இராபர்ட் கால்டுவெல் (1814-2014) என்னும் மனிதரின் இருநூறு ஆண்டு நினைவைக் கொண்டாட வேண்டும். இருநூறு ஆண்டுகளில் தமிழ்ச் சமூகத்தில் உரையாடலுக்குட்பட்ட ‘திராவிட இயல்’ என்னும் கருத்துநிலை தொடர்பான உரையாடலுக்கு வழிகண்ட மனிதர்களுள் கால்டுவெல் முதன்மையானவர். திராவிட இயல் என்னும் கருத்துநிலையின் இருநூறு ஆண்டுகள் பயணத்தில், கால்டுவெல் குறியீடாக அமைகிறார். இந்தக் குறியீட்டின் இருநூற்றாண்டுப் பயணத்தை மதிப்பீடுசெய்து, அதன் பல்வேறு பரிமாணங்களைப் புரிந்துகொள்ள வேண்டிய தேவை நமக்கு இருக்கிறது. இந்தப் பின்புலத்தில் கால்டுவெல் என்னும் ஆளுமையின் நினைவைப் போற்றும் கடமையும் நமக்கிருக்கிறது. கால்டுவெல்லைப் புரிந்துகொள்வதற்கு உதவும் நோக்கத்தில் பின் கண்ட வரையறைகளை உருவாக்கிக் கொள்வோம். 
 
-காலனியப் புலமையாளர்கள், அவர்களால் கட்டமைக்கப்பட்ட ‘இந்தியா’ என்ற நிலப்பகுதியில் செயல்பட்ட இனம், மொழி குறித்த மதிப்பீடுகளை உருவாக்கியமுறைகள்.
 
- சென்னை மாநிலப்பகுதியை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் செயல்பட்ட புலமைத்துவச் செயல்பாடுகள்.
 
-கால்டுவெல் உருவாக்கிய ‘ஒப்பிலக்கணம்’ என்னும் துறை சார்ந்து, தமிழ்ச்சூழலில் முன்னெடுக்கப்பட்ட, மொழிசார்ந்தும் அம்மொழியைப் பேசும் மக்கள் சார்ந்தும் உருவான கருத்து நிலைகள்.
 
-தந்தை பெரியார் என்று அழைக்கப்படும் ஈ.வெ.ராமசாமி கட்டமைத்த கருத்து நிலையைக் கால்டுவெல் - கருத்துநிலையின் தொடர்ச்சியாகப் புரிந்துகொள்ளும் தேவை.
 
-பெரியார் மறைவுக்குப் பின் திராவிடக் கருத்துநிலை சார்ந்த செயல்பாடுகளைக் கால்டுவெல் உருவாக்கிய கருத்துநிலையின் வீழ்ச்சியா? அல்லது அக்கருத்துநிலை வேறு பரிமாணத்தில் உள்வாங்கும் தேவை இருக் கிறதா? என்ற உரையாடல்.
 
caldwell 328மேற்குறித்த உரையாடல் இருநூறு ஆண்டுகளில், தமிழ் மொழி பேசும் நிலப்பகுதியின் பண்பாட்டு வரலாற் றோடு இணைந்தும் இருக்கிறது. இந்த வரலாற்றைக் கால்டுவெல் நினைவு சார்ந்து மதிப்பீடு செய்வதற்கான சூழல் உருப்பெற்றிருப்பதாகக் கருதலாம். தமிழ்ச்சூழல், பண்பாட்டு நெருக்கடியில் இப்போது தத்தளிக்கிறது. இதற்கான காரணங்கள் குறித்த உரையாடலும் அடுத்தகட்ட நகர்விற்கு, அக்கருத்துநிலை தொடர்பான மதிப்பீட்டைச் செய்ய வேண்டும். அதன் மூலம் புதிய நடைமுறைகளைக் கட்டமைக்க முடியும். பொருளாதார நெருக்கடிகள் நம்மால் புரிந்துகொள்ளும் அளவிற்கு மொழி-இனம் சார்ந்த பண்பாட்டு நெருக்கடிகள் புரிந்துகொள்வதற்கான சூழலும் தேடலும் மிகவும் குறைவாகவே இருப்பதை உணர்கிறோம். ‘தனிமனித செயல்பாடு’ சார்ந்து மதிப்பீடு செய்வதின் மூலம், அம்மனிதர் முன்னெடுத்த கருத்துநிலைக்கும் சமூகத்தில் அக்கருத்துநிலை சார்ந்த செயல்பாட்டிற்கும் உள்ள உறவைப் புரிந்துகொள்ளலாம்.
 
1784 - ஆம் ஆண்டு ‘ஆசியவியல் கழகம்’ என்னும் அமைப்பைக் கல்கத்தாவில் வில்லியம் ஜோன்ஸ் (1746-1794) உருவாக்கினார். இலண்டன் நகரில் செயல்பட்ட ஆசியவியல் கழகத்தின் கிளையாகவே இவ்வமைப்பு உருவாக்கப்பட்டது. இவ்வமைப்பு, ஆசியாக்கண்டம் சார்ந்த நிலப்பகுதி மற்றும் ஆப்பிரிக்கா நிலப்பகுதியில் வாழும் மனிதர்கள் சார்ந்த இனவியல் ஆய்வுகளில் அக்கறையுடன் செயல்பட்டது. இவ்வமைப்பில் செயல்பட்ட பலரும் ‘இந்தியா’ என்னும் நிலப்பகுதியின் மக்கள் என்பவர்கள் இந்தோ-ஆரிய மொழிக் குடும் பத்தைச் சேர்ந்தவர்கள் என்று கருதினர். இந்நிலப் பகுதியில் பேசப்படும் மொழிகள் இந்தோ-ஆரிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த சமசுகிருத மொழியி லிருந்து உருவான மொழிகள் என்றும் கருதினர். சமசு கிருத மூல மொழியிலிருந்தே இந்தியாவில் பேசப்படும் அனைத்து மொழிகளும் கிளைத்திருக்க வேண்டும் என்னும் கருதுகோளை முன்னிறுத்தியே ஆய்வு செய்தனர். கி.பி. 1812 இல் சென்னையில், சென்னை இலக்கியச் சங்கம் உருவாக்கப்படும் வரை, மேற்குறித்த கருத்துநிலைதான் நடைமுறையில் இருந்தது.
 
1784 - 1812 என்ற காலச்சூழலில் காலனியப் புலமைத்துவச் செயல்பாட்டில், திராவிட மொழிக் குடும்பம் என்னும் கருத்துநிலை இடம்பெறவில்லை. இதன் மூலம் காலனியப் புலமையாளர்கள் கட்டமைத்த கருத்துநிலைகளைப் பின்வரும் வகையில் தொகுக்கலாம்.
 
-‘இந்தியா’ என்று காலனிய ஆட்சி அதிகாரத்தில் கட்டமைக்கப்பட்ட நிலப் பகுதியின் மூல மொழி சமசுகிருதம் என்னும் நிலைப்பாடு.
 
-சமசுகிருத மொழியில் உள்ள நூல்கள் தான்,‘இந்தியா’ என்ற நிலப்பகுதியின் பண் பாட்டுக் கூறுகளைப் புரிந்துகொள்ள உதவும் என்னும் புரிதல்.
 
- சமசுகிருத மொழி வழி அறியப்படும் ‘இந்து மதம்’ என்னும் கருத்துநிலை. அதுவே இந்தியா தொடர்பான சட்ட மரபுகளை உருவாக்க உதவும் என்னும் புரிதல்;  இந்துமதம் சார்ந்த ‘மநுநூல்’ பதிவுகளே இந்தியாவின் அறநூல் மரபாகக் கொள்ள வேண்டும் என்ற செயல் பாடு.
 
மேற்குறித்த பின்புலத்தில்,‘தென்னிந்தியா’ என்ற நிலப்பகுதி குறித்தோ, அப்பகுதியில் மக்கள் பேசும் மொழி குறித்தோ எவ்விதமான புரிதல் அற்றதாகக் காலனியப் புலமைத்தளம் செயல்பட்டதைக் காண்கி றோம். இந்நிலையைக் கி.பி. 1816 இல் பிரான்சிஸ் வைட் எல்லீஸ் (1777-1819) என்னும் காலனிய ஆட்சி யாளர் மறுபரிசீலனைக்கு உட்படுத்துகிறார். ஏ.டி. காம்பெல் (1789-1857) என்பவர் 1816 இல் எழுதிய தெலுங்கு இலக்கண நூலுக்கு முன்குறிப்பை எழுதுகிறார் எல்லீஸ். இதில் தென்னிந்திய மொழிகள் பல இருப் பதைக் குறிக்கிறார். எல்லீஸ் வெளிப்படுத்திய குறிப்பு சார்ந்து பின்வரும் செய்திகளைத் தொகுத்துக் கொள்ள முடியும்.
 
-இந்தோ-ஆரிய மொழிக் குடும்பம் என்று ஆசியவியல் கழகம் கருதும் கருத்துநிலைக்கு மாறாக தென்னிந்தியப் பகுதியில் வேறு மொழிக்குடும்பம் நடைமுறையில் இருப்பது அறியப்படுகிறது.
 
- சமசுகிருத மொழிக்கும், தென்னிந்தியப் பகுதியில் இருக்கும் மொழிகளுக்கும் தொடர்பு இல்லாமல் இருப்பது குறித்தும் உலகுக்கு அறிவிக்கப்படுகிறது.
 
- எல்லீஸ் வெளிப்படுத்திய மேற்குறித்த கருத்து நிலையைத் திராவிட அடையாளம் ((Dravidan proof)என்று தாமஸ் ட்ரவுமன் பின்னர் வரை யறை செய்யும் வாய்ப்பு உருப்பெறுகிறது.
 
எல்லீஸ் வழி உருவான மேற்குறித்த அடையாளம், சென்னையில் காலனிய ஆட்சியாளர்களால், குறிப்பாக எல்லீஸ் அவர்களால் உருவாக்கப்பட்ட ‘சென்னை இலக்கியச் சங்கம்’ (1812) மற்றும் புனித ஜார்ஜ் கல்லூரி ஆகியவற்றின் செயல்பாடுகள் மூலம் உறுதிப்படுத்தப் படுகிறது. மேற்குறித்த அமைப்புகளின் மூலம் அச்சகம் உருவாக்கப்படுகிறது. நூல்வெளியீட்டகம் அமைக்கப் படுகிறது. பல்வேறு நூல்கள் அச்சிடப்பட்டு வெளியிடப் படுகின்றன. இவ்வமைப்பின் செயல்பாடுகள் 1812 - 1854 என்றகாலப்பகுதியில் வளமாகச் செயல்படுகிறது. திராவிட மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் குறித்த வேறுபட்ட புரிதல் இவ்வமைப்பால் கட்டமைக்கப்பட்டது. காலனியப் புலமையாளர்கள், உள்ளூர்ப் புலமையாளர்களுடன் இணைந்து செயல் படும் சூழல் உருவானது. இவ்வகைச் செயல்பாட்டை இப்போது சென்னைக் கீழ்த்திசைப்பள்ளி (Madras school of Orientalism)என்று தாமஸ் ட்ரவுமன் போன்றவர்கள் அழைக்கிறார்கள். இக்கருத்துநிலை மூலம் உருவான புதிய தன்மைகளாய்ப் பின்கண்டவற்றைத் தொகுக்கலாம்.
 
- சமசுகிருத மொழி சார்ந்த அடையாளம் என்ற தன்மையிலிருந்து வேறுபட்ட பிறிதொரு அடையாளம் வெளிப்படுத்தப்படுகிறது.
 
- மேற்குறித்த அடையாளம் திராவிட அடை யாளம் என்னும் ‘திராவிடமொழிக் குடும்பம்’ என்ற பிறிதொரு மொழிக் குடும்பமும் இந்திய நிலப்பகுதியில் செயல்படுவதும் உறுதிப் படுத்தப்பட்டது.
 
- 1784 இல் உருவாக்கப்பட்ட ஆசியவியல் கழகத்தின் கருத்து நிலைகள், மொழி, இனம், பண்பாடு, நிலவியல் ஆகிய பல்வேறு கூறு களிலும் தவறானவை என்பது உலகுக்கு அறிவிக்கப்படுகிறது.
 
1784 - 1812 என்ற காலநிலையில் உருவாக்கப் பட்ட கருத்துநிலைகள் 1812 - 1856 உள்ளிட்ட காலப் பகுதியில் ‘சென்னைக் கீழைத்தேயவியல் பள்ளி’ என்னும் கருத்துநிலையாக உருப்பெற்றுவிடுகிறது. காலனிய அதிகாரத்தில் உருவாக்கப்பட்ட இந்தியா என்னும் நிலப்பகுதி இருவேறுபட்ட மொழிக்குடும்பங்கள் செயல்படும் பூமியாக இருப்பது உறுதியாகிறது. இதன் மூலம் ‘கீழைத்தேயவியல்’ என்னும் கருத்துநிலையில் அடிப்படையான மாற்றங்களை முன்வைக்கும் சூழல் உருப்பெற்றதாகக் கருதலாம். அதனைப் பின்வருமாறு தொகுத்துக் கொள்வோம்.
 
- மேற்குலகைச் சேர்ந்த காலனிய மனநிலை யாளர்களால் உருவாக்கப்பட்ட கீழைத் தேயவியல் Orientalism என்னும் கருத்து நிலையில், இந்தியா என்னும் நிலப்பகுதியில் சமசுகிருத மொழிசார்ந்த ஆக்கங்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தது.
 
- புதிய கருத்துநிலையியல், தென்னிந்திய மொழிகள், அதிலும் குறிப்பாக ‘தமிழ்’ என்பதும் இடம்பெற்றது. சமசுகிருத மொழிக்கு இணையான பழமை உடையதாகவும் தமிழ் அறியப்பட்டது.
 
- கீழைத்தேயவியல் என்னும் கருத்துநிலையில், வரலாற்றுப் போக்கில் தமிழ்மொழி, அதனைப் பேசும் மக்கள் ஆகியோர் குறித்த கருத்துநிலை இடம் பெறவேண்டியதன் தேவை முன்வைக்கப் பட்டது.
 
- தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்று முள்ள திராவிட மொழிகள் சார்ந்த பல்வேறு கூறுகளும் ‘கீழைத்தேயவியல்’ என்னும் கருத்து நிலைக்குள் வரும் தன்மையும் உலகுக்கு அறிவிக்கப்பட்டது.
 
மேற்குறித்த பின்புலத்தில் இராபர்ட் கால்டுவெல் (1814-1891) என்னும் மனிதரின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்யும் தேவை உண்டு. மேற்குறித்த 1784 - 1856 கால இடைவெளியில் உருவான ‘திராவிடஇயல்’ என்னும் கருத்துநிலைகளைக் கால்டுவெல் எவ்வகையில் எதிர் கொண்டார் என்பதன் மூலம் அவரது தனித்த ஆளுமையைப் புரிந்துகொள்ள இயலும். கால்டுவெல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தை எழுதுவதற்கு முன்பு, தமிழியல் தொடர்பாகச் செயல்பட உருவான சூழல் குறித்தும் பதிவு செய்வது அவசியம். 1812 - 1854 காலச்சூழலில் செயல்பட்ட, சென்னைக் கல்விச் சங்கம், மற்றும் சென்னை ஜார்ஜ் கோட்டைக் கல்லூரியின் மூலமாகப் பல்வேறு செயல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில், கால்டுவெல் சென்னைக்கு வந்து சேர்கிறார். கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர், தாண்டவராய முதலியார், விசாகப் பெரு மாளையர் ஆகிய பிற தமிழறிஞர்கள் கோட்டைக் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். இந்தச்சூழல் தமிழ் இலக்கணம், தமிழ் இலக்கியம் ஆகியவற்றைப் பிரித்தானியர்கள் எளிதாகக் கற்று அறியும் வாய்ப்பை உருவாக்கியது. கால்டுவெல் 1838 இல் சென்னை வந்தடைந்தபின் அவருக்குக் கிடைத்த புறச்சூழலின் தன்மைகளைக் கீழ்க்காணும் வகையில் தொகுத்துக் கொள்ள இயலும்.
 
- அன்ட்ரிக் அடிகள் (1520-1600), இராபர்ட் டி-நொபிலி (1577-1656), வீரமாமுனிவர் (1680-1746), சீகன்பால்கு (1682-1719) ஆகிய பலர் தமிழியல் தொடர்பாக உருவாக்கியிருந்த பின்புலம், கால்டுவெல் இயல்பாகச் செயல் பட வாய்ப்பாக அமைந்தது.
 
- துரு, கால்டுவெலின் நெருக்கமான நண்பர். இவர் இராமாநுசக் கவிராயரிடம் தமிழ் பயின்றவர். திருக்குறளில் 63 அதிகாரங்களை மொழிபெயர்த்தவர். மேலும் பவர் (1812-1885) அவர்களும் கால்டுவெல்லின் நண்பரா வார். இவர் சீவகசிந்தாமணி நாமகள் இலம் பகம் வரை மொழிபெயர்த்தவர். சென்னைக் கிறித்தவக் கல்லூரியை உருவாக்கிய அந்தர்ஸன் கால்டுவெல்லுக்கு நெருக்கமான நண்பராக இருந்தார்.
 
- 1841 ஆம் ஆண்டில் சென்னையில் மாநிலப் பள்ளி ((Presidency School)) உருவாக்கப்பட்டது. இதில் ஆசிரியராக பவர் பணியாற்றினார். இந்தக் காலத்தில் கால்டுவெல் உடனிருந்தார். கரந்தை இராசாராம் முதலியார் என்பவரிடம் தமிழ்பயின்றார்.
 
கால்டுவெல் மேற்குறித்த தமிழ்ச்சூழலில் 1838-1841 ஆண்டுகளில் சென்னையில் வாழ்ந்தார். பின்னர் கால்நடையாகவே திருநெல்வேலி சென்றடையத் திட்டமிட்டார். சிதம்பரம் வழியாகத் தரங்கம்பாடியைச் சென்றடைந்தார். அங்குச் செயல்பட்டுக் கொண்டிருந்த டேனிஸ் ஏசு சபைச்செயல்பாடுகளை நேரில் கண்டறியும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் தஞ்சாவூரில் இருந்த சுவார்த் (1726-1798) அவர்களைச் சென்று பார்த்தார். அவருடன் சில காலம் தங்கியிருந்தார். சுவார்த் தமிழ்-இலத்தின் அகராதியைத் தொகுத்தவர். பின்னர் நீலகிரி, கோயம்புத்தூர் வழியாக மதுரையைச் சென்றடைந்தார். இப்பொழுது செயல்படும் அமெரிக்கன் கல்லூரி உருவாவதற்கு மூலமாக அமைந்த பள்ளிக்கூடத்தைத் திருமங்கலத்தில் உருவாக்கிய திரேசி அவர்களையும் மதுரையில் சந்தித்தார். சென்னைப் பல்கலைக்கழக அகராதியை ((Tamil/Lexicon)) மதுரையில் தொடங்கி வைத்த சாந்தலர் என்பவரையும் கால்டுவெல் சந்தித்தார். இவ்வகையில் தமிழகத்தின் நிலவியல் கூறுகள், பல்வேறு வகைப்பட்ட மக்களின் வாழ்முறைகள் ஆகியவற்றை அறிந்துகொண்டு 1841 இல் திருநெல்வேலி நாசரத் சிற்றூரைச் சென்றடைந்தார். பின்னர் நிலையாக இடையன்குடியில் தங்கி சமயப் பணியாற்றத் தொடங் கினார். இவர் இடையன்குடியில் பணியாற்றிய போது மிக அருகில் இருந்த சாயர்புரத்தில் போப் (1820-1908) பணியாற்றிக்கொண்டிருந்தார். இடையன்குடியிலிருந்து ஐந்துகல் தொலைவில் இருந்த சுவிசேஷபுரத்தில் சச்சந்தர் சமயப் பணிபுரிந்தார். நாகர்கோவிலில் மால்த் என்பவர் சமயப் பணிபுரிந்து வந்தார். இவருடைய மகள் எலிஜா அவர்களைத்தான் கால்டுவெல் பின்னர் திருமணம் செய்து கொண்டார்.
 
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைக் காலத்தில் திருநெல்வேலிச் சீமை முழுவதும் இவ்வகை கிறித்தவத் தொண்டர்களின் சமயப்பணி நடைபெற்ற சூழலில் கால்டுவெல் பணியாற்றினார். இவருக்கு தட்பவெட்பச் சூழல், உடல்நலம் கெட வாய்ப்பாயிற்று. எனவே, 1854 இல் தமது தாயகத்துக்குத் திரும்பிச் சென்றார். அங்கு ஓய்வாக இருந்து திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண நூலை உருவாக்கி 1856 இல் இலண்டன் நகரத்தில் அச்சிட்டு வெளியிட்டார். கால்டுவெல் உருவாக்கிய இந்நூல்தென்னிந்திய திராவிட மொழிக்குடும்பம் குறித்த நிலையான ஆவணமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து 1857 இல் போப் - உருவாக்கிய தமிழ் இலக்கண நூலும், 1858இல் சாமுவேல்பிள்ளை  உருவாக்கிய தொல்காப்பிய நன்னூல் என்னும் நூலும் 1862 இல் வின்சுலோ உருவாக்கிய தமிழ்-ஆங்கில அகராதி மற்றும் ஆங்கில-தமிழ் அகராதியும் தமிழியல் ஆய்வு வளர்ச்சியில் முக்கிய பணிகளாக உருப்பெற்றன. 1860 இல் பர்னல் எழுதிய ‘தென்னிந்திய தொல் லெழுத்தியல் கூறுகள்’ குறித்த நூலும் குறிப்பிடத்தக்க  ஒன்றாக அமைந்தது. கால்டுவெல் செயல்பட்ட இச்சூழலில், தமிழ்ச்சூழல் எவ்வகையில் செயல்பட்டுக் கொண்டிருந்தது என்பது குறித்த புரிதல் தேவை. இதனைப் பின்வரும் வகையில் தொகுக்கலாம்.
 
- வடலூர் இராமலிங்கன் என்னும் வள்ளலார் (1823-1874) சமரச சுத்த சன்மார்க்கம் என்னும் சமயச் சீர்திருத்தப் பணியைச் செய்துகொண் டிருந்த காலம்.
 
- சைவ சமய மறுமலர்ச்சியைக் காலனியத்தின் மூலம் உருப்பெறும் மறுமலர்ச்சிக்கு இணை யாகக் கட்டமைக்க ஆறுமுகநாவலர் (1822-1879) முயற்சி எடுத்துக் கொண்ட காலமும் இதுவாகும்.
 
- பிரம்மசமாஜம், ஆரிய சமாஜம் போன்ற சமயச்சீர்திருத்த இயக்கங்கள் செயல்பட்ட காலமும் இதுவாகும்.
 
- சென்னை இலௌகிக சங்கம் (1878-1888) என்னும் நாத்திக இயக்கம் செயல்பட்ட காலமும் இதுவாகும்.
 
மேற்குறித்த அமைப்புகள் எதுவும் கட்டமைக்காத கருத்துநிலையைக் கால்டுவெல் தமது நூலின் மூலமாகக் கட்டமைத்தார். ‘திராவிடம்’ என்னும் அக்கருத்துநிலை, அவரால் 1856 இல் உருவாக்கப்பட்டு, அவர் தமது நூலை 1875 இல் இரண்டாம் பதிப்பாகக் கொண்டு வரும் போது மேலும் வளர்த்தெடுத்த நிலையைக் காண முடிகிறது. 1856-1875 காலச்சூழலில், தமிழ்ச்சூழலில் உருவான புதிய கூறுகள் அனைத்தையும் தமது நூலில் அவர் இணைத்தார். அந்நூல் சென்னைப்பல்கலைக்கழகப் பாடநூல் ஆக்கப்பட்டது. கால்டுவெல், சென்னைப் பல்கலைக்கழக - ஆட்சிமன்ற உறுப்பினராக அங்கீகரிக்கப்பட்டார். 1879 இல் சென்னைப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் உரையாற்றும் தகுதியும் அவருக்கு ஏற்பட்டது. 1913 இல் கால்டு வெல்லின் ஒப்பிலக்கண நூலைச் சில மாற்றங்களுடன் பல்கலைக்கழகம் வெளியிட்டது. அந்நூலில் செய்யப் பட்ட மாற்றங்கள், கால்டுவெல் முன்னெடுத்த திராவிட இயல் குறித்த கருத்து நிலையைச் தமிழ்ச்சமூகம் எதிர் கொண்டதற்கான ஆதாரமாகக் கொள்ள இயலும். அந்நூலில் நீக்கப்பட்ட பகுதிகள், எவ்வகையான கருத்து நிலை சார்ந்து செயல்பட்டது என்பதைத் தொகுத்துக் கொள்வோம்.
 
- கால்டுவெல், தமிழ் இலக்கிய உருவாக்கம் நடைபெற்ற போக்குகளை அவரது கண் ணோட்டத்தில் பதிவு செய்து இருந்தார். அதில் ‘சமண இலக்கிய வட்டம்’ என்னும் பகுதியும்,‘பார்ப்பனிய எதிர்ப்பு இலக்கிய வட்டம்’ என்னும் பகுதியும் இடம்பெற்றிருந்தது.
 
- பறையர்கள் என்னும் மக்கள், ஆதிதிராவிடர்கள் என்னும் கருத்து நிலை சார்ந்த கருத்துக்களைக் கால்டுவெல் பதிவு செய்திருந்தார். 1849 இல் ஒடுக்கப்பட்ட சாணர்கள் குறித்த இனவரை வியல் நூலைக் கால்டுவெல் எழுதியிருந்தார். இந்தப் பின்புலத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் குறித்த பதிவைச் செய்தார்.
 
- இந்து மத நடவடிக்கைகள், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக இருப்பதையும் பிற் காலத்தில் விரிவாகப் பதிவு செய்தார். இந்தக் கருத்தின் பல கூறுகளும் இவரது நூலில் இடம் பெற்றிருந்தன.
 
கால்டுவெல் நூலிலிருந்து அகற்றப்பட்ட பகுதிகளின் அரசியல் கருத்துநிலையைப் புரிந்துகொள்ளப் பின் கண்ட வரையறையை முன்வைக்கலாம்
 
- சைவ மற்றும் வைதீக மரபுக்கு மாறான சமண மரபு முன்வைக்கப்படுகிறது.
 
- சாதிய அடிப்படையில் ஒடுக்கப்படும் மக்கள் திராவிடர்கள் என்னும் அடையாளத்திற்குள் கொண்டு வரப்படுகிறார்கள்.
 
- சமசுகிருத கருத்துநிலை சார்ந்த நிலைப் பாட்டிற்கு எதிரான கருத்துக்கள் முன்வைக்கப் படுகின்றன.
 
- ‘இந்துமதம்’ என்னும் கட்டமைப்பு கேள்விக்கு ஆளாக்கப்படுகிறது. 
 
கால்டுவெல் நூலில் நீக்கப்பட்ட பகுதிகள் மூலம், திராவிட இயல் சார்ந்த கருத்துக்களாக கால்டுவெல் கருதியவை நீக்கப்பட்டு சுத்தமாக்கப்படும் சூழல் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் (1913) உருவானது. இத்தன்மை உருப்பெற்றதற்கான காரணம், ‘வைதீக கருத்துநிலை சார்ந்தவர்கள்’, குறிப்பாக சைவர்கள், கால்டுவெல் சொல்லும் திராவிடக் கருத்தியலை ஏற்றுக்கொள்ள இயலாதவர்கள்.
 
சைவமரபு சார்ந்த திராவிடக் கருத்தியலை முன்னெடுக்க முயன்றவர்கள். சமூகத்தின் ஆதிக்க சாதியாக இருந்த வெள்ளாளர்கள் மற்றும் பார்ப்பனர்கள் கட்ட விரும்பிய திராவிட இயலுக்குப் புறம்பானதாகக் கால்டுவெல் கூறும் திராவிட இயல் அமைந்திருக்கிறது. வைதீக மரபுகள் சார்ந்த சாதியப் படிநிலைகளை ஏற்றுக் கொண்டவர்கள் கருதும் திராவிடம், கால்டுவெல் பேசும் திராவிடத்தை ஏற்கும் வகையில் இல்லை. இந்த முரண்தான் கால்டு வெல் நூலின் பகுதிகளை நீக்குவதற்கு அடிப்படையாக அமைவதைப் புரிந்துகொள்ள வேண்டும். மேற்குறித்த சைவம் சார்ந்த திராவிட மரபுகளை மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை (1855-1897) தொடங்கி, மறைமலை யடிகள் (1876-1950) வழியாக உருவான திராவிட வெள்ளாள மரபைப் புரிந்துகொள்ள முடியும். இவ்வகையில் கால்டுவெல் கட்டமைத்த திராவிட இயல் என்பது பின்வரும் கூறுகளில் கவனத்தில் கொள்ளத் தக்கது.
 
- ஐரோப்பிய புத்தொளி மரபில் உருவான மொழிகளில் மரபுகளை அடிப்படையாகக் கொண்டு, திராவிடமொழிக் குடும்பம் என்பதைக் கண்டறிந்தது
 
- திராவிட மொழிகளைப் பேசுபவர்கள் கொண் டிருந்த சாதிய மரபுகளை ஏற்றுக் கொள்ளாதது.
 
- இந்து மதம் என்னும் பெயரில் வைதீகம் கட்டமைத்த கருத்துக்கள் முற்றிலும் மாறானது.
 
- சாதிய படிநிலைச் சமூக உளவியல் தன்மையில் வாழும், ஆதிக்க சாதி மற்றும் ஆதிக்க சமயம் ஆகியவற்றுக்கு முரணானது.
 
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைக்காலம் தொடங்கி, அந்த நூற்றாண்டின் இறுதிக்குள் கால்டு வெல் கட்டமைத்த திராவிட இயல் என்பது, பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் உருவான பின்கண்ட கூறுகளால் வலுவானது. அக்கூறுகள் வருமாறு:
 
- காலனிய புத்தொளி மரபில் உருவான தொல்லியல்துறை (1864) பல்வேறு புதிய வரலாற்றுத்தரவுகளைக் கண்டெடுத்தது. இதன் உச்சமாக சிந்துசமவெளி அகழாய்வு தொடர்பான கருத்துநிலைகள் உருப்பெற்றன.
 
- அச்சுக்கருவி வருகையில், நமது தொல்லிலக்கண மரபு, தொல்லிலக்கிய மரபு ஆகியவை பரவலாக அறியும் வாய்ப்பு உருவானது. அதன் மூலம் உலகம் தழுவிய மரபுகளில் ஒன்றாக திராவிட இயல் மரபின் தொன்மை அறியப் பட்டது.
 
மேற்குறித்த தன்மைகள் ஏறக்குறைய 1500 ஆண்டுகளுக்கு மேலாக வலுப்பெற்று வந்திருந்த வைதீக மரபு, சமஸ்கிருத மரபு, ஆதிக்க சாதியக் கருத்துநிலை ஆகிய பலவற்றைக்கேள்விக்கு உட்படுத்தியது. தமிழ்ச் சமூகத்தின் இயங்குநிலை மூன்று அடிப்படையான கூறுகளில் செயல்படத் தொடங்கியது. அதற்குள் திராவிடக் கருத்துநிலை உள்வாங்கப்பட்டது. 
 
- வைதீகத்தை அடிப்படையாகக் கொண்ட, சைவ, வைணவ இணைவில் உருப்பெற்ற ‘இந்துத்துவா’ கருத்துநிலை பின்னர் உருப்பெற மூலமாக அமைந்த சாதியப்படிநிலை அமைப்பு.
 
- ஒடுக்கப்பட்ட மக்கள், தங்களை அடையாளப் படுத்த, ஆதிதிராவிடக்குடிகள் என்னும் கருத்து நிலை சார்ந்து, பௌத்த, சமண, சாங்கிய கருத்து நிலைகளை முன்னெடுத்த சூழல்.
 
- இந்தியா என்ற தேசம் கட்டப்பட்ட சூழலில், அதில் செயல்படும் சாதி, மதம் ஆகிய அனைத்துக் கூறுகளையும் மறுக்கும் சுயமரியாதை இயக்க மரபு.
 
மேற்குறித்த மூன்று நிலைகளில், இறுதியாகக் கூறப்பட்ட சுயமரியாதை இயக்க மரபு, கால்டுவெல் முன்னெடுத்த ‘திராவிட கருத்துநிலை’ மரபை ஏற்றுக் கொண்ட மரபாகப் புரிந்து கொள்ள முடியும். அயோத்தி தாசர், பெரியாருக்கு முன் இத்தன்மைகளை பௌத்த மரபாக முன்னெடுத்தார். இம்மரபுகளை எல்லாம் மறுத்த ‘சென்னை இலௌகீக சங்கம்’ பத்தொன்பதாம் நூற்றாண்டில் செயல்பட்டது. இருபத்தோராம் நூற்றாண்டில் இருக்கும் நாம், கால்டுவெல் வழியாகக் கட்டப்பட்ட திராவிட இயல் கருத்துநிலையின் இன்றைய வளர்ச்சி, பொருத்தப்பாடு ஆகிய புரிதலுக்குள் செயல்படவேண்டிய நெருக்கடி உருவாகியுள்ளது. இதனை விவாதிக்க கீழ்க்காணும் கால ஒழுங்கிலான ஒரு பாகுபாட்டை வசதிக்காக உருவாக்கிக் கொள்வோம்.
 
- 1784-1816 என்ற காலச்சூழலில் ஐரோப்பிய புத்தொளி மரபு மூலமாக, நமது மரபுகளைக் புரிந்துகொள்ள முற்பட்டபோது, திராவிட இயல் என்னும் கருத்துநிலை இல்லை.
 
- 1816-1856 என்ற காலச்சூழலில் ‘சென்னைக் கீழைத் தேயப்பள்ளி’ ((Madras School of Orientalism)) என்னும் கருத்துநிலை சார்ந்து இந்தோ-ஆரிய மொழிக்குடும்பத்திலிருந்து வேறுபட்ட இன்னொரு மொழிக் குடும்பம் என்னும் ‘திராவிட அடையாளம்’ ((Dravidian Proof)) உருப்பெற்ற காலம்.
 
- 1856-1925 என்ற காலச்சூழலில், கால்டுவெல் கட்டமைத்த திராவிட இயல் என்னும் மொழி மற்றும் இனக்குழு சார்ந்த கருத்துநிலை உரை யாடலுக்கு உட்படுத்தப்பட்ட காலம். சமயம் சார்ந்த மரபிலிருந்து வேறுபட்டு மொழிநூல் என்ற பயில்துறை மூலம் உலகம் தழுவிய புத்தொளி மரபில் புரிதல் உருவான காலம். இதன் மூலம் ‘திராவிட இயல்’ அங்கீகரிக்கப் பட்ட காலம்.
 
- 1925-1973 என்னும் காலம், ஈ.வெ.ராமசாமி என்னும் பெரியார் செயல்பட்ட காலம். திராவிடக் கருத்துநிலை, பார்ப்பனீய ஆதிக்கம், வைதீக-சமய ஆதிக்கம், வடநாட்டு முதலாளிகள் ஆதிக்கம், சமசுகிருத வழி வந்த இந்துஸ்தானி எனப்படும் இந்தி மொழித் திணிப்புக்கு எதிரான போர் என்று திராவிடக் கருத்துநிலை புரிந்துகொள்ளப்பட்ட காலம்.
 
- 1973-2014 என்ற நமது சமகாலம். பெரியார் முன்னெடுத்த திராவிடக் கருத்துநிலை என்பது ‘தேர்தல் சார்ந்த கட்சிகளுக்கான அடையாள மாக’ கட்டமைக்கப்பட்டு, பல்வேறு பண் பாட்டுச் சீரழிவுகள் உருப்பெற்றுள்ள காலம். கால்டுவெல் உருவாக்கிய கருத்துநிலை இரண்டு நூற்றாண்டு காலமாகப் பயணம் செய்து வந்த காலத்தின் இறுதிப்பகுதி.
 
மேலே நாம் பாகுபடுத்திய காலப்பகுதிகள் சார்ந்து, முதல் மூன்று பகுதிகளை கால்டுவெல்லை முதன்மைப் படுத்தி உரையாடலுக்கு உட்படுத்தினோம். இறுதி இரண்டு காலப் பகுதிகளில் செயல்பட்ட திராவிடக் கருத்தியல் சார்ந்த உரையாடல் நம்முன் உள்ளது. இதனை இடதுசாரி கண்ணோட்டம் கொண்ட இயக்கவியல் கண்ணோட்டத்தில் மதிப்பீடு செய்தவர் களின் கருத்துநிலைகளை, மீண்டும் உரையாடலுக்கு உட்படுத்த வேண்டும். இடதுசாரி அமைப்புகள், இனம், மொழி சார்ந்த பண்பாட்டுக் கூறுகளை மதிப்பீடு செய்வதில் முந்தைய நிலைப்பாடுகளிலிருந்து சில மாற்றங்கள் உள்வாங்கியிருப்பதைக் காண்கிறோம். இந்தக் கண்ணோட்டத்தில், திராவிடக் கருத்துநிலை மொழி, இனம் சார்ந்த அடையாளமாகச் செயல்பட்டு, அது இன்று செயல்படும் நிலையில் உருவாகியுள்ள சிக்கல்களை எப்படிப் புரிந்துகொள்வது? என்ற உரையாடலை கால்டுவெல்லின் இருநூறாம் ஆண்டுச் செயல்பாடாக முன்னெடுக்க வேண்டிய அவசியம் நம்முன் உள்ளது.
 
சான்றாதாரங்கள்
 
நூல்கள்
 
 1827 - Document Transactions of the Literary society of Madras. Part-I: Longman, Rees, Orme, Brown and Green.Paternoster Row. London
 
1875 - Caldwell Robert. A comparative Grammar of the Dravidian of South Indian  family of Languages - London. Trubner & Co., Ludgate Hill. First Renewed Print – 2008 By Kavithasaran pathipagam.Chennai – 19.
 
1922 - No Author; Eminent Orientlists – Reprinted by Asian Educational Series
 
1991.1958  - கந்தசாமிப்பிள்ளை.நீ. கால்டு வெல்லும் அவர் வாழ்ந்த காலமும் (கட்டுரை)  தமிழ்ப் பொழில் - கால்டுவெல் நூற்றாண்டு மலர்.
 
1982 - டாக்டர் கால்டுவெல் திராவிடமொழி களின் ஒப்பிலக்கணம். தமிழில் கா.கோவிந்தன், கி.ரத்னம், திருமகள் நிலையம். சென்னை - 1.
 
2006 - Trautmann R. Thomas. Languages and Nations.The Dravidian proof in Colonial Madras. Yoda Press. NewDelhi – 1.
 
2008 - மாற்றுவெளி: கால்டுவெல் சிறப்பிதழ் - சிறப்பாசிரியர் - வீ.அரசு. சென்னை.
 
2010 - சாமுவேல்பிள்ளை. கி. பதிப்பு: இரா.வெங்கடேசன், வெ.பிரகாஷ், தொல்காப்பிய நன்னூல். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் - சென்னை - 98 (முதல் பதிப்பு - 1858)
 
2012 - அரசு.வீ. திராவிட இயக்கம் நூறு ஆண்டுகள் (குறுநூல்) நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் - சென்னை 98.
 
2012 - நஜ்மா.மு, கஸ்தூரி.மு, மோகனா.அ, காமாட்சி.மு, (தொகுப்பாளர்கள்) காஞ்சி: ஐரோப்பிய, அமெரிக்கத் தமிழியல் அறிஞர்கள், பரிசல் சென்னை-106.
Pin It