sinthanayalanfebura 2014தஞ்சை மாவட்டம், இளங்காடு, தமிழ் கற்றறிந்த அறிஞர்கள் வாழும் ஊர். இளங்காட்டில் தடுக்கி விழுந் தால் தமிழ்ப் புலவர்கள் பேரில்தான் விழ வேண்டும்.

அவ்வூரில் வேளாண்குடியில் பிறந்த நம்மாழ்வார் வேளாண் பட்டப்படிப்புக்காக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1959இல் சேர்ந்து மூன்றாண்டு கள் மட்டுமே கற்று இடையில் படிப்பைத் துறந்தார். வேளாண் கல்வியாளராக, வேளாண்குடியில் பிறந்த இவர் உருவானதால்தான் வேளாண் மக்கள் படும் துன்பத்தை இவர் நன்கு அறிய முடிந்தது.

வேளாண்குடியில் பிறவாதவர்கள் தாம் கற்ற வேளாண் படிப்புடன் பட்டறிவுப் பின்புலம் இல்லாத தால்தான், ஏட்டுக் கல்வியில் கற்ற பாடங்களின் வழிநின்று வேளாண்குடிகளுக்கு வழிகாட்டினர். வேளாண் பின்புலம் என்பது என்ன?

நன்செய் வேளாண்மையில் பயிர்பச்சை கட்டும் போதும், கதிர் தொண்டையில் இருக்கும் போதும் நச்சுப்பூச்சிகள் பயிரை வீணாக்கும். அப்பூச்சிகளைத் தின்ன எலிகளும் தவளைகளும் கொக்குகளும் நண்டுகளும் இருக்கும். பயிரில் இருக்கும் கதிர்களை வெட்டும் எலிகளைத் தின்ன, தண்ணீர்ப் பாம்புகள் இருக்கும். இயற்கையில் அமைந்த பாதுகாப்புகள் இவை. கடந்த 40 ஆண்டுகளில் காவிரியும் கொள்ளிட மும் வற்றிய போது, பயிர்ப்பருவம் முழுவதும் வயல்களில் தண்ணீர் நிற்பதில்லை.

ஆடு, மாடு வளர்ப்பு குறைந்துவிட்டதால், இயற்கை எருக்கள் போதிய அளவு கிடைப்பதில்லை. “ஆடு பயிர் காட்டும், ஆவிரை நெல் காட்டும்” என்பது நம் முன் னோர் கண்ட வேளாண் பட்டறிவு. இவ்விரண்டையும் கையாண்டு வேளாண்மை செய்த பெற்றோர்க்குப் பிறந்ததால் - முறையான வேளாண்மைக் கல்வியும் கற்றதால் வேளாண் தொழில் செய்வோருக்கு அறி வுரை கூறவும் செயல்வழியைக் காட்டவும் முழுமை யான தகுதி பெற்றவராக விளங்கினார், நம் நம்மாழ்வார்.

தேவைக்கு மேலும்-தேவையற்ற வேதியல் உரங்களையும், உடனே கொல்லும் வேதியல் பூச்சி மருந்துகளையும் நீர் அருகிய நிலங்களிலும், மழை அருகிப் போனதால் வறண்ட புன்செய்களிலும் கொட்டி நிலத்தின் இயற்கைப் பண்பைக் கெடுத்துவிட்டோம் என்பதை அவர் வேளாண் மக்களுக்கு ஓடோடி எடுத்துரைத்தார். வேளாண்மையில் ஆர்வம் உள்ள படித்த - படிக்காத உழவர் குடும்பத்தினரைக் கூட்டி இரண்டு, மூன்று நாள்கள் பயிற்சிப் பட்டறைகளை நடத்தி அவர்களை இயற்கை வேளாண் முறைக்குத் தகுதிப்படுத்தினார், நம் நம்மாழ்வார்.

பத்தாண்டுகளுக்கு முன்னர், திருவரங்கத்தை அடுத்த, ஒரு சாலை ஓரத்து மண்டபத்தில் நூற்றுக் கணக்கான இயற்கை வேளாண் ஆர்வலர்களைத் திரட்டிப் பயிற்சி அளித்தார் நம்மாழ்வார். நானும் மா.பெ.பொ.க. தோழர்களும் அப்பயிற்சியில் பங்கேற்றோம்.

அவரே சொந்தமாக கரூர் மாவட்டம், கடவூர் அருகே ‘வானகம்’ எனப் பெயரிய வேளாண் பண் ணையை நிறுவித் தம் குறிக்கோளை விளக்கிச் சொல்லும் செயல்படுகளமாக அதை உருவாக்கினார்.

இந்திய அரசினரின் மீத்தேன் வாயு திட்டத்தை வன்மையாக எதிர்த்த அவர் - மரபணு மாற்று வித்துக் களை எதிர்த்த அம்மறவர் அப்போராட்டத்துக்காக அத்திவெட்டி என்ற ஊருக்குச் சென்றிருந்த அவர், தம் 75ஆம் அகவையில் 30.12.2013 அன்று திடுமென மறைவுற்றார்.

மூன்று மாதங்களுக்குமுன் தொடர்வண்டியில் என்னைப் பார்த்த ஒரு பெரியவர், ‘நீங்கள் நம்மாழ் வார் தானே!’ என்றே கேட்டுவிட்டார். என் தாடியை வைத்தே அவர் அப்படிக் கேட்டார்.

தமிழகத்திலும் இந்தியாவிலும் உலகநாடுகளிலும் இயற்கை வேளாண் அறிவியல் மறவர் எனப் பெயர் பெற்ற நம் நம்மாழ்வார் அவர்கள் - என்னை விடப் பதினான்கு அகவை இளையவர்.

இந்த ஈடுஇணையற்ற இயற்கை வேளாண் அறிவியலறிஞரை இவ்வளவு சடுதியில் இழந்து விட்டது நம் நாட்டுக்குப் பேரிழப்பாகும்.

வாழ்க வேளாண் விடுதலை மறவர்

நம் நம்மாழ்வார் புகழ்!!

Pin It