“கீற்று” இணைய இதழில் “இனப்படுகொலைக்குத் துணை போகும் பெ.மணியரசன்” என்ற தலைப்பில் தமிழ்ச்செல்வன் என்பவர் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். தமிழ்த் தேசியப் பேரியக்கம் திராவிடத்தையும், பெரியாரையும் விமர்சிக்கக் கூடாது, நாம் தமிழர் கட்சியோடு சேர்ந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவும் கூடாது என்பதே அக்கட்டுரையின் சாரம்!

வெளியார் வரையறுப்பும் நா.த.க.வும்

உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் தங்கள் மக்கள் யார் என்பதை குடியுரிமைச் சட்டங்கள் வழியே வரையறுக்கின்றனர். அதுபோல்தான், தமிழ்த் தேசியப் பேரியக்கம் தமிழ்நாட்டின் குடிமக்களை வரையறுக்கிறது. அதன்படியே, 1956ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் நாள் - “தமிழ்நாடு” மொழிவழி தேசிய இன “மாநிலமாக” அமைக்கப்பட்டதற்குப் பிறகு தமிழ்நாட்டில் குடியேறுவோர் “அயலார்” என்று நாங்கள் வரையறுக்கிறோம். அந்த நாளுக்கு முன்பு, தமிழ்நாட்டில் வாழும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களே தமிழர்கள்! அவர்களில் பிறமொழி பேசுவோர் இருப்பின், அவர்கள் தமிழ்த்தேசத்தின் சம உரிமை பெற்ற குடிமக்கள்; மண்ணின் மக்கள்! அவர்கள் தங்களை தமிழர்களாய் உணர்ந்து செயல்பட்டால் அதை ஏற்போம்; தங்களை மொழிச் சிறுபான்மையினர் எனக் கருதினாலும் ஏற்போம்! எப்படி இருந்தாலும், அவர்கள் சம உரிமையுள்ள தமிழ்நாட்டு மக்கள்!

vaiko and maniarasanஇந்த வரையறுப்பை சரி என ஏற்றுக் கொண்டுள்ள திரு. தமிழ்ச்செல்வன், இந்த வரையறுப்பை ஏற்றுக் கொள்ளாத நாம் தமிழர் கட்சியினருடன் கூட்டுப் போராட்டங்களில் கலந்து கொள்வது சரியா என்று கேள்வி எழுப்புகிறார்.

தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் “வெளியார்” குறித்த இந்த வரையறுப்பை ஏற்றுக் கொண்டோர் மட்டுமின்றி, இதில் முரண்படுவோருடனும் - தமிழர்ளுக்குத் தேவையான முக்கியப் போராட்டங்களில் நாங்கள் சேர்ந்து பங்கெடுக்கிறோம் என்பது எங்களை கவனித்து வருபவர்களுக்குத் தெரியும்.

அவ்வப்போது எழும் முகாமையான சிக்கல்களின்போது, அதற்கு ஒன்றுபட்டு எதிர்வினையாற்றும் பொருட்டு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களுடன் நாங்கள் (தமிழ்த் தேசியப் பேரியக்கம்) அவ்வப்போது கூட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றோம். ஆரியத்துவ பா.ச.க.வுக்கு நேரடியாக ஓட்டுக் கேட்டுப் பரப்புரை செய்த ம.தி.மு.க. தலைவர் வைகோவுடனும், தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு. தி. வேல்முருகன், அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற மனித நேய சனநாயகக் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் திரு. மு. தமிமுன் அன்சாரி, கொங்கு இளைஞர் பேரவை சட்டப்பேரவை உறுப்பினர் திரு. உ. தனியரசு, முக்குலத்தோர் புலிப்படை சட்டப்பேரவை உறுப்பினர் திரு. கருணாஸ் என பல்வேறு தலைவர்களுடனும், அமைப்புகளுடனும் தமிழர்களுக்கான போராட்டங்களில் சேர்ந்து பங்கெடுத்துள்ளோம். அவர்களது நிகழ்வுகளில் பங்கெடுத்துள்ளோம்.

ஆனால், நாம் தமிழர் கட்சியுடன் சில போராட்டங்களில் ஈடுபடும்போது மட்டும், திரு. தமிழ்ச்செல்வன் போன்றோருக்கு இப்படி கேள்வி முளைக்கிறதே? ஏன்? ஏன் இந்த இரட்டை அணுகுமுறை?

தமிழ்நாட்டில் இனப்படுகொலை

தமிழ்நாட்டிலுள்ள பிறமொழியாளர்கள் மீது நாம் தமிழர் கட்சியினர் இனப்படுகொலை நடத்தப் போகின்றனர் என்று நீங்கள் மிகையாகக் கற்பனை செய்து கொண்டு கூறுவது, அவ்வமைப்பின் மீது தங்களுக்குள்ள காழ்ப்புணர்வை மட்டுமே வெளிப்படுத்துகிறது. ஆனால், நாம் தமிழர் கட்சியினரோ “நாங்கள் பிறமொழியாளர்களை அந்நியராகக் கருதவில்லை” என்றுகூறி, கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் 22 பிறமொழியாளர்களை வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளதையும், தெலுங்கிலேயே பேசி பரப்புரையில் ஈடுபட்டுள்ளதையும் பதிலாகத் தருகின்றனர். இந்தச் செயல்பாட்டைத்தான் நீங்கள் “இனப்படுகொலைக்கான தொடக்கச் செயல்” என்கிறீர்களா?

திராவிடத்தின் பெயரால் அரசியல் நடத்தும் தி.மு.க. – அ.தி.மு.க. போன்ற கட்சிகள் வேட்பாளர்கள் மற்றும் கட்சிப் பொறுப்பாளர்களை சாதி பார்த்துதான் தேர்வு செய்கின்றன. ஐயா பெ. மணியரசன் குறித்த உங்கள் திறனாய்வில் இதைப் பற்றி ஒருமுறை கூட திறனாய்வு செய்யவில்லையே? உங்களைப் போன்றவர்கள் இதுபற்றி பகிரங்கமாக வெளிப்படையாக விமர்சித்ததுண்டா?

குறைந்தபட்சம் இக்கட்சிகள் பொதுத் தொகுதிகளில் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த வேட்பாளர்களைக் களமிறக்கி உள்ளனரா? ஆனால், நீங்கள் “இனப்படுகொலையாளர்கள்” என காழ்ப்புணர்வோடு குற்றம்சாட்டும் நாம் தமிழர் கட்சியினர் இதை செய்துள்ளனரே! ஏன் இவையெல்லாம் உங்கள் கண்களுக்குத் தெரியவில்லை? காழ்ப்புணர்ச்சி கண்ணை மறைக்கிறதா?

தமிழ்நாட்டிலுள்ள பிறமொழியாளர்களை மண்ணின் மக்களாகவே நாங்கள் வரையறுக்கிறோம். சிலர் அந்த வரையறைகளை மீறி அவர்களை “வந்தேறி”களாகக் குற்றச்சாட்டும்போது நாங்கள் தொடர்ச்சியாக எதிர்த்து வந்துள்ளோம். (காண்க : தமிழ்த் தேசியமும் தமிழகப் பிறமொழியினரும், பெ. மணியரசன், தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் சூலை 16 - 31 இதழ், http://www.tamizhdesiyam.com/2012/07/blog-post_23.html). தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா மணியரசன் அவர்கள் இதுகுறித்த பலமுறை பேசியுள்ளார்; எழுதியுள்ளார். (காண்க : “யார் வெளியார்?” – பெ. மணியரசன், https://www.youtube.com/watch?v=RISzZbRnYdM ).

“தமிழ்த் தேசியர்கள் சாதிவெறியர்களா?” என்ற கட்டுரையில் ஐயா மணியரசன் கீழ்க்கண்டவாறு தெளிவுபடுத்தினார் :

“தமிழ்த் தேசியம் பேசுவோரில் தனிநபர்களாகச் சிலர் தமிழ்நாட்டில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசுவோரை எதிர்க்கின்றனர். அவர்கள் தமிழ்நாட்டு அரசியல், தொழில், வணிகம் ஆகியவற்றில் கொண்டுள்ள ஆதிக்கம் கருதி அச்சிலரும் அவ்வாறு எதிர்க்கின்றனர். எனவே, பிறமொழி பேசுவோரைக் கண்டறிய சாதி அடையாளம் அறிவது தேவை என்று கூறுகின்றனர்.

இவர்களின் இந்தக் கூற்றைத் தமிழ்த் தேசியப் பேரியக்கம் ஏற்கவில்லை - எதிர்க்கிறது! இவர்களின் கூற்றை வேறு எந்தத் தமிழ்த் தேசிய இயக்கமும் ஏற்பதாகவும் சான்றில்லை. சாதி அடையாளம் தேவை என்று கூறும் அந்தத் தமிழ்த் தேசியத் தனிநபர்கள் கூடத் தமிழினத்திற்குள் சாதி ஏற்றத்தாழ்வு பார்க்கவில்லை. தமிழர்கள் அனைவரும் சமம் என்ற கருத்தில் உறுதியாகத்தான் இருக்கிறார்கள்.

ஆனாலும், சாதியை இன அடையாளமாகப் பார்க்கத் தொடங்கினால், அந்தப் போக்கு - சாதி உயர்வு தாழ்வில்தான் போய் முடியும் என்று தமிழ்த் தேசியப் பேரியக்கம் தொடர்ந்து எச்சரித்து வருகிறது. பிறப்பு வழி தொடரும் உயர்வு தாழ்வு மங்கி மறைந்து விட்டால், சாதிக்கான ஆணிவேர் அறுந்து விடும். மெல்ல மெல்ல சாதி பட்டுப்போகும். எனவே சாதிக்கு முக்கியத்துவம் கொடுப்பதானது உயர்வு தாழ்வில்தான் போய் முடியும்.

(கட்டுரையை முழுவதுமாகப் படிக்க : தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2017 நவம்பர் 16 – 30 இதழ், http://www.kannottam.com/2017/12/blog-post_6.html).

இவ்வாறு, தமிழ்நாட்டிலுள்ள பிறமொழியினரை அயலாராகக் கருதி சிலர் விமர்சிப்பதை நாங்கள் தொடர்ச்சியாகக் கண்டித்து நல்வழிப்படுத்தி வந்துள்ளோம். தொடக்க காலத்தில் அப்போக்கில் இருந்த நாம் தமிழர் கட்சியினரின் பெயரைக் குறிப்பிட்டே நாங்கள் நேரடியாக விமர்சனங்களை முன்வைத்தோம். ஆனால், இப்பொழுது நாம் தமிழர் கட்சியின் தலைமை அப்போக்கை கைவிட்டுள்ளது. பெரியாரை தனது வழிகாட்டி என்றும் அறிவித்துக் கொண்டுள்ளது.

தமிழ்த் தேசியப் பேரியக்கம் – நாம் தமிழர் கட்சி போன்ற எந்த அமைப்புகளிலும் இல்லாத சிலர் இவ்வாறு கட்டுப்பாடின்றி விமர்சித்தால், அதற்கு தமிழ்த் தேசியப் பேரியக்கம் எப்படி பொறுப்பேற்றுக் கொள்ள முடியும்? தி.மு.க. – அ.தி.மு.க.வின் தவறுகளுக்கு பெரியார் எப்படி பொறுப்பாவார் என்று கேட்கும் நீங்கள், இணையத்தில் சிலர் செய்யும் விமர்சனங்களுக்கு எங்களைப் பொறுப்பேற்கச் சொல்வது என்ன ஞாயம்?

தமிழீழ ஏதிலியர்

அடுத்து, தமிழ்நாட்டிலுள்ள தமிழீழ ஏதிலிகளை தமிழ்த் தேசியப் பேரியக்கம் அயலாராகக் கருதுகிறதா என்று கேட்டுள்ளீர்கள். “மார்வாடிகள், மலையாளிகள், தெலுங்கர்கள் என தமிழ் மண்ணில் வந்தவனெல்லாம் சுரண்டிக் கொழுக்கும்போது, சிங்களரின் தொடர்ச்சியான இனப்படுகொலை அச்சுறுத்தல் காரணமாகத் தமிழ்நாட்டில் குடியேறியுள்ள தமிழீழத் தமிழர்களுக்கு “இந்தியக் குடியுரிமை“ வழங்க வேண்டும்” – என்று தொடர்ச்சியாக நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். தாய் தமிழகம் ஈழத்தமிழர்களை தன் குடிமக்களாக ஏற்றுக் கொள்ள தயாராகவே இருக்கிறது!

kolathoor mani and maniarasanதிபெத் ஏதிலியருக்கு சிறப்புரிமைகள் அளித்தும், தமிழீழ ஏதிலியரை குற்றவாளிகளாக நடத்தியும் வரும் இந்திய அரசைக் கண்டித்தும், தமிழ்நாட்டில் ஏதிலியராக வந்து வாழும் தமிழீழத் தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்க வேண்டுமென்றும் வலியுறுத்தி போராட்டங்களில் பங்கெடுத்துள்ளோம்; பல்வேறு மாநாடுகளில் தீர்மானம் இயற்றியுள்ளோம். தோழர் கொளத்தூர் மணி மற்றும் கோவை கு. இராமகிருட்டிணன் உள்ளிட்டோருடன் இணைந்து தமிழீழ ஏதிலியர் உரிமைக்காக உருவாக்கப்பட்ட “ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு” என்ற கூட்டமைப்பிலும் இதை வலியுறுத்தி நாங்கள் இணைந்தே பணியாற்றுகிறோம்.

பெரியார் மீதான திறனாய்வு

தமிழ்த் தேசியப் பேரியக்கம் பெரியாரை திறனாய்வு செய்வது, அவர் சந்தர்ப்பவாதியாக இருந்தார் என்பதற்காக மட்டுமல்ல! பெரியார், அடிப்படையில் தமிழின மறுப்பாளராகவும், தமிழ் மொழி வெறுப்பாளராகவும் இருந்தார். வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம், தமிழ் மொழியை – பண்பாட்டை - இலக்கியங்களை – புலவர்களை இழிவுபடுத்த அவர் தவறியதே இல்லை எனலாம்.

உலகில் மனிதர்கள் தோன்றி முதல் இனமான தமிழர் என்ற இயற்கையான இனத்தின் பெயரை மறைத்தும், மறுத்தும் "திராவிடர்" என்ற ஆரியப் பெயரை தமிழரிடம் பெருமளவில் பரப்பியவர் பெரியாரே!

ஆந்திரத்தில் தெலுங்கர்கள், கர்நாடகத்தில் கன்னடர்கள், கேரளத்தில் மலையாளிகள் என்றுதான் அவர்கள் தங்களைக் கூறிக் கொள்கிறார்கள். அவர்கள் தங்களைத் திராவிடர் என்று எப்போதும் அழைத்துக் கொள்ளவில்லை!

நடைமுறையில் தெலுங்கர், கன்னடர், மலையாளி ஆகியோர் "திராவிடர்" என்ற இன அடையாளத்தை ஏற்றுக் கொள்ளாத உண்மையைக் கண்ட பிறகாவது பெரியார், தமிழர்களுக்கு “திராவிடர்” எனப் பெயரிடும் தனது கருத்தை மாற்றிக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், அவர் கடைசி வரை மாற்றிக் கொள்ளவில்லை! இன்றைக்கும் பெரியாரிஸ்ட்டுகள் “திராவிடர்” என்ற இனப்பெயரை வைத்தே அரசியல் செய்கின்றனர். இது தமிழின அடையாளத்தை மறைக்கும் சூழ்ச்சி இல்லையா?

தமிழர்களின் சங்க இலக்கியம், காப்பிய இலக்கியம், பக்தி இலக்கியம், சித்தர்கள் இலக்கியம் எதுவுமே தமிழர்களை திராவிடர் என்று குறிப்பிடவுமில்லை; திராவிட என்ற சொல்லைப் பயன்படுத்தவும் இல்லை! உண்மையில், ஆரியர்களிலிருந்து தென்னாட்டுக்குப் பிரிந்து வந்த பிராமணர்களில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, குசராத்தி பேசுவோரையே “பஞ்ச திராவிடர்கள்” என்று ஆரியர்கள் குறிப்பிட்டனர். விசயநகர நாயக்க தெலுங்கு மன்னர்களின் ஆட்சி தமிழ்நாட்டில் வேரூன்றி நீண்டகாலம் தொடர்ந்தபோதுதான் "திராவிட" என்பது தமிழர்களையும் குறிக்கும் சொல்லாகப் பிற்காலத்தில் புழக்கத்திற்கு வந்தது.

ஏதோவொரு இராகுல் திராவிட், ஏதோவொரு மணி திராவிட் மட்டுமின்றி “திராவிட” அடையாளத்தோடு இன்றைக்கும் இலட்சக்கணக்கான பிராமணர்கள் வாழ்ந்து வருகின்றனர். இன்றைக்கும், ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள புதூரில் தமிழ்நாட்டிலிருந்து குடியேறிய பிராமணர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் “புதூரு திராவிட சங்கம்” என்று வைத்துள்ளார்கள். புதூரு பிராமணர்கள் மட்டுமே அதில் உறுப்பினர்கள்! (காண்க : http://www.pdassociationnellore.com, http://pudurdravida.com). சென்னையில் தென்கனரா திராவிட பிராமணர் சங்கம் - பதிவு செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது. (The South Kanara Dravida Brahmin Association, Chennai) - பதிவு 1953 அக்டோபர் 19. (http://www.skdbassociation.com).

Dravida Brahmin Matrimony என்று இணையத்தில் தேடினால், திருமணத்திற்காக வரன் தேடும் “திராவிட” தெலுங்கு பிராமண வகுப்பினரின் ஆயிரக்கணக்கான பெயர் – முகவரி – புகைப்படங்கள் கொட்டுகின்றன. தேடிப் பாருங்கள்!

தமிழர் என்றால் "எங்கள் தாய்மொழியும் தமிழ்தான்" என்று பிராமணர்களும் தங்களைத் தமிழர்கள் என்று சொல்லி நம்மோடு சேர வருவார்கள். எனவே "திராவிடர்" என்று சொன்னால் பிராமணர்கள் நம்மோடு சேர வர மாட்டார்கள் என்றார் பெரியார்! இவ்வாறு பெரியார் கூறியது வரலாற்று உண்மைகளுக்கு மாறானது என்பதை மேலே கண்டோம். சரியாகச் சொன்னால் திராவிடர் என்பதில் தமிழர்கள்தான் வரமாட்டார்கள்.

சோழப் பேரரசு, பாண்டியப் பேரரசு இரண்டும் வீழ்ச்சியடைந்தபின், பலவகையான அயலார்க்கு நீண்டகாலம் அடிமையாகிப் போனோம். அதனால் அயலார் சூட்டிய பெயர்களையெல்லாம் சுமக்கும் அவலம் தமிழர்களுக்கு ஏற்பட்டது. அவ்வாறு அயலார் சூட்டிய பெயர்கள்தான் திராவிடர் - சூத்திரர் - பஞ்சமர் என்பவை!

அவ்வாறு அடிமைப்பட்ட நிலையில், ஆங்கிலேயர்க்குத் தமிழர்கள் அடிமையானோம். ஐரோப்பாவிலிருந்து வந்த கிறித்துவப் பேராயரும் மொழியியல் ஆய்வாளருமான கால்டுவெல் செய்த பெருங்குழப்பம் திராவிடர் என்று ஓர் இனம் இருந்தது; திராவிடம் என்ற பெயரில் ஒரு மூலமொழி (Proto Language) இருந்தது என்பதாகும்!

தமிழ் மொழியிலிருந்து எந்த அகச்சான்றும் காட்ட முடியாமல் சமற்கிருத நூல்களான மனுதர்ம சாத்திரம், குமாரிலப் பட்டரின் தந்த்ர வார்த்திகா முதலியவற்றிலிருந்து "த்ராவ்ட" என்பதற்கு சான்று காட்டினார் கால்டுவெல்.

திராவிட என்ற பெயரில் ஒரு மூலமொழி இருந்ததே இல்லை. அதற்கான சான்று எள்ளளவும் எங்கேயும் கிடைக்கவில்லை. திராவிட என்ற பெயரில் ஓர் இனம் (Race) இருந்ததே இல்லை!

தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் ஆகியோர் திராவிட மூலமொழி இருந்ததாக ஒப்புக் கொள்வார்கள். ஏன்? தமிழ்தான் அந்த மூலமொழி என்ற உண்மையை மறைக்கவும் மறுக்கவும் இம்மூவருமே மூலமொழி என்ற கருத்தில் மட்டும் தந்திரமாக "திராவிட" என்பதை ஏற்றுக் கொள்வார்கள். தமிழை "சகோதர பாஷா" என்று கூறி - தங்கள் தாய்மொழியின் ஒர் உடன்பிறப்பு தமிழ் மொழி என்று குறுக்கிக் காட்டுவார்கள்.

மற்றபடி தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் ஆகியோர் தங்கள் அரசியல் மற்றும் அன்றாடப் புழக்கம் எதிலும் தங்களைத் திராவிடத்துடன் இணைத்துக் கொள்ளமாட்டார்கள். தெலுங்கர், கன்னடர், மலையாளி என்ற தம்தம் தேசிய இனப் பெயரில் மட்டுமே ஊன்றி நிற்கின்றனர். அவர்களிடம் திராவிடக் குழப்பம் கிடையாது! தமிழ்நாட்டில்தான் திராவிடக் குறுக்குச்சால் ஓட்டி இனக்குழப்பம் விதைக்கப்பட்டது.

இதற்குக் காரணம், “திராவிடன்” என்ற இனப்பெயரை முன்வைத்து செயல்பட்டவர் பெரியார் என்பதால்தான் அவர் மீது திறனாய்வுகளை முன்வைக்கிறோம். அந்தத் திறனாய்வையும் அவரது பிறப்பை வைத்து செய்யவில்லை! பெரியாரின் ஆரிய பார்ப்பன எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, பெண் விடுதலை சிந்தனைகளை மதிக்கும் நாங்கள், அவரது மொழி – இனம் குறித்த பார்வையை முற்றிலுமாக மறுதலிக்கிறோம்!

“தமிழ்ச்செல்வன்” என்ற உங்கள் பெயரை உச்சரிக்கத் தெரியாமல், நான் “டமில்செல்வன்” என்று கூறினால், நீங்கள் “டமில்செல்வன்” என்றே உங்கள் பெயரை மாற்றிக் கொள்வீர்களா? மாட்டீர்கள் தானே! ஆனால், ஆரியர் சூட்டிய இழிபெயரான “திராவிடரை” பெரியார் ஏற்றுக் கொண்டால், நாங்களும் ஒட்டுமொத்தத் தமிழினமும் ஏற்றுக் கொள்ள வேண்டுமா?

பெரியாரின் தமிழின ஒவ்வாமை

இனப்பெயரை மாற்றியது மட்டுமா? "தமிழைப் படிக்காதீர்கள் - தமிழில் பேசாதீர்கள் - வீட்டில் மனைவியுடன் வேலைக்காரியிடம் கூட ஆங்கிலத்தில் பேசிப் பழகிக் கொள்ளுங்கள்" என்று தமிழர்களிடம் வலியுறுத்தினார் பெரியார். தமிழ் காட்டுமிராண்டி மொழி என நாற்பதாண்டுகளாக சொல்லி வருகிறேன் என 1968இல் கூறிய பெரியார், அதையே ஒரு நேர்காணலில் 1972லிலும் கூறினார். “தமிழ்ச் சனியனை விட்டொழியுங்கள்” என்றார்.

திருக்குறள் தொடங்கி தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் குப்பை, உதவாக்கரை என்று பரப்புரை செய்தார். சிலப்பதிகாரத்தைத் தேவடியாள் காப்பியம் என்றார். திருவள்ளுவர், தொல்காப்பியர், கம்பர் ஆகிய மூவரும் ஆரியக் கைக்கூலிகள் என்றார். திருக்குறளை பெரியார் எந்தளவுக்கு இழிவுபடுத்தினார் என்பதை பெரியாரிஸ்ட்டுகளாக தங்களை சொல்லிக் கொள்ளும் “காட்டாறு” குழுவினர் “திருக்குறள் ஆரியக்குரலே” என்று தனிநூல் போட்டு விற்பனை செய்து இன்றைக்கும் பெருமைப்பட்டுக் கொள்கின்றனர்.

திராவிட நாடு விடுதலை, தமிழ்நாடு விடுதலை என்றெல்லாம் பேசிக் கொண்டே இந்திய ஏகாதிபத்திய ஆட்சி நடத்தி வந்த காங்கிரசுக் கட்சிக்கு 1954 முதல் 1967 தேர்தல் வரை - சட்டமன்றத் தேர்தல்களிலும், நாடாளுமன்றத் தேர்தல்களிலும் வாக்குக் கேட்டார் பெரியார். 1965இல் இந்தியை எதிர்த்துக் களம் கண்ட தமிழ் மாணவர்களை காலிகள் என்றார்.

இவ்வாறு, பெரியாரின் தமிழ் – தமிழர் - தமிழிலக்கிய மறுப்புகளும், தமிழை இழிவுபடுத்திய செயல்களும் பற்பல இருக்கின்றன.

இந்த மரபில் வந்ததால்தான் இன்றைக்கும் பெரியாரிஸ்ட்டுகள் “யார் தமிழர்?” என்று கேள்வி கேட்டு ஏளனம் செய்கின்றனர். ஏறுதழுவலைக் கிண்டலடிக்கின்றனர். மரபீனி விதைகள் அறிவியல் முன்னேற்றம் என வரவேற்கின்றனர். இயற்கை வேளாண்மை - சாதியைப் பாதுகாக்கும் வேளாண்மை என இழித்துரைக்கின்றனர். தமிழர்களுக்கு என்ன அறிவியல் இருக்கிறது என ஏகடியம் பேசுகின்றனர். இன்றைக்கும் திராவிட இயக்கத்தினர் “தமிழ்த் தாய்” வாழ்த்துப் பாடுவதில்லையே ஏன்? தமிழ்நாடு அரசே ஏற்றுக் கொண்ட திருவள்ளுவர் ஆண்டு முறையை, இன்றைக்கும் திராவிடர் கழகம் ஏற்றுக் கொள்வதில்லையே ஏன்?

தமிழ்நாட்டில் குடியேறியுள்ள பிறமொழியினரை சிலர் “வந்தேறிகள்” என அவதூறாகப் பேசுவதை முன்வைத்து, இங்கு “இனப்படுகொலை” நடக்கப் போவதைப் போல் அலறும் திரு. தமிழ்ச்செல்வன் அவர்களே! உங்கள் மிகை ஆர்ப்பாட்டத்தைப் புரிந்து கொள்கிறோம்.

ஆனால், இந்த மண்ணுக்கே சொந்தக்காரர்களான தமிழர்களின் மொழியை – இனத்தை – பண்பாட்டை – இலக்கியங்களை அவர்களது சொந்த மண்ணிலேயே வைத்து, இவ்வளவு இழிவு செய்தாரே பெரியார்! அவையெல்லாம், உங்கள் “இனப்படுகொலை”க்கான வரையறைக்குள் வராதா? “தமிழர்” என்ற இயற்கையான தேசிய இனத்தின் பெயரையே தம் விருப்பம்போல் “திராவிடர்” என மாற்றினாரே பெரியார்! அவையெல்லாம், இன அடையாள அழிப்பு என திரு. தமிழ்ச்செல்வன் ஏன் கருதவில்லை? இவற்றையெல்லாம் கண்டு ஏன் நீங்கள் கொதிக்கவில்லை?

கோவையில் தெலுங்கு சமூகத்தவர் நடத்திய மாநாட்டில் தமிழ்நாட்டிலுள்ள தமிழர்களையே “வந்தேறி”கள் என்று கூறினார்களே! அப்போது, நீங்கள் ஏன் கொதிக்கவில்லை? இதோ, இப்பொழுது நடிகர் இராதாரவி வெளிப்படையாக நாங்கள் தெலுங்கர்கள்தான் – நாங்கள் திராவிடர்கள்தான் என்று கூறுகிறாரே! தமிழர்களிடம் சில தொகுதிகளில் வேட்பாளர்களே இல்லை, தலைவர்களே இல்லை என்கிறாரே அவர்! இதற்கெல்லாம், திராவிடம் பேசும் தலைவர்களின் எதிர்வினைதான் என்ன? இவற்றையெல்லாம் நாங்கள் சுட்டிக் காட்டினாலே, எங்களை “இனப்படுகொலை”யாளர்கள் என்று விளிப்பீர் என்றால், உண்மையில் நீங்கள் யாராக இருக்கின்றீர்கள்?

தமிழ்நாட்டில் வாழும் மொழிச் சிறுபான்மையினர் மீது உண்மையிலேயே உங்களுக்கு அக்கறை இருப்பின், அவர்களையும் சேர்த்து பாதிக்கும் தமிழ்நாட்டின் வாழ்வாதாரச் சிக்கல்களுக்குக் குரல் கொடுங்கள்; போராடுங்கள்! அவ்வாறான போராட்டங்களை ஆட்சி அதிகாரம் கொண்டு ஏற்கெனவே நசுக்க முயன்ற தி.மு.க.வையும், இப்பொழுது ஒடுக்கிவரும் அ.தி.மு.க.வையும் புதுப்பிக்க - “பெரியார்”, “அண்ணா”, “திராவிட இயக்கம்” என்றெல்லாம் கூச்சலிட்டுக் கொண்டு வராதீர்கள்! உங்கள் “திராவிட” இயக்கப் பெருமைகள் எல்லாம், தனிநபர் துதி – சாதி அரசியல் - மணல் கொள்ளை – சாராயம் போன்ற சீரழிவுகளுக்கு ஊற்றுக் கண்ணாக விளங்கும் “திராவிடக்” கட்சிகளுக்குத்தான் புத்துயிர் ஊட்டப் பயன்படும்!

திராவிட இயக்கம் வேறு, கட்சிகள் வேறு என்று கூறிக் கொண்டு, திராவிடக் கட்சிகளின் “சாதனைகளை” நீங்கள் பெருமையாகப் பேசுவதும், திராவிடக் கட்சிகள் மீண்டும் மீண்டும் ஆள்வதும்தான் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக இங்கு நடந்து கொண்டுள்ளது.

ஆரியத்தின் அரச வடிவமாக நின்று கொண்டுள்ள இந்திய அரசின் கொடுங்கோன்மையிலிருந்து தமிழரின் இறையாண்மையை மீட்க வேண்டும் என்ற உண்மையான தமிழ்த் தேசியத்தின் பக்கம் வந்து நில்லுங்கள்! தமிழை – தமிழினத்தை – பண்பாட்டை – இலக்கியங்களை – மரபை எப்பொழுது வேண்டுமானாலும் இழிவு செய்து மகிழ்ச்சியடையும் திராவிடத்தின் பக்கம் நிற்காதீர்கள்! அது உங்களுக்கும் பயன்தராது; தமிழர்களின் எதிர்காலத்திற்கும் பயன்தராது!

தமிழ்த் தேசியப் பேரியக்கம் முன்வைக்கும் தமிழ்த் தேசியம் - தமிழை மரபுவழித் தாய்மொழியாகக் கொண்ட மக்களுக்கும், தமிழ்நாட்டைத் தாயகமாகக் கொண்டு பல நூறாண்டுகளாக வாழ்ந்து வரும் பிறமொழி பேசும் மக்களுக்கும் சேர்த்துத்தான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்! இவர்கள் அனைவரும் மண்ணின் மக்களே!

- க. அருணபாரதி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் - தமிழ்த் தேசியப் பேரியக்கம்.

Pin It