பட்டியல் குலத்தார் மீதான வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்குப் போட்டுள்ளனர்.

எரித்துக் கொலை செய்யப்பட்ட சகாதேவ் தாகே குடும்பத்தில் அவருடைய தந்தை, தாய், மனைவி, ஒரு வயது முதல் 7 வயது வரை உள்ள நான்கு குழந்தைகள் மற்றும் 3 குழந்தைகளுடன் அவரோடு வாழும் விதவை அக்காள் ஆக 11 பேர் இன்று வாழ்க்கைப் புயலுக்கு ஆளாகித் தவிக்கின்றனர்.

இதில் வருந்தத்தக்க செய்தி என்னவென்றால், மகாத்மா காந்தி ஊர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத் தின் கீழும் இக்குடும்பத்தாருக்கு ஊரார் வேலை தருவது இல்லை. ஏழ்மைக் கோட்டுக்குக் கீழே உள்ள குடும்பங்கள் பட்டியலிலும் இக்குடும்பம் சேர்க்கப்படவில்லை. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ், சகாதேவ் தாகேவை இழந்ததற்காக, அக்குடும்பத்துக்கு அரசினரால், ரூ.1.50 இலட்சம் இழப்பீடு தரப்பட்டுள்ளது.  (“The Hindu”, Chennai, 11-1-2012)

அதே மராட்டிய மாநிலத்தில் சதரா மாவட்டம், பதான் வட்டத்தில் மூலகோவான் என்ற சிற்றூரில் சனவரி முதல் வாரத்தில், 45 அகவை உள்ள ரேகா சவான் என்ற தீண்டப்படாத வகுப்புப் பெண்மணியை, அவ்வூரிலுள்ள மேல்சாதியைச் சார்ந்த கிசான் தேசாய் என்பவரும் மற்றும் ஹம்பிராவ் தேசாய், சாந்திபாய் தேசாய், விமல் தேசாய், சுனிதா தேசாய் ஆகியோரும் 9-1-2012 அன்று அடித்துத் துன்புறுத்தி, அம்மணமாக ஆக்கி, ஊர்வலமாக இழுத்துச் சென்றுள்ளனர்.

என்ன குற்றத்துக்காக? ரேகா சவான் என்ற அத் தாயின் மகன், கிசாச் தேசாயின் மகளைக் காதலித்தான். இருவரும் தலைமறைவாகிவிட்டனர். அது பற்றி, ஊர்க் கிணற்றண்டையில் இருந்த ரேகா அம்மை யாரிடம், “உன் மகள் எங்கே என்று சொல்லு” என்று கேட்டுள்ளனர். அவர், தனக்குத் தெரியாது என்று சொன்னவுடனேயே, அவரை அடித்து அவமானப் படுத்திவிட்டனர்.

இதுபற்றி அம்மையார் காவல்துறையில் அளித்த முறையீட்டை ஏற்க மறுத்துவிட்டனர். செய்தி ஊடகங்களில் பரவலாக இதுபற்றி வெளிவந்த பிறகுதான் அவ்வம்மையாரை நேரில் அழைத்து, 13-1-2012 வெள்ளிக்கிழமை, குற்றவியல் சிறப்பு உயர் அதிகாரி (Special I.G. of Police) இவ்வழக்குப் பற்றி உசா வினார். (The New Indian Express, Chennai, 14-1-2012) இதற்கு இடையில், காதலனோடு சென்ற பெண், தான் நலமாக இருப்பதாகவும் தன்னைப் பற்றிப் பெற்றோர் கவலைப்பட வேண்டாம் என்றும் உள்துறை அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளார்.

Pin It