எத்தனை எத்தனை ஆண்டுகள் தொடரும்
இந்த மண்ணில் ‘சாதி’ப்போர்?
எத்தனை ஆண்டுகள் தொடர்ந்தால் என்ன,
பார்ப்பனர் தாமே சாதிப்போர்?
சட்டம் நீதி ஆட்சி எல்லாம்
தர்ப்பைப் பூணூல் சொற்படியே!
பட்டம் பதவி படிப்புகள் எல்லாம்
பார்ப்பா னின்மனு நூற்படியே!
இடஒதுக்கீட்டுக் கேடர்கள் காங்கிரசுத்
தலைமையில் இருந்த எத்தகர்களே!
படமெடுத் தாடும் பாம்பாய் நேரு
பரம்பரை வந்த பார்ப்பனரே!
எல்லாம் தெரிந்தும் நேரு மகான்(!) தான்
இந்தச் செய்தியில் குழிபறித்தார்
கல்வி தராமல் சூத்திர மக்களைக்
காயடித்து விழி பறித்தார்.
நீதி பதியாய் அமர்ந்தால் போதுமா
நிகழ் காலத்தின் அறிவிலையா?
சாதி வாரிக் கணக்கெடுப் பதனைத்
தடுத்தவன் இங்கெவன் தெரியலையா?
ஒதுக்கீட் டால்பிறர் உரிமை கெடுவதை
ஒப்பேன் என்று குதிக்கின்றாய்
இதுவரை கொழுத்தவை எல்லாம் சாதி
எருமைகள் என்பதை மறக்கின்றாய்.
கிழியக் கிழியப் பக்க பக்கமாய்
ஆயிரம் விளக்கம் கிளத்துகிறாய்
வழிய வழியக் கொழுத்துத் தின்னும்
வயிறுகள் பார்த்தும் பிதற்றுகிறாய்.
இடுப்பை ஒடிக்க இப்போது நீ
சாதிக் கணக்கை எடுக்கின்றாய்
படித்து முடித்தவன் எல்லாம் பார்ப்பான்
என்பது தெரிந்தும் நடிக்கின்றாய்.
வாக்குக் கட்சிகள் வீராப் பெல்லாம்
வந்து போகும் தேர்தல்வரை
நோக்கம் முடிந்து கோட்டை சென்றால்
‘நூலோர்’ போல வாழ்க்கை முறை
பிச்சை யல்ல பிறப்புரிமை இது
நிலமே பெயர்ந்திட எழுந்திடுவோம்
செத்தாலும் பகை சாய வைத்து
மண்ணில் விழுந்து உயிர் விடுவோம்.

Pin It