இளம் கவிஞர் பூர்ணாவின் முதல் கவிதைத் தொகுப்பு ‘கண்ணீர் வாசனை’. இரண்டாம் தொகுப்பு ‘முளை கட்டிய சொற்கள்’. தன் முதல் தொகுப்பை ஐயறிவுடைய உயிர்களுக்கு அவர் அர்ப்பணிக்கிறார். காணிக்கையின்போது அவர் வெளிப்படுத்தும் கருத்துரை நமக்குக் கவிஞர் வால்ட்விட்மனை நினைவூட்டுவதாக அமைகிறது.

வால்ட் விட்மன் இவ்வாறு கூறுகிறார்: “விலங்குகள் பொய்யுரைப்பதில்லை; புறங்கூறு வதில்லை; இருளில் குற்றத்தன்மையுள்ள தவறான காரியங்கள் எதனையும் செய்வதில்லை. இந்நிலையில் நான் ஓர் விலங்காக மாற மாட்டேனா?” மனிதன் நீசனாகி விட்டதால் - அவனிடம் மானுடப் பண்பு மறைந்து விட்டதால் இவ்விருவரும் இவ்வாறு பேச வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டனர்.

பூர்ணா சமைத்துள்ள கவிதைச் சோற்றின் ஓரிரு பருக்கைகளை எடுத்துப் பதம் பார்ப்பதன் மூலம் அவர் எவ்வாறு சமைத்துள்ளார் என அறிய முடியும்.

‘அரளிப் பூவில் தேன் எடுத்தது வண்டு’ என்று பூர்ணா சொல்வது துன்பத்தில் ஞானம் பெற்றது. நெஞ்சு என்று சொல்வதைப் போலிருக்கின்றது. பூர்ணாவின் அரவாணி ‘படைத்தவனின் பிழை என் நிலை’ என்று புலம்புகின்றாள். சந்திப் பிழை யானால் சரி பண்ணி விடலாம்; சந்ததிப் பிழைக்கு எங்கே போவது? எனக் கேட்கும் கவிஞர் நா.காம ராசுவின் கவிதைத் தொனிப் பொருள் பூர்ணா விடம் எதிரொலிக்கின்றது.

இவ்வாறு இவ்விரு கவிஞர்களும் பிழை பற்றி வருந்துகின்றனர். ‘அன்னையும் தந்தையும் சேர்ந்து படைத்த படைப்போ அரவாணி? என்ன பதில் சொல்வது? இருக்கலாம் என்று தான் சொல்லத் தோன்றுகிறது. ஒரு வேளை அரவாணிகள் ‘அர்த்த நாரீசுவரத்’ தெய்வங்களோ என்று கூட நமக்குத் தோன்று கிறது. அர்த்த நாரீசுவர வணக்கம் செய்யும் நாம் மூன்றாம் பாலினத்தை வணக்கம் செய்ய வேண்டாம்; வாழவிட்டாலே போதும் என்று முடிக்கிறார் கவிஞர்.

ஓர் இளம் கவிஞர் படைப்புப் பற்றியும், படைப்புத் தத்துவம் பற்றியும் வித்தகமாய்ப் பேசுவது வியப்பில் ஆழ்த்துகின்றது. வரவிருக்கும் காலங்களில் அவர் கவிதைக் கலையில் தத்துவச் சுடரேற்றப் போகிறார் என்பதற்கான குறி தெரி கின்றது.

கோரிக்கையற்றுக் கிடக்கும் வேரில் பழுத்த பலாபற்றிப் பாரதிதாசன் உள்ளம் வெதும்பிப் பாடினார். அவரைத் தொடர்ந்து பாரதிதாசன் கவிதா மண்டலமும் வேரில் பழுத்த பலா கோரிக்கை யற்றுக் கிடப்பது குறித்து மனம் அழிந்த நிலையில் நெஞ்சம் கலங்கிப் பாடினார். அந்த அடிச்சுவட்டில் ‘கைம்பெண்’பற்றிக் கவலையோடு பாடுகிறார் பூர்ணா.

“எப்போது திருமணம் / என்கிறார்கள் / எப்படிச் சொல்வேன் / மாத விலக்கு நின்று போனதை!” இது முதுகன்னிப் பிரச்சினை மட்டுமன்று; பணம் பண்ணும் பிரச்சினையும்கூட...

ஓர் பணமதிப்புச் சமுதாயம் ஆண் மதிப்புச் சமுதாயமாக உருப்பெறும்போது முதிர்கன்னியரும் சேர்ந்தே உருவாகின்றனர் என்கிறார். பல படிமங் களையும் அடுக்கிப் பேசுகின்றனர்.

உழவனின் துயர், கைம்பெண்ணின் கண்ணீர், முதுகன்னியரின் வேதனை / அரவாணிகளின் புலம்பல், ஆணின் ஆதிக்கமும் அதிகாரமும், பணத்தின் வன்மை, பெண்மையின் ஈகம், இப்படிப் பல நிலைகளிலும், பல தளங்களிலும் அவரது கவிதைகள் பிறக்கின்றன.

சூழும் கார்முகிலுக்கிடையே அவ்வப்பொழுது வெட்டி மின்னும் மின்னல் கீற்றுக்களைப் போல, சமூக உணர்வும் சமூக அக்கறையுமான பல கவிதைகள் அவரிடமிருந்து பிறக்கின்றன. சமூகத் தளத்தில் நிலவும் பொருளியல் முரண்களையும் அவர் நுட்ப மாக அவதானித்து எழுதுகிறார். ஒரு கவிதையில் அங்கத அரசியல் நடத்துபவர்களையும் அடையாளப் படுத்திக் காட்டுகின்றார்.

பூர்ணாவின் இரண்டாம் கவிதைத் தொகுப்பு ‘முளை கட்டிய சொற்கள்’ தமிழும், தத்துவமும், குறியீடுகளும், படிமங்களும் இந்நூலில் ஆட்சி செய்கின்றன.

தமிழ்சார் திணைக் கோட்பாடு

நெய்தல் நிலத்தில் கருவாடாய்க் கிடக்கின்றன / நீந்திக் களித்த மீன்கள் / அலையோசையில் கேட்டுக் கொண்டே இருக்கின்றது யாருடைய அழுகுரலோ / மணல் வெளியெங்கும் / நீண்டு கிடக்கிறது ஏகாந்தம்.

ஒரு திணைக் கோட்பாட்டின் வெளிப்பாடான கவிதையிது. கடலும் - கடல் சார்ந்த இடமும் (விரியும் பெருமணற் பரப்பு) பற்றி நெய்தல் திணையின் முதற்பொருள் பேசுகின்றது. நெய்தலின் தொழிற் சார் கருப்பொருள் ‘மீன் உணக்கல்’. நெய்தலின் உரிப்பொருள் இரங்கலும், இரங்கல் நிமித்தமும் என்றாகும். இவ்வாறு நெய்தல் திணையின் முதற் பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகிய மூன்றும் இணைந்து வரும் நிலையிலான ஓர் திணைசார் படைப்பாக இக்கவிதை உயர்ந்து நிற்கின்றது.

தத்துவச் செறிவு

கிளை இடுக்கில் / சுவரில் / தொட்டியில் நிலத்தில் / இப்படி எங்கே விழுந்தாலும் / முளைத்துக் கற்றுக் கொடுக்கின்றன / வாழ்க்கைத் தத்துவத்தை விதைகள். பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் வலி, வேதனை, கவலை உண்டு / ஆனால் அவை / மனிதனைப் போல் / தற்கொலை செய்துகொள்வதில்லை.

முளைத்தல் / படிப்பினை என்னும் இரு கவிதைத் தலைப்புகளினூடாக அவர் தத்துவம் பேசுகின்றார்.

இருத்தலுக்கும் வாழ்தலுக்கும் போராடுவது உயிரியின் பொதுப்பண்பு. வாழ்தலுக்கான போராட்டம் இருத்தலுக்கான போராட்டம் எனப் போராட்டத்தின் ஊடாகப் பயணிக்கின்றது. உயிரியின் வாழ்க்கை உயிரியின் இந்த வாழ்க்கைப் போராட்டத்தை வாழ்விருத்தலுக்கான போராட்டம் என்ற தொடரைப் பயன்படுத்தித் தன் மொழி யாக்க நூலில் உயிரினங்களின் தோற்றம் - சார்லஸ் டார்வின்) விளக்குகிறார் ராஜ்கௌதமன், வாழ் விருத்தலுக்கான இந்தப் போராட்டம் வித்திலிருந்தே தொடர்கின்றது. வித்து விருட்சமாகப் பயணிக்க முயலுதலிலும் இது வெளிப்படுகின்றது.

ஒரு ஓரறிவு உயிர் வாழ்தலுக்காகப் போராடும் போது, ஆறறிவு உயிர் மனிதன் சூழலை எதிர்த்துப் போராடாமல் தற்கொலை செய்துகொள்ளலாமா என்பதே கேள்வி. உயிர் வாழ்தலுக்கான போராட்டத்தை உயிரிகளிடமிருந்து மனிதன் கற்றுத் தேற வேண்டும் என போதிக்கின்றார் பூர்ணா.

குறியீடுகளும் படிமங்களும்

‘முளை கட்டிய சொற்கள்’ குறியீடுகளும் படிமங்களும் நிறைந்த கவிதை நூலாகக் காட்சி தருகின்றது. இந்நூலில் மரம் ஓர் குறியீட்டுப் பொருண்மையாகிறது. சிலுவையை மரம் தருகிறது / இயேசுவையும் மரம் தான் தருகிறது எனக் குறியீட்டு மொழியில் பேசுகின்றார். போதிமரம் எனில் அது பொதுவில் புத்தரையே குறிக்கும். சிலுவையெனில் அது இயேசுவுக்கு ஆகும்.

மனித குலத்தின் பாவ விமோசனம் மற்றும் விடுதலைக்கான குறியீடுகளாக இங்கே சிலுவையும் மரங்களும் வருகின்றன. இவ்வகையில் இயேசு இங்கே குறியீட்டுப் பொருண்மையாகின்றார். மேலும் மரம் இருக்கின்றது. இயேசு தான் இல்லை என்று பூடகமாகப் பேசுகின்றார்.

முள் மரம் - வேப்ப மரம்’ என்றும் இரு குறியீட்டுப் பொருண்மைகள் வருகின்றன. முள் மரத்தின் நிழல் காயப்படுத்துவதில்லை / வேப்ப மரத்தின் நிழல் கசப்பதில்லை / மனித நிழல் என்னென்னவோ செய்கின்றது / என்கிறார். மரமும் மனிதனும் என ஓர் ஒப்பீடு இங்கே நிகழ்த்திக் காட்டப்படுகின்றது.

ஓரறிவு உயிரின் தோற்றம் குத்துவது போலவும், கசப்பது போலும் இருந்தாலும், அதன் விளை பயன் ஆறுதலைத் தருகின்றது; குணப்படுத்து கின்றது; இனிமை சேர்க்கின்றது. ஆனால் நடமிடும் மனிதச் சாயல், மனித நிழல், வானுயர் தோற்றம் கொளினும், குறைபட்ட குற்றப்பட்ட நெஞ்சுடைத்த தாகவே அலைந்து திரிகின்றது என்று குறிப்புணர்த்தப் படுகின்றது. மதவெறி, சாதிவெறி, இனவெறி, நிற வெறி, பணவெறி, அதிகார வெறி, வக்கிர பாலுணர்வு வெறி இவ்வாறு ‘மனித நிழல் என்னென்னமோ செய்கின்றது’ என்று கவிஞர் குறிப்புணர்த்துவதாகத் தெரிகின்றது. மேலும் மனிதச் சாரம் பற்றிய பேச்சாகவும் இருக்கின்றது.

புறாவும் இவர் கவிதை உலகில் ஒரு குறியீடா கின்றது. புறா அன்பின் - அமைதியின் - அகிம் சையின் குறியீடு! இந்தப் புறாக்களையும் சிலர் சமைத்துச் சாப்பிடுகின்றார்களே என்று துயரார்ந்த குரலில் வினா எழுப்புகின்றார். இனவாதம் பேசி இழிந்து நிற்கும் இலங்கையின் ஓர் சித்திரமே இந்தக் குறியீடு! பேரினவாதம் - சிங்களப் பேரின வாதம் இழிந்து இழிந்து சென்று கடைசியில், ‘சிங்களப் பௌத்த பேரினவாதமாக’ மாறி விட்டதே என்று வருந்தும் நிலையில் தான் சில அதிபர்களை நோக்கி, ‘புறாக்களைச் சமைத்து உண்பவனல்லவா நீ’ என்று குற்றம் சாட்டுகின்றார். மோசே காலத்திலிருந்து தொடங்கிய புலம் பெயர் வாழ்க்கை இன்றைக்கு கனடா, ஆஸ்திரேலியா, லண்டன், இந்தியா எனத் தொடர்கிறதே?

‘சிங்களப் பௌத்தப் பேரினவாதம்’ முள் கம்பிகளையும், முள்ளி வாய்க்கால்களையும் உரு வாக்கி விட்டதே - மானுடச் சித்திரவதைகளையும், படுகொலைகளையும் இனவாதத்தின் பெயரால் நியாயப்படுத்துகின்றதே எனப் பேரினவாதத்தின் அபாயம் குறித்து எச்சரிக்கின்றார்.

திணைக் கோட்பாடு பேசும் தமிழ், உயிரியின் வாழ்விருத்தல் பற்றிப் பேசும் தத்துவம், மரங்கள், இயேசு எனப் பேசும் குறியீட்டில் உத்திமுறை, அடுக்கி வரும் படிமங்கள் என ‘முளை கட்டிய சொற்கள்’ சிறக்கின்றது.

படிமங்களை ஓர் ஒற்றைத் தன்மையில் வார்த் தெடுக்காமல் அதைப் பன்மியப் பயன்பாட்டுக்கும் கொண்டு வரும் ஓர் நேர்த்தி இவர் படைப்புகளில் தெரிய வருகின்றது. இவரது முதல் நூல் ‘கண்ணீர் வாசனை’யில் இது புலப்பாடாகின்றது. ‘முதிர் கன்னி’ கவிதையில் இவர் படிமங்களை அடுக்கிக் கொண்டே செல்கின்றார். தென்னை, வாழை, பயிர், கொடி, கோரை, பட்டுப்பூச்சி, செடி, மரம், பசு என வரும் படிமங்கள் பன்மிய நோக்கிலானவை.

இவ்விரு நூல்களும் இயற்கைக்கும் மனிதனுக்கு மான உறவு, இயற்கைக்கும் சமுதாயத்துக்குமான உறவு, முழுமைக்கும் பகுதிக்குமான உறவு, இவை பற்றிப் பேசுகின்றன. திணைக் கோட்பாடு, இருத்தல் வாழ்வியலுக்கான போராட்டத் தத்துவம், குறி யீடுகள், படிமங்கள் பற்றியும் பேசுகின்றன. தொன்மம் பற்றிய குறிப்புகளும் வருகின்றன. சுரண்டலுக்கு எதிரான சமத்துவ அறவியல், சூழல் அறவியல், பாலின சமத்துவ அறவியல் இவை பற்றியும் பேசுகின்றன.

பூர்ணாவின் முதல் நூல் நேர்படப் பேசுகின்றது. அவரின் இரண்டாம் நூல் அவரது சிந்தனைச் செறிவையும் அக முதிர்ச்சியையும் காட்டுகின்றது.

கண்ணீரின் வாசனை எப்பொழுதும் உப்புக் கரித்தே இருக்கும். ‘முளை கட்டிய சொற்கள்’ எப் பொழுதுமே சொல் விதையின் வளர்ச்சியாகவே இருக்கும்.

கவிஞர் மீரா, நா.காமராசு, மனுஷ்ய புத்திரன், கல்யாண்ஜி எனப் புதுக்கவிதை மரபைச் செதுக்கிய சிற்பிகளின் வரிசையில் செதுக்க வரும் ஓர் இளம் சிற்பியாக பூர்ணா உருவாகி வருகிறார்.

Pin It