1952 முதல் 1956 ஏப்பிரல் முடிய நான் தென் னார்க்காடு மாவட்டத்தில், ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் எழுத்தராகவும், கண்காணிப்பாளராகவும் பணியாற்றினேன்.

ஆயினும், ஆண்டுதோறும் கோடை விடுமுறைக் காலமான மே திங்களில், பெரம்பலூர் வட்டம் முழுவதிலும் கால்நடையாகவே ஊர் ஊராகச் சென்று, ஒரு குழுவினராக, மூடநம்பிக்கை ஒழிப்புக் கொள்கை, சாதி ஒழிப்புக் கொள்கை, நாட்டுப் பிரிவினைக் கோரிக்கை விளக்கம் பற்றி நாங்களே பேசிக் கூட்டங் களை முடிப்போம்.

thiruvarur thangaraj 340ஆனாலும் கலகலப்பாகவும் சமயத்துக்கு ஏற்ற விளக்கங்களுடனும் ஒரு நடிகரைப்போல் குரலை உயர்த்தியும் தாழ்த்தியும் 2 மணிநேரத்துக்குக் குறை யாமல் சொற்பொழிவாற்றி, சிற்றூர்ப்புற மக்கள் நெஞ்சில் சுயமரியாதைக் கருத்துகளைப் பதிய வைப்பதில் - பெரியாருக்கு அடுத்து முதலிடம் பெற்றவராகத் திகழ்ந் தார் திருவாரூர் தோழர் கே. தங்கராசு அவர்கள். ஆத்திரமும் காத்திரமும் பொங்கப் பேசி மக்களை மதத் துக்கு எதிராக உசுப்பிவிடும் திறமை படைத்த அடுத்த சொற்பொழிவாளர் மதுரை எஸ்.டி. விவேகி ஆவார்.

இவ்விரு பெரும் கொள்கைப் பரப்புரையாளர் களும் நல்ல ஆராய்ச்சிக் கண்ணோட்டம் உள்ளவர் கள். இவ்விருவரும் 1958 முதல் பல கூட்டங்களில் பெரம்பலூர் வட்டத்தில் பங்கேற்றார்கள். அதன் பயனாக, பெரம்பலூர் வட்டம் 1962க்குள் தி.க. கோட்டை யாக விளங்கியது. 1980 முதல் இறுதிக்காலம் வரை யில் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியில் பணியாற்றிய எஸ்.டி, விவேகி 1981இல் மறைவுற்றார். “வேதங்களின் வண்டவாளம்” என்ற அவருடைய ஆராய்ச்சி நூல் - இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறித்துவர்களுடைய மவுடீகத் தன்மையை நார் நாராகக் கிழித்தது.

அதேபோல், இராமாயணத்தின் வண்டவாளங் களைத் தண்டவாளத்தில் ஏற்றி, இராம பக்தர்கள், கம்ப ராமாயணக் காதலர்கள், இராமாயணத்தையே வாழ்க்கை வழிகாட்டியாகக் கொண்ட பார்ப்பனர்கள் ஆகியோர் அஞ்சி அடங்கும் அளவுக்கு நாடகமாகவும், கட்டுரையாகவும் எழுதியும்; மேடையில் 3 மணி நேரம் கூடத் தொடர்ந்து பேசியும் ஈடுஇணையற்ற தொண்டாற்றியவர் திருவாரூர் கே. தங்கராசு அவர் கள். 12.4.1970 இரவில் மயிலாடுதுறையில் நடத்தப் பட்ட கீமாயண நாடகத்தில் அவர் இராவணனாக நடித்ததை முழுநேரமும் தந்தை பெரியாருடன் அமர்ந்து காணும் வாய்ப்பை நான் பெற்றேன்.

திருவாரூர் கே. தங்கராசு, கி. வீரமணி, டி.எம். சண்முகம் ஆகிய மூவரையும் - திருச்சி சட்டமன்றத் தொகுதிக்கு 1962இல் நடைபெற்ற இடைத் தேர்தலில், திருச்சி மாவட்டத் தேர்தல் பொறுப்பாளனான என் னுடன் சேர்ந்து பரப்புரை செய்திடத், தந்தை பெரியார் போதிய ஏந்துகளுடன் சென்னையிலிருந்து விடுத்து வைத்தார். இரண்டு நாள்கள் இரவென்றும் பகலென் றும் பாராமல் நாங்கள் அனைவரும் தேர்தல் பரப்புரை செய்தோம்.

இதற்கு முன்னர், 1958-59இல் திருச்சி, தஞ்சை, தென்னார்க்காடு மாவட்டத் தோழர்கள் ஆயிரக்கணக் கான பேர் அரசமைப்புச் சட்ட எரிப்புப் போரில் சிறைப் பட்டிருந்த நேரத்தில் - திருவாரூர் கே. தங்கராசு, நடிகவேள் எம்.ஆர். இராதா, மண்ணச்சநல்லூர் புலவர் ஆறுமுகம் ஆகியோர் ஒரு குழுவினராகவும்; ஈ.வெ.ரா. மணியம்மை, கி. வீரமணி இருவரும் ஒரு குழுவினராகவும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கொள்கைப் பரப்புரையை மேற்கொண்டனர்.

திருவாரூர் கே. தங்கராசு எழுதிய ‘இரத்தக்கண் ணீர்’ நாடகக் கதை படித்தோர்க்கும் படிக்காதவர்க்கும் தனி மனித ஒழுக்கக் கேட்டால் நேரும் சீரழிவைப் படம் பிடித்துக் காட்டியது. தங்கதுரை முதலான திரைப் படங்களுக்கும் அவரே கதை ஆசிரியர்.

1957இல் டி.எம். சண்முகத்துடன் இணைந்தும், தனியாகவும் “பகுத்தறிவு”, “திராவிட ஏடு” முதலான கிழமை ஏடுகளை ஆசிரியர் பொறுப்பேற்று வெளி யிட்டார், தங்கராசு.

இத்தன்மைகளில் பன்முகத் திறமைகளை ஒருங்கே பெற்ற தங்கராசு அவர்கள், தாய் அமைப்பான திராவிடர் கழகத்துக்கு எந்தவகையிலும் எப்போதும் புறம்பாகச் செயல்படாதவர்.

பயணம் செல்லுமிடங்களில், உணவு சரியில்லை என்றால் - எப்போதுமே அவர் மிகவும் கடிந்து பேசு வார். அதை ஒரு பெரிய குறையாகச் சிலர் செய்தி பரப்பினர்; பெரியாரின் பார்வைக்கும் அதைக் கொண்டு சென்றனர். பெரியார் அதைப் பெரிய குறையாக எடுத்துக்கொள்ளவில்லை. அப்படிப்பட்ட பன்முகத் திறமையாளர் எந்த முன்னறிவிப்புமின்றி 1975இல் திடுமென ‘விடுதலை’ வழியாக, ஓர் அறிக்கை மூலம் தி.க.வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தே விலக்கப்பட்டார். அதுகண்டு அஞ்சாமல், தனக்கு ஒத்து வந்தவர்களைக் கொண்டு, தொடர்ந்து பெரியாரின் கொள்கை வெற்றிக்கே இறுதி வரை அவர் பாடுபட்டார்.

எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் பெரியார் கொள் கைக்கு ஆக்கம் சேர்க்கும் நல்ல பல பணிகளைத் திருவாரூர் தங்கராசு சாதித்தார்.

1. தந்தை பெரியாரின் முறையான வாழ்க்கை வர லாற்றை உருவாக்கி வெளியிட, நாவலர் நெடுஞ் செழியன், நெ.து. சுந்தரவடிவேலு, ஈரோடு மு. இராசகோபாலன், கே. தங்கராசு போன்றவர் களைக் கொண்ட குழு அமைய ஆவன செய்தார். அவருடைய தூண்டுதலால், என்னையும் ஓர் உறுப்பினராக இருக்கும்படி கோரி, அரசினர் எனக்கு மடல்விடுத்தனர். நான் அதை ஏற்க வில்லை.

2. தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்று நிகழ்ச்சிகளைக் கண்கொள்ளாக் காட்சியாகச் சித்திரித்து - ஒலி, ஒளி மூலம் பல மாவட்டத் தலைநகரங்களில் நடத்திக் காட்டச் செய்தார். அது, ஏனோ, பாதியில் நிறுத்தப்பட்டது!

3. 6-3-1967இல் ஆட்சிப் பொறுப்பேற்ற திராவிடக் கட்சி ஆட்சி, பெரியாருக்குக் காணிக்கை ஆக்கப் பட்டாலும், பெரியாரின் தமிழ் எழுத்துச் சீர்திருத் தத்தைக் கல்வியிலும், அரசு நிருவாகத்திலும் அறிமுகப்படுத்த அது முன்வரவில்லை. பார்ப்பன ஏடுகள் செயல்படுத்த முன்வந்த பிறகும், இவர்கள் செயற்படுத்தவில்லை. எம்.ஜி.ஆர். ஆட்சி எழுத்துச் சீர்திருத்தத்தைச் செயற்படுத்த, திருவாரூர் கே.தங்கராசு காரணராக இருந்தார்.

4. சட்ட எரிப்பில் சிறை சென்று மீண்ட, தங்கராசு வோடு பணியாற்றிய பலருக்கும் “சாதி ஒழிப்புக் கான கேடயமும்”, சிலருக்கு நிதி உதவியும் அளிக் கப்பட ஆவன செய்தார் (நான் எனக்கான கேடயத் தைப் பெற விரும்பவில்லை). நிற்க.

1989இல் தி.மு.க. ஆட்சியில் கலைஞர் மு.கருணாநிதி, திருவாரூர் தங்கராசுவுக்குத் தந்தை பெரியார் விரு தும், பணமுடிப்பும் அளித்துப் பெருமைப்படுத்தினார்.

இத்துணைச் சிறந்த வரலாற்றுப் பதிவுகளுக்கு உரியவரான - மாபெரும் பெரியார் கொள்கைப் பரப்பு ரை இயங்கியாக விளங்கிய திருவாரூர் கே. தங்கராசு அவர்கள் - தம் 87ஆம் அகவையில் 5-1-2014 ஞாயிறு மாலை 4.30 மணிக்கு மாரடைப்பால் மறை வுற்ற செய்தி, மாலை 5.30 மணிக்கு எனக்கு வந்த போது, செயங்கொண்ட சோழபுரத்தில் விகிதாசார வகுப்புவாரி இடப்பங்கீடு மாநாட்டில், நான் நிறைவுரை ஆற்றிக் கொண்டிருந்தேன். தாங்கொணாத் துயருடன், என் உரையை முடித்துவிட்டு, அவையோர் அனை வர்க்கும் துயரச் செய்தியை அறிவித்து, இறுதி அஞ்சலி செய்த பின்னர் இரங்கல் தீர்மானமும் நிறைவேற்றி னோம்.

உடல்வாகுவால், என்னைவிட அவர் மூத்தவர் போலத் தோற்றமளித்தார். அவருடைய 82ஆவது பிறந்த நாளில், நானும் தஞ்சை இரா. இரத்தினகிரியும் காலை 7 மணிக்கே அவரில்லத்துக்குச் சென்று, பாராட்டுத் தெரிவித்துவிட்டு, 3 மணிநேரம் பேசிக் கொண்டிருந்து, காலை விருந்து உண்டு மீண்டோம்.

அதன் பின்னர், 6-1-2014 பிற்பகல் 2 மணிக்கு அன்னாரின் உடiலைத்தான் நானும் என் தோழர் களும் - ஆயிரக்கணக்கான தோழர்கள் புடைசூழப் பார்த்தோம். அன்னாரின் குடும்ப உறுப்பினர்களை யும், அவருடைய சம்பந்தி அம்மாளையும் பார்க்கப் பார்க்க என் துயரத்தை அடக்கவே இயலவில்லை; குமுறி அழுதுவிட்டேன்.

நல்ல தாட்டியான உடல்வாகு - நிமிர்ந்த நடை - கணீரென ஒலிக்கும் சிம்மக்குரல் - சீறி எழும் மற உணர்ச்சி - எவரைக்கண்டும் தலைதாழாத தன் மானம் - வெள்ளையாகப் பேசும் உள்ளம் - அவர் தாம் திருவாரூர் கே. தங்கராசுவின் ஆளுமைகள்!

வெல்க திருவாரூர் தங்கராசு புகழ்!

- வே. ஆனைமுத்து

Pin It