கடைச்சங்க காலத்திற்குப் பிறகு அதாவது கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி முதல், பல்லவர் ஆட்சி ஏற்பட்ட காலமான கி.பி. ஏழாம் நூற்றாண்டின் தொடக்ககாலம் வரையிலான காலகட்டத்தினைச் சங்கம் மருவியகாலம் என்பர். சங்ககாலத்தில் முடியுடை மூவேந்தராலும், வேளிர் முதலான சிற்றரசர்களாலும் ஆளப்பட்டுவந்த தமிழகம் அதன் பிறகு அயலவர் ஆட்சிக்கு உட்பட்டது.

இக்காலகட்டத்தில் தமிழகத்தின் அரசியல் நிலைமை இன்னதென்று தெரியாமல் இருந்தது. கடைச்சங்க காலத்தின் முடிவு ஏறத்தாழ கி.பி.250 என்று கருதப்படுகிறது. கடைச் சங்க காலத்தின் இறுதியில் ஆட்சிபுரிந்த சேர, சோழ, பாண்டிய மன்னர் களின் பெயர்கள் சில சங்கப் பாடல்களிலிருந்து கிடைக் கின்றன.

ஆனால், அதன் பிறகு தமிழகத்தின் நிலை என்ன என்பது வெகு காலமாகவே குழப்பமாக இருந்து வந்தது. கே.ஜி.சங்கரன் என்பவர், வட்டெழுத்தில் எழுதப்பட்ட ‘வேள்விக்குடிச் செப்பேட்டை’ இக்காலத் தமிழ் எழுத்தில் செந்தமிழ் இதழில் வெளியிட்டார்.

அதன் பிறகு, இந்திய சாசன இலாகா 1923 - ஆம் ஆண்டு எபிகிறாபியா இந்திகா என்னும் ஆங்கில வெளியீட்டில் வேள்விக்குடிச் சாசனத்தை ஆங்கில (இலத்தின்) எழுத்தில் வெளியிட்டது.1 வேள்விக்குடிச் செப்பேடு வெளியான பிறகுதான் கடைச்சங்க காலத்திற்குப் பிறகு தமிழகத்தை ஆண்டவர்கள் களப்பிரர்கள் என்கிற செய்தி தெரியவந்தது.

இக்களப்பிரர் காலத்தில் தமிழில் இலக்கியவளர்ச்சி குன்றியிருந்தது எனவும் அதனால் அக்காலம் தமிழகத்தின் ‘இருண்டகாலம்’ எனவும் சொல்லப்பட்டுவருகிறது. உண்மையில் களப்பிரர் காலம் இருண்டகாலமா? என்பதனை இக்கட்டுரை ஆராய்கிறது.

களப்பிரர்கள் காலம் இருண்டகாலமா?

களப்பிரர்கள் என்பவர்கள் தமிழர்கள் அல்லர் அவர்கள் கன்னடம் பேசிய அயலவர். அவர்கள் தமிழ் மீதும் தமிழ் இலக்கியங்கள் மீதும் பெருவிருப்பம் இன்றியிருந்தனர். எனவே, அக்காலகட்டத்தில் தமிழில் இலக்கியங்கள் அதிகம் தோன்றாமையால் களப்பிரர் காலத்தைத் தமிழ் இலக்கிய வரலாற்றில் இருண்ட காலம் என்கின்றனர்.

‘சங்ககாலத்திலேயே தமிழகத்தில் புத்த, சமண சமயக் கோட்பாடுகள் ஓரளவு தமிழகத்தில் தலை காட்டியிருந்தன. சோழ, பாண்டிய நாடுகளைக் கைப்பற்றிய களப்பிரர்கள் பௌத்த சமயத்தைத் தென்னகத்தில் பரப்ப முயன்றனர்.

கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் பாண்டி நாட்டில் கொடும்பஞ்சம் ஏற்பட்டதாக இறை யனார் களவியலுரை மூலம் அறியமுடிகிறது. அக்காலப் பகுதியில்தான் பல்லவர் என்ற பிராகிருத மொழியினர், தொண்டை நாட்டையும், நடுநாட்டையும் கைப்பற்றி ஆளத்தொடங்கினர். அவர்கள் சமண சமயத்தையும், வடமொழியையும் பேணினர். ஆனால், பல்லவப் பேரரசு கி.பி.ஆறாம் நூற்றாண்டளவில்தான் நிலைபெறத் தொடங்கியது.

களப்பிரர்க்கும் உள்நாட்டு மன்னர்க்கும் இடையே நிலவிய போரும் பூசலும் தமிழிலக்கியம், கலை, பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றில் பெரும் சிதை வையும், இழப்பையும் ஏற்படுத்தின. இந்நிலையில் தேனும் ஊனுமாக, தேறலும் களியாட்டமுமாக இருந்த சங்க காலத்து இன்ப வாழ்க்கை மாறி, சமண பௌத்த மதங்களின் செல்வாக்கால் பல்வேறு நோன்பு வாழ்க்கை மேற்கொள்ளப் பட்டது. தமிழ்மொழியும் ஆதரிக்கப் படாமல் தாழ்த்தப்பட்டு வளர்ச்சிகுன்றி, போற்றுவாரற்று விளங்கியதால் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் பெருந் தேக்கமும், மாற்றமும் ஏற்பட்டன. எனவே, இக்களப்பிரர் ஆட்சிக்காலத்தை, கலை இலக்கிய நோக்கிலும், அரசியல் நோக்கிலும் இருண்ட காலம் என்பர்’.2

ஆனால், களப்பிரர்கள் ஆட்சியில் எண்ணற்ற தமிழ் இலக்கியங்கள் தோன்றியுள்ளன என்பதனைப் பல இலக்கியச் சான்றுகளின் வழி அறியமுடிகிறது.

களப்பிரர்களின் ஆட்சியில் தமிழ் இலக்கியம்

களப்பிரர்களின் ஆட்சிக் காலத்தில் தாழிசை, துறை, விருத்தம் போன்ற புதிய பாவினங்களும் அவிநயம், காக்கைப்பாடினியம், நத்தத்தம், பல்காப்பியம், பல்காப்பியப் புறனடை, பல்கயாம், போன்ற இலக்கண நூல்களும் நரிவிருத்தம், சீவக சிந்தாமணி, எலிவிருத்தம், கிளிவிருத்தம், விளக்கத்தார் கூத்து, பெருங்கதை போன்ற சமண சமய இலக்கியங்களும் மூத்த திருப்பதிகங்கள், திருவிரட்டை மணிமாலை, அற்புதத்திருவந்தாதி, கயிலை பாதி காளத்திபாதி திருவந்தாதி, திருஈங்கோய் மலை எழுபது, திருவலஞ்சுழி மும்மணிக் கோவை, திருவெழுகூற்றிருக்கை, பெருந்தேவபாணி, கோபப் பிரசாதம், காரெட்டு, போற்றிக் கலிவெண்பா, திருக்கண்ணப்பதேவர் திருமறம், மூத்த நாயனார் இரட்டைமணி மாலை, சிவபெருமான் திருவிரட்டை மணிமாலை, சிவபெருமான் திருவந்தாதி ஆகிய சைவ சமய நூல்களும் தோன்றின. மேலும், இவற்றோடு ‘நீதி இலக்கியங்கள் எனப்படும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் பெரும்பான்மை நூல்கள் இக்களப்பிரர் காலத்தில் தோன்றியவைகளே ஆகும்”3 என்று மயிலை. சீனி.வேங்கடசாமி தமது களப்பிரர் ஆட்சியில் தமிழகம் என்னும் நூலில் குறிப்பிடுகிறார்.

களப்பிரர்கள் தமிழர்கள் இல்லை. அவர்கள் காலத்தில் தமிழ் இலக்கியங்கள் அதிக அளவில் தோன்றவில்லை. தமிழையும் தமிழ்ப் புலவர்களையும் அவர்கள் ஆதரிக்கவில்லை என்பதாலே தான் களப்பிரர் காலத்தை இருண்ட காலம் என்று குறிப்பிடுகிறார்கள் என்றால் அதில் உண்மை இருக்க முடியாது. களப்பிரர் காலத்தை இருண்டகாலம் என்பதன் காரணம் அறிய இயலவில்லை.

தொல்காப்பியர் காலந்தொட்டே தமிழகத்தில் பார்ப்பனர்களின் செல்வாக்கு மிகுந்திருந்தது என்பதனை ‘ஓதலுந் தூதும் உயர்ந்தோர் மேன’4 என்னும் தொல்காப்பிய நூற்பா உட்பட பல இடங்களில் காண முடிகிறது. அதன் பிறகு எழுந்த சங்க இலக்கியங்களில் போரில் பார்ப்பன மக்களுக்கு விதிவிலக்கு அளிக்கப் பட்டிருந்த செய்தியைப் பின்வரும் புறநானூற்று வரிகள் மூலம் அறியமுடிகிறது.

“ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்

பெண்டீரும் பிணியுடை யீரும்”5

மேலும், சங்க இலக்கியத்தில் இராமாயண, பாரதக் கதைகள் பல பாடல்களில் இடம்பெற்றிருப்பதைக் காண முடிகிறது. இவை, தமிழ் இலக்கியங்களில் பிராமணியத் தாக்கம் இருப்பதை உணர்த்துகிறது. ஆனால், களப்பிரர் காலத்தில் பிராமணியத்திற்கு எதிராகத் தோன்றிய பௌத்த, சமண சமயங்களின் செல்வாக்கு வளரத்தொடங்கியிருந்ததும், ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற வள்ளுவத்தை அடியற்றி அற இலக்கியங்கள் தோற்றம் பெற்றதும், ஏற்கனவே கோலோச்சிக் கொண்டிருந்த பிராமணியமும் சைவமும் ஆட்டமுறத் தொடங்கின. அதுமட்டுமல்லாது அன்றைய தமிழ் ஆட்சியாளர்களைத் தம் ஆளுமையின் கீழ் வைத்துக் கொண்டு சுகவாழ்வு வாழ்ந்துகொண்டிருந்தவர்களின் வாழ்வில் வறுமை ஏற்படத் தொடங்கியது.

மேலும், பாண்டிய அரசர்களிடம் பிராமணர்கள் தானமாகப் பெற்ற நிலங்களையெல்லாம் களப்பிரர் பிடுங்கிக் கொண்டனர் என்ற செய்தியை வேள்விக்குடிச் செப்பேடு கூறுகிறது.

‘கொல்யானை பலவோட்டிக் கூடாமன்னர் குழாந் தவிர்த்த பல்யானை முதுகுடுமிப் பெருவழுதி என்னும் பாண்டியாதிராசன் நாகமா மலர்ச் சோலை நளிர்சினை மிசை வண்டலம்பும் பாகனூர்க் கூற்றமென்னும் பழனக்கிடக்கை நீர்நாட்டுச் சொற்கண்ணாளர் சொலப்பட்ட ச்ருதி மார்க்கம் பிழையாத கொற்கை கிழானற் கொற்றன் கொண்ட வேள்வி அந்தணாளர் முன்பு கேட்க என்றெடுத்துரைத்து வேள்விச் சாலை முன்பு நின்று வேள்விக்குடி என்ற பதியைச் சீரோடு திருவளரச் செய்தார். வேந்தனப் பொழுதேய் நீரோடட்டிக் கொடுத்தமையால் நீடுபுத்தி துய்த்த பின்னளவரிய ஆதிராஜரை அகல நீக்கி அகலிடத்தைக் களப்ர னென்னும் கலியரைகன் கைக்கொண்டதனை இறக்கிய பின்....”6

எனவும் ‘அங்கொருநாண் மாடமாதிற் கூடற்பாடு நின்றவர் ஆக்ரோதிக்கக் கொற்றனேய் மற்றவரைத் தெற்றென நன்க கூவி ‘என்னேய் நுங்குறை’ என்று முன்னாகப் பணித்தருள ‘மேனாணின் குரவராற் பான்முறையின் வழுவாமை மாகந்தோய் மலர்ச் சோலைப் பாகனூர்க் கூற்றத்துப்படுவது, ஆள்வ தானை அடல் வேந்தேய் வேள்விக்குடி என்னும் பெயர் உடையது ஒல்காத வேற்றானை ஓடோத வேலி உடன் காத்த பல்யாக முதுகுடுமிப் பெரு வழுதி என்னும் பரமேச்வரனால் வேள்விக் குடி என்னப்பட்டது.

கேள்வியாற்றரப் பட்டதனைத் துளக்கமில்லாக் கடற்றானையாய்க் களப்பரரா லிறக்கப்பட்டது’ என்று நின்றவன் விஞ்ஞாப்யஞ் செய்ய...”7

எனவும் எடுத்துரைப்பதனைக் காணலாம். அதுமட்டு மல்லாது வச்சிரநந்தி சங்கம் வைத்துச் சமணம் வளர்த்ததும் இக்காலகட்டத்தில்தான். சமணம் வளரத் தொடங்கியதும், சைவமும் வைணவமும் வீழத் தொடங்கின. எனவேதான் தமிழ் இலக்கிய வரலாற்றில் களப்பிரர் காலத்தை இருண்ட காலம் என்கின்றனர். ஏனெனில் இலக்கிய வரலாறு எழுதியவர்களில் பெரும் பாலானோர் பிராமணியத்தில் ஊறிய சைவர்களே ஆவர்.

“சங்கம் மருவிய காலம் களப்பிரர் ஆண்டகாலமாகக் கருதப்பட்டு, அந்த காலம் இருண்ட காலமாகப் பெரும் பான்மை வரலாற்று ஆசிரியர்களால் புறந்தள்ளப்பட்டது. இருண்டகாலம் என்று சொல்லப்பட்ட அந்த காலம் கி.பி.3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 6 ஆம் நூற்றாண்டு முடிய சற்றேறக்குறைய 325 ஆண்டுகாலம் தமிழகத்தை ஆண்டனர். அவர்கள் சமண சமயத்தைத் தொடக்க காலத்தில் ஆதரித்துப் பரப்பிய காரணத்தால் சைவ சமயத்தைச் சார்ந்த வரலாற்று ஆசிரியர்கள் களப்பிரர்களை வெறுத்து ஒதுக்கினர்.”8

ஆனால், களப்பிரர்களுக்கும் பிராமணர்களுக்கும் இடையே பகைமை இல்லை என மயிலை. சீனி. வேங்கடசாமி கூறுகிறார்.

‘களப்பிரர் பிராமணர்களின் பகைவர் என்று சிலர் எழுதியுள்ளனர். பாண்டியன் முதுகுடுமிப் பெரு வழுதி கொற்கை கிழான் நற்கொற்றன் என்னும் பிராமணனுக்கு முற்காலத்தில் வேள்விக்குடி என்னும் ஊரைத் தானங் கொடுத்ததை அவனுடைய குடும்பத்தார் பரம்பரையாக அனுபவித்து வந்ததைக் களப்பிரர் தங்கள் ஆட்சிக் காலத்தில் பிடுங்கிக் கொண்டனர்’ என்னும் சாசனச் சான்றை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

களப்பிரர், வேள்விக்குடி தானத்தை இறக்கினார்கள் என்று செப்பேடு கூறுவது உண்மைதான். ஆனால், அதன் காரணம் பார்ப்பனர் மாட்டுப் பகையன்று. அதற்கு வேறு ஏதோ காரணம் இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. களப்பிரர் பிராமணருக்குப் பகைவர் அல்லர். களப்பிரர் பிராமணருக்குத் தானங்கொடுத்து ஆதரித்ததை ‘அகலிடமும் அமருலகும்’ எனத் தொடங்குகிற செய்யுள் கூறுகிறது.

“பொருகடல் வளாகம் ஒருகுடை நிழற்றி

இருபிறப் பாளர்க் கிருநிதி ஈந்து

மனமகிழ்ந்து

அருள்புரிபெரும் அச்சுதர் கோவே.”

என்று அந்தச் செய்யுள் கூறுவது காண்க. இதனால் களப்பிரர் பார்ப்பனரை வெறுத்தவர் அல்லர் என்பது தெரிகிறது.9

என்ற செய்யுள் வரிகளைக் காட்டுகிறார். களப்பிரர் வேண்டுமானால் ஆரியரை வெறுக்காமல் இருந்திருக் கலாம், ஆனால் ஆரியர் களப்பிரரை வெறுக்காமல் இருந்திருக்க முடியாது.

ஏனெனில் இச்செய்யுளில் பிராமணருக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ள இருநிதி என்பது குபேரனது நவநிதிகளுள் சொல்லப் படுகின்ற சங்கநிதி, பதுமநிதி என்பவையாகும்.

தானமாகப் பெற்ற பெரிய ஊர்களை இழந்த பிராமணர் களுக்கு இந்நிதிகள் எம்மாத்திரம். மேலும், பல்வேறு அறநூல்கள் தோன்றிய இக்காலகட்டத்தை இருண்ட காலம் என்பது அறிவுரை வழங்கி, கட்டுப்பாட்டுடன் நடந்து நல்வழிப்படுத்த நினைக்கும் ஆசிரியரை வெறுக்கும் மாணவர்களின் மனநிலை போன்றதாகும்.

எனவே களப்பிரர் காலத்தை இருண்டகாலம் என்பது அர்த்தமற்றதாகும். தமிழ் இலக்கிய வரலாற்றில் களப்பிரர் காலம் இருண்ட காலம் என்று சொல்வது வரலாற்று இருட்டடிப்பே எனத் துணிந்து கூறலாம்.

அடிக்குறிப்புகள்

Epigraphia Indica, Vol. XVII, 1923, pp. 291 – 309

தமிழ் இலக்கியவரலாறு ஜனகாபதிப்பகம் - பக்:77,78

மயிலை சீனி.வேங்கடசாமி, களப்பிரர் ஆட்சியில் தமிழகம். ப-93

தொல்காப்பியம், பொருளதிகாரம் 28 வது நூற்பா, இளம்பூரணர் உரை. ப-30

புறநானூறு: பாடல்.9

பாண்டியன் செப்பேடுகள் பத்து, வேள்விக்குடிச் செப்பேடு 31-40. மயிலை,சீனி.வேங்கடசாமி களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.

வேள்விக்குடிச் செப்பேடு, வரி 104-112 - களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.

அ.சவரிமுத்து, விடியலை நோக்கிக் களப்பிரர் வரலாறு முன்னுரையில்

களப்பிரர் ஆட்சியில் தமிழகம், பக் 59-60.

Pin It